Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
நவம்பர் 2007
மானம் என்பது...
சி.பெர்லின்

sea "சென்னை மைலாப்பூர் பங்கைச் சேர்ந்த தோமாஸ்-மெர்சி தம்பதியரின் மகன் செல்வனுக்கும் நமது பங்கைச் சேர்ந்த பொனிப்பாஸ்-எலசி பெத்தாள் தம்பதியரின் மகள் செல்விக்கும் திருமணம். இது இரண்டாவது அறிவிப்பு. இந்த திருமணத்தில் ஏதாவது விக்கனம் இருந்தால் பங்கு சாமியாரிடம் அறிவிக்கவும்''.

இரண்டாவது பூசையில சாமியார் பறை வாசிச்சார் சரி... மாப்பிள்ளை ஊருல பறைவாசிக்கும்ப மாப்பிள்ளை பெயர முதல்ல சொல்லணும். பெண்ணு ஊருல பறை வாசிக்கும் பெண்ணு பெயரைத்தானே மொதல்ல சொல்லணும். ஆனா எல்லா சாமியாரும் மாப்பிள்ளை பெயரத்தான் மொதல்ல சொல்லுறாங்க. பொண்ணு வீட்டுல கல்யாண கார்டு அடிக்கும்ப பொண்ணு பெயரத்தானே மொதல்ல போடுறாங்க. சாமியாருக மட்டும் இன்னும் மாறாமலேயே இருக்காங்களே...

கொஞ்ச நாளா இந்த கோபம் என் மனசுல இருந்தாலும் அதயாருகிட்ட போய் சொல்லுறது. “செல்வன்-செல்வி நல்ல பேரு பொருத்தம். வாழ்க்கையிலயும் நல்லா பொருந்தி வாழணும்'' மனசுக்குள் பிரார்த்தித்துக் கொண்டேன்.

செல்வி என் தோழி. என்னைவிட நாலு வயசு கொறவா இருந்தாலும் அவளுக்கு மொதல்ல கல்யாணம் நடக்குது. ஏன்னா அது வீட்டுல நாலு அண்ணன்மாரு கடல் தொழிலுக்குப் போறாங்க. சொந்தமா வள்ளமும் ஏத்தினமும் இருக்கு. அவ அப்பாவும் குடிக்கமாட்டாரு. நல்ல வருமானம். அதனால மெட்றாஸ் சீமையில நல்ல வேலையில இருக்கிற ஒரு பையனபாத்து மூணு லட்சம் ரூபா ரொக்கமும், அம்பது பவுனு நகையும், கல்யாணச் செலவும் சேத்து பத்து லட்சரூபா செலவழிக்க முடியுது.

எப்படியும் இந்த கலியாணத்துக்கு மூணு, நாலு லட்சம் ரூபா கடன் வரும். என் மக்களுக்கு கை, காலு சொகமா இருந்தா ஒரு வருச தொழிலுல இந்தக் கடன் பறந்து போயிடும்.'' செல்வியின் அம்மா நிசாரமாகச் சொன்னாங்க.

ஆனா எனக்கு... இன்னும் ரண்டு தங்கச்சிங்க இருக்காங்க.. ஆம்பள யாரும் இல்ல. அப்பா ஒழுங்கா தொழிலுக்குப் போகமாட்டாரு...

"குடும்பத்தக் காப்பாத்தவும் கொமுரு மக்கள யாரு கையிலயாவது புடுச்சுக் குடுக்கவும் வேணுமுண்ணா நான் ஒழச்சு சம்பாதிக்கணும்''னு சொல்லி அம்மா மீன் சருவத்த தலையில தூக்கி சம்பாதிக்கத் தொடங்குனா. அம்மாவின் சம்பாத்தியம் எங்க அஞ்சு பேருக்கும் வாயுக்கும் வயித்துக்குமே சரியா இருக்கு... ஏதாவது மிச்சமிருந்தா குடிக்கிறதுக்கு அப்பா புடுங்கிடுவாரு. இந்த லட்சணத்துல எனக்கு எங்க கல்யாணம்...?

செல்வியின் பறை வாசிப்பைக் கொண்டாட அவ வீட்டுக்கு எங்கள கூப்பிட்டு விருந்து குடுத்தா.... “செல்வி... ஒனக்கு செல்வன்... ஆளு எப்படி? பேருலயே ஒண்ணாயிட்டீங்களே...''

நான் கூறியதும் செல்வியின் முகம் நாணத்தால் சிவந்து மலர்ந்தது. “ச்சீ... போடி'' அவள் என்னை தள்ளி விட்டாள் ஆனால் அவள் முகத்தில் ஆயிரம் சந்தோசக்குறி.

“செல்வனோட டூயட்டா...?'' இன்னொரு தோழி சீண்டினாள்.

“போங்கடீ...'' என்று பொய்க்கோபம் காட்டினாலும், அவள் செல்வனுடன் குடும்பம் நடத்துவது போன்ற கற்பனையில் திளைக்கிறாள் என்பது தெரிந்தது. இந்த குடுப்பினை எனக்கில்லையே என்ற வேதனை எனது உள்மனதில் முள்ளாய்க் குத்தினாலும் செல்வியின் சந்தோசத்தோடு நானும் இணைந்து கொண்டேன்.

“வரதட்சணை என்று ஒன்று இல்லாமலிருந்தால் எனக்கு இப்ப நாலு வயசுல ஒரு குழந்தை இருந்திருக்குமே'' நடக்காத கற்பனையில் நானும் மூழ்கினேன்.

“சரி... சரி.... கௌம்புங்க எல்லாரும் குளிக்கப் போலாம்''

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை வந்துட்டாலே நாங்க பத்து, பதினஞ்சு தோழிங்க ஒண்ணா சேந்து குளிக்கப்போவோம். நேத்து கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துல எல்லாரும் ஒரு வழியா தளந்துபோய் இருந்தாலும் இன்னைக்கு செல்விக்கு கல்யாண பறைய கொண்டாட எல்லாரும் சேர்ந்து கொண்டோம்.

ஆளுக்கு ஒரு பக்கெட்டுல அழுக்குத்துணியும் மாத்துத்துணியும் சோப்பும், மஞ்சளுமாக தூக்கிட்டு கடற்கரை வழியா ஆற்றைத் தேடி நடந்தோம். கடல் மணலில் கால் சறுக்... சறுக் என்று ஒலி எழுப்பியது கறுப்பு கலர், செவப்புக் கலர்னு மணல் சூரிய வெளிச்சம்பட்டு மின்னியது.

“இந்த மணல அள்ளிக்கொண்டு போய்தான் கோடிகோடியா பணம் சம்பாதிக்கிறாங்களோ?'' என் தோழி கேட்டாள்.

“ஆமாமா... அவங்க கோடிகோடியா சம்பாதிக்க நாமெல்லாம் இங்கே கடல் அரிப்பால அழிஞ்சு கிட்டிருக்கோம்... எங்க மாவட்டம் முழுக்க கடல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரையே அழிஞ்சிட்டிருக்கிறதுக்கு பெரிய காரணமே இந்த மணல் கொள்ளைதான்.

இன்று கடல் மிகவும் சாந்தமாகக் கிடந்தது. ஆற்றுநீரும் கடல் அலையும் மாறி மாறி கைகுலுக்கி விளையாடியது. நாங்களும் உடுத்தியிருந்த துணிகளைக் களைந்து ஒரு சாரத்தை எடுத்து மேலே தூக்கி மாரு கச்சை கட்டி நீரில் இறங்கினோம்.

தண்ணீரில் இறங்கியதும் உடல் முழுவதும் படர்ந்த தண்ணீரின் குளிர்ச்சியால் உடல் முழுக்க ஒருவித கிளுகிளுப்பு ஏற்பட்டது. குதூகலத்துடன் மாறி மாறி தள்ளிவிட்டும், நீச்சல் அடித்தும், மூச்சுபிடித்து போட்டி வைத்தும், தொட்டு விளையாடியும் குதூகலப்பட்டோம்.

எங்களுக்கு தொட்டு அடுத்து தெக்குபக்கம் எங்க வயசு ஒத்த ஆம்பள பசங்களும் இதுபோல வெளையாடிக் கொண்டே குளித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் மேலே பாறையிலிருந்து டைவ் அடிப்பது, மாறி மாறி அடிப்பது, கடற்கரை மணலில் கபடி விளையாடுவது என்று பெண்களின் கவனத்தைத் திருப்பும் வகையில் வீர விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் எக்காரணம் கொண்டும் பெண்கள் குளிக்கும் பக்கத்தில் வரவே மாட்டார்கள்.

ஆனா, என் பார்வை அந்த பக்கம் திரும்பியபோது தெற்குப்பக்கம் குளித்துக் கொண்டிருந்த பையன்கள் எங்களுக்கு மிக அருகில் வந்துட்டாங்க...

“என்னடா இது அநியாயம்.... ஆம்பள பசங்க நம்ப பக்கத்துல வாறானுக... அவனுக வீட்டுல சொல்லி எப்படியும் அடிவாங்கிக் கொடுக்கணும்' என்று யோசிப்பதற்குள் என்னை ஏதோவொன்று வேகமாக இழுப்பதுபோல இருந்தது. என்ன ஏதென்று பார்ப்பதற்கே அவகாசமில்லாமல் என்னை சுருட்டி மடக்கி இழுத்துக் கொண்டே போனது. எப்படியோ திமிறி தலையை மேலே எழுப்பினேன். ஒரு கட்டுமரம் என்னை நோக்கி வேகமாக வந்தது. அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்.

1000 வாட்ஸ் எஞ்சின் வச்சு ஓடுறதுபோல கட்டுமரம் வேகமாக ஓடியது. மரத்தின் கடியாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தலையைத் துக்கிப் பார்த்தேன். எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளம். என்ன நடந்தது...? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. வெள்ளத்தில் பலரது தலைகள் தென்பட்டது. என்னோட குளிச்சிட்டிருந்த தோழிங்க... அதோ செல்வி... செல்வியை தண்ணி இழுத்துச் செல்கிறது. இதோ அருள்மேரி.... அருள்மேரியை நான் பிடித்துக்கொண்டு வந்த கட்டுமரம் படாரென்று மோதியது. அதுக்குப் பிறகு அவ என்ன ஆனாள்னே தெரியல. என்னை சுழலில் போட்டு ஆட்டியதால் நான் கட்டியிருந்த சாரம் அவுந்து போயிருச்சு. சாரத்தப் புடிக்கிறதா... உசுரப் புடிக்கிறதா... மரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்.

எங்க பார்த்தாலும் ஒரே கூக்க உளியும்... கொல உளியும்... எனக்கு கை தளர்ந்து போகுது. அப்ப பாத்து எங்க பக்கத்து வீட்டுல உள்ள விஜயன் நீந்தி வந்து என்னை புடுச்சு இழுத்தான். என் உடம்பில் ஒரு ஒட்டுத்துணிகூட இல்லை. எப்படி இந்த ஆம்பளயோட பிடிக்குள் போறது. என் உடம்பு கூசியது. ஆனால் அவன் என்னை இழுத்து ஒரு மேடான இடத்தில் தூக்கிப்போட்டு தண்ணியில இழுத்துவந்த ஒரு துணியால மூடிட்டு திரும்பவும் தண்ணிக்குள் நீந்தினான்.

அடுத்து அவன் கையில் மாட்டியது செல்வி. செல்வியை இழுத்து வந்தான். ஆனால் செல்வி இவன் கையைத் தட்டி விடுகிறாள். வேறு வழியில்லாமல் விஜயன் செல்வியின் தலை முடியைக் கொத்தாகப் பிடித்து இழுக்கிறான். ஆனா அந்தப் பாவி மவ அவன் கையைக் கடித்துக் குதறிவிட்டு தண்ணீருக்குள் மூழ்கிவிட்டாள்.

ஏன் இப்படி செய்யுறா... ஏன்னா அவ துணி எதுவுமில்லாம பெறந்த மேனியா இருக்கிறா... மானத்துக்கு அஞ்சி காப்பாத்த வந்தவனைத் தட்டிவிட்டு தன் முடிவைத் தேடிக்கிட்டா. எப்பவுமில்லாம இப்ப மட்டும் எப்படி இதெல்லாம் நடக்குது... எதனாலே இந்தப் பெருவெள்ளம்...

அடுத்த வாரம் கல்யாணம். பொழைக்கிறதுக்கு வழி இருந்தும் இப்படி செஞ்சிட்டாளே... என் கண்களில் அந்த வெள்ளத்தை மிஞ்சிய கண்ணீர்...

கண்ணீரோடு இந்த நினைப்பும் சேர்ந்தது... மானம் என்பது ஆடையிலா இருக்கு...?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com