Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
டிசம்பர் 2006
தோள்சீலைக் கலகம்
- ஏபி. வள்ளிநாயகம்

4. திருவிதாங்கூரில் அடிமைச்சாதி - ஊழியச்சாதி பெண்களின் நிலைமை

உயிரியலின் இயங்கியலின்படி பெண், ஆண் என உருவாக்கம் நிகழ்ந்தாலும், மானுடத்தின் உயிர்ப்பித்தலுக்கு பெண்-ஆண் இணைவே உத்திரவாதமாகும். மானுடத்திற்கு பெண்ணும் ஆணுமே நிபந்தனையாகும், முழுமையாகும். பெண்ணின்றி ஆண் மட்டும் மனிதமாய் மலர்வதில்லை. ஆணின்றி பெண்ணும் மனிதமாய் விளைவதில்லை. இயற்கையின் இயங்குகதியில் பெண்-ஆண் கூறுபாட்டை உருவாக்குவது, கருவுறுதலுக்கு உந்து-உயிர்ப்பு சக்தியாகத் திகழும் 48 குரோமோசோம்களில் ஒன்றே ஒன்று மட்டுமே. இனப்பெருக்க முட்டைகளில் ஏற்படும் மாற்றம், எதிர் எதிர்நிலையில் பெண்-ஆண் என்று அமைகிறது. இவை உயிரின இயங்குநிலை பொதிந்த உள்முரண் மட்டுமே.

ஆனால், இதனை ஆண் எஜமானுத்துவம் பகை முரணாகக் கட்டமைத்து விடுகிறது. இயற்கையின் விரிப்பில் சமதளத்தில் நடைபோட வேண்டிய பெண், ஆண் இங்கிதங்களை ஆணாதிக்கச் சமூகம் கற்பிதம் செய்யும் பேதங்கள் சோகமானவை. பெண்மீது ஏவப்படும் கொடுமைகள் மனிதத் தன்மையற்றவை. பெண் இருப்பும், இயக்கமும் ஆணில் அடங்குவதாக கட்டமைக்கப்பட்டது, பாதி ஆண்கள் மறுபாதி பெண்களுக்கு செய்யும் பச்சைத் துரோகமாகும். இந்த பச்சைத் துரோகமே ஆணாதிக்க சமூகப் பண்பாட்டின் ஆக்கத்திற்கும் அழிவிற்கும், ஆண்கள் விரும்பும் பெண்ணின் நன்னடத்தைக்கு பொறுப்பாளி ஆக்கியது. ஆண் எதேச்சதிகாரமே அரசு, வரலாறு, பொருளியல் மற்றும் அதிகார பீடங்களுக்கு பொறுப்பாகிக் கொண்டது.

ஆளும் திறமைக்கு ஆண்; அடிபணியும் நிலைக்கு பெண். இதுதான் மானுட உலகில் ஏற்பட்ட முதல் விபத்தாகும்; முதல் பிளவாகும்; முதல் பயங்கரமாகும். ஆண்மய்யக் கெடுபிடிகளை பெண் மாற்ற முனையும் போது ஒட்டுமொத்த சமூகமே ஆட்டம் காணுவதாக ஆண் எஜமானத்துவம் எச்சரிக்கை கொள்கிறது. இந்தப் பதற்றத்தை உருவாக்கும் சக்திகளை தன் திடமான ஒடுக்குமுறை வியூகங்களால் அடக்கி, ஒடுக்கி விடுகிறது. சமூகம், குடும்பம் என்கிற நுண் அலசலில் பெண்மீது தொடுக்கப்படும் அடக்குமுறைகளே வேறெந்த அடக்குமுறை வகைகளை விட மேலதிகமாகும். கட்டமைக்கப்படும் ஆணாதிக்க விதிகள் அனைத்தையும் மறுபரிசீலனை இன்றி ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தப் பழக்கப்படுத்தப் படுகிறாள் பெண்.

பெண் என்பவள், ஆணின் அடைகாப்புக்குள் வாழ வாழ்க்கைப்பட்டு வருகிறவள். ஆணுக்கென தகவமைக்கப் பட்ட வாழ்வுப் பொறியில் "பட்டுக்'' கொள்கிறவள். அவள் தன் உணர்வுகளைப் பிரதிபலிக்க முடியாது. பெண்ணுக்கென்று மனித அர்த்தங்கள், மனித ஆளுமைகள் எதுவும் இருக்கக்கூடாது. பெண்ணுக் கெதிரான விதிகளை பெண்ணே பேணுமாறு நிர்ப்பந்திக்கப் படுகிறாள். பெண், பால்போல் ஒருபோதும் பொங்க முடியாது. தண்ணீர்போல் கிடந்து கொதிக்க முடியும். பெண், ஒருபோதும் வெளிவர முடியாத, ஆணாதிக்க கூண்டிற்குள்ளிருந்து வெளிவரும் பிரக்ஞையை இழக்கும்படி ஆக்கப்பட்டிருக்கிறாள். பெண்மீது பாசமிக்கதும் நேர்மிக்கதுமான சொல்லாடல்களும் கருத்தாடல்களுமே வஞ்சகமில்லா மானுட அறிவின் வெளிச்சம். இந்த வெளிச்சத்தை ஆதிக்கவகை ஆண்கள் விரும்புவது இல்லை.

இந்துத்துவ ஆட்சியின் பெயரால் பரந்த, தங்குதடையற்ற அதிகாரத்தைத் தன்னகத்தே குவித்துக் கொண்ட ஆணாதிக்கக் கோட்பாடுகள் எதுவானாலும் அதீதங்களுக்கு இட்டுச்சென்றது. இந்த அதீதங்கள் ஆணாதிக்க அதிகார மனஅமைப்புகளாலும் ஈவிரக்க மின்மைகளையும் கொண்டது. கட்டுப்பாடற்ற சுதந்திரம் ஆணுக்கு மட்டுமே உண்டு. குறிப்பிட்ட வரையறைத்தளத்துக்குள் ஆண் இருக்க வேண்டிய அவசியமில்லை என நியதிகளை உருவாக்குவதும் ஆண்தான். சமூகத்தின் எல்லாத் தளங்களிலும், இத்துணைக் கண்டத்தில் ஆணின் ஆதிக்கம்தான் என்றாலும், திருவிதாங்கூர் சமஸ்தானம் பெண்களை படுபாதாளத்தினுள் தள்ளியது.

பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட ஆதிக்கச் சாதிப் பெண்களுக்கு மனச்சிதைவு நோய் வாழ்நாள் தண்டனையானது. அவர்கள் மனச்சிதைவடைந்த பெண்களாகவே வாழ்நாளுக்கு வசமானார்கள். ஆனால், பிறப்பை வைத்து ஒடுக்கப்பட்ட அடிமைச்சாதி, ஊழியச்சாதிப் பெண்களைக் காட்டிலும், இந்து வருண சாதி அடைகாப்பு என்கிற சவர்ண உயர்மட்டத்தினுள் உட்பட்டு வாழும் ஆதிக்கச் சாதிப்பெண்கள் வசதிவாய்ப்பில், சமூக அந்தஸ்தில், பராமரிப்பில், பாதுகாப்பில் உச்சமானவர்கள். ஆதிக்கச் சாதிப்பெண்கள் பாலியல் ரீதியாக ஒடுக்கப்படும் தீண்டத்தகுந்த பெண்கள்.

ஆணாதிக்க பாலியல் வக்கிரமத்தை கொட்டித்தீர்க்க ஆதிக்கச் சாதிபெண்களும், ஆண் நிலப்பிரபுத்துவ ஏற்றத்திற்காக ஊழியச்சாதி பெண்களும், ஆண்களும் (சாணார்களான நாடார்- தீயர்களான ஈழவர் ஆண்கள், பெண்கள்) அடிமைச்சாதிப் பெண்களும், ஆண்களும் (பறையர்களான சாம்பவர்கள் - புலையர்களான மள்ளர் பெண்கள், ஆண்கள்) பகடைக் காய்களாக பயன்படுத்தப்பட்டனர். ஆணாதிக்க அச்சிலான சாதி-வர்க்க கொடுங்கோன்மையானது ஆதிக்கச் சாதிப்பெண்களை ஆக்ரமித்தது. ஊழியச்சாதி, அடிமைச்சாதிப் பெண்களை உடலுழைப்பில் கசக்கிப் பிழிந்தது.

ஊழியச்சாதி, அடிமைச்சாதிப் பெண்கள் அதே சமூக ஆண்களாலும், ஒடுக்கப்படும் வகையினமாக ஆண்இருப்பு ஒட்டுமொத்த ஆணாதிக்க பாவனைகளின் மிதப்பில் பிரதிபலித்தாலும், சாதியப் படிநிலை வரிசையில் மேல்தட்டு பார்ப்பனர், சத்திரியர், சூத்திரர் பெண்களை விடவும் பாலியல் உள்பட சகலதளங்களில் ஒப்பீட்டு அளவில் ஆதிக்கச் சாதிப் பெண்களை விட தங்கள் ஆண்களை எதிர்கொள்வதில் சுதந்திரர்களாகவே இருந்தார்கள்.

திருவிதாங்கூர் இந்துத்துவ சமூக அமைப்பு பேதப்படுத்திக் காட்டும் அக்ரகாரம் (கிராமம்) ஊர், சேரி எனத் தனித்தனி வாழிடம் போலவே சவர்ணர், சுவர்ணர் பிரச்சனைகளும் வேறு வேறு ஆனவை. மாதவிலக்கால் அனைத்துப் பெண்களும் ஒன்றென்று ஆகிவிடமுடியாது. சாதி-வர்க்க-ஆதிக்க ஆண் பரிவாரங்களுடன், ஊழியச்சாதி, அடிமைச்சாதி ஆணை, ஆண் என்ற பொருளில் ஒருபோதும் ஒன்று சேர்க்க முடியாது.
ஊழியச்சாதி, அடிமைச்சாதி பெண்களும் ஆதிக்கச்சாதி-வர்க்க ஆண், பெண் இருபாலரினாலும் தீண்டத்தகாதவர் களாகவே பாவிக்கப்பட்டார்கள்.

வேணாட்டை தன்னுள் கொண்ட திருவிதாங்கூர் தேயத்தில் இரணியல், திருவிதாங்கோடு, பாறைச்சாலை, நெய்யாற்றின்கரை, கொல்லம் முதலான இடங்களில் அடிமைப்பட்ட மக்கள், ஆடு-மாடுகளைப் போன்று விலைக்கு விற்கப்படுவதும், வாங்கப்படுவதுமான அடிமைச்சந்தை வியாபாரம் நடந்தது. விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள் மாடுகளைப் போன்று வயல்வேலைகளில் பயன்படுத்தப்பட்டதோடு, பிற அடிமை வேலைகளுக்கும் உபயோகப்படுத்தப்பட்டனர். இவ்வடிமை மக்கள் வயல்வெளிகளிலும், மேட்டுத் திடல்களிலும் இருக்க வைக்கப்பட்டனர்.

அடிமைகளின் சொந்தக்காரர்கள், தங்களுக்கு பணம் அவசியப்படும் போதெல்லாம், தங்கள் நிலபுலன்களையும், ஆடு, மாடு, கன்று காலிகளையும், நகை நட்டு ஆபரணங்களையும், பாத்திர பண்டங்களையும் ஈடுவைத்தல், ஒத்தி கொடுத்தல், விற்பனை செய்தல் போன்று தங்கள் அடிமைகளை பிறருக்கு ஈடுவைத்தும், ஒத்தி கொடுத்தும், விற்பனை செய்தும் சீதனமாக கொடுத்தும் வந்தனர். (பண்டைய சமூக சமய வரலாறு, பக்கம்: 40-41)

அடிமை வணிகத்தில் ஒருபெண் அடிமை, அரை ஆண் அடிமைகளுக்கு சமமாகும் என்ற கீழ்த்தரமான ஆணாதிக்க விதி நடைமுறையிலிருந்தது. ஒரு அடிமைப் பெண்ணின் மதிப்பு இரண்டு எருதுகளாகவும் இருந்தது. (கே.கே.குசுமான், திருவிதாங்கூரில் அடிமைத்தனம், பக்கம்:58) அடிமைச்சாதிப் பெண்களும், ஆண்களும் இருகால் விலங்குகளாகவே பாவிக்கப்பட்டார்கள்.

"மாடத்தி, தெற்கு திருவிதாங்கூரின் தெற்கு தாலுகாக்களில் ஒன்றான தோவாளையைச் சேர்ந்த தாழாக்குடி கிராமத்தின் அடிமைச் சாதியைச் சேர்ந்த பெண் ஆவாள். அடிமைச் சமூகத்திற்கே சொந்தமான ஒரே சொத்தான ஏழ்மை, பிணி இவற்றுடன் நடக்கக்கூட முடியாமல் பலவீனமாய் சோர்ந்து மூலையில் கிடக்கும் அவளை, அதே அடிமைச்சாதியின் ஆண்கள் தங்கள் எஜமானரின் கட்டளைக்கு இணங்கி இழுத்துக் கொண்டு வருகிறார்கள். நிறைமாத கர்ப்பிணியாய் இருக்கும் மாடத்தி, நெல்வயலின் மய்யத்தில் எருமைமாட்டுக்கு இணையாக கலப்பையில் பூட்டப்படுகிறாள். எருமை மாட்டுக்கு பின்னே நிற்கும் அந்த அடிமை ஆண் விரைந்து செல்லுமாறு பயங்கரமாக தாக்குகிறான். எருமை நடையை விரைவுப்படுத்துகிறது. மாடத்தி ஈடுகொடுக்க முடியாமல் பின்தங்கி விடுகிறாள். அந்த கலப்பைக்காரன் அவளை தார்க்குச்சியால் குத்துகிறான்.

"அய்யோ... என்னால் முடியவில்லை. தயவுசெய்து இரக்கம் காட்டுங்கள்,'' மாடத்தியின் கெஞ்சல். உடையில் சுத்தமும் உள்ளத்தில் அசுத்தமும் கொண்டு தூரத்தில் நிற்கும் எஜமானின் உள்ளத்தில் பரிதாபத்தை ஏற்படுத்துதற்குப் பதிலாக "அந்த நாயை நிற்க விடாதே! அவளை நன்றாக அடி, அது அவளைப் போன்றவர்களுக்கு, அவர்களைவிட உயர்ந்தவர்களிடம் கீழ்ப்படிய மறுப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்'' என்ற ஆணவம் கோபக்கட்டளையாக வெளிப்படுகிறது. அடிமை ஆண் ஆண்டையின் ஆணையை நிறைவேற்றுகிறான். நான்கு பிராணியுடன் ஈடுகொடுத்து நடக்க முயன்று, மயங்கி சரிந்து உயிர் துறக்கிறாள் மாடத்தி. இந்த பயங்கர நிகழ்ச்சியைக் கண்டு எந்தவித அசைவுமின்றி எஜமானருக்கு எதிராக ஒரு வார்த்தையும் பேசாமல் மவுனமாய் நிற்கின்றார்கள்...'' (ஜாய் ஞானதாசன், சில பகிர்வுகள்... ஒரு மறக்கப்பட்ட வரலாறு, பக்கம்: VIII)

தீண்டத்தகாத தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்கள்மீது திணிக்கப்பட்ட உடை பற்றிய கட்டுப்பாடுகள் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறலாகயிருந்தது. கடுமையான ஆணாதிக்க மரபானது அவர்ண சாதிப்பெண்களை ஆபாசப்படுத்தி அவர்களை இடுப்பிலிருந்து முழங்கால்வரை மறைக்கும் "முண்டு'' என்ற முரட்டுத் துணியைத்தான் சுற்றியிருக்க வேண்டும் என கட்டுப்படுத்தியிருந்தது. அவர்களை அரை நிர்வாணிகளாக்கியது.

சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்மக்களை, ஆதிக்கச் சாதிப்பெண்களிடமிருந்து பிரித்து, உடனடியாக அடையாளம் தெரியும் வகையில் அவர்கள் மார்பகங்களைக் காட்டிய வண்ணமே நடமாட நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். அவர்ண சாதிப்பெண்ணுக்கு அவளது சவர்ண சாதி எஜமானன் ஆண்டுக்கொருமுறை ஒன்று அல்லது இரண்டு முண்டுகள் கொடுப்பான். காலையிலிருந்து அந்தி சாயும்வரை வெயிலிலும், மழையிலும், குளிரிலும், நீரிலும் நின்றுகொண்டுகளை பறிப்பதாலும், நாற்று நடுவதாலும், ஒரே துண்டுத் துணியை நாள்தோறும் ஒரு அறுவடையிலிருந்து மறு அறுவடை வரை உடுத்துவதாலும் இந்தப் பெண்கள் அழுக்கடைந்தவர்களாக செயற்கையாகவே ஆக்கப்பட்டார்கள்.

தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்கள் தாங்கள் அடிமைப்பெண்கள் என்று அடையாளப்படுத்த கல், கண்ணாடி, இரும்பு, தகரத்திலான அணிகலன்களையே அணிய நேரிட்டது. (அடிமைகளின் தலைவர் அய்யன்காளி, பக்கம்:96) திருவிதாங்கூரில் வரிவிதிப்பு முறைமைக்கணங்கள், உலக நடப்பில் வேறெங்கும் கேள்விப்படாத, நடந்திராத வகையில் கேவலங்களை உள்வாங்கிக் கொண்டு உறைந்து கிடந்தது. சட்ட ஒப்பனைகளோடு அம்பலம் ஏறிய வரிவிதிப்புப் பட்டியலில் நிமிர்ந்த தலைகளும் வளர்ந்த முலைகளும் கூட இடம் பெற்றிருந்தது. கேவலங்களின் வெட்கம் அறியாமல் வெளிப்பட்ட, கண்மூடித்தனமாக சுரண்டும் கைங்கரியமாகிப் போன வரிகளின் பொருளடக்கத்தில் மிதமிஞ்சிய வல்லடித்தனமும் வக்கிரமும் சாதி ஆதிக்க குறியாட்டத்தின் இலக்கணமாகியிருந்தது. தங்கள் உறுப்புகளுக்கும் வரிகொடுக்கும் நிலைமைக்கு ஊழியச்சாதி-அடிமைச்சாதி பெண்களும், ஆண்களும் ஆளாக்கப்பட்டார்கள்.

ஆள்வோருக்கு வரிசெலுத்துபவர்கள் மக்கள் அல்ல; மாக்கள் - பேசத்தெரிந்த விலங்கு அவ்வளவுதான். ஆணாதிக்க-சாதி-வர்க்கத்தால் தாழ்த்தப்பட்டவர்களாக கொச்சைப் படுத்தப்பட்டவர்கள், பார்ப்பனியச் சமூக இயங்கியலின் ஒவ்வொரு அசைவிலும் கேவலப் படுத்தப்பட்டார்கள் என்பதற்கு வரிவிதிப்பு முறையும் வரிவசூல் வேட்டையும் மூர்க்கங்களின் உச்சமான சாட்சியங்களாக இருந்தது. வரிவசூல் வேட்டை நாய்களின் தொல்லை தாங்கமுடியாதநிலை ஏற்பட்டதில், சேர்த்தலையைச் சேர்ந்த தீயரான ஒரு ஈழவப்பெண் அவளுடைய இரு முலைகளையும் அறுத்து, வாழையிலையில் வைத்து வரிவசூலில் கெடுபிடியை ஏற்படுத்திய அதிகார மிருகங்களிடம் கொடுத்தாள். அப்பெண் வாழ்ந்த இடம் இக்கொடிய நிகழ்ச்சிக்குப்பின் "முலைச்சிப்பறம்பு'' என்றழைக்கப்படலாயிற்று. (என்.ஆர்.கிருஷ்ணன், ஈழவர் அன்றும் இன்றும்-பக்கம்: 89-மலையாளம்)

திருவிதாகூர் சமஸ்தான ஆணாதிக்க சாதிவெறி தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்களுக்கு முலைகளுக்குக் கூட வரியை விதித்தது. திருவிதாங்கூருக்கு வெளியில் எவரும் நம்பமுடியாத, கொடுமையான, வெறுப்பை ஏற்படுத்தும் முலைவரியால் பெண்கள் கேவலத்தையும் இழிவையும் சுமந்து நின்றனர். வரி செலுத்தமுடியாத குடும்பத்திலுள்ள பெண்களின் கூந்தலில் மர உலக்கையை வைத்து முறுக்கினர். நீண்ட கூந்தலாக இருந்தால் உலக்கையைக் கட்டி அவர்களை குனிந்த நிலையில் நிற்க வைத்தனர். முதுகில் பாரமான கற்களை ஏற்றி பலமணிநேரம் சுமக்கச் செய்தனர்.

பழுக்கக் காய்ச்சிய இரும்பு வளையங்களை பெண்களின் காதுகளில் தொங்க விட்டார்கள். பூதப்பாண்டியில் வரிகட்ட முடியாத ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப்பெண் கடும்வெயிலில் நிறுத்தப்பட்டாள். சில நாட்களுக்கு முன்தான் அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருந்தாள். கடும் வெயிலைத் தாங்க முடியாமல் அவள் கொஞ்சநேரத்தில் சுருண்டு விழுந்தாள். அவளுடைய தாய் வெளியே வந்து நகைகளைக் கொடுத்து வரிக்கடனைத் தீர்த்தார். (சி.எம்.ஆகூர், திருவிதாங்கூர் சீர்திருத்த திருச்சபை வரலாறு, பக்கம்:586)

எந்தவகையிலும் பெண்கள் அடிமைப்படுத்தப்படுவது, இழிவுபடுத்தப்படுவது, கொடுமைப்படுத்தப்படுவது - அதிலும் குறிப்பாக படைப்பு ரீதியிலான உழைக்கும் பெண்மானுடர்கள் ஆணாதிக்க-சாதி-வர்க்க பலமுனை தாக்குதல்களுக்கு ஆளாவது திருவிதாங்கூர் சமூக முரண்பாட்டில், பிரதான முரண்பாடு ஆகும்.
திருவிதாங்கூரில் அடிமைச்சாதி - ஊழியச்சாதி மனிதர்களின் முதல்வரிசை தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்களைக் கொண்டே நிரப்பப்பட்டது. பார்ப்பனிய நிலப்பிரவுத்துவ ஆணாதிக்கச் சமுதாய கட்டுக்கோப்புக்குள் அடிமைகளாகவே பிறந்து, அடிமைகளாகவே வாழ்ந்து, அடிமைகளாக இறந்தவர்கள் பறையர்களான சாம்பவர், புலையர்களான மள்ளர் மக்கட்திரள் தான். ஊழியத்திற்காகவே பிறந்து, ஊழியத்திற்காகவே வாழ்ந்து, ஊழியம் செய்தே இறந்தவர்கள் சாணார்களான நாடார்கள், தீயர்களான ஈழவர் மக்கட்திரள்தான். சாணாரும்-தீயரும் தாழ்த்தப்பட்ட சாதியில் மேலடுக்கில் இருந்தார்கள்; பறையரும்- புலையரும் கீழடுக்கில் இருந்தார்கள்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வரலாறு முழுவதிலும் உற்பத்தியிலும் உழைப்பிலும் பங்குபெற்று வருவோர்கள் இந்த தாழ்த்தப்பட்ட சாதிகளின் பெண்களும் ஆண்களும்தான்.

(கலகத்தை நோக்கி வளரும்)




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com