Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
பிப்ரவரி 2008
அருமைத்தோழர் நாத்திக நந்தனார் மறைந்தார்

‘சாதி மதமற்ற தமிழன்’ எனத் தம்மைப்பற்றி அறிவித்ததோடு வாழ்நாளெல்லாம் அதனை வழுவாது கடைப்பிடித்து வந்த அருமைத்தோழர் ச.நாத்திக நந்தனார் நவம்பர் மாதம் பத்தொன்பதாம் தேதி (19.11.2007) காலை ஒன்பது மணியளவில் இயற்கை எய்தினார். அறுபத்தொரு வயதில் நிகழ்ந்த இந்த அகால மரணம் நம்மை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. சில நோய்களினால் அவர் இன்னல்பட்டு வந்த போதும் முறையான உடற்பயிற்சியினையும், தவறாது மருத்துகள் உட்கொள்வதையும் அவர் நீண்ட காலமாக வழக்கத்தில் வைத்திருந்தார். இத்தகைய நிலையில் அவரின் இறப்பு எதிர்பாராத ஒன்றாகவே நிகழ்ந்து விட்டது.

nandanar புதிய பெண்ணியம் சென்ற நவம்பர் இதழ் 15ந் தேதிவாக்கில் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எனவே 17ந் தேதி மாலையில் இருந்தே அவரது தொலைபேசியினை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஏனெனில் இதழ் கிடைத்ததும் வரும் முதல் தொலைபேசி அழைப்பு அவருடையதாகவே இருக்கும். அநேகமாக இதழுக்கு முதல் கடிதமும் அவரிடமிருந்து வருவதுதான் வழக்கமாகவும் இருந்தது. 17 போயிற்று, 18ந் தேதியும் நகர்ந்தது. 19ந் தேதி திங்கட்கிழமை காலை நாமே தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டியதுதான் என முடிவுசெய்து பத்து மணி ஆவதற்காக ஆவலுடன் காத்திருந்த போதுதான் இடிபோன்று செய்தி வந்து இறங்கியது. தோழர் நாத்திக நந்தனார் நம்மைவிட்டு மறைந்து விட்டார் என்ற தொலைபேசித் தகவல் அவரது வீட்டிலிருந்து வந்து நம்மை அதிர்வுக்குள்ளாக்கியது.

சாதி, மத ஒழிப்பையும், தமிழ்த் தேசிய வளர்ச்சி யினையும் இரு கண்களாகக் கொண்டிருந்த கொள்கைக் குன்றான நாத்திக நந்தனார் தமது இறப்பிற்குப் பின்னும், அந்தக் கொள்கைகள் இறந்துவிடக் கூடாது என்று கருதியோ என்னவோ இரு கண்களையும் தானமாகத் தந்து விட்டுச் சென்றிருக்கிறார். இறப்பிற்குப் பின் தமது உடலும் வீணாகி விடக்கூடாது என்ற பெருநோக்கில் மருத்துவ ஆய்வுக்குத் தன் உடலைத் தந்து சென்ற மாவள்ளல் அவர்.

உயிருடன் இருந்த காலத்தில் முற்போக்குச் சிற்றிதழ்களைத் தாங்கிப் பிடிப்பதே தமது தலையாய பணி என்பதில் சிறிதளவும் முரண்பாடு கொள்ளாமலிருந்தவர். அத்தகைய இதழ்கள் தொடர்ந்து வெளிவர பொருளாதார உதவியினைத் தந்து, இதழ் வளர்ச்சிக்கான கருத்துக்களைக் கடிதமாக அனுப்பி பணரீதியிலும், மனரீதியிலும் விடாப்பிடியான உழைப்பினை தன்னலம் கருதாது, உடல்நலம் குன்றியபோதும், ஓய்வில்லாது வழங்கிய கொள்கைச் சித்தர் அவர்.

தமிழகத்தின் முற்போக்குச் சிற்றிதழ்கள் அனைத்தையும் வாங்கி விரும்பிப் படித்து வந்தார் என்பதோடு, சமூகப் பொறுப்புமிக்க நூல்களை நூற்றுக் கணக்கில் சேமித்து வைத்து, பொதுநலம் கருதி, நூலகம் ஒன்றினையும் சிலகாலத்திற்கு அவர் இருந்த பகுதியில் நடத்தி வந்தார். உடல்நலக் குறைவின் காரணமாக நூலகத்தைத் தொடர்ந்து நடத்திட இயலாத நிலையில் அந்த நூல்களையெல்லாம் தமது தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்தளித்தார். அந்த நாட்களில்தான், நாமும் 1998 மார்ச் மாதத்தில் அவர் வசித்த ஓட்டேரி பகுதியில் குடியமர்ந்தோம்.

பெரியாரியப் பார்வையில் நாமும் அவரும் ஒன்றுபட சில சந்திப்புகள், கருத்து பரிமாற்றங்கள் அவ்வப்போது நடந்தேறும். அப்போது அவரது நூலகத்தில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களில் மற்றவர்க்குத் கொடுத்தது போக ஒரு நூறு நூல்கள் மிஞ்சி இருந்தன. அதில் தரமான சிலவற்றைத் தேர்வு செய்து இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை ஒரு நண்பர் மூலம் நமக்குக் கொடுத்தனுப்பினார் தோழர் நாத்திக நந்தனார்.

அவர் நம்மிடம் பேசிய இறுதித் தொலைபேசிப் பேச்சில் குறிப்பிட்ட செய்தி இது. அவரது உறவுக்காரப் பெண் மும்பையில் நன்கு படித்து ஒரு நல்ல பணியிl இருப்பதாகவும், அப்பெண்ணிடம் புதிய பெண்ணியம் இதழ் பற்றிய விவரங்களைச் சொல்லியதோடு அல்லாமல் அங்கிருக்கும் தமிழ்ப் பெண்களிடமும் இதழ் பற்றிச் சொல்லி ஆண்டுக் கட்டணம் வாங்கி அனுப்புமாறு சொல்லி இருப்பதாகவும் நம்மிடம் கூறினார். கூடவே ஜூலை பெண்ணியம் இதழில் நாட்குறிப்பு கதை எழுதிய தோழர் இளையராஜா அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியவுடன் எனக்குத் தகவல் தெரிவியுங்கள். எப்பாடுபட்டேனும் நானே நேரில்வந்து அவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லியே தீருவேன் என்றும் உறுதிபடச் சொல்லி இருந்தார்.

உங்களது நலம்குன்றிய உடல்நிலையில் நீங்கள் எதற்காக வரவேண்டும். அவரே நிர்மலாவுடன் வந்து உங்களைச் சந்திப்பார் என்று நாம் பலமுறை கூறியபோதும் அவர் அதை ஏற்கவே இல்லை. முற்போக்குச் சிந்தனைகளின் மீதுள்ள அவரின் ஈடுபாட்டையும், சமூகம் சார்ந்த அக்கறையினையும் அளப்பதற்கான அளவுகோல் நம்மிடம் இல்லவே இல்லை என்பதுதான் உண்மைநிலை.

தம்மோடு தான் பின்பற்றிய கொள்கைகள் மடிந்துவிடக் கூடாது என்ற உயரிய சிந்தனையில் தம் ஒட்டுமொத்தக் குடும்பத்தினரையும் கொள்கை வழிப்பட்ட வாழ்க்கையினை மேற்கொள்ளச் செய்தவர் அவர். அவரின் வாரிசுகளாக உயர்ந்து நிற்கும் மகன் நாத்திகச் செல்வன், மருமகன் வீரமணி, மகள் நாத்திகச்செல்வி மற்றும் துணைவியார் வெற்றிச் செல்வி என்று அனைவருமே கொள்கைப் பற்றாளர்களே. நாத்திக நந்தனார் விட்டுச் சென்ற பணிகளைச் சீரியமுறையில் இவர்கள் தொடர்ந்து நடத்திடுவர் என்பதில் நமக்கு ஐயம் எதுவுமில்லை.

அவர் தானமாக அளித்துச் சென்றிருக்கும் கண்ணின் மணிகள் தமிழ்ச் சமூகத்தின் செயல்பாடுகளை எங்கிருந்தோ கண்காணித்துக் கொண்டிருக்கும் என்பதையும் நாமறிவோம். அந்த விழிகளின் ஒளி மங்கி மறைவதற்குள் அவர் உயர்த்திப் பிடித்த கொள்கைகளை செயற்படுத்திட அயராது போராடுவோம்! சாதிமதமற்ற தோழரின் கனவு நனவாகட்டும்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com