Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam

தலையங்கம்

பெரியாரியத்தின் வெற்றி!

பார்ப்பனரல்லாத மக்களுக்கு, கல்வி-பதவிகளில் வகுப்புரிமை வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்துதான் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். அந்த வகுப்புரிமையை நிலை நாட்டவும் - சமூகத்தில், வகுப்புரிமையைப் பயன்படுத்திக் கொள்ளுமளவுக்கு மக்களைத் தயார் செய்யவும், கடும் எதிர்நீச்சல் தேவைப்பட்டது. அந்த எதிர் நீச்சலில் - தலைவிதி மறுப்பு, மத மறுப்பு, சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை மறுப்புகள் எல்லாம் உள்ளடக்கமாகின. எந்த மக்களின் சமத்துவத் துக்காக - உரிமைகளுக்காக - தன்மானத்துக்காக, இந்தப் பிரச்சாரங்களை பெரியார் முன் வைத்தாரோ, அந்த மக்களிடமிருந்தே, விழிப்புணர்வு இல்லாமையினால் எதிர்ப்புகளும் எழுந்தன. கல்லடிகளும், சொல்லடிகளும் வந்தன. பாராட்டுப் பத்திரங்களை எதிர்பார்க்காமல், பள்ளங்களிலும், மேடுகளிலும், பாறைகளிலும், தனது லட்சியப் பயணத்தை மேற்கொண்டவர் பெரியார்.

பெரியாரின் இந்த சமூக நீதிப் பயணம் துவக்கப்பட்ட கால கட்டங்களில் - சமூகத்தின் நிலை என்ன? 1914 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள் யார்? மக்கள் தொகையில் நூற்றுக்கு 3 சதவீதமாக இருந்த பார்ப்பனர்களில் ‘இன்டர் மீடியட்’ தேர்வு எழுதியவர்கள் 1900; இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 775; 97 சதவீத பார்ப்பனரல்லாத மக்களில் - இதே தேர்வை எழுதியவர்கள் 640 பேர் தான். இவர்களில் தேர்ச்சி பெற்றவர்களோ 240பேர். பி.ஏ. பட்டப்படிப்பில் 469 பார்ப்பனர்கள் தேர்வு எழுதி 270 பேர் தேர்ச்சி பெற்றனர். 97 சதவீத பார்ப்பனரல்லாதவர்களில் தேர்வு எழுதியவர்கள் 133 பேர் மட்டுமே. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 60 பேர். எம்.ஏ. தேர்வில், 157 பார்ப்பனர்கள் எழுதி 67 பேர் தேர்ச்சி பெற்றனர். 97 சதவீத பார்ப்பனரல்லாதாரில் எம்.ஏ. தேர்வு எழுதியவர்கள் 20 பேர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள், 10பேர் தான். எம்.ஏ.வுக்கு அடுத்த எல்.டி. உயர் பட்டப்படிப்புக்கு 104 பார்ப்பனர்கள் தேர்வு எழுதி 95 பேர் தேர்வு பெற்றனர். இதே படிப்பில் 11 பார்ப்பனரல்லாதார் மட்டுமே படிக்க முடிந்தது. தேர்ச்சி பெற்றவர்கள் 10 பேர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அன்றைய சமூகத்தில் 7 சதவீதம் மட்டும்மேஇதில் 3 சதவீதமுள்ள பார்ப்பனர்களில் 75 சதவீதமும், பார்ப்பனரல்லாதாரில் 5 சதவீதத்தினருமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். இதுதான் தமிழகத்தின் நிலை.

இந்தக் காலகட்டங்களில்தான் பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைக்கான போர்க்கொடியை பெரியார் உயர்த்தினார். அவரது வகுப்புரிமைக்கான போர், தொடர்ந்து கொண்டே இருந்தது. மக்களைத் தயார்ப்படுத்தினார். ஆட்சியாளர்களையும் நிர்ப்பந்தித்து, செயல்பட வைத்தார். அதன் விளைவு என்ன?

இப்போது தமிழ்நாட்டில் உள்ள 12 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1186 இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கைத் தொடங்கியுள்ளன. இதில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களை வைத்து மதிப்பிடும்போது, ஒரு உண்மை பளிச்சென்று தெரிய வந்திருக்கிறது. இடஒதுக்கீடுகள் என்ற எல்லைகளைக் கடந்து, தகுதி அடிப்படையில் மட்டுமே, அனைத்து சமூகப் பிரிவினரும் போட்டியிட்டு இடம் பெறக் கூடிய திறந்த போட்டிக்கான 368 இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 321 மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 57 மாணவர்களும், ஷெட்யூல்டு பட்டியலைச் சார்ந்த 14 தலித் மாணவர்களும், “தகுதி” யாளர்களுக்கு சவால்விட்டு, உள்ளே நுழைந்து விட்டார்கள். திறந்த போட்டி நிலவரத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம்.

இது தவிர, பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 356 மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 237 மாணவர்களும், ஷெட்யூல்டு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 273 மாணவர்களும், பழங்குடியினருக்கானவர்களின் ஒதுக்கீட்டில் 12 பேரும் தேர்வு பெற இருக்கிறார்கள். பல வட மாநிலங்களில், ஷெட்யூல்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடுகளே பூர்த்தியாவதில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தமிழ்நாட்டிலே திறந்த போட்டியிலேயே சவால்விட்டு நுழைந்து விட்டனர், நம்முடைய மாணவர்கள். பெரியார் தோற்றுப் போய்விட்டார் என்று புலம்புகிறவர்கள் - பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிடுகிறவர்கள், இந்த சமூக வெளிச்சத்தைக் கண்திறந்து பார்க்கட்டும்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com