Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
ஜூலை 2008
கனவான நனவு
நா.நளினிதேவி

காட்சி - 5

இடம் :- விஷ்ணு சித்தர் இல்லம்
உறுப்பினர்கள் :- விஷ்ணு சித்தர், ஆண்டாள்

கோயிலில் விஷ்ணு சித்தரிடம் ஆண்டாள் பற்றி எதையாவது கேட்பதும், பேசுவதுமாக இருப்பது இன்றும் தொடர்ந்ததால் மனக்காயத்துடன் உலவுகின்றார். தண்ணீர் குடித்து மனநிலையைச் சீராக்க எண்ணி உள்ளே சென்றவர் தண்ணீர் குவளையில் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் எடுக்க அறைக்குள் சென்றவர் அங்கு ஓலைச் சுவடிகள், பாதி எழுதிய நிலையில் கிடப்பதைப் பார்த்து அவற்றை எடுத்துப் படிக்கின்றார்.

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை......
.....................................................
மேலே படிக்க விரும்பாதவராகிச் சுவடிகளைக் கீழே போடுகின்றார். பெண்பிள்ளைகள் இவ்வாறெல்லாம் எழுதுவரோ? என்ன அபச்சாரம் இது! குலவொழுக்கம் கல்லாமல் பாகம் படுமோ? இது பற்றி நேரிடையாகப் பேசுவதற்கும் என் நா கூசுமே! கைக்குழந்தையாகக் கண்டெடுக்கும் போதே கைகழுவியிருக்க வேண்டும். எல்லாம் என் ஊழ்வினைப்பயன்! நாராயணா! உன் பணி செய்து கிடந்த எனக்கு ஏனப்பா இத்தனை சோதனைகள்? இவற்றிலிருந்து எவ்வாறு மீள்வேன்! மூழ்கி விடுவேனோ?

ஆண்டாள்:- தாத்தா - உடல் நலமில்லையா? என்ன? கண்கள் ஏன் சிவந்து உள்ளன? வாடிய துழாய் மாலை போல முகம் வாட்டமாக உள்ளதே!

""கள்ளமற்ற முகத்துடன் உண்மையான பரிவுடன் உசாவிய அவளைக் கண்டதும் சினம் மறைந்து, நொடிப் பொழுதில் தவறாக நினைத்துவிட்டோம். ஆத்திரக் காரனுக்குப் புத்தி மட்டு என்பது சரிதான்! என்று தன்னைத்தானே நொந்து கொள்கின்றார்.
ஆண்டாள்:- தாத்தா! தாத்தா! என்ன நேர்ந்தது? நான் பேசிக் கொண்டே இருக்கிறேன். தாங்கள் எந்த உலகத்தில் இருக்கின்றீர்கள்? கண்கள் இமைக்கவில்லை, வாய் மட்டும் முணு முணுக்கின்றதே?

விசி:- (தன் நிலைக்கு வந்தவராய்) ஒன்றுமில்லை குழந்தாய் கோவிலுக்குச் செல்லும் நேரம் நெருங்கி விட்டது. விரைவாக மாலை தொடுத்து நீ கொண்டு வரவேண்டுமே. ஏதோ நினைத்தேன்; என்னையே மறந்துவிட்டேனம்மா.

ஆண்டாள்:- இதோ ஒரு நொடியில்! புள்ளிமானாகத் துள்ளி ஓடுகின்றாள். இந்த பரந்தாமனுடன் பேசிக் கொண்டிருந்ததில். நேரம் போனது தெரியவில்லை; நல்லவேளை வாய் பேசினாலும், கண்கள், அவன் முகத்தையே நோக்கினாலும் கைகள் வழக்கம் போல் மாலையைத் தொடுத்துவிட்டன, என்று மனமெல்லாம் மகிழ்ச்சி நிறைந்து வழிந்தோட மாலையை எடுத்து எப்போதும்போல் தன் கழுத்தில் அணிந்து அழகு பார்த்துக் கொண்டு திருமண மேடையில் மணமகனுடன் நிற்பதுபோல் கற்பனை செய்ததில், தன்னை மறந்து விடுகின்றாள்.

வி.சி:- எவ்வளவு நாழியாகி விட்டது! மாலை தொடுத்துக் கொண்டு வருகிறேன் என்றவள் மாயமாகி விட்டாளா? இன்று ஏன் எல்லாமே மனதுக்கு உகந்தவை அல்லாதவையாக நிகழ்கின்றன.? என்று அலுத்துக் கொண்டவராய் உள்ளே செல்கின்றார். அங்கு ஆண்டாள் நிற்கும் கோலம் கண்டு உள்ளமும், உடலும் பதறியவராய். ஐய்யயோ! ஆண்டாள்! என்ன இது! என்ன செயல் செய்துவிட்டாய்? இது தெய்வத்துக்குத் தான் அடுக்குமா? இத்தெய்வக்குற்றத்துக்கு நான் என்ன செய்வேன்? ஏன் எனக்கு இந்தச் சோதனை? வைகுண்ட நாதனே! என்னை என்ன செய்யத் திருவுள்ளம் கொண்டுள்ளாய்! அறியேனே!

ஆண்டாள் :- (திடுக்கிட்டவளாய்) ஏன் இப்படி நரசிம்ம வதாரம் என்று புரியாதவளாய்த் திகைத்துச் சட்டென்று நினைவு வந்தவளாய் மாலையைக் கழுத்திலிருந்து கழற்றுகின்றாள்.

வி.சி:- (சினம் தாங்காதவராய் வெளியே வந்த தனக்குள் புலம்பிக் கொண்டிருக்கின்றார். நிற்க இயலாமல் இடிந்து போய் தரையில் அமர்கின்றார். என்ன கொடுமை இது! இதற்கு நான் என்ன பரிகாரம் செய்வேன்? உள்ளம் கொண்ட பதற்றத்தால் உடல் நடுங்கிக் கொண்டிருக்கின்றது. மனம் அமைதி காணும் பொருட்டு மனம் போனபோக்கில் நடந்து செல்ல, ஆண்டாள், பொங்கி வரும் கண்ணீரை அடக்க முடியாமல் சுருண்டு படுத்து விடுகின்றாள். கோதை எங்கோ சென்றவள் திரும்பவில்லை.

காட்சி - 6
இடம் :- பூவையின் இல்லம்
உறுப்பினர்கள்:- பூவை, ஆண்டாள்

ஆண்டாள்:- பூவை! பூவை!

பூவை - அடடே! ஆண்டாளா? வாடி வா இப்போதுதான் உன்னை நினைத்தேன்!

ஆண்டாள் :- போடி! பொய்யுரைக்காதே! ஊர் சென்றவள் எத்தனை நாளாகி விட்டன! அங்கேயே தங்கிவிட்டு என்னைக் கண்டதும் உன்னை நினைத்தேன் என்பதை நான் நம்ப வேண்டுமா? எனக்கென்று யாருமே இல்லை!

பூவை :- அதிருக்கட்டும் - ஏன் இப்படி வாடி வதங்கிக் கண்கலங்கிக் காட்சியளிக்கின்றாய்? அழுதாயா என்ன? முகமெல்லாம் வீங்கிப் போயுள்ளதே ஏன் வெறுத்துப் போய்ப் பேசுகின்றாய்?

ஆண்டாள்:- அழப்பிறந்தவர்கள் அழத்தானே வேண்டும். பெற்றோர் யார் என்றே தெரியாதவள். அண்டிப் பிழைக்கும் இடத்தில் எப்போது என்ன நேரும் என்று சொல்ல முடியுமா என்ன? எதையும் எதிர்பார்த்து இருந்திருக்க வேண்டும். குருதித் தொடர்புள்ளவர்கள் போல் ஒன்றி இருந்துவிட்டேன்.

பூவை:- என்னடி புதிதாகப் பேசுகின்றாய்! பெற்ற தகப்பன் தாயை விட உன் தாத்தாவும், கோதையும் உன்னைக் கண்ணுக்குள் வைத்து இமையெனக் காத்ததைக் கண்டு எனக்கே, பொறாமை வருமே! என் உயிரும் நீயன்றோ? இதைவிட வேறு என்ன வேண்டும் உனக்கு?

ஆண்டாள்:- பெற்றோரை விட மேலானவராக இருந்தால், நான் தொடுத்த மாலையைக் கழுத்தில் அணிந்து பார்த்ததற்கு இப்படி நரசிம்ம மூர்த்தி ஆவாரா? நீயும் என்னை விடுத்து இத்தனை நாட்கள் ஊரில் தங்கி யிருப்பயா?

பூவை :- என்ன புதிர் போடுகின்றாய்? விரிவாகக் கூறடி,

(நடந்ததை விளக்கமாய்க் கூறுகின்றாள்)

ஆண்டாள் :- போதுமா? நீயும் பேசாமல் இருக்கின்றாயே? இது இமாலயத் தவறா? சொல்லடி! சொல்!

பூவை:- உணர்ச்சி வயப்பட்டு எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. இப்பொழுது அதை மற. வா உனக்குப் பிடித்த அவல் கொண்டு வந்துள்ளேன். சோலைக்குள் சென்று சற்றுக் காலார நடந்துவிட்டு மனதை ஒருமுகப்படுத்திய பின்னர் இதுபற்றிப் பேசுவோம்! வாடி!

இடம் : விஷ்ணு சித்தர் இல்லம்

விஷ்ணு சித்தர் படுக்கையில் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டு இருக்கின்றார். ஆண்டாள் முகம் கொடுத்துப் பேசுவது இல்லை. மாலையும் தொடுப்பதில்லை. கோதை தான் மாலை தொடுத்துத் தருகின்றாள். மாலை நன்றாக இல்லையே ஏன் என அடியார்கள் வினவுகின்றனர். பாவம் நான்தான் கடுமையாகச் சினந்து கொண்டேன். நயமாகச் சொல்லியிருக்கலாம்! பெற்றோர் முகமறியாத அபலைப்பெண்!

வி.சி. :- ஆண்டாள்! ஆண்டாள்! அம்மா, குழந்தாய் ! இன்னும் சினம் தீரவில்லையா? சிரித்தால் முத்துக்கள் உதிர்ந்து விடுமோ? சிரிக்கவே மறந்தாயே!

ஆண்டாள்:- அநாதை நான். நான் சினம் கொண்டால் யாரை என்ன செய்யப் போகின்றது. என் பிறப்பே சிரிப்புத்தானே?

வி.சி:- அப்படியெல்லாம் கூறாதே குழந்தாய், நானிருக்கும் போது நீ எப்படி அநாதை ஆக முடியும்? பிறப்பு, சிரிப்பு என்றெல்லாம் கடுஞ்சொற்கள் எதற்கு?

ஆண்டாள்:- போதும் தாத்தா -! நான் உங்கள் மகள் வயிற்றுப்பேத்தியோ, மகன் வயிற்றுப் பேத்தியோ இல்லைதானே?

வி.சி:- பெற்றால்தான் மகன் மகளா? அது இருக்கட்டும்! இன்று நீ கட்டாயம் மாலை தொடுத்துத் தர வேண்டும். கோயிலில் அடியவர்கள் எல்லாரும் மாலை நன்றாக இல்லையே ஏன் என்று வினவுகின்றனர். குழந்தாய் உன்னைப்போல் மாலை தொடுப்போர் ஊரில் யாருமே இல்லை!.

ஆண்டாள்:- இரண்டு நாள் கேட்பார்கள்! அப்புறம் விட்டுவிடுவார்கள். நான் இனிமேல் மாலை தொடுக்க மாட்டேன். நான் ஒருத்திதானா? என்னவிடத் திறம்படத் தொடுப்பவர்கள் இல்லாமல் இல்லை! நானே இழிபிறவி.

வி.சி:- அடியவர்கள் மட்டும் இல்லை குழந்தாய் ஆண்டவனே என் கனவில் வந்து, பாவை சூடிய மாலைதான் எனக்கு வேண்டும் என்று கூறினான்.

ஆண்டாள் :- அப்படியா? தாத்தா! தாங்கள்தான் நான் ஏதோ பெரும் தெய்வக்குற்றம் இழைத்துவிட்டதுபோல் அப்படி துடிதுடித்துப் போய்விட்டீர்கள். அதை நினைத்தால் எனக்கு இன்னும் நெஞ்சம் நடுங்குகின்றது. இப்படி ஒரு சினத்தை நான் கண்டதே இல்லை!

வி.சி:- நன்று இல்லாததை அன்றே மறந்து விட வேண்டும் குழந்தாய்! கோதை ஊரிலிருந்து திரும்பி விட்டாள் அல்லவா? அவளுடன் சென்று மலர் பறித்து மாலை தொடுத்துக் வைத்திரு. நான் சற்று வெளியே சென்று வருகின்றேன்.

ஆண்டாள்:- கோதை எதற்கு? நானே மலர் பறித்துத் தொடுப்பேன்.

வி.சி:- நமோ நாராயண! பொய்மையும், வாய்மையிடத்த, என் பிழை பொறுத்தருள் இறைவா! இன்னும் என்னென்ன செய்யக் காத்துள்ளாயோ?


காட்சி - 7
இடம்:- விஷ்ணு சித்தர் இல்லம்
உறுப்பினர்:- கோயில்காரர், விஷ்ணு சித்தர்

கோயில்காரர்:- சுவாமி! சுவாமி! பெரியவரே!

வி.சி:- கோயில்காரரா? - வாருங்கள் என்னைத் தேடி...??

கோ.கா:- நம்மை ஆளும் அந்த ஆண்டவர் வைகுண்ட நாயகன் அருளால் எல்லாம் நல்ல செய்திதான். அதனால் உம்மை நாடி வந்தோம்.

வி.சி:- என்ன நல்ல செய்தி ஐயா?

கோ.கா:- நம்ம பிள்ளையாண்டான் ஆழ்வாரைத் தெரியும் தானே? கோயிற்பணி செய்து கிடப்பவன். சூது வாது அறியாதவன்.

வி.சி:- அவனுக்கென்ன வேண்டும் என்னிடம்?.

கோ.கா:- உங்கள் பேத்தி ஆண்டாளை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தால் இருவருக்கும் நல்லது.

வி.சி. :- திடீரென்று எப்படித் திருமணம் நடத்த முடியும். குழந்தையிடம் கேட்க வேண்டாமா?

கோ.கா.:- உலகத்தில் இல்லாத புதுமையைப் பேசுகின்றீர்களே ஐயா? அவள் குழந்தையா? ஏதோ சரசுவதி தேவியின் மறுபிறவிப்போல் பாடல்கள் எழுதுவதும், அந்தப் பாடல்களை ஊர்ப் பெண்கள் பாடிக்கொண்டு மார்கழி நீராடுவதும். ஊர்ப் பெண்கள் எல்லாம் உமது வீட்டுப் பெண்ணால் கெட்டழிந்து போவது பற்றி நீவீர் வேண்டுமானால் கண்டு கொள்ளாமல் இருக்கலாம். நாங்கள் அப்படி இருக்க முடியுமா? பெண் பிள்ளை என்றால் அதற்கு ஏற்றவாறு இருக்க வேண்டாமா? நீவீர் தான் குழந்தை என்கின்றீர் பிறப்பே தெரியாது. வளர்ப்பும் இப்படி, பெரியவர் நீங்கள் இப்படிச் செய்யலாமா?

வி.சி.:- அப்படிப்பட்ட பெண்ணை எதற்கு உங்களுக்கு வேண்டிய பையனுக்கு மணம் முடிக்கக் கேட்டு வந்துள்ளீர்கள்? ஒன்றுக்கென்று தொடர்பில்லாமல் பேசுகின்றீர்களே? நான் எதுவும் அப்பாண்டுரங்கனுக்கு எதிராக செய்யவில்லை என்பதை என் மனச்சான்று அறியும்! அந்த இறைவனும் அறிவார். அது போதும் எனக்கு!

கோ. கா.:- சினம் கொள்ள வேண்டாம் சித்தரே! என்னை மன்னித்திடுங்கள். அவன் திருமணமே வேண்டாம் என்றிருந்தவன். நாங்கள் வற்புறுத்தியதால் சம்மதித்தான். இதுவரை பார்த்த பெண்களில் உம் வீட்டுப் பெண்ணைத்தான் அவனுக்குப் பிடித்திருக்கின்றது; என்ன செய்ய? யார் யாருக்கென்று விதித்துள்ளது தானே நடக்கும்!

வி.சி.:- (முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதைப் புரிந்து கொண்டவராய் இன்னும் மறுத்துப் பேசினால் விருப்பு மிகுதியாகும் என்று எண்ணி) நாங்கள் மூவரும் ஆண்டவன் திருத்தலங்களைக் கண்டு சேவிக்கப் போகின்றோம்! வந்த பின்பு பார்ப்போம்.!


கோ.கா.:- ""பார்ப்போம் எல்லாம் கிடையாது திரும்பிய வுடன் திருமணம் உறுதி'' என்று வன்முகத்துடன் சொல்லி விட்டுச் செல்கிறார்.

கோதை:- (அவர்கள் பேசியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கோதை உள்ளிருந்து வெளியே வந்தவள் மிரண்டுபோன முகத்துடன்) என்ன சுவாமிகளே இப்படிப் பேசிவிட்டுச் செல்கின்றார்?

வி.சி.:- ஊரில் எத்தனைப் பெண்கள் உள்ளனர். கோயில் ஆட்களுக்கும் சில ஊர்ப் பெரியவர்கட்கும் ஆண்டாள் மீதே ஏதோ உள் நோக்கத்துடனான கண் வைத்துள்ளனர். ஏனென்றே தெரியவில்லை.

கோதை:- ஆம் சுவாமிகளே! நான் இதுவரை தங்களிடம் கூறவில்லை. என்னைச் சந்திக்கும் போதெல்லாம் ஆண்டாள். பொட்டுக்கட்டிய ஒரு பெண்ணுக்குப் பிறந்தவள்; அவள் குலதர்மப்படிப் பொட்டுக் கட்டித் தன்னைக் கோயிலுக்கு அர்ப்பணிக்க வேண்டும்; அவளுக்கு இந்த உண்மை தெரியாது. ஊரில் உள்ள பெண்களையும் கெடுக்கின்றாள்; பாடல்கள் புனைவதும். பெண்கள் கூட்டம், ஏன் இளைஞர் கூட்டமும் அப்பாடல்களைப் பாடித் திரிவதும்! நாரசாரம்! ஊர் ஒழுக்கம் சிதைந்து கொண்டு வருகின்றது; இதற்கு விரைவில் ஒரு முடிவு கட்டுவோம் என்று பலவாறாகப் பல கதைகள் கூறுவர். நான் இதுவரை அவை எவற்றையும் பொருட்படுத்தியதில்லை. தங்களிடமும் கூறியதில்லை. நமக்கோ ஆண்டவன் திருப்பணிக்கே இந்த ஆயுள் போதாது. அங்ஙனமிருக்க இந்தக் கீழான எண்ணங்கள், செயல்கள் எதற்கு?

வி.சி.:- கோதாய்! நீ கூறுவதை சற்று ஆழமாக கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் ஆண்டவன் பெயரால் தம் விருப்பத்தை ஈடேற்றிக்கொள்ள இடையறாது முயல்வர். ஏதோ ஓர் ஆபத்து நம் குழந்தையை எதிர்நோக்கி உள்ளது என்று என் உள்ளுணர்வு கூறுகின்றது.

கோதை:- (பதறியவளாய்) அய்யோ சுவாமி! தங்களின் திருவாயால் அங்ஙனமெல்லாம் கூறாதீர்! நாம் அல்லும் பகலும் வணங்கும் அந்த ரங்கநாத சுவாமியின் அருளால், யாருக்கும் எதுவும் நேராது. அனைவருக்கும் நலம் விளையும் சுவாமி.

வி.சி.:- அப்படியே நம்புவோம்! ஆனால் இனிமேலும் நாம் வாளாதிருக்க முடியாது; வரும்முன் காப்பதற்கு தகுந்த ஏற்பாடுகளை நாமும் செய்து எந்த இன்னலையும் எதிர்கொள்ளவும், எத்தகைய சதியையும் முறியடிக்கவும் தயாராகவே இருத்தல் வேண்டும். சரி! நீ போய் உன் வேலைகளைக் கவனி. குழந்தை எங்கே? காணோமே?

வீட்டின் முன்பக்கம் வேற்று ஆட்கள் பேசிக் கொண்டி ருப்பது கண்ட ஆண்டாள், பின்பக்க வாயில் வழியில் உள்ளே வந்தவள் தன்னைப் பற்றிய பேச்சு அடிபடவே, சற்று நின்று கேட்டவள், அனைத்தையும் கேட்டு அளவற்ற அச்சத்தில், அமளியின் மீது படுத்தவள்! கோதையின் காலடி ஒலி கேட்டு உறங்குவது போன்று கண்களை மூடிக்கொண்டு உயர்த்தி மூச்சு விட்டாள்!

கோதை :- நல்லவேளை! ஆழ்ந்து உறங்குகின்றாள்! நடந்தததை அறிந்தால் நடுங்கிப்போவாள்! அபலைப் பெண் பாவம்! திருமாலே! திருமகள் அனைய இப்பெண்ணை நீதான் காக்க வேண்டும். அழகும், திறமையும் பெண்களுக்கு இருத்தல் கூடாதா! ஏனிந்தச் சோதனை இப்பெண்ணுக்கு?


காட்சி - 8
இடம் :- ஊரின் ஒதுக்குப்புறமுள்ள அடர்ந்த சோலை.
உறுப்பினர்கள்:- ஆண்டாள், பூவை.

பூவை :- என்னடி ஆண்டாள்? பூவை பூவை என்று நொடிக்கொருமுறை "பூ' வைக்கச் சொல்வாயே? இவ்வளவு நாழியாகி வாய் திறக்காமல் பேசா மடந்தையாக உள்ளாயே? வரவர உன் முகத்தில் மகிழ்ச்சி என்பதே இல்லாமல் போய் விடுகின்றது. உன்னைப் பார்க்கப் பார்க்க என் உள்ளம் மிகவும் வருந்துகிறது. உணவு உண்ணவும், உறங்கவும் முடிய வில்லையடி.

ஆண்டாள் :- மனம் ஏனோ பெருந்திகிலில் சிக்கிக்கொண்டு தவிக்கின்றதடி! (தான் கேட்டவற்றை அவளிடம் சொல்கிறாள்)

பூவை:- நேற்று எங்கள் இல்லத்திலும் உன்னைப் பற்றித்தான் பேச்சு எனக்கும், என் தமையன் அழகிய நம்பிக்கும் பெரும் வாக்குவாதம்.

ஆண்டாள்:- உங்கள் வாக்குவாதத்தில் நானா...? ஒன்றும் புரியவில்லை. என்னைச் சுற்றி என்னை அறியாமல் என்னென்னவோ நடக்கின்றது என்பதை மிகவும் காலம் தாழ்த்தி உணர்கின்றேன் பூவை. பாட்டனாரே அஞ்சுகின்றார் என்றால் ஏதோ மிகப் பெரிதாக ஒன்று உள்ளது போலும்! நடப்பது நடக்கட்டும். நடக்க இருப்பதை நம்மால் தடுக்க இயலுமோ? நீ சொல்ல வந்ததைச் சொல்லடி.

பூவை :- வழக்கம் போல், வேலைகளை முடித்துவிட்டு உன் பாடல்களுக்குப் பண் அமைத்துப் பாடிப்பாடிப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது தமையன் வந்துவிட்டான். என்னபாட்டு எதற்குப் பண் என்று வினவிக் கொண்டே, என் கையிலிருந்த சுவடிகளைப் பறித்துப் படித்துப் பார்த்தான்.

ஆண்டாள்:- என்ன சொன்னான்? வானத்துக்கும், பூமிக்கும் குதித்திருப்பானே!

பூவை:- குதித்தால் பரவாயில்லையே! என்னென்னவோ உளறினான். சுருக்கமாகக் கூறுகின்றேன். சிருங்கார ரசத்தையும் விரகதாபத்தையும் பெண்கள் வெளிப்படுத்திப் பாடல் புனைவது மாபெரும் குற்றமாம். இவை பெண்ணுக்கு அழகல்லவாம்!

ஆண்டாள்:- அவை ஆணுக்கும், பெண்ணுக்கும் பொது தானே. பெண்கள் நினைப்பதாகவும், வெளிப்படுத்து வதாகவும் அவர்கள் மட்டும் பாடலாம். திருமணக் கனவு, கணவன், குழந்தைகள், இல்லற இன்பம் என்று பெண்களுக்கு இல்லையா? அவர்கள் உண்மையாகவோ, கற்பனையாகவோ பாடுவது போல் நாமும் பாடுகிறோம். பெண்ணுக்குக்கென்று உணர்ச்சியும், மொழியும் இல்லையா?

பூவை:- இவையெல்லாம் நமக்குத் தெரிந்தவை. அந்த மரமண்டைக்குள் நுழைய வேண்டுமே?

ஆண்டாள்:- சிருங்கார ரசம் சொட்டச் சொட்டப் பெண்கள் ஆடவேண்டும். (உள்ளத்தே உணர்ச்சி இல்லாமல் எப்படி ஆடமுடியும்). அதை அவர்கள் கண்டு களிக்க வேண்டும். ஆனால் அவற்றை பெண்கள் மட்டும் கவிப்பாடி வெளியிடக் கூடாது என்றால்.......? இந்த அடக்குமுறைக்குப் பெயரே இல்லை!

பூவை:- நாயகன் நாயகி பாவம் என்ற இலக்கணம் வகுத்து நீங்கள் பாடலாம். அதே இலக்கணத்தில் பெண்கள் ஏன் பாடக்கூடாது என்று நானும் எவ்வளவோ வாதாடினேன். ஒரு பயனுமில்லை! கண்சிவக்க - நெற்றி புடைக்கக் கத்திவிட்டு மேலே பேசமுடியாமல் வெளியே சென்று விட்டான். அவன் கூறியவற்றை அவனாலேயே ஏற்க முடியாது தோல்வியை வெளிக்காட்டாது புறம்காட்டிச் சென்றுவிட்டான் பாவம்.!

ஆண்டாள்:- என்னால், உங்கள் எத்தனை பேருக்குத் தொல்லை? ஏன் என்னால் மட்டுமே எல்லாப் பெண்களையும் போல் இருக்க இயலவில்லை! எல்லாருக்கும் திருமணக்கனவு உண்டு. அதை நான் பாடுகிறேன். பாடாமலிருக்க என்னால் இயல வில்லையடி.!

பூவை:- தொல்லை கொல்லை என்றெல்லாம் சொல்லாதேடி. உன்னை நினைக்க பெருமையாக உள்ளது. ஊர்ப் பெண்கள், உன் பாடல்களை விரும்பிக் கேட்பதும் பாடுவதும் அவர்களுக்குப் பொறாமையாக இருக்கும். இயல்புதானே! ஒரு பெண் ஆணை விஞ்சும் வகையில் செல்வாக்குப் பெறுவதா என்ற தன்முனைப்பும் தவிர்க்க இயலாததுதானே.

ஆண்டாள்:- கோயில் எடுபிடியும். மனநிலை, சரியில்லாதவனுமாகிய ஆழ்வாருக்கு என்னை மணம் செய்து வைக்க முயற்சி செய்வதே அவர்கள் விருப்பபடி என்னை ஆட்படுத்துவதற்கான சூழ்ச்சி இல்லாமல் வேறென்ன?

பூவை:- அதுவேதான்! ஆனால் அவர்களின் சூழ்ச்சியை முறியடிப்போம் என்பதும் உறுதி! நீ எதற்கும் அஞ்ச வேண்டாம். கவலற்க. வா இல்லம் திரும்புவோம். இருட்டி விட்டது! தேடுவார்கள்!


(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com