Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
டிசம்பர் 2006
அவலம்
க.தேவி

ஆற்றங்கரையோர சின்னஞ்சிறு கிராமம் அது. பூஞ்சோலை என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமானதாகவே இருந்தது. வளமையும் வனப்பும் பெற்றிருந்த அந்தக் கிராமத்து மக்கள் எளிமையும் ஏற்றமும் நிறைந்த வாழ்க்கையையே வாழ்ந்து வந்தனர். அவர்களின் ஒருத்திதான் பூரணி. தாய் தந்தையை இளம் வயதிலேயே பறிகொடுத்த பூரணி தன் தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்தாள். மேல்நிலைப்பள்ளிக் கல்வியைக் கூட முழுவதுமாக முடித்திராத நிலையில் பதினாறு வயதிலேயே திருமணம் முடித்து கோவை நகரில் புதுக்குடித்தன வாழ்க்கையை ஆரம்பித்தாள்.

அவளது கணவன் சங்கர் கோவையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்ப்பவனாக இருந்தான். தனிக்குடித்தனம் என்பதால் கடுமையான பிரச்சனைகள் இல்லாமல் ஓரளவு மகிழ்ச்சியுடனேயே இல்லறம் நடந்து கொண்டிருந்தது. திருமணம் முடிந்து கடந்துபோன ஏழாண்டுகளில் இரு குழந்தைகளுக்குத் தாயானாள் பூரணி. ஆறு வயதில் மகனும், நான்கு வயதில் மகளும் அவளது இல்லற வாழ்க்கைக்கு அழுத்தமான சாட்சியங்களாக இருந்தனர்.

பூரணியின் தாத்தாவும் இக்கால இடைவெளியில் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி இறந்து விடவே பூரணிக்கு இருந்த ஒரே ஒரு நெருங்கிய உறவு என்பதும் இல்லை யென்றானது. இத்தகைய சூழலை மேலும் இறுக்கமாக்குவது போல சங்கரின் அண்மைக்கால நடவடிக்கைகள் இருக்கவே பூரணி நிலை குலைந்து போனாள்.

திருமணமான புதிதில் அவன் நண்பர்களைத் தன் வீட்டிற்கு அழைத்து வருவதும் இவர்களிருவரும் அவர்கள் வீட்டிற்குச் செல்வது என்பதும் பூரணிக்கும் மகிழ்ச்சி தருவதாகவே இருந்தது. ஆனால் குழந்தைகள் பிறந்த பின்னரும் இவ்வாறு நண்பர்கள் அடிக்கடி வருவதென்பது இவளின் வேலைப் பளுவினைக் கூட்டியது. கூடவே கணவனின் பாராமுகம் வேறு இவளுக்குப் பேரிடியாக இருந்தது. சங்கர் அவளிடம் கோபத்தைப் பலவழிகளில் காட்ட ஆரம்பித்தான். அன்று மாலைகூட அப்படித்தான். வேலைவிட்டு இரவு ஏழு மணியளவில் வீடு வந்தவனோடு கூடவே இரண்டு நண்பர்கள். மனக்குமுறலை அடக்கிக்கொண்டு பார்த்துப் பார்த்து அவர்களை உபசரித்தபோதும் சங்கரின் கோபத்திற்கு ஆளானாள். நண்பர்கள் எதிரிலேயே அவளை வேலைக்காரியாக நடத்தியதும், வசவுமழை பொழிந்ததும் அவளைக் கடுமையான வேதனையிலாழ்த்தியது.

நாட்கள் செல்லச் செல்ல இவளது வேதனைதான் அதிகமாயிற்றே தவிர சங்கர் மாறுவதாகத் தெரியவில்லை. அரசல் புரசலாக அவள் காதில் விழுந்த சங்கதி வேறு அவளை வருத்தத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. அன்றிரவு சாப்பிட்டு முடித்தபின்பு அவள் மெல்ல ஆரம்பித்தாள்.

“என்னங்க... நான் ஒன்னு கேக்கறேன். கோவிச்சுக்க மாட்டீங்களே...'' என்றாள்.

அவன் பதில் ஒன்றும் சொல்லாதவனாக அவளை முறைத்துப் பார்க்க இவள் பயத்தில் ஒடுங்கிப் போனாள். என்றாலும் சிறிது நேரத்திற்குள்ளாக எப்படியோ மெல்லத் துணிவை வரவழைத்து சன்னமான குரலில் கேட்டாள்.

“உங்க ஆபிசிலே வேலை செய்யற சுமதியோட உங்களைத் தியேட்டர்ல பார்த்ததா சொல்றாங்க...''

“யார் சொன்னது...''

“பக்கத்து வீட்டு அக்கா...''

“ஆமா... போனேன்... அதுக்கென்ன இப்போ...''

“உங்களுக்கே இது நியாயம்னு படுதா...''

“நியாய அநியாயமெல்லாம் பேசற அளவுக்கு உனக்கு அறிவு வளர்ந்துடுச்சா? பட்டிக்காட்டுக் கழுதை... மூணு வேளை வெந்ததைத் தின்னுட்டு சொல்ற வேலையைச் செய்துட்டு, வாயை மூடிக்கிட்டு இருக்கணும்... தெரியுதா... என்ன..எதுக்குன்னு கேள்வி கேட்டே... அடிச்சுத் தொரத்திடுவேன்...''

பூரணி வாயை மூடிக்கொண்டாள். சொல்வதை அவன் செய்து காட்டுவான் என்பதும் அவளுக்குப் புரிந்திருந்தது. போக்கிடமற்ற தனது வாழ்க்கையை நினைத்து உள்ளூர அழுதாள். குழந்தைகளின் முகம் கண்டு தனது துன்பத்தைத் தொலைக்கக் கற்றுக்கொண்டாள் பூரணி.

இதுவும் காலத்திற்குப் பொறுக்கவில்லை போலிருக்கிறது.

மணி ஐந்தாகி விட்டது. பள்ளியிலிருந்து மகளும், மகனும் வருகிற நேரமாயிற்றே? தட்டில் பலகாரங்களை வைத்து வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தாள் பூரணி. மணி ஆறும் ஆயிற்று. குழந்தைகள் இன்னும் வரவில்லை. மனம் பரபரக்க வீட்டைப் பூட்டிக்கொண்டு அடுத்த தெருவில் இருக்கும் கமலாவின் வீட்டுக்குச் சென்றாள். கமலாவின் மகளும் இவளது குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிப்பவள்தான். பூரணியைப் பார்த்ததும் அவளும் கேட்டாள்.

“பூரணி... நானும் உன் வீட்டுக்குத்தான் கௌம்பிகிட்டு இருந்தேன். இன்னும் ஸ்கூல் பஸ் வரலையே... என்ன சேதின்னு உனக்கு ஏதாவது தெரியுமான்னு கேக்கலாம்னுதான் நானும் கௌம்பினேன்...''

"தெரியலையே கமலா... எனக்கும் மனசு கெடந்து அடிச்சிக்குது. யாரைப் போய் கேக்கறது... ஸ்கூலுக்குப் போன் பண்ணிக் கேக்கலாமா...''

“சட்டுனு நம்பர் கூட நெனவுக்கு வரலே. ஒரு நோட்டுலே எழுதி வெச்சிருக்கேன். இரு, எடுத்துட்டு வர்றேன்...'' வீட்டினுள் சென்றாள் கமலா. அப்போதுதான் பூரணியின் எதிர்வீட்டுச் சிறுவன் ஆறுமுகம் அலறலோடு அங்கு ஓடி வந்தான்.

“அக்கா... ஸ்கூல் பஸ் வர்ற வழியிலே ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம். ஆறு பேர் அதே இடத்துல செத்துப் போயிட்டாங்களாம்...''

பூரணிக்குப் புலன்களின் இயக்கம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது. மெல்ல மெல்ல நினைவிழந்தவள் மயங்கிக் கீழே சரிந்தாள். அந்த கோரவிபத்து நடந்தும் ஒரு வாரம் ஓடிவிட்டது. கமலாவின் மகள் பிழைத்துக் கொள்ள பூரணியின் மகனும், மகளும் ஒருசேரப் பலியாகிப் போயினர். அந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்து பூரணி மீளவே இல்லை.

வாரங்கள் மாதங்களாக வளர்ந்தன. தனது குழந்தைகளின் வரவை எதிர்பார்த்து பித்துப் பிடித்தவளாய் வாசலிலேயே அமர்ந்திருக்கலானாள் பூரணி.

சங்கர் மறுமணம் செய்துகொள்ளும் ஏற்பாட்டில் தீவிரமாக இறங்கினான் நண்பர்களின் துணையோடு. பூரணியை ஏர்வாடியில் உள்ள ஒரு மனநலக் காப்பகத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தான்.

கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு சுவரோடு சுவராக அமர்த்தி வைக்கப்பட்டிருந்த அந்தப் பரிதாபத்திற்குரிய மனநோயாளிகளில் ஒருத்தியாக பூரணியும் சிறை வைக்கப்பட்டாள். அங்கு வந்த ஒருசில நாட்களிலேயே அவளது பிரமை தெளிந்தது. அந்தப் புதிய இடமும், அந்த மனநோயாளிகளின் பரிதாபக் கத்தலும், சிரிப்பும் அழுகையும் கலந்து வெளிப்படும் விநோதக் கூச்சல்களும் அவளை அதிர்ச்சியிலிருந்து மீட்டெடுத்திருக்க வேண்டும். அதோடு அங்கு பணிபுரிந்த ரங்கம்மா என்னும் ஆயாவின் அன்பும் அரவணைப்பும் கூட அவளை மெதுவாக தன்னிலைக்குக் கொண்டுவந்தது என்றும் சொல்லலாம். தெளிவடைந்த பூரணியிடம் ஆயா, சங்கர் மறுமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதைப் பற்றிச் சொல்ல, இவளுக்கு அது அதிர்ச்சியான செய்தியாகத் தெரியவில்லை - எதிர்பார்த்ததாகவே இருந்தது. ஆனாலும் குழந்தைகளை இழந்த அதிர்ச்சியில் உறைந்தவளை பைத்தியம் என்று பட்டம் கட்டி இங்கு கொண்டுவந்து சேர்த்ததை நினைத்து வெம்பி வெதும்பினாள்.

ஆயா ரங்கம்மாள்தான் பூரணியின் நிலைக்கு மிகவும் வருத்தப்பட்டாள். அன்று மாலையே அந்த மனநலக் காப்பகத்தின் உரிமையாளரிடம் சொன்னாள். “ஐயா... இந்தப் பொண்ணு பூரணிக்கு சித்தபிரமை நீங்கிப் போச்சுங்க. ரொம்பத் தெளிவாப் பேச ஆரம்பிச்சிட்டா. நாளைக்கு அவங்க வீட்டுக்காரர்கிட்ட இந்த சேதியைச் சொல்லி அவரோட வீட்டுக்கு அனுப்பி வெச்சிடலாமுங்க...''

உரிமையாளர் அவளைக் கடிந்துகொண்டார்.

“வர்ற வருமானத்தையும் நீ கெடுத்துடுவே போல இருக்கே. வந்த பைத்தியங்களையெல்லாம் ஒரு வாரத்திலே குணமாயிடுச்சுன்னு வீட்டுக்கு அனுப்பி வெச்சிட்டா... அப்பறம் நான் தலையிலே துண்டைப் போட்டுகிட்டுப் போய்ச்சேர வேண்டியதுதான். பேசாமே அவளைக் கட்டி வெச்சிட்டு நீ உன்னோட வேலையைப் பாரு. எப்ப அனுப்பணும்னு எனக்குத் தெரியும். அதிகப் பிரசங்கித்தனம் பண்ணினியோ உன் சீட்டைக் கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிடுவேன்...'' என்று எச்சரித்து விட்டுச் சென்றார்.

ஆயாவும் வேறு வழி தெரியாதவளாக மற்ற பைத்தியங்களைப்போல அவளையும் சங்கிலியைப் பிணைத்து தூணில் கட்டி வைத்து விட்டுக் கிளம்பினாள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டுமிருந்த பூரணிக்கு இந்த உலகமே மிகவும் அருவெறுப்பானதாகத் தோன்றியது. இந்த மனிதர்கள் அனைவருமே இப்படித்தானா... கேடுகெட்ட இவ்வுலகம் திருந்தவே திருந்தாதா... என்கிற யோசனையோடு இனி என்ன செய்வது என்றும் சிந்திக்க ஆரம்பித்தாள்.

நள்ளிரவு கடந்தும் விழித்துக் கொண்டே இருந்தாள். எப்போதும் காவலில் இருக்கும் காவலாளியைக் கூட காணோம். மெதுவாகத் தனது கால்களில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியினை அசைக்கவும், உருவவும் ஆன முயற்சியில் ஈடுபட்டாள். இரண்டு மணிநேரப் போராட்டத்திற்குப்பிறகு தனது முயற்சியில் வெற்றியும் பெற்றுவிட்டாள். ஒருவேளை ஆயா ரங்கம்மா தன்மீது ஏற்பட்ட பரிதாபத்தில் சங்கலியை இறுகப் பிணைக்காமல் சென்று விட்டாளோ என்ற சந்தேகமும் பூரணிக்கு எழுந்தது. எப்படியோ தப்பித்தாயிற்று. ஓலை வேய்ந்த அந்தக் கூடாரத்தினின்றும் மெல்ல வெளியேறி ஒரே ஓட்டமாக ஓடி வந்தவள் ஆளரவம் இல்லாத தொலைவு வந்ததும் மெல்ல அமர்ந்து வெளிஉலகின் காற்றை நிதானமாக சுவாசித்தாள்.

எங்கு போவது? என்ன செய்வது... கணவனிடம் சென்றால் மீண்டும் அவளைக் கொண்டுவந்து இதே இடத்தில் விடமாட்டான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை... மெல்ல எழுந்தவள் கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள்.

திடீரெனக் கூச்சலும் அலறலுமாய் ஏகத்திற்கும் பயங்கரமான சத்தம். விடியலை நோக்கிச் சென்று கொண்டிருந்த அமைதி நிறைந்த இரவுப்பொழுதை மரண ஓலம் குத்திக் கிழித்தது. பூரணி திரும்பிப் பார்த்தாள். அவள் அடைக்கப்பட்டு வைத்திருந்த அந்த மனநலக் காப்பகத்தின் ஓலை வேய்ந்த கூடாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

“ஐயோ...'' என்றலறியவள் திரும்பவும் அதே இடத்திற்கு ஓடினாள். அவளைப் போலவே அக்கம் பக்கத்திலிருக்கும் நிறைய பேர் உறக்கம் கலைந்து எழுந்து ஓடிவந்தனர்.

ஒரு நில நிமிடங்களிலேயே தீ முற்றுமாக அந்தக் கூடாரத்தை எரித்து அழித்தது. சங்கிலியில் கட்டப்பட்டிருந்த மனநோயாளிகள் கரிக்கட்டைகளாக வெந்து கிடந்தனர். உதவ ஓடி வந்தவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். பூரணி மனதை உலுக்கும் அந்த மரண ஓலத்திற்குள் மெல்ல அமிழ்ந்து கொண்டிருந்தாள். நெருப்பின் ஜ்வாலை கண்களில் மின்ன அதையே உற்றுப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

ஓயவே ஓயாத மரண ஓலம் அவள் காதுகளில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்போது இன்னொரு மனநலக் காப்பகத்தில் உண்மையான மனநோயாளியாக பூரணி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாள்!




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com