Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
இரட்டை மலை சீனிவாசன் பெற்றுத் தந்த உரிமைகள்

இரட்டைமலை சீனிவாசனார் மதுராந்தகத்திற்கு அருகேயுள்ள சோழியாளத்தில் 7.7.1859-ல் பிறந்தவர். இரட்டைமலை என்பது ஊரின் பெயர் அல்ல. அவரது தந்தையார் பெயரே ஆகும்.

1893 ஆம் ஆண்டு அக்டோபரில் “பறையன்” இதழை வெளியிட்டார். பறையன் ஏடு தொடங்கப்பட்டு முதல் இதழ் வெளியிடப்பட்டவுடன் அதன் பிரதி ஒன்று மதிப்புரைக்காக “சுதேசமித்திரன்” பத்திரிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அப்பத்திரிகையின் ஆசிரியராக சி.ஆர். நரசிம்மன் என்ற பார்ப்பனர் இருந்தார். அவரது மேசையின் மேல் மதிப்புரைக்காக அனுப்பப்பட்டிருந்த “பறையன்” பத்திரிகை இருந்தது. அதனை அவர் கையில் எடுத்துப் பார்க்காமல் தொட்டு எழுதும் கட்டைப் பேனாவை குச்சி போல பிடித்து அதனைக் கொண்டு அப்பத்திரிகையைப் புரட்டிப் பார்த்தாராம். அப்படிப்பட்ட சூழலில்தான் இரட்டைமலை சீனிவாசனார் ஏட்டினைத் தொடங்கினார்.

1891-ல் “பறையர் மகாஜன சபை” எனும் அமைப்பைத் தோற்றுவித்து பணியாற்றத் தொடங்கினார். தாழ்த்தப்பட்டோரின் குறைகளை நீக்கும் பொருட்டு வைசிராயிடமும், கவர்னரிடமும் (வைசிராய் லார்டு எல்ஜின், கவர்னர் லார்டு வென்லாக்) சீனிவாசன் மனுக்களைக் கொடுத்துக் குறைகளை நீக்கக் கேட்டுக் கொண்டவர்.

Irattaimalai Seenivasan இரட்டைமலை சீனிவாசனார் 1923-38 வரை சட்டமன்ற நியமன உறுப்பினராக இருந்து பல சமுதாயப் பணிகளை செய்தார். தாழ்த்தப்பட்டவர்கள், எல்லா மக்களுக்கும் சமமாகப் பொதுச் சாலைகளில் நடக்கவும், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், பொது இடங்களிலும், கட்டிடங்களிலும் பிரவேசிக்கவும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை 1924 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் நாள் கூடிய சட்ட நிர்ணய சபையில் கொண்டு வந்தார். இதற்கான அரசாணை 1925 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது.

ஆதி திராவிடர்களிலேயே முதன் முதலாகக் கல்லூரி படிப்பை முடித்தவராதலால் கல்வியின் அவசியத்தை நன்குணர்ந்ததால் தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்பிக்கப்பட தாழ்த்தப்பட்டோர் கல்விக் கழகத்தை ஏற்படுத்தினார். சென்னை மாகாணம் தழுவி தாழ்த்தப்பட்டோருக்காக ‘பெடரேஷனை’ ஏற்படுத்தினார்.

இரட்டைமலை சீனிவாசனார் பணிகளைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1926 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் நாள் ‘ராவ் சாகிப்’ என்னும் பட்டத்தையும், 1930 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 3 ஆம் நாள் ‘ராவ் பகதூர்’ என்னும் பட்டத்தையும், 1936 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் ‘திவான் பகதூர்’ என்னும் பட்டத்தையும் தந்தது.

இரட்டைமலை சீனிவாசனார் “ஆதி திராவிட மகாசன சபை” ஏற்படுத்தி சமுதாயப் பணி செய்தார்.

இலண்டனில் முதலாம் வட்ட மேஜை மாநாடு 1930-ல் நடைபெற்றது. இம் மாநாட்டில் தான் ஒவ்வொரு பிரதிநிதியும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண் டனர். அவ்வாறு அறிமுகம் செய்து கொண்ட போது இரட்டைமலை சீனிவாசன், ‘நான் இந்தியாவில் தீண்டப்படாத மக்கள் சமுதாயத்தில் இருந்து வந்தவன். சாதியில் பறையன்’ என்று கூறிக் கொண்டார். தமது கோட்டுப் பையில் ‘ராவ்சாகிப் இரட்டைமலை சீனிவாசன், பறையன் தீண்டப்படாதவன்’ என்கிற அட்டையை அணிந்திருந்தார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் கை குலுக்க முனைந்தபோது சீனிவாசன் மறுத்து, தன்னைத் தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்ற நிலை உள்ளதை உணர்த்தினார். ஆனால் மன்னரோ அவரை அருகில் அழைத்துக் கை குலுக்கினார்.

இம்மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் பேசுகிறபோது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கினால் தான் தீண்டாமைக் கொடுமை ஒழியும் என்றார். சட்டமன்றத்தில் ஆதி திராவிடர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டுமென்றும் அப்போது தான் ஆதி திராவிடர்கள் முன்னேற்றம் காண முடியும் என்றும் வலியுறுத்தினார்.

காந்தியார் ‘மோ.க.காந்தி’ என்று தமிழில் கையெழுத்து போடுவதற்குக் காரணமாக இருந்தவர் இரட்டைமலை சீனிவாசன் தான். தென்னாப்பிரிக்காவில் காந்தியார் வழக்கறிஞராக இருந்தபோது, இரட்டைமலையார், உதவியாளராக, நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றினார்.

இரட்டைமலை சீனிவாசனாரின் கடுமையான முயற்சியினால், ஆங்கிலேய அரசு 1893-ல் தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி அளிப்பது குறித்து ஆணை ஒன்றை (G.O.68-1893) பிறப்பித்தது. அதை இரட்டைமலை சீனிவாசன் சாசனமென்றே கருதப்பட்டது. குறைந்தது ஏழு பிள்ளைகள் படிக்க நேர்ந்தால் அதை ஒரு பள்ளியாக அங்கீகரிக்க வேண்டுமென்று அரசு ஆணையிட்டு இருந்தது. மேலும் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளுக்கு தேவையான சலுகைகளையும் வழங்கியிருந்தது.

1890-ல் இரட்டைமலை சீனிவாசன் முன் வைத்த பத்தம்சக் கோரிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் வேண்டும் என்பதை முன் வைத்தார். இதற்குச் செவி சாய்த்த அரசு, பார்ப்பனர்களுக்கு, வெள்ளாளர்களுக்கு, நிலக் கிழார்களுக்கு, மடங்களுக்கு, கோயில்களுக்கு உட்படாத நிலங்களை ஒதுக்கீடு செய்யுமாறு அரசு ஆணையிட்டது. (அரசு ஆணை எண்.704, வருவாய்த் துறை, நாள் 02.09.1890).

இரட்டை மலை சீனிவாசனாரின் ‘ஆதி திராவிட மகாசபை’ முயற்சியினை ஆங்கிலேயர் அரசு 1892-ஆம் ஆண்டுக்கும் 1933 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலங்களை வழங்கியது.

அம்பேத்கரும் இரட்டைமலை சீனிவாசனாரும் தங்களின் இறுதிக் கோரிக்கையாக முதலாம் வட்டமேசை மாநாட்டில் முடிந்த முடிவாக ஒடுக்கப்பட்டோரின் பெயர் மாற்றம் பெற வேண்டுமெனக் கூறினர். தங்களைச் “சாதி இந்து அல்லாதோர்”, “இந்து எதிர்ப்பாளர்கள்”, “இந்து மத வழிபாட்டு எதிர்ப்பாளர்கள்” என்றே அழைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக சுதந்திரம் கிடைத்தாக வேண்டும் என்றார் இரட்டைமலை சீனிவாசன். தாழ்த்தப்பட்ட மக்களின் சுதந்திரத்திற்கு முடிவு கட்டாமல் சுயராச்சியம் என்பது ஆதிக்கச் சாதியினருக்கு கிடைத்த சுதந்திரமாகி விடும் என்றார். மேல்சாதிக்காரர்கள் கொடுங்கோன்மை ஆட்சியின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த பாதுகாப்பும் நிச்சயம் கிடைக்காது என்றார்.

நாம் முதலில் இந்துக்களே அல்ல. இந்துக்களாய் இருந்தால்தானே மதம் மாற வேண்டும். நாம் இந்த மண்ணின் தொல்குடியினர். சாதியற்றவர்கள் என்பது அவரது உறுதியான கருத்து.

இந்திய நாட்டின் விடுதலைக்கு தாழ்த்தப்பட்டோர் விடுதலையே முன் நிபந்தனை என்றும், 11.11.1939 அன்று பிரிட்டன் ஆட்சியைக் காப்பாற்ற தன் உயிரைத் தியாகம் செய்வதாகக் கூறினார். 1940 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களின் மாநாட்டில் பேசும்போது பிரிட்டன் அரசினால் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று உறுதியிட்டு கூறினார்.

1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ல் முடிவெய்தினார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


தொகுப்பு : மே.கா.கிட்டு


(ஜூலை 7, இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள்)




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com