Keetru Penniyam
Penniyam
பிப்ரவரி 2008
ஆதிக்க அரசியலும் அழுத்தமான அடையாளங்களும்
லலிதா

பெண்களை ஒருங்கிணைக்கத் தேவைப்படும் முயற்சிகளில் மிகவும் முதன்மையானது, பெண் விடுதலைக் கருத்துக்களைப் பரப்புரை செய்வதுதான் என்பதில் எவருக்கும் சந்தேகம் தோன்றாது. அந்த நம்பிக்கையில்தான் பெண்ணியம் இதழ் தொடங்கப்பட்டு ஒன்பது இதழ்கள் வெளிவந்திருக்கின்றன.

maniammaiyar பத்தாவதாக வந்திருக்கும் இவ்விதழ் விரும்பியோ, விரும்பாமலோ தமிழகத்தின் அரசியல் களத்தையும் சற்றே ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

சென்ற இதழில் ‘மணியம்மையார்-ஒரு பெரியாரியப் பெண்ணியப் பார்வை' என்ற கட்டுரையின் மூலம் தோழர் ருத்ரனுக்கும், அவரொத்த சிந்தனை கொண்டோருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள் விடுத்திருந்தோம். மதிப்பிற்குரிய, மறைந்துபோன மணியம்மையார் பற்றிய புரிதலை மார்க்சியத் தெளிவோடு ருத்ரன் உள்வாங்க வேண்டும் என்றும் கோரி இருந்தோம்.

அவர் போர்க்குணம் கொண்ட மார்க்சியவாதி என நாம் நினைத்ததற்குக் காரணம், சென்ற ஆண்டு பிப்ரவரியில் அவரது கவிதைநூல்கள் இரண்டை நமக்கு அனுப்பி இருந்தார். 1986-87ல் வந்த அந்நூல்கள், அப்போதைய நக்சல்பாரி இயக்கங்களின் தொடர்பினூடாகவோ அல்லது இயக்கப் பங்களிப்பாகவோ வெளிவந்திருக்கக்கூடும். அந்த ஆராய்ச்சி இங்கு தேவையில்லாததே.

நீண்ட காலமாக மார்க்சியப் புரிதலுடன் இயங்கிவரும் தோழருக்கு, பெரியாரியம் பற்றிய புரிதலில் தொய்வு ஏற்படுவது இயல்பானதே என்ற எண்ணத்தில்தான், பெரியாரியப் பார்வை கொண்ட அக்கட்டுரையினை வெளியிட்டிருந்தோம். ஆனால் அதற்குப் பதில்வினையாக, மீண்டும் ஒரு மேம்போக்கான பெரியாரியத் தொண்டரிடம் சென்று கேட்டு எழுதிவாங்கியதைப் போன்றதொரு கட்டுரையினை அனுப்பி வைத்துவிட்டார்.

இந்த இதழில் அக்கட்டுரை முழுவதுமாக வெளியிடப் பட்டுள்ளது. ஆனால் தோழரின் கருத்துக்களுக்கு பதில் சொல்ல வேண்டியதன் கட்டாயத்தை, அய்யா ஆனைமுத்து அவர்கள் தமது சிந்தனையாளன் இதழின் வழியே தேவையற்றதாக்கி விட்டார்.

ருத்ரன் தனது கருத்துக்கும், வாதத்திற்குத் துணையாகச் சேர்த்துக் கொண்டது அய்யா ஆனைமுத்து எழுதிய நூலைத்தான். ஆனால் 1997ல் அந்நூலை எழுதி வெளியிட்ட அவரே கடந்துபோன பத்தாண்டுகளில், மிகுந்த பண்பட்ட முதிர்ச்சியோடு, தி.மு.க.வுடனும், கலைஞருடனும், தி.க.வுடனும் தோழமை கொண்டு நல்லுறவினைப் பேணி வருகிறார். (பார்க்க: சிந்தனையாளன்- செப்டம்பர் 2007-பக்கம் 19, சனவரி-2008-பக்கம் 30) காலத்தின் ஓட்டத்தில், நெடிய அரசியல் அனுபவங்கள் தந்த பக்குவத்தோடு, சரியான இடத்தில் வந்து அவர் சங்கமித்து இருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது. அவ்வாறிருக்க, ருத்ரனின் கட்டுரைக்கு வேலை என்ன? அந்த வாதங்களுக்குத்தான் பொருள் ஏது? என்றெல்லாம் சிந்தனை கிளம்பியது.

என்றாலும் அவருக்குச் சில பதில்களைச் சுருக்கமாகத் தந்துவிட்டு அய்யா ஆனைமுத்து அவர்களின் சிந்தனை வழியே தமிழக அரசியல்பற்றி ஒரு சிறிய ஆய்வுக்கு முயலுவோமே என்ற யோசனையும் எழுந்தது.

‘பெரியார் திரைப்படம்-ஒரு பெரியாரியப் பார்வை' என்னும் ருத்ரனின் நூல் பெரியாரியச் சிந்தனையாளர்களுக்கு அவசியமான நூல் என்று நாம் கூறவில்லை. ‘‘சமூக சிந்தனையாளர்கள் மற்றும் பெரியாரிய சிந்தனையாளர்களின் பார்வை கூர்மைப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தி இருக்கிறது'' என்றே குறிப்பிட்டிருந்தோம். (அதனால்தான் இந்த அரசியல் கட்டுரையினை எழுத வேண்டியதாயிற்று.)
‘மணியம்மையாரை அரசியல் ரீதியாக அணுகாமல், தனிமனித உணர்வு ரீதியாக திறனாய்வு செய்திருக்கிறார் முழுமதி என்று தோழர் ருத்ரன் குற்றம் சாற்றுகிறார். அந்த ஆய்வே மனிதகுலத்தின் சரிபாதியான பெண்ணை ‘சக மனுஷியாகப் பார்க்க வேண்டும்' என்கிற மனித உரிமையை நிலைநாட்டு வதற்கான ஆய்வுதான், என்பதை இனம்காண ருத்ரன் தவறி விட்டார். அதனாலேயே கட்டுரையிலும் தனது சாடுதலைத் தீவிரப்படுத்தி இருக்கிறார்.

‘மணியம்மையாரைச் சாடித் தீர்க்கிறார்' என்று நாம் கூறும் குற்றச்சாட்டிலிருந்து தன்னால் தப்பிக்க முடியவில்லை என்பதை ருத்ரன் ஒப்புக் கொள்கிறார். அரசியல், நட்பு, உறவு போன்ற எந்நிலைகளிலும் கருத்து வேறுபாடோ அல்லது பிணக்கோ தோன்றும்போது ஒருவருக்கொருவர் சாடிக்கொள்வது இயல்பான ஒன்றே. இதனைச் சமூகமும் ஏற்றுக் கொண்டி ருக்கிறது. ஆனால் தோழரின் சாடுதல் என்பது ‘சகட்டுமேனிக்குச் சாடுவது' என்கிற வகைப்பட்டது. அதனால்தான் அவரால் குற்றச்சாட்டுகளினின்றும் தப்பிக்க இயலாமல் போய்விட்டது.

ஒரு முற்போக்குக் கூடாரத்திலிருந்து வரும் ‘சகட்டுமேனித் தாக்குதல்' என்பது முற்போக்கான நிலைமையினையே ஆட்டம் காணச் செய்துவிடும் அபாயகரமான போக்காகும். ஏனெனில் ‘உன்னைப்போல் பிறரை நேசி' என்கிற மனிதகுல வாழ்வியல் அறநெறிக்கும், ‘மற்றவர் இடத்தில் உன்னை வைத்து யோசி' என்கிற சமூக அறிவியல் அறநெறிக்கும் இந்த ‘சகட்டுமேனித் தாக்குதல்' என்பது எதிரானது-பகையானது. இதைச் செய்திருப்பதன் மூலம் முற்போக்குவாதிக்குரிய பாதையிலிருந்து ருத்ரன் தடம் புரண்டிருக்கிறார்.

‘மணியம்மையார் அன்றும், இன்றும், என்றுமே போற்றுதலுக்குரியவர் என்ற உறுதியான முன்முடிவோடு தோழர் முழுமதி திறனாய்வு செய்கிறார்' என்றும் குற்றம் சுமத்துகிறார் ருத்ரன். அக்கருத்தானது முன்முடிவு என்ற வரையறைக்குள் வராது. ஏனெனில் அதுதான் ‘பெண்ணின வரலாற்றை ஆய்வு செய்வதற்கான பாலபாடம் எனும் அரிச்சுவடி ஆகும். எந்தவொரு பெரும் தத்துவமும், சித்தாந்தமும், சிந்தனையும் அரிச்சுவடி யிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு தெளிவடைந்த நிலையில்தான் சில முன்முடிவுகள் தோன்றும். ஆனால் இவரோ அரிச்சுவடிக்கும், முன்முடிவுக்கும் வேறுபாடு காணத் தெரியாமல், திணறி, தவறான சிந்தனையோடு தனது கட்டுரையினை ஆரம்பித்து எழுதி முடித்திருக்கிறார்.

ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தின் வீழ்ச்சி பற்றிய அக்கறையோடு அந்நூலைத் தயாரித்ததாகச் சொல்கிறார் ருத்ரன். பெரியார் உருவாக்கிய தி.க. இருக்கிறது ; ‘உண்மை', விடுதலை இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன ; அதன் தொடர்ச்சியாக திமுக இருக்கிறது; கலைஞர் இருக்கிறார்... தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறார்... அதுமட்டுமின்றி ருத்ரன் துணைக்கு அழைத்துக் கொள்ளும் நூலை எழுதிய அய்யா ஆனைமுத்து இருக்கிறார். அவர் திமுகவோடும் தி.க.வோடும், கலைஞரோடும் தோழமை கொண்டிருக்கிறார். அப்படியிருக்க... எந்த இயக்கம்... என்ன வீழ்ச்சி... எப்படி... எப்போது... எவ்வாறு... என்றெல்லாம் ருத்ரன் நமக்கு விரிவாக விளக்கியாக வேண்டும்.

எந்தவொரு தனிமனிதரை விடவும் இயக்கம் பெரிது என ருத்ரன் அறிந்து கொண்டாராம். அதனால் பெரியாருக்குப் பிறகு தானே தலைமை ஏற்க வேண்டும் என நினைத்து, மணியம்மையார் திட்டமிட்டு இரண்டாம் நிலைத் தலைவர்களை வெளியேற்றியது இவருக்கு மிகுந்த உளைச்சலைத் தந்துவிட்டதாம். இந்தப் புதிய செய்தியை தமது கட்டுரைக்கெனவே தயாரித்திருக்கிறார். ஏனெனில் பெரியாரியப் பார்வை எனும் அவரது நூலில் இந்தச் செய்தி எங்குமே காணப்படவில்லை. என்றபோதும் நாம் பெருந்தன்மையுடன் இதற்கும் சேர்த்து பதிலளித்து விடலாம்.

இரண்டாம்நிலைத் தலைவர்களை மணியம்மையார் திட்டமிட்டு வெளியேற்றினார், என்று காலத்தால் கைகழுவி விடப்பட்ட கட்டுக்கதையினை, உயர்த்திப் பிடிக்கும் நிலைக்கு மார்க்சியத் தோழர் இறங்கி வந்ததில் நமக்கு வருத்தம்தான். என்றாலும் ஓர் அறிவியல் உண்மையைச் சொல்லி அவரை ஆறுதல்படுத்தவே விழைகிறோம். ‘எந்த வினைக்கும் எதிர்வினை என்று ஒன்று உண்டு' என்கிறார் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன். தந்தை பெரியார் தமது முதுமையில் இளவயதுப் பெண்ணை கரம் பிடித்தார் எனும் வினையின் எதிர்வினைதான் அது.

இதில் மணியம்மையாரைக் குறை சொல்லவோ, தந்தை பெரியாரைக் குற்றம் சாட்டவோ, ருத்ரன் கலவரம் கொள்ளவோ எதுவுமில்லை. ஏனெனில் இரண்டாம் நிலைத் தலைவர்களை வெளியேற்றியதால் ஏடாகூடமாய் எதுவுமே நிகழ்ந்திடவில்லை. அதது அந்தந்த நிலையில் அவ்வவ்வாறே இருக்கிறது.


தனது கட்டுரையில் ருத்ரன் பத்து இடங்களில் உடல் வேட்கை, பாலுறவு, பாலியல் உணர்வு என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் நமது கட்டுரையில் அதனை இக்கட்டான மனநிலைமை, ஆண்வாடை, உணர்வு ரீதியான பிழை என்றே குறிப்பிட்டிருந்தோம். இதை எழுதும்போது ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. சென்ற மாதத்தில் வீட்டின் முன்பாக இருந்த குழாயடியில் தண்ணீர் பிடிப்பதில் இரு பெண்களுக்கிடையே தகராறு தோன்றி, வலுத்த நிலையில், ஒரு பெண் திடீரென ‘போடி தேவடியா' என்ற சொல்லைப் பயன்படுத்த, எதிரில் இருந்த பெண் மிரண்டு போனார். இருந்தும் நிதானமாகச் சொன்னார்:

‘இந்த வார்த்தை யார் வாயில் இருந்து முதலில் வருகிறதோ... அவரே ‘அதுவாக'த்தான் இருப்பார் என்று என் அம்மா ஒருமுறை என்னிடம் கூறி இருக்கிறார். உன்னோடு பேச நான் தயாராக இல்லை' என்று சொல்லி காலிக்குடத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டார்.

இதைச் சொன்னதன் மூலம் நாம், தோழர் ருத்ரனை உடல்வேட்கை கொண்டவர் என அறிவிப்பு செய்யவில்லை. ஏனெனில் பாலியல் உணர்வு என்பது மனித இயல்பு. அந்த உணர்வைக் கையாளுவதில் ஆணுக்கிருக்கும் வசதிகளும் வாய்ப்பும் இச்சமூகத்தில் பெண்ணுக்கு இல்லை என்பதே நமது குற்றச்சாட்டு. இத்தகைய ஆணாதிக்கப் போக்கை, இவர் தன்னுள் வளர்த்துக் கொள்ள என்ன காரணம் என்று யோசித்ததில் அவரின் இளமைக்கால கவிதை ஒன்று பொறி தட்டியது.

‘மகிழ்ச்சியான இரவு' எனும் தலைப்பின்கீழ் பதிவு செய்யப்பட்ட, பெண்களைப் பற்றிய அன்றைய கண்ணோட்டத்தின் இக்கால வளர்ச்சியே இந்த சிந்தனைக்குக் காரணம் என்று தோன்றியது. இது உண்மையாயின் ‘‘வளர்ந்துவிட்ட அந்த விஷவிருட்சத்தை வெட்டி எறிய வேண்டும்'' என்றே அவரிடம் நாம் கோர வேண்டி இருக்கும்.

சமூகத்திற்கு முன்னுதாரணமாக வாழ வந்தவர்கள் கள்ளத்தனத்தைக் கடைப்பிடிக்கக் கூடாதாம் - ருத்ரன் சொல்லுகிறார். கடந்துபோன ஐயாயிரம் ஆண்டுகால மனிதகுல வரலாற்றில் முன்னுதாரணமாக வாழ்ந்த ஒரே ஒரு மனிதரை-தலைவரை இவரால் அடையாளம் காட்ட முடியுமா? முடியவே முடியாது.

ஏனென்றால் ‘முழுமையான மனிதர்கள்' என்ற கருத்தாக்கம் இயக்கவியலுக்கு எதிரானது ; சமூக இயங்கியலுக்கு முரணானது. ஒரு காலகட்டத் தலைமையின் முரண்களும், குளறுபடிகளும் அடுத்த காலகட்ட வேறொரு தலைமையின்கீழ் சரி செய்யப்படும் என்கிற தொடர் நிகழ்வுதான் இயற்கையின் நியதி; மனித சமூகத்தின் வளர்ச்சிக்கான விதியும் அதுவே!

தந்தை பெரியாரின் வாழ்க்கையிலிருந்து மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்கிற செய்தியினை பெறுவதுபோல மணியம்மையாரின் வாழ்விலிருந்து பகுத்தறிவு நெறியே பெண்களின் உரிமைநிறைந்த வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்கிற செய்தியை மட்டுமே பெறமுடியும். இவ்வாறே காந்தியிடம் இருந்து எளிமையும்-வாய்மையும், புத்தரிடமிருந்து பற்றற்று இருத்தல், அம்பேத்காரிடமிருந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அடங்கமறு, அத்துமீறு போன்ற செய்திகள். அல்லாமல் சமூகத்தின் ஒட்டுமொத்த வாழ்வுக்கே முன்னுதாரணமாக வாழ்ந்த மனிதர் என்று உலகில் எவருமே இல்லை.

ஆனால் ருத்ரன் சொல்வது என்ன? முன்னுதாரணமாக வாழவந்த மணியம்மையார் கள்ளத்தனத்தைக் கடைப்பிடித்து விட்டாராம்... கண்ணியமான-நேர்மையான வழிகளைக் கையாண்டிருக்க வேண்டுமாம். தமிழ்ச்சமூகத்தின் இணையற்ற பெண்விடுதலைப் போராளியான பெரியார் அதற்கு அனுமதி வழங்கி இருப்பாராம்... இவ்வாறெல்லாம் இலக்கில்லாமல் பேசுவதற்கு எந்த பெரியாரியத் தொண்டர் இவருக்குக் கற்றுக் கொடுத்தாரோ தெரியவில்லை. பெரியாரியத் தொண்டரிடமிருந்து செய்திகளைப் பெறுவதும், அவற்றைச் சார்ந்திருப்பதும் பொருத்தமானதுதானே என்று கேள்வி வேறு கேட்கிறார்.

‘வாசிப்பு வாழ்க்கையின் ஓர் அங்கம்' என்று அறிவார்த்தக் கட்டுரைகளை வெகுசன இதழ்களில் எழுதிவரும் ருத்ரன் என்ன செய்திருக்க வேண்டும்? பெரியார், மணியம்மையார் பற்றிய அனைத்து நூல்களையும் தேடிக் கண்டுபிடித்து, என்னென்ன எழுதி இருக்கிறார்கள் என்றறிந்து, அதையெல்லாம் தனது மார்க்சியப் புரிதலுடன் ஒப்பிட்டுப் பார்த்து, சரியான முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.

இல்லையெனில் ‘தமிழர் தலைவர்' எனும் ஒரு நூலினையாவது முழுவதுமாகப் படித்து, அந்நூலில் 268ம் பக்கத்தில் உள்ள தந்தை பெரியாரின் வாழ்க்கைக் குறிப்புகளைப் பார்த்திருக்க வேண்டும். அதில் 24-1-1971ல் நடந்த ஞாலம் புகழ் சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடும், ஊர்வலமும் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அந்த மாநாட்டின், ஊர்வலத்தில் இராமனுக்குச் செருப்படி கொடுத்து, இராமனுக்குத் தீ மூட்டி ‘‘ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றம் ஆக்கக்கூடாது'' என்ற சிறப்புமிக்க தீர்மானம் இயற்றப்பட்டதை யேனும் வாசிப்பில் கண்டறிந்திருக்க வேண்டும்.

சாதியத்திற்கும், பெண்ணடிமைத் தனத்திற்கும் உள்ள தொடர்பினை மராட்டியத்தில், மகாத்மா பூலே கண்டறிந்து சொன்னதைப்போல, பெண்ணடிமைத் தனத்திற்கும், ஒழுக்க மதிப்பீடுகளுக்கும் உள்ள உறவு பற்றி முதன்முதலில் அறிந்தவர் பெரியார். பெண்ணடிமைத் தனத்திற்கு மூலாதாரமே தந்தை வழிச் சமூகத்தின் ஒழுக்க மதிப்பீடுகள்தான் என்று உணர்ந்திருந்த பெரியார் இத்தகைய தீர்மானத்தை இயற்றியதில் வியப்பேதும் இல்லை.

கட்டுரையின் இறுதியில் ருத்ரன் ‘மனித இனத்தில் பாலுறவு தவிர்க்க முடியாதது என்பதைப் போலவே, அதற்கான கட்டுப்பாடுகளும், சமூக ஒழுங்குகளும் மிக அவசியமானவை' என்று கூறி முடிக்கிறார். அது உண்மைதான். ஆனால் சமூக ஒழுங்கையும், கட்டுப்பாடுகளையும் உருவாக்குபவர்கள் ருத்ரனைப் போன்ற ஆண்களாகவே இருப்பதால், மிகுந்த சலுகைகளை ஆணுக்கு மட்டும் அள்ளி வழங்கும் சமூக அமைப்பாக, இந்த ஆணாதிக்க அமைப்பு இருக்கிறது என்பதுதானே நமது முதலும் முடிவுமான குற்றச்சாட்டு...? இதற்கு என்ன பதில்...?

சரி போகட்டும். இப்போதும் ருத்ரனிடம் நாம் கோருவது ‘திட்டமாகச் சிந்திக்க சீரிய வழிமுறையினைக் கையாள வேண்டும்' என்பதே. இவ்வாறு கேட்பது கூட சுயநலத்தாலோ, பேராசை யாலோ அல்ல. பெண்ணியம் பேச ஆற்றல் மிகுந்த ஒரு தோழர் கிடைக்கக் கூடும் என்கிற நப்பாசையில்தான்.

அடுத்து தமிழக அரசியல் பற்றிய ஆய்வினுள் நுழைய எண்ணும்போது மனம் எச்சரிக்கிறது ; உள்ளுணர்வோ மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியதை உணர்த்துகிறது. காரணம் நமக்கு இந்தக் களம் புதிது. எனினும் இறங்குகின்ற களம்தான் புதிதே தவிர, அதன் மீதான சிந்தனையில் தோய்ந்த முன்முடிவுகள் மிகவும் பழையது.

தமிழக அரசியலின் மையப் புள்ளியாகவும், அச்சாணியாகவும் இருக்கின்ற தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை மையப்படுத்தாமல் இந்த ஆய்வு சாத்தியம் இல்லை என்பது வலுவான முதல் முடிவு. 1957ல் தொடங்கி 2007 முடிய தமிழகச் சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்து சட்டப் பேரவையில் பொன்விழா கண்ட அவரது சாதனை தமிழுக்கும்-தமிழருக்கும் மட்டும் கிடைத்த பெருமை அல்ல ; அது தந்தை பெரியாரின் தளராத போராட்டங்களுக்குச் சூட்டப்பட்ட மணிமகுடம்.

மாமனிதர் பெரியார் போன்ற ஒருவருக்கு தலைசிறந்த சீடராக இருக்கும் ஒருவரால்தான் இந்த அதிசயத்தை நிகழ்த்தவும் முடியும். தமது அறிவுத் திறத்தாலும், கடின உழைப்பாலும் இதனைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் முதல்வர். இதனால்தான் இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரே ஓர் அரசியல் ஞானியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். கலைஞரது பன்முக ஆற்றல்களோ நம்மை மிரள வைத்து, வியப்பின் எல்லைக்கே அழைத்துச் செல்லும் வல்லமை படைத்தவை.

தந்தை பெரியாரின் எண்ணப்படி எழ வேண்டிய தமிழ்நாடு என்கிற கோட்டையைக் கட்டுவதற்கு, ஓர் உதாரணத்திற்கு, பத்தாயிரம் செங்கற்கள் தேவைப்படுவதாக வைத்துக் கொள்வோம். அதில் இத்தனை ஆண்டுகால கடின முயற்சிகளில் ஏறக்குறைய ஐந்தாயிரம் செங்கற்களை அறிஞர் அண்ணா, கலைஞர், தி.க. தலைவர் கி.வீரமணி மற்றும் இதர முற்போக்கு சக்திகள் அனைவரும் சேர்ந்து சேகரித்து வைத்திருக்கிறார்கள் எனவும் கொள்ளலாம். இனி தேவைப்படுவது மீதி உள்ள ஐந்தாயிரம் செங்கற்களே. அவற்றையும் சேகரித்து பெரியார் ‘கனவு கண்ட தமிழ்நாட்டைக்' கட்டியமைப்பதற்கு முன்பாக, அவசியமாகவும் அவசரமாகவும் கட்டி முடிக்கப்பட வேண்டிய ஒன்று உண்டு. அது... அதுதான் தமிழர் ஒற்றுமை!

அத்தகைய ஒற்றுமையைக் கட்டவும், காக்கவும் கடந்த டிசம்பரில் திமுகவின் இளைஞரணி மாநாட்டில், தமிழக மக்களுக்கு கலைஞர் தெரிவித்த செய்தி என்ன? அதன் உள்ளார்ந்த உண்மைகள் என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொள்வதற்கு முன்பாக கடந்த நாற்பதாண்டு கால தமிழக அரசியலினுள் நுழைந்து சில செய்திகளை ஆராய்வதும் அவசியமாக இருக்கிறது.

1968ல் அண்ணா முதலமைச்சர் பொறுப்பினை ஏற்று, ஓராண்டு காலத்திலேயே மரணத்தைத் தழுவ, அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் கலைஞர் முதல்வராகப் பதவி ஏற்றார். அச்சமயத்தில், திமுகவின் பரவலான மற்றும் வலுவான வளர்ச்சிக்கு தமது திரைப்படங்களின் மூலமும், அதன்வழியே வெளிப்பட்ட நூற்றுக்கணக்கான தத்துவார்த்தப் பாடல்களின் சிறப்பாலும், தமிழக அடித்தட்டு மக்களை மிகப்பெரும் பான்மையாக கவர்ந்து வைத்திருந்தார் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

அவரது அள்ளி வழங்கும் வள்ளல்தன்மை உலகம் கண்டிராத ஒன்று. அத்தகைய மனிதநேயம் மிகுந்த எம்.ஜி.ஆர். கலைஞரோடு பிணக்கு கொண்டு அதிமுகவைத் தொடங்க 1977 தொடங்கி 1987 முடிய அவரின் ஆட்சியே தமிழகத்தில் நிலைத்தது. கலைஞரால் அவரது ஆட்சியை அசைக்க முடியாமல் போனதற்குக் காரணம் எம்.ஜி.ஆர்., கலைஞரை விடத் திறமைசாலி-மீறிய சிந்தனையாளர்-மிகப்பெரிய கொள்கைப் பற்றாளர் என்பதெல்லாம் அல்ல. அவர் மாபெரும் மனிதநேயப் பற்றாளர் என்கிற ஒரே ஒரு தகுதிக்கு முன்பு கலைஞரின் கொள்கைகள் எடுபடவில்லை. ஏனெனில் மனிதநேயம் என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மொழி ; கொள்கை கோட்பாடு என்பதோ அறிவு ஜீவிகளின் மொழி.

ஆனால் வலுவாக-வளமாகக் கட்டமைக்கப்பட வேண்டிய நிலையில் இருந்த தமிழகத்திற்கு வெறும் மனிதநேய ஆட்சி போதுமானதாக இல்லை. அதைத்தான் இன்றைய தமிழ்நாடு உரத்துச் சொல்லிக்கொண்டு இருக்கிறது. அன்றைய நிலையில் அடித்தட்டு மக்களின் மிகப் பெரும்பான்மை வாக்குகள் எம்.ஜி.ஆரிடம் சென்று சேர, அறிவு ஜீவிகளும், மத்தியதர வர்க்கமும் வாக்களிக்காமல் விலகி நிற்க, எம்.ஜி.ஆரே தனிப்பெரும் சக்தியாய் பத்தாண்டுகள் தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் இருந்தார்.

மக்களின் நலன் கருதி, தொலைநோக்குப் பார்வையோடு, கொள்கை நோக்கில் செயல்பட வேண்டிய அனைத்துத் திட்டங்களும் அவரின் ‘மனிதநேய ஆட்சியில்' மங்க ஆரம்பித்தன. அனைத்து வகையிலும் ஒடுக்கப்பட்டு, சமூகத்தின் அடித்தளத்தில் அழுந்திக் கிடந்த ஏழை மக்களுக்கு, வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்காது, மிகுந்த மனிதநேயத்தோடு பற்பல இலவசத் திட்டங்களை அறிவிக்கலானார். இலவசப் பல்பொடி தொடங்கி இலவசக் காலணி, இலவச வேட்டி சேலை, குடிசைக்கு ஒரு மின்விளக்கு, சத்துணவு, பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் என்று இலவசங்களின் ஆட்சியாக- ‘ஏழைகளின் ஆட்சி' எனும் பெயரோடு பத்தாண்டுக்கும் மேலாய்த் தொடர்ந்தது எம்.ஜி.ஆரின் மனிதநேய ஆட்சி.

ஆனால் நாட்டினை வளப்படுத்தவும், கட்டமைக்கவும் எவ்விதத்திலும் பயன்படாத இந்த இலவசத் திட்டங்களின் எதிர்வினையானது நாட்டில் லஞ்சமும், ஊழலும் பெருக்கெடுக்க வழியமைத்துத் தந்தது. பெரியாரியம் வேரோடிக் கிடந்த மண்ணில் இத்தகைய எதிர்வினை வலுவோடு செயல்பட ஆரம்பிக்கவே, பெரியாரிய வழிகள் தடுமாற ஆரம்பித்தன. நாட்டின் முதல்வரே மூகாம்பிகை அம்மனுக்குத் தீவிர பக்தரானார்.

கூடவே தொலைநோக்கற்ற திட்டங்களை ஏராளமாக அறிவித்ததன் விளைவு... எதையாவது இலவசமாகக் கொடுத்தால்தான் தமிழகத்தில், ஆட்சியைத் தக்கவைக்க முடியும் என்ற எழுதப்படாத சட்டத்திற்கு வழிவகுத்தது. இலவசத் திட்டங்களை காக்க, அரசு வருமானம் கருதி ஜெயலலிதா அரசு டாஸ்மாக் கடைகளையும் அரசுடைமை ஆக்கியது. அதன் தொடர்ச்சியாக கலைஞரும் ஏராளமான இலவசத் திட்டங்களை அறிவிக்க வேண்டியதாயிற்று.

எம்.ஜி.ஆரின் பத்தாண்டுகால ஆட்சி இலவசங்களின் ஆட்சியாகக் கழிய, மீண்டும் உதித்த கலைஞரின் ஆட்சி ராஜீவ்காந்தி கொலையுண்டதால் களவுபோனது. அதனை மீட்டுத்தர தமிழரின் ஒற்றுமை உதவவில்லை. ஏனெனில் அப்போதும் தமிழர் ஒற்றுமை என்பது கானல் நீராகவே இருந்தது.

அதன்பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதாவோ மனிதநேயப் பற்றாளர் எம்ஜிஆருக்கு வாரிசு என்ற ஒரே ஒரு தகுதியுடன் அரசாள ஆரம்பித்தார். நடிப்பு அவரது தொழில். அதில் சிறந்த தேர்ச்சி பெற்றவர் அரசியல் ஞானம் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உலக அரசியல் பற்றியோ, இந்திய அரசியல் பாடமோ, தமிழக அரசியல் வரலாறோ எதுவுமே அறியாது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர், நிர்வாகத்திறன் இல்லாத காரணத்தால், தமிழகத்தை ஒரு வெற்றிடத்தை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தார்.

அடுத்து வந்த கலைஞரோ, அதனின்றும் தமிழகத்தைப் பாதை மாற்றுவதற்குள்ளாகவே ஒற்றுமை உணர்வும், அரசியல் பிடிப்பும் இல்லாத தமிழர்கள் மீண்டும் ஜெயலலிதாவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றினர். மீண்டும் நிர்வாகச் சிக்கல்கள்; மதவாத நடவடிக்கைகள் ; கணக்கிலடங்கா குளறுபடிகள் என தமிழகம் நிலைதடுமாறிச் சாய்ந்து கொண்டிருந்தது.

ஆக இருபதாண்டு காலம் தமிழகம் கலைஞரின் கையில் இல்லாமல் போனது. இக்கால கட்டங்களில் பெரியாரியச் சிந்தனைகள் வலுவிழந்து ஆட்டம் கண்டன. தமிழின மேம்பாட்டுக்கான திட்டங்களும், தமிழரின் சுயமரியாதை இலட்சியங்களும் காணாமல் போயின. ‘விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்' என்று ஓயாது ஒலித்த எம்.ஜி.ஆரின் வாரிசான ஜெயலலிதாவோ ‘தமிழ்-தமிழர்' என்ற நோக்கே ஆபத்தானது என்று முடிவெடுத்தார். அவரது ஆட்சியில் கல்வியாளர்களின் ஆங்கில மோகம் நெய்யூற்றி வளர்க்கப்பட்டது.

காணாமல் போன இலட்சியங்களைக் கண்டடையவும், பகுத்தறிவுச் சிந்தனைகளை வென்றெடுக்கவும் கலைஞருக்கு உறுதுணையாக நிற்கவேண்டிய தமிழினச் சக்திகள் மூலைக்கொரு திசையில் முடங்கிக் கிடந்தன. தனிப்பெரும்பான்மை பலத்துடன் உருவெடுக்க வேண்டிய கலைஞர் அரசு சிறுபான்மை என்ற எள்ளலுடன் சிறுமைப்பட்டுக் கிடக்கிறது.

இத்தகைய பின்னணிகளின் தொடர்ச்சியாகவே தற்கால தமிழக அரசியல் நிகழ்வுகளைக் கணக்கிலெடுக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தின் தீர்க்க முடியாத பிரச்சினைகளாக நீளும் நதிநீர்ச் சிக்கல்கள், மீனவர்களின் நெருக்கடி, அண்டை மாநிலத் தமிழர் சிக்கல், பெரியார் பிறந்த மண்ணில் 25,000 சேரிகள் எனும் தீண்டாமைக் கொடுமை, ஈழத்தமிழரின் அவல வாழ்வு என்கிற அனைத்துக்குமே தமிழரின் ஒற்றுமையின்மைதான் காரணம் என்பதைப் புரிந்துகொள்ளவும் முடியும்.

அண்மையில் மலேசியத் தமிழரின் புதிய சிக்கலைக் கண்டு, தமிழருக்கு ஆதரவாக தமிழக முதல்வர் மெல்லிய குரல் எழுப்பியதும் அந்நாட்டு அமைச்சர் ஒருவர் ஆணவம் கலந்த அதிகாரத் தொனியுடன் முதல்வரையே அடக்க முற்பட்டாரே... அதற்குக் காரணம் தமிழரின் ஒற்றுமையின்மையை இந்தியா மட்டுமல்ல-உலகமே உணர்ந்திருக்கிறது என்பதுதானே?

கடந்த 2005ல் அய்யா ஆனைமுத்து இலங்கைப் பயணம் மேற்கொண்டபோது வீரச்சாவெய்திய மாவீரர் சுப.தமிழ்ச் செல்வன் ‘எங்களது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டுத் தமிழ்மக்கள் ஒரு லட்சம் பேர் ஒரே ஒருநாள் அடையாள உண்ணாநோன்பு இருக்க முடியாதா அய்யா?' என்று மனமுருகிக் கேட்டாரே!... அது முடியாமலேயே போய் வீணே மடிந்தாரே... அவர் இறந்ததற்கு இயல்பாக எழுந்த இரங்கல் கவிதையை வாசிக்க, அதற்கு எதிராக ஒலித்த மனிதநேயமற்ற குரல்களுக்கு அடங்கிப் போய், தமிழ் உணர்வாளர் களைச் சிறையில் வைக்க வேண்டிய இக்கட்டான நிலைமையில் கலைஞரை வைத்தி ருப்பதும் தமிழரின் ஒன்றுபடாத நிலைதானே?

ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண ‘தமிழக முதல்வரே! வரலாற்றுக் கடமையாற்ற வருக' எனக் குரலெழுப்பும் அய்யா. பழ.நெடுமாறன், தமது வரலாற்றுக் கடமையினை செலுத்தி, கலைஞரை ‘வலுவான சக்தி'யாக மாற்ற மறந்தாரே! இதனால் தானே ஈழத் தமிழர்க்கென திரட்டப்பட்ட ஒரு கோடி ரூபாய் உணவுப்பொருள்களும், மருந்தும் வீணாகிக் கொண்டி ருக்கின்றன. அதுமட்டுமல்ல... கலைஞரின் ஆட்சியல்லாது ‘வேறொரு' ஆட்சியாக இருந்திருந்தால் இந்தப் பொருளையேனும் திரட்டியிருக்க முடியுமா? மாவீரர் சுப.தமிழ்ச் செல்வனுக்கு இரங்கல் கூட்டம்தான் நடத்தியிருக்க முடியுமா?

தமிழின விரோத சக்தியால் தளைப்படுத்தப்பட்டு, மூன்றாண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த மிகப்பெரும் தமிழ் உணர்வாளர், மதிமுக தலைவர் வைகோ, மீண்டும் அங்கேயே சேர்ந்திருப்பதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தியதும் இந்த ஒற்றுமையின்மைதானே? (அவரை அங்கு கொண்டுபோய்ச் சேர்ப்பித்த சக்திகள் இப்போது அக்கட்சியிலேயே இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய செய்தி).

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறுவதுபோல, ஈழம் அமையாததற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் காரணமா? சுப.தமிழ்ச்செல்வன் மறைவிற்கு இந்தியா தந்த ரேடார் கருவிதான் காரணமா... இல்லை-தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை என்கிற உண்மைதான் மாபெரும் காரணம்.

இத்தகைய ஒற்றுமையின்மைக்கு மூல காரணம் எது என ஆராயும்போது, அதற்கும் ஒரே ஒரு காரணம்தான் தெரிய வருகிறது. பெரியாரின் சீடர் கலைஞர்-கோட்பாட்டின் அவசியம் அறியாத மனிதநேயப் பற்றாளர் எம்.ஜி.ஆர். தமிழ்-தமிழர்-தமிழ்நாடு பற்றி அறியவே விரும்பாத ஜெயலலிதா மூவரையும் ஒரே நேர்கோட்டில் வைத்து, இரு கழகங்களையும் ஒருசேரச் சாடுவதொன்றையே வேலையாகக் கொண்டிருக்கும் அறிவு ஜீவிகளும், தமிழ் உணர்வாளர்களுமே இதற்குக் காரணம்.

கலைஞரின் அரசியல் ‘குடும்ப அரசியல்' என்று எதிரிகள் வசைபாட, அதற்கு ஒத்தூதும் திமுகவின் எதிர்ப்புச் சக்திகளினால் தமிழக அரசியலின் நிலைப்புத்தன்மை நொறுங்கிப் போயிருக்கிறது. இதனால்தான் தமிழின எதிரிகளால் எளிதில் உள்ளே நுழைந்துவிடவும் முடிகிறது. நிலவுகின்ற சமூக அமைப்பில் தகப்பன் சொத்து பிள்ளைக்கு என்பதுபோல பெற்றோரின் அறிவும் முதலில் பிள்ளைகளுக்குத்தானே? அதனால்தான் நடிகர் மகன் நடிப்பு, பாடகர் மகன் பாட்டு, அரசியல்வாதி மகன் அரசியல் என்று அறியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உலகிலேயே மிகவும் அரிதான செயல் என்பது அடுத்த தலைமுறையினை நாம் விரும்புகின்ற சமூகத்திற்குத் தயார்படுத்துவதுதான் என்றுதானே சமூக விஞ்ஞானிகள் சொல்லிச் சென்றார்கள்? அதைக் குடும்பத்திலிருந்துதானே ஆரம்பிக்க வேண்டும்? புரட்சிகர மாறுதலைப் பெற்று சோசலிச நாடாகத் திகழும் கியூபாவில் கூட அடுத்த அதிபர் பிடலின் சகோதரர்தானே? இனியேனும் தமிழர் ஒற்றுமை கருதி இந்தக் ‘குடும்ப அரசியல்' என்னும் பிதற்றலை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அண்மையில் நெல்லையில் நடந்த திமுக இளைஞரணி மாநாடு ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தது. கலைஞர் புதிய முடிவினை அறிவிக்கப் போகிறார் என்று நாடே எதிர்பார்த்தது. நேற்று முளைவிட்டு, இன்று உலகைப் பார்க்கும் இளங்குருத்து, விழுதுவிட்ட மரத்தினை ஏளனம் செய்வதுபோல, ‘‘முளைவிட்டிருக்கும்'' சில கட்சிகள் திமுக மாநாட்டை விமர்சனம் செய்தன. அந்த மாநாட்டில் கழகத்தினர்க்கும், தமது மகன் அமைச்சர் ஸ்டாலினுக்கும், தமிழ்நாட்டிற்கும் கலைஞர் செய்தி எதையுமே சொல்லவில்லையா?

ஸ்டாலின் அவர்கள் தனது உரையில், ‘தலைவர் இந்த மாநாட்டிற்கென முரசொலியில் 25 கடிதங்களை எழுதினார். அதில் பகுத்தறிவு, ஆதிக்க சக்திகளை எதிர்த்தல், நீண்ட பயணத்திற்கு தயாராகுதல், தியாகம் என்பவையெல்லாம் உள்ளடங்கி இருந்தன. அத்தகுதிகளை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று தலைவர் சொல்கிறார். யானை தனது குட்டியைத் தூக்கிப் போடுவதென்பது எதிரியின் பலத்தை முறியடிக்கும் விதத்தில் குட்டி வலுவாக வளர வேண்டும் என்பதற்குத்தான்' என்று விளக்க உரை நிகழ்த்தினார்.

கலைஞர் அந்தக் கடிதங்கள் மூலம் மாநாட்டை எவ்வாறு வர்ணித்தார்? மாவோ, பிடல், சேகுவேரா போன்றோரின் புரட்சிகரப் பாதைகளின் படிப்பினைகளையும் சாக்ரடீஸ், ரூசோ போன்றோரின் சிந்தனைகளையும் தமிழக இளைஞர்கள் உள்வாங்க வேண்டும் என்பதைச் சூசகமாகச் சொல்லவில்லையா? கடந்த ஐம்பதாண்டுகளில், இருபதாண்டு கால தமது தலைமைப் பொறுப்பில் இருந்த தமிழ்நாட்டில், பெரியாரியத்தை முழுவதுமாக வளர்த்தெடுக்க முடியாமல் போனதை அவர் நினைவுகூர வில்லையா? அண்ணாவின் வழியில் தொடர்ச்சியாக உழைக்க முடியாத நிலைகளைத் தோற்றுவித்த தமிழக-இந்திய அரசியல் சூழல்களோடு தாம் சமரசமானதன் நிலைமைகளை மறைமுகமாகச் சுட்டிக்காட்டவில்லையா?

‘‘நீதிக்கட்சியின் பேரன் திமுகவையும், தமிழகத்தையும் என்னால் இயன்ற அளவிற்கு, பலவித சமரசங்களுக்கு ஆட்பட்டு, கொள்கை கோட்பாடற்ற சக்திகளிடமிருந்தும், மனிதநேயமற்ற-மதவாத சக்திகளிடமிருந்தும் காப்பாற்றிக் கொண்டு வந்துவிட்டேன். அம்மாபெரும் பொறுப்பை ஒப்படைக்கும் முன்பாக நீ பெறவேண்டிய தகுதி என்பது புரட்சிகரமான நோக்கும், ஆழமான சிந்தனைகளும்தான். அவற்றின் துணையோடு இப்பொறுப்பினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்'' என்று தமது மகனிடம் குறிப்பால்-குறளால் உணர்த்தி இருக்கிறாரே! இந்த உள்ளார்ந்த உண்மையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டாமா?

சாதிகளினால் ஒற்றுமையைக் குலைத்து, மதங்களினால் பிளவுபடுத்தி, அறியாமை நிறைந்த பொய்களைப் பரப்பி, தமிழர்களை ஆளுக்கொரு திசையாக அலைய வைத்திருக்கும் அநாமதேயங்களை இப்போதேனும் நாம் அடையாளம் காண வேண்டாமா? ஒற்றுமையின்மை என்னும் பெருநெருப்பில் தமிழரின் உரிமைகளும், உணர்வுகளும், உவகையும் தீக்கிரையாகிக் கொண்டிருக்கிறது.

தீயினை வைத்தது யார்-தூண்டியது யார் என்ற ஆராய்ச்சியல்ல இப்போதைய தேவை. தீயை அணைப்பது முதல் கடமை ; அதற்குத் தேவை தமிழர் ஒற்றுமை. நமது ஒற்றுமையின்மூலம் கிடைக்கும் நிலைப்புத் தன்மையுடன் தானே அயலகத் தமிழர்களை நம்மால் அரவணைக்க முடியும்?

தமிழகத்தின் சனநாயக சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு, பகைமைச் சக்திகளைத் தனிமைப்படுத்தி அவற்றை அரசியலிலிருந்தே ஒதுக்கிவிட வேண்டும். தமிழர் நலனைப் பெரிதாகக் கருதும் விதத்தில், தேர்தல் கட்சிகளின் வடிவத்திலும், செயற்பாடுகளிலும் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இந்த மாற்றங்கள் வளர்ச்சியடைந்து வலுப்படும்போதுதான் தமிழ்நாடு செல்ல வேண்டியதன் திசைவழியும், வழித்தடமும் ஒளிபெற்றுத் திகழும். அந்த ஒளிவெள்ளத்தில் எந்தவொரு நெடிய பயணமும் எளிதாவதென்பது உறுதியாகி விடும்.

இணையட்டும் தமிழரின் கரங்கள்!

வீழட்டும் தமிழினப் பகைமைகள்!!

வெல்லட்டும் தமிழர்தம் உரிமைகள்!!!