Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
நவம்பர் 2007
தடைக்கற்களும் - படிக்கற்களும்:
நா. நளினிதேவி

Jeeva திருமணப் பேச்சின்போதே, பெண் வேலைக்குச் செல்லக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப் பெறுகின்றது. பெரும்பாலானவர்கள், இருவரின் ஊதியம், வாழ்க்கை வசதிகளைத் தடையின்றிப் பெருக்கிக் கொள்ளலாம் என்ற நோக்கிலேயே பெண் கல்வியையும், வேலை வாய்ப்பையும் வரவேற்கின்றனர். இதனால், பெண்கல்வி, அறிவுத்தேடலுக்கும், வேலைவாய்ப்பு, அவளின் பன்முகத்திறன் வெளிப்பாட்டிற்கும், பொருளியல் விடுதலை, தனித்து நின்று இயங்குவதற்கும், வீட்டுவேலைச் சுமை விடுவிப்புக்கும் என்ற நோக்கம் முற்றிலும் முரண்பாடான போக்கில் மாறியுள்ளதை மனதில் நிறுத்தி ஆவன செய்வதே உடனடி தேவை.

நடிப்பு என்ற உலகறிந்த தொழிலில் பெண்களின் திறமை திட்டமிட்டே முடிக்கப்படுகின்றது. ஆணுக்குப் போலவே பெண்ணுக்கும் இது தொழில் என்ற போதிலும், ஆண்களை விடப் பெண்கள் நடிப்பில் சிறந்தவர் என்றபோதிலும், திருமணத்துக்குப் பின்பு அவர்கள் நடிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. பெற்றோர் பணம் காய்க்கும் மரமாகக் கருதும் நிலையில், திருமணம் ஆன ஆண் பாதுகாப்பும், பொறுப்பும் உள்ளவனாக இருப்பான் என்ற எண்ணத்தில், அவனை மணந்து பாதுகாப்பு தேடிக் கொள்கின்றனர். இயலாத வழி, உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். திரைப்படத்திலும், அவள் சிற்றின்பப் பொருளாகவே பயன்படுத்தப்படுகின்றாள். அவளின் தனிப்பட்ட வாழ்க்கை ஊடகங்களுக்கு விற்பனை பெருக்கும் செய்தியாக உள்ளது.

காலமெல்லாம் கண்ணீரில் கரைந்து கவலைக் குழியில் வீழ்ந்து கிடக்கும் பெண்கள், இல்லையெனில் உலகின் கொடுமைகளுக்கு உருவகமாகத் திகழும் பெண்கள், இழிவுகளுக்கும், சிறுமைகளுக்கும் இருப்பிடமான பெண்கள் என இவர்களைத்தான் ஊடகங்கள் காட்டுகின்றன. வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களைப் புதிது புதிதாகக் கண்டுபிடித்து அவற்றின் சந்தைக்களமாகவும், விளம்பரப் பொருளாகவும், நுகர்பொருளாகவும் பெண்களைக் கொண்டுள்ளனர். பழைய மரபுகளின் உட்பொருள் பற்றிப் பெண்கள் சிந்தித்து விடாதவண்ணம் மூளைச்சலவை செய்யும் கருவிகளாகவே ஊடகங்கள் செயல்படுகின்றன.

இதுவரை கண்டதுபோல் இன்னும் எத்தனை எத்தனையோ தடைச்சுழல்கள் இருந்தபோதிலும், இவற்றிலிருந்து மீளவேண்டும் என்ற பெண்களின் எழுச்சி இன்மையே பெண்சமன்மை முயற்சி வெற்றி காணாமைக்கு அடிப்படைக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆதிக்கச் சுகத்தில் ஆண்கள் திளைப்பது போலவே, பெண்கள் அடிமைச் சுகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். இதுவரையிலான பெண் சமுதாய மறுமலர்ச்சிக்கு ஆண்களே அடிக்கல்லிட்டுப் பெரும்பணி ஆற்றியுள்ளனர். அடுத்தவர் தோளில் சாய்ந்து நின்றே பழகிவிட்ட பெண்கள் தம் காலில் நிற்கும் திறத்தையும், நினைப்பையும் மறந்து விட்டனர்.

ஆண்கள் எவ்வளவுதான் பெண்விடுதலை உணர்வு கொண்டவராக இருந்தபோதும், அவர்களின் இயல்பான ஆண்நோக்கு நிலையிலிருந்து முற்றிலும் வேறுபட முடியாது. விடுபடவும் இயலாது. அவர்களின் இயல்புகளும், தேவைகளும் வேறு; பெண்களின் இயல்புகளும், தேவைகளும் வேறு. இதற்குக் காலத்தை வென்று கருத்துரைத்த வள்ளுவரின் வாழ்க்கைத் துணைநலம், பெண்வழிச்சேறல், வரைவின் மகளிர் இயல்களே போதுமான சான்றுகளாகும். மேலும் காந்தியாரின் ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனியான கல்விமுறை வேண்டும் எனும் கருத்தோடு, கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்வதை வரவேற்றபோதும், தம் வீட்டுப் பெண்கள் மறுமணம் செய்துகொள்வதை விரும்பவில்லை என்ற கூற்றும் இங்கு நோக்கத்தக்கது.

விவேகாநந்தர் பெண் எப்போதும் சுமையே என்கின்றார். பெண் விடுதலைச் சிந்தனையாளர்களான எங்கெல்ஸ், ஜீவா போன்றோர் இரு மனைவியாளர்; தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்கி இளைய சமுதாயத்தின் ஈர்ப்புமிகுந்த தலைவராக விளங்கிய அண்ணாவின் திரையுலகப் பெண் ஒருவருடனான தொடர்பு பற்றிக் குறிப்பிடும்போது தான் முற்றும் துறந்த துறவியல்ல. அந்தப் பெண் படிதாண்டாப் பத்தினியுமல்ல என்று கூறியதையும் உளம்கொள வேண்டும். ஆண்களுக்கான இயல்புக்கு இவை எடுத்துக்காட்டப்பட்டுள்ளனவே தவிரக் குறைகூறும் நோக்கில் அன்று என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.

இந்த வகையில் பெண்களின் ஈடுபாடும் முயற்சியும் எவ்வளவு இன்றியமையாதது என்பது புலனாகின்றது. ஆனால் கல்வியறிவற்ற பெண்களை விடவும் கல்விபெற்ற பெண்களின் போக்கே பெண்ணுக்குக் கடும் பகையாக உள்ளது. தம் அரிய கல்வியும், வேலை வாய்ப்பும், பொருளியல் விடுதலையும், பெண் விடுதலைக்கும் பயன்பட வேண்டும் என்ற உணர்வே இல்லாதவராய், முடிவின்றிப் பெருகிக் கொண்டே இருக்கும் வாழ்க்கை வசதிகளைத் தேடி அலைவதிலும், பொன்னையும், பட்டையும் வேட்டையாடும் வெறியிலும் உள்ளனர். கற்ற கல்வி சமுதாய மாற்றத்துக்குப் பயன்படாத வகையில் வெறும் மனப்பாட, மதிப் பெண்கல்வியாய் இருப்பதே இதற்குக் காரணம். கல்விக் கொள்கையையும், பாடத் திட்டங்களையும் வகுப்போரும் ஆண்களாகவே இருப்பதன் விளைவு இது.

புதுமையாக்கம், புறவாழ்க்கையில் மட்டுமே உள்ளது. அகவாழ்க்கையில் காலத்துக் கொவ்வாத கண்மூடி மரபுகளைக் கண்ணிருந்தும் ஒளி இல்லாராய்ப் பின்பற்றுகின்றனர். பன்னாட்டுச் சந்தைப் பொருட்களை வாங்கிக் குவிப்பதிலும், அகப்புற ஒப்பனையில் ஈடுபடுவதிலும், வரையறையற்ற வாழ்க்கையை மேற்கொள்வதிலும் காட்டும் முயற்சியில் கால், அரைப் பங்காவது தம்முடைய அடிமைத்தளை அகற்றுவதிலும், சிறுமைகளைக் களைவதிலும் காட்டினால் போதும். ஆண் அடிமை, ஆண்வெறுப்பு, ஆண் மறுப்பு போன்றவை ஒருபோதும் சமன்மையைப் பெற்றுத்தரா. பெண் அடிமை எந்த அளவுக்குத் தீங்கு விளைவிக்கின்றதோ அந்த அளவுக்கு ஆண் அடிமையும் தீங்கானதே. ஆண்கள் ஒருபோதும், பகைவரோ, எதிரிகளோ அல்லர். ஆணாதிக்கமே நாம் போராட வேண்டிய களம்.

பெண்கள், ஆணாதிக்க மனப்பான்மை, பெண் நோக்குநிலை, தற்சிந்தனை இன்மை, உறவுப்பகை முதலானவற்றைத் தவிர்த்துத் தம்மை உடலாலும், உள்ளத்தாலும் சிறுமைப்படுத்தும் அனைத்துக் கூறுகளையும் எதிர்த்துத் தத்தம் அளவில் களப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். முன்னரே குறிப்பிட்டவண்ணம், பெண் விடுதலைப் போராட்டம் அவரவர் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றவகையில் அமைவது ஆகும். ஆண்கள் மட்டுமே போராடிப் பெற்றுத்தரும் ஒன்று அன்று! பெரும்பாலான பெண்கள் தாம் அடிமைகளாக இருக்கின்றோம் என்பதை உணராதிருப்பது போன்றே ஆண்களும் ஆண்டாண்டுக் காலமாய் ஒருசாரான உரிமைகளைத் துய்த்துக் கொண்டுள்ளோம் என்ற உணர்வின்றி உள்ளனர்!

குழந்தை வளர்ப்பு, தொடக்கப்பள்ளி முதலான கல்விமுறை, சமுதாய விழா, சமுதாய "உற்பத்தி' போன்ற இன்னபிறவற்றில் ஆணும் பெண்ணும் சமம் என்ற அடிப்படை வேண்டும். தனிமனிதன் என்ற வகையில் ஓர் ஆணோ, பெண்ணோ தனித்தன்மையுடன் இயங்குவது வேறு; கூடி வாழும் விலங்கான மனிதன் தனித்து நின்று உலகை, அதன் அழகைத் துய்ப்பதைவிடத் தன்னை விரும்பித் தன்னுடன் இணைந்த உறவுகள், நண்பர்களுடன் ஒன்றிணைந்து துய்ப்பது மனிதனின் மாண்பாகும். பெண்கள் எல்லாவற்றையும் ஏன்? எதற்கு? தேவையா? என்று சிந்தித்துத் தேவை அற்றவற்றைத் துணிந்து நின்று மறுக்கப் பழக வேண்டும்.

எல்லாம் பெண்கள் கையில் உள்ளது. பெண்கள் தம் அடிமை நிலையை உணர்ந்து தம் அளப்பரிய ஆற்றலைப் பயன்படுத்தினால் மட்டுமே சமநிலை பெற இயலும் என்பதே உண்மை. பெண்கள் உணராதவழி பிற முயற்சிகள் வெற்றி பெறுவது ஒருபோதும் இயலாது. பெண்நோக்கு, பெண்மொழி, தற்சிந்தனை, தெளிவு, துணிவு, உறுதி ஆகிய கருவிகளுடன் பெண்கள் களத்தில் இறங்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com