Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
ஜூலை 2007
நாட்குறிப்பு -நானும் நாத்திகன் ஆனேன்
இளையராஜா

ஆகஸ்ட்-31, 2003

வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான நாள் இன்று. பல்லாயிரக் கணக்கான இளைஞர்களின் வெளிநாட்டு வேலை என்கிற கனவு. என்னளவில் நனவாகி, இன்றுதான் அமெரிக்காவிற்குக் கிளம்புகிறேன். வேலூர் மாவட்டத்தில் ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரிக்குப் பிறகு கடைக்குட்டியாகப் பிறந்தவனுக்கு இப்படி ஓர் வாய்ப்பு. எல்லை மீறிய மகிழ்ச்சியில் மனமும், உடலும் இலேசாகி மிதந்தது. இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமொன்றின் வடபழனி அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் அமெரிக்காவிற்கு இன்றிரவு கிளம்புகிறேன். பெற்றோரும், நண்பர்களும் வழியனுப்ப வெளிநாட்டுப் பயணம் துவங்கியது.

அக்டோபர்-12

உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் பலரை மயக்கி ஈர்த்து வைத்திருக்கும் அமெரிக்கா, கற்பனை செய்ததை விடவும் பிரம்மாண்டமாகத்தான் இருக்கிறது. அலுவலகப் பணியும் வாரத்தில் ஐந்து நாட்கள்தான் என்பதால் ஓய்வு நேரம் நிறையக் கிடைத்ததில் நிறைய வெளி இடங்களுக்கும் போய்வர முடிந்தது. ஐந்து நண்பர்களோடு ஒரே வீட்டில் குடித்தனம் என்பதால் நாட்கள் ஓடியதே தெரியவில்லை. இந்தக் குடியிருப்பு பகுதி முழுவதுமே இந்தியர்கள்தான். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என்று நமது நாட்டுச் சூழலே நிலவி இருந்தது. இங்கு வந்தும் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் ஆகிவிட்ட நிலையில் பொழுதுபோக்கு அம்சங்கள் எல்லாம் சற்றே போரடிக்க ஆரம்பித்தது. நண்பர்களைப் போல் அதுவே மனதுக்கு நிறைவானது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனதின் ஒரு மூலையில் இலேசாக ஒரு வெறுமையும் தனிமையும் துளிர்விட ஆரம்பித்தது. இந்தியாவின் குறிப்பிடத்தக்க இம்முன்னணி நிறுவனத்தில் பணியில் சேர்ந்து இரண்டாண்டுகளில் கைநிறைய சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்திருந்தேன்.

பெற்றோரும் பெண் தேடும் படலத்தைத் துவங்கி நான்கைந்து பெண்களின் படங்களையும் விவரங்களையும் அனுப்பி இருந்ததில் எதுவுமே எனக்குப் பிடிக்காமல் போனது. எனவே, சென்னையில் இருந்த நாட்களிலேயே நாளிதழ்களில் மணமக்கள் தேவை விளம்பரத்தைப் பார்ப்பதை ஒரு வாடிக்கையாக வைத்து இருந்தேன். அடடே... இன்றுகூட ஞாயிற்றுக்கிழமைதான். கம்ப்யூட்டர் முன்தான் அமர்ந்திருந்தேன். "ஹிந்து'வின் "மேட்ரிமோனியல்' பகுதியைப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. பல விளம்பரங்களைக் கண்டேன். ஒன்று மட்டும் தனித்துத் தெரிந்தது. "சாதி தடையில்லை' வயது 24, படிப்பு வழக்கறிஞர், தனியார் நிறுவனத்தில் ரூ.8000 சம்பளம், கலப்புமணப் பெற்றோர் முற்போக்குச் சிந்தனையுள்ள சென்னைவாசிகள் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்றிருந்தது. மின்னஞ்சல் முகவரியும் அந்த விளம்பரத்தில் இருக்கவே ஒரே வரியில் "விருப்பப்படுகிறேன்' என்று மட்டும் மின்னஞ்சல் செய்தேன்.

அக்டோபர்-31

அடேயப்பா...! இந்தப் பதினெட்டு நாட்களில் தான் எத்தனை போராட்டங்கள். அமெரிக்கா வந்து சேர்ந்த மகிழ்ச்சியே ஓரம் கட்டப்பட்டு அந்தப் பெண் நிலாவோடு மல்லுக்கட்டவே நேரம் போதாது என்றாகிவிட்டது. எனது ஒற்றைவரி மின்னஞ்சலுக்கு ஒருவாரம் ஆகியும் எவ்விதப் பதிலும் இல்லை. மீண்டும் ஏன் பதில் இல்லை? என்றொரு அஞ்சலை அனுப்பினேன். அமெரிக்காவில் இருக்கும் பையனை விரும்பவில்லையாம். சென்னைவாசிகள்தான் விண்ணப்பிக்க வேண்டுமாம். "ஒருவேளை வெளிநாட்டில் இருக்கும் இளைஞர்கள் நல்லவர்கள் அல்ல என்று நினைத்திருப்பார்களோ' என்ற சந்தேகத்தில், நான் தினமும் வாசிக்கும் காயத்ரி மந்திரம், கந்தர்சஷ்டி கவசம் ஆகியவற்றினை பெரிய மடலாக எழுதி அனுப்பினேன். இதற்கு அந்தப் பெண் நீண்ட பதிலை எழுதி அனுப்பி இருந்தது. தனது குடும்பத்தில் எவருக்குமே கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் தனக்கு சமூகப் பணிகளில் மிகுந்த ஆர்வம் இருப்பதால் சென்னையில் வசிக்கும் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு அதனைத் தொடர விரும்புவதாகவும், ஆகையால் தன்னால் அமெரிக்காவுக்கு வர இயலாது எனவும் எழுதி இருந்தது.

நானும் பதில் எழுதினேன். எனக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தாலும் நானும் ஒரு முற்போக்குவாதிதான். விதவை திருமணம், பெண்கள் மறுமணம் போன்றவற்றை ஆதரிப்பவன் தான். அதோடு எனக்கும் அமெரிக்காவிலேயே தங்கிவிடும் எண்ணம் எப்போதும் இல்லை. சென்னையிலேயே செட்டிலாகத்தான் விருப்பம். தொலைபேசி எண்ணை தயவு செய்து எனக்குத் தெரியப்படுத்தவும் என்று அஞ்சலை அனுப்பி வைத்தேன். ஒருவழியாக தொலைபேசி எண் கிடைத்து விட்டது. இன்று நிலாவோடு பேசியும் விட்டேன். பேசியதில் இனம்புரியாத மகிழ்ச்சி... சிவ்வெனப் பறப்பது போன்ற ஓருணர்வு... என்ன வளமான குரல்... என்ன அறிவு.. என்ன தெளிவு... தலைகால் புரியாத மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனேன்... இன்று ஒரு நாள் மட்டுமே மூன்றுமுறைக்கும் மேலாக நிலாவுடன் பேசிவிட்டேன்.

நவம்பர்-30

இந்த ஒரு மாதத்தில் எங்களிருவருக்கிடையேயும் இருந்த புரிதல் மேலும் அதிகரித்துள்ளது. சென்னை சட்டக் கல்லூரியில் பி.ஏ.பி.எல். படிப்பை முடித்த நிலா படிக்கின்ற காலத்திலேயே பல இதழ்களில் பணியாற்றிய அனுபவத்தையும், சென்னை வானொலியின் அறிவிப்பாளராகவும் இருந்ததைச் சொன்னபோது வியப்பு மேலிட்டது. இதற்கிடையில் உயர்நீதி மன்றத்திலும் ஓராண்டு வழக்கறிஞர் பணி முடித்து தற்போது பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருப்பதாகச் சொன்னபோது ஆச்சரியம் எல்லை மீறியது. மணமகனைத் தேர்வு செய்யும் பொறுப்பினைக்கூட நிலாவின் அம்மா மகளிடமே விட்டிருந்தது மகள் பேரில் அவருக்கிருந்த நம்பிக்கையினைக் காட்டியது. செப்டம்பர் 1-ந் தேதியே நிலாவின் புகைப்படத்தை பெற்றோருக்கு அனுப்புமாறு சொன்னேன். ஆனால், ஒரு மாதம் பேசிப்பழகி இருவருக்கும் ஒரு புரிந்துணர்வு வந்த பின்னரே அனுப்பலாம் என்று நிலா சொன்னதை ஏற்றுக் கொண்டேன். அதன்படி இன்று வேலூருக்கு எனது வீட்டிற்கு நிலாவின் படத்தினை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டேன். அம்மாவும் அப்பாவும் நல்ல அழகும், படிப்பும் நிறைந்த நிலாவை விரும்பாமல் போவார்களா என்ன?

டிசம்பர்-25

நினைத்ததற்கு நேர்மாறாகி விட்டது. நிலாவை நான் திருமணம் செய்யக்கூடாது என்று எனது அம்மா கறாராகச் சொல்லிவிட்டார். அப்பாவோ சாதிவிட்டு திருமணம் என்பதைக் கனவில்கூட நினைத்துப் பார்க்கக் கூடாது என்று கூறிவிட்டார். அவர்கள் பார்த்து வைக்கும் பெண்ணைத்தான் நான் திருமணம் செய்ய வேண்டுமாம். இதனை எப்படித்தான் நிலாவிடம் சொல்வது? ஒரு வழியாகச் சொல்லி முடித்தபோது... எனக்கு ஆச்சரியம்தான் காத்திருந்தது. "பரவாயில்லை இது நாங்கள் எதிர்பார்த்ததுதான்.... ஏற்கனவே உங்கள் சின்ன அண்ணன் வேறு ஒரு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்ததால் வீட்டிலிருந்தே ஒதுக்கி வைத்து விட்டனர். நீங்களும் வேறு சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதைக் கண்டிப்பாக ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள் என்பதை முதலிலேயே சொன்னதை நினைவுபடுத்தி இந்த விஷயத்தை இத்துடன் முடித்துக் கொள்வோம் எனப் பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டது நிலா. ஆனால், என்னால்தான் அதனை ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. குறைந்த பட்சம் நண்பர்களாக வேனும் நமது அறிமுகம் தொடர வேண்டும் எனச்சொன்னதை நிலாவும் ஒப்புக் கொண்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

ஜனவரி-14, 2004

மனம் ஒன்று கலந்தபின்பு ஒரு பெண்ணும் ஆணும் மீண்டும் வெறுமனே நண்பர்களாகப் பழகுவது எப்படி? எங்களது உறவை நட்பு வட்டத்திற்குள் சுருக்க இயலவில்லை. இன்று பொங்கல் விடுமுறை என்பதால் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்த நிலாவுடன் எனது இணையதள உரையாடல் நாள் முழுக்க தொடர்ந்தது. இந்தப் பணிரெண்டு மணிநேர உரையாடல் மேலும் எங்களை நெருங்கி வரச் செய்து இனி மற்றவர்கள் அல்ல நாங்களே விரும்பினாலும் விலகிவிட முடியாது என்கிற நிலைமையை உண்டு பண்ணி விட்டது.

மார்ச்-20

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எங்கள் உறவு உரையாடலில் வளர்ந்து கொண்டிருக்க இன்னொரு வழியில் எனது தாய் தந்தையிடமும் திருமணத்திற்கு அனுமதி வேண்டும் என்று கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தேன். அவர்களும் தங்களது நிலையிலேயே மிகப் பிடிவாதமாக இருந்தனர். எப்பாடுபட்டேனும் எனது வழிக்கு அவர்களைக் கொண்டு வந்துவிடலாம் என்று நானும் நம்பிக்கையுடன் இருந்தேன். ஜøலையில் அமெரிக்காவிலருந்து சென்னை கிளம்பிச் சென்று நிலாவைத் திருமணம் செய்து அழைத்து வருவது எனவும் முடிவு செய்தேன்.

ஜூன்-10

எனது அலுவலகத்தில் ஜூலை மாதத்தில் சென்னை செல்ல எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஓர் ஆண்டு ஆனபின்னரே விடுமுறை தரப்படும் என்ற விதி முறையின்படி செப்டம்பர் 10-ந் தேதிதான் சென்னை கிளம்பமுடியும் என்று நிர்வாகத் தலைமை சொல்லி விட்டது. நிலாவைப் பார்க்காமல் ஒவ்வொரு நாளுமே ஒரு யுகமாக இருப்பதுபோல் தோன்றியது.

செப்டம்பர்-15

சென்னை வந்தும் மூன்று நாட்கள் ஆகி விட்டது. விமான நிலையத்திற்கு அப்பா, அக்கா, மாமா என மூவரும் வந்திருந்து நேரே அக்கா வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். காலை பத்துமணிக்கெல்லாம் நிர்மலாவின் வீட்டிற்குக் கிளம்பி வந்து விட்டேன். ஓராண்டாக எதிர்பார்த்திருந்த பொன்னான தருணமல்லவா இது. நிலாவை நேரில் கண்டு மனம் துள்ளியது. கற்பனை வடிவத்திற்கு முழு உருவம் கிடைத்தது. அன்று மதியம் அங்கேயே உணவு உண்டு முடித்து சாயங்கால வேளையில் எனது பெற்றோரைச் சந்திக்க நிலாவின் அம்மாவையும், தம்பியையும், நிலாவையும் அழைத்துக்கொண்டு எனது அக்காவின் வீட்டிற்குச் சென்றேன். அண்ணன், அண்ணி, அக்கா, மாமா, அப்பா, அம்மா என அனைவரும் அங்கு இருந்தனர். நான் வற்புறுத்தி அழைத்து வந்த நிலாவின் அம்மாவை எனது அம்மா மிகவும் கோபாவேசத்தோடு மரியாதை இல்லாமல் பேசியது என்னை அதிர வைத்தது. அந்த விநாடியே அவர்களோடு நானும் சேர்ந்து நிலாவின் வீட்டிற்கே திரும்பி வந்தோம். முதல் முறையாக எனது நம்பிக்கை தகர்ந்தது. இனி அம்மா அப்பாவை என் விருப்பத்திற்கு இணங்கவைக்க முடியாது என்பதை உணர்ந்தேன். மேலும் விடுமுறைக் காலமும் மிகக்குறைவாகவே இருந்தது. எனவே, முன்னரே திட்டமிட்டபடி திருமணத்தை சென்னையில் செப்டம்பர்-17ல் நடத்துவது என்ற முடிவின்படி செயல்படத் தீர்மானித்தேன்.

அக்டோபர்-31

திருமணம் நல்லபடியாக நடந்தேறியது. நிர்மலா வீட்டில் விருப்பப்பட்டபடியே எவ்விதச் சடங்கு சம்பிரதாயமின்றி ஒரு சுயமரியாதைத் திருமணமாக நடந்து முடிந்தது. எங்களது திருமணநாள் பெரியாரின் பிறந்தநாளும்கூட என்பது நிலா சொன்னபிறகே எனக்குத் தெரிந்தது. மிகவும் நியாயமான ஒரு காரியத்தைச் செய்திருக்கிறோம் என்ற நினைவால் எனக்குக் குற்ற உணர்வு எதுவும் எழவில்லை. காலப்போக்கில் அம்மாவையும் அப்பாவையும் சமாதானப் படுத்திவிட முடியும் என்று இப்போதும் திடமாக நம்புகிறேன். அக்டோபர் 12-ந்தேதி அன்று நிலாவை அழைத்துக் கொண்டு அமெரிக்கா வந்து சேர்ந்த பின்னர் எங்களது தனிக்குடித்தனம் மிகுந்த மகிழ்ச்சியுடனேயே துவங்கியது. கடந்த பதிமூன்று நாட்களும் போனவேகம் தெரியாமல் ஓடி விட்டன. நிலாவோடு சென்ற ஆண்டு இந்த நாளில்தான் முதன் முதலாக அலைபேசியில் பேசினேன். ஆனால் ஓராண்டுக்குள் எத்தனை எத்தனை மாற்றங்கள். எவ்வளவு புரிதல்கள்... வாழ்க்கைச் சுமைகளே பாதியாகக் குறைந்தது போன்ற உணர்வு. அறியாமை குறையக் குறைய வாழ்வு எளிதாகி விடுகிறது என்பது உண்மைதானோ?

ஜனவரி 25, 2005

மணவாழ்வு தொடங்கியும் ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு மேலாகி விட்டது. புதுமணத் தம்பதியராக இருந்தாலும் நாங்கள் பேசிக் கொண்ட விஷயங்களில் சமுதாயம் சம்பந்தப்பட்ட பேச்சுக்களே அதிகமாக இருந்தது. எனது இளவயதின் தேடல்களுக்கு இந்த உரையாடல்கள் விடை தந்தன. கடவுள் வழிபாடு என்பது, ஏழைகளுக்கு எந்தப் பயனையும் தரவில்லையே என்ற மிகப்பெரிய கேள்விக்கும் பதிலைத் தந்தது. மனிதர்களைச் சாதியால் பிரித்துவைத்து, ஏற்றத் தாழ்வை நிரந்தரமாக வைத்திருக்கும் இச்சமூக அமைப்பு பற்றியும் தெரிய வந்தது. இவ்வாறு எங்களின் விவாதம் தினந்தோறும் வளர்ந்ததில் தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் கடவுளை அதிகம் நம்புகிறார்கள் என்பது உறுதியானது.

நிலாவோடு அறிமுகம் ஆன தருணத்தில் எனக்கு, நூற்றுக்கணக்கான பேருக்கு வேலை தரும் முதலாளியாக வாழ்வில் உயர வேண்டும் என்று இருந்த லட்சியம் இப்போது மெல்ல மங்கத் தொடங்கி விட்டது. அதைவிடவும் பரந்து கிடக்கும், தொழிலாளர் உலகின் வாழ்வுச் சுமையினைக் குறைக்கவும், அவர்கள் நிலையினை மேம்படுத்தவும் சிந்தித்து செயல்படுவதே மிக உயரிய பணி என்பது மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. அமெரிக்கா வந்த பின்னர் எனது நண்பர்கள் மத்தியில் நிலாவின் மதிப்பும், மரியாதையும் அதிகரித்து விட்டதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி. டெக்சாஸ் மாகாணத்தில் நாங்கள் இருந்த சான் ஆன்ட்டோனியா நகரின் தமிழ்ச்சங்கத்தில் ஜனவரி 14-ந் தேதி பொங்கல் விழா நிகழ்ச்சி நடந்தது. நிலாவின் வற்புறுத்தலால் நான் அன்று நிகழ்த்திய கலைநிகழ்ச்சிக்கு பெரிதும் வரவேற்பு கிடைத்தது.

ஏப்ரல்-30

நிலாவும் நானும் இங்கு வந்து சேர்ந்து எட்டு மாதங்கள் ஆகி விட்டன. எங்களிருவரின் விவாதங்களும் விரிவடைய ஆரம்பித்ததில் வாரந் தோறும் கோவிலுக்குச் செல்வது என்ற வழக்கம் அடியோடு நின்றுபோனது. கையில் கட்டியிருந்த கறுப்புக் கயிறும் காணாமல் போனது. கழுத்துச் செயினும், கைவிரல் மோதிரமும் அந்நியமாகப் பட்டதில் அவற்றையும் துறந்து விட்டேன். ஏப்ரல்-14, அன்று தமிழ்ச்சங்கத்தில் நானும் நிலாவும் சேர்ந்து தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றோம். கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய ""தமிழா நீ பேசுவது தமிழா'' என்ற தலைப்பிட்ட கவிதையை நிலா உணர்ச்சி பொங்க வாசித்தது, பெருத்த வரவேற்பைப் பெற்றது. ஏப்ரல்-14ந் தேதி கூட தமிழ்ப் புத்தாண்டு அல்ல என்பதையும் காரணங்களோடு நிலா விளக்கியதை கூட்டத்தினர் அனைவரும் வியப்புடன் ரசித்தனர். வெளிநாட்டுத் தமிழர்களாக இருந்த எங்களிடையே தாயகப்பற்று மறைந்து விடவில்லை என்பதுதான் நிகழ்ச்சியின் முடிவில் நாங்கள் அறிந்து கொண்ட உண்மையாக இருந்தது.

செப்டம்பர்-17, 2005

திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவடைந்ததை எளிமையாக வெளியில் சென்று கொண்டாடி மகிழ்ந்தோம். கடந்த ஓராண்டில் எங்களுக்கிடையே ஏற்பட்ட சில சிறு சிறு உரசல்கள் கூட எங்களது ஒருமித்த கருத்துக்களின் வளர்ச்சிக்கு உரமிட்டவை யாகவே இருந்தன. சடங்கு சம்பிரதாயங்களற்ற உண்மை வாழ்வில் இனிமையும் நிறைவும் ஏற்படுவதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். இல்லறத்திலும் பொதுவான விஷயங்களிலும் எங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் ஒற்றுமை, சமூகத் தளத்திலும் இணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com