Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
ஜூலை 2007
தடைக்கற்களும் படிக்கற்களும்
நா. நளினிதேவி

பெண்-ஆண் சமன்மைக்குத் தடையாகும் திருமணம் குறித்துக் கடந்த இதழில் கண்டோம். தனி மனிதர் என்ற வகையில் ஒரு பெண்ணுக்குக் கால் விலங்காகவே இருக்கும் திருமணம் தனிப்பட்ட இருவரின் இணைவு என்பதை விடுத்துச் சாதி, சமயம் சடங்கு, சமுதாய மதிப்பு, செல்வச்செழிப்பு போன்றவற்றை வெளிப்படுத்தும் நிகழ்வுத் தொகுப்பாகவே உள்ளது. மேலும், ஆண்-பெண் இருவரின் அகப்புற இணைவுக்குச் சாட்சியாக மேற்கொள்ளப்பட்ட திருமணம் இன்று பணம் படைத்தோரின் கறுப்பை வெள்ளை ஆக்கும் வழியாக இருப்பதோடு அரசியல் மேடையாகவும் மாறியுள்ளது.

சமுதாய மாற்றத்தை உருவாக்கும் வலிமையான கருவிகளுள் ஒன்று அச்சு ஊடகம். இவ்வூடகம் நிழலுலக மனிதர்களின் திருமண ஆடம்பரங்களை வெளியிடுவதில் ஆர்வம் கொண்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற வடபுல நடிகரின் இல்லத் திருமண விழாவில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதும் எளியவர்கள் தடியடி கொண்டு விரட்டப்பெற்றதும் இதழியலுக்கு மட்டும் அன்றி நாகரிகச் சமுதாயம் நாணும் சிறுமைகள்! பிற்போக்கான ஆரவாரங்களைக் கண்டிக்க வேண்டிய ஊடகம் அவற்றின்பால் மக்களுக்குக் குறிப்பாக எளியோருக்கு ஈர்ப்பையும், ஏக்கத்தையும் தோற்றுவிக்கும் வகையில் செயல்பட்டதை இதழியலாளர் ஞாநி எடுத்துக் காட்டியிருப்பது இந்த நோக்கத்திற்காக (ஆனந்தவிகடன் மே-2) அச்சு ஊடகம் மட்டுமல்லாது மின் அணு ஊடகங்களும் இவ்வாறு செயல்பட்டதைக் குறித்தும் அவர் சுட்டிக் காட்டிக் கூறும் கருத்துக்கள் ஏற்புடையவையே.

எளிய இல்லங்களின் திருமணம் முதல் இத்தகைய பெருஞ்செல்வரின் இல்லத் திருமணம் வரை, பெண் பார்க்கும் சடங்கு தொடங்கி தாலி கட்டிக் கையில் பாற் செம்பு ஏந்த வைப்பது முடிய அத்தனையும் பெண்ணை இழிவுபடுத்தும் செயல்களே என்பதைப் பெண்களே உணராத பெருங் கொடுமை! உரிய வயதில் திருமணம் ஆகாத பெண்ணை, அறிவுக்கும், அதன் பயனான பண்பாட்டுக்கும் முற்றிலும் ஒவ்வாத வகையில் கவிஞர்களும் கல்வியாளர்களும் விதிவிலக்கின்றி ‘முதிர்கன்னி' எனச்சுட்டும் ஆணாதிக்கச் சமுதாயத்தில் ஆண்களின் ஆணாதிக்க மனப்பான்மையைக் காட்டிலும் பெண்களின் ஆணாதிக்க மனப்பான்மையும் அதன் விளைவான ஆண் நோக்கு நிலையுமே பெண் சமன்மைக்குச் சீனப்பெருஞ்சுவராய் உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை! பெண்களுக்கும் பெண்நோக்கு நிலை இருக்குமானால் ஓர் எளிய அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். அந்த உண்மையின் அடிப்படையில் செயலாற்ற முனைவார்களேயானால் திருமண விலங்கிலிருந்து விடுபட முடியும்.

ஆம்! சிதம்பர ரகசியம் போன்று ஆண் இன்றிப் பெண்ணுக்கோ, பெண் இன்றி ஆணுக்கோ திருமணம் இல்லை! முன்னரே குறிப்பிட்ட வண்ணம், இன்றுபோல் அன்று வேலை வாய்ப்பும், பொருளியல் விடுதலையும் இல்லை. ஆதலால், பெண் தன் வாழ்க்கைத் தேவைகளைத் திருமணம் என்ற பெயரில் ஓர் ஆணைச் சார்ந்து நிற்க வேண்டியிருந்த நிலை மாறி விட்டது. மக்கட்பெருக்கம் நாட்டின் தலையாய சிக்கலாகப் பேருருக் கொண்டிருக்கும் சூழலில் திருமணம் கட்டாயம் என்பதும் தேவையற்றது. இவ்வாறு இருந்தும், உடும்புப் பிடியாய்ப் பெண்ணுக்குத் திருமணம் தான் வாழ்க்கை என்ற மரபு வலியுறுத்தப்படுவதில் பொதிந்து கிடக்கும் உள்நோக்கத்தை ஒவ்வொரு பெண்ணும் புரிந்து கொண்டாக வேண்டும்.

பெற்றோர் பெண்ணின் சாதகக் குறிப்பைக் கையில் சுமந்து கொண்டு சோதிடர் பின்னால் அலைவதையும், அருள் மொழி கேட்கச் சமயத் தலைவர்களின் கடைக் கண் பார்வைக்குக் காத்து நிற்பதையும் பெண்கள் தான் தடுத்து நிறுத்த வேண்டும்! எப்படியேனும் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று தவிக்கும் பெற்றோரின் போக்கால் தான் திருமணச் சந்தையில் ஆணின் விலை உயர்ந்து கொண்டே போகின்றது! பெண்கள் ஓர் ஐந்து ஆண்டு காலத்துக்கேனும் திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லை என முடிவு எடுத்தால் கூடப் போதும். திருமணம் பெண்ணைவிட ஆணுக்குத்தான் கட்டாயம் என்பது புலனாகும். ஆண் துணை இன்றிப் பெண் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு வாழ முடியும். சில விதி விலக்குகள் தவிர ஆண்களால் தம் தேவைகளை தாமே நிறைவு செய்து கொண்டு தனித்து வாழமுடியாது! ஏனெனில் ஆண் குழந்தையின் வளர்ப்பு அப்படி! ஆதலால் திருமணச் சந்தையில் ஆணின் விலை குறைந்து பெண் கிடைத்தால் போதும் என்ற நிலை உருவாக வாய்ப்புண்டு!

பெண், ஆண் துணை இல்லாமலே அவனை விடவும் திறமையான மேலாண்மையுடன் சிறப்பாக வாழ முடியும் என்பது தொன்மைக்கால வரலாற்றில் பதிந்து கிடக்கும் உண்மை! அதனால்தான் தனியுடைமைச் சமுதாயம் அவளின் அறிவை முடக்கும் வகையில் கல்விக் கண்ணைப் பறித்து இரண்டாம் நிலையாக்கியது. ஆற்றலை அழிக்கும் வகையில் அவளது சமுதாயப் பங்களிப்பை அகற்றி அளப்பரிய அவளின் மாண்புகளைத் தாலி எனும் தாயத்தில் அடைத்து மீள முடியாத வண்ணம் தாலிக்கயிற்றால் சாதி, சமய, சமுதாயச் சடங்குகளோடு பிணைத்து வைத்துள்ளது ‘மந்திரவாதச்' சமுதாயம்! கணவன் இறந்தபின்பு அவள் கட்டிய தாலியை அகற்றுவதுகூட, அவளுக்கு இன்னொருவன் மாலை யிடலாம் என்பதன் உட்பொருள்தான்! கணவனை இழந்தவர்கள் மறுமணம் செய்து கொள்வது இன்றளவும் சில இனங்களில் இயல்பாக உள்ளதை அறிவோம்!

மேலே தொடருமுன்பு ஒரு கருத்தை நாம் நினைவு கொள்ள வேண்டும். கற்பு, திருமணம், குடும்பம் போன்ற சொற்கள் பழைய மரபுகளை அகற்றப் புதிய மரபுகளை மேற்கொள்ளும் நிலையில்தான் இடம் பெறுகின்றனவே தவிர, அவற்றின் பழைய பொருளையும், விதிகளையும், வலியுறுத்தும் வகையில் இல்லை! பெண் சமன்மைக்குத் தடையாக இருப்பதால் திருமணமே வேண்டாம் என்பதும் பொருளன்று. பாலியல் உணர்வு ஒழுக்கத்தின் பால் படாது, எனவே, பாலியல் உரிமையே பெண் விடுதலை என்போர் பொதுவான கற்பை ஏற்றுக் கொள்ளாதது போல், திருமணம், குடும்பம் முதலானவற்றையும் மறுக்கவே செய்வர்! பெண் சமன்மையை விரும்பாத உள்மன வெளிப்பாடுகளே இவை எனக் கொண்டு இவற்றை ஒதுக்கினால்தான் குழப்பமற்ற தடுமாற்றம் இல்லாத, பெண் விடுதலை முயற்சிக்கு வழி வகுக்க இயலும். அதுவா? இதுவா? என்ற மயக்கம் சமன்மை முயற்சியைப் பின்னோக்கியே இழுக்கும்.

இனி திருமணம் பற்றித் தொடர்வோம். திருமண நாட்டம் இல்லாதோர் தனித்து வாழும் உரிமையும், அதற்கான சமுதாய அறிந்தேற்றும் மதிப்பும் பெற வேண்டும். விரும்பி நடைபெறும் திருமணங்களில் பெண்ணை இழிவுபடுத்தும் சடங்குகளை அறவே தவிர்க்க வேண்டும். இதற்கான சாதிக் கட்டோடும் இறையியலோடும் பிணைக்கப்பட்டிருக்கும் திருமணம் இவற்றிலிருந்து விடுபடுவதே இதற்கான வழியாகும். விரும்பிய ஆணை மணக்கும் வாழ்க்கை ஒப்பந்தமே திருமணம் என்றாக வேண்டும். நியாயமான காரணங்களால் இருவரும் இணைந்து வாழ முடியாத சூழலில் திருமண கட்டிலிருந்து விடுபடும் வகையில் திருமண மரபுகள் மாற்றப்பட வேண்டும். எனினும், வலுவான சமுதாய அமைப்பு இல்லையேல், மனித இனம் சீரான வளர்ச்சியும், முன்னேற்றமும் காண இயலாது.

வலுவான சமுதாய அமைப்புக்கு அடிப்படை வலுவான குடும்ப அமைப்புகளே ஆகும். இன்றைய மைய, மாநில அரசுகளின் சமுதாய நலத் திட்டங்களும், உலகளாவிய அறிவியல் வளர்ச்சியின் பயன்களும் சமச் சீரின்றி இருப்பதோடு, பல எதிர்விளைவுகளையும் தோற்றுவித்து ள்ளமைக்கு ஆண் பெண் சமன்மையற்றதால் வலுவற்ற குடும்ப அமைப்புகளே பெருங் காரணம். ஆண், பெண் சமன்மை பெற்ற வலுவான குடும்ப அமைப்பை உருவாக்குவதற்கு உரிய வழி, குடும்பங்களில் ஆணும் பெண்ணும் தனித்தனி அலகுகளைகாகக் கருதப் பெற்று எல்லா வகையிலும், நிலையிலும் முறையிலும் இருவரும் சம நிலையில் இயங்கும் வண்ணம் மரபுமாற்றம் காண வேண்டும். இவ்வாறான குடும்ப அமைப்பில் மட்டுமே பெண்ணின் திருமண, மறுமண உரிமை பொருளுடையதாக இருக்கும்.

முற்றிலும் மாறிவிட்ட காலச் சூழலுக்கு ஏற்பப் பொருந்தாத, பழைய மாரபுகளைக் கைவிடாமையால் தீர்க்கப்படாத பழைய சிக்கல்களோடு புதிய சிக்கல்களும் தோன்றி உள்ளன. எடுத்துக் காட்டாக ஒரு சிறிய ஆனால் வலுவான மரபை எடுத்துக் கொள்வோம். வினையே ஆடவர்க்கு உயிர். மனையுறை மகளிர்க்கு உயிரெனப் பெண் வீட்டிலிருந்து வெளி வேலைக்குச் செல்லும் ஆணின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது பழைய மரபு. பெண்களும் வேலைக்குச் செல்லும் புதிய சூழலில் அமா சமையல் செய்கிறாள். அப்பா அலுவலகம் செல்கிறார் என்று தொடக்கப் பள்ளிப்பாடம் முதல் அனைத்தும் உள்ளன! குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலைகள் முதலானவற்றை யார் செய்வது என்பது தவிர்க்க முடியாத சிக்கல்! பெண்ணின் இரட்டைச்சுமை இத்தகைய போக்கு நிலை மோதலை உருவாக்கியுள்ளது. இதனால் குடும்பங்களில் அமைதி குலைந்து இரு சாராருக்கும் மன அழுத்தமும், உளைச்சலும் தோன்றி குடும்பச் சிதைவுகளுக்கு வழி வகுத்துள்ளன.

குடும்பச் சிதைவுகள் வலுவான சமுதாய அமைப்பைத் தகர்க்க, நாளைய சமுதாயமாகிய குழந்தைகள் மனவளமும் உடல் வளமுமற்ற குறைபாடுடையவராக வளர, எதிர்காலச் சமுதாயம் நலமும், வலிமையும் அற்றதாக உருவாக்கிக் கொண்டிருப்பதை அரசியல், சமுதாய, சமயத் தலைவர்கள் உணர்வார்களா? இவ்வாறான இன்றைய, நாளயை சீர்கேடுகளைத் தவிர்க்க வேண்டுமாயின் குழந்தை வளர்ப்பையும், வீட்டு வேலைகளையும் இருவரும் பகிர்ந்து கொள்ளும் சரியான, எளிய வழியை மேற்கொள்ள வேண்டும். இதை விடுத்துக் குடும்பங்களை தகர்ப்பதும், தவிர்ப்பதும் மீட்சியும் உரிய வழிகள் அல்ல, ஊதியம் பெறும் திருமண, உணவகச், சமையல் வேலைகளை ஆண்களே செய்கின்றார்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். குடும்பங்களில் பெண்கள் ஊதியமற்ற கொத்தடிமைகளாகவே உள்ளனர். எனவே, காலம் காலமாய் ஆண் அமர்ந்திருக்கும் "அரிமா' இருக்கையிலிருந்து கீழே இறங்கினால் ஆழிப்பேரலை தோன்றி அனைத்தையும் அழித்து விடும் என்றும் ஆழிப் பேரலையே தோன்றினும் ஆண்களை மாற்ற முடியாது என்றும் கதைக்கும் கற்பனைக் கருத்துக்களைக் கைவிட வேண்டும்.

வேலை வாய்ப்பும், பொருளியல் விடுதலையும் பெண்ணுக்குச் சமநிலை பெற்றுத் தரவில்லை என்பதே உண்மை! பெண்ணின் ஊதியம் திருமணம் தொடர்பான தேவைகளுக்கேப் பயன்படுகின்றது. பணத்தின் தேவை பெருகி விட்டநிலையில் பிறந்த வீட்டிலும் பணம் தரும் ஊற்றாகவும், இயந்திரமாகவும் கருதப்படுகின்றாள். பெண், ஊதியத்தைத் தன் விருப்பப்படிச் செலவு செய்யும் உரிமை இரண்டு வீட்டிலும் இல்லை! நகையாலும், புடவையாலும் அணி செய்யப்படுவதில் அகம் மகிழும் பெண்கள் அவற்றைக் கணவன் அனுமதி இல்லாமல் தாம் விரும்பும் மற்றவருக்குக் கொடுக்க முடியாது என்ற உண்மையை அறிந்தோ அறியாமலோ நகை தாங்கியாகவும் புடவைப் பொம்மை யாகவும் வலம் வருகின்றனர். கணவனின் சமுதாய மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காகவே சுமங்கலிக்கு அடையாளமான பூவைத் திருமணமான பெண் அவளின் இள வயதுத் தோழனே வாங்கித் தந்தாலும் அவளால் சூடிக் கொள்ள முடியுமோ?

ஆண் வீட்டிலிருக்க அல்லது குறைந்த கல்வியும் பணியும் பெற்றிருக்க, ஒரு பெண் பணிக்கும் சென்றாலும் அவனை விட மிகுதியான கல்வியும், பணியும் இருந்தாலும் அவன்தான் குடும்ப அட்டை முதல் இல்ல விழாக்கள், சமுதாய விழாக்கள் அனைத்திலும் குடும்பத்தலைவன். துணைவன் இருந்தோ இல்லாமலோ அவள் விழாக்களுக்குச் சென்றால் உரிய மதிப்பில்லை! கட்டுரையாளர் கல்லூரிகளில் பணியாற்றிய போது, பிற பேராசிரியர்களின் அறிவையும், திறமையும் கண்டு மேலே ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளவில்லையா' என வினவினால் அவர்களின் துணைவர் தம்ûமை விட மேலே படிப்பதை விரும்பவில்லை. எதற்கு வீண் சண்டை என்று கூறுவதைக் கேட்டுள்ளார். இப்படி ஒவ்வொரு நிலையிலும் துறையிலும் எத்தனைப் பெண்களோ? தம்முடைய நியாயமான விருப்பு வெறுப்புகளை ஒதுக்கித் தள்ளி விட்டுத் துணைவனின் நியாயமற்ற நடை முறைக்கு ஒவ்வாத விருப்பு வெறுப்புக்காட்டி விட்டுக் கொடுத்தால்தான் நல்ல இல்லத்தரசியாகவும், அவனின் மனதுக்கு உகந்தளாகவும் விளங்க முடியும். இல்லையெனில் குழந்தைகளுக்காகச் சமுதாய மதிப்புக்காக ஒரே குகைக்குள் இணையாத தண்ட வாளங்கள் தான்.

முதுமைப் பருவத்தில் கூட ஒரு பெண் வேறு ஒரு ஆணை நண்பன், மகன், பேரன் என்று உறவு கொள்ள முடியாது. வேற்று ஆண்களை குழந்தைகளுக்கு மாமா ஆக்கி விடுவார்கள். சித்தப்பா, பெரியப்பா என்ற உறவு முறை கூடாது! அதே சமயம் ஓர் ஆண் உற்ற உறவுகளிடம் காட்ட முன்வராத பேரன்பைவேறு பெண்களிடம் தோழி, மகள், பேத்தி என்று உறவு கொண்டு காட்டினால் அது தவறாகக் கருதப்படுவதில்லை! திருமணத்துக்கு முன்பு, தந்தை உடன் பிறப்புகள் திருமணத்துக்குப் பின்பு கணவன், மகளைத் தவிர உண்மையான நட்புடன் கூட ஓர் ஆண், பெண்ணிடம் பழக இயலாத நிலைதான் உள்ளது!

குழந்தை, அல்லது ஆண் குழந்தை இல்லை என்றால் மனைவியே கணவனுக்கு வேறு திருமணம் செய்து வைக்கும் அறியாமை தியாகம் என்று போற்றப்படுகின்றது. திருமணத்தைத் தாம் மறுத்தாலும் நடக்காமல் இருக்கப் போவதில்லை அங்ஙனம் வேறு திருமணத்தால் தாம் வீட்டை விட்டு வெளியேறக் கூட நேரலாம் என்ற உள் மன அச்சமே இத்தியாகம் என்பதன்றி வேறு என்னவாக இருக்க முடியும்? இரு மனைவி தடைச் சட்டடம். முதல் மனைவியின் இசைவோ, விலகலோ இருந்தால் செல்லுபடியாகாது! இசைவுக்கோ, விலகலுக்கோ முதல் மனைவி வற்புறுத்தப்படுகின்றாள். இங்கேயாவது பெண்கள் இணைந்து நின்று அவளின் உயிரற்ற உடலுக்குக் கூட உரிமைப் போராட்டம் நடத்துகின்றனர். ஆணிடமிருந்து சரிமை பெறப் போராடுவதை விடுத்து அனைத்தும் உரிமையாக்கிக் கொள்ள இன்னொரு பெண்ணுடன் போராடுகின்றனர்!

இரு மனைவி ஆணுக்கு இயல்பானது என்பதை நிலை நிறுத்த இறைவனுக்கும் இரண்டு மனைவியரைப் படைத்துள்ளனர். புகழ் பெற்ற மதுரையின் சித்திரைத் திருவிழா உட்படப் பல்வேறு விழாக்களில் மீனாட்சியம்மன், மதுரையை ஆளும் அரசியாக இருந்தும் தனியே ஒரு தேரில் பின்னால் உலா வர முன்னால் மீனாட்சியை மணந்து கொண்ட சொக்கநாதனும், பிரியாவிடையும் இன்னொரு தேரில் உலா வருவர்! மீனாட்சி சொக்கநாதர் திருமணம் சித்திரைத் திருவிழாவின் சிறப்பான ஒரு கூறு! இத்திருக்கல்யாணத்தில் அர்ச்சகராகிய மனிதர்களே இறைவிக்குத் தாலி அணிவிக்கின்றனர்! இவ்விழாவின் போது மஞ்சள் கயிறும், மஞ்சளும், இறையன்பர்களை மற்றவர்கட்குக் கொடுத்துப் புண்ணியம் தேடிக் கொள்ள அத்தனைப் பெண்கள் கழுத்திலும் புதிய மஞ்சட்கயிறு அணி செய்ய, கணவன் நீடூழி வாழ்வான் என்ற நம்பிக்கையுடன் பக்தியில் கரைந்து உருகுகின்றனர்! இறைவனைப் படைத்தது மனிதனே என்பதற்கு இதுவே போதுமான சான்று! அந்த இறைவன் பெயரால் அடிமை வலை, பெண்களே விரும்பி முன்வந்து பின்னிக் கொள்ளும் வகையில் பின்னப் பட்டுள்ளது என்பதைப் பெண்கள் உணராத வகையில் சமன்மை என்பது எட்டாக் கனியே!

(அடுத்த இதழில் நிறைவடையும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com