Keetru Penniyam
Penniyam
டிசம்பர் 2008
உணர்வு மடல்

நா.நளினிதேவி

நலம். நலம் நவின்ற மடல் கண்டு மிக்க மகிழ்ச்சி ! உன் மடலில் வழக்கம்போல் உனக்கே உரிய தேடலும் தெளிவு காணும் ஆவலும் நிறைந்த கருத்துக்கள்! அவற்றின் மீதான ஐயங்கள், வினாக்கள்! குறிப்பாகப் பெண்ணிய உணர்வுடன், மொழியுணர்வை இணைத்து நீ சிந்திக்கும் போக்கு, உள்ளத்தில் உவகையை அள்ளித் தருகின்றது. தொலைவுப் பச்சையே கண்ணுக்கு அழகு என்பது போல், பிறந்த மண்ணை விட வேற்று மண்ணில் வாழ நேரும்போது தான், நம் நாடு, பண்பாடு சார்ந்த கொள்கைகள் புதிய விளக்கம் காண வைக்கின்றன. இதற்கு நம் தோழியரே தக்க சான்றாவர்.

முல்லை, விண்ணில் பறந்து கொண்டிருப்பினும் தாயக மண்ணின் வேரை விடாது பற்றியிருக்கின்றாள். பாலைச்செல்வி, பெயரில் பாலையைக் கொண்டிருப்பினும், தாய் மண்ணும் பெண்ணும் குறித்த பசுமையான எண்ணங்கள் நிறைந்தவள். காவிரி, தன் பெயருக்கு ஏற்றவாறு பொங்கும் பெருவெள்ளமாய்ப் புதுமைகளை நாடிப் பொலிவுகளையும், நலிவுகளையும் இனம் புரிந்து கொள்ளும் இனிய இயல்பினள். என் போல் இங்கேயே தங்கிவிட்ட பிற தோழியருடன், நாம் அனைவரும் கூடிக் களித்துப் பேசிச் சிரித்தும் சிந்தனை வளம் பெருக்கிய அந்த நாட்கள்! கணினிப் பதிவுகளென உள்ளுறைந்து, அவ்வப்போது உணரும் தனிமையில். மனத்திரையில் விரிகின்றன. ஆயிரம் கருத்துவேறுபாடுகளுக்கிடையேயும் தொடுமணற்கேணியென நட்பின் ஆழம் வற்றாது நலம் பயக்கின்றது.


நீ கூறுவது போன்றே நம்மில் பெரும்பாலோர் அதாவது உயர்கல்வியாளர்கள், கடவுள் தொடர்பான சடங்குகள், விரதம் எனும் உண்ணாநிலை, புதிது புதிதாகத் தோன்றும் சமய வழிபாடுகள் மடங்கள் மற்றும் நுகர்வியல் கூறுகள் போன்றவை வேறு; பெண் விடுதலை வேறு என்ற மனப்பான்மையிலிருந்து விடுபடவில்லை என்பது வருத்தம் தரக்கூடிய ஒன்றுதான். அங்கும் நம் நாட்டுப் பெண்கள், இவற்றை இந்தியப் பண்பாட்டு சிறப்புக்கள் என்ற வகையில் செயல்படுவதையும் குறிப்பிட்டுள்ளாலி. கோயில்களைக் கட்டுவதும், அங்கு வழிபாடு நடத்துவதற்கென இங்கிருந்து அர்ச்சகர்களை வரவழைப்பதும், அலமர்ந்த மண்ணின் விரைவு இயக்கத்திலும், விடாது அறிவியல் வளர்ச்சியின் எல்லை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கணிணியைக் கடவுள் மந்திரங்களுக்கு முடக்குவதும். இங்குள்ள ஊடகங்களில் தலையாய செய்திகளாக இடம் பெறுகின்றன. ஆனால் பகுத்தறிவு இயக்கங்களின் செயல்பாடுகள். மக்களின் பரவலான விழிப்புணர்வு போன்றவை இவற்றில் பெரும்பாலும் இடம் பெறுவதில்லை. ஆகையால் இவை வெளித் தெரியாமல் போயுள்ளன.