Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
நவம்பர் 2007
உலகமயமும் சிறப்புப் பொருளாதார மண்டலமும்:
லலிதா

உலகமயம் என்பதன் ஒருபாதி வறுமையும், வேலை இன்மையும் என்பதாகவும் - மறுபாதி நுகர்வுக் கலாச்சாரத்தின் உச்சமும், தகவல் தொழில்நுட்பத்தின் வானளாவிய வளர்ச்சியும் என்பதாகவுமே இருக்கிறது. நுகர்வுக் கலாச்சாரமும், தகவல் தொழில்நுட்பமும் நடுத்தர மற்றும் உயர்மத்தியதர மக்களைக் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கி இருப்பதைப் போலவே வறுமையும், வேலையின்மையும் அடித்தட்டு மற்றும் உழைக்கும் மக்களின் அடிப்படையான வாழ்வாதாரங்களைப் பறித்து அவர்களின் வாழ்வையே பந்தாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலைமை போதாதென்று உலகமயத்தின் தொடர்பயணத்தில் ""சிறப்புப் பொருளாதார மண்டலம்'' எனும் வலுவானதொரு ஒடுக்குமுறையும் விவசாயிகளுக்கு எதிராகப் புதிதாக முளைவிட்டிருக்கிறது.

இந்தியத் துணைக்கண்டம் விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட நாடாக-ஏழு இலட்சத்து அறுபதாயிரம் கிராமங்களை உள்ளடக்கிய மிகப்பெரும் வேளாண்மை நாடாகவே அறியப்பட்டிருக்கிறது. அதனால் எழுபது விழுக்காடு விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான் என்ற உண்மையினையும், அதற்குக் காரணமான விவசாயிகளின் வாழ்க்கையினையும் உலகமயமாக்கல் கொள்கை தலைகீழாய்க் கவிழ்த்துப் போட்டிருக்கிறது.

உலகமயம் முதலில் வேளாண் விளைபொருளை வணிகப் பொருளாக்கியது; விவசாயத்தை உலக வர்த்தக நிறுவனத்தின் வணிகச் சந்தையில் கொண்டுபோய் நிறுத்தியது; மண்ணை மலடாக்கியது; விதைகளை விஷமாக்கியது; விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையேந்த வைத்தது. இவ்வாறு வல்லாதிக்கக் கனவுகள் எல்லாம் நனவானதற்கு யார் காரணம்? ஆதிக்க வெறியோடு, பதவிக் சுகத்தோடு, தன்னல அரசியல் நடத்துகின்ற மத்திய, மாநில அரசுகளே இதற்குக் காரணம்.

உலகமய விதிகளின்படி தண்ணீர் தனியார்மயமானது. தாராளமயத்தினால் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை பன்னாட்டு நிறுவனங்களின் தனிஉரிமை ஆயின. இரசாயன உரமும், தொழிற்சாலைக் கழிவுகளும் நிலத்தையும், நிலத்தடி நீரையும் நாசப்படுத்தின. விவசாயிகள் தங்களது விளைநிலங்களினின்றும் விரட்டியடிக்கப்பட்டு, நகரங்களின் நடைபாதையில் திக்கற்று நிற்கும் காட்சி, அன்றாட நடைமுறையாகிக் கொண்டிருக்கிறது.

பன்னாட்டுக் குளிர்பானங்கள் இந்தியாவின் பட்டி, தொட்டியெல்லாம் வியாபித்து விரிந்து கிடக்கின்றன. தமிழகத்தின் நிலத்தடி நீரை கோடிக்கணக்கான லிட்டர்கள் என்ற அளவில் அந்நிறுவனங்கள் அல்லும்பகலும் உறிஞ்சித் தீர்க்கின்றன. கூடவே அத்தொழிற்சாலைகளின்றும் வெளியேற்றப்படும் கழிவுநீர், ஒட்டுமொத்த நிலத்தடி நீரையே கழிவுநீராக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு லிட்டர் குளிர்பானம் தயாரிக்க ஆறுலிட்டர் தண்ணீர் கழிவுநீராக வெளியேற்றப்பட வேண்டும். இந்த 6 லிட்டர் கழிவுநீரோ நிலத்தடியில் உள்ள 48 லிட்டர் நீரைக் கழிவுநீராக மாற்றிவிடும் என்கிறது புள்ளி விவரம் ஒன்று.

மரபுசார் விதைகளை விடுத்து மரபணு மாற்ற விதைகளை வாங்கிப் பயிர்செய்ய சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தப் பட்டனர் இந்திய விவசாயிகள். விளைவு... மத்திய அரசின் தவறான வேளாண் கொள்கையால் நஷ்டத்திற்கு ஆளாகி, கடன் சுமை தாளாது பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு தத்தம் குடும்பங்களைப் பரிதவிக்க விட்டுச் சென்றனர். இது தொடர்கதையாகி, அன்றாடச் செய்திகள் என்று இன்றும் தினத்தாள்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய அவலம் நிறைந்த சூழலில் மிச்சமிருக்கும் வேளாண் பெருமக்களையும் அலைக்கழித்துத் துடைத்தெறியும் நோக்குடன் "சிறப்புப் பொருளாதார மண்டலம்' எனும் உலகமயக் கட்டளையைச் சிரமேற்கொண்டு செயற்படுத்த மத்திய, மாநில அரசுகள் களம் இறங்கி உள்ளன.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தி, வேலைவாய்ப்பினை அதிகரிக்கச் செய்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தப் போவதாகவும் சொல்லிக் கொள்கின்றன. சீனாவிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மட்டும் ஓயாது ஓதிக்கொண்டிருக்கும் மத்திய அரசு இம்மண்டலங்கள் விஷயத்திலும் கண்ணை இறுக மூடிக்கொள்கிறது. சீன அரசு விவசாய வளர்ச்சியில் 9% எட்டிய பின்னர்தான் தொழில்வளர்ச்சி பற்றிய சிந்தனையிலேயே இறங்குகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் 2.8% விவசாய வளர்ச்சி, 9% தொழில்வளர்ச்சி என்ற நிலைதான் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகிலேயே மிகப்பெரும் மக்கள்தொகை (125 கோடி)யினைக் கொண்டதும், விவசாய வளர்ச்சியினைச் சீராக அடைந்துள்ளதுமான சீனாவிலேயே சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் மொத்த எண்ணிக்கையே ஆறு தான்.

இந்தியாவில் ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தொடங்க டெல்லி அரசு முடிவுசெய்து, தற்போது 28 மண்டலங்கள் இயங்கவும் ஆரம்பித்திருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 44 மண்டலங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பத்து மண்டலங்களுக்கு அனுமதியும் அளிக்கப்பட்டாயிற்று. ஏற்கெனவே, நான்கு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கியும் வருகின்றன. ஆனால் உலக அளவிலேயே கூட தற்போது வெறும் நாற்பது சிறப்புப் பொருளாதார மண்டலங்களே இயங்கிவருகின்றன. மக்கள் நலன் மறந்த இந்திய-தமிழக ஆளும் வர்க்கத்திற்கு மட்டும் ஏன் இந்த அவசரமும்... அதிவேகமும்...? - வேறொன்றுமில்லை... மக்களிடையே விழிப்புணர்வும், எழுச்சியும் ஏற்படாது என்பதை ஆளுமைச் சக்திகள் சரியாகவே புரிந்து வைத்திருக்கின்றன. மீறி எழும் எழுச்சியினை ஒடுக்கவும் தயார்நிலையில் இருக்கின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கென நில உச்சவரம்பாக 300 ஏக்கர் முதல் 500 ஏக்கர் வரை என்றுதான் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மாபெரும் விவசாய நாடான இந்தியாவில் அதற்கான நில உச்ச வரம்பு 1000 ஏக்கர் முதல் 12,500 ஏக்கர் வரை என வரையறுக்கப் பட்டிருக்கிறது. விவசாயிகளை வஞ்சிப்பதற்கு எல்லையே இல்லை என்பதைத்தானே இந்த வரையறை தெளிவுபடுத்திக் காட்டுகிறது. விளைநிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துவிட்டு ஐந்தாண்டுகளுக்கொருமுறை வேளாண் உற்பத்தியை 20% என்றளவில் குறைத்துக்கொண்டே வந்து வேளாண் தொழிலை நம்பியிருக்கும் 70% மக்களை 10% ஆகக் குறைக்க வேண்டும் என்ற திட்டமும் மத்திய அரசின் கைவசம் இருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கு, வளரும் நாடுகளை அடக்கியாளும் உலகவங்கி நான்கு விதிகளைக் கட்டாயமாக்கி இருக்கிறது. "சிறப்புப் பொருளாதார மண்டலத்தை இன்றியமையாப் பொதுச்சேவை என அறிவிக்க வேண்டும். சுற்றுப்புறச் சூழல் மாசு குறித்து கேள்வி எழுப்பக்கூடாது, தொழிலாளர் நலச்சட்டம் கூடாது, பெண்களே அதிக அளவில் பணியில் சேர்க்கப்பட வேண்டும் என்பவைதான் அந்த நான்கு கட்டளைகள்.

பெண்களை அதிக அளவில் வேலைக்குச் சேர்த்துக்கொள்வதன் மூலம் தங்கு தடையற்ற உழைப்புச் சுரண்டலை நடத்தலாம். அதிக நேரம்; அதிக வேலை; குறைந்த ஊதியம். அடங்கிச் செல்லும் குணமுள்ளவர்களான பெண்களை நிர்வகிப்பது மிக எளிது. அவர்கள் அமைப்பாகத் திரள மாட்டார்கள் என்பவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே இந்த விதியைச் சேர்த்திருக்கிறது உலகவங்கி.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என்றொரு பொய்யான வாதத்தை அரசு முன்வைக்கிறது. தமிழகத்தில் இயங்கிவரும் "ஹøண்டாய்' கார் தொழிற்சாலை ரூ.600 கோடி முதலீட்டில் இயங்குகிறது. அங்கு 500 பேருக்குக் கூட வேலை இல்லை. அதேபோன்று 400 ஏக்கரில் செயல்படும் "போர்டு' கார் நிறுவனத்தில் 100 பேருக்குக் கூட வேலைவாய்ப்பில்லை. ஆனால் விளைநிலமாக இருக்கும் 1000 ஏக்கரில் 12,000 விவசாயத் தொழிலாளர்க்கு வேலைவாய்ப்பு உறுதி என்பது மேற்கு வங்க நந்தி கிராமத்தில் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

ஆளும் சக்திகளின் இத்தகைய மக்கள் விரோதச் செயல்களையும், சட்டங்களையும் எவ்வாறு எதிர்கொள்வது? தமிழக உழைக்கும் மக்களும், விவசாயிகளும், வணிகத்தில் நுழைந்துவிட்ட பன்னாட்டு மற்றும் பெருமுதலாளிய நிறுவனங்களினால் வாழ்வைத் தொலைத்த வணிகர்களும் ஒன்றுபட்ட சக்தியாகத் திரண்டெழுந்து போராடும்போதுதான் இதற்கான பதில் தெளிவாகத் தெரியவரும். அந்த மக்கள் சக்தியின் முன்பாக வல்லாதிக்க அடிவருடிகள் மண்டியிடும் நிலையும் அப்போதுதான் உருவாகும்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com