Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
நவம்பர் 2007
மதியிடம் கேளுங்கள்

குரானைத் திருத்தி எழுத வேண்டும் என்கிறாரே வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்...?
-செல்லக்குமார், மதுரை.


நடக்கிற காரியமா இது...?

மலையைக் குடைவது வெறுமனே எலியைப் பிடிக்கத்தானா...?

1962ல் பிறந்த தஸ்லிமா நஸ்ரின் தனது பதின்மூன்றாவது வயதிலேயே ஒரு நூலை எழுதி முடித்தாராம். ‘எனது இளமைக்காலம்’ என்ற பெயரில் அண்மையில் வெளிவந்தது அந்நூல். அதில் “அல்லாவின் பெயரைச் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. இந்த அல்லா.., பல்லா... எல்லாமே கற்பனையாக இட்டுக் கட்டப்பட்ட விஷயம் என்று எனக்குத் தோன்றுகிறது. குரான் படிப்பறிவே இல்லாத... ஒரு ஆண் எழுதியது” என்று கூறி இருக்கிறார். (காவ்யா வெளியீடு:பக்-501)

தனது பள்ளிப் பருவத்திலேயே இந்தப் புரிதலுக்கு வந்திருந்த தஸ்லிமா முப்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து, இக்காலகட்டத்திலும் "குரானைத் திருத்தி எழுத வேண்டும்' என்று மத சீர்திருத்தவாதம் பேசுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை. மத எதிர்ப்பில் தமது நோக்கினைக் கூராக்குவதே இப்போதைய தேவை. அப்போதுதான் மேற்கூறிய நூலின் வேறொரு இடத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் எனக்கு எழுகை (எழுதுவது) வரும்.

நான் கவிதை எழுதிக் கொண்டிருப்பேன். நான் சமுதாயத்தை குடும்பத்தை வெறுத்துக்கொண்டு இருப்பேன். இதுதான் என் கண்ணுக்குத் தெரியாத அடிமைத்தனம். அடிமைத்தனத்தின் அடையாளமாக என் கைகளிலும், கால்களிலும் சங்கிலி இருப்பதை உணர்வேன். என் சிறகு இரண்டும் வெட்டப்பட்டிருப்பதை உணர்ந்தபடி இருப்பேன். முடிவில்லாத காலமாக நான் ஒரு கூண்டுக்குள் அடைபட்டிருப்பேன்'' (பக்கம்-475) என்றெல்லாம் அப்போது எழுதியவற்றை மாற்றி எழுதுவதற்கான புதிய சூழலும் உருவாகி வரும்.

மத எதிர்ப்புணர்வைக் கூர்மைப்படுத்துவதுதான் நஸ்ரினின் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தில் புதிய இலக்குகளை அடையாளம் காட்டுவதாக இருக்கக்கூடும். அப்புதிய பயணத்தில் பெண்ணியவாதி தஸ்லிமா நஸ்ரினின் இந்த சிறைப்பட்ட நாடோடி வாழ்க்கையினின்றும் விடுபட்டு சுதந்திரப் பெண்ணியப் பேராளியாக உலகை வலம் வந்து கொண்டிருப்பார்.

புதிய பெண்ணியம் தலையங்கம் பகுதியில் தொலை நோக்கு! விடாமுயற்சி! வெற்றி!! என்று இருக்கிறதே! அதன் பொருள் என்ன என்பதைச் சுருங்கச் சொல்வீர்களா?
-சவீதா, சென்னை-78
.

சிறப்பான இக்கேள்விக்கு சரியான பதிலைச் சுருக்கமாகத் தரமுடியுமா என்பதுதான் கேள்விக் குறியாக இருக்கிறது. எனினும் ஒரு சிறுமுயற்சி இது.

அறிவால் உணர்வோம்! மொழியால் இணைவோம்! தேசத்தால் நிலைப்போம்!! என்று சொன்னால் பொருள் புரிகிறமாதிரி இருக்குமா...?

இல்லையெனில் இன்னும் சற்று விரிவாகச் சொல்லலாம்.

பகுத்தறிவால் உணர்வோம்!
நம் மொழியால் இணைவோம்!
தமிழ்த் தேசத்தில் நிலைப்போம்!!

என்பதன் சாராம்சம்தான் அது. பெண்விடுதலைக்குத் தேவை சுயமரியாதை. சுயசிந்தனை, சுயசம்பாத்தியம் எனும் சுயசார்புநிலை. அதுபோலவே தமிழ்ச் சமூக விடுதலைக்குத் தேவை சுய நிர்ணய உரிமை அல்லது தன் உரிமை உள்ள தமிழ்த்தேசம். பெண்விடுதலையும், சமூக விடுதலையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல பிரிக்க இயலாதவை. அதனாலேயே தொலை நோக்கோடு சிந்திப்பது மிகவும் அவசியமாக இருக்கிறது.

பார்ப்பனரான பாலச்சந்தர் படங்களைப் பார்த்து ரசித்தேன் என்கிறீர்களே! பாம்பையும், பார்ப்பானையும் ஒருசேரப் பார்த்தால் பார்ப்பனனை முதலில் அடி என்று சொன்ன பெரியாரின் கோட்பாட்டுக்கு எதிரான தில்லையா இது?
க.அரசு, சென்னை-2.


மக்கட்தொகையில் மூன்று விழுக்காடே கொண்ட பார்ப்பனர், சமூகத்தின் அனைத்து அதிகார மட்டங்களிலும் ஆழக் காலூன்றி, பெரும்பான்மையோரை அடக்கி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில் அவ்வாறு சொல்வதைத் தவிர தந்தை பெரியாருக்கு வேறுவழி இருந்திருக்காது. ஆனால் இப்போது அவ்விடங்களிலெல்லாம் பார்ப்பனர் அல்லாதவர்களின் பார்ப்பனியச் சிந்தனைகளே அதிகார வர்க்கத்தினுடைய கருத்துக்களாக இருந்து கோலோச்சிக் கொண்டிருக்கின்றது என்பதால் பெரியாரின் அப்போதைய "மேற்கோளுக்கு'' இப்போது வேலையில்லை என்றே தோன்றுகிறது.

அப்படிப்பட்ட பார்ப்பனியக் கருத்துக்களை, பெண்களின் நிலையில் நின்று சற்றேனும் கேள்விக்குட்படுத்தியவர் பார்ப்பனரான இயக்குநர் பாலச்சந்தர் என்பதே உண்மை நிலை.

திரைத்துறையின் ‘ஹீரோயிசத்தைக்’ கட்டறுத்து, அதனைக் கருவறுத்தவர். பெண்களை, அவர்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி வாத, விவாதங்களுக்கான பெண்ணுலகின் வாயிலை அகலத் திறந்து வைத்தவர் அவர். வலிமைமிகுந்த ஊடகமான ‘பெரிய திரை’ வழியே தமிழ்ப் பெண்களின் சிந்தனையை இயக்கத்தை அடுத்தடுத்த நிலைகளுக்குக் கொண்டுசேர்த்த பெருமை என்றும் பாலச்சந்தர் அவர்களுக்கு மட்டுமே உண்டு.

சரி. இருக்கட்டும். நீங்கள் "அன்பே சிவம்' எனும் "பார்ப்பனர்'' கமலுக்கு ஆதரவானவரா? அல்லது "எல்லாம் அவன் செயல்' எனும் "பார்ப்பனியர்'' ரஜினிக்கு ரசிகரா?

சாதியை ஒழிக்கும் ஒரே ஆயுதம் கல்விதானே என்ற கேள்விக்கு கவிஞர் வைரமுத்து அளித்த பதில் ஏற்றுக்கொள்ள முடியாததுதானே?
-சங்கரன் அன்பய்யா, சைதை.


ஆமாம்! அவரது பதில் உறுத்தலாகவே இருந்து கொண்டிருக்கிறது. கல்வி-அறிவாகி, அறிவு-பொருளாகி, பொருள்-அன்பாகி, அன்பு-ஞானம் என்றானால்தான் சாதிபேதம் ஒழியும் என்கிறார் கவிஞர் வைரமுத்து.

கல்வி-அறிவாகும்... சரி. அறிவு-பொருளாகும்... ஓரளவு சரி. பொருள் எப்படி அன்பு ஆகும்? பொருள்-ஆசையாகி, ஆசை-பேராசையாகி, பேராசை-பதவிப்பித்துக் கொண்ட அரசியலாகும். அந்த அரசியல்-ஊழல், மோசடி, நம்பிக்கைத் துரோகம் என்றாகும். இதில் சாதி-பேதம் ஒழிவது எங்கே? எப்போது? எப்படி?

கல்வி-அறிவாகி, அறிவு-மனித நேயமாகி, மனிதநேயம்-போர்க்குணமாகி, போர்க்குணம்-புரட்சியாகி, புரட்சி-சமூக மாற்றமாகும்போது வேண்டுமானால் சாதி ஒழியலாம் - சமத்துவம் காணலாம் என்று கூறி இருந்தால் நாமும் ஆமோதித்திருக்கலாம்.

தேர்தலில் வெற்றிபெற்று சமூக மாற்றத்தைக் காண முடியாதா என்று கேட்டால் நிச்சயமாக முடியாது. ஏனென்றால் தேர்தல் கட்சிகளை வளர்த்து விடுவதும், காத்து நிற்பதும் உயர்சாதிப் பெருமுதலாளிகள் கூட்டமாயிற்றே! இவர்கள் சமத்துவத்திற்கு வழிகோலுவார்கள் என்று நம்புவது கதிரவன் மேற்கில் தோன்றும் என்பதை நம்புவதைப் போலத்தான்.

கூட்டுக் குடித்தனங்கள் குலைவதும், தனிக் குடித்தனங்கள் பெருகுவதும் சமூகச் சீரழிவு என்று சொல்லப்படுகிறதே.... உங்கள் கருத்து என்ன?
-அருணா, குரோம்பேட்டை.


பெண்கள் வேலைக்குச் செல்வது சமூகச் சீரழிவு என்று சொன்னால் அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா? அதே போலத்தான் இதுவும். சென்ற நூற்றாண்டின் பிற்பகுதிகளில் கூட கூட்டுக் குடித்தனங்கள் பெண்களைக் கடுமையாக அடக்கி ஒடுக்கி வைத்திருந்தது என்பதுதான் வரலாறு. கல்வியினை முடித்து, வேலை வாய்ப்பினைப் பெற்று ஆண்களே தத்தம் ஊரைவிட்டு வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பணி நிமித்தமாகச் செல்லும்போது கூட்டுக் குடித்தனம் குலைவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

உலகமயம் ஏற்படுத்தித் தந்திருக்கும் பெண்களுக்கான வேலை வாய்ப்பு (குறைந்த ஊதியமாக இருப்பினும்) பெருமளவில் அவர்களை வெளி உலகிற்கு அழைத்து வந்திருக்கிறது. இந் நிலைமையும் கூட தனிக் குடித்தனங்களை அதிகரிக்க வைத்திருக்கிறது. உலகமயத்தின் இன்னொரு விளைவாக கிராம விவசாயம், வேளாண்மை சார்ந்த தொழில்கள் எல்லாம் நசித்துவிட நாட்டுப்புற பெண்களும், ஆண்களும் நகரங்களை நோக்கிப் படையெடுக்கிறார்கள்.

இவ்வாறெல்லாம் கூட்டுக் குடித்தனங்கள் உடைபட்டதில் புதியவகைக் கூட்டுக் குடித்தனம் உருவாகி வருகிறது. வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்மகனைப் பெறாத தமது பெற்றோரைத் தம்முடன் வைத்துக் கொள்ளும் போக்கு அதிகரித்திருக்கிறது. இதுவும் வரவேற்கப்பட வேண்டிய மாற்றம் தானே?

கூட்டுக் குடித்தனத்தில் இருப்பது அல்லது தனிக்குடித்தனத்தை விரும்புவது என்பதெல்லாம் பெண்ணின் தனிப்பட்ட உரிமையாக இருக்க வேண்டும். அதற்கு ஒரே ஒரு முன் நிபந்தனை - அந்தப் பெண் ஏதேனும் வேலைக்குச் செல்பவளாக அல்லது சுயசம்பாத்தியம் உள்ளவளாக இருக்க வேண்டும் என்பதே. இத்தகைய தனிக் குடித்தனங்கள்தான் குடும்ப வேலைகளை ஆணும் பெண்ணும் பகிர்ந்து செய்வதற்கான தேவையினை உண்டாக்கும். இதன் வளர்ச்சிப் போக்கு குடும்ப அமைப்பை சனநாயகப்படுத்தி பெண்ணின் சிந்தனையைத் தூண்டிவிடும். அத்தகைய சூழலில் சமூக விடுதலைக்கான அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்பதே நமது கருத்து.

‘கலை கலைக்காகவே’ என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ ‘கலை மக்களுக்காகவே’ எனக் கூறுகிறார்கள். இதன் அர்த்தம் என்னவென்று என் போன்றோருக்குத் தெரியவில்லையே... விளக்கம் தருவீர்களா?
-க.தேவி, நெய்வேலி.


‘கலை கலைக்காகவே’ எனக் கூறுவது பெரும்பான்மைக் கூட்டம். கலை மக்களுக்காகவே என்போர் சிறுபான்மையினர். பெரும்பான்மை வாதம் ‘கலை பொழுதுபோக்கவே’ என்கிறது. சிறுபான்மையினர் ‘கலை மக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்தவே’ என்கின்றனர்.

செம்மைப்படுத்தப்பட்ட வாழ்க்கைமுறை அமைந்த ஒரு நல்ல சமூக அமைப்பில் கூட உழைப்பு என்பது கடுமையானதாக இல்லாமல் உளமார்ந்த செயலாகவே இருக்கும். எனவே அப்போதும்கூட கலை என்பது பொழுதுபோக்கு அம்சமாக இருக்காது.

ஆனால் உண்ண உணவு கூடக் கிடைக்காத உழைக்கும் மக்களை மிகப்பெரும்பாலோராகக் கொண்டுள்ள இந்த அமைப்பில் ‘கலை பொழுது போக்கவே’ என்று சொல்லத் திரிகிறது வஞ்சகர் கூட்டம். அம்மக்களின் சிந்தனைக்கண் சிறிதும் திறந்துவிடக் கூடாது என்ற நோக்கில் "பொழுதுபோக்குக் கலை' எனும் பெரும் மயக்கத்தில் ஆழ்த்தி வைத்திருக்கிறது. இவர்கள் விழித்துக்கொண்டால் வஞ்சகரின் வளம் கொழிக்கும் வாழ்க்கைக்கு ஆபத்து வந்துவிடுமே!

‘விழித்துக் கொள்பவரால் தான் பிழைத்துக்கொள்ளவும் முடியும்’ என்பதைப் பரப்புரை செய்யும் கூட்டம் ‘கலை மக்களுக்காகவே’ என்ற நோக்கில் செயல்படுகிறது. இதனை விளங்கிக்கொள்வது கடினமாக இருக்கிறதென்றால் இன்னுமோர் எளிய உதாரணம்: ஒரு தொலைநோக்கி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனைக் கொண்டு ஒருவர் வானத்து நட்சத்திரங்களையும், கொட்டும் அருவியென இயற்கைக் காட்சிகளையும் பார்த்து மகிழ்கிறார். வேறொருவர் அத்தொலைநோக்கியினைக் கொண்டு அடுத்தவீட்டு அந்தரங்கத்தினை'ப் பார்த்து ரசிக்கிறார். முன்னது கலை மக்களுக்காகவே என்பதைப்போல. பின்னது கலை கலைக்காகவே என்பதைப் போல. எது சரியென நீங்களே விளங்கிக் கொள்ளுங்கள்.

தமிழக முதல்வர் கலைஞரின் முதுமை பற்றி மும்பை ஞாநி முதலைக் கண்ணீர் வடிக்கிறாரே...
-மதிமகன், சென்னை.


எண்பத்து நான்கு வயதைக் கடந்த நிலையிலும் கலைஞர் ஒருநாளில் பதினெட்டு மணிநேரம் உழைக்கிறார்- அதாவது மூளை உழைப்பினைச் செலுத்துகிறார் என்பது ஞாநியின் கருத்து. முதல்வரின் அனுபவத்திற்கும், ஆற்றலுக்கும், அறிவுக்கூர்மைக்கும் 18 மணிநேரத்தில் ஒவ்வொரு மணிநேரத்திலும் தோராயமாக 15 நிமிடம் மூளை உழைப்பும், மீதி உள்ள 45 நிமிடம் பிறரிடமிருந்து செய்திகளை உள்வாங்குவது என்ற நிகழ்வுமே நடந்து கொண்டிருக்கும்.

ஆக ஒரு நாளைக்கு கலைஞர் நாலரை மணிநேர மூளை உழைப்பைக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை நிலை. ஒருவர் 85 வயதில் நாலரை மணிநேர மூளை உழைப்பைக்கூட செலுத்தவில்லை எனில் அவர் எவ்வாறு ஒரு ‘சாதனை மனிதராக’ இருக்க முடியும்? இந்தக் குறுகிய நேர மூளை உழைப்பும், அது தரும் குன்றாத உற்சாகமும்தான் கலைஞரின் நூற்றாண்டு கால வாழ்விற்கும் ஆதாரமாக இருக்கப் போகிறது என்பதை அறியாத ஞாநியின் கருத்து அரைவேக்காட்டுத் தனமாகத்தான் தெரிகிறது.

அதுவுமல்லாமல் ஊருலகில் நூறு வயதினையும் கடந்த ஆயிரக்கணக்கானோர் தமது பணிகளைத் தாமே செய்துகொள்ளும் ‘உடல் உழைப்புக்’ கொண்டவர்கள் என்பதை இதழாளராக இருந்தும் ஞாநி உணராமல் போனது வியப்பைத் தருகிறது. உடல் உழைப்போ அல்லது மூளை உழைப்போ ஏதோ ஒன்றுதான் ஆரோக்கியமாக உருமாறி, மனிதரை இறுதிவகை இயக்கும் ஆற்றல் படைத்ததாக இருக்கிறது. இதைவிடவும் முக்கியமான இன்னொன்று- வரலாறு கூறும் முதுபெரும் தலைவர் ஒருவருக்கு ஆலோசனை (ஆலோசனை வேறு மாற்றுக்கருத்து என்பது வேறு)

சொல்லப்புகும் ஒருவர் அவருக்கு மிக நெருக்கமானவராகவோ, உறவினராகவோ, ஒருமித்த கருத்து உடையவராகவோ, அவரை விடவும் சாதனை புரிந்தவராகவோ அல்லது அவருடன் இடைவிடாத தொடர்பில் இருப்பவராகவோ இருப்பது மிகவும் அவசியம். முதல்வரின் உற்ற நண்பர்களோ அல்லது அவரது அரசியல் எதிரியாகக் கருதப்படும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோ கூடக் ‘கலைஞரின் முதுமை’ பற்றிக் "கவலைப்பட்டு'' கருத்துக் கூற முன்வராத நிலையில் இதழாளர் ஞாநிக்கு மட்டும் ஏன் இந்த அதிகப்பிரசங்கித்தனம் என்ற கேள்வி எழவே செய்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com