Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
பிப்ரவரி 2008
பாட்டாளி மக்கள் கட்சியின் வெளியீடுகள் ஓர் ஆய்வு
மதி

தமிழகத்தின் நலன் கருதி பாட்டாளி மக்கள் கட்சி 2007, அக்டோபர் திங்களில், ‘2020இல் தமிழகம் - ஒரு தொலைநோக்குத் திட்டம்' என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இத்திட்ட அறிக்கையோடு, அதன் விளக்கக் கையேடுகளாக,

ramados 1. தமிழகத்தில் இளைஞர்கள் மறுமலர்ச்சி பயனுள்ள ஒரு அணுகுமுறை
2. தமிழகத்தில் வேளாண்மை ஊரக வளர்ச்சி - பயனுள்ள மாற்றுத்திட்டம்
3. தமிழகத் தொழில்வளர்ச்சி - பயனுள்ள மாற்றுத்திட்டம்
என்று மூன்று சிறு வெளியீடுகளையும் கொண்டு வந்திருக்கிறது.

இந்த அறிக்கைகள் ஓர் ஆய்வினை வேண்டி நமது பார்வைக்கும் வந்தன. நமது கண்ணோட்டம் சார்ந்து இவ்வறிக்கைகள் தொடர்பான ஓர் ஆய்வினைச் செய்வதில் தவறேதுமில்லை என முடிவு செய்தோம்.

ஒரு குடும்பம், ஓர் இயக்கம், ஒரு கட்சி மற்றும் ஒரு நாடு போன்றவற்றிற்கான தொலைநோக்குத் திட்டங்களை வரையறை செய்யும்போது, அடிப்படையான சில அணுகுமுறைகளை கைக்கொள்வது மிகவும் அவசியம் என்பது ஒரு நிலைப்பாடு. குடும்பம் எனும்போது, குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர், அவர்களின் தேவைகள் என்ன, ஒவ்வொருவரின் ஆற்றல் எது, அவர்களை எப்படிக் கையாண்டால் குடும்பம் வருங்காலத்தில் சிறப்புற விளங்கும் என்றெல்லாம் சிந்தித்து, திறம்பட செயல்திட்டம் வகுப்பது குடும்பத் தலைமைக்கு அவசியமான ஒன்று.

தலைமை என்பது குடும்பத் தலைவனாகவோ, தலைவியாகவோ அல்லது இருவரும் இணைந்தோ என்று இருக்கலாம். இந்த அணுகுமுறையே கட்சி, அமைப்பு, இயக்கம் என எந்தவொரு நிறுவனத்தின் தொலைநோக்குத் திட்டமிடலுக்கு பொருந்துவதாகவே இருக்கும். குடும்பத்தில் தலைவனுடன் தலைவி என்பதுபோல நிறுவனத்தில் தலைமையுடன்கூட அடுத்தநிலைத் தலைவர்கள் எனக் கொள்ளலாம்.

ஆனால் ஒரு நாட்டிற்கான தொலைநோக்குத் திட்டத்தை வகுத்தளிக்கும்போது மேற்சொன்ன அணுகுமுறையினை இதில் கையாள இயலாது. ஏனெனில் நாடு என்பது கட்டுதிட்டமான கட்சி போன்றதல்ல. அதற்கும் அப்பாற்பட்டு பலதரப்பட்ட வாழ்க்கைச் சூழல்களைக் கொண்ட பெரும்திரளான மக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

பல்வேறு சாதிகள், பல படிநிலை கொண்ட பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பலவாறான கருத்தியல்களைக் கொண்ட அமைப்புகள், தனிமனித ஆற்றல்கள், வெவ்வேறு கருத்துக்களோடு இயங்கும் ஊடகங்கள், மானுடத்தின் கோர வடிவங்களான தீண்டாமை, பெண்ணடிமை என்பவை போன்ற பன்முகக் கோணங்களை உள்ளடக்கியதாக தமிழ்ச்சமூகம் இருந்து வருகிறது.

குறிப்பாக தமிழ்நாடு ‘நாம் தமிழர்' என்னும் சுய அடையாளத்தை இழந்து நிற்கிறது. இதனால் தான் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் ‘‘மக்கள் தொலைக்காட்சி'' என்ற நிறுவனத்தைத் தொடங்கி பெரும்பான்மைத் தமிழ் மக்களுக்கு தமிழ் உணர்வை ஊட்ட வேண்டியதாகவும் இருக்கிறது.

இத்தகைய சூழலில் பாட்டாளி மக்கள் கட்சி ‘‘வறுமை ஒழித்து வளம் கொழிக்கும்'' மாநிலமாகத் தமிழகத்தை மாற்றுவது குறித்து, ஒரு தொலை நோக்குத் திட்ட அறிக்கையினைத் தயாரித்து அளிக்க முன்வந்திருப்பது மிகவும் வரவேற்பிற் குரியதே. தமிழ் நாட்டின் எதிர்காலக் கனவு, இன்றைய நிலையில் வேளாண் நெருக்கடி, வேலை வாய்ப்பின்மை, சமச்சீரற்ற வளர்ச்சி, நலிவடைந்த கிராமப் பொருளாதாரம், இலக்கின்றி இருக்கும் இளைஞர்களின் மறுமலர்ச்சி போன்ற வற்றைக் கணக்கில் கொண்டு அவற்றிற்கான தீர்வுகளை அறிக்கை முன் வைக்கிறது.

ஆனால் இவ்வறிக்கை, தமிழ்நாட்டில் நிலவுகின்ற சிக்கல்களை வெளிக்கொண்டு வருவதற்கும், அவற்றைக் கணக்கீடு செய்வதற்கும், தீர்வினைச் சொல்வதற்கும் பா.ம.க.வின் தலைமையினையும், மேல்மட்டத் தலைவர்களையும், அதற்கும் மேலாக தமிழ்நாட்டின் கடந்த கால ஐந்தாண்டுத்திட்ட அறிக்கையின் செயற்பாடுகளையுமே முழுவதுமாகச் சார்ந்திருக்கிறது. இந்தச் சார்புநிலை காரணமாக, தமிழகத்தின் கடந்தகால வரலாற்றினை, கடந்த வந்த படிநிலை வளர்ச்சியினை அல்லது வீழ்ச்சியினை கணக்கிலெடுக்கத் தவறி இருக்கிறது. ஒரு நாட்டின் கடந்தகால நிகழ்வுகள், அவை தரும் படிப்பினைகள் என்பவற்றையெல்லாம் தொகுத்துக் கொள்வதுதானே ஒளிமயமான எதிர்காலத் திட்டமிடலுக்கு வழிகாட்டுவதாக இருக்க முடியும்?

மேற்கூறிய முயற்சி சிக்கலானது என பா.ம.க. கருதி இருக்குமேயானால் 1991-ம் ஆண்டு அன்றைய பிரதமர் நரசிம்மராவும் அன்று நிதியமைச்சராகவும், இன்று பிரதமராகவும் உள்ள மன்மோகன் சிங்கும் கைகோர்த்து இந்தியாவை உலகமயத்திற்கு உட்படுத்தியபின் விளைந்த சாதக, பாதக அம்சங்களினூடாகவாவது தமிழகத்தின் இந்தத் தொலைநோக்குத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். உலகமய நிகழ்வுக்குப் பின் கடந்த பதினேழு ஆண்டுகளில் தமிழரின் வாழ்முறை தலைகீழ் மாற்றமடைந்ததை விரிவாகச் சொல்லி, அதற்கான மாற்று வழியைக் கூறுவது தொலைநோக்குத் திட்ட அறிக்கையை முழுமையடையச் செய்திருக்கும்.

இவ்வாறெல்லாம் திட்டங்களைத் தொகுப்பதற்கும், வகுப்பதற்கும் கட்சியைக் கடந்த சிலரது ஒத்துழைப்பினை பா.ம.க பெற்றிருக்க வேண்டும். அவர்கள் தமிழ்ச்சமூகம் சார்ந்து பல்வேறான தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளாக இருக்கலாம். விவசாயம் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், மீனவர் பிரதிநிதிகள், சுகாதாரம், சுற்றுச்சூழல், இயற்கை ஆர்வலர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை அமைப்பினர், தீண்டாமை, பெண்ணடிமைக்கெதிராகச் செயல்படும் சமூக சிந்தனையாளர்கள், தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் என அனைத்துத் தரப்பினரைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு தொலைநோக்குத் திட்டம் மிகச்சிறப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அப்போதுதான் தமிழகத்தின் வலுவான பிரச்சினைகளான காவிரிநீர், முல்லைப் பெரியாறு, பாலாறு, நிலத்தடி நீர்ச்சிக்கல்கள், வேளாண் நெருக்கடி, வேலையின்மை, தாய்மொழிக்கல்வி, இந்தித் திணிப்பு, தீண்டாமை, ஈழத்தமிழர் சிக்கல், மீனவரின் மீளாத்துயரம், பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு, பண்பாட்டுச் சீரழிவு, நுகர்வுக் கலாச்சாரம் என்று அனைத்துக்குமான தீர்வுகள் தெரிய வந்திருக்கும்.

ஆனால் அவ்வாறு நாடறிந்த அல்லது கட்சிக்குத் தொடர்பில்லாத பிரதிநிதிகளைக் கொண்டு தமிழகத் தொலை நோக்குத் திட்ட அறிக்கையைத் தயாரிப்பது ஒரு கட்சிக்கு அழகல்ல-எளிதல்ல என்று கட்சித் தலைமை கருதி இருக்கலாம். அவ்வாறெனில் கட்சிக்குள்ளாகவே அந்தந்தத் துறைக்கான சிறப்புப் பிரதிநிதிகளை நியமித்து, ஒரு குறிப்பிட்ட கால பரவலான ஆய்விற்குப் பின்பு, அதனைக் கட்சியின் மேல்மட்டத் தலைவர்களின் விவாதத்திற்கு உட்படுத்தி ஆய்வை இறுதி செய்திருக்கலாம். ஆனால் அவ்வித அணுகுமுறையும் இவ்வெளியீடுகளில் காணப்பட வில்லை.

இந்தியா சுதந்திரம் அடைந்தபின்பு இதுவரையில் 1950லிருந்து பத்து ஐந்தாண்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் இத்திட்டத்தின்மூலம் இந்தியாவை அனைத்து துறைகளிலும் வளம் கொழிக்கும் நாடாக மாற்றப் போகிறோம் என்று உறுதியளித்து கோடி கோடியாகப் பணத்தை ஒதுக்கீடு செய்ததோடு சரி. பெரும்பான்மை மக்களின் வாழ்முறை என்னவோ அன்று போலவே இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமாக சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவது என்ன?

1. இத்திட்டங்களை வரையறுப்பதில் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு அறவே இல்லை. அவற்றை அமுல்படுத்துவதிலும் அவர்களை ஈடுபடுத்துவதில்லை.

2. அத்திட்டங்களை அரசியல் தலைவர்களும், அவர்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளுமே கூடித் தயாரித்துச் செயல்படுத்து கின்றனர், என்பவைதான். ஐந்தாண்டுகளுக்கொருமுறை வெறும் சடங்குத்தனமாகத் தயாரித்தளிக்கும் ஐந்தாண்டுத் திட்ட அறிக்கைக்கே மக்களின் பங்களிப்பு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இவ்வாறிருக்க ஒரு நாட்டின் தொலைநோக்குத் திட்ட அறிக்கை தயாரிப்பில் அச்சமூக மக்களின் பங்களிப்பு எத்தனை முக்கியமானது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

1950ம் ஆண்டு நடுவண் அரசின் முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.2069 கோடி வருகின்ற 2008-2013 ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை முப்பத்து ஆறு லட்சம் கோடி. கோடிகளில்தான் பெருத்த வளர்ச்சி.... ஆனால் மக்களின் வளர்ச்சி...?

வருகின்ற 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சியே அமைக்கப்படும் என்கிற உன்னதமான முடிவை எடுத்திருக்கும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் இத்தொலைநோக்குத் திட்டத்தைத் தயாரிப்பதிலும் கூட்டு முயற்சிகளுக்கு இடம் கொடுத்திருந்தால் காலத்தால் நிராகரிக்கப்பட முடியாததாக அறிக்கை வெளிவந்திருக்கும்.

எனினும், இப்போதும் காலம் கடந்துவிடவில்லை!

ஏனெனில் பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர்முயற்சிகளும் ஓய்ந்துவிடப் போவதில்லை!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com