Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
பிப்ரவரி 2008
தலையங்கம்
தமிழக முதல்வருக்கு நன்றி

புத்தாண்டுகளின் தொடக்கம் தந்த புத்துணர்வோடு புதிய பெண்ணியம் பத்தாவது இதழ் உங்கள் கரங்களில் மலர்ந்திருக்கிறது. இதழை மேலோட்டமாக முகர்ந்து பார்த்து அப்பால் வைத்து விடுவது அல்லது ஆழமாக உள்வாங்கி, வாசனையினை அறிவது என்பதெல்லாம் உங்களின் தனிப்பட்ட விருப்பமாகவும் இருக்கிறது.

ஆனாலும், ஆழமாக முகர்ந்து இதழின் நறுமணத்தினை உணர்ந்தோரே அதிகமாக இருக்கின்றனர் என்கிற செய்தியே நமக்குப் பேருவகையையும், பெருத்த உற்சாகத்தையும் தந்திருக்கிறது. கூடுதலாக, சில கல்லூரிகளில் மாணவியரின் முதுகலைப் பட்டப் படிப்பிற்கான ஓர் ஆய்வாகவும், ஓரிரு பல்கலைக்கழகங்களில் மாணவியரின் பெண்ணிய ஆய்வுப் படிப்பிற்கெனவும் புதிய பெண்ணியம் பயன்பட்டிருக்கிறது என்பதும் பெருமிதம் கொள்ள வைத்திருக்கிறது.

பெண்ணியம் இதழ் மாதந்தோறும் மலர்ந்திட வேண்டும் என்ற ஆவலோடு ஒத்துழைக்க வந்தவர்கள் பலருண்டு. அவர்களையெல்லாம் இவ்வேளையில் மிகுந்த நன்றியுடன் நினைவுகூரக் கடமைப் பட்டிருக்கிறோம். என்ற போதும் மாதந்தோறும் வெளிவரும் காலச்சூழல் இன்னும் புதிய பெண்ணியத்திற்கு வாய்க்கவில்லை. விரைவில் அந்நிலை உருவாகி விடக்கூடும்.

இதழினை ஆழ்ந்து வாசித்தோரே அதிகம் என்ற கணக்கிற்கு நாம் வந்ததற்குக் காரணம், ஒவ்வொரு முறையும் இதழ் வெளிவந்தவுடன் நாம் எதிர்கொள்ளும் தொலைபேசி அழைப்புகளும், கள அதிர்வுகள் பகுதிக்கு மனநிறைவுடன் வந்து சேரும் கடிதங்களும்தான்.

தொலைபேசியில் அழைத்து கருத்துச் சொல்பவர்களை விடவும் கடிதங்கள் எழுதி நம்மை உற்சாகம் கொள்ள வைப்பவர்கள் மிகுந்த நன்றிக்குரியவர்களாக இருக்கிறார்கள். எனினும், தொலைபேசியில் அழைப்பவர்கள் அமைப்பு அல்லது சமூகம் சார்ந்த இயங்குவதன் காரணமாகவே அவர்களால் எழுத்தில் தமது கருத்துக்களைப் பதிவு செய்வது இயலாததாயிற்று (!) என்பதையும் நாம் உணர்ந்தே இருக்கிறோம்.

புதிய பெண்ணியம் பத்து இதழ்கள் வெளிவந்த நிலையில், நமக்கு வந்த ஏராளமான கவிதைகள், சில கதைகள், ஒருசில கட்டுரைகள் போன்றவற்றை நிராகரித்ததை இப்போது நினைத்துப் பார்த்து, அதற்கு என்ன காரணம் என்பதையும் யோசித்துப் பார்க்கிறோம். பெண்ணியம் இதழின் பார்வை, குறிக்கோள், இலக்கு என எதனையும் அறியாமல் அல்லது அறிந்து கொள்ள விரும்பாமல், பொத்தாம் பொதுவாக தனது படைப்பு ஏதோ ஒரு இதழில் வரவேண்டும் என்ற ஆதங்கத்துடன் எழுதி அனுப்பப் பட்டவையே அந்தப் படைப்புகள் என்பதையும் நம்மால் உறுதியாகச் சொல்லி விடமுடியும். இதேபோன்றுதான் மதியிடம் கேளுங்கள் பகுதிக்கு வந்த பல கேள்விகளையும் நாம் நிராகரிக்க நேர்ந்தது.

இதுதான் உண்மைநிலை என்ற போதும் அவர்களையெல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதழை முதலில் கருத்துன்றிப் படியுங்கள். கருத்துக்களின் குறைகளையோ அல்லது நிறைகளையோ கடிதமாக எழுதி அனுப்புங்கள். அந்தக் பழக்கம் தொடரும் போது இதழுக்கு எத்தகைய படைப்பினை அனுப்பி வைக்க வேண்டும், என்கிற தெளிவு இயல்பாகவே உங்களை வந்துடைந்து விடும் என்றும் சொல்வதுண்டு.

ஓரிரு கடிதங்கள் அவ்வப்போது சற்றே குதர்க்கமான தன்மையுடனும் வந்து சேரும். சான்றாக சுயசிந்தனையாளரானவர் மதி, முழுமதி என்றெல்லாம் பெயர் வைத்துக்கொள்ள காரணம் என்ன என்பது போன்ற கேள்விகளை உள்ளடக்கியவை. இதழை ஆழ்ந்து படிக்கும்போது இவ்விதக் கேள்வி எழ வாய்ப்பே இருக்காது. ஏனெனில் மத அடையாளங்களை நாம் விரும்புவதில்லை என்று சில இதழ்களில் பகிரங்கமாகவே அறிவித்து இருக்கிறோம்.

முழுமதி என்பது தமிழின் அடையாளம். நாம் தமிழர் என்பதன் உணர்வு வெளிப்பாடு அது. ஒரு காலத்தில் மட்டுமல்ல. தற்காலத்திலும் இப்போக்கு இயக்கமாகவே நடைபெற்று வருகிறது என்பதை தெரிந்து கொண்டும், தெரியாதது போல் வெளிப்படும் ஒரு மனப்போக்கு இது. எனினும் இதையெல்லாம் ஒரு குறையாக நாம் எடுத்துக் கொள்ளவில்லை. போகிற போக்கில் எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது.

கள அதிர்வுகள் பகுதிக்குக் கடிதம் எழுதியவர்களையெல்லாம் நன்றியுடன் நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் சென்ற நவம்பர் 19-ந் தேதி நடந்த சோகமான நிகழ்வு ஒன்று நினைவில் நிழலாடுகிறது. இதனால் நம்மோடு சேர்ந்து கள அதிர்வுகள் பகுதியும் கண்கலங்கி நிற்கிறது. (விவரம் அடுத்த பக்கத்தில்)

புதிய பெண்ணியம் பெண்களுக்காகவே வருகிறது, பெண்களின் நல்வாழ்வு கருதியே வெளிவருகிறது என்பதைப் பலமுறை கூறி இருக்கிறோம். இதழைப் படிக்கும் பெண்கள் தங்களது கருத்து எதுவாயினும் இதழில் பதிவு செய்யும் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்பதையும் மீண்டும் நினைவுபடுத்துகிறோம். அப்பழக்கம் சில நாட்களில் வழக்கமாக உருமாறி வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாகக் கூட அமைந்துவிட வாய்ப்பிருக்கிறது. எழுத முயலுங்கள்!

சென்ற ஆண்டு சனவரி இதழில் இதே ஆசிரியவுரையில் தமிழர் திருநாளாம் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாக அறியப்பட வேண்டும். அதனைச் செயற்படுத்துவதே நமது தலையாய கடமை என எழுதி இருந்தோம். தமிழ் அறிஞர்களின் 87 ஆண்டுகால அக்கனவு நனவாகும்வண்ணம் தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று செய்தி வந்திருக்கிறது. தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு புதிய பெண்ணியம் சார்பாகவும் மனமுவந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மீண்டும் சந்திப்போம்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com