Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
அக்டோபர் 2006
ஆதிக்க நோக்கும்- மாறிவந்த தீர்ப்பும்...
இராசேந்திரசோழன்

அருந்தகங்களில் மகளிர் நடனமாடுவதைத் தடைசெய்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 15இல் மகாராட்டிர அரசு பிறப்பித்த மும்பை காவல்சட்டத் திருத்தத்தை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஃப்.ஐ.ரிபெல்லோ மற்றும் ஆர். தால்வி ஆகியோர் அளித்துள்ள தீர்ப்பு பெண்ணுரிமை நோக்கில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தொன்றுதொட்டு ஆணாதிக்க கருத்தியலே கோலோச்சிவரும் சமூகத்தின் ஒழுக்கவியல் கோட்பாடுகள், கட்டுத்திட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கே எனவும், பாலியல் சார்ந்த குற்றச் செயல்கள் சமூக சீர்கேடுகள் அனைத்துக்கும் பெண்களே காரணமானவர்கள் என்றும் குற்றம்சாட்டும் போக்கிற்கு பதிலடி தந்து தாங்கள் செய்யும் தொழிலால் களங்கப்படுத்தப்படாமல் கண்ணியமாக வாழ விரும்பும் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாகவும் இது அமைந்துள்ளது.

இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்குலக நுழைவாயிலாகத் திகழும் நகரம் மும்பை. இங்குள்ள அருந்தகங்களில் நடனமாடிப் பிழைக்கும் நடன மங்கையர் சுமார் 75000 பேர் உள்ளதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. நடனமாடி, அதில் கிடைக்கும் வருவாயை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

சட்ட ரீதியில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நெடுங்காலமாக நடனமாடிப் பிழைத்துவந்த இவர்கள் வாழ்வில் மண்ணைப்போடும் வகையில் இந்தத் தொழில் ஒழுக்கக்கேட்டையும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளையும் உருவாக்கி, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கிறது; பல குடும்பங்களை பேரிழப்புகளுக்கு இட்டுச் செல்கிறது என்று சொல்லி மராட்டிய அரசு இந்நடனங்களைத் தடைசெய்து சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

ஒரு செய்தியாகக் கேட்பதற்கு நல்லதுதானே என்பது போலத் தோன்றும் இத்தகவல் சாதாரணமானதாக எடுத்துக் கொள்ளத்தக்கதல்ல. காரணம், இதன் பின்னே சீரிய சிந்தனைக்கும், தார்மீக நியாயங்களுக்குமான பல கேள்விகள் பொதிந்துள்ளன.

1. அருந்தக நடனங்களைத் தடைசெய்து சட்டத்திருத்தம் கொண்டு வந்த துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீலுக்கு சமுகத்தின் பால் இப்படி ஒரு அக்கறையும் கரிசனமும் திடீரென்று எப்படி வந்தது?

2. நாட்டில் பொது ஒழுங்கைச் சீர் குலைத்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நிகழ்வுகள் பல இருக்க அதையெல்லாம் விட்டு, பெண்கள் தன்காலில் நின்று வாழ நேர்மையான வழியில் பொருளீட்டும் தொழில்களுள் ஒன்றாக விளங்கி வரும் இந்த அருந்தக நடனங்களின் மீது அரசு ஏன் கண் வைக்க வேண்டும்?

நடனமாடும் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இது ஒழுக்கக் கேட்டையும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது என ரெய்காட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேரவையில் பிரச்சினை எழுப்பினார் அதையொட்டியே இந்தத் தடை என்கிறது அரசு.

அருந்தகங்கள் நடத்தும் உரிமையாளர்களோ “அதெல்லாம் ஒன்றுமில்லை. அருந்தகங்களின் உரிமங்களுக்கான காலக்கெடு முடிவடைய இருப்பதையொட்டி அதன் கால நீட்டிப்புக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகியபோது அவர்கள் அருந்தக உரிமையாளர்கள் சார்பில் மொத்தமாய் 12 கோடி ரூபாய் கேட்டார்கள். ஏற்கெனவே அரசுக்குச் செலுத்த வேண்டிய உரிமத் தொகையையும் கட்டி மாதா மாதம் காவல் துறைக்கும் மாமூல் கப்பம் கட்டி பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் தொழில் நடத்திவரும் நிலையில், இவ்வளவு பெரும் தொகைக்கு நாங்கள் எங்கே போவது என்று எங்கள் இயலாமையைத் தெரிவித்தோம். அதன் விளைவாகவே இந்தத் தடை” என்கிறார்கள்.

இதன் மீது காவல்துறை விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது. விசாரணை நடக்கட்டும். உண்மை எதுவென வெளிவரட்டும். அது நமக்கு மையப்பிரச்சினை இல்லை.

இங்கு நமக்குக் கேள்வி, இப்பெண்கள் நடன மகளிராய் இருப்பதனால்தான் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்களா அல்லது இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட நடன மகளிராய் இருப்பதுதான் காரணமாகிறதா... வேண்டுமானால் இரண்டிற்கும் தொடர்புகள், வாய்ப்புகள் சற்று கூடுதல் என்று சொல்லலாமே தவிர, பாலியல் தொழிலுக்கு நடன மகளிராக இருப்பதுதான் காரணம் என்று சொல்ல முடியுமா? நடன மகளிராய் இருக்கும் பல பெண்கள் கண்ணியம் மிக்க, மதிப்பு மிக்க வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை நடன மகளிராய் அல்லாத சிலரும் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

நடனம் என்பது ஏறக்குறைய எல்லா சமூகங்களிலும் வாழ்வின் பிரிக்க முடியாத அம்சமாக விளங்கி வந்திருக்கிறது. அரசவைகளில் திருக்கோயில்களில் பொது இடங்களில் நடனமாடுவது என்பது இந்தியத் துணைக் கண்டத்துள் உள்ள பல்வேறு தேசிய இனங்களுக்குரிய ஒரு மரபாகவே இருந்து வந்துள்ளது. இறை வழிபாட்டு நோக்கம் கொண்டதாக, அல்லது தங்களைப் புரவும் அரசர்களையோ, செல்வந்தர்களையோ மகிழ்விப்பதாக, பொது மக்களுக்கும் ஒரு பொழுது போக்கு கேளிக்கை நிகழ்வாக பலதரப்பட்டு நடனம் ஒரு பண்பாட்டு நிகழ்வாகவே இருந்து வந்துள்ளது.

காலப் போக்கில் சமூக அமைப்பில், வாழ்முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் பிற பண்பாட்டுத் தாக்கங்கள் அனைத்தும் இந்நாட்டிய மரபிலும் மாற்றங்களை ஏற்படுத்த இன்று இதன் வழி வந்தவர்களோ அல்லது இந்நாட்டியத்தைத் தொழில் முறையாகப் பயின்றவரோ இத்துறையில் ஈடுபட அது பல்வேறு பட்டுக் கிளைத்து இன்று அது அருந்தக நடனங்களாகவும் உருப்பெற்று பலபேரின் பிழைப்புக்கு வழிகோலி வருகிறது.

இந்த நிலையில் இதில் தவறு நிகழ்கிறது என்றால் அந்தத் தவறின் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமேயல்லாது, அந்தத் தொழிலையே தடை செய்வது என்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

ஏராளமான பெண்கள் ‘விளம்பர மாதிரிகளாக’ தோற்றம் தருகிறார்கள். இந்தத் தொழிலில் தவறு நேர்கிறது என்றால் அதற்காக விளம்பர மாதிரிகள் தொழிலையே தடை செய்து விடுவார்களா? திரைப்படங்களில் நடிக்கப்போவதில் தவறு ஏற்படுகிறது என்றால் மகளிர் திரைப்படங்களில் நடிப்பதையே தடை செய்து விடுவார்களா... இப்படிச் செய்தால் இதன் நீட்சி என்ன ஆகும், தொழிற்சாலைகளில், அலுவலகங்களில், பள்ளி, கல்லூரிகளில் ஆண் பெண் சேர்ந்து பணிபுரிவதால், கல்வி பயில்வதால் சில தவறு ஏற்படுகிறது என்பதற்காக, சேர்ந்து பணியாற்றல், சேர்ந்து பயிலுதல் என்பதையே தடைசெய்து விடுவார்களா அல்லது வேலையும் கூடாது படிப்பும் கூடாது பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கட்டும் என்பார்களா.. இப்படிச் செய்தால் இது எப்படிப்பட்ட கொடுமையான பெண்ணடிமைத் தனமாக இருக்கும்.. அது போன்றதொரு கொடுமையைத்தான் செய்திருக்கிறது மராட்டிய அரசு.

சரி. சமூக நலனில் இவ்வளவு அக்கறையோடு இவற்றைத் தடை செய்த அரசு, திடீரென்று இப்படி பணியிழப்புக்கு ஆளாகி வருவாயை இழந்து வறுமையில் வாடும் இப்பெண்களின் மறுவாழ்வுக்கு மாற்று ஏற்பாடுகள் ஏதும் செய்திருக்க வேண்டியதுதானே. முன்னறிவிப்பின்றி அவர்களை நட்டாற்றில் விடுவது போல் விட்டு விடுவதுதான் சமூக அக்கறையா...

தற்போது அப்பெண்களின் நிலை என்ன என்று அரசுக்குத் தெரியுமா...? தடையின் காரணமாக 25 பெண்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள். சிலர் நண்பர்களிடமும் அண்டை அயலாரிடமும் கைமாற்று வாங்கி காலத்தை ஓட்டுகிறார்கள். சிலர் கிடைத்த ஊதியத்துக்கு வேறு வேலைகளில் சேர்ந்திருக்கிறார்கள்.

பதன்கோட்டைச் சேர்ந்த ரேகா டேவிட் சௌகான் என்னும் பெண்மணி சொல்கிறார் ‘நான் 13 வயதில் குறுஞ்சட்டை அணிந்த சிறுமியாக மும்பை நகருக்கு வந்தேன். அதிலிருந்து இங்கேயேதான் இருக்கிறேன். என் குடும்பத்தையும் நான்தான் காப்பாற்றி வந்தேன். விபத்தில் இறந்துபோன என் சகோதரியின் குழந்தைகள் இருவரையும் நான்தான் வளர்த்து வருகிறேன். விபரமறியா அக்குழந்தைகள் என்னையே அம்மா என்று அழைத்து வருகின்றன. இப்போது இக்குழந்தைகளையோ, பதன்கோட்டில் உள்ள என் பெற்றோர்களையோ காப்பாற்ற முடியாதவளாக உள்ளேன்.’

ரேகாவின் தோழியும் கணவனால் கைவிடப்பட்ட பெண்மணியுமான 21 வயது சோனியா “என் தாயாரின் மருத்துவச் செலவுக்கும், குழந்தைகளின் கல்விச் செலவுக்கும் வழியின்றி தவிக்கிறேன். நான் நடனமாடி வந்தபோது நாளன்றுக்கு 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை சம்பளம் பெற்றேன். தற்போது உணவகத்தில் பணிப்பெண்ணாகப் பணிபுரிகிறேன். தினம் 20 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரைதான் வருவாய் கிடைக்கிறது. உணவகத்திற்குச் சென்று திரும்ப ‘தானி’ கட்டணம் மட்டுமே தினம் 50 ரூபாய் செலவாகிறது. என்ன செய்வதென்று புரியாமலிருக்கிறேன்” என்கிறார்.

தவறான வழியில் வாழ்கிற எல்லா மகளிரும் சொல்லும் கண்ணீர்க் கதைகளைத்தானே இவர்களும் சொல்கிறார்கள் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் சரி, தவறு என்று தீர்மானிப்பது யார் என்பது ஒருபுறமிருக்கட்டும், இவர்களும் மனிதர்கள்தானே, இவர்களுக்கும் தன் மரியாதை கௌரவம் எல்லாம் இருக்கும் என்று எத்தனைபேர் ஏற்றுக் கொள்கிறார்கள்? எல்லோருக்கும் தெரிந்ததெல்லாம் இவர்களைப் பற்றிய இளப்பமான மதிப்பீடும் பார்வைகளும்தான்.

நடனப் பெண் சோனியா சொல்வது “இந்த அருந்தகத்தில் பணியாற்றும் நாங்கள் ஒரு குடும்பம் போல் கண்ணியமாய் வாழ்ந்து வருகிறோம். எங்கள் பணி ஆடுவது மட்டுமே. இதற்கு அப்பால் ஒரு பெண் என்ன செய்கிறாள் என்பது அவளது சொந்த தனிப்பட்ட பிரச்சனை. ஆனால் அரசு இந்தத் தொழிலே ஒழுக்கக் கேடானவர்களின் தொழில் என்பது போல் பார்ப்பதுதான் கொடுமை. எங்களுக்கும் தனி மரியாதை உண்டு. ஒருமுறை நடனமாடி விட்டுத் திரும்பும் போது என் துப்பட்டாவை பிடித்து இழுத்தான் என்பதற்காக ஒருவனை மேசை மீதிருந்த பீர் பாட்டிலாலேயே அடித்துவிட்டேன்” என்கிறார்.

ரேகா கேட்கிறார், “மும்பை சிவப்பு விளக்குப் பகுதி நடவடிக்கைகளையோ, திரைப்பட ஆபாச நடனங்களையோ கள்ளச் சாராய விற்பனையையோ கண்டு கொள்ளாத, கட்டுப்படுத்தாத அரசு எங்களைப் போய் ஏதோ நாங்கள்தான் சட்டம் ஒழுங்கையே சீர்குலைப்பது போல் எங்கள் பிழைப்பில் மண்ணைப் போடுவது ஏன்? உண்மையைச் சொல்வதானால் இந்தத் தடைக்குப் பிறகு தான் பலபேர் விலைமகளிர் தொழிலுக்கு போயிருக்கிறார்கள்” என்கிறார்.

இவர்கள் கூற்றையெல்லாம் முன்வைப்பதால் இந்தத் தொழிலில் வேறு எதுவுமே நடக்கவில்லை, இவர்கள் சொல்வதே உண்மை என்று வாதிடுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தவறு எங்கும், எதிலும் நடக்கலாம்தான். ஆனால் எது நடந்தாலும் நடந்த தவறைத் தான் கண்டிக்க வேண்டுமே தவிர தொழிலையே தடை செய்வது தார்மிக நெறியாகுமா?

பாலியல் ஒழுக்கம் சார்ந்த எந்த சீர்கேடானாலும் எல்லாவற்றுக்கும் பெண்கள் மீதே பழியைப்போட்டு அவர்களையே காரணமாக்குவது என்கிற அணுகுமுறை மராத்திய அரசின் நடவடிக்கையிலும் பிரதிபலித்துள்ளது. இதனால்தான் அருந்தக நடன மகளிர் சங்கம், பெண்ணுரிமை வழக்கறிஞர் வீனாகௌடாவை வைத்து வழக்கு தொடுக்க நீதிமன்றமும் சிறப்புமிக்க இத்தீர்ப்பை அளித்துள்ளது.

தீர்ப்பின் சாரமாக நீதிமன்றம் சொல்வது “நடன மகளிர் அரசின் ஆணைகளுக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருக்க முடியாது. நமது அரசமைப்புச்சட்டம் உறுதிசெய்துள்ள அடிப்படை உரிமைகள் அந்த அளவு ஒன்றும் ஊசலாட்டமானவை அல்ல. உறுதிமிக்க இந்த அடிப்படை உரிமைகள் ஒரு குடிமகன் சட்ட விரோத மற்ற எந்த ஒரு தொழிலையும் செய்து வாழ வகை செய்கிறது. அந்த வகையில் அருந்தகங்களில் நடனமாடி வாழ மகளிருக்கு முழு உரிமை உண்டு. மகளிர் அலுவலக உதவியாளராக, வரவேற்பாளராக, பணிப்பெண்களாக, பல்வேறு துறைகளிலும் ஊழியம் புரிந்து வரும்போது அவர்கள் நடனமகளிராக மட்டும் இருக்கக் கூடாது என்பதில் எந்த நியாயமும் இல்லை. இதில் தவறு ஏதும் நிகழ்கிறது என்றால், பிற எல்லா தொழில்களிலும் நிலவும் தவறுகளைக் களைய நாட்டில் என்ன சட்டங்கள் உண்டோ, அதன் வழி இந்தத் தவறையும் களையலாம். இதற்காக அருந்தக நடனங்களையே தடை செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. இது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது.”

இதனடிப்படையில் அருந்தக நடனங்கள் மீண்டும் இயங்கத் தொடங்க நடன மகளிர் வாழ்வில் மீண்டும் ஒளியேற்றப்பட்டுள்ளது. ஆனால் மராட்டிய அரசுக்கு இது பொறுக்கவில்லை. மும்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. பொதுவாக அரசுகளின் அணுகுமுறையே மேல்முறையீடு செய்ய வேண்டிய வழக்குகளுக்கு செய்யாமலிருப்பதும், செய்ய அவசியமில்லாத வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்வதுமே வாடிக்கையாக இருந்து வருகிறது. அதுவே இதிலும் நேர்ந்துள்ளது.

தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இதுபோன்ற பிரச்சினைகளில் சட்ட அங்கீகாரத்தை விடவும் சமூக அங்கீகாரமே முக்கியமானதாகப்படுகிறது. இன்று பெண் சார்ந்த உரிமைகளுக்கு எவ்வளவோ சட்ட அங்கீகாரங்கள் இருந்தும் அவற்றுக்கு இன்னும் போதுமான சமூக அங்கீகாரம், அதை ஏற்கும் பக்குவம் இல்லாத நிலையே நீடிக்கிறது.

இன்று பெண்கள் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து பயணிக்கிறார்கள். சாதனை படைத்து மிளிர்கிறார்கள். பெண்கள் இதுவரை புகாத துறைகளிலெல்லாம் புகுந்து பணியாற்றுவதைக் காண, தானி ஓட்டுவது, பேருந்து ஓட்டுவது, உள்ளிட்டு பல்வேறு பணிகளில் ஈடுபடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக பூரிப்பாக இருக்கிறது. இப்படிப்பட்ட பணிகள் பலவற்றிலும் பெண்கள் ஈடுபடுவதும் பெண் விடுதலைக்கான பாதைகளில் ஒன்றே. இப்படி இருக்க பெண்கள் காலம் காலமாக ஈடுபட்டு வந்த ஒரு துறையை, அதிலும் பணிவாய்ப்புகளையும் வாழ்க்கை உத்திரவாதத்தையும் தரும் ஒரு தொழிலை, அதில் கேவலம் எதுவும் இருந்தால் அந்தக் கேவலத்திலிருந்து அவர்களை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டுமே தவிர, அது சார்ந்த மலிவான மதிப்பீடுகளை மாற்ற முனைய வேண்டுமே தவிர அதைவிட்டு, பத்தாம் பசலித்தனமான பிற்போக்கான மதிப்பீடுகளுக்கே நாமும் இரையாகி அதிலேயே உழன்று அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்க முடியாது-கூடாது. இது எந்த வகையிலும் பெண்ணுரிமைக்குரிய சமத்துவ சனநாயகச் சிந்தனையுமாகாது. எனவே, இப்படிப்பட்ட மதிப்பீடுகளிலிருந்து நாம் விடுபட வேண்டும். மற்றவர்களையும் விடுபட வைக்க முனைய வேண்டும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com