Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
டிசம்பர் 2006
போராட்டமே வெற்றிக்கு வழி
செ.செல்வகுமார்

மனித குல வரலாற்றின் படிநிலை வளர்ச்சி பற்றியும், ஆதிகாலத் தாய்வழிச் சமூகத்தின் சமத்துவ நிலை பற்றியும் ஏராளமான அறிஞர்கள் ஆய்வு நூல்களை எழுதி உள்ளனர். அதில் சார்லஸ் டார்வின் தமது நீண்ட கால ஆராய்ச்சியான உயிரினங்களின் படிம வளர்ச்சி ஆய்வில் தாய்வழிச் சமூகத்தின் தன்மையினைச் சிறப்பாக விளக்கியுள்ளார்.

தாய் வழிச் சமூகத்தில் அனைவருக்கும் அனைத்தும் பொதுவாக இருந்தன. பொதுவுடைமைச் சமூகமாக இருந்த அவ்வமைப்பில் தாய்த் தெய்வ வழிபாடே வழக்கத்தில் இருந்து வந்தது. இவ்வமைப்பு நாடோடி வாழ்க்கையினின்றும் விடுபட்டு, வேட்டையாடுதலைத் தவிர்த்து வேளாண் தொழிலுக்கு மனிதகுலம் மாறிய காலத்தில் மெல்ல மெல்லத் தனிஉடைமைச் சிந்தனைக்கும் ஆட்படலாற்று.

அந்நிலையே தாய்வழிச் சமூகம் வீழ்ச்சி அடைய பெரிதும் காரணமாக அமைந்தது. தாய்வழிச் சமூகக் கூறுகள் சிதைக்கப்பட்டு தந்தைமை முறை நிலை பெறலாயிற்று. இதனைத் தொடர்ந்து பெண் பல்வேறு தளைகளால் பிணைக்கப்பட்டாள். தொடர்ந்து நாளடைவில் அடக்குமுறையின் வடிவங்கள் கதைகளாகவும், பாடல்களாகவும், பழமொழிகளாகவும் திரிக்கப்பட்டு சமூகத்தில் உலவ விடப்பட்டன.

தேவதாசி முறை என்றும் கொடிய பழக்கத்தால் ஒருபகுதி பெண்ணினம் கடுமையான ஒடுக்குதலுக்கு உள்ளானது. கோயில்களில் பொட்டுக்கட்டி சாமிக்கு நேர்ந்து விடப்பட்டும், அவர்களை போகப்பொருளாகவும் கேளிக்கை சாதனமாகவும் பயன்படுத்தி வந்தனர். ஆண்டைகளும், மன்னர்களும், பார்ப்பனர்களும் இப்பெண்களை கோயில்களில் இரவு நேரத்தில் நிர்வாண நடனம் ஆடவிட்டுக் கூத்தடித்தனர். (சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி)

இல்லங்களில் பெண்கள் அவளது மாதக்கழிவு மூலம் தனியே ஒதுக்கி வைக்கப்பட்டதோடு, பெண் என்பவளே ஆணின் சுகத்திற்காக படைக்கப்பட்டவள் என்ற கருத்தை ஆழமாகச் சொல்லி வைத்தனர். அதன் வடிவமே ஆதாம் ஏவாள் கதை.

பெண்ணை வீழ்த்தியதில் ஒருபங்கு அடக்குமுறை என்றாலும், அவளை அழகு வார்த்தைகளால் வசியப்படுத்தியது மற்றொரு வகையாகும். தனிச் சொத்துடைமை என்று தோற்றுவிக்கப்பட்டதோ அன்றே பெண் போற்றுதலுக்கும் ஒடுக்குதலுக்கும் ஒருசேர ஆளானாள்.

தாழ்த்தப்பட்டவர்களிடமிருந்து உழைப்பை உறிஞ்சிவிட்டு அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்த அதே
ஆதிக்க வர்க்கம்தான் பெண்ணின் உரிமைகளையும், உணர்வுகளையும் ஒருங்கே சுரண்டிவந்தன. பெண் என்பவள் பூமியைப்போன்று பொறுமையின் வடிவம் என்று குறிப்பிடப்பட்டு ஆண் என்பவன் அடக்குமுறையின் வடிவமாக விளங்கினான்.

இவ்வாறு நிலைத்து நீடித்து நின்ற பல்லாயிரம் ஆண்டு கால ஆணாதிக்க சமூகம் இன்று தவறுகளைத் தயக்கமின்றி செய்துவிட்டுத் தலைநிமிர்ந்து நிற்பதற்கு உறுதுணையாக அவர்களால் உருவாக்கப்பட்ட சட்டமும் துணை போகிறது. அதன் வெளிப்பாடு தான் பெண்மீதான ஒடுக்குமுறையின் அளவு நாளுக்கு நாள் அதிகரிப்பது. கடந்த 2004ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரம் பெண்ணின் இன்றைய நிலையைத் தெளிவாகச் சொல்கிறது.

29 நிமிடத்திற்கு ஒரு பெண் கற்பழிப்பு

75 நிமிடத்திற்கு ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் சாவு.

16 நிமிடத்திற்கு ஒரு பெண் கொலை.

23 நிமிடத்திற்கு ஒரு பெண் கடத்தல்

29 நிமிடத்திற்கு ஒரு பெண்ணிடம் வழிப்பறி.

9 நிமிடத்திற்கு ஒரு பெண்ணுக்கு கணவனால் கொடுமை

15 நிமிடத்திற்கு ஒரு சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்.

இத்தகைய தவறுகளைச் செய்யும் ஆண்களுக்கு சில ஆண்டு சிறையும், சில ஆயிரம் ரூபாய் அபராதமும் தான் சட்டம் சொல்லும் நீதி. தவறு செய்தவன் தண்டிக்கப்பட்டான். அவன் தண்டனை முடிந்தவுடன் மீண்டும் அவன் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி விடுகிறான். அதனை இச்சமூகம் ‘சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை' என்று கூறி ஏற்றுக்கொள்கின்றது. இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு என்ன நீதி கிடைக்கிறது? சீரழிக்கப்பட்ட பெண் மீண்டும் தன் இயல்பு வாழ்க்கைக்குச் செல்ல சட்டத்திலும் சமூகத்திலும் எவ்வித இடமும் இதுவரை இல்லை. தனக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து நொந்துபோய் மடிந்து போவோர்தான் ஏராளம். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் சிலர் திசைமாறிப்போய் வாழ்வைச் சீரழித்துக் கொள்கின்றனர். சிலரே மனித நேயமுள்ளவர்களாலும், பெண்ணிய வாதிகளாலும் மணமுடிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எவ்வித வழியிலும் சட்டமும், சமுதாயமும் எந்தவொரு நிவாரணத்தையும் இதுவரை தரவில்லை.

இன்று பெண்ணை வெறும் அலங்கார பொம்மைகளாக அழகு பதுமையாகவும் மாற்றி அதன் மூலம் சுரண்டி கொழுத்து வரும் ஏகாதிபத்தியத்தின் எடுபிடி முதலாளிய கூட்டங்களே என்பதை அனைவரும் உணர வேண்டியது அவசியம். பெரும்பாலும் பெண்களை நகைகளை அணிந்து வரும் சுமைதாங்கிகளாகவும் பட்டுச்சேலை சுற்றி வரும் சோளக்கொல்லை பொம்மைகளாகவும், அனைத்துப் பொருட்களின் ஆரவாரமான விளம்பரத்தில் அரைகுறை ஆடையில் தோற்றமளிக்கவும் செய்கின்றனர். இதுபற்றிய சிந்தனையிலேயே அவர்கள் உழல வேண்டும் என்பதில் ஆதிக்கச் சக்திகள் வெற்றி பெற்று உள்ளன. இவற்றிற்கு எதிராகக் கடுமையான போராட்டங்களை தொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை பெண்ணியவாதிகள் உணர்ந்தும் இருக்கிறார்கள்.

தொடர்ந்து போராடுவோம். வெற்றிக் கனியைப் பறிப்போம்.




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com