Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
நவம்பர் 2007
அள்ளி முடிந்தவள்
சூசன்

செண்பகா ஓடிவர வர டவுன்பஸ் விருட்டென்று கிளம்பிப் போய்விட்டிருந்தது. அவள் அதிர்ந்து நின்றாள். நெஞ்சுக்குள் படபடப்பு அவளை அறியாமல் எகிறிக் கொண்டிருந்தது. அடுத்த பேருந்து இன்னமும் ஒருமணி நேரம் கழித்துத்தான் வரும். சென்றுவிட்ட பேருந்தைப் பிடித்திருந்தால் ஒன்றரை மணிநேரத்திற்குள் வீடுபோய்ச் சேர்ந்துவிடலாம். அடுத்த பேருந்து சுற்றுப் பேருந்து. ஏற்கனவே இருக்கும் காலதாமதத்தையும் சேர்த்துப் பார்த்தால் வீடுபோய்ச் சேரும்போது நன்றாகவே இருட்டிவிடும்தான்.

இருட்டில், தான் வீட்டுக்கதவை தட்டப் போவதையும், கணவன் விழிகளில் கனல் தெறிக்கப் பார்க்கவிருக்கும் பார்வையையும், உடன் வார்த்தையால் கூராகக் குத்திக் கிழித்தெறியும் காட்சியையும் ஒரு கணம் மனக்கண் முன்பு கொண்டுவந்து வைத்தவளின் முகம் பேயடித்ததுபோல உருமாறி நின்றது. இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. ஷேர் ஆட்டோ, கால் டாக்சி எதுவும் இந்தப் பக்கம் வருவது போலத் தெரியவில்லை. ஒருவேளை வந்தாலும்கூட அதில் செல்கிற அளவிற்குப் பணமும் கையில் இல்லை.

அவள் தன் உள்ளங்கையைத் திறந்து பார்த்தாள். அவசரத்தில் நனைந்து போயிருந்த, வியர்வை ஈரம் படிந்த கைக்குட்டைக்குள் கொஞ்சம் சில்லறைகள் இருந்தன. இதுதான் செண்பகாவின் பணம். சேமிப்பு. சொத்து, எல்லாம் இவைதான். அக்கம்பக்கத்து வீடுகளில் நூறு, ஐநூறு ரூபாய் நோட்டுக்களில் புழங்கும் பெண்களைப் பார்க்கையில் அவளுக்குப் பெருமையாக இருக்கும். பொறாமையாகவும் கூட இருக்கும். அவ்வாறு சின்னச் சின்ன பர்ஸ்களில் சுருட்டியும், மடக்கியும் பணக் குவியல்களை வைத்திருக்கும் பெண்களின் முகங்கள் எல்லாம் வசீகரமாக இருப்பதைப் பார்த்திருக்கின்றாள். அவர்களின் பேச்சுகளில் கூட கம்பீரமும், தன்னம்பிக்கையும் வெளிப்படையாக உலா வருவதைக் கூட கவனித்திருக்கின்றாள்.

பணம்... பலம்தான். ஆனால் தன்னுடைய நிலை என்ன? தொட்டதிற்கெல்லாம் கணவனிடம் கையேந்தும் நிலை. அஞ்சு ரூபாய்க்கு கூட பக்கத்து அண்ணாச்சி கடையில் கடன் வாங்கிவிட்டுப் புருசன் வந்ததும் கெஞ்சி, குழைந்து, காரணம் சொல்லி ஒரு வசையோடு வீசி எறியப்படும் பணத்தைக் கொண்டுபோய்க் கடையில் கொடுத்து, மறுகடனுக்காக ஏச்சு வாங்க மனதைத் தயார் செய்து... பத்து வருடங்களாக இப்படித்தான் ஓடுகின்றது குடும்பம் எனும் நொண்டித்தேர்.

அப்படியொன்றும் இவள் பெரிய எதிர்பார்ப்பு உடையவள் அல்ல. சமயங்களில் சேலை பழையதென்று வெளியே தெரிந்துவிடாமல் இருப்பதற்காக அதைத் திருப்பிக் கட்டிக்கொண்டு கூடப் போவாள். யாரேனும் கேட்டுவிட்டால் அவசரத்தில் மாற்றிக் கட்டிவிட்டேன்' என்றும் சொல்லுவாள். அப்படியென்ன பெரிய தேவைகள். நல்ல அரிசி, சத்தாய் ஒரு காய்கறி, ரேசன் பொருட்கள் முழுவதும் வாங்கக் காசு, குழந்தைகளுக்கு மிட்டாய்கள், எப்போதாவது தனக்கு ஸ்டிக்கர் பொட்டு, பண்டிகைகளுக்கு அதுகளுக்குப் புதுத்துணி, முடிந்தால் தனக்கு ஒரு சேலை... எல்லாம் குடும்பம் கலந்த தேவைகள்தான்.

இந்தத் தேவைகளைத் தானே நிறைவேற்றிக் கொள்ள ஒரு வேலைக்குச் செல்லவேண்டும் என்ற ஆதங்கம் வெகுகாலமாய் இருந்து வந்தது. தினசரிப் பத்திரிக்கையில் வந்த ஒரு டி.டி.பி. வேலை பற்றிய விளம்பரத்தைப் பார்த்தவள் அதுபற்றி நேரடியாக விசாரிக்க வந்தாள். வந்த இடத்தில் வேலை கிடைத்தபோதும் திரும்பிச் செல்வதில் ஏற்பட்ட தாமதம்தான் அவளைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருந்தது.

கைகளைப் பிசைந்தபடியே நின்றிருந்தவளின் மனசுக்குள் இன்னொரு கவலையும் வந்துவிட்டிருந்தது. காலதாமதத்திற்கே இத்தனை சங்கடப்படுகின்றோமே, வேலைக்குச் செல்லப்போகிறேன் என்று கணவனிடம் சொன்னால் ஏற்படப்போகும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கப் போகிறேன். கூப்பிட்ட மறுகணம் ஓடிவந்து நிற்கும் நிலைவிட்டு எப்படி தைரியமாய் தினம்தோறும் வீடுதாண்டிப் படியிறங்கி, வேலைக்குச் சென்று, வீடு திரும்பி...

கிரகணம் பிடிப்பதுபோல செண்பகாவின் மனமெங்கும் இருள் படரத் தொடங்கியது. மனசு வலித்தது. கால்கள் துவண்டன. பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் உடைந்து போயிருந்த ஒரு பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்தபோது பக்கத்தில் இருந்த சிறுமண்டபம் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் கம்பீரமான பேச்சு கேட்டது.

"பெண் விடுதலை ஒன்றுதான் இன்றைய சமூகத்தை மேலான சமூகமாக மாற்றும். பெண் தன்னைப் பிணைந்திருக்கும் தளைகளில் இருந்து தன்னை முழுவதுமாக விடுவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றாள்...” அடுத்த பஸ் வர இன்னமும் நேரம் இருக்கின்றது என்ற நிலையில் மனதின் பொருமலைத் தடுக்க சற்றுநேரம் அங்கே போய் நிற்கலாம் என்று அவ்விடம் நோக்கி நகர்ந்தாள் செண்பகா.

நீண்ட அறையில் நிறைய சேர்கள் போட்டிருந்தார்கள். மேடை என்று எதுவும் இல்லை. முன் இருக்கைகள் மட்டும் சற்று ஒதுக்கப்பட்டு நடந்து செல்வதற்கு ஏதுவாக வழி விடப்பட்டிருந்தது. முன்புறமிருந்த நான்கு இருக்கைகளிலும் நான்கு பெண்கள் இளம் வயதிலிருந்து நடுத்தர வயதுவரை உட்கார்ந்திருந்தார்கள். பார்வையாளர்களில் ஒரு சில ஆண்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பெண்களாகத்தான் இருந்தார்கள்.

செண்பகாவும் பின் இருக்கையில், திரும்பிப் பார்த்தால் பேருந்து வந்து நிற்பது தெரிகின்ற கோணத்தில் இருக்கும் ஒரு சேரில் தளர்வாக அமர்ந்தாள். முன்புறம் மைக் எதுவுமில்லை. பெண்கள் ஒவ்வொருவராக எழுந்துநின்றுதான் பேசினார்கள். முன் இருக்கையில் நடுநாயகமாக வீற்றிருந்த ஒரு பெண் எழுந்து நின்றார்.

“இந்த பெண்கள் விழிப்புணர்வுக் கூட்டத்தில் இப்போது ஒரு சிலரை அறிமுகப்படுத்துகின்றோம். இவர்கள் ஆண்களின் அடக்குமுறையால் பலவகையிலும் பாதிக்கப்பட்டவர்கள். குறிப்பாக அதிலிருந்து மீண்டவர்கள். முதலாவதாக ராணி''. இருபத்தி ஐந்து வயதிருக்கும் அப்பெண்ணுக்கு. தலையில் முக்காடிட்டவாறே எழுந்துவந்து அனைவரின் முன்பாகவும் நின்றார். மெள்ள முக்காடைக் கீழே இறக்கினார். குபீரென்ற ஒரு அருவருப்பு அனைவரின் முகங்களையும் தாக்கியது. அப்பெண்ணின் தாடையிலிருந்து கழுத்துவரையிலும் இருக்கின்ற சதைகள் தீயில் பொசுங்கிச் சிதைந்து போயிருந்தன. அதன் காரணமாக வாய்கூட இடப்பக்கமாய் இழுத்துக் கிடந்தது.

“ஸ்டவ் வெடித்து விபத்து நடந்தது என்று முதல் அறிக்கையில் சொல்லப்பட்டபோதும், அவ்வாறு சொன்னால்தான் கணவனைக் காப்பாற்ற முடியும் என்றும், அதன்மூலம்தான் இவரது ஒரு பெண் குழந்தையையும் வாழவைக்க முடியும் என்றும் உறவினர்கள் நிர்பந்தித்தார்கள். ஆனால் அவற்றையெல்லாம் உதறிவிட்டுத் தனியாக தைரியமாகத் தன் கணவர் வீட்டாரின் வரதட்சணைக் கொடுமையை நீதிமன்றம் வரையிலும் எடுத்துச்சென்று அனைவருக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்தவர் ராணி.''

பெண்ணை அறிமுகப்படுத்தியவர் விளக்கியபோது கூட்டமே அவருக்காக, அடைந்த கொடுமைக்காக அனுதாபமும், நிலைநாட்டிய நியாயத்திற்காகப் பெருமிதமும் அடைந்தது. செண்பகாவும் தனக்குள் யோசித்துப் பார்த்தாள். இதேபோன்ற ஒரு சம்பவம் தனக்கும் நடந்துள்ளது. திருமணம் முடிந்த புதிதில் நாத்தனாரின் திருமண சமயத்தில் பேசியபடி நகை போடமுடியாதபோது தன்னுடைய நகையைக் கேட்டார்கள் கணவன் வீட்டார். இவள் மறுக்கவே பிரச்சினை பெரிதானது. அடி, உதைக்குப் பிறகு மறுநாள் குளிக்கப் போனபோது, சுடுநீரை எடுத்துக்கொண்டு பாத்ரூம் போகும் வழியில் யாரோ எண்ணையைச் சிந்திவைக்க கால்தவறி விழுந்ததில் தண்ணீர் பானை கீழே விழுந்து சுடுநீர் எங்கும் தெறித்து, நல்லவேளையாகத் தன்மீது பெரிதாகத் தெறிக்காமல் போய்...

"பாத்துப் போகத் தெரியலே முண்டம்.. தடிமுண்டம்...' கணவனின் அண்ணன் எண்ணெய்க் குப்பியோடு எதிரே நின்று கத்த... அழுவதைத் தவிர என்ன செய்யமுடிந்தது என்னால். அரற்றியது அவள் மனம்.

“அடுத்ததாக மேரி.'' பதினாறு பதினேழுதான் இருக்கும் வயது. ஒல்லியாக இருந்த பெண் முன்வந்து நின்று எல்லோரையும் வணங்கியது. கண்களில் இன்னமும் படர்ந்திருக்கும் பள்ளிக் கனவுகள். ஆனால் ஏதோவொரு வெறுமை. “வறுமையைக் காரணமாகக் கொண்டும், பெற்றோர்கள் இல்லாத காரணத்தாலும் உடன் பிறந்த அண்ணனே தன் கடனை ஈடுகட்டுவதற்காக வட்டிக்காரனுக்கு வலியவே தன் தங்கையைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டான். திருமணம் நடக்கும்போது இப்பெண்ணின் வயது பதினைந்துதான். ஆனால் அதன்பிறகு இவர் மேற்கொண்ட துணிச்சல், அடைந்த வெற்றி பெண் இனத்திற்கே பெருமை தரக்கூடியது.''

அறிமுக உரையாளர் சொல்லி முடிக்க அப்பெண் தொடர்ந்து, “எனக்குப் படிக்கணும்னு ஆசை. வலுக்கட்டாயமாத் திருமணம் நடந்தபோதும் இது சட்டபூர்வமில்லாத திருமணம், மனசு ஒத்துக்காத திருமணம், இதுலேர்ந்து எப்படியும் விடுபடணும்ங்கிற வேகம் எனக்குள்ளே இருந்திச்சு. உதவி செய்ய சொந்தங்கள் யாரும் இல்லை. நானே ஒரு மகளிர் அமைப்போட உதவியை நாடினேன். ஒருவருடப் போராட்டத்துக்குப் பிறகு எனக்குத் திருமண விடுதலை கிடச்சுது. வலுக்கட்டாயப் படுத்தியவர்களுக்கு தண்டனையும் கெடச்சுது. இப்போ ஒரு மகளிர் காப்பகத்திலே தங்கிப் படிச்சிட்டு வர்றேன்.''

ஒரு நீண்ட கரவொலி அப்பெண்ணின் பேச்சிற்கு பதிலாக வெகுமதி போலக் கிடைத்தது. செண்பகாவும் கைதட்டினாள், மனசுக்குள் வலியோடு. தன் திருமணமும் ஏறக்குறைய இப்படித்தானே நடந்தது. வறுமை காரணமாக எட்டாவதுவரை தான் படிக்க முடிந்தது. ஒரு வருடம் வீட்டுவேலை செய்தபோதும், பக்கத்திலிருக்கும் ஒரு அச்சகத்தில் சேர்ந்து கணிணியில் டி.டி.பி. வேலை கற்று மேற்கொண்டு வேலை செய்தவாறே படிக்க வேண்டும் என்று நினைத்திருக்க, சித்தப்பாவின் வற்புறுத்தலின் பேரில் வலிய நடந்தது தானே இந்தத் திருமணம். திருமணத்தன்று காலையில் கூட சித்தப்பாவிடம்,

“பெண்களின் திருமண வயது பதினெட்டுன்னு பஸ்ல எல்லாம் போட்டிருக்காங்க. எனக்கு இப்ப பதினாறு வயசுதானே ஆச்சு. மேலே படிக்கணும். வேலைக்குப் போகணும். கைநிறைய சம்பாதிக்கணும்னு ஆசை. எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம். நிறுத்துங்க...'' என்று புத்தகத்தை முகத்தில் வைத்துக்கொண்டு அழுதது ஞாபகமிருக்கிறது.

அதைத் தவிர என்னால் வேறு என்ன செய்ய இயன்றது. புலம்பியது அவளது மனம். அடுத்து முன்வந்து நின்ற பெண்ணைப் பார்த்ததும் கூட்டமே தழுதழுத்துப் போனது. செக்கச் செவேர் என்று சிவந்திருந்த பெண்ணின் தேகத்தில் முகம் முதல் பாதம் வரையிலும் ஆங்காங்கே தீச்சுடல்கள். தழும்புகள். ஆறியும் ஆறாமலும் இருக்கும் வடுக்கள். “என் பேர் ஆயிஷா. பட்டதாரி. வேலைக்குப் போறேன். பெரிய இடத்திலேதான் "நிக்கா' ஆச்சு. அந்த வீட்டுல கார்களே நாலு இருக்கு. அவர் பெரிய தொழிலதிபர். இத்தனை இருந்தும் என் பிரச்சினை..'' பெண் பேச்சை நிறுத்திவிட்டு எல்லோர் முகங்களையும் ஒருமுறை பார்த்தது.

“பாலியல் கொடுமை, வன்முறை...'' கூட்டம் அப்பெண்ணையே மையமாகப் பார்த்தது. “அவருக்கு சந்தேகம் அதிகம். எங்கிட்டே எந்த ஆண் பேசினாலும் அது உடலுறவுக்காகத்தான்ங்கிற குரூர எண்ணம். திருமணமாகி அஞ்சு வருசம் கூட இருந்தேன். ஒவ்வொரு ராத்திரியும் வதைதான். அவர் கேள்வி கேட்பார். காது கூசுகிற மாதிரி கேள்வி கேட்பார். நான் எதிர்த்து பதில் சொல்லக் கூடாது. சொன்னா சூடுதான். சிகரெட்டால, சுருட்டால, சமயத்துல அயர்ன் பாக்ஸôல கூட...'' குபீரென வெடித்து அழுதது பெண். அழுத வேகத்தில் கண்களைத் துடைத்துச் சுதாரித்துக் கொண்டது.

“சொந்தம், பந்தம், இனத்தடைகள் எல்லாத்தையும் மீறி போலிசுக்குப் போனேன். கோர்ட் படியேறினேன். அந்தக் கொடுமைக்கு தண்டனை வாங்கிக் கொடுத்ததோட இனிமேல் எந்தப் பெண்ணும் பாலியல் கொடுமைக்கு ஆளாகக் கூடாதுன்னு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி வர்றேன்.'' அந்தப் பெண்ணை பார்க்கப் பார்க்க பெருமையாக இருந்தது செண்பகாவுக்கு. தனக்கு நேர்ந்த கொடுமையை எதிர்த்ததோடு, எத்தனை வெளிப்படையாகப் பேசி மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுகிறாள் இந்தப் பெண்.

இதேபோன்ற கொடுமைகள் தானே இன்னமும் நாளும் நடக்கின்றது எனக்கு. நடுஇரவில், நண்பகலில், அசதிக்காலத்திலும் கொடுமைகள்தானே இன்னமும் நாளும் நடக்கின்றது எனக்கு. வா என்றால் வர வேண்டும். மறுக்கக்கூடாது. சுணங்கக்கூடாது. முகம் லேசாக வாடினால்கூட குப்பைத் தொட்டியைக் கிளறியது போல வார்த்தைகள் தெறித்து விழும். முரண்டு பிடித்தால் அடி விழும். நிமிண்டு விழும். முட்டிக்குமேல் தொடை வரையிலும் இரண்டு கால்களிலும், கமுக்கோட்டிற்குக் கீழ் முழங்கை வரையிலும் இரண்டு கைகளிலும், யாரும் பார்க்காத இடங்களில், "என்ன கொடூரம் இது' என்று கேட்டுவிடாத இடங்களில் சிவப்பு சிவப்பாய், தடிப்பு தடிப்பாய் எத்தனை அசுரக் கிள்ளல்கள். அடிகள். வலிகள், வேதனைகள், வேதனையான தழும்புகள், தழும்பான வேதனைகள்.

தொடரும் இந்தப் பாலியல் வன்முறைக்கு எதிராக என்ன செய்ய முடிகின்றது என்னால். பதறியது அவள் மனது.
அடுத்த பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தபோது நன்றாகவே இருட்டி விட்டிருந்தது. கதவைத் தட்டியபோது அம்மாதான் திறந்தாள். செண்பகாவுக்குத் தன் வீட்டில் அம்மாவைப் பார்த்தபோது பெரும் ஆச்சரியமாக இருந்தது. திருமணம் செய்து கொடுத்த இத்தனை வருடங்களில் அம்மா இதுவரையிலும் ஒரு ஐந்தாறு முறைதான் வந்திருப்பாள். அதுவும் ஏதேனும் அத்தியாவசியம் இருந்தால் மட்டும்தான். வந்த வேகத்தில் போய்விடுவாள். இப்போது எதற்காக...

“அம்மா... வாம்மா... எப்பம்மா வந்தே..'' ஆசையாக அம்மாவின் கையைப் பிடித்தபோது உள்ளிருந்து வெகுண்ட குரல் எழுந்தது. “அதைப்பத்தி அப்புறம் கேக்கலாம்டீ, இத்தனை நேரம் எங்கே போய் மேஞ்சுட்டு வர்றே. அதைச் சொல்லுடீ'' கணவன் கத்திக்கொண்டே முன்வந்தான். அவளை எரித்து விடுவது போலப் பார்த்தான். செண்பகா பதட்டப்படாமல் சொன்னாள்,

“நான் வேலைக்குப் போகப்போறேன். அது விசயமா விசாரிக்கப் போனேன். வேலை கெடச்சிருச்சு. டி.டி.பி. வேலை. காலை பத்து மணிக்குப் போனா சாயந்திரம் அஞ்சு மணிக்கு வந்துடலாம். நாளைக்கே சேரச் சொல்லிட்டாங்க.''

“என்னது? வேலைக்குப் போகப்போறியா? யாரைக் கேட்டுடீ இந்த முடிவுக்கு வந்தே?''

“யாரைக் கேக்கணும். வீட்டு வேலைக்கு எந்தத்தடையும் இல்லை. வேலைக்குப் போறதிலே என்ன தப்பு. என்ன பிரச்சினை?''

“பிரச்சினை இருக்கு. நீ வேலைக்குப் போகக் கூடாது.''

“அதான் ஏன்னு கேக்கறேன்.''

“என்ன செண்பகா மாப்பிள்ளைகிட்டே எதிர்த்துப் பேசறே''... அம்மா பதட்டத்தோடு முன்வந்தார்.

“நீங்க சும்மா இருங்கம்மா... கேள்வி கேட்கிறதை எல்லாம் எதிர்த்துப் பேசறதுன்னு எடுத்துக்கிட்டா, இந்த உலகத்துல பெண்கள் வாயவே திறக்க முடியாது. சொல்லுங்க, என்ன பிரச்சினை...''

“பிரச்சினைதான். அதுக்கு முன்னால உங்கம்மா எதுக்கு வந்திருக்காங்கன்னு தெரியுமா?'' கணவன் கேட்க செண்பகா குழப்பமாக அம்மாவைப் பார்த்தாள். அம்மா தயங்கி தயங்கிச் சொன்னார்.

“உனக்கு நாளைக்கு ஆபரேசன் பண்ண டாக்டர்கிட்டே அப்பாயிண்மென்ட் வாங்கியிருக்கார் மாப்பிள்ளை...''

“எனக்கா, ஆபரேசனா, என்ன ஆபரேசன்?'' அவள் அதிர்வோடு கேட்டாள். அம்மா இருவரையும் குழப்பமாகப் பார்த்துவிட்டு பின்னும் சொன்னார். “கருத்தடை ஆபரேசன்.''

செண்பகாவுக்கு முகம் சிவந்தது. “என்னைக் கேக்காமலேயே எனக்கு ஆபரேசன் பண்ண எப்படி முடிவு பண்ணனீங்க,'' அவள் கணவனைக் கோபமாக ஏறிட்டாள். அவன் அவள் முகத்தை அலட்சியமாகப் பார்த்தபடியே சொன்னான்,

“இதுல என்ன உன்னைக் கேக்க வேண்டியிருக்கு. டாக்டர்கிட்டே போன மாசமே கேட்டுட்டேன். எப்பக் கூட்டிட்டு வர்றதுன்னு. பீரியட் முடிஞ்சு அஞ்சாவது நாள் கூட்டிட்டு வாங்கன்னு சொன்னாங்க. இன்னையோட அஞ்சுநாள் ஆச்சில்லே, அதான் போன் பண்ணி உதவிக்கு வரச்சொல்லி, உங்கம்மாவையும் கூப்பிட்டேன்.''
அவன் பேசிய விதமும், அதில் தெறித்தோடும் அலட்சியத்தையும், அகங்காரத்தையும் கண்டு செண்பகாவின் உள்மனம் பதைபதைத்தது.

“ச்சீ... ஒரு ஆம்பளை எதையெல்லாம் கணக்குப் போடறதுன்னு விவஸ்தையே இல்லையா.'' அவன் அவளை விருட்டென்று திரும்பிப் பார்த்துக் கத்தினான்.

“ஆமா. விவஸ்தை இல்லை தான்டீ. இன்னும் எத்தனை நாளைக்கு நாளும் கெழமையும் பாத்து பாத்து காத்துக் கெடக்கிறது. ஆணுறையை வாங்கிட்டு அல்லாடறது. பசிக்கும்போது திங்கணும்டீ. பிடிச்ச மாதிரி திங்கணும். புரிஞ்சுதா.''

அம்மா அதிர்ந்துபோய் முகம் மறைத்து காது பொத்தி அடுத்த அறைக்குள் செல்ல, செண்பகாவின் பார்வையில் கணவன், உச்சியில் கரிப்பிடித்துக் தொங்கும் நூலாம்படை போலத் தெரிந்தான். ஆணின் மனம் கிழிந்தால் இப்படித்தான் நாறுமா? மனசு குமுறியது. குமுறி குமுறி திடம் கொண்டது. பின் சொன்னாள்,

“என்னால ஆபரேசன் பண்ணிக்க முடியாது''

“ஏன்''

“பெண்ணை நிர்பந்தம் பண்றது ஆண் அடிமைத்தனத்தின் இன்னொரு வடிவம். சமூகத்துல ஒரு பெண் விடுதலையடையணும்னா பொய்யான ஆண்மை மொதல்ல அழியணும்.''

“என்னடீ சொன்னே...'' கணவன் ஓங்கி கை உயர்த்த சட்டென்று தடுத்தாள்.

“இதெல்லாம் இனி வேண்டாம். மீறிக் கை வெச்சீங்க, போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக வேண்டியிருக்கும். வன்கொடுமைச் சட்டத்துல புகார் பண்ண வேண்டி வரும். அப்புறம் மானம், மரியாதை கெட்ரும், ஆமா.''

அவனின் ஓங்கிய கை தளர்ந்தது. முகம் இருண்டு சுருங்கியது.

“என்னடீ இது. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இப்படி நடந்துக்கறே. பதிலுக்கு பதில் பேசறே. கை ஓங்கினாத் திருப்பி ஓங்கறே. என்னாச்சு?''

அம்மா கேட்க அவனும் பதட்டம் விலகாமல் கேட்டான். “என்னாச்சு உனக்கு...'' செண்பகா பதில் சொல்லவில்லை. அவிழ்ந்து கிடந்த கூந்தலை அள்ளி முடிந்தாள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com