Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
ஜூலை 2007
வருங்காலம் நமதே!
ஏவியன்

உடலோடு உயிர் உள்ளமட்டும் - துன்பம்
உதைக்கின்ற பந்தாக உருண்டோடும் வாழ்க்கை
கடலோர மணல்வீடு கண்ணே - வரும்
காற்றுக்கும் புயலுக்கும் தாங்காது கண்ணே!

அலைபாயும் பெருவெள்ளம்மீது - காலம்
அநியாயமாய்க் கட்டி கைவிட்ட தோணி
துடுப்பில்லை துணையில்லை கண்ணே - எந்த
தூரத்தில் மூழ்குமோ தெரியாது கண்ணே!

அரும்பாகிக் காயாகி விட்டாய் - இனி
அடுத்தென்றிருப்பதோர் கனிக்காலம் தானே?
கனிக்கும் ஓர் கணக்குண்டு கண்ணே - அந்தக்
காலத்தின் அளவிற்குள் அழிவுண்டு கண்ணே!

இராக்காலம் விதை வைத்த மண்ணில் - ஒரு
ஈரைந்து மாதத்தில் இலைவிட்ட காளான்
இறவாத வாழ்வல்ல கண்ணே - இதில்
இழுத்தாலும் பறித்தாலும் தேறாது கண்ணே!

ஊரென்றும் நாடென்றும் பேசி - நியாய
உணர்வுக்கு ஆள்சேர்த்துப் படைகூட்டிப் பார்த்து
போராடிச் சாகாமல் போனால் - இந்தப்
புலராத வாழ்விலோர் பொருளில்லை கண்ணே!

அடிவானம் வெளுக்காத பூமி - நீ
ஆள் என்று நடமாடும் உன் சொந்த நாடு
இருள்மூடி வழிகின்ற வானில் - ஒரு
இரவேனும் நிலவொன்றை வரச்சொல்லு கண்ணே!

உழைத்தாலும் பிழைப்பில்லை கண்ணே - இங்கு
உயிருக்கு உயிர் என்ற மதிப்பில்லை கண்ணே!
ஊரோடு நீ சேர்ந்து போனால் - இந்த
உடையாத கொடுமைக்கோர் விடிவேது கண்ணே!

நாள் போகப்போக ஓர் நாளில் - உன்
நடைபோடும் கால் ரெண்டும் கிடைசாயும் கண்ணே!
நலிவுற்றுப் போகின்ற மூச்சு - அதை
நாடென்ற மண்ணுக்கு உரமாக்கு கண்ணே!

பசி என்னும் சமுதாய கீதம் - ஒரு
பகவானின் விதியென்னும் அறியாமை வாதம்
உடையட்டும் நடைபோடு கண்ணே - உன்
ஊர் கொண்ட ராஜாங்கம் உனதாக்கு கண்ணே!

சுமைதாங்கி இல்லாத ஊரில் - நீ
சுமக்கின்ற கல்லாக ஊர் பேச வாழு!
இமை மூடிச் சாதற்கு முன்னால் - கூட
இருக்கின்ற மக்கட்கோர் எதிர்காலம் காட்டு!

கூழ்பொங்கிக் கிடக்கின்ற பானை - கோழி
கூவாத நேரத்தே குடல் வாட்டும் ஏழ்மை
குறிப்பாகக் கவனம் வை கண்ணே - இந்தக்
கொடுமைக்கோர் இடம் பார்த்து குழிவெட்டு கண்ணே!

நாதங்கள் மீளாத வீணை - ஒரு
நன்னாங்கு இசைபோடும் அடங்காத பாடல்
காலத்தில் பூக்காத சோலை - உழைத்த
கையிக்குச் சுகம் சேர்த்துத் தாராத தேசம்

சுமையென்று ஆகுமே கண்ணே - அந்தச்
சுடுகின்ற நினைப்பொன்று இதயத்தில் வந்தால்
நெருப்பென்று ஆகுமே கண்ணே - அதில்
நெடுங்கால வறுமைக்குத் தீ மூட்டிக் காட்டு!

வாய்பேசி அறியாத ஏழை - தன்
வயிற்றுக்கும் வாழ்வுக்கும் காலங்கள் தோறும்
வழிகண்டு தேறாதபோது - அவன்
வாழ்கின்ற வாழ்விலோர் அழகேது கண்ணே?

புதுவெள்ளப் புறப்பாடு போலே - ஒரு
புதுக்கொள்கை தோளேந்திப் போராடு கண்ணே!
வாழ்வின்றிப் போனோரின் முன்னால் - நாளை
வருங்காலம் நமதென்று தெம்பூட்டு கண்ணே!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com