Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
ஜூலை 2007
உள்ளாட்சியில் பெண்கள்
தங்கரதி

மக்கள்தொகையில் சரிபாதி மகளிரே ஆவர். இருந்தும் ஆண்களுக்குள்ள உரிமைகள் பெண்களுக்குக் காலங்காலமாக மறுக்கப்பட்டே வந்துள்ளது. சமையல்வேலை, குழந்தை பெறுதல், இல்லப் பராமரிப்பு போன்றவையே இவர்கட்குச் சமுதாயம் வழங்கிய ஒதுக்கீட்டுப் பணிகள்.

"பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டின்
மண்ணடிமை தீருதல் முயற்கொம்பே''. என்றார் புரட்சிக் கவிஞர்.

பெண்கள் அனைத்துப் பாரம்பரிய அடிமைத் தனங்களிலிருந்தும் விடுதலை பெற்றால்தான் அனைத்துத் துறைகளிலும் நாம் எதிர்பார்க்கும் வளர்ச்சியும், நாட்டு முன்னேற்றமும் கிட்டும்.

கல்வி, அறிவியல் மற்றும் நாகரீக வளர்ச்சியால் மக்களிடையே மாற்றமேற்பட்டுள்ளதை மறுக்கவியலாது. ஈடுபடும் ஒவ்வொரு துறையிலும் மகளிர் சிறப்பான முத்திரையைப் பதித்தும் வருகின்றனர். இன்னும் மகளிர் மேம்பாட்டிற்கான முயற்சிகளும் வலுப்பெற வேண்டும் என்பதே மிகுந்த தேவையாகவும் இருக்கிறது.

அரசியலில் மகளிருக்குத் தேவையான மாற்றங்கள் வரவேண்டும். அரசு என்பது அனைவர் ஈடுபாட்டுடன் அமைவது. ஒவ்வொருவரும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தனிமனித மற்றும் பொது நலனுக்காக நிர்வகிக்கப்படும் ஓர் அதிகாரச் சார்புடைய அமைப்பே அரசு. இது அனைத்துத் தரப்பு மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். மகளிர் மேம்பாட்டிற்காக அரசின் நடவடிக்கைகளில் மகளிர் நேரடியாகப் பங்குபெறுவது மிகமிக அவசியமானது. அரசுத் திட்டச் செயல் பாட்டால்தான் மகளிர் பிரதிநிதித்துவம் பெற வேண்டும். மக்கட்தொகை அடிப்படையில் மகளிர் பிரதிநிதித்துவம் செம்பாதியாக இருப்பது சிறப்பானது.

எல்லா முன்னேற்றமும், நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களிடையேதான் விழிப்புணர்வையும், பொறுப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. ஆணாதிக்கத் தளைகளிலிருந்தும் கீழ்த்தட்டுக் கிராமப் பெண்களை விடுவிப்பதில் அரசியல் பங்கே அவசியமானது எனில் அது மிகையில்லை.

இந்தியா கிராமங்களில் வாழும் நாடு. கிராமங்களின் வளர்ச்சியே நாட்டு வளர்ச்சி. எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த உகந்த மிகச்சிறிய அலகு ஊராட்சிகளே. உள்ளாட்சிகள் வாயிலாக நம் மக்களாட்சியை மாண்புடையதாக மகளிர் உருவாக்கி வருகின்றனர்.

பெண்களுக்கான மிகச்சிறப்பான (73 மற்றும் 74வது அரசியல் சட்டத் திருத்தத்தை) சட்டத்தை முன்னாள் பிரதமர் ராஜீவ் கொண்டு வந்தார். 5 ஆண்டுகட்கொருமுறை உள்ளாட்சித் தேர்தல்கள் கட்டாயமாக்கப் பட்டதோடு 33.3% மகளிர் இடஒதுக்கீட்டுக்கும் இச்சட்டம் வகைசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சிகள் வாயிலாகச் சமூகத்தின் ஆதாரத் தளங்களில் தங்களுக்குரிய இடத்தை நோக்கி மகளிர் வேகமாக முன்னேறி வருகின்றனர். அரசு நிர்வாகத்தின் அடித்தள நிலையில் பெறும் அனுபவம் அடுத்தடுத்த நிலையிலுள்ள சட்டமன்ற, நாடாளுமன்றச் செயல்பாடுகளுக்குத் தகுதியையும், தெளிவையும் உருவாக்கும்.

2004 நிலவரப்படி தமிழகத்தில் 4000 பெண்கள் ஊராட்சிகளில் 7 ஆண்டுகள் அனுபவத்துடன் பணியாற்றிக் கொண்டிருந்தனர். சுயஉதவிக் குழுக்களை ஊக்குவித்து ஊரகப் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் ஆதாரத் திட்டங்களை அருமையாகச் செயல்படுத்துகின்றனர்.

குடும்பத்தில் சுதந்திரமின்மை, கணவனின் ஆதிக்கம், அரசியல் கட்சிகள் மற்றும் சாதிப் பாகுபாடு ஆகியவற்றிற்கிடையேயும் மகளிர் சிறப்பாக செயல்படுவதாக ஐ.நா.அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இருந்தும் பின்வரும் பட்டியல் வருத்தமளிக்கிறது.

நாட்டளவில் 01.03.97 விவரப்படி 7,16,234 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 31.05.1998 நிலவரப்படி ஊராட்சிகளில் 31.37% ஒன்றியங்களில் 20.71% மாவட்ட ஊராட்சிகளில் 31.80% தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தென்னிந்தியப் பகுதிகளில் நிலவும் குறையை நிவர்த்திக்க வேண்டும்.

ஆந்திரமாநில கர்னூல் மாவட்ட கால்வா ஊராட்சித் தலைவி பாத்திமா பீவி ஐ.நா.சிறப்பு விருது பெற்றுள்ளது. முகவை-மைக்கேல்பட்டணம் தலைவி ஜேசுமரி மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைச் செம்மையாகச் செயல்படுத்தியமைக்காக உலகவங்கித் திட்டச் சார்பில் அமெரிக்கா சென்று வந்துள்ளது போல பல நிகழ்ச்சிகள் நம்மைப் பரவசப்படுத்தும்.

மகளிருக்கு 50% இடஒதுக்கீட்டை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கியுள்ள "பீகார்' முன்மாதிரியை அனைத்து மாநிலங்களும் அளித்து மகளிர் உயர்வுக்கு வழிதுலக்க வேண்டும்.

(புள்ளிவிவர ஆதாரம்: பஞ்சாயத்து ராஜ் அப்டேட்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com