Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
பிப்ரவரி 2008
மதியிடம் கேளுங்கள்

‘வர்க்க விடுதலையே சமூக விடுதலை' என்றும், ‘சாதிய விடுதலையே சமூக விடுதலை' என்றும் கூறுவதைத்தான் கேட்டிருக்கிறோம். இப்போது புதிய பெண்ணியம் ‘பெண் விடுதலையே சமூக விடுதலை' என்று புதுக்கருத்தைச் சொல்கிறது. இவற்றுள் எது சரியானது என்பதை எவ்வாறு கண்டறிந்து முடிவு செய்வது?
-இளவரசு, வேலூர்.


‘பெண் விடுதலையே சமூக விடுதலை' என்று புதிய பெண்ணியம் சொல்லவில்லை. சமூக விடுதலைக்கான முன்நிபந்தனைகளில் முதன்மையானது பெண் விடுதலையே என்கிறது. தொழிலாளி வர்க்கத்தை விடவும், சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளானோரை விடவும் ‘ஒடுக்கப்பட்ட பெண்களின் ஒட்டுமொத்த விழுக்காடு' அதிகம்.

காரணம் மனிதகுலத்தில் சரிபாதி பெண்களே. அதுமட்டுமின்றி, பொருளாதார ஏற்றத்தாழ்வு கொண்ட வர்க்க சமூகத்தைக் கட்டிக்காக்கவும், சாதிய சமூகத்தை விடாப்பிடியாகக் காப்பாற்றவும், இந்த ஆதிக்க அமைப்பு பெண்களையே கருவியாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே மானுடத்தில் சரிபாதியான பெண்ணினம் ஒடுக்குமுறை யினின்றும் விடுபடுவதற்கான விழிப்புணர்வினைப் பெறும்போதுதான் ஒட்டுமொத்த சமூக விடுதலை என்பது எளிதாகிறது.

வர்க்க விடுதலை, சாதிய விடுதலை, மனிதகுல விடுதலை என்பதில் மனிதகுல இரு விடுதலைகளும் அடங்கி விடுகிறது. எனவே மானுட விடுதலைக்கு முதன்மையானது பெண்ணினம் விடுதலை உணர்வைப் பெற வேண்டும் என்பதே.

பெண்களிடமும் ஆணாதிக்கம் அதிகஅளவில் இருக்கிறது என்று கூறுகிறார்களே... இதற்கு உங்களது பதில் என்ன?
-கலையரசி, நெய்வேலி.


பெண்களிடம் காணப்படும் ஆணாதிக்கப் போக்கு-ஆணாதிக்க நோக்கு என்பதெல்லாம் பல நூற்றாண்டு கால ஆணாதிக்கச் சமூகத்தினால் விளைவிக்கப்பட்ட அடிமைத்தனமே அன்றி வேறல்ல. அண்மையில் நாம் சந்தித்த இளைஞர் ஒருவர் ‘‘எனது வீட்டில் எனக்கும், என் தங்கைக்கும் உணவு வழங்கும் முறையில் கூட எனது தாய் மிகுந்த பாகுபாடு காட்டுவார்.

சத்தான உணவு எனக்கு, சாதாரண உணவு தங்கைக்கு என்றுதான் தருகிறார். ஒரு பெண்ணே ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும் ஆணாதிக்கம் தானே இது'' என்றார். ஆணாதிக்கச் சமூகம் நடைமுறைப்படுத்தி இருக்கும் கட்டளைகளை தலைமேற்கொண்டு செயலாற்றும் அறியாமைப் போக்குதான் இது. ஆணின் பிடியில் உள்ள இச்சமூகம் பெண் குழந்தையைப்பற்றி என்ன சொல்கிறது?

என்னதான் போற்றிப் போற்றி, ஊட்டி வளர்த்தாலும் அவள் இன்னொரு வீட்டிற்குப் போக வேண்டியவள்தானே? இன்னொரு வீட்டின் வாரிசினைச் சுமக்க வேண்டியவள்தானே? என்று பெண்ணை ஒரு மனித உயிராகப் பார்க்காமல் வெறும் உடலாக மட்டுமே பார்க்கிறது. வாரிசை உருவாக்கும் எந்திரமாகவே பார்க்கிறது. ஆனால் ஆண் குழந்தைகளே வளர்ந்து இக்குடும்பத்தைக் காப்பாற்றுபவன் ; சாகும்வரை பராமரித்து இறுதியில் கொள்ளி போடவும் தகுதி படைத்தவன்.

அந்தக் குடும்பத்திற்கான அடுத்த தலைமுறை வாரிசுகளான ஆண்குழந்தைகளை உருவாக்க இருப்பவன் என்கிற ஆணாதிக்கச் சிந்தனையை அத்தாயின் உணர்வில் விதைக்கக் கட்டளையிட்டது. இந்த ஆதிக்க அமைப்பல்லவா? படித்த பெண்களும் இதே வகையான பல்வேறு அறியாமைகளுக்கு உட்பட்டிருப்பதற்குக் காரணம் அவர்கள் படித்த படிப்போ, பார்க்கின்ற சமூக நடைமுறைகளோ அல்லது சின்னத்திரையோ, பெரியதிரையோ எதுவுமே அவர்களுக்குச் சுயமரியாதையினையோ, சுயசிந்தனையையோ ஊட்டுவதாக அமையவில்லை என்பதுதான்.

எனவேதான் பெண்களுக்காக, பெண்ணுரிமைகளைச் சொல்லக்கூடிய இதழ்கள் ஏராளமான எண்ணிக்கையில் வரவேண்டும் என்பதும் கட்டாயமாகி இருக்கிறது.

இந்து மதத்தில் தொடரும்வரை சாதி இழிவிலிருந்து மீளவே முடியாது என்றுதானே அம்பேத்கர் புத்தமதம் தழுவினார்? ஆனால் கந்தம்பட்டி திரவுபதி கோவிலுக்குள் நுழைந்து வழிபடும் உரிமை வேண்டி, தமிழ் தலித்துகள் போராடுகிறார்களே! அண்ணன் தம்பி ஐவரை மணந்து ஒரு மனைவியாக வாழ்ந்தது அக்கால வழக்கப்படியே என்றாலும்கூட, வழிபாட்டுக்குரிய திரவுபதி அம்மனாகத் தமிழ்நாட்டில் நுழைந்த வரலாறு என்ன?
-கி.இளங்கோ, சேலம்.


இந்தக் கேள்வி நியாயமாக ‘நமது தமிழ்மண்' மாத இதழுக்குத்தான் சென்றிருக்க வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவ் விதழில் ‘வெளிச்சம்' என்ற வினா-விடைப் பகுதிக்குத் தெளிவான விளக்கங்களுடன் பதிலளித்துக் கொண்டிருக்கிறார். எனினும் நம்மிடம் வந்து சேர்ந்ததால் தெரிந்தவரையில் ஒரு பதிலைச் சொல்ல முயற்சிக்கலாமே என்று தோன்றுகிறது.

வழிபாட்டுக்குரியவளாக திரவுபதியை ஏற்றிவைத்து கோவிலைக் கட்டிவைத்தவர்கள் தமிழகத் தலித்துகளாக இருக்கமுடியாது. அதனால்தான் அக்கோவிலுக்குள் ஆதித்தமிழர் (தலித்) நுழையக்கூடாது என்கிற தடையினை விதித் திருக்கிறார்கள். அந்தத் தடையினை உடைப்பதுதானே சாதியத்திற்குக் கொடுக்கின்ற முதல் அடியாக இருக்கும்?

திரவுபதி கோவிலோ, கருமாரி கோவிலோ, கண்ணகி கோவிலோ அல்லது கருப்பண்ணசாமி கோவிலோ எதுவாயினும் மனிதராகப் பிறந்தவர்கள் எவரும் உள்ளே நுழையக்கூடியதாக அது இருக்கவேண்டும். ‘கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி ; பரப்பியவன் அயோக்கியன் ; நம்புபவன் முட்டாள்' என்று முழக்கம் செய்த தந்தை பெரியாரே கூட கோவிலுக்குள் நுழையும் உரிமை தாழ்த்தப்பட்டோருக்கு வேண்டும் என்று சொல்லவில்லையா?

எந்தக் கோவிலுக்குள்ளும் நுழைந்து, கடவுளை வணங்கும் உரிமையினைப் பெற்று, ‘மனிதர்' என்ற தகுதியை அடைந்தபின்னர் தானே, ஆறாவது அறிவான பகுத்தறிவைப் பற்றியெல்லாம் அவர்களிடம் விளக்கிச் சொல்ல முடியும். பகுத்தறிவை ஏற்றுக்கொள்ளும்போதுதானே மனித உரிமைகளை நசுக்கும் விதத்தில் கடவுளும், மதமும் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையினை அவர்களுக்குச் சொல்லவும் முடியும்?

இந்து மதத்தின் சாதிய இழிவிலிருந்து மீள, சமத்துவத்தைப் போதித்த பவுத்தத்தைத் தழுவுவதே ஒரே வழி என மாமனிதர் அம்பேத்கார் தீர்மானித்தார். தனது மரணத்திற்கு இரண்டு மாதம் முன்பாக 1956ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இதன்மூலம் இந்துவாகச் சாகக்கூடாது என்கிற அவரது மாபெரும் கொள்கைக்கனவு நிறைவேறி விட்டது.

இப்போது அம்பேத் காரியத்தை தலையாய குறிக்கோளாகக் கொண்டிருக்கும் தொல்.திருமாவளவன் அவர்கள் சாதிய இழிவிலிருந்து மீள தமிழராக அடையாளம் பெறுவதே உகந்த வழி என்று இலட்சம் பேருக்குத் தமிழ்ப்பெயரைச் சூட்டி இருக்கிறார். தமிழ் உணர்வை வளர்த்து தமிழ்மண்ணின் முதல் மைந்தர்களைத் தமிழ்ச் சமூகமாக உருமாற்றம் செய்து கொண்டிருக்கிறார்.

காலத்தின் கணக்குகளை அறிந்து (அளந்து) வைத்திருக்கும் இத்தொலைநோக்குப் பார்வை அவரது அர்ப்பணிப்பு உணர்வாலும், அரவணைக்கும் போக்காலுமே கிடைத்திருக்கக் கூடும்.

நக்சல்பாரி இயக்கத்தை ஆதரித்தும், உலகமயமாக்கலை கடுமையாக எதிர்த்தும் கருத்துக்ளைக் கூறும் பேராசிரியர் அ.மார்க்ஸ் தமிழ்த்தேசியத்தை எதிர்க்கிறாரே, அவரது இந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளத் தக்கதா?
-மதன், சென்னை-15.


தமிழகத்தில் பேரா.அ.மார்க்ஸ் குறிப்பிடத்தகுந்த ஒரு சிந்தனையாளர் என்பதில் எப்போதுமே மாற்றுக்கருத்து கிடையாது. மாபெரும் தலைவர்களை மறுவாசிப்பு செய்வதன் மூலம் அவர்களது அனைத்து கோணங்களையும் மக்களுக்கு அடையாளம் காட்டுபவர். இத்தகைய ஆய்வின் வழியே சமூக சிந்தனைக்கான படிநிலை வளர்ச்சியினை கூர்மைப்படுத்துபவர் என்பதிலும் சந்தேகம் இல்லை.

மரபு சார்ந்து, பிற்போக்குத் தனத்துடன் அழுந்திக் கிடக்கும் பண்பாட்டு அடையாளங்களைத் தகர்க்க வேண்டும் வேண்டும் எனக் குரல் கொடுப்பவர். தலைவர்கள், அமைப்புகள், குடும்பம் எனும் நிறுவனம் என எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்து கேள்விக்குட்படுத்துபவர். இதன் காரணமாகவே தமிழர் தலைவர் தந்தை பெரியாரையும் சீராக ஆய்வுசெய்து இருப்பார். அவ்வாறு ஆய்வு செய்ததில் இந்துமத ஒழிப்பு, சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பு, கடவுள் எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்று பெரியாரின் பன்முகத் தன்மைகள் அனைத்தும் அவருக்குத் தெளிவாகப் புலப்பட்டிருக்கிறது.

ஆனால் அந்தப் பன்முகக் கோணங்களின் அடிநாதமும், அதன் ஒட்டுமொத்த வடிவமும் ஆன தமிழ்த்தேசியம் என்கிற ‘தமிழ்நாடு தமிழருக்கே' என்ற ஆணிவேர் மட்டும் புலப்படாமல் போய்விட்டது. எனினும் இப்போதுதானே தமிழ்த்தேசியத்தைக் கையில் எடுத்திருக்கிறார். விரைவில் தமிழ்த் தேசியத்தின் வேரே பெரியார்தான் என்பதை ஒப்புக் கொள்ளவும் அவர் முன்வரலாம்.

தலைமுறை தலைமுறையாக தமிழகத்தில் இருக்கும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்களெல்லாம் தமிழ்த்தேசம் அமைந்துவிட்டால் எங்கே செல்வார்கள் என்று பெரிதும் கவலைப்படுகிறார் பேரா.அ.மார்க்ஸ். இங்கும் அவர் ஒன்றை எண்ணிப்பார்க்க மறந்து விட்டார். ‘தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த ஈ.வெ.ரா. பெரியாரைத்தான் நாம் தமிழ்த்தேசியத் தந்தையாகவே கொண்டிருக்கிறோம்' என்பதை. இவ்வாறிருக்க பல தலைமுறை களாக தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் பிறமொழியினரை தமிழ்த்தேசியம் தண்டித்து விடுமா என்ன? நினைவூட்டுவது நமக்குக் கடமை தெளிந்து கொள்வது அவருக்குப் பெருமை.

தஸ்லிமா நஸ்ரீன் தனது நூலின் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்குவதாக முடிவெடுத்து விட்டாரே... இனி அவர் சுதந்திரமாக இருக்கலாம் அல்லவா?
-செல்லக்குமார், மதுரை-10.


தஸ்லிமா நஸ்ரினுக்கு இனி பெரிய சிக்கல்கள் எழாது என்பது உண்மைதான். தனது கொள்கைப் பயணத்தில் ‘முன்னோக்கிப் பாய்வார்' என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் ‘பின்னோக்கிச் சாய்ந்து விட்டார்'. அரைக்கிணறு தாண்டியவர், முழுவதும் பாய்ந்து வெற்றிவாகை சூடாமல் கிணற்றுக்குள் விழுந்த கதைதான்... என்ன செய்வது? இது அவரின் கருத்துரிமை-கூடவே பிறப்புரிமையும். அவரைக் கொண்டாடியவர்களின் பெருமைதான் சற்றே தடுமாறுகிறது.

வாழ்க்கைச் சிக்கல்களை திரைப் படங்களில் முதன்மையாக்கி அவற்றைப் பற்றி வெளிப்படையாகப் பேசியவர் இயக்குநர் கே.பாலச்சந்தர் என்பது உண்மையே. ஆனால் அவரது கதை முடிவுகள் பெரும்பாலும் சமூகத்தின் பழைய மதிப்பீடுகளைச் சார்ந்து இருந்தன என்பதை மறுக்கமுடியுமா?
-வெற்றிச்செல்வன், விழுப்புரம்.


இயக்குநர் பாலச்சந்தரின் கதைகளின் முடிவு வேண்டுமானால் சமூகத்தின் பழைய மதிப்பீடுகளோடு உடன்படலாமே தவிர, படம் முழுவதும் பெண்களையும், பெண் விடுதலைச் சிந்தனைகளையும் முன்னோக்கி நகர்த்துகின்ற ஓர் உறுதியான தன்மை அவரின் அனைத்து படங்களிலுமே இழையோடி இருக்கும். இதனைச் சற்று தெளிவுபடுத்திக் கொள்ள மிகுந்த வெற்றியினைப் பெற்ற அவரது மூன்று படங்களைச் சிறிய ஆய்வுக்குட்படுத்தலாம்.

1969ம் ஆண்டு வெளிவந்தது ‘இருகோடுகள்' எனும் திரைப்படம். இரு மனைவியர் கதை. பாலச்சந்தரின் பெரும்பாலான படங்களில் ஆண்கள், மனைவி எனும் உறவுக்கு வெளியே திருமணத்திற்கு முன்போ, பின்போ வேறு பெண்ணின் உறவையும் கொண்டிருந்ததாகக் கதைகள் இருக்கும். இந்த யதார்த்தமான அடிப்படையே அவரது படைப்புகளின் பெருத்த வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.

அந்தப்படம் வெளிவந்து நாற்பதாண்டுகள் கழிந்த இந்நிலையில் கூட பெரிய மனிதர்கள், தலைவர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் என்போரின் வாழ்வில் நிகழ்ந்த இரு மண நிகழ்வினை மூடி மறைப்பது அல்லது அது ஆண்களுக்கே உண்டான உரிமை என்றளவில்தான் சமூக அமைப்பு அன்றும் இருந்தது, இன்றும் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இவ்வாறிருக்க, அந்நிகழ்வை, அக்காலத்திலேயே, பெண்ணிய நோக்கோடு கையிலெடுத்த பாலச்சந்தர் அவர்களின் தொலைநோக்கும், தெளிவும், துணிவும் எத்தகைய போற்றுதலுக்குரியது என்பது ஆழ யோசிக்க தீர விளங்கிவிடும்.

இருகோடுகள் கதை இன்னொருவரிடமிருந்து பெறப்பட்டது என்றபோதும், அதைச் சாதுரியமாகக் கையாண்டு முத்திரை பதித்தவர் இயக்குநர் தானே? அப்படத்தில் முதல் மனைவி இறந்ததாகக் கருதி இன்னொரு பெண்ணை மணம் செய்திருப்பான் நாயகன். இரண்டாவது மனைவிக்கு இரு மகன்களும், ஒரு மகளும் பிறந்த நிலையில் முதல் மனைவி இவனுக்குப் பிறந்த மகனோடும், மாவட்ட ஆட்சியர் எனும் தகுதியோடும் கணவன் இருக்கும் ஊருக்கே வந்து சேர்வாள்.

அதன் பின்னர் அந்த மூன்று பாத்திரங்களின் உணர்ச்சிப் போராட்டமே கதை. முடிவில் முதல் மனைவியின் மகன் எதிர்பாராவிதமாக இறந்துபோக, இரண்டாம் மனைவியே தனது மகனை அவளோடு சேர்த்து வைத்து அவர்களிருவரையும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கதை முடியும். இதில் பாலச்சந்தரின் முத்திரை என்ன?

ஆயிரக்கணக்கான ஆண்கள் இரு மனைவியரோடும், கூடவே மனைவியர் அல்லாத சிலரோடும் வாழ்க்கை நடத்த அனுமதி தந்திருக்கும் இந்த ஆணாதிக்கச் சமூகத்தைத் தோலுரித்துக் காட்டி இருப்பார். இப்படம் வெளிவந்த நாட்களில் ஆண்களின் இருதார மணம் சமூகச் சூழலில் சாதாரண நிகழ்வாக இருந்தது. திரைப்படங்களிலோ இருவரில் ஒருத்தியைக் காப்பாற்ற காதலியையோ அல்லது மனைவியையோ சாகடித்து விடுவார்கள். ஆனால் இயக்குநர் பாலச்சந்தர் தமது படங்களில் பெண்ணுக்கு மரியாதை வேண்டும் ; அவளது உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கவேண்டும் என்ற முடிவோடு அவளுக்கான சுயமரியாதை உணர்வினையும் வலியுறுத்தி இருப்பார்.

ஆனால் இரண்டு பெண்கள் ஒரே ஆணுடன் குடித்தனம் நடத்துவது அவர்களின் தன்மானத்திற்கு இழுக்கு என்பதை அழுத்தமாகச் சொல்லி படத்தை முடிப்பார். அப்படத்தில் ஒரு பாடல், மனைவியர் இருவரும் சேர்ந்து பாடுவதுபோல வரும். ‘பாமா, ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக' என முதல் மனைவியும், இரண்டாவது மனைவி ‘அவன் ருக்மணிக்காகவே' என்பது போலவும் பாடல் நீளும்.

அப்பாடலில் ‘இந்தக் கேள்விக்கு பதில் ஏது?... சிலர் வாழ்வுக்குப் பொருள் ஏது...?' என்ற கேள்வியும் ‘அது உறவில் மாறாட்டம், இது உரிமைப்போராட்டம்' என்ற பதிலும் இருக்கும். இந்தக் கேள்விகளும், பதில்களும் சரிதானா? உண்மையான பதில்களை அறிவுள்ள பெண்கள் சிந்திக்க வேண்டும் என்ற மறைமுகச் செய்தியுடன் அப்பாடலும் படமும் முடிவடையும். பாலச்சந்தரின் தொலைநோக்குதான் அங்கு முத்திரை பதித்திருக்கிறது.

அடுத்து ‘அரங்கேற்றம்' என்ற படம் 1973ல் வெளிவந்தது. பார்ப்பனர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த அந்நாளில் பார்ப்பனரான பாலச்சந்தர், பார்ப்பனப் பெண் ஒருத்தியே பாலியல் தொழிலில் வீழ்ந்து, அழிவதைப் படமெடுத்து பார்ப்பனச் சமூகத்தையே அதிர்வுக்குள்ளாக்கியவர். அவரது உள்ளார்ந்த நேர்மைக்கு இந்தப்படம் சரியான சான்று. கதை முடிவில் பாலியல் தொழில் செய்தவள் மனநிலை பாதிக்கப்பட்டு சாகடிக்கப்படுவது அக்காலச் சமூக சூழலோடு பாலச்சந்தர் செய்துகொண்ட சமரசம்.

இக்காலத்திலும் சமரசங்கள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை எனும்போது திரைத்தொழிலில் வணிக நோக்குடன் கருத்து ரீதியில் சமரசம் செய்ததில் தவறொன்றும் இல்லை. ஒரு பெண்ணின் ஆளுமையை-ஆற்றலை- அறிவார்த்தத்தை இறுதிவரையில் வளர்த்தெடுத்துச் செல்லும் அற்புதப்படம் அது. ஆணாதிக்கச் சமூகம் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் பந்தாடி, அவளை அழித்தொழிக்கும் என்பதற்கோர் எடுத்துக்காட்டே அப்படம். பெண்களின் சிந்தனையினைக் கட்டவிழ்த்துவிட முயன்ற படம் அது என்பது மிகையல்ல. குடும்பக் கட்டுப்பாடு பரப்புரைக்கெனவும் அப்படம் எடுத்தாக அவரே சொன்னதாகவும் ஒரு செய்தி உண்டு.

மூன்றாவதாக ‘சிந்து பைரவி' (1985) - மிகுந்த வெற்றியினைப் பெற்ற படம். இசை மேதையான ஒரு நடுத்தர வயதுக்காரனிடம் இளவயது நாயகி காதல் கொள்கிறாள் என்பதை விட அந்த இசைமேதைதான் இவளது இசைஞானத்தில் மயங்கி காதல் கொள்கிறான் என்பதே சரி. ஒரு நெருக்கடியான சூழலில் இருவரின் உணர்வுமீறலில் தாய்மை நிலையினை அடையும் நாயகி, அக்கருவைக் கலைக்க மருத்துவமனை செல்கிறாள்.

முன்பே அங்கிருந்த இசைமேதையின் மனைவிக்குக் குழந்தை பிறக்கும் தகுதியை இல்லை என்பதை எதேச்சையாக அறிகிறாள். இசைக்கலையில் இவளுக்குள்ள அபரிமிதமான ஞானம் காரணமாக, அந்த இசைமேதைக்குத் தன் மூலமாகவாவது ஒரு வாரிசு கிடைக்கட்டுமே என்ற பெருந்தன்மையோடு எவருமறியாமல் கருவை வளர்த்துக் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அந்தக் குழந்தையைக்கொண்டுவந்து இசைமேதையின் மனைவியிடம் ஒப்படைக்கும்போது, தனது கணவனை இரண்டாம் மணம் புரிந்துகொள்ளுமாறு அவள் எவ்வளவோ வேண்டிக்கேட்ட பின்னும் அதனைக் கடுமையாக நிராகரித்து, கம்பீரத்துடன் வெளியேறுகிறாள்.

‘இரண்டு பெண்டாட்டிக்காரன்' என்ற பட்டப்பெயரை தான் மதிக்கும் அந்த இசைமேதை பெறவேண்டாம் என்று சொல்லியும் விலகுகிறாள். இங்கும் பெண்ணின் உணர்வை உயர்த்திப் பிடித்து சமூகத்தில் ஆணுக்கிருக்கும் சலுகைகளைக் கோடி காட்டுகிறார் இயக்குநர். அப்படத்தில் அந்த நாயகியைக் காதலித்து ஓயாமல் சுற்றிவரும் ஒரு ஆண் பாத்திரத்தையும் படைத்து அந்த நாயகியின் எதிர்காலச் சூழல் எவ்வாறு அமையும் என்பதையும் நமக்குச் சொல்லாமல் சொல்லி இருப்பார். அந்த மறைமுகச் செய்திதான் இருபதாண்டுகள் கழித்து சிந்துபைரவி-பகுதி 2 என சின்னத்திரையில் தொடராக வந்து மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த இதழ் களஅதிர்வுகள் பகுதியில் நண்பர் பொன்.ஏழுமலை குறிப்பிட்டிருப்பதைப் போல ‘அக்மார்க்' பார்ப்பனராக இருந்தும்கூட பாலச்சந்தர் இவ்வாறெல்லாம் மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன் பெண்ணியச் சிந்தனைகளை வளர்த்தெடுத்து வந்திருக்கிறார். அவருக்குப் பெண்ணினமும், தமிழகப் பெண்ணுலகும் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்பதில் அணுவளவும் ஐயமில்லை.

திரைப்படங்களில் அதிகரித்து வரும் பெண்களின் அரைகுறை ஆடைக்காட்சிகள், கவர்ச்சி எனும் பெயரிலான வக்கிர வடிவங்கள் போன்றவற்றை எதிர்க்க வேண்டிய பெண்களுக்கான சில இதழ்களே பெண்ணின் நிர்வாண ஓவியங்களை பக்கத்திற்குப் பக்கம் வெளியிடுகிறதே! அதனை சில பெண் கவிஞர்களும் ஆதரிக்கிறார்களே! இதனை எவ்வாறு எதிர்கொள்வது?
-மதிமகள், அமெரிக்கா.


சமூகத்தில் அறியாமை விரவிக் கிடக்கிறது; அநீதிகள் கோலோச்சுகின்றன; அநியாயங்கள் அழுத்தமாய்ப் பதிந்து கிடக்கின்றன, என்றபோதும் அவற்றையெல்லாம் நம்பிக்கை எனும் ஆயுதத்தின் துணைகொண்டு போராடித்தானே முறியடிக்க வேண்டியதாக இருக்கிறது?

பெண்ணை வெறும் உடலாக மட்டுமே பார்த்து, அவளை அடிமைப்படுத்தி, ஆதிக்கத்தை நிலைநாட்டி வைத்திருக்கும் இச்சமூக அமைப்பின் மீதான கடுமையான கோபமும், வெறுப்பும்தான் அந்த இதழ்களின் இந்த நடவடிக்கைகளுக்கு காரணம். கட்டுக்கடங்காமல் பொங்கியெழும் உணர்வு ரீதியான சீற்றத்தின் வெளிப்பாடே இது.

பெண்ணை ஓர் உயிராகப் பார்க்காமல், அவளது உணர்வுகளை மதிக்காமல், வெறும் உடலாக்கி அதன்மீது பண்பாடுகள் எனும் விலங்குகளைப் பூட்டி பொத்திவைக்கச் சொல்லும் இந்த ஆதிக்கச் சமூகத்தின் மீதான உச்சகட்ட கோபமே ஆவேசமாக வெளிக்கிளம்புகிறது.

‘பொத்திவைக்கச் சொல்கிறாயா... நாங்கள் அதை மீறுவோம்... திறந்தே காண்பிப்போம்... அந்தப் பண்பாட்டைத் தகர்ப்போம்.. என்ன செய்வாயோ செய்துகொள்...' என்னும் ஆணாதிக்கச் சமூகத்துக்கு எதிரான அத்துமீறல் இது... - ஆனால் இந்த அத்துமீறலை-முதல்நிலைப் போராட்டத்தை நீண்ட நாட்களுக்கு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்க முடியாது என்பதே உண்மை.

பெண்ணை அடிமையாக்கி வைத்திருக்கும் இச்சமூக அமைப்பு உருவாகி பற்பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. எனவே அதிலிருந்து மீள்வதற்கான பெண்விடுதலைப் பாதையும் மிகமிக நீண்டு கிடக்கிறது. நீண்ட நெடிய அப்பாதையில் இருட்டைத் தொலைக்கவும், விடுதலைப் பயணத்தைத் தொடரவும் கொள்கை, கோட்பாடு எனும் விளக்குகளை ஏற்றிக்கொள்வதும் ஏந்திக் கொள்வதும் அவசியமாக இருக்கிறது.

அதற்குத் தேவையான கொள்கை எது, கோட்பாடு எது எனும் தேடலே இரண்டாம்நிலைப் போராட்டமாக இருக்க வேண்டும். தேடல் என்பது வடிவம் பெற்று கொள்கை தேர்வானபின்பு மூன்றாம்நிலைப் போராட்டங்கள் மிகத்தெளிவுடனும், விடாப்பிடியான முயற்சியுடனும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

ஆவேசப்பாதை என்பது குறிப்பிட்ட ஓர் இடத்தில் முடிவடைந்துவிடும். பின்னர் அறிவார்த்தப் பாதையில் பயணத்தைத் தொடர்வது அவசியமானதாகி விடும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com