Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam

ஆதாரங்களோடு ‘சங்கொலி’ திருநாவுக்கரசு விளக்கம்
பெரியார் பாராட்டைப் பெற்ற குத்தூசியாரின் எழுத்துக்கள்

குத்தூசியாரின் எழுத்துக்களை தந்தை பெரியார் உளம் திறந்து பாராட்டியதை, ஆதாரங்களோடு எடுத்துக்காட்டி, ‘சங்கொலி’ திருநாவுக்கரசு உரையாற்றினார். அவரது உரையின் தொடர்ச்சி:

வட நாட்டில் பல இடங்களில் இராவணனைத் தீயிட்டு கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றதை முதன் முதலில் புதுவை முரசில் (5.1.1931) எழுதிக் கண்டனக் குரல் எழுப்பியவர் குருசாமி!

‘நம்நாடு’ ஏட்டில் நீண்ட காலமாகத் துணை ஆசிரியராக இருந்த மா.செங்குட்டுவன் இதழியல் ஆய்வரங்கில் குத்தூசியாரைப் பற்றிக் கூறுகிறபோது, “விடுதலையில் குத்தூசிப் பகுதியைப் படிக்காதவர்கள் இருக்க முடியாது. அந்தக் குத்தூசிப் பகுதியை எழுதக்கூடிய குத்தூசி குருசாமி அவர்கள் ‘விடுதலை’யிலே ஆசிரியராக இருந்தபோது நான் துணை ஆசிரியராக இருந்து இருக்கிறேன்.

குத்தூசி குருசாமி தலையங்கம் எழுதுவதற்கு அதுவும் ஒரு தினசரி பத்திரிகைக்குத் தலையங்கம் எழுதுவது என்று சொன்னால், தலையங்க ஆசிரியர் கூப்பிட்ட குரலுக்கு ஆள்வர வேண்டும். குறிப்புகளுக்காகப் புத்தகங்களைக் கொண்டு வர வேண்டும். இவ்வளவு ஏற்பாடு இருந்தால் தான் ஒரு தினசரி ஏட்டிற்குத் தலையங்கம் தயார் ஆகும்.

குத்தூசி குருசாமி அப்படி இல்லை. காலை 9 மணிக்கு வருவார். அன்றைய தினம் வந்துள்ள ஏடுகளைப் பார்ப்பார். முக்கால் மணி நேரத்திலே தலையங்கம். 20 நிமிடத்திலே குத்தூசிப் பகுதி தயார் ஆகிவிடும். அந்த அளவுக்கு வேகமாக எழுதக் கூடியவர். ஆக, ஒரு மணி நேரத்திலேயே குத்தூசிப் பகுதியும், தலையங்கமும் அச்சேறும். அந்த அளவுக்கு வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகைச்சுவைததும்ப அழகாக நல்ல தமிழிலே - பாமரரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலே எழுதிய ஒரு பத்திரிகையாளர் குத்தூசி குருசாமி அவர்கள் தான்!” என்று குறிப்பிட்டார்.

விடுதலையில் குத்தூசி - பலசரக்குப் பகுதியைப் பற்றிப் பெரியார் அவர்கள் என்ன கூறுகிறார் தெரியுமா?

1948-இல் வெளியான ‘குத்தூசித் தொகுப்பி’ற்கு பெரியார் அளித்த முன்னுரையில் கூறுகிறார்:

“விடுதலை தினசரிப் பத்திரிகையில் பல நாட்களாக ‘குத்தூசி’ என்ற புனை பெயரில் தினம் சுமார் 11/2 கலத்துக்குக் குறையாமல் பல விஷயங்களைப் பற்றி நகைச்சுவை தோன்றப் பிரசுரிக்கப்பட்டு வருவதைத் திராவிட மக்கள் படித்து மகிழ்ந்து வருவதோடல்லாமல், பல துறைகளில் உணர்ச்சி பெற்று, திடுக்கிடும்படியான, ஆத்திரப் படும்படியான பல அதிசயக் கருத்துக்களை மனத்தில் தானாகவே பதிந்து விடும்படியான கருத்துகளை உணர்ந்திருக்கிறேன். நானே பல சந்தர்ப்பங்களில் எவ்வளவு பலமான கருத்துகளில், ஊறிப்போன பழக்க வழக்கங்களில் பிடிவாதகமாகப் புனிதமானது என்று ஏற்பட்ட தீர்மானங்களில் வெகு சாதாரணத் தன்மையில் வெறுப்பும், பரிகாசமும், “இவை மகாக் கொடுமை, முட்டாள்தனம், இழிவு” என்று கருதும் படியான உணர்ச்சி ஏற்படும்படியாக ‘குத்தூசி’ வாசகங்கள் காணப்படுகின்றன என்று ஆச்சரியப்பட்டதுண்டு. குலுங்கக் குலுங்கச் சிரித்துப் பாராட்டியதுண்டு என்று சொல்லுகிறேன் என்றால், அவை மற்ற சாதாரண மக்களுக்கு எவ்வளவு உணர்ச்சியை ஊட்டி இருக்கக்கூடும் என்பதைப் பற்றி அதிகம் எழுத வேண்டியதில்லை.

நான் வெளியில் சுற்றுப் பிரயாணம் செல்லும்போது பல இடங்களில் பலப்பல பேர்கள் நான் தான் ‘குத்தூசி’ என்கிற புனைப் பெயர் கொண்டவன் என்று கருதி என்னைப் பாராட்டிப் புகழ்ந்ததைக் கண்டும், கேட்டும் நான் உண்மையில் வெட்கமும், பொறாமையும் கொண்ட சந்தர்ப்பங்கள் உண்டு. ‘குத்தூசி’ காணப்படாத ‘விடுதலை’ யைக் கண்டு மக்கள் ஏமாற்றமடைந்ததையும் பார்த்து வருகிறேன்.

‘குத்தூசி’யைப் பற்றிய என் உண்மையான கருத்துச் சொல்ல வேண்டுமானால் - ஒரு வாக்கியத்தில் முடிக்க வேண்டுமானால், எந்தக் காரணங்கொண்டாவது ‘குத்தூசி’, ‘விடுதலை’யில் வெளிவருவது நின்று விடுமானால் ‘விடுதலை’ப் பத்திரிகையைப் படிக்கும் மக்களுக்கு ‘விடுதலை’ அலட்சியப்படுத்தப்பட்டுவிடுமோ என்று பயப்படுகிறேன் என்பதைத் தெரிவிப்பதன் மூலமே அதன் பெருமையைப் பற்றிய என் கருத்தை உணர்ந்து கொள்ளலாம்.”

பெரியாரின் இம்முன்னுரையைப் பற்றிக் குருசாமி “பெரியாரவர்கள் குத்தூசிக்குத் தந்துள்ள சிறப்புரை, தாய் தன் மகனைப் பாராட்டுவது போன்றது” என்று எழுதினார். நான் இங்கே 1948 ஆம் ஆண்டு விடுதலைத் தொகுப்பை எடுத்து வந்து இருக்கின்றேன். இத்தொகுப்பில் குத்தூசி - பலசரக்குப் பகுதி இடம் பெற்று இருக்கிறது. இங்கே வந்திருக்கின்ற தோழர்கள் யாராவது பார்க்க விரும்பினால் அக்கட்டுரைகளை இங்கே வந்து பார்க்கலாம். குத்தூசி கட்டுரைகளால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து இரண்டு எடுத்துக்காட்டுகளை நான் இங்கே எடுத்து வைக்க விரும்புகின்றேன்.

பெரியாரின் நண்பர் ஜக்சுரியா அவர்கள் என்னிடத்தில் கூறிய விவரம் இது! இதனைத் ‘திராவிட இயக்கத் தூண்கள்’ எனும் என்னுடைய நூலில் பதிவு செய்துள்ளேன். இராஜகோபலாச்சாரியை மய்யமாகக் கொண்டு சாதி, மத, மூட நம்பிக்கைகளைக் கடுமையாகத் தமது எழுத்துகளில் தாக்கி இருந்தார் குத்தூசியார். இப்படித் தாக்குவது தனி நபர்களின் மீது சாய்ந்துவிடுமோ என அஞ்சிய பெரியார் ஜக்கிரியாவை அழைத்து - உயர்நீதிமன்றம் அருகேயுள்ள கடற்கரையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யச் சொல்லுகிறார். அக்கூட்டம் நபிகள் நாயகம் விழாவாக ஏற்பாடு செய்யப்படுகிறது. அக்கூட்டத்துக்கு அடிக்கப்படும் சுவரொட்டியில் ‘இராஜாஜி’யின் பெயரை முதலில் போடச் சொல்லுகிறார் - பெரியார்! இப்படிச் போடுவதைக் குத்தூசி குருசாமி விரும்பமாட்டார் என்றும் தாம் சொன்னதாகச் சொல்லிக் கூட்டத்தை ஏற்பாடு செய்யும்படி பெரியார் சொல்லுகிறார் - ஜக்கிரியாவிடம்! 14 ஆண்டுகளுக்குப் பிறகு பெரியாரும் - இராஜகோபாலாச்சாரியும் ஒரே மேடையில் தோன்றினார்கள். இதற்குக் காரணம் குத்தூசியாரின் எழுத்துகள் தான்!

நான் பேசுவதை குருவிக்கரம்பை வேலு அவர்கள் மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். திராவிட இயக்கத் தலைவர்களுள் குத்தூசி குருசாமியின் வாழ்க்கை வரலாற்றைக் குருவிக் கரம்பை வேலு எழுதியதைப் போன்று மற்ற எவருக்கும் யாரும் எழுதவில்லை. வேலு அவர்கள் தஞ்சை மாவட்டத்துக்காரர் - குருசாமியின் ஊரைச் சேர்ந்தவர். அதனால் அவருக்கு முழு வாய்ப்புக் கிடைத்தது; எழுதினார்.

நான் இதுவரை 140 திராவிட இயக்கத் தலைவர்களைத் தேர்வு செய்து அவர்களுள் 73 பேரைப் பற்றி இதுவரை எழுதி இருக்கின்றேன். அப்படி எழுதுகிற போது, குத்தூசி குருசாமியைப் பற்றியும் முரசொலியில் எழுதினேன். அதற்கு அடிப்படையாய் அமைந்தது - வேலு அவர்களின் நூல்கள் தான்! அவர் பெயரை நான் குறிப்பிடாததைக்கூட நூலில் எழுதி விட்டார் வேலு! குத்தூசியாரின் சீடர் அல்லவா? நாமெல்லாம் அவருடைய சீடர்கள்தான்.

குத்தூசிரியாரின் எழுத்து எப்படிப் பட்டது என்பதற்கு இங்கே இன்னொரு நிகழ்ச்சியையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 1952 ஆம் ஆண்டு ஆகஸ்டு 8 ஆம் தேதி தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் முதல்வர் இராஜகோபாலாச்சாரி பேசுகிறார். அவர் அந்தக் கல்லூரியில் பழைய மாணவன் என்ற முறையில் பேச அழைக்கப்பட்டு இருக்கிறார். அவர் ஆங்கிலத்தில் பேசினார். “பச்சையப்பன் கல்லூரி மாணவர்களைப் போலக் கிட்டத்தட்ட அவ்வளவு மோசமாகக் கிறிஸ்தவ கல்லூரி மாணவர்களும் ஒரு காலத்தில் இருந்தார்கள்” என்று பேசிவிட்டார்.

13.8.1952 ‘விடுதலை’யில் இதைப் பற்றிப் பலசரக்குப் பகுதியில் குத்தூசியார் எழுதியவுடன், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இதனைப் படிக்கக் கல்லூரியில் கொந்தளிப்பு; படிப்பு நிறுத்தம்; ஒழிக முழக்கம் மாணவரிடையே வீறுகொண்டு எழுந்தது. மாணவரிடையே வேலை நிறுத்தம் நடந்தது. இவ்வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்திய அன்றைய மாணவர்கள் யார் யார் தெரியுமா? பொ. சுப்பையா (பின்னாளில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் தங்கையின் கணவர்), நாஞ்சில் மனோகரன், முரசொலி மாறன், குருவிக்கரம்பை வேலு, நெல்லிக் குப்பம் கிருஷ்ணமூர்த்தி, ஜி.விசுவநாதன் இன்னும் பல இயக்க மாணவர்கள் முன்னின்று நடத்தினர். அந்த அளவுக்கு குத்தூசியின் எழுத்துகள் வலிமை வாய்ந்தவையாய் விளங்கின.

அதனால் தான் ‘விடுதலை’ ஏட்டிற்கான ஜாமீன் தொகை பறிமுதல் செய்யப் பட்டது. விடுதலை செய்த குற்றம் என்ன?
1. 30.8.1948 இல் ‘இதுதான் காந்தீயமா?’ என்ற தலைப்பில் பெரியாரவர்கள் எழுதியிருந்த தலையங்கம்.
2. 31.7.1948 இல் ‘விபசாரியே நீயே என் மனைவி’ என்ற தலைப்பில் எழுதப் பட்ட ‘குத்தூசி’ கட்டுரை.
3. 21.8.1948 இல் ‘குசேலய்யருக்குக் கிடைத்த 10 இலட்ச ரூபாய்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட ‘குத்தூசி’ கட்டுரை.
4. 31.8.1948 இல் ‘போலீஸ் உடையில் பொது ஜனங்கள்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட ‘குத்தூசி’ கட்டுரை.
5. 9.9.1948-இல் ‘அமெரிக்காவிலே கவர்னராகப் போகிறேன்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட ‘குத்தூசி’ கட்டுரை.
6 23.8.1948-இல் ‘ஆரியர் சுகவாழ்விற்குத் திராவிடர் மடிவதா?’ என்ற தலைப்பில் கோடுகட்டி வெளியிடப்பட்டிருந்த செய்தி.
7. 23.8.1948 இல் ‘ஆச்சாரியாரே, பகிஷ் கரிக்கிறோம்’ என்ற தலைப்பில் கோடு கட்டி வெளியிடப்பட்டிருந்த செய்தி.
8. 6.9.1948 ‘வடநாட்டு மார்வாரி மகாராஜா தென்னாட்டுக்குக் கவர்னரா?’ என்ற தலைப்பில் கோடுகட்டி வெளி யிடப்பட்டிருந்த செய்தி.
9. 11.9.1948 இல் ‘அய்யோ போலீஸ் இலாகா அக்கிரகாரம்’ என்ற தலைப்பில் கோடு கட்டி வெளியிடப்பட் டிருந்த செய்தி.

இது குறித்து விடுதலையில் குத்தூசியாரின் அறிக்கை வெளிவந்தது. பணம் குவிந்தது. ஆனால், நிலைமை என்னவாயிற்று? விடுதலை ஏடு ‘குத்தூசி’ என்ற தலைப்பிட்டுப் பின்காணும் செய்தியை வெளியிட்டது.

‘விடுதலை’ பத்திரிகைக்கு ரூ.2000 ஜாமீன் பறிமுதல் செய்ததற்கும், ரூ.10,000 ஜாமீன் கேட்டிருப்பதற்கும் ‘குத்தூசி’யே பெரிதும் காரணமாகக் காட்டப்பட்டு இருக்கிறது. உண்மையிலேயே “குத்தூசி கட்டுரைகள் சட்டப்படி தவறானவைகள்தானா என்று தெரிந்து கொள்வதற்காக சர்க்கார் உத்தரவின் மீது உயர்நீதிமன்றத் தில் விளக்கம் கோர முயற்சி செய்யப்பட்டு இருக்கிறது.

அதனால் இடைக்காலத்தில் என்ன செய்வது என்பதைப் பற்றி யோசிக்கப்பட்டு வருவதனால் சிறிது நாட்களுக்குக் ‘குத்தூசி’யார் - ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் வந்து இருக்கிறார்”. இது சட்ட நிபுணர்கள் கருத்தாகும். ஆதலால் வாசகர்கள் அனுமதிப்பார்கள் என்று கருதுகிறேன்.
- விடுதலை 7.7.1949

பெரியாரிடமிருந்து வெளியேறிய பிறகும் குருசாமி அவர்கள் தமது கருத்துகளை எடுத்து வைப்பதற்காக 1962 அக்டோபரில் ‘குத்தூசி’ எனும் மாத இதழைத் தொடங்கினார். குத்தூசி மாத இதழாக இருப்பதால், புதுப்பிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை விளக்க, வார இதழ் தேவைப்பட்டது. ஆகவே, 1964 மே நாள் முதல் ‘அறிவுப்பாதை’ தொடங்கப்பட்டது. குத்தூசியார் அறிவார்ந்த திராவிட இயக்கப் பத்திரிகையாளராகவே மரணமடைந்தார். 23.4.1906 இல் பிறந்த அவர் 11.10.1965 இல் மரணமடைந்தார்.

திராவிட இயக்கத்தின் தலைவர்களுள் பத்திரிகையாளராகவே வாழ்க்கையைத் தொடங்கி பத்திரிகையாளராகவே மறைந்தவர் குத்தூசியார் அவர்கள். அவரை நினைவு கூர்கின்ற வகையில் இந்நிகழ்வில் என்னைப் பங்கு கொள்ளுமாறு செய்து உரையாற்ற வாய்ப்பு அளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்துக்கு என் நன்றியைத் தெரிவித்து விடைபெறுகின்றேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com