Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
பிப்ரவரி 2008
உலகின் சர்க்கரைக் கிண்ணம் - அது மனிதகுலத் தேன்கிண்ணம்
நிர்மலா

மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை, எல்லோருக்கும் வீடு, ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமஉரிமைகள், ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் காப்பகங்களுடன் பள்ளி, ஒவ்வொரு மாணவருக்கும் ஒன்பதாம் வகுப்புவரை இலவசக் கல்வி, அதுவும் தாய்மொழிக் கல்வி, வீடு தேடிவரும் வைத்திய உதவி, முதியோரின் பாதுகாப்பான வாழ்வுக்கு உத்தரவாதம் - இவையெல்லாம் கொண்டதாக உலகில் ஒரு நாடு இருக்குமா? கனவு காணும் இப்படி ஒரு நாட்டை நடைமுறையில் பார்க்க முடியுô? முடியும் என்கிறது ‘கியூபா’ என்னும் சின்னஞ்சிறிய தீவு.

fidelcastro உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் என்றழைக்கப்படும் ஒரு கோடியே, பத்துலட்சம் என மக்கள்தொகையினைக் கொண்டிருக்கும் கியூபாவிற்கு இது எப்படிச் சாத்தியமாயிற்று? ஒரு லட்சத்துப் பதினோராயிரம் ச.கி.மீட்டர் பரப்பளவு கொண்டதான இச்சிறுநாடு மனிதகுலத்தின் கனவுகளை நனவாக மாற்றி, இந்த அதிசயத்தை நிகழ்த்தியதெப்படி?

இவற்றிற்கெல்லாம் காரணம் கியூப மக்களின் உறுதியான ஒற்றுமை, உழைப்பு, தியாகம், அர்ப்பணிப்பு, நாட்டுப்பற்று இவையனைத்திற்கும் மேலாக தொலைநோக்குப் பார்வையோடு, சீரிய பாதையினைத் தெள்ளத்தெளிவாக அறிந்து சிறப்பாக வழிகாட்டும் நல்லதொரு தலைமை. இவை போன்ற காரணங்களினாலேயே கியூபா என்றொரு சோசலிச நாடு மனிதகுலத்தின் மாதிரி தேசமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சோசலிசத் தீவின் அந்தப் புரட்சிகரத் தலைமை எது? அந்தத் தலைவர் யார்...? அவர்தான் கியூபாவின் ஒளிவிளக்காம் பிடல் காஸ்ட்ரோ. அமெரிக்காவிலிருந்து 150 கி.மீ. தொலைவே உள்ள கியூபாவின் தேசிய விடுதலை வீரர்; மக்கள் புரட்சியாளர்; அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் வெல்லப்படவே முடியாத மாபெரும் வெற்றிவீரர்.

கியூப மக்களால் ‘சே' என்று அன்புடன் அழைக்கப்பட்ட ‘புரட்சியின் மூச்சு' சேகுவேராவின் ஒப்பற்ற தோழர். கியூப அதிபராம் பிடலின் தலைமையில் சோசலிசத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது இந்தச் சின்னஞ்சிறிய நாடு.

அந்நாட்டின் ஈடிணையற்ற இத்தலைவரை அறுபத்து நான்குமுறை, பல்வேறு வழிகளிலும் கொல்ல முயன்ற வல்லாதிக்க அமெரிக்கா, அதில் பெருத்த தோல்வி கண்ட வெறியோடு, அந்தச் சிறிய தீவை உலக வரைபடத்திலிருந்தே அழித்துவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன், நாற்பதாண்டுகளுக்கும் மேலாக கியூபாவின்மீது பொருளாதாரத் தடையை நீட்டித்துக் கொண்டு வருகிறது.

‘ஒற்றுமையே எங்களின் மூச்சு' என்கிற மக்களின் முழக்கமும், ‘சோசலிச நாடு இல்லையேல் மரணத்தை நாடு' என்கிற பிடலின் புரட்சிகர முழக்கமும் இணைந்து கியூபாவைக் கட்டமைத்துக் கொண்டிருப்பதால், அமெரிக்காவின் கனவு ஒருபோதும் ஈடேறப் போவதில்லை. அனைத்து நாடுகளிடமும் சட்டாம்பிள்ளைத் தனத்துடன் நடந்துகொள்ளும் அமெரிக்காவை எதிர்த்து உலக நாடுகளில் போராட்டங்கள் நடைபெறுவது போலவே, உலகின் சனநாயக சக்திகள் அனைத்துமே கியூபாவை வலுவாக ஆதரிக்கவே செய்கின்றன.

அய்.நா. சபையின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டபோது அமெரிக்காவின் கடும் எதிர்ப்பிற்கிடையே ஏழு நிமிட உரையை நிகழ்த்தினார் பிடல். அமெரிக்க மண்ணிலேயே நின்றுகொண்டு, அமெரிக்காவின் உலகமயப் பொருளாதாரக் கொள்கையை ‘ஓசையில்லாத அணுகுண்டு’ எனச் சரியானபடி கணித்து, கர்ச்சனை செய்தார் காஸ்ட்ரோ. அந்த உண்மையை இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மக்கள் இன்று அனுபவத்தால் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கியூபாவின் இறையாண்மைக்குப் பக்கபலமாக தோள் கொடுத்து உதவியது அன்றைய சோவியத் யூனியனே. 1991ல் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்பு கியூபா காணாமல் போய்விடும் என்ற அமெரிக்காவின் கனவை அம்மக்களின் மகத்தான ஒற்றுமை சிதறடித்தது. அதன்பின் பதினேழு ஆண்டுகள் கழித்தும் புரட்சிகரக் கியூபா தலைநிமிர்ந்து நிற்கிறது.

ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் ஸ்பெயினின் காலனி நாடாக இருந்த கியூபா 1903ம் ஆண்டு ஸ்பெயின்-அமெரிக்க ஒப்பந்தப்படி அமெரிக்க ஆட்சியின்கீழ் வந்தது. ஆனால் 1868ம் ஆண்டிலேயே கியூபாவின் விடுதலைக்கான முதல் போர் தொடங்கி இருந்தது. கியூபப் புரட்சியின் முன்னோடியாக விளங்கியவர் புரட்சிகரச் சிந்தனையாளரும், விடுதலைப் போராளியுமான ஹொúஸ மார்த்தி என்பவர். அவரது புரட்சிகரச் சிந்தனைகளின் அடியொற்றியே சோசலிசக் கியூபா உருவானது எனில் அது மிகையன்று.

புரட்சியின் முன்னோடியான மார்த்திக்கு அடுத்தபடியாக கியூப மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த மற்றொருவர் புரட்சியாளர் சேகுவேரா. காஸ்ட்ரோவோடு கைகோர்த்து நின்று கியூபாவை விடுவித்த இணையற்ற மாவீரர். ஏனைய அமெரிக்க லத்தீன் நாடுகளின் விடுதலைப் போராட்டங்களுக்கும் முன்னணியில் நின்றவர்.

பொலிவியாவை விடுதலை செய்யும் நோக்கில் மேற்கொண்ட கொரில்லாப் போர் நடவடிக்கையின் போது இவர் அமெரிக்க ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார். பின்னர் அந்த ராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமான சித்திவதைக் குட்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ‘அர்னெஸ்டோ குவேரா' என்ற இவரது பெயர் கியூப மக்களால் சேகுவேரா என்று மாற்றம் பெற்றது. ‘சே' என்றால் அன்பு.

காஸ்ட்ரோ, சேகுவேரா மற்றும் எண்பது புரட்சிகர வீரர்கள் கொண்ட கொரில்லாப் படை 1953ல் மான்கடா எனும் படைத்தளத் தாக்குதலில் ஈடுபட்டது. அவர்களில் எழுபது பேர் கொல்லப்பட்டனர். பன்னிருவர் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப்பட்ட பிடல், விசாரணையின்போது நீதிமன்றத்தில், கியூப மக்களின் எதிரிகளை அம்பலப்படுத்தி வீர உரை நிகழ்த்தினார்.

‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்னும் அந்த வீரமுழக்கம் கியூபாவின் தலைவிதியை மாற்றியது. சிதறிக்கிடந்த புரட்சிகர சக்திகள் ஒன்றிணையவும், புரட்சிகரப் போராட்டத்தில் பங்குபெற வேண்டியதன் தேவையினை மக்களிடத்திலும் உண்டாக்கிய மாபெரும் எழுச்சி உரையாக அது அமைந்தது.

அம்மக்களின் ஒன்றிணைந்த எதிர்ப்பினால் பிடலும், சேவும் விடுதலை செய்யப்பட்டனர். மக்களின் துணையோடு நடந்த அவ்விருவரின் தொடர்ச்சியான போர் நடவடிக்கைகளில் 1959ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி கியூபா விடுதலை பெற்றது. 1960ல் அன்றைய வல்லரசான சோவியத் யூனியனுடன் கியூபா ஒப்பந்தம் செய்துகொண்டு புரட்சிகரக் கியூபாவைப் புனரமைக்க ஆரம்பித்தது. அவ்வப்போது அமெரிக்கா தொடுத்த போர் நெருக்கடிகள் சோவியத்தின் துணையோடு முறியடிக்கப்பட்டன.

புரட்சி நடந்துமுடிந்து ஓராண்டிற்குள்ளாகவே அரசு அறிவித்த ‘அனைவருக்கும் கல்வி’' என்ற முழக்கம் குறிப்பிட்ட இலக்கினை எட்டிப் பிடித்தது. புரட்சிக்குமுன் கியூபாவின் எழுத்தறிவு 23.6 விழுக்காடு மட்டுமே. இன்றைய நாளில் அந்நாட்டில் படித்தவரின் எண்ணிக்கை 98.2 என்ற நிலையினை அடைந்திருக்கிறது. 47 பல்கலைக்கழகங்களும், 12,500 பள்ளிகளும் இருக்கின்றன. பலநாடுகளிலிருந்தும் அங்கு சென்றிருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கியூபா இலவசக் கல்வி அளித்து வருகிறது.

புரட்சிக்குமுன் மக்களின் சராசரி வயது 55 என்றிருந்தது. இந்நாளில் 75 ஆக உயர்ந்திருக்கிறது. இருநூறு பேருக்கு ஒரு மருத்துவர். எல்லோருக்கும் இலவச மருத்துவம். குழந்தை மரணங்களே இல்லையெனும் உலகச்சாதனை. தனது நாட்டு மக்களின் நலனை மட்டும் கருதாது உலகின் பல்வேறு நாடுகளிலும் கியூப மருத்துவர்கள் மனிதநேய மருத்துவச் சேவையினைச் செய்து கொண்டிருக்கிறார்கள். 2004ல் நிகழ்ந்த ஆழிப்பேரலைச் சீற்றத்தின்போது நூற்றுக்கணக்கான கியூப மருத்துவர்கள் இந்தோனேசியாவிலிருந்து முகாமிட்டு மாபெரும் மருத்துவச் சேவையினை வழங்கினர்.

நாட்டில் உள்ள முதியோரின் பாதுகாப்பிற்கும், வளமான மகிழ்ச்சி நிறைந்த வாழ்விற்கும் பல முன்னேற்பாடுகளை அரசே செய்து தருகிறது. முதியோர் இல்லங்கள் அரசின் மேற்பார்வையில் செயல்படுகின்றன. விளையாட்டுத் துறையிலும் சின்னஞ்சிறிய கியூபா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்களைக் குவித்து முன்னணியில் நிற்பது ஞாலம் அறிந்த உண்மை. புரட்சிக்கு முன்பாக ஒரே ஒரு பதக்கம் கூட கியூபா பெற்றதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உலகின் சர்க்கரைக் கிண்ணம் என்று பெயரெடுத்த கியூபா, அமெரிக்கா நடத்திய ஓயாத இரசாயப் போர்முறைகளின் காரணமாக உயிர்காக்கும் மருந்துகள் பலவற்றைக் கண்டுபிடித்தது. உயிரியல் விஞ்ஞானத்தின் மூலம் புதிய புரட்சியொன்றை கியூபா நிகழ்த்த ஆரம்பித்திருக்கிறது.

அங்குள்ள விஞ்ஞானிகளின் அற்புதக் கண்டுபிடிப்பில் சர்க்கரை பன்மடங்கு இனிப்பானது ; பழமரங்கள் நான்கு மடங்கில் கனிகளைத் தந்தன ; கடலில் மீன்வளம் இரட்டிப்பாகப் பெருகியது. உலகின் சர்க்கரைக் கிண்ணமான கியூபா இனி ‘உயிரியல் அறிவியலின் தொட்டில் என்று அழைக்கப்படும் நாளும் வெகுதொலைவில் இல்லை.

கியூபா 1959ல் விடுதலை பெற்றபோதும் 1976ம் ஆண்டுதான் பொதுவுடைமை சோசலிச அரசாக உருவெடுத்தது. அந்த ஆண்டில்தான் கியூப மக்களால் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்படட அரசியல் சாசன அட்டவணை நடைமுறைக்கு வந்தது. அந்நாட்டில் உள்ள மொத்த மாகாணங்கள் பதினான்கு. நாடாளுமன்றத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை தேர்தல் நடைபெறும்.

ஒரு வேட்பாளர் 25 டாலர் கூட செலவழிக்கத் தேவையில்லை. அந்தந்தப் பகுதி மக்களே வேட்பாளர்களையும் தேர்ந்தெடுப்பர். ஆனால் மக்களாட்சி நடைபெறுவதாகச் சொல்லப்படும் அமெரிக்காவில் ஒரு வேட்பாளரின் தேர்தல் செலவு 3 கோடி டாலர். அவர் வெற்றிக்குப் பின்பு ‘‘தன்னைக் கவனிப்பாரா...'' அல்லது நாட்டைக் கவனிப்பாரா...?

கியூபாவில் மக்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர் சரியில்லை என்று அம்மக்களே கருதும் நிலையில் அவரைத் திரும்ப அழைத்துக்கொள்ளும் உரிமை வாக்காளருக்கு உண்டு. பதினாறு வயதிற்கு மேற்பட்ட அனைவருமே வாக்களிக்கலாம். ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்த மக்களின் எண்ணிக்கை 90 விழுக்காட்டுக்கும் கூடுதலாகவே இருக்கிறது. இதிலிருந்தே கியூப அரசு மக்களுக்கான அரசு என்பது செவ்வனே விளங்கும்.

புரட்சிகரக் கியூபாவின் குறிப்பிடத்தகுந்த அம்சம் ‘புரட்சிக்குள் புரட்சி' எனும் ஆண்-பெண் சமத்துவம் என்பதே. சமையல் உட்பட வீட்டு வேலைகள் அனைத்தையும் காலையில் கணவன் கவனித்துக் கொள்ள, மாலையில் வேலைமுடித்து நேரத்துடன் வீடு திரும்பும் மனைவி இரவுநேரச் சமையலையும் வீட்டு நிர்வாகத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டியது. இவ்வாறு பாலினச் சமன்நிலை அங்கு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

ஆணுக்குச் சமமாகப் பெண்களும் நாட்டின் வளர்ச்சியில் தங்களது பங்களிப்பினைச் செலுத்துகின்றனர். கியூப விஞ்ஞானிகளில் பெண்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஒவ்வொரு துறையிலும் தமது சிந்தனைகளின் முத்திரையினைப் பதித்துள்ளனர். பெரும்பாலான நிறுவனங்களில் பெண்களே நிர்வாகப் பொறுப்பினை ஏற்று நடத்துபவர்களாக உள்ளனர்.

அனைத்திலும் மிகவும் முக்கியமானது பெண்கள் தங்களது உடலின் மீது உரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். கருக்கலைப்பு என்பது பெண்ணின் உரிமை. திருமண வயதை முடிவு செய்வது, கணவனைத் தேர்ந்தெடுப்பது, குழந்தை பெற்றுக் கொள்வது, குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கான கால இடைவெளி போன்ற அனைத்தையும் தீர்மானிப்பது பெண்களே. மணத்திற்குமுன் பிறந்த குழந்தை, மணமானபின் பிறந்த குழந்தை என்றெல்லாம் புரட்சிகர அரசு எவ்விதப் பாகுபாடும் காட்டுவதில்லை.

பெண்களுக்கு இவ்வாறு சமநிலை கிடைக்கக் காரணம் கல்வித்துறையின் மாற்றமும்-முன்னேற்றமுமே. கல்வியின் தொடக்கநிலையிலிருந்தே பெண்களின் பங்கு சமமாக இருக்கும்படியும், பின்னர் வேலைக்கான வாய்ப்புகளில் எவ்வித வேற்றுமையையும் காட்டாமல் ஆண்களுக்கு இணையாகப் பெண்களின் விகிதமும் இருக்குமாறு அரசு கண்காணிக்கிறது.

கியூபாவில் மக்கட்தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களில் ஆசிரியர்களாகவும் அதிகாரிகளாகவும் 70% உள்ளனர். மருத்துவர்கள், உதவியாளர்களாக 72%, தொழிற்கல்வி படித்தோர் 62% எனும் அளவில் இருக்கின்றனர். பட்டதாரிகளின் எண்ணிக்கையில் ஆண்களை விடப் பெண்களே அதிகம்.

கியூபா, காஸ்ட்ரோ, சேகுவேரா என்பதெல்லாம் வெறும் பெயர்கள் அல்ல - அவையெல்லாம் புரட்சியின் வடிவங்கள் என்று வல்லாதிக்க அமெரிக்காவே உணர்ந்திருக்கிறது. இந்நிலையில், இலட்சிய உலகான கியூபாவில் நிகழ்ந்திருக்கும் புரட்சி எனும் பெருநெருப்பின் வெளிச்சத்தில்தான், தமது விடியலையும் காணவேண்டும் என்பது உரிமைக்குரல் எழுப்பும் சக்திகளுக்குத் தெரியாமல் போக வழியே இல்லை.

குறிப்பு:- இக்கட்டுரையாக்கத்திற்குப் பெரிதும் துணைபுரிந்த நூல்: ‘கியூபா''-பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு.

உலகின் சர்க்கரை உற்பத்தியில் தற்போது பிரேசில் முதலிடத்திலும் இந்தியா இரண்டாமிடத்திலும் உள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com