Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
அக்டோபர் 2006
இருப்பின் வலி
பொன்.குமார்

இதுவரையில் வெளிவந்த பெரும்பாலான படைப்புகள் ஆணின் அதிகார வெளியான சிறையையே பாதுகாப்பான அறையெனப் பெண்களை நம்ப வைத்திருக்கின்றன. அதற்கு எதிரான கருத்தைப் பெண்மொழியின் துணையோடு கலகமொழியின் வெளிப்பாட்டில் நிலைநிறுத்த வேண்டும் என்கிற முன்னுரை வாசகமும் இதன் தொடர்ச்சியான தொகுப்பு முயற்சியும் மிகுந்த பாராட்டுக்குரியதே. ஆனால் தன்னுடல் தனக்கான உடலாக இல்லாமல் போனதன் காரணத்தை- ஆதங்கத்தை, பள்ளியறையின் கொடூரங்களை எவ்வித ஒப்பனையுமின்றி பெண் மொழி அம்பலப்படுத்துவதுதான் உண்மையான கலகமொழி என்று முடிவு செய்திருப்பது கேள்விக்குரியது.

தொகுப்பிற்கு படைப்புகளைத் தந்த கட்டுரையாளர்கள் பெண்ணியம் என்பதற்குப் பல்வேறாய்ப் பொருள் தந்துள்ளனர் என்றபோதிலும் சிந்தனைக் கோணம் ஒன்றாகவே இருக்கிறது. ‘பெண்ணியம் என்பது பெண்ணின் எல்லாச் சிக்கல்களையும் புரிந்து கொண்டு பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவது மட்டுமல்ல- சமூகத்தையே மாற்றி அமைக்கக் கூடிய வலு நிறைந்தது’ என்னும் ச.குமாரின் கருத்து சிறப்பு. சமூகத்தின் சரிபாதி அங்கமான பெண்ணினம் விழிப்புணர்வு பெறாமல் சமூக விடுதலை தான் இங்கேது? பெண்ணியம் என்கிற சொல் ஃபெமினா என்கிற லத்தீன் மொழிச் சொல்லே ஆங்கிலத்தில் ஃபெமினிசம் என்று மருவி பின் தமிழில் பெண்ணியம் என்றாயிற்று என்கிறார் ச.குமார்.

இர.மணிமேகலை, பன்னீர் செல்வம் ஆகியோரின் கட்டுரைகள் தலித் பெண்கள் குடும்ப ஒடுக்குமுறைக்குள்ளும் வெளியே ஆதிக்க சாதி ஆண்களாலும் சொல்லொணாத் துயருக்கு உள்ளாவதை எடுத்துரைக்கின்றன. தலித் பெண்களின் வாழ்க்கை நெருக்கடி அவர்களைப் போர்க்குணமிக்க பெண்களாக மாற்றி இருப்பதையும் சுட்டுகின்றன.

பெண்ணியம் ஏன் அவசியம், பெண்ணியத்தின் இலக்கு எதுவெனக் கட்டுரைகள் கூறுகின்றன. பெண்மொழி, பெண் உடல்மொழி என இரு கூறுகள் இயங்குகின்றன. உடல்வலி, உள்ள வலி என இருப்பின் வலியை கட்டுரையாளர்கள் சரியாக உள்வாங்கி எளிமையாக வெளிப்படுத்தி உள்ளனர். கட்டுரைகள் கனமாக இருந்தும் கட்டுமானம் சரியாக இல்லை. பெண்ணின் இருப்பின் வலியை எடுத்துச் சொல்ல இத்தொகுப்பு அவசியமாகிறது. இருப்பின் எதிர்ப்பைக் காட்ட வருகின்ற தொகுப்பு எது மாதிரியாக இருக்கும்? பொறுத்திருந்து பார்க்கலாம்.

வெளியீடு: புதுக்கவிதைப் பூங்கா, விலை ரூ. 25/-
தொகுப்பாசியர்: அதங்கோடு அனிஷ்குமார்
மின்நகர், மாக்கினாம்பட்டி (அஞ்)
பொள்ளாச்சி- 642 003.


ஒரு சாலையின் சரிதம்: நிர்மலா

‘கலை கலைக்காக அன்று- மக்களுக்காகவே’ என்கிற கோட்பாட்டின் வழியே நாற்பதாண்டுகளுக்கும் மேலான தமது இலக்கியப் பயணத்தில் பலதரப்பட்ட படைப்புகளைத் தந்த கவிஞரின் மனிதநேயக் கவிதைகளை நூலாக்கி இருக்கிறது மனித உரிமை நிறுவனமான மக்கள் கண்காணிப்பகத்தின் பதிப்புத்துறை.

1965இல் வெற்றிகரமாகத் தொடங்கிய கவிஞரின் இலக்கியப் பயணம் தளர்வுறாது, தடம் மாறாது வந்திருக்கிறது என்பதற்கு சாட்சியே ‘ஒரு சாலையின் சரிதம்’ எனும் இக்கவிதை நூல். தரமிக்க நாற்பத்தைந்து கவிதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்நூலில் கவிஞரின் வாலிப வயதுக் கவிதைகளும் அடக்கம். காதலில் கட்டுறாத மனித உயிர் இல்லை; காதலைப் பாடாத கவிஞனும் இல்லை. இவரும் காதலை எழுதுகிறார்.

என்னிருண்ட வாழ்க்கையிலே/ ஒளி மலர்கள் பூக்க வைத்தாய்/ தியாகமெனும் பெருவாழ்வை தொடங்குவதற்குப் பயிற்றுவித்தாய்/ உன்னுடைய காதலினால்.../ உயர்ந்துயர்ந்தே சென்றெந்தன்/ போராடும் மனிதர்களின்/ புத்துலகம் காணுகிறேன்/ என்று காதலைக் கூட போராட்டத்துடன் இணைத்துப் பார்க்கும் இக் கவிதைப் போராளி உன்காதல் எனக்கீந்த/ இனிமைகளை நினைத்திருப்பேன்/ காதலினால் நான் பெற்ற/ இலட்சியத்தின் உயிர் துறப்பேன்/ என்று அன்பிற்குரியவளிடம் சொல்லும் காதல் வரிகள் கூட மானுடக் காதலை உள்ளடக்கியிருப்பது கவிஞரின் சிந்தனைத் தரத்திற்குச் சான்று.

உலகின் ஜீவநதியான உழைக்கும் மக்களின் வேர்வைத் துளிகளைப் பாடாத, உணராத மூடரின் இலக்கியக் கழிசல்களை காலநதியே ஒழித்துவிடும் என்பதையும் இருமுனைப் போரில் உழைப்பவர் பக்கம் சேர்ந்திசைக்க இலக்கிய வாளெடுக்க வேண்டும் என்பதையும் படைப்பாளிகளுக்கு அறிவுறுத்துகிறார்.

சாதியக் கொடுமை, பெண்ணடிமைத்தனம், வறுமையின் கொடுமை எனச் சமூகத்தின் எல்லாவித இழிவுகளுக்கும் எதிராகக் குரல் கொடுப்பவர் மலைவாழ் பூர்வகுடி மக்களின் அவலத்தைச் சொல்கையில், நட்சத்திரமாளிகையைத் தாங்கியிருக்கும்/ நிலத்தின் நேற்றைய அதிபதி/ இன்றைக்கு என் நிலங்களை அபகரித்தவர்க்கே/ எடுபிடி/ என்கிறார். பெண்ணியச் சிந்தனையின் வெளிப்பாடாய் ஒரு கவிதையில் கருவறைக்குள் நுழைந்தாலும்/ கடவுள் சிலை தொட்டாலும்/ தீட்டென்று வக்கரிக்கும்/ தேசத்தில் பிறந்தவள் நான்/ இந்த/ பால்பேதக் கணக்கு/ புவியிலென்று முடிவடையும்/ என வினவுகிறார்.

வயல்கள் தான் நமது, விதை முதலாளி வேறெங்கோ- இறால்கள் இருக்கும் பண்ணைகள் நமது, இறால் போவது வேறெவருக்கோ- என்று உலகமயம் எனும் பசுத்தோல் போர்த்திய புலியின் தோலையும் உரிக்கிறார் கவிஞர் சி.பன்னீர்செல்வம். ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் இவரின் படைப்புகளின் தேவை நிறையவே இருக்கிறது.

ஆசிரியர்: சி. பன்னீர்செல்வம் விலை: ரூ.50/-
வெளியீடு: மக்கள் கண்காணிப்பகம்
6, வல்லபாய் சாலை,
சொக்கிகுளம், மதுரை- 625 006



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com