Keetru Penniyam
Penniyam
டிசம்பர் 2008
தீர்ப்பு

ஜெ.ரஞ்சனி

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம்..

சென்னை செல்லும் பேருந்திற்காகக் காத்துக் கொண்டிருந்தாள் மீனா. வெள்ளிக்கிழமை இரவு என்பதால் அனைத்துப் பேருந்துகளிலுமே கூட்டம் அலை மோதியது. இறுதியாக இடம் கிடைத்த அரசுப் பேருந்தில் ஏறி அமர்ந்தவள், சன்னலின் கண்ணாடிக் கதவைத் தள்ளினாள். ஜில்லென்று வீசிய குளிர்காற்று உடலைத் தழுவ, அதனை அனுபவிக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டாள் மீனா.

காரணம் அவளருகே அமர்ந்திருந்த இளம் பெண்ணின் மடியில் ஒரு குழந்தை உறங்கிக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த மற்றொரு குழந்தை அழ ஆரம்பித்தது. அந்தப் பெண் என்ன சொல்லியும் சமாதானம் ஆகாமல் உரக்கக் கத்த ஆரம்பித்தது.

மூன்று வயதிருக்கும் அந்தப் பெண் குழந்தை சன்னலோர இருக்கையைக் கேட்டு அழுவதை உணர்ந்த மீனா ""வாம்மா, இங்க வந்து உட்கார்ந்துக்கோ'' என்று சொல்லி எழுந்தவள் இடம் மாறி உட்கார்ந்தாள். அச் சிறுமியின் முகத்தில் மகிழ்ச்சி ததும்பியது.

மீனா அச்சிறுமியையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். நந்தினி உயிருடன் இருந்திருந்தால்.... இவள் வயது தான் இருக்கும். இந்நேரம் துறுதுறுவென வளைய வந்து கொண்டிருப்பாளே என்ற நினைவு எழும்ப மீனாவின் கண் கலங்கியது. துக்கம் பந்தாகச் சுருண்டு தொண்டையை அடைத்தது. கண்களை மூடிய போதும் நினைவுகள் நிழலாட்டம் ஆடின.

கல்லூரி மேற்படிப்பிற்காக மீனா நாகர்கோவில் சென்று விடுதியில் தங்கி இருந்த வேளை அது. அங்கு மிகப் பெரிய பேன்ஸி ஸ்டோர் வைத்திருந்த பிரபு தற்செயலாக இவளுக்கு அறிமுகம் ஆனான்.. அக் கடைக்கு அடிக்கடி செல்வதை இவள் வாடிக்கையாக வைத்துக்கொள்ள இருவரின் அறிமுகமும் காதலாகப் பரிணமித்தது.

பிரபுவின் தந்தை சாதி கருதியும், அந்தஸ்து கருதியும் அவர்களது காதலை எதிர்க்க, பிரபுவோ பிடிவாதமாக இருந்தான். . தந்தை மகனுக்கிடையில் மோதல் வலுக்கவே பிரபுவை வீட்டை விட்டே வெளியேற்றினார் அவனது தந்தை.
மீனாவிற்குத் தந்தை இல்லை என்பதோடு கூடப்பிறந்தவர்களும் இல்லை. தாய் மட்டும் தான். படிக்கச் சென்ற இடத்தில் மகள் பொறுப்பின்றி நடந்து கொண்டது அந்த ஏழைத் தாயை அல்லல்பட வைத்தாலும் வேறு வழியின்றி மகளின் காதலை ஏற்றுக் கொண்டார்.

மீனா பிரபு திருமணத்தை எளிமையாக முடித்து வைத்து தனது வீட்டிற்கு அருகிலேயே தனிக்குடித்தனம் பார்த்து வைத்தார்.
மீனா திருச்சியிலேயே ஒரு நிறுவனத்தில் சென்று வேலையில் சேர்ந்தாள். பிரபுவோ எந்த இடத்திலும் நிலையாக இருந்து வேலையினைச் செய்யாமல் ஊர் சுற்ற ஆரப்பித்தான். வேலையற்றுக் கிடந்த அவனுக்கு குடிப்பழக்கமும் வந்து சேர்ந்தது. அவர்கள் நடத்திய தாம்பத்தியத்திற்கு அடையாளமாய் நந்தினியும் பிறந்தாள். நந்தினி பிறந்தும் பத்து மாதங்கள் ஓடிவிட்டன.

குடிப்பதற்குக் கூட சம்பாதிக்கத் தகுதியற்ற நிலையில் மீனாவிடம் பணம் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தான். அவள் தரவில்லை எனும்போது அடித்துத் துன்புறுத்தவும் செய்தான்.
மீனாவின் நிலையோ இருதலைக் கொள்ளி எறும்பாகியது. அன்று ஞாயிற்றுக் கிழமை. மீனாவும் வீட்டில் இருந்தாள்.
உடல் நலமில்லாது இருந்த குழந்தைக்குப் பாலூட்டி மருந்து கொடுத்து தொட்டிலில் போட்டு தூங்க வைத்துக் கொண்டிருந்தாள் மீனா.

பிரபு சொன்னான். ""ஏய்..... இண்ணக்காவது வாய்க்கு ருசியா கறியும் மேறும் ஆக்கு. ரொம்ப நாளச்சு மட்டன் சாப்பிட்டு.....''
""மட்டன் வாங்கக் காசு கெடையாது. வேலைக்குப் போகாமே வீட்டிலேயே கெடந்தா பணம் எப்படி வரும்......''
""ஏன்..... நீ தான் சம்பாதிக்கறியே.... அதிலே வாங்கி ஆக்கிப் போடு'' என்றான்.
""மாசக்கடைசி..... எங்கிட்டேயும் காசு கிடையாது....''
""அப்படின்னா... உங்கம்மா கிட்டேப் போய் வாங்கிட்டுவா''
“சும்மா..... சும்மாப் போயி எங்கம்மாகிட்டே காசு கேக்கச் சொல்றீங்களே.... கொஞ்சம்கூட கூச்சமில்லாமே....''

பிரபு கத்தினான். “சம்பாதிக்கிற திருமிருலே பேசறியா.... எங்கப்பா கிட்ட இருக்கற சொத்துக்கு நான் சும்மா உக்காந்தே சாப்பிடலாம் தெரியுமா.... உன்னாலே எல்லாமே போச்சு.. குடிகாரன் ஆனது தான் மிச்சம்..''

""உங்கப்பா உங்களுக்குச் சொத்து தராமப் போனதுக்கு நான் மட்டுமா காரணம்....நீங்களும் விருப்பப்பட்டுத் தானே என்னைக் கல்யாணம் செய்துகிட்டீங்க.....''
""ஆமா.... அதை செஞ்சு தொலைச்சதுக்கு இப்ப நல்ல அவஸ்தைப் படறேன்.. சரி போ.... வள வளன்னு பேசிகிட்டிருக்காதே.... போலி உங்கம்மா கிட்டே பணம் வாங்கிட்டு வா....''

""என்னாலே முடியாது..... எனக்கு அவமானமா இருக்கு.....'' மீனா போகாமல் நின்று கொண்டிருந்தாள்.
அவளருகில் வந்தவன் அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்தபடி ""சொன்னதைச் செய்யாமே எதிர்த்தா பேசறே....'' என்றான்.
மீனா அதிர்ந்து போனவளாய் ஒருகணம் திகைத்து நின்றவள் விருட்டென்று தொட்டில் அருகே சென்றாள் தூங்கும் குழந்தையை எடுத்துக் கொள்ள வேண்டி.

“வேண்டாம்... குழந்தையைத் தூக்காதே..... அதைத் தூக்கிகிட்டுப் போனே... திரும்ப நீ வரமாட்டேன்னு எனக்குத் தெரியும்.... நீ மட்டும் போய் முதல்லே பணத்தை வாங்கிகிட்டு வா...."

செய்வதறியாது திகைத்தவள் கண்ணில் நீர் ததும்ப வீட்டை விட்டு வெளியே சென்றாள். வெகு நேரம் ஆகியும் மீனா திரும்ப வரவில்லை. உறங்குகின்ற குழந்தை பசியெடுத்ததாலோ என்னவோ விழித்துக் கொண்டு வீறிட்டழ ஆரம்பித்தது.

பிரபு எரிச்சலோடு சென்று தொட்டிலை ஆட்டியவன் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தான். நிமிடங்கள் கரைந்தன. மீனா வரவே இல்லை. குழந்தையின் அழுகுரல் காதைக் கிழித்தது. தொட்டிலருகில் அமர்ந்தவன் கோபத்தில் உச்சத்தில் அழுது கொண்டிருக்கும் குழந்தையின் வாயை அழுத்தமாகப் பொத்தினான்.

ஓரிரு நிமிடத்தில் அழுகை ஓய்ந்தது. மீனா இன்னும் வரவில்லை. பிரபுவின் கோபம் தவிப்பாக மாற "மீனா வரவே மாட்டாளோ'' என நினைத்தான். சேச்சே.... குழந்தை இங்கிருக்கும்போது அவளால் வராமல் இருக்க முடியுமா என்றும் நினைத்தான்.

அவனுக்குத் திடீரென தொட்டில் அசைவற்று இருப்பதாகக் தோன்றியது. பதட்டத்துடன் அருகில் சென்று தொட்டிலைத் திறந்து பார்த்தவன் நந்தினி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக நினைத்தான். ஆனால் பசியினால் அழுத குழந்தை அதற்குள்ளாகவா உறங்கிவிடும். குழந்தையைக் கூர்ந்து கவனிக்க சரேலென ஏதோ ஒன்று அவன் நினைவில் உறைத்தது.

குழந்தையின் மூக்கருகே விரலை வைத்துப் பார்த்தான். நந்தினி மூச்சடங்கிக் கிடந்தாள். வாயைப் பொத்திய வேகத்தில் குழந்தையின் மூக்கையும் சேர்த்துப் பொத்தி விட்டதை உணர்ந்தான்.

கொலைக்குற்றம் திகிலை ஏற்படுத்த பயத்துடன் வீட்டை விட்டு அவசரமாக வெளியேற எத்தனித்தான். அப்போது தான் உள்ளே நுழைந்தாள் மீனா.

கணவன் முகம் வெளிறி நிற்பதைக் கண்டு ஒன்றும் புலப்படாதவளாய் தொட்டிலின் அருகே சென்று குழந்தையைத் தூக்க முயன்றாள். அசைவற்று, மூச்சற்றுக் கிடந்த குழந்தையைக் கையிலெடுத்ததும் அலறினாள்..
""அய்யோ.... நந்தினி.... என்னடா செல்லம் என்ன ஆச்சு...'' குழந்தையை உசுப்பினாள்.

பிரபு அவள் காலில் விழுந்தான் "மீனா என்னை மன்னிச்சிடு. அநியாயமா நம்ம குழந்தையை நானே கொன்னுட்டேன். என்னை மன்னிச்சிடும்மா....'' அழுதபடி கெஞ்சினான்.

"சீ.... என் காலை விடு'' என்று அவன் கைகளிலிருந்து கால்களை விடுவித்துக் கொண்டவள் குலியோ, முறையோ என்றழுத படி குழந்தையை உலுக்கினாள்.

"செல்லம்... அம்மாவைப் பாருடா.... அம்மா வந்துட்டேன் பாருடா... கண்ணைத் தெறம்மா தங்கம்'' என்று புலம்பியவள் குழந்தையின் முகமெங்கும் முத்தமழை பொழிந்தாள்.
குழந்தையின் அசைவற்றநிலை அவளை உறைய வைத்தது.

""மீனா.... என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லு....'' அருகில் வந்தான் அவன்.

"டேய்... நீயெல்லாம் ஒரு மனுஷனாடா..... பெத்த புள்ளையை கோபத்துலே கொன்னுட்டேன்னு சொல்றியே... நீ ஒரு மிருகண்டா...பால் வடியற இந்த முகத்தை கசக்கிப் பிழிய உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு.....'' தரையில் தலையை மோதி அழுதாள் மீனா.

""மீனா... நான் சொல்றதை....''

""சீ... வாயை மூடு.... பச்சை மண்ணைக் கொலை செய்த மிருகம் நீ.... வெளி உலகத்துலே இனிமே நீ உலவக் கூடாது. போறேன்... இப்பவே போறேன் போலீசைக் கூட்டிகிட்டு வர்றேன்...''

ஆவேசத்துடன் கத்தியவாறு வெளியில் சென்றவள் ரோட்டைக் கடந்து ஓடினாள்..

"மீனா.... மீனா....'' என்று கத்தியவாறே அவளைப் பின் தொடர்ந்தவன் எதிரில் வரும் லாரியைக் கவனிக்க வில்லை. ஒரே கணம்... உடல் கூழாகிக் கீழே கிடந்தான் பிரபு.
லாரி பிரேக்கின் ஓசை காற்றைக் கிழிக்க திரும்பிப் பார்த்தாள் மீனா. நடந்ததை உணர்ந்தவள் எவ்வித சலனமுமின்றி நின்றாள்.
பேருந்தில் நுழைந்த ஓட்டுநர் ""டிக்கெட் டிக்கெட்'' என்று குரல் கொடுக்க மீனா நனவுலகத்துக்குத் திரும்பினாள்.