Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
ஜூலை 2007
மதியிடம் கேளுங்கள்

சின்னத்திரையிலும், பெரியதிரையிலும் பெண்கள் நடு வகிட்டில் குங்குமம் வைக்கும் போக்கு அதிகரித்து வருகிறதே! அழகுக்காக வைக்கிறார்கள் எனக் கொள்ளலாமா? அல்லது இதுவும் நுகர்வுக் கலாச்சாரம் தானா?
-ப.கலாவதி, போரூர்.

இத்தகைய போக்கு பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விட தற்போது பதின்மடங்கு கூடி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இதில் அழகோ, நுகர்வுக் கலாச்சாரமோ இருப்பதாகத் தெரியவில்லை. பெண்ணடிமைத்தனம்தான் பளிச்சென்று புலப்படுகிறது.

மஞ்சளும், குங்குமமும் பெண்களின் மங்கலச் சின்னம் என்கிற மதரீதியான பழமைவாதத்தில் மஞ்சளின் மவுசு குறைந்துவிட்டது என்றாலும் குங்குமத்தின் மோகம் பெண்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. இந்தியாவின் வடமாநிலங்களில் பெண்ணடிமைக் கலாச்சாரத்தில் முதன்மையாக இருப்பது இவ்வழக்கமே. இப்போது தமிழ்நாட்டில் கணவன் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக் கொள்வதைப் போலவே இந்தப் பழக்கமும் வலுவாக வேரூன்றி விட்டது.

முன்காலத்தில் ஆண்கள் போருக்குச் செல்லும்போது தம் வாளால் மனைவியரின் நடுவகிட்டில் கீறி இரத்தப் பொட்டிட்டு தமது உடமை என்பதனை நிலைநாட்டிச் செல்வராம். அன்று இரத்தம். இன்று குங்குமம்... பெண்களின் அறியாமை அன்றும் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்களின் ஒட்டுமொத்த விழிப்புணர்வு தான் இக்கண்மூடித்தனமான பழக்கத்தை மண்மூடிப் போகச்செய்யும். தமிழகப் பெண்கள் விழிப்படைவார்கள் என்றே எதிர்பார்ப்போம்.

பாலியல் தொழிலுக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று சில ஆண்களும் குரல் கொடுக்கிறார்களே! இதனை மாந்த நேயமாகப் பார்க்கலாமா?
-இளமுருகு, சென்னை-14.

கூடாது. "ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது'' என்றுதான் பார்க்க வேண்டும்.

தயவுசெய்து சரியான பதிலைச் சொல்லுங்கள். மதி அவர்களின் கல்வித்தகுதி என்னவோ?
-குணசீலன், கோவை.

இதுவரையில் எதற்கும் சரியான பதிலைச் சொல்ல வில்லை என்பதை மிகவும் நளினமாக உணர்த்தி இருக்கிறீர்கள். உங்களுக்கு நன்றி. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கல்வி முறையின்மீது பெரிதான மரியாதை எப்போதுமே இருந்ததில்லை என்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் எவ்விதக் கல்வித் தகுதியும் மதி-இடம் இல்லை. பிழைப்பிற்காக கல்வி என்பதுதான் இங்கு நிலை நிறுத்தப்படுகிறதே தவிர மனித குலத்தின் உரிமை வாழ்வு உயர்வதற்கும் பெறுவதற்குமான எந்த வழிவகையும் இக்கல்வி முறையில் இருப்பதாகத் தெரியவில்லை.

இதை அறுபது ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான அப்துல்கலாம் ஆசாத் அவர்களே ஒப்புக்கொண்டதாக ஒரு செய்தி இருக்கிறது. மனித நேயத்திற்கும், மானுட உயர்விற்கும் பயன்படாத இந்த மெக்காலே கல்வித்திட்டம் சுத்தமாக மாற்றியமைக்கப்படும் போதுதான் கல்வி எதற்கு? ஏன்? எவ்வாறு என்பதான கேள்விகளுக்கு முழுமையான பதில் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. என்றாலும் இப்போதும் மதியின் படிப்பு தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் அது புத்தகப்படிப்பு அல்ல, மனித மனங்களை வாசிக்கின்ற படிப்பு.

(இந்த பதிலேனும் சரியாக இருக்கிறதா.... அல்லது வழக்கம்போல்தானா...?)

புதிய பெண்ணியம் இதழில் பெண்கள் தினம் (மார்ச்-8) பற்றி ஒரு சிறு குறிப்புக் கூட காண வில்லையே! பெண்களுக்கான இதழே மகளிர் தினத்தைப் போற்றவில்லை என்பது ஏற்க இயலாததாக இருக்கிறது. உங்கள் நிலைப்பாடு எது?
-சவீதா, சென்னை-78.

சமூக சமத்துவ சிந்தனைகளை வளர்தெடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ள பெண்ணியம் இதழ் மகளிர் தினத்தையும், தொழிலாளர் தினத்தையும் மதித்துப் போற்றவே செய்கிறது. மகளிர் தினம் குறித்து எவரேனும் நல்லதொரு படைப்பை அனுப்பி இருந்தால் அது வெளியிடப்பட்டிருக்கும். அல்லாமல் ஒரு சிறு குறிப்பாக ‘மகளிர் தின வாழ்த்து' மட்டும் தெரிவித்து ஒரு சம்பிரதாயமாக அதனை மாற்றுவதில் நமக்கு உடன்பாடில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க நெடிய போராட்டத்தை பின்னணியாகக் கொண்டிருக்கும் இவ்விரு தினங்களும் உருக் கொண்டதற்கான நோக்கங்கள் நிறைவேறும்போது, மனிதகுலம் சமத்துவத்தில் திளைத்திருக்கும் என்பதே நமது எண்ணமும் எதிர்பார்ப்புமாக இருக்கிறது.

‘காதல் அரங்கம்' படத்தில் நிர்வாணக் காட்சிகளை நீக்க முடியாது என்பதற்கு பெண்ணுரிமைக் கருத்துதான் காரணம் என்று வேலுபிரபாகரன் கூறுகிறாரே. உண்மையாக இருக்குமா...?
-செல்வம், காஞ்சிபுரம்.

பெண்ணை நிர்வாணப்படுத்திக் காட்டிவிட்டால் பெண்ணுடலைக் காசாக்கும் கைங்கர்யம் ஒழிந்துவிடும். எல்லோரும் அமைதியடைந்து திருந்தி, அவரவர் வேலையைப் பார்ப்பார்கள் என்கிற வேலுபிரபாகரனின் இந்தப் பார்வையும் பெரியதிரையின் சராசரி வணிக நோக்காகத்தான் தெரிகிறது. கடவுள் மறுப்புப் படம் எடுப்பதாகச் சொல்லிக்கொண்டு கடவுளையே நாயகனாக்கிப் படம் எடுத்தவர்தானே இவர்? அறிவியல் பூர்வமான விவாதங்களால் தர்க்கரீதியாக வாதாடுவது தான் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு வித்திடும். சமூக மேடுபள்ளங்களின் பன்முகக்கோணங்களையும், ஆண்-பெண் பேதத்தின் அடிப்படைக் கூறுகளையும் அலசி ஆராயாமல் பகுத்தறிவுவாதி என்கிற பட்டத்தை மட்டும் அவசரம் அவசரமாகத் தட்டிச்செல்லும் முயற்சி இது என்றே தோன்றுகிறது.

விரும்பத்தகாத ஆண் ஒருவன் ஒரு பெண்ணிடம் கட்டாய உறவுகொள்ள முனையும்போது அவனை எதிர்த்துப் போராடாதே; அவனுடன் இணங்கிப் போய்விடு என்று சொல்வது பிரச்சினைக்குத் தீர்வாகுமா? இதுதான் பகுத்தறிவா? இந்த நோக்கோடுதான் படத்தை இயக்கி இக்காலப்பெண்ணை ஆதிகாலத்திற்கு அழைத்துச் செல்கிறார் "புரட்சிக்காரர்' வேலுபிரபாகரன். (படத்தில் உள்ள நிர்வாணக் காட்சிகளை நீக்கிவிட்டு, படத்தின் பெயரையே ‘நிர்வாணம்' என மாற்றப் போவதாகவும் ஒரு செய்தி வந்துள்ளது)

சென்ற இதழில் பரவை பாரதியின் கேள்விக்கு சொந்தக்காலில் நிற்கும் பெண்கள் நெஞ்சுரத்தோடு முதிர்கன்னி, வாழாவெட்டி, கைம்பெண் போன்ற வார்த்தைகளையும், அதற்கான வாழ்முறையினையும் நொறுக்கித் தள்ளும் நெஞ்சுரம் பெற வேண்டும் என்று கூறியிருந்ததை மிகவும் வரவேற்கிறேன். ஆனால், நன்கு விசாரித்த வரையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக தாங்கள் தனிமையில் இருந்து வருவதாகவே அறிகிறேன். எனவே, உங்களின் பதிலை ‘ஊருக்குத்தான் உபதேசம்' என்ற கோணத்தில் எடுத்துக் கொள்ளவா? தனிநபரின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் அநாகரிகம் என்று இதனை ஒதுக்கிவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். சமூகநோக்கோடு கேட்கப்படும் இக்கேள்விக்குப் பதில் சொல்வீர்களா?
-தூயவன், சின்னமலை

சமூகம், மாற்றம், சமத்துவம் என்றெல்லாம் பேசவும், எழுதவும், ஆரம்பித்து விட்டாலே அங்கு தனிநபர் என்கிற அடையாளம் மறைந்து விடுகிறது. அத்தகைய நிலைமை தோன்றிவிடும் சூழலில் இதுபோன்ற கேள்விகள் எழுப்பப்படுவது இயல்பான ஒன்றுதான். ஆகவே, இதனை ஒதுக்குவது என்ற பேச்சே இல்லை.. நீங்கள் சொல்வது போல ஏறக்குறைய பதிமூன்று ஆண்டுகள் பிள்ளைகளை மிகச்சிறப்புடன் வளர்க்க வேண்டுமே என்ற பொறுப்புணர்வில் தனிமை காணாமல் போலிருந்தது. ஆனால், மகள் திருமணம் முடித்து வெளிநாடு சென்ற நிலையில், மகனுக்கும் வெளிநாட்டு வேலை அமையக்கூடும் என்ற சூழலில்தான் தனிமையைப் பற்றி யோசிக்க நேர்ந்தது. அதனால் ஓர் ஆங்கில நாளிதழில் சென்னைவாசியாக விரும்பக் கூடிய ஒரு வாழ்க்கைத்துணை தேவை என்ற விளம்பரத்தை வெளியிட்டோம். அதன் எதிரொலியாக வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் அனைத்தையுமே நிராகரிக்க வேண்டியதாயிற்று. காரணம் மனித மனதைப் படிப்பது என்ற வழக்கத்தைக் கைக்கொண்டிருந்ததால் எவருமே தேறாமல் போயினர். இப்போது "உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல'' என்பதை ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம். (தோழர் விவரமாக விசாரித்ததில் இந்த விவரம் மட்டும் விடுபட்டுப் போனது வியப்பாகவே இருக்கிறது.)

நண்பருக்கும், தோழருக்கும் என்ன வேறுபாடு? விளக்கமாகச் சொல்லவும்.
-மதிமைந்தன், சென்னை-15.

தோழமைக்கும் நட்புக்கும் உள்ள வேறுபாடு போன்றது தான். நண்பர்கள் வட்டம் பரந்தது. தோழர்கள் வட்டம் குறுகியது நட்பு, உறவுத்தளத்தில் நேர்வது. தோழமை, கருத்தியல் தளத்தில் நிகழ்வது. மிகவும் நெருக்கமாக, பல விதத்திலும் ஒத்துப் போகக் கூடியவர்களையே உற்ற நண்பர்கள் என்று சொல்வார்கள். இதே போன்று கருத்தியலில் பல கோணத்திலும் ஒத்த கருத்து உள்ளவர்களையே தோழர்கள் என்பார்கள். சுருங்கச் சொன்னால் நண்பர் வட்டம் அகல உழுவது, தோழர் வட்டம் ஆழ உழுவது.

நண்பர்கள் இருவரோ அல்லது தோழர்கள் இருவரோ விவாதிக்கலாம். ஆனால், நண்பரும் தோழரும் விவாதிக்க முடியாது-கூடாது. இருவரின் தளமும், புரிதல்களும் வேறு வேறு. உறவுத்தளத்தில் நட்பு என்பது தோழமையாக மலர கூடுதல் புரிந்துணர்வு தேவைப்படுவது போல கருத்தியலில் நண்பர் தோழராக மாறுவதற்கு கூடுதல் சிந்தனை தேவைப்படுகிறது.

தமிழகத்தின் பெண்ணியச் சிந்தனைக்குச் சொந்தக் காரரான ‘பெரியார்' பற்றிய திரைப்படம் வந்து விட்டதே! பெண்களின் எதிர்பார்ப்பை அல்லது தேவையினை நிறைவு செய்துள்ளதா?
-சி.துரை, தஞ்சாவூர்.

தந்தை பெரியார் பெண்ணியச் சிந்தனைக்கு மட்டுமே சொந்தக் காரர் அல்லவே. தமிழியச் சிந்தனைக்கும் அவரே சொந்தக்காரர். இன்னும் பெரியார் படத்தினைப் பார்க்க வில்லை. திரைப்படம் பார்க்கும் வழக்கத்தை 1990- லேயே கை கழுவியாயிற்று. இயக்குநர் பாலச்சந்தர் திரைத் துறையில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் அவரது படங்களில் எண்பது விழுக்காடும், பாரதிராஜாவின் படங்களில் ஐம்பது விழுக்காடும் பார்த்து ரசித்தவையாக அல்லது யோசித்தவையாக இருக்கின்றன. இந்த நீண்ட இடைவெளியில் தவிர்க்கவியலாத சூழல் காரணமாகப் பார்த்தது என நான்கைந்து படங்கள் இருக்கும். டைட்டானிக், மோகமுள், பாரதி என மூன்று படம் நினைவிருக்கிறது. பெரியார் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவே செய்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com