Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
அக்டோபர் 2006
சீரிய சிந்தனைக்கு ஒரு சிறு மடல்
நா. நளினிதேவி

அன்பான எழிலுக்கு,

நலம். நலமறியா அவா என்ற சம்பிரதாயங்கள் உனக்கும் பிடிக்காதவையே! கடந்த ஆறு மாதங்களாக எங்கள் பல்கலைக்கழகத்தின் சார்பில் நானிருக்கும் இடத்திலிருந்து மிகவும் வெகு தொலைவில் ஆய்வுப் பணிகள் இருந்தமையால் உன் மடல் கண்டும் உடனே எழுத முடியாமற் போய்விட்டது. இருந்தாலும் உனது திருமண முதலாண்டு நிறைவு நாளை மறக்கவில்லை! அதற்குள் ஓர் ஆண்டு ஓடிவிட்டதா எழில்? அங்கு எங்கள் பெண்கள் சங்க அலுவலகத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றிப் பயிற்சி பெற்றதால் பெண் உரிமைக் கருத்துக்களில் உனக்கும் பிடிப்பு உண்டு என்பது தெரிந்ததே! அதோடு நல்ல தமிழில் எழுத வேண்டும் என்பதும் உனது அடங்காத அவா அல்லவா? அதனால்தான் இங்கு வந்த பின்னரும் உன்னைப் பழக்குவதற்காகப் பேச்சு வழக்குச் சொற்களைப் பயன்படுத்தாமல் உனக்கு எழுதி வருவதை நீ அறிவாய். உன்னுடைய மடல்களைப் படிக்கும்போது உன் அவாவும், என் முயற்சியும் இருபது விழுக்காடு வெற்றியை எட்டியுள்ள மகிழ்ச்சியை உன்னுடன் பகிர்ந்து கொள்கின்றேன். முற்றிலும் மேற்கத்தியச் சூழலில் இருக்கும் எனக்கு இதுவும் இல்லாவிட்டால் தமிழே மறந்து போகும். நல்லவேளையாகத் தமிழ் படிக்கும் ஆர்வமுள்ள அக்கம்பக்கத்து நண்பர்கட்கு அவ்வப்போது தமிழ் கற்றுக் கொடுக்கும் அரிய வாய்ப்பும் கிடைத்துள்ளது. இவையெல்லாம் இருக்கட்டும்! உனது மடலில் காணப்படும் செய்திகள் பற்றிப் பேசுவோம் எழில்!

கண்மூடித்தனமான மரபுகளில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட உன் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி எந்த வகையிலும் வரதட்சணை வாங்காமல் உன் திருமணத்தைச் செய்து கொண்டாய் என்று நீ எழுதியிருந்த போதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நாட்டில் உன்னைப் போன்ற இளைஞர்கள் பலர் உருவாக வேண்டும் என்று விரும்பினேன். பெண் உரிமை என்பது பற்றி மெத்தப் படித்த பலரும், தாமும் குழம்பி, மற்றவரையும் குழப்பிக் கொண்டிருக்கும் போது, நீ அது பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள முற்படுவதை உன் எழுத்துகள் சொல்கின்றன. அத்துடன் நீ மேற்கொண்டுள்ள செயல்கள் சிலவற்றைப் பெண் உரிமை அல்லது சமஉரிமை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றாய் என்பது உன் மடலின் சொல்லாத செய்தி. ஆமாம் எழில்! நீ எழுதியுள்ள இரண்டு மூன்று செய்திகளை மட்டும் இங்கு எடுத்துக் கொள்ளலாம்.

பெண் வீட்டாரிடம் நீங்கள் எதுவும் கேட்காத போதும், அவர்கள் பொதுவாக நடைமுறையில் உள்ள வழக்கப்படி உனக்கோ உங்களுக்கோ எதுவும் செய்ய வில்லை; எனவே அவர்கள் கேட்டோ கேட்காமலோ உன் வாழ்க்கைத் துணைவிக்கு நீங்கள் அணிவித்த தங்க நகையை, உன் பெற்றோரின் வற்புறுத்தலால் திரும்ப வாங்கிக் கொடுத்துவிட்டதாகக் கூறியுள்ளாய். திரும்பப் பெற்றுக் கொண்டது என்பது வாதப்படி முற்றிலும் சரியே! ஆனால் வரதட்சிணை கேட்கவில்லை என்பதற்கும் அவர்களாகவே எதுவும் செய்யவில்லை; அதனால் திரும்பப் பெற்றுக் கொண்டோம் என்பதற்கும் என்ன பொருள்? இன்னொன்று, பெண் உரிமைக் கருத்தையட்டித் தாலி வேண்டுமா வேண்டாமா என்றவாதமும் இருக்கிறது. எப்படியோ அதுவும் நகைவகையில் ஒன்றுதானே! அதையும் திரும்பப் பெற வேண்டியதுதானே? அதை ஏன் கேட்கவில்லை. வீட்டில் வளர்க்கும் ஐந்தறிவு உயிர்கட்கு அணிவிக்கும் லைசன்ஸ் போன்றே அது என்பதால்தானே! உன் மீது தவறில்லை.

சமுதாயம் ஆண்களுக்கு அளித்துள்ள ஒரு தலையாய ஆதிக்க உரிமை! இதிலிருந்து எப்போது விடுபடப் போகின்றோம்! ‘ரோஷ உணர்வு’ கொண்டு அவளும் அதைத் திரும்பிக் கொடுத்திருந்தால் உன் பெற்றோரும் நீயும் அதை எப்படி எடுத்துக் கொண்டிருப்பீர்கள் என்பதை உன் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன் எழில்!

அடுத்து இந்த ஓர் ஆண்டில் துணைவியின் விருப்பு, வெறுப்புகளைத் தெரிந்து கொண்டதாகவும் அவற்றில் நீ தலையிடுவதும் உன் விருப்பங்கட்குக் கட்டாயப்படுத்துவதும் இல்லை என்றும் எழுதி யுள்ளாய். மேற்போக்காகப் பார்க்கும்போது இது முற்போக்குச் செயல் போலத் தெரியும். அக்கம் பக்கத்தாரிடம் நண்பரிடம் உன்னுடைய மதிப்பு உயரும். இதுபற்றி என்னிடம் நீ கேட்டுக் கொண்டவாறு சற்று விளக்கமாகவே என் கருத்துக்களை எழுது கின்றேன். நாம் நாமாக இருக்க வேண்டும், யாருக்கும் எதற்கும், எதனாலும் அடிமையாக இருக்கவோ, அடிபணியவோ கூடாது என்ற கொள்கைகள், ‘நாம்’, ‘யார்,’ ‘எதற்கு’, ‘அதனால்’ என்பவற்றுக்குரிய அவரவர் வாழ்க்கைச் சூழலுக்குரிய விளக்கங்களைப் பொறுத்தவை என்பதை நீ கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும் எழில்!

நீ கடற்கரையில் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து வாழ்பவன். அதனால் உனக்குச் சட்டென்று தெளியும் வகையில் கூறவா? பொங்க எழும் அலைகளும், அவற்றின் மீது பொங்கும் நுரைகளும் தானே கடலுக்கு அழகையும், ஈர்ப்பையும் தருகின்றன. நுரை பொங்கும் அலைகள் இல்லாத கடல் கடலாகுமா? ஆழத்தில் அமைதியான நீரோட்டம் கொண்டுள்ள கடலும் அதில் துள்ளும் அலைகளும் போன்றவையே குடும்பங்களும் குடும்ப நிகழ்வுகளும் எழில்! ஆணும், பெண்ணும் சமஉரிமை பெற்று விளங்கும் குடும்பங்கள்தான் வளமான சமுதாயத்தின் நாற்றங்கால்கள்.
குடும்பங்களில் வாழ்க்கை என்பதும் மகிழ்ச்சி என்பதும் தனியாக எங்கேனும் உள்ளனவா எழில்? நாள்தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகள் அந்நிகழ்ச்சி களுக்கான உணர்ச்சிகள், உணர்ச்சிகளுக்கு அடிப் படையான நம் விருப்பு வெறுப்புகள் தாம், வாழ்க்கைக்கு உயிர்த்துடிப்பை தருபவை. நாம் தனிஆளாக இருக்கும்போது நாம் வளர்ந்த பின்னணிக்கு ஏற்றவாறு நம்முடைய பழக்க வழக்கங்கள் அமைந்திருக்கும். இன்னொருவரோடு இணைந்து வாழும் வாழ்க்கையில் நியாயமான, நடுநிலையான, பொதுவான அளவுகோலில் அடிப்படை நல்ல பண்புகள் மாறாதவகையில் இவற்றை மாற்றிக் கொள்வதில் எந்த அடிமைத்தனமும் எத்தகைய அடி பணிதலும் இல்லை. இதுதான் விட்டுக் கொடுத்தல். இதில் நாம் நாமாக இருப்பதில் எந்த மாற்றமும் வராது எழில்!

ஒருவரையருவர் மதிக்கின்றோம், உரிமை கொடுக்கின்றோம் என்ற பெயரில் தனித்தனியே விலகி நிற்பது என்பது எந்த வகையிலும் சமஉரிமை வாழ்வு ஆகாது மறைமுகமான கட்டாயமே ஆகும் எழில்! உயிர்த்துடிப்பான, வாழ்க்கையின் சிறுசிறு நிகழ்ச்சி களுக்குக் காரணமான உணர்ச்சிகள் ஒதுக்கப்படும் போது அவற்றிலிருந்து விலகி நிற்கும்போது அங்கு சமஉரிமையுடன் இருமனங்கள் இணைதலுக்கு இடமின்றிப் போய்விடும்! மற்றவரின் விருப்பங்களை மதித்தல் என்பது விலகி நிற்றல் இல்லை. மனமார ஏற்றுக் கொள்வதுதான். இது இருவருக்குமே பொருந்தும் எழில். விலகி நிற்றல், அலைகள் இல்லாக் கடலின் உயிர்த்துடிப்பற்ற இயக்கம் போன்றது. தனித்தனியே இயங்குவதற்குத் திருமணம் குடும்பம் தேவையா எழில்?

விலகி நிற்பதும், கட்டாயப் படுத்தாமையும் பெண்ணுக்கு உரிமை கொடுப்பதாகாது. உரிமை என்பது கேட்டுத்தருவதும் கொடுத்துப் பெறுவதும் இல்லை எழில்! உண்பது, உறங்குவது போன்று இயல்பான ஒன்று எனும் நிலைதான் உண்மையான பெண் உரிமை. இன்னொரு விளக்கம் சொல்லவா எழில். நீ புரிந்து கொள்வாய் என்று அறிவேன். நம்முடைய இதயம் நூற்றுக்கணக்கான இரத்த குழாய்களின் மூலம் நல்ல இரத்தம் பெற்றுக் கெட்ட இரத்தத்தை வெளியேற்றுவதால்தான் உடல் இயங்கு கின்றது சிறுசிறு குழாய்களே ஆனாலும் இவற்றின் இயக்கம் இல்லை என்றால் இதயத்துடிப்பும் உடலின் இயக்கமும் இல்லைதானே எழில். இதுபோன்றதுதான் இன்ப, துன்பப் பயன்களைத் தரும் நம் அன்றாட நிகழ்ச்சிக்கும் அவற்றுக்குக் காரணமான விருப்பு வெறுப்புகளும் பழக்க வழக்கங்களும் மற்றும் உணர்ச்சிகளுமான குடும்பம். ஒரு குழாய் இயங்கா விட்டாலும் உடலுக்குக் கேடுதானே? புரிகின்றதா எழில்! ஒருவர் விருப்பத்தை மற்றவர் நிறைவேற்ற முன்வரும்போது கட்டாயமின்றித் தாமாகவே இருவரின் விருப்பமும் ஒன்றாகிவிடும். அந்த நிலையில் பெறும் மகிழ்ச்சியும், நிறைவும்தான் உண்மையான குடும்பத்தின் இலக்கணம். விட்டுக் கொடுக்கின்றோம் என்ற உணர்வற்ற சமஉரிமை நிலைதான் உண்மையான பெண்ணுரிமை. என்ன சொல்ல வருகின்றேன் என்பது தெளிவாகி விட்டதுதானே? நல்லவேளையாகத் தொடக்கத் திலேயே என்னிடம் தெரிவித்தாய் நல்ல மாற்றம் நிகழும் என்று நம்புகின்றேன். மடலை இரண்டு மூன்று முறை படித்துப்பார். தெளிவு பிறக்கும்.

பிற உன் மடல்கண்டு

தோழமையுடன்
வலம்புரிச் செல்வி
யேல் பல்லைக்கழகம்




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com