Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
அக்டோபர் 2006
கண்ணகி ஒரு போராளியே!
எழில்.இளங்கோவன்

தமிழக வரலாற்றில் கண்ணகிக்குச் சிலை எடுத்தவர்கள் இருவர். ஒருவர் இரண்டாயிரத்து இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சேர அரசன் சேரன் செங்குட்டுவன்; அடுத்தவர் ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கு முன்பு உலகத் தமிழ் மாநாட்டின் பொருட்டு சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகிக்குச் சிலை வைத்த அறிஞர் அண்ணாதுரை. முந்தைய முடியாட்சி அரசரோ காலச்சூழலுக்குகேற்ப கண்ணகியின் கற்பைப் போற்றிச் சிலை வைத்தார். பிந்தைய குடியாட்சி முதல்வரோ கண்ணகியின் நெஞ்சுரத்தைப் போற்றி, நீதி தவறாத ஆட்சியை வேண்டி ஓர் எச்சரிக்கைச் சின்னமாகக் கண்ணகி சிலையை நிறுவினார்.

தமிழக முதல்வரான அண்ணாவை எவ்வாறு ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டிற்குள்ளாகவே காலம் தன் வயப்படுத்தி அவர் உருவை மறைத்துவிட்டதோ அதே போன்று நெஞ்சுரத்தைப் போற்றி வைத்த கண்ணகி சிலையும் ஓராண்டு காலத்திலேயே மாற்றம் காண ஆரம்பித்து, சிலப்பதிகாரம் முழுவதுமே பரவலாகச் சொல்லும் பெண்ணின் அடையாளமான கற்பை வலியுறுத்தும் வாதத்திற்கு ஆதாரமான கற்புக்கரசி கண்ணகி என்ற வடிவம் நிலைபெற்று தமிழ்ப் பண்பாட்டின் சின்னமே கண்ணகி என்றானது. கண்ணகியின் குறியீடும் கற்பே என்று முடிவானது.
ஆணாதிக்கச் சமூகச் சூழலும், பெண்களின் விழிப்புணர்வு இன்மையும், ஒருங்கிணைப்பு இல்லாததும் கடந்த நாற்பதாண்டுகளில் அவ்வாதத்தை உடைக்க எவ்வித முயற்சியும் செய்ய இயலாததோர் சூழ்நிலையைத் தோற்றுவித்தது.

முந்தைய அதிமுக அரசின் ஆட்சிக் காலத்தில் கண்ணகி சிலை அகற்றப்பட்ட போதுதான் அது சார்ந்த ஒரு விழிப்புணர்வை தமிழகம் பெற்றது. குறிப்பாகத் தமிழகப் பெண்களும் பெற்றனர். பெண் விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்ட சில பெண்ணிய வாதிகளும், பெண்கள் அமைப்பும் கண்ணகி சிலையை அகற்றியது சரியானதே; கற்பு எனும் பெயரால் பெண்களின் ஒடுக்குமுறை அகல இச்சிலை அகற்றல் ஒரு நல்வாய்ப்பே என்பதாக அறிவிப்புச் செய்தனர்.

ஆனால் தமிழக அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கண்ணகி நிலை அகற்றலுக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தன. அரசியல் கட்சிகளின் போராட்டத்திற்கு வெறும் அரசியல் காழ்ப்புணர்வே காரணம் என்று வைத்துக் கொண்டாலும் தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள் கண்ணகியைத் தனது மூதாதையர் என்கிற முறையிலும், தமிழ்ப் பண்பாட்டின் சின்னம் என்ற நிலையிலும், போராட்ட குணத்திற்கு முன்னோடி என்ற வடிவிலும் கண்டு சிலை அகற்றலுக்கு எதிரான போராட்டங்களை நடத்தினர்.

இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தில் கடந்த மே மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக கண்ணகி சிலையை அண்ணா நிறுவிய அதே இடத்தில் புதுப்பிக்கப்பட்ட தோற்றத்தோடு வைத்தார் கலைஞர். சிலைத் திறப்பின்போது செய்யப்பட்ட விளம்பரங்களிலும் தமிழ்ப் பண்பாட்டின் சின்னமான கண்ணகி சிலையின் திறப்பு விழா என்று தான் குறிப்பிடப்பட்டதே தவிர அண்ணாவின் நீதிநிறைந்த ஆட்சியின் தேவைக்கான குறியீட்டுச் சின்னம் என்பது மறைக்கப்பட்டது அல்லது மறுக்கப்பட்டது. எனவே கடந்த காலங்களில் நிலைபெற்ற தமிழ்ப்பண்பாட்டின் சின்னம், கற்பின் வடிவமான கண்ணகி தமிழ்ப் பெண்களின் பண்பாட்டுச் சின்னம் என்பதான கருத்தே வலுப்பெற்று நின்றது.

ஒரு பெண் ஆணுக்கு இணையாக, சமத்துவ சமூகப் பெண்ணாக வேண்டுமானால் அவளின் வாழ்வியல் சமூகக் கட்டுப்பாடுகள் எனும் விலங்குகள் நொறுக்கப்பட வேண்டும். கருத்து முதல்வாதச் சொல்லான கற்பும் அதில் ஒன்று. அப்படியானால் கண்ணகியின் அடையாளம் என்ன? தவறு செய்தவன் அரசனே என்றபோதும் கண்ணகி அஞ்சவில்லை; அமைதியாக இருக்கவில்லை- மன்னனிடம் வேண்டுகோள் மனுபோட்டு முறையிடவில்லை. மாறாக எதிர்த்துப் போராடத் துணிகிறாள்.

பாண்டியனை நேருக்கு நேர் சந்தித்து சரியான நீதி வழங்கத் தெரியாத நீ அறிவில் குறைந்தவன்; உன்னிடம் அறத்தின் கூறு, நல்ல திறம் இல்லை என்று விரல் நீட்டிக் கூறுகிறாள்.

நாட்டை ஆளும் மன்னனே என்றபோதும் தன் உரிமைப் போராட்டத்தில் அவனது முகத்தில் படும்படியாக தன் சிலம்பை வீசி எறிகிறாள் கண்ணகி. மன்னனை வீழ்த்தித் தன் போராட்டத்தில் வெற்றியும் காண்கிறாள்.

ஒரு பெண்ணுக்குத் தீங்கு நேரும் போது கோபம் வரவேண்டும்; துணிச்சல் வரவேண்டும்; போராட்ட குணத்தோடு போராட முன்வரவேண்டும். போராட்டம்தானே விடுதலைக்கான கருவி? இந்தப் போராட்ட குணமும், போராட்டமும் இங்கே கண்ணகிக்கான அடையாளங்களாகத் தெரியவில்லையா?

இங்கே இன்னொரு வாதமும் நுழைகிறது. கண்ணகி மக்களுக்காக அல்லது பெண்ணினத்திற்காகப் போராடவில்லை சுயநலத்தின் காரணமாகவே போராடினாள் என்கிற மிகப் பலவீனமான வாதம்தான் அது.

சிலப்பதிகாரக் காலம் வேறு, இன்றைய காலம் வேறு. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் பெண்களுக்கெதிரான ஒடுக்குமுறை படிப்படியாக வளர்ந்து வந்ததாலும், அத்துடன் நிகழ்ந்த அறிவியல் வளர்ச்சியின் காரணமாகவும் பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவ சிந்தனைகளாலும் இன்று முழுமையான போராட்ட களம் அமைந்துள்ளது. இந்தக் களம் கண்ணகி வாழ்ந்த காலத்தில் அமையப்பெறவில்லை.

கண்ணகி தன்னுடைய சுயநலம் சார்ந்த உரிமைக்காகப் பாண்டியனிடம் போராடினாலும் கூட அந்தப் போராட்ட குணம் - பெண்களுக்கு உரிமையைப் பெறுவதற்கான அடையாளத்தை, வழியைக் காட்டுவதாக அமையவில்லையா? ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வலிமை, கோபம், ஆளுமை உண்டு என்பதை ஆண்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதுதானே தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்து.

இந்த முற்போக்கான சிந்தனையை ஒப்புக் கொள்ளும் போதுதான் கண்ணகியின் அடையாளம் கற்புக்கரசி என்பதல்ல. தன் உரிமைக்காகப் பெண்ணினம் தொடுத்த முதல் போராட்டத்தின் முதல் வித்து அல்லது முதல் போராளியே கண்ணகி என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
அக்காலசூழலுக்கேற்ப இளங்கோ அடிகளும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார்-தனது சிலப்பதிகாரத்தில்.





Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com