Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
அக்டோபர் 2006
தோள் சீலைக் கலகம்
ஏபி. வள்ளிநாயகம்

3. திருவிதாங்கூரில் நாயர் பெண்களின் நிலைமை

திருவிதாங்கூர் ஆணாதிக்க மேலாண்மைச் சமூகம் பெண் உடலை குடும்ப உள்ளடக்கத்தில் பெண்களுக்கு மட்டுமேஉரிய கற்பின் பிம்பமாகவும், அதன் அகம் சார்ந்த துய்ப்பு வெளியில் நுகர்வுப் பொருளாகவும் வைத்திருந்தது. இது, ஆண்கள், பெண்களை தமது சுகத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் ஒரு முழுமையான சுரண்டலின் வகையினமே ஆகும். உடைமை வர்க்கம் உழைப்பைச் சுரண்டுவது போல, இதுவும் ஆண் எஜமானத்துவத்தின் பாலின்பச் சுரண்டலாகும்.

பொதுவெளியில் பெண்களின் உடல்-மன இயக்கம் ஆதிக்க வர்க்க- ஆதிக்கச் சாதி ஆண்களால் தடை செய்யப்பட்டது. உள்வெளியில் பெண்களது உடலும் உளவியலும் ஆண்கள் மட்டுமே கொள்ளையிட்டுக் கொள்ளும் உடலின்பத்திற்காக இயக்கப்பட்டது. இதில் ஆதிக்கபுரி ஆண்கள் மிருகத்தனத்துடனும், பெண்களைப் பார்ப்பனிய மரபின் வழி அனுபவித்து வந்தனர்.

இதன் தொடர்வினை வீரியமாக, பெண்ணுடல் ஆண்களின் உடைமையாகவே ஆக்கப்பட்டு, ஆணாதிக்க பொதுச் சமூக மனோநிலை மூர்க்கமாகிக் கொண்டது. இதன் முடிவில் சமஉரிமையற்ற- சமவாய்ப்பற்ற - சமமனநிலையற்ற ஓரவஞ்சனையான ஆண் உச்ச சமூக அமைப்பே உருவாகிக் கொண்டது. சமூகத்தின் முழுப் பகுதியையும் எதிர்மறையான ஆண்களே அடைத்துக் கொண்டனர். பெண்கள் தமது இருப்பையும் இயத்தையும் அடிமைத்தனத்தில் பதித்தனர். மானுடத்தில் மறுபாதியான பெண்களுக்கென்று தனித்த நினைவும் மொழியும் இருக்கிறது. அவற்றையும் சேர்த்தே மனிதத்தின் கலாச்சாரம் அமைகிறது. ஆனால், திருவிதாங்கூரில் மானுடக் கலாச்சாரம் என்பது இல்லை.

திருவிதாங்கூர் சமூகம் குடும்ப வெளிக்குள் ஆணின் காமஇச்சையைத் தீர்க்கும் பெண்ணை பத்தினியாகவும்- பொது வெளிக்குள் காம இச்சையைத் தீர்க்கும் பெண்ணை பரத்தையாகவும் ஆக்கியது. தாசி ஆட்டத்தின் அரங்கமாகவே பார்ப்பன வேத இந்துக் கோயில்கள் காட்சியளித்தன.
பார்ப்பனிய ஆண்களின் மன அயர்ச்சியைப் போக்கவும், அவர்கள் தொடர்ந்து தங்கள் காமக் கைங்கிரயத்தைப் புதுப்பித்துக் கொள்ள குடும்பப் பெண்கள் தேவைப்பட்டதுபோல், ஆண்களின் அதிகார அளப்பரைக்கும், அதிகூடிய உடல்வெறிக்கும் தீனியாகப் பொதுமகளிர் தேவைப்பட்டார்கள்.

களிப்பு, தூய்மை, இன்பம், கொண்டாட்டம் இவை மனித உயிர்களுக்கு மட்டும் உரிய உணர்ச்சிகள் இல்லை. இவை ஒட்டு மொத்த உலக ஜீவராசிகளின் உயிரோட்டம். அறுபடாமல் விளையும் ஜீவசக்தி. திருவிதாங்கூரில் இந்த ஜீவசக்தியை உயிர்ப்பிப்பது ஒருதலைப்பட்சமானது. எந்தப் புதிய சுமையையும் -எந்தச் சிறிய நெருடலையும்- எந்த மெல்லிய உறுத்தலையும் ஏற்படுத்தாத ஆண்-பெண் தழுவல்களே மானுடத்தின் இயல்புக் குரியதாகும். அத்தகைய ஆணிடம் மட்டுமே பெண் தன்னை ஒப்படைத்துக் கொள்ள முடியும்; அத்தகைய பெண்ணிடம் மட்டுமே ஆண் தன்னை ஒப்படைத்துக் கொள்ள முடியும். வெறுமனே இயந்திரத் தன்மையோடு நிகழ்ந்திராத பாலியல் நிகழ்வையே ஆணோ, பெண்ணோ உண்மையாக விரும்ப முடியும். ஆனால், உயிருள்ள மனிதர் களிடமிருந்து எழ வேண்டிய உணர்வுப் பரிமாற்றங்களைப் பெறமுடியாத நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டார்கள்.

திருவிதாங்கூரில், பெண்ணைச் சக உயிரியாகப் பார்க்காமல், பாலியல் நுகர்வுப் பொருளாகப் பார்த்தலும்- ஆணின் காம வெறிக்குப் பெண் பலியாதலும்- பெண் என்பவள் விரும்பிய ஆணுடன் தொடர்போ உறவோ வைத்துக கொள்ள அனுமதி மறுத்தலும்- சாதி, வர்க்க குடும்ப உறவுகள் பெண்மீது செலுத்தும் அதிகாரங்களும்- வழமை என்ற பெயரில் பெண் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும்- வீடு என்ற குறுகிய வட்டத்தினுள்ளே பெண்ணை அடக்கி - ஆளுதலும்- வீட்டு வேலைகள் அனைத்தையும் பெண்ணே செய்து முடித்தலும்- நடத்தை முறைகளில் பெண் மீது ஏற்ற இறக்கம் காட்டுதலும்- ஆணுக்குள்ள உரிமைகளை பெண்ணுக்குத் தர மறுத்தலும் என நீளும் பெண்ணின் வாழ்வனுபவம் என்பது வியாபித்து இருந்தது. இந்த வியாபித்தலை பார்ப்பனியம் நிறுவிய பாலியல் அடிமைக் கலாச்சாரமே உண்டு பண்ணியது. இந்தப் பாலியல் அடிமைக் கலாச்சாரத்திற்கு காவலர்களாக அமைந்தவர்களே திருவிதாங்கூரின் ஆட்சியைத் தீர்மானிப்பவர்களாக ஆட்சியாளர்களாக இருந்தனர்.

திருவிதாங்கூரில் பார்ப்பன மொழி புலப்படுத்திய ஆணாதிக்கப் பண்பாடு ஒட்டுமொத்த பெண் சமூகத்துக்கு அந்நியமானது. ஆனால், அது நுட்பமாக அறியப்படாமலேயே இச்சையாகவும் அனிச்சையாகவும் தொடர்ந்தது. அழியாச் சோகங்களையும் பிழிந்து சக்கையாகிப் போன கனவுகளையும் விம்மிக் கொண்டிருக்கும் மவுனங்களையும் சேர்த்து குருதியினையும் வியர்வையினையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துவது பெண்களின் தொழிற்பாடாக அமைந்தது. பெண்கள் சுற்றுப் புறத்தையும் குடும்பத்தையும் பார்த்து பயப்படுவதற்கே பயிற்றுவிக்கப்பட்டார்கள்.

பவுத்தத்தின் வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட பரசுராமசேத்திரமான திருவிதாங்கூரில் ஆண்- பெண் இருப்பு ஆணாதிக்கத்தில் அடங்குவதாக கட்டமைக்கப்பட்டது. ஆண் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படுகிறான்? பெண் எப்படி தடை செய்யப்படுகிறாள்? அவளுடைய சுதந்திரம் எப்படிப் பறிபோகிறது? இவை ஆணை மய்யமாகக் கொண்டிருந்தது. அரசு, வரலாறு, சமூகவியல், பொருளியல், அதிகார பீடங்கள் ஆண்களை ஆதாரமாக வைத்தே கட்டி எழுப்பப்பட்டது. சமூகப் பண்பாட்டின் ஆக்கத்திற்கும் அழிவுக்கும் பெண்ணின் நன்னடத்தை பொறுப்பாக்கப்பட்டது.
சமூகத்தின் அரசின் ஆக்கத்திற்கு ஆண் பொறுப்பாளியின் ஆளும்திறமை- அடக்கும் திறமை காரணம் ஆக்கப்பட்டது.

உழைப்பிற்கு தலை வணங்காத அதிகாரத்தை ருசிக்கும் நெறி கெட்டவர்களுக்கு தங்கள் இயங்கு வெளியில் இடைவெளிகளும் வெற்று வெளிகளும் நிறையவே கிடைத்தது. அவற்றை காம இச்சையாய் நிரவி பாலின்பத்தைச் சுரண்டி செழுமை கண்டவர்களில் முதன்மையானவர்கள் நம்பூதிரிப் பார்ப்பனர்கள் அடுத்து சத்திரியர்கள் என்றால் மிகையாகாது.

பார்ப்பனியத்தின் வெற்றிக்குப்பின் பலநூற்றாண்டுகளாக திருவிதாங்கூரில் ஆணாதிக்கம் பிரதான சமூக நிகழ்வாக தொழிற்பட்டு வந்த சூழ்நிலைமையில், இந்த பெண்ணடிமைத்தனத்தை வரலாற்று கட்டமைப்பு ஆக்கியவர்கள் நம்பூதிரிப் பார்ப்பனர்கள். ஆணாதிக்கச் சமூகத்தின் அடிநாதமாகச் செயல்பட்ட இவர்கள் தமது பெண்களை அடிமையாக்கியது மட்டுமல்லாமல், நாயர் பெண்களை கைப்பற்றுவதிலும் வெற்றிமேடை அமைத்தனர்.

ஆணாதிக்கக் களமாடிய நம்பூதிரிப் பார்ப்பனர்கள் நாகர்களை நாயகர்களாக்கி சூத்திர பீடத்தில் இருக்கவைத்து, நாயர் ஆண்களை தாம் நிறுவிய பார்ப்பனியச் சமூக அமைப்பிற்கான அடியாட்களாகவும், நாயர் பெண்களை தங்கள் பாலின்பவேட்டைக்கான இரைகளாகவும் ஆக்கினர். இதில் கவனத்துக்குரிய அம்சம் என்னவென்றால், இத்துணைக் கண்டத்தின் ஏனைய பகுதிகளில் தங்களின் ஆக்கிரமிப்பு இருப்பிற்காகவும், நாளடைவில் அதிகாரத்தை எட்டுவதற்காகவும் சமூக சக்திகளிடம் தங்கள் பெண்களை வசந்தசேனையாகப் பயன்படுத்தியவர்கள், கேரளத்தில் பூதேவர்கள் என்ற பொய்மையில் வசந்தசேனனாக நாயர் பெண்களை வயப்படுத்தியதுதான்.

மறுவகையில் நாயர் ஆண்கள் ஒப்புக்காகவும் மெப்புக்காகவும் தங்கள் பெண்களிடம் பாவனையாக வாழ்ந்தார்களே தவிர, உண்மையான அதிகாரமும் மதிப்பும் நாயர் குடும்பத்தில் புகுந்த நம்பூதிரிகளுக்கே இருந்தது. நாயர் ஆண்கள் தங்களது இருத்தலை பார்ப்பனிய நிலப்பிரபுக்களாக (ஜென்மிகளாக), வர்க்க ஆதிக்க மூர்க்கர்களாகயிருந்துதான் ஆறுதலாக்க முடிந்தது. சூத்திர முத்திரையாளர்களான நாயர் ஆண்கள் பார்ப்பனர்களால் மலினப்பட்டுப் போவதில் நெருடலற்ற அனுசரணையோடு பார்ப்பனியர்களாகவே குவிமய்யமாகினர். பார்ப்பனியச் சமூகம் நீடிக்க ஒருமுக்கிய கணுவாய் ஆகினர். தம்புரான் பட்டத்தில் அவர்ண ஆண், பெண்களை உழைப்பில் போட்டு கசக்கி, ஆட்டிப்படைப்பதில் அதில் சுயஇன்பம் அடைவதற்கே சூட்சமங்களைத் தேடினர்.

பார்ப்பன வேதமத இந்து சாஸ்திரங்களின்படி, நாயர்கள் உயர்த்தப்பட்ட ஆதிக்கச் சாதியினராகயிருந்தாலும், நாயர் பெண்களுக்குத் திருமணம் செய்து கொள்ள உரிமையில்லை. அவர்கள் பார்ப்பனர்களுக்காக ஒதுக்கிவைக்கப்பட்டவர்களாவர். பார்ப்பனர்களின் விருப்பப்படி ஏற்றுக்கொள்ளவும் கைவிடவும் ஆன சம்பந்தம் (தொடர்பு) மட்டுமே அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. (தர்ம தீர்த்த அடிகளார், இந்து மதக் கொடுங்கோன்மையின் வரலாறு, பக்கம் 269)

கேரளத்தில் திருவிதாங்கூரில் நாயர் சிறுமிகள் பருவமடைவதற்கு முன் “கெட்டு கல்யாணம்” என்ற சடங்கின் வாயிலாக அவர்களைக் கடத்துவது வழக்கமாக இருந்தது. பெரும் ஆடம்பரத்துடனும் பிரதாபத்துடனும் அந்தச் சடங்கு விழாவாகக் கொண்டாடப்பட்டது. தேவதாசிகளின் பெண் பிள்ளைகளுக்கும் தேவனுக்கும் நடைபெறும் திருமணத்திற்கும் இதற்கும் பெரிய வேறுபாடுகள் எதுவுமில்லை. (தர்மதீர்த்த அடிகளார், பக்கம் 268-269)

நாயர் பெண்கள் அழகானவர்களாகவும், கவர்ச்சி மிக்கவர்களாகவும், மிகவும் சுத்தமானவர்களாகவும் கருதப்பட்டனர். அவர்கள் “பல கணவர் முறை”யைப் பின்பற்றி பல ஆண்களுக்கு மனைவியாக இருந்தனர். (வி.நாகமய்யா, திருவிதாங்கூர் சமஸ்தான கையேடு, பக்கம்237) பார்ப்பன தந்திரத்தின் கூற்றுப்படி காமம் என்பது மானுட இயற்கை உணர்ச்சிகளிலிருந்து பிறக்கவில்லை. இந்துமதக் கடவுளர்களான சிவனும்- சக்தியும் இணைந்த லீலையிலிருந்துதான் காமம் பிறந்தது. பெண்ணை திரிபுரசுந்தரியாக வரித்து, அவளை முழுமையாக அனுபவித்து தனக்குத்தானே மகிழ்ச்சி அடைவது ஒரு இந்து ஆணின் ஒருவழிமுறை நெறியாகும்.

திருவிதாங்கூரில் பெண்கள் சிறுமியாகயிருக்கும்போதே திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்கள். நாயர் சாதியில் பெண்கள் இளவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட வேண்டுமென்பது கட்டாயமானது. இதன் விளைவாக பல பெண்கள் இளம் வயதிலேயே விதவைகள் ஆனார்கள். விதவைத் திருமணம் தடை செய்யப்பட்டது. விதவையான குழந்தைகள் உடலுறவு என்பது என்னவென்று தெரியாமல் இருந்தால் கூட அவர்கள் மறுமணம் செய்யமுடியாது. இளம் வயதில் திருமணம், கல்வியறிவின்மை, விதவைக் கோட்பாடு ஆகியவை ஆதிக்கச் சாதிப் பெண்களின் நிலைமையை பெரிதும் பாதித்தது.

இந்துத்துவ ஆட்சியின் வழமைப்படி நாயர் பெண்களும் மற்றும் தீண்டத்தகுந்த ஏனைய சாதிப்பெண்களும் சமூக அந்தஸ்து உடையவரின் முன்பும் நிலப்பிரபுக்கள், அதிகார வர்க்கத்தினரின் முன்பும், அரச பரம்பரையின் முன்னிலையில் அவர்களை எதிரில் கண்டு வணங்கும்போதோ அல்லது அவர்களைக் கடந்து செல்லும் போதோ அவர்களுக்கு மரியாதை செலுத்துவதன் அடையாளமாக மார்பகங்களைத் திறந்து மூட வேண்டும். (எஸ்.மாட்டீர், ஈகையின் இருப்பிடம்)

ஆண்டுக்கு இருமுறை மகாராஜா கடற்கரையில் ஆராட்டு உற்சவத்திற்காக இந்துமத சடங்குகளை நிறைவேற்றும்போது, நூற்றுக்கணக்கான நாயர் இளம்பெண்கள் திறந்த மார்பகங்களுடன் சாலையில் விளக்குகளை ஏந்தி ஏறத்தாழ 3 கிலோ மீட்டர் தொலைவு வரை மகாராஜாவின் பின்னால் செல்வார்கள். பெருந்திரளானவர்கள் காமக் கண்களுடன், வக்கிரப் புத்தியுடன் இந்நிகழ்வைப் பார்த்து மோகித்து மகிழக் கும்பலாய்க் கூடுவார்கள்.
நாயர் பெண்கள் மத்தியில் புகுத்திவந்த பல கணவர்முறை நம்பூதிரிப் பார்ப்பனர்களின், அரசபரம்பரை உடல் இன்பத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இளம் பெண்கள் விபசாரத்திற்குள் தள்ளப்பட்டதும், தந்தையை அறியாத வண்ணம் குழந்தைகள் வளர்த்தெடுக்கப்பட்டதும் பெண்களின் சமூக வாழ்வைப் பெரிதும் பாதித்தது.

திருவிதாங்கூரில் பெண்களின் நிலைமையை மேலும் இழிவாக்கியது தேவதாசி முறையாகும். ஆண்டவனின் பெண் ஊழியர்களாக தேவதாசிகள் அறிமுகப்படுத்தப்பட்டதால் பெண்களின் நிலைமை இழிவுக்கு ஆட்பட்டது. தொடக்க காலங்களில் கோயில்களுக்கு நிதிதிரட்டுவதற்காக இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு இளம் பெண்கள் கோயில்களோடு இணைக்கப்பட்டார்கள். நாளடைவில் சமூகத்தலைவர்கள், ஆண்டைகளின் காமவெறிக்கு பலியாக்கப்பட்டார்கள். இவர்களை மகிழ்விப்பதற்காகவே இந்தப் பெண்கள் தோற்றுவிக்கப்பட்டார்கள். தேவதாசி அமைப்பு இந்துத்துவத்தின் பாரம்பரிய நிலையை அடைந்து ஆலய விபச்சாரத்துடன் ஒருங்கிணைப்பு ஆனது. இந்த நூற்றாண்டின் தொடக்கக் காலம் வரை திருவிதாங்கூர் அரசர்கள் அந்தப்புரத்திலும், வெளியிலும் தேவதாசிகளிடம் (அம்மச்சிகளிடம்) மயங்கியே கிடந்தனர்.
(ஸ்ரீதரமேனனின் கேரளாவின் சமூக கலாச்சார வரலாற்றிலிருந்து) தேவதாசிகளில் பெரும்பாலோர் நாயர் பெண்களாகவே இருந்தனர்.

திருவிதாங்கூர், குடும்ப பொதுச் சொத்தை பிரித்துக் கொள்வதில் ஒரு ஆணுக்கு கிடைத்ததில் நான்கில் ஒரு பங்கே உயர்த்தப்பட்ட சாதிப் பெண்களுக்குக் கிடைத்தது. ஒரு ஆணுக்கு நான்கு பெண்கள் சமமாக பாவிக்கப்பட்டார்கள். பிறப்பு, வளர்ச்சி, கற்றல், தொழில், பொழுதுபோக்கு, மரணம் போன்றவற்றின் ஒவ்வொரு அசைவுகளும் பெண்களுக்குப் பாதகமாகவே இருந்தது.

திருவிதாங்கூரில் பார்ப்பனர்களுக்கும், சத்திரியர்களுக்கும் அவர்களின் வக்கரித்துப்போன மனதிற்கு பெண்களிடத்தில் அருமைக்குரியது ஆற்றலுக்குரியது, வியப்புக்குரியது, போற்றுவதற்குரியது என்று எதுவுமில்லை. அவர்களது பலாத்கார வெறிக்குத் தப்பாமல் இருக்கும் பொருட்டு பெண்கள் தகவமைக்கப்பட்டார்கள். அவர்கள் மனதிற்கு அழகாய்பட்டால், காமவெறி மேலீட்டால் தன்தாயையும் நிர்வாணம் செய்யக்கூடியவர்களாய் இருந்தார்கள். பெண்களை வெறும் சௌந்தர்யக் கிளர்ச்சிக்கும், உடல் நெகிழ்ச்சிக்குமே ஆளாக்கியவர்களின் ரசனையாலும், உபாசனைகளாலும் பெண்மானுடம் மதிக்கப்படவில்லை. திருவிதாங்கூரில் பெண்கள் சார்ந்த எல்லாவற்றிலும் பாலியல்பே ஊடும்பாவுமாகக் கலந்திருந்தது. ஆண்களால் ஏவப்படும், பெண்கள் உடல்சார்ந்த அத்துமீறல்களைப் பேசும் சுதந்திரம் அனுமதிக்கப்படவில்லை.
இதற்கு அடிப்படைக்காரணம் பெண்களின் தன்னிலை உருவாக்கத்தில் பாலியல்பின் பண்பு மறுக்கப்பட்டதேயாகும். இதன் விளைவு பெண்களின் மனிதத்துவம் மறைக்கப்பட்டது.

(கலகத்தை நோக்கி வளரும்)




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com