Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
ஜூலை 2007
பெரியார் - சில கேள்விகள்
நிர்மலா

"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்பதைச் சொல்லியதோடு நில்லாமல், அதனை தமிழ்ச் சமூகத்தின் நாடித்துடிப்பாக்கிய தந்தை பெரியாரின் வாழ்க்கை முதன் முறையாக படமாகி இருக்கிறது. வரலாற்று நாயகர் ஒருவரின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் ஒரு நல்ல முயற்சி என்பதைவிடவும் பெரியார் திரைப்படம் காலத்தின் கட்டாயம் என்பதே உண்மை. ஒரு சகாப்த மாகிய பெரியாரின் வாழ்க்கையை முதல் பதிவிலேயே நிறைவாகச் சொல்லிவிட முடியாது என்பதும் உண்மைதான்.

துவக்க காட்சியில் பெரியார் தனது வீட்டில் சடங்குகள் செய்ய வந்த பிராமணரின் தலையில் தட்டியை இழுத்து விட்டு அடிபட்டவுடன், பார்ப்பனர் கூறும் "எல்லாமே விதிப்படி தான் நடக்கும்'-என்கிற வார்த்தைகளை திருப்பிச் சொல்கிறார். இந்த சம்பவம் அவரது 12-ம் வயதில் நடந்த நிகழ்வு எனக்கு குறிப்பிடுகிறார் பெரியாரிய ஆய்வாளரும், பெரியாருடன் இணைந்து பணிபுரிந்த வருமான தோழர். வே.ஆனைமுத்து அவர்கள் சீர்திருத்தக் கருத்துக்களை அவ்வளவு சிறிய வயதிலேயே பெரியார் கொண்டிருந்தார் என்பதை சரியாக வெளிப்படுத்தி இருக்கலாம்.

ஈ.வெ. ராமசாமியாக இருந்தவர், தந்தை பெரியாராக மாறிய நிகழ்ச்சி அவரின் 59-ம் வயதில் நடைபெற்றது. பெண்கள் மாநாடு ஒன்றில் பெண்களால் பெரியார் என்கிற பட்டம் வழங்கப்பட்ட அந்த முக்கிய நிகழ்வு படத்தில் இல்லாதது பெருங் குறையே.
தந்தை பெரியாரின் மிக நீண்ட ஆயுளுக்கும் நீங்காப் புகழுக்கும் காரணமான மணியம்மையார் பாத்திரம் மிகுந்த மதிப்பிற்குரிய முறையில் காட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வீடுபெருக்கும் சாதாரணப் பெண்ணாக அறிமுகப்படுத்தப்பட்டு, வரலாற்று நிகழ்வே தவறாகப் பதிவாகியுள்ளது.

மகாத்மா காந்தியின் வாழ்க்கையை படமாக்கிய வெளிநாட்டுக்காரர்கூட, காந்தியின் அகிம்சாவாதத்தை வீரியத்துடன் வெளிப்படுத்தியதால்தான் அப்படம் ஆஸ்கர் விருது பெற்றது. ஆனால், போர்க்குணத்தின் முழு வடிவான தந்தை பெரியாரின் வீராவேசத்தை இப்படத்தில் நம்மால் உணர முடியவில்லை. உதாரணம் அந்த செருப்பு வீசப்படும் காட்சி. ஒரு பொதுக்கூட்டத்தில் பெரியார் பேசிக் கொண்டிருந்தபோது செருப்பு வீசப்பட்டு, அதனை அவர் நேர்த்தியாகக் கையாண்டு கூட்டத்தினருக்கு பல புரிதல்களை ஏற்படுத்தினார் என்பதே நாமறிந்த செய்தி. ஆனால் படத்திலோ வேறு மாதிரியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கடவுள் சிலைகளைப் போட்டு உடைப்பது, பாம்பையும் பார்ப்பானையும் ஒருசேரப் பார்த்தால் முதலில் பார்ப்பானை அடி என்பது போன்ற அவரின் போராட்ட வீச்சும் கலகக்குரலும் படத்தில் இல்லவே இல்லை.

பார்ப்பனர்களுக்கான வசதிவாய்ப்புகளும், சாதகமான சூழல்களும் தானாகவே அமைந்தது போலவும், இதில் அவர்களது திட்டமிட்டசதி எதுவுமில்லை என்பது போலவும் இயக்குநர் ஒரு மாயையை ஏற்படுத்து கிறார். கொள்கை ரீதியில் கீரியும் பாம்புமாக இருந்த தந்தை பெரியாரும், ராஜாஜியும் நடை முறையில் நாகரிகமான நட்பு கொண்டிருந்தனர் என்பது உண்மைதான். ஆனால், அவர்களை இணைபிரியாத உயிர்த்தோழர்கள் என்றும், அவர்கள் உறவு கணவன்-மனைவி உறவு போன்றது என்றெல்லாம் சித்தரித்திருப்பது எதற்காக?

கடவுள் மறுப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை என்பனவற்றை உயிர் மூச்சாகக் கொண்ட பெரியாரின் வாழ்க்கையை வெறுமனே சில செய்திகளின் தொகுப்பாக மட்டுமே மாற்றியுள்ளது படம். இப்படி பல முக்கிய நிகழ்ச்சிகள் விடுபட்டிருக்க தாழ்த்தப்பட்டவர் வீட்டில் உணவு சாப்பிடத் தயங்கும் மணியம்மையாரை பெரியார் சாப்பிடும் கையிலேயே அறைவதாக ஒரு "அதிமுக்கிய நிகழ்வு''(?) படத்தில் வருகிறது. (இது உண்மையில் நடந்ததுதானா)

கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்தையும், நாகம்மையாரின் மரணத்திற்கு பின்னால் வந்த பாடல் காட்சிகளிலும் நேரத்தை இழுப்பவர்களுக்கு பெரியாரின் இந்தி எதிர்ப்பு, தமிழ்நாடு தமிழருக்கே போன்ற முழக்கங்களைப் பதிவு செய்வது தேவையற்றதாக இருந்திருக்கிறது.

இதன் வாயிலாக தந்தை பெரியார் இந்தியத் தலைவர்களுள் ஒருவர் என்கிற சாதாரண எண்ணம் தான் எழுகிறதே தவிரஅவர் அன்றும், இன்றும், என்றும் தமிழ்நாட்டின் தந்தை என்ற மாபெரும் உண்மை மறைக்கப்பட்டு இருக்கிறது.

ஒருமுறை வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய நூல் ஒன்றில் வெறும் 40 பக்கங்களே இருந்தன. அதனைப் பார்த்த ஒருவர் "ஏன் இன்னும் அதிக பக்கங்கள் எழுதி இருக்கலாமே' எனக்கேட்க அதற்கு சர்ச்சில் "எனக்குப் போதிய நேரமில்லை. இருந்திருந்தால் அந்த புத்தகத்தை 5 பக்கங்களாகக் சுருக்கியிருப்பேன்' என்றாராம். சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதும் ஒரு பெரிய, அரிய கலையே. இனி இயக்குநர், பெரியார் பற்றி இரண்டாம், மூன்றாம் பாகம் எடுத்தாலும் அந்தப் பதிவுகள் முழுமையடையுமா என்பது கேள்விக் குறியே.

‘கலகம் வந்தால்தான் மாற்றம் பிறக்கும்' என்பதுபோல பெரியார் பற்றிய பரவலான சிந்தனைக்கும் விவாதத்திற்கும் இப்படம் அடித்தள மிட்டிருக்கிறது. இதன் வெளிப்பாடாக வரும் பதில்வினையாவது தமிழர் தந்தை பெரியாரின் முதன்மையான-முழுமையான பதிவை விரைவில் கொண்டு வரும் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

பெரியார் படம் பற்றி பலதரப்பிலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இயக்குநர் திரு.ஞானராஜசேகரன் அளித்த

ஒரே பதில்

"பெரியாரைப் பற்றி இன்னமும் இரண்டு படங்கள் எடுக்கும்போது அது ஒரு முழுமையான வரலாற்று ஆவணமாக இருக்கும். ஆனால் அத்தகைய படத்தை எடுக்க நினைக்கவில்லை. அவர் ஒரு பார்ப்பன எதிர்ப்பாளர், நாத்திகர் என்பன போன்ற மக்களிடையே பரப்பப்பட்ட அழுத்தமான படிமங்களை உடைத்து, அவரது மனிதநேய சிந்தனைகளையும், உறவுகளையும் காட்சிப்படுத்தி இருக்கிறேன். இப்படம் பெரியாரைப் பற்றிய முழுமையான படமும் அல்ல; அது என்னுடைய நோக்கமும் அல்ல''

(ஈரோட்டில் கடந்த மே மாதம் நடந்த ஒரு வரவேற்பு விழாவில் பெரியார் பட இயக்குநர் பேசியது.)

இறுதியாக ஒரே ஒரு கேள்வி

மாவீரன் பகத்சிங் - "ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி' என்று மட்டும் சித்தரித்தால் அது உண்மையான பதிவாக இருக்குமா? அதுபோல, பெரியாரையும் அவரின் போர்க்குணத்தையும் பிரித்தால் அவர் வெறும் ‘பெரியவர்' என்றாகி விட மாட்டாரா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com