Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
டிசம்பர் 2006
முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமை
அருணா

தமிழகத் தென்மாவட்ட மக்களின் வாழ்வுக்கு உயிர்நாடியாக இருந்துவரும் முல்லைப்பெரியாறு அணையில் நமக்குள்ள சட்டப்படியான உரிமையைக் கூட தர மறுக்கிறது அண்டை மாநிலக் கேரள அரசு. இருபத்தி ஆறு ஆண்டு காலத்திய இப்பிரச்சினைக்கு கடந்த பிப்ரவரி மாதம் 27ந் தேதி உச்சநீதிமன்றம் சரியானதொரு தீர்ப்பை வழங்கி தமிழக மக்களின் உரிமையை நிலைநிறுத்தியது.

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து உடனடியாக 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். இந்த நடவடிக்கைக்கு கேரள அரசு எவ்விதமான முட்டுக்கட்டையும் போடக்கூடாது. அணையின் சீரமைப்புப் பணி நிறைவுற்றதும் 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்பதே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இத்தீர்ப்பு வந்த நேரத்தில் தமிழகம் சட்டமன்றத் தேர்தல் களத்தில் கவனத்தைக் குவித்திருக்க, இலவசத் திட்டங்களை மாறி மாறி அள்ளி வீசுவதில் குறியாக இருந்த அரசியல் கட்சிகள் சிறப்புமிக்க இத்தீர்ப்பினைக் கண்டுகொள்வதில் அசட்டையாக இருக்கவே இத்தருணத்தை தக்கவிதத்தில் பயன்படுத்திக் கொண்டது கேரள அரசு.

உச்சநீதிமன்றத்தின் ஆணையைத் துச்சமென மதித்து அதனை ஏற்க மறுத்ததோடு அந்த ஆணையையே செல்லாதது ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு அணைப்பாதுகாப்பு ஆணையம் ஒன்றை நிறுவுவதற்கான அவசரச் சட்டத்தையும் கொண்டு வந்தது. உச்சநீதிமன்ற ஆணையின்படி 142 அடியாக நீரை ஏற்ற மாட்டோம் என்றதோடு நில்லாமல் இப்போதுள்ள அணையை இடித்துவிட்டுப் புதிதாக ஓர் அணையைக் கட்ட வேண்டும் என்கிற தீர்மானத்தையும் பேரவையில் நிறைவேற்றி விட்டனர்.

கேரள அரசின் இத்தகைய நடவடிக்கைகளில் உள்ள அடாவடித்தனத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமாயின் பெரியாறு அணையில் தமிழகத்திற்குள்ள உரிமை பற்றிய வரலாற்றினை அறிவது அவசியம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், அடிக்கடி பருவமழை பொய்த்து தமிழகத் தென்மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம் பகுதி மக்கள் வறட்சியின் பிடியில் சிக்கிப் பசியிலும், பட்டினியிலும் கிடந்து உழன்றனர். இதனைச் சீர்செய்ய நினைத்த ஆங்கிலேய அரசு நீண்டதொரு ஆய்வை நடத்தி கம்பம் பள்ளத்தாக்கில் அதிக அளவிலான ஆறுகள் வீணே சென்று கடலில் கலப்பதை அறிந்து, அதைத் தடுக்கும் விதத்தில் அணை கட்ட முடிவு செய்தது. 1874ம் ஆண்டு பென்னிகுக் என்பவர் தலைமையில் அணைகட்டும் பணியைத் தொடங்கி 21 ஆண்டுகளுக்குப் பிறகு 1895ல் கட்டி முடிக்கப்பட்டது. 10-10-1895ல் திறக்கப்பட்ட இந்தப் பெரியாறு அணையின் நீர்வள உரிமையை தமிழகம் 999 ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமும் நிறைவேற்றப் பட்டது.

ஆனால் 1956ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பெரியாறு அணையைக் கருத்தில் கொண்டு, தமிழர்கள் அதிகம் வாழ்ந்துவந்த பீர்மேடு, தேவிகுளம் போன்ற தமிழகப் பகுதிகளைக் கேரளத்துடன் இணைக்கப் பெரிதும் போராடி வெற்றிபெற்றது கேரள அரசு. பின்னர் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 1976ல் பெரியாறு அணையைவிட ஏழு மடங்கு பெரிதான இடுக்கி அணையைக் கட்டியது கேரள அரசு. (இடுக்கி அணையின் கொள்ளளவு 71.865 டி.எம்.சி. பெரியாறு அணையின் கொள்ளளவு 15.565 டி.எம்.சி. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு அந்தப் பெரிய அணைக்கு நீர்வரத்து கிடைக்கவில்லை. அப்போது கேரள மின்வாரியத் தலைமைப் பொறியாளராக இருந்த பரமேஸ்வரன் (நாயர்) என்பவர் 152 அடி உயர பெரியாறு அணையின் நீர்மட்ட அளவினை 136 ஆகக் குறைத்து 16 அடித் தண்ணீரை இடுக்கி அணைக்குக் கொண்டு செல்லலாம் எனப் பரிந்துரைத்தார். இதன் பின்னரே பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டதாகவும், பூகம்பப் பகுதியில் அமையப் பெற்றிருப்பதாகவும் புரளி கிளப்பி விடப்பட்டு 136 அடியாகக் குறைக்கப்பட்டது.

பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்ட பின்பு தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏற்பட்ட விவசாய உற்பத்தி இழப்பு ரூ.55.80 கோடியாகும். மின்உற்பத்தி இழப்போ ஆண்டுக்கு 75 கோடி ரூபாய். 1980லிருந்து 2006ம் ஆண்டுவரை ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு 3561.6 கோடி ரூபாய் ஆகும். அணையின் நியாயமான உரிமை மறுக்கப்பட்டு பேரிழப்புக்கு உண்டான தமிழக மக்களும் விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் போராட்டங்களைக் கடுமையாக்கவே மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு ஒரு சமரசத் தீர்வைச் சொன்னது. தமிழக அரசு 21 கோடி ரூபாய் செலவில் பெரியாறு அணையைப் பலப்படுத்த வேண்டும். அவ்வாறு பலப்படுத்தியபின்பு 152 அடி நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தப்படி அந்தச் சீரமைப்புப் பணியினைச் செய்யவிடாது கேரள அரசு எத்தனையோ தடைகளை ஏற்படுத்தினாலும் தமிழக அரசு அதையெல்லாம் மீறி சீரமைப்புப் பணியை முடித்தது. அதன்பின்னரும் நீர்மட்டத்தை உயர்த்தக் கேரள அரசு மறுக்கவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.

அணையின் சீரமைப்பு பணியை ஆய்வுசெய்த தமிழகத்தையோ, கேரளத்தையோ சாராத வல்லுநர் குழு ஒன்று 2001ம் ஆண்டு சனவரி மாதம் 23ந் தேதியன்றே அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று கேரள அரசுக்குப் பரிந்துரை செய்தது. ஆனால் இதைக் காதில் வாங்கிக்கொள்ளாத கேரள அரசு ஐந்து ஆண்டுகளைத் தன்னிச்சையாக தாமதப்படுத்திக் கடத்திக்கொண்டிருக்க 27-2-2006 அன்று உச்சநீதிமன்றம் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உடனடியாக 142 அடியாக உயர்த்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் கேரள முதல்வர் அச்சுதானந்தனோ உச்சநீதிமன்ற ஆணையைத் துச்சமெனக் கருதி, தமிழக அரசின் அனுமதியைக் கூட பெறாமல் கடற்படை அதிகாரிகள் சிலரைக் கொண்டு பெரியாறு அணையை ஆய்வுசெய்ய முயற்சித்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மலையாளி என்பதால் அவரும் இதற்கு ஆதரவு.

பெரியாற்றில் கிடைக்கும் நீரின் அளவு 4867 டி.எம்.சி. கேரளாவிற்குத் தேவைப்படும் நீரின் அதிகபட்ச அளவு 2554 டி.எம்.சி.தான். மீதி கடலில் வீணாகக் கலக்கும் நீரின் அளவு 2313 டி.எம்.சி. இந்த வீணாகும் நீரில் தமிழ்நாடு கேட்பதும், தமிழ்நாட்டிற்குத் தேவையும் வெறும் 126 டி.எம்.சி. நீர் மட்டுமே. கடலில் விட்டாலும் விடுவோமே தவிர தமிழகத்திற்குத் தரமாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கிறது கேரள அரசு.

இதன் காரணமாக தென்தமிழ்நாட்டில் முன்கூறிய ஐந்து மாவட்ட விவசாயிகளும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். அண்டை மாநிலத்தின் உரிமையை மதிக்காத கேரள அரசு செய்நன்றி மறந்த அரசாகவும் இருக்கிறது என்பதே உண்மை. தமிழகத்திலிருந்து கேரளத்திற்கு நாள்தோறும் 700 டன் அரிசி அனுப்பப்படுகிறது. அதோடு காய்கறி, உணவுப்பொருட்கள், இறைச்சிக்கான கால்நடைகள் என்று அத்தியாவசியப் பண்டங்கள் ஏராளமாக கேரளாவிற்குச் சென்று கொண்டிருக்கின்றன. 700 டன் அரிசியை உற்பத்தி செய்வதற்கே 511 டி.எம்.சி. தண்ணீர் தேவைப் படுகிறது. மற்றவற்றின் விளைச்சலுக்கும் சேர்த்துக் கணக்கிடும்போது தமிழ்மண்ணின் நீர்வளம் கேரளத்தால் எவ்வளவு சுரண்டப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிய வரும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரும் அணை பலவீனம், நிலநடுக்கப்பகுதி, புதிய அணை தேவை என்று பொருந்தாக் காரணங்களைச் சொல்லி நாளைக் கடத்தும் கேரள அரசிற்குத் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். கடந்த நவம்பர் மாதம் 29ந் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற முதல்வர்கள் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்திருக்கிறது. தமிழ்மக்களின் - தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சனை இது என்பதை உணர்ந்து சாதி, மத, அரசியல் வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடுவதன் மூலமே நமது உரிமையை நழுவ விடாமல் காக்க முடியும். இப்போராட்டத்தில் தமிழகப் பெண்கள் குறிப்பாக தென்மாவட்ட விவசாயப் பெண்கள் அணி திரள வேண்டும். நீராதாரப் பிரச்சனையே மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதை நினைவில் நிறுத்தி அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள், பெண் உரிமைச் சங்கங்கள், பெண்ணிய ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அனைவருமே முல்லைப் பெரியாறு அணை உரிமையை மீட்டெடுக்கக் கரம் கோர்க்க வேண்டும். தமிழகத்தின் தடைபட்டுக் கிடக்கும் நீர்வளத்தை வென்றெடுக்க முன்வர வேண்டும்!




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com