Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
பிப்ரவரி 2008
கனவான நனவு
நா.நளினிதேவி

காட்சி-1

இடம் : அழகு நாச்சியார் இல்லம்
உறுப்பினர்கள் : அழகு நாச்சியார், கோயில்காரர், ஊர்ப்பெரியவர் இருவர்.

அ.நா. : வாருங்கள் ஐயா, வாருங்கள்! அமருங்கள் ஐயன்மீர்!

ஊ.பெ. : இருக்கட்டும். குழந்தையும், நீயும் நலம்தானே?

அ.நா. : உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தால் நல்ல வளமே ஐயா! ஆனாலும், குழந்தைதான் சற்று....

கோ.கா. : அதெல்லாம் சரியாகி விடும்! உன் பேர் சொல்ல வந்த குழந்தை!

ஊ.பெ. : ஆமாம்! ஆமாம்! பெண்குழந்தை அதுவும் சர்வ லட்சணங்களும் பொருந்தி ஆகா! என்ன அழகு!

கோ.கா. : ஆம் ஐயா! பிரம்மா நிறைய நாட்கள் சிந்தித்து முயற்சி செய்து படைத்திருப்பான் போலும். ஸ்ரீமதி நாராயணியே தான்.

ஊ.கா. : நாராயணன் கோயிலுக்கு உரிமையாகப் போகும் குழந்தை அன்றோ?

(உரையாடலை வளர்க்க விரும்பாதவளாய்) அழகு நாச்சியா : ஐயன்மீர்! தாக சாந்திக்கு ஏதேனும் கொண்டு வருகின்றேன்.

கோ.கா. : வேண்டாம்! வேண்டாம்! வரும்போதுதான் தாகசாந்தி செய்துவிட்டு வந்தோம். வீடு வழியாகச் செல்லும்போது நினைவு வந்தது. வந்தது வந்தோம். சொல்லிவிட்டுப் போவோம் என உள்ளே வந்தோம்.

ஊ.கா. : அதுவும் நல்லதுதான்! மீண்டும் ஒருமுறை இதற்காக வரவேண்டாம் அல்லவா. சொல்லிவிடுங்கள் குருக்களே!

அ.நா. : என்னிடம் சொல்ல வேண்டுமா? என்ன சொல்ல வேண்டும்?

கோ.கா. : வடக்கே இருந்து ராஜ பரம்பரையைச் சேர்ந்த ஒரு பெரும்செல்வர். நம் ஊர்க்கோயிலின் சிறப்புக்களை அறிந்து வைகுண்ட நாயகன் ரங்கநாதனை வழிபட வருகின்றார். கோயில் திருப்பணிக்குத் தம்மாலான பொன்னும் பொருளும் தருவார் என எதிர்பார்க்கின்றோம்.

அ.நா. : இதை என்னிடம் சொல்ல நான் என்ன அவ்வளவு பெரியவளா? வரட்டும், பெருமாளைக் கண்குளிரச் சேவித்து அவனருள் பெறட்டும். அள்ளி அள்ளி அவனுக்கு வழங்கட்டும்.

கோ.கா. : (எரிச்சலுடன்) ஒன்றுமே தெரியாத மழலை போலப் பேசாதே, நம் ஊர்க்கோயிலின் சிறப்பே, நீயும், உன் ஆடலும்தான் என்பதை அறியாயோ?

அ.நா. : (சினத்தை அடக்கிக்கொண்டு) ஐயன்மீர்! இப்போதுள்ள என் உடல்நிலையில், வருகின்றவரை வரவேற்கவோ, அவருக்காக நாட்டியமாடவோ இயலாது. மன்னித்தருளுங்கள்.
(குழந்தை அழும் ஒலி கேட்கிறது)
குழந்தை அழுகின்றது. அதற்குப் பசியாற்ற வேண்டும் ஐயனே!

ஊ.கா. : கோயிலுக்கென்று ஆட்ப்பட்ட பிறகு, கோயில்காரர்கள் சொல்லுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பது பெருந்தவறு அம்மணி!

கோ.கா. : அதுதானே! பெருந்தவறு மட்டுமன்று. தெய்வக்குற்றமும் ஆகும்! எல்லாம்வல்ல அவனுக்குச் செய்யும் துரோகமுமாகும். அவனை மணந்தபின்பு, அவன் சன்னதியில் ஆடமறுப்பது எந்த வகையில் நியாயம்! ஊர் ஒழுங்கு என்று எதுவும் இல்லையா?

இருவரும் : நன்றாகச் சிந்தித்து முடிவு சொல்லவேண்டும். வடநாட்டு ஜமீன் வரும் நாள் தெரிந்தபின்பு சொல்லி அனுப்புவோம். இல்லையெனில், அவரையே உன் இல்லத்துக்கு அழைத்துவந்து நேரடியாகப் பேசிக்கொள்ள ஏற்பாடு செய்வோம். எதையாவது இல்லாத காரணம் சொல்லி மறுத்தல் கூடாது. (பொங்கிவரும் சினத்தை அடக்கிக்கொண்டு வெளியே வருகின்றனர்).

காட்சி-2

இடம் : விஷ்ணு சித்தர் இல்லம்
உறுப்பினர்கள் : விஷ்ணு சித்தர், அழகு நாச்சியார்.

அ.நா. : ஐயா! ஐயா!

வி.சி.: யாரது! உள்ளே வாருங்கள்! கைவேலையாக இருக்கின்றேன். ஓ! அழகுநாச்சியா? பிஞ்சுக்குழந்தையை ஏனம்மா இந்த சுட்டெரிக்கும் வெயிலில் தூக்கிக்கொண்டு வந்துள்ளாய்!

அ.நா. : (குழந்தையை அவரின் காலடியில் கிடத்தி) குழந்தைக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் ஐயனே!

வி.சி. : (பதறியவராய்) நாராயண! நாராயண! என்னம்மா இது? குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா? தெய்வத்தைக் காலடியில் கிடத்தலாமோ? குழந்தையைத் தூக்கி உச்சி முகர்கின்றார். (குழந்தை அவரைப் பார்த்துச் சிரிக்கின்றது) கோடானுகோடிச் செல்வம் தராத இன்பம் குழந்தையின் சிரிப்பில் உள்ளது என்பது எவ்வளவு உண்மை! அடடே! ஏனம்மா கண் கலங்குகிறாய்? குழந்தை தன் தாயை அப்படியே உரித்து வைத்துள்ளது, அவள் கைகளில் நீயும் இப்படித்தான் சிரிப்பாய்! இப்போது உன் கையில் ஒரு குழந்தை. உன் தாயே மீண்டும் பிறந்திருக்கலாம் (பெருமூச்செரிகின்றார்)

அ.நா. : தாயின் அரவணைப்பு எனக்கு கிடைத்தது போன்று, இக்குழந்தைக்குக் கிடைக்குமா? நோயில் நொந்து வீழ்ந்து கிடந்தபோதும் என்னைத் தன் கண்ணுக்குள் வைத்துப் பேணினாள்! ஆனால் நான்?

வி.சி. : என்னம்மா! என்னென்னவோ சொல்கின்றாய்! உனக்கு என்ன ஆனது? ஏன் இங்ஙனம் கண்ணீரில் மிதக்கின்றாய்? என்ன நடந்தது? என்னிடம் ஏன் தயக்கம்? சொல்லம்மா!

அ.நா. : எது நடக்குமோ அது நடந்தது, ஆம்! கோயில்காரரும், ஊர்ப்பெரியவரும் எனது இல்லம் வந்தார்கள் ஐயா...

வி.சி. : குழந்தையைப் பார்க்க வந்தார்களா?

அ.நா. : அப்படியென்று சொன்னார்கள். ஆனால் நோக்கம் அதுவன்று. வடக்கே இருந்து ஒரு ஜமீன் வரப்போகின்றாராம். அவருக்கு விருந்தளித்து நான் நாட்டிமாட வேண்டுமாம்.

வி.சி. : போதும் பாவாய்! புரிகின்றது! புரிகின்றது!

அ.நா. : என்னால் இப்போதைய உடல்நிலையில் ஆடவும், பாடவும், விருந்தோம்பவும் இயலாது. தவிர இந்த வாழ்க்கை எனக்கு அலுத்துவிட்டது. அன்னையைப்போல் நோயில் வீழ்ந்து விடுவேனோ என்றும் அச்சம்!

வி.சி. : அவன் விதித்த விதி! யாரால் மீற முடியும்! உன் அன்னையும் நானும் இளவயதுத் தோழர்கள். வாழ்க்கையிலும் இணைய விரும்பினோம். ஆனால்! (கண்கள் பனிக்க, தூசு விழுந்ததுபோல் துடைத்துக் கொள்கிறார்) பொட்டுக்கட்டும் குடும்பத்தில் பிறந்த பெண், ஒருவனுக்கு மட்டும் மனைவியாக முடியாது என்று மறுத்துவிட்டார்கள். வேறுவேறு திசைகளில் சென்று விட்டோம்! எல்லாம் காலத்தின் கோலம்.

அ.நா. : அன்னை, இறுதிக்காலத்தில் எல்லாவற்றையும் கூறினார். என்னையும் இந்த வாழ்க்கையிலிருந்து காப்பாற்ற இயலவில்லை என்று கவன்றார். ஐயனே! என்னைவிட மாட்டார்கள்; குழந்தையையும் குலத்தொழில் பழக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவர். சமுதாய நீதி, இறைக்குற்றம் என்றெல்லாம் கூறுவர். மீறமுடியாது. நறுமணப் பொருட்களால் இளமையில் மிதக்கும் இந்த உடல் வயதானபின்பு அழுகிச் சாவதை நான் விரும்பவில்லை.

வி.சி. : என்ன சொல்ல வருகின்றாய் குழந்தாய்! ஊரைப் பகைத்து உயிர் வாழ முடியுமா?

அ.நா. : வீட்டில் வேறு யாரும் இல்லையே?

வி.சி. : யாரும் இல்லை! அதனால்தான் கைவேலையில் இருந்த நான் உன்னை வாசலில் வந்து வரவேற்கவில்லை!

அ.நா. : தாங்கள் என் தந்தை போன்றவர். நீங்கள் வந்து இளையவள் என்னை வரவேற்க வேண்டுமா? நேரம் கடக்கின்றது. குழந்தையை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு நான் சேத்திராடனம் செல்கின்றேன். எங்களைப்போல் இன்றி இக்குழந்தைக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டுமென்றால் உள்ளத்தைக் கல்லாக்கிக்கொண்டு உயிரற்ற கட்டையாய் உருமாறத்தான் வேண்டும். பெண் குழந்தையாய்ப் பிறந்த அன்றே இவ்வாறு முடிவுசெய்து விட்டேன்.

வி.சி. : (பதறியவராய்) என்னம்மா இது! என்னென்னவோ சொல்கிறாய்! நாராயண! நாராயண!

அ.நா. : உங்கள் கால்களில் விழுந்து இறைஞ்சுகின்றேன். குழந்தையின்மேல் ஆணை! இனி இவள் உங்கள் பொறுப்பு. (யாரோ வரும் ஒலி கேட்கவே, குழந்தையுடன் வீடுநோக்கிச் செல்கின்றாள்)

(விஷ்ணுசித்தர் என்ன செய்வது என்று தெரியாமல் உணர்வற்று நிற்கின்றார்)

காட்சி-3

இடம் : விஷ்ணுசித்தர் இல்லம்
உறுப்பினர்கள் : விஷ்ணுசித்தர், பணிப்பெண் கோதை

கோதை : ஐயனே! ஐயனே! (என்று அழைத்துக்கொண்டு பதற்றத்துடன் மூச்சிரைக்க ஓடிவருகின்றாள்)

வி.சி. : (பதைத்தவராய்) ஏனம்மா இப்படி ஓடிவருகிறாய்? எதற்கு பதறுகின்றாய்! என்ன நடந்தது? தோட்டத்துக்கு மலர் பறிக்கச் செல்வதாகக் கூறிச் சென்றாய்! அங்கு அரவம் ஏதேனும்...?

கோதை : அதெல்லாம் ஒன்றுமில்லை! அங்கே... அங்கே (பேச்சு வராமல் குழறுகின்றாள்)

வி.சி. : அங்கே என்ன? விரைவாகச் சொல். வா, போவோம்.

கோதை : பச்சிளங்குழந்தை ஒன்று துளசிமாடத்தில் கிடத்தப்பட்டுள்ளது. இவ்வளவுநேரம் காத்திருந்தேன். யாரும் வரவில்லை. குழந்தை வீறிட்டு அழுது கொண்டிருக்கின்றது ஐயனே! யார் பெற்ற குழந்தையோ!

வி.சி. : என்னம்மா நீ. குழந்தை யாருடையது எனப் பின்னர் பார்ப்போம் என வராமல் பச்சிளங்குழந்தையைத் தனியே அழவிட்டுவிட்டு வந்துள்ளாயே! ஏதேனும் பூச்சி, பட்டை கடித்து விட்டால்...

கோதை : ஆம் ஐயனே! மன்னிக்க வேண்டும். என்ன செய்வது என்று புரியாமல் தவறிழைத்து விட்டேன். நல்லவேளை! குழந்தைக்கு ஏதும் ஆகவில்லை.

வி.சி. : வா, வா. குழந்தையை எடுத்து வருவோம். முதலில் அதன் பசியாற்றுவோம். பின்னர், யார் எவர் எனக் கண்டுபிடிப்போம். (என்று வெளியில் கூறினாலும் அது அழகுநாச்சியாரின் குழந்தைதான் என்று புரிந்துவிட்டது. சொன்னவாறே செய்துவிட்டாளே! நாராயணா! நாடகமாடத் தொடங்கிவிட்டாய்! உன்னுடன் இனி நானும் நடித்துதான் ஆகவேண்டும்)
இருவரும் சென்று, குழந்தையை எடுக்கின்றனர். கோதை குழந்தையை விஷ்ணுசித்தர் கையில் கொடுக்க, அது அவரைப் பார்த்துச் சிரிக்கின்றது.

வி.சி. : அம்மா! கோதை! இக்குழந்தையை அவள் தாய் தேடிவரும்வரை, நல்லமுறையில் வளர்ப்பது உன் பொறுப்பு! ஆண்டவன் சித்தம் எதுவோ?

கோதை : இப்படி ஓர் அழகான பெண்குழந்தையைப் பூச்சிபுழுக்கள் நிறைந்த தோட்டத்தில் விட்டுச்சென்ற அவள் தாய்தானா? இதயமற்ற ஈனப்பிறவி ஐயனே! நீங்கள் கவலையே படவேண்டாம். இதை வளர்க்க வேண்டியது என் பொறுப்பு.

வி.சி. : முகமறியாத மனிதர்களை வாய்க்கு வந்தவண்ணம் வசை பாடக்கூடாது! இப்படி ஒரு குழந்தையை விட்டுச்செல்ல ஒரு தாய்க்கு மனம் வந்தது என்றால், அவளுக்கு எத்தகைய சூழலோ என்றும் பார்க்க வேண்டுமல்லவா? எங்ஙனமாயினும் தவறுதான். எப்படியோ துறவி பூனை வளர்த்த கதையாகாமல் இருந்தால் சரி (என்று நகைக்கின்றார். ஆனால் அப்படித்தான் ஆகப்போகின்றது என அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை)

காட்சி-4
இடம் : அழகுநாச்சியார் இல்லம்
உறுப்பினர்கள் : கோயில்காரர், அக்கம்பக்கத்தார்.

அழகுநாச்சியார் இல்லம் பூட்டியிருப்பது கண்டு திகைத்து நிற்கின்றனர். ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த அந்த வீட்டின்முன் நிற்பதைத் தயக்கமாக உணர்ந்து அவ்வழிச் செல்வோரை வினவுகின்றனர்.

கோயில்காரர் : ஐயா! இந்த வீட்டில் உள்ளவர்கள் எங்கே என்று தெரியுமா?

அவர்கள் : நாங்கள் அறியோம் ஐயனே! நாங்கள் இவ்வழியாகச் செல்லும்போது கதவு பெரும்பாலும் மூடப்பட்டே இருக்கும். எப்போதாவது திறந்திருக்கும். கோயிலில் நடனமாடும் பெண் என்று அறிவோம். நடனத்துக்கு ஏற்பாடு செய்ய வந்துள்ளீர்களா?

கோயில்காரர் : ஆமாம்! ஆமாம்! கோயிலில் உற்சவம் வருகின்றது அல்லவா? அதனால்தான்...

அவர்கள் : அப்படியா! இந்த ஒரு பெண்தானா? வேறு எத்தனை பேர் உள்ளனர். மேலும் இந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்த சில தினங்கள்தான் ஆகியிருக்கும் என்று எண்ணுகின்றோம்.

கோயில்காரர் : ஆமாம்! அதுவும் சரிதான்! வருகின்றேன். மிக்க நன்றி!

அவர்கள் : நல்லது ஐயா! (அவர் போனதும்) இவரைப் போன்றோருக்கு அஞ்சியே அந்தப் பெண் போயிருக்க வேண்டும். சரி! சரி! நமக்கேன் வம்பு? நாம் யாரோ? அவர்கள் யாரோ?

கோயில்காரர் : (ஏமாற்றத்துடன் திரும்பிக்கொண்டே) கள்ளி! எவ்வளவு திமிர்! உன்னையும் உன் குழந்தையையும் கண்டுபிடித்து நான் விரும்பியபடியே செய்யவில்லை என்றால், கோயில் குருக்கள் சேவையையே நான் உதறுவேன்! எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி! என்று தமக்குள் சூளுரைத்துக் கொள்கின்றார். ஒரு பெண் என்னை ஏமாற்றுவதாவது!

(சில திங்கள் கடந்தபின்பு)

இடம் : கோயில் வீதி. உறுப்பினர்கள் : கோயில்காரர், கோதை.

கோயில்காரர் : கோதை! கோதை முன்புபோல் உன்னைக் கோயிலில் பார்க்க முடிவது இல்லையே! ஏனம்மா! நாராயணன் பாதம் சேவிக்க நாளும் வருவாயே!

கோதை : அவன்தான் உள்ளத்துக்குள்ளேயே இருக்கின்றானே! கோயிலுக்கு வந்துதான் அவன் அருள்பெற வேண்டுமா என்ன சுவாமிகளே!

கோயில்காரர் : இப்படியே எல்லாரும் கூறினால் கோயில் எதற்கு? நாங்கள் எப்படி எங்கே சென்று பிழைப்பது? ஆண்டவன் சேவை தவிர வேறு எதுவும் அறியோம். வேறு செய்யவும் இயலாது. நீங்கள் எல்லாம் இப்படிச் சொல்லலாமோ?

கோதை : (சிரித்துவிடுகின்றாள்) நாராயணனுக்காக இல்லாவிட்டாலும் உங்களுக்காகத்தானே இத்தனை வழிபாடுகளும் சடங்குகளும்.

கோயில்காரர் : உனக்கு வாய் மிகவும் நீளம். அந்த விஷ்ணுசித்தர் எப்படித்தான் உன்னை வைத்துக் காலம் தள்ளுகிறாரோ தெரியேன்!

கோதை : மன்னித்துவிடுங்கள் ஐயா. நான் சில திங்களுக்கு முன்னர், ஒரு குழந்தையைக் கண்டெடுத்தேன். என் ஐயன் அனுமதியுடன் அதனை வளர்த்து வருகின்றேன். குழந்தையைக் காணோமென்று யாரும் கோயிலில் வந்து முறையிட்டால் தயவுகூர்ந்து அவர்கள் எங்கள் இல்லம் அனுப்புங்கள் ஐயா! குழந்தையைக் கவனிப்பதில் நாளும் பொழுதும் செலவாவதால், முன்புபோல் கோயிலே கதி என்று இருக்க முடியவில்லை! குழந்தைக்குச் செய்யும் பணி ஆண்டவனுக்குச் செய்யும் திருப்பணிதானே.

கோயில்காரர் : நீ சொல்வது முற்றிலும் உண்மை கோதை! (என்று கூறியவரின் மனதுள் ஐயம் தோன்றி மறைகிறது. அதற்குள் பக்தர்கள் வந்துவிடவே தன் பணிகளில் மூழ்கிவிடுகிறார்).

யாரையும் கேட்காமல் ஆண்டுகள் பறந்தோடி விட்டன. ஆண்டாள் விஷ்ணுசித்தரிடமும், கோதையிடமும் நன்று ஒட்டிக்கொண்டாள். பெற்றோர் குறித்த ஏக்கமோ, வருத்தமோ இல்லாதவளாய் இளவயதுப் பெண்களுக்கே உரிய திருமணக் கனவுகளுடன் வளர்கின்றாள். பக்கத்து ஊரைச் சேர்ந்த பரந்தாமனுடன் பழக்கம் ஏற்பட்டு அவன்மீது நாட்டம்! தம் காதலுணர்வைக் கவிதைகளாக்கிக் களிப்புறுகின்றாள். அழகுநாச்சியாரின் பெண்தான் அவள் என்று பல வகையிலும் முயன்று கோயில்காரர் உறுதிப்படுத்திக் கொண்டுவிடுகின்றார்.

(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com