Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Neythal
Neythal Logo
மார்ச் - ஏப்ரல் 2008

மருந்துப் பரிசோதனைகளும் மலினமாகிப்போன மனித உடல்களும் - இந்திய நிலை

மருந்துப் பரிசோதனைகளை நடத்தக்கூடிய பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்த ஆராய்ச்சி அமைப்புகள் இவற்றின் இணையதளங்களில் இந்தியா ஏன் இவர்களின் விருப்பமான நாடாக உள்ளது என்பதற்கு என்று காரணங்கள் வலுவானவையாகக் குறிப்பிடப்படுகின்றன. முதலாவது செலவு குறைவு; இரண்டாவது காலம் குறைவு; மூன்றாவது அரசின் தளர்வான அனுகுமுறைகள். இந்த மூன்று அம்சங்களும் இத்தகைய நிறுவனங்களுக்கு உகந்ததாகவும் மக்களுக்குத் தீங்கிழைப்பதாகவும் உள்ளன.

செலவு

வெளிநாடுகளில் இத்தகைய மருந்துப் பரிசோதனைகள் செய்வதில் மூன்றில் ஒரு பங்கு செலவிட்டால் போதும் இந்தியாவில் அவற்றைச் செய்து விடலாம். ஏன் இப்படி என்றால் இந்தியாவின் சம்பளச் சந்தை அவ்வாறு உள்ளது. மேலை நாடுகளை ஒப்பிடுகையில் மிகக்குறைந்த சம்பளத்தில் மிகத் திறமையான மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், ஒப்பந்த ஆராய்ச்சியாளர்கள், விவரச் சேகரிப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களைப் பணியிலமர்த்தி விடலாம்.

காலம்

மேலை நாடுகளில் மருந்து ஆராய்ச்சிக்கென வகுக்கப்பட்ட ஹெல்சிங்கி பிரகடனம், நூரம்பர்க் வழியுறுத்தல்கள் ஆகியவற்றைச் சரியாகச் செய்கிறார்கள். ஆய்வுக்கு உட்படுத்தப்படும் தன்னார்வருக்கு ஆய்வின் முழுவிபரங்களும் விளக்கப்படும். பின்விளைவுகள் குறித்தும் தெரியப்படுத்தப்படும். இதற்கெல்லாம் மிகுந்த காலம் பிடிக்கும். ஆனால் நம் புண்ணிய தேசத்தில் இவை எதுவும் தேவையில்லை. ஆய்வில் ஈடுபடுத்தப்படும் நோயாளிக்குப் பெரும்பாலும் தான் ஆய்வுப் பொருள் என்பதே தெரியாது.

வழக்கமான, பழக்கமான மருத்துவர் தந்தால் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்வர். எதிர்க்கேள்வி ஏதும் கிடையாது எனவே நேரம் செலவு என்பதே கிடையாது. எடுத்த எடுப்பிலேயே ஆய்வுதான். மேலும் இந்தியர்களின் ஆங்கில அறிவு, தகவல் பரிமாற்றம் மற்றும் ஆய்வுக் குறிப்புகள் எழுதுதல் போன்றவற்றை விரைவாக மேற்கொள்ள உதவுகிறது. எனவே மேலை நாடுகளில் மூன்றாண்டுகள் ஆகும் மருந்துப் பரிசோதனைகள் இங்கு ஓராண்டுக்கும் குறைவாகவே முடிக்கப்படுகின்றன.

அரசின் தளர்வான அணுகுமுறை

இது மிகமிக முக்கியமான காரணி, இத்தகைய ஆய்வுகளை நெறிமுறைப்படுத்தவோ ஏதேனும் தவறு நடந்தால் தண்டிக்கவோ இந்தியச் சட்டங்கள் தெளிவாக இல்லை. எவ்வளவு பெரிய தவறாக இருந்தாலும் அபராதம் மட்டுமே விதிக்கப்படுகிறது. அரிதாகவே உரிமம் ரத்து செய்யப்படுகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத் திருட்டில் ஈடுபட்ட மருத்துவர் அமீத்குமார் சட்டத்தின் பிடியில் சிக்கியும் எளிதில் வெளியே வந்து இப்போது மீண்டும் அதே குற்றம் செய்கிறாரெனில் இந்தியாவின் சட்ட வலிமையை என்னென்று சொல்வது

கட்டுரைக்கு நேரடியாக சம்மந்தமற்ற ஆனால் தொடர்புடைய ஒரு தகவலையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம். ஒப்பந்த ஆராய்ச்சி அமைப்புகள் வெறும் மருந்துப் பரிசோதனைகள் மட்டும் செய்பவை அல்ல. பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய ஏஜென்டுகளாக இவை செயல்படுகின்றன. மான்சான்டோ நிறுவனம், இந்தியாவின் மகிகோ நிறுவனம் (தற்போது பார்வேல் அறக்கட்டளை) மூலமாகத் தனது செயல்பாடுகளைச் சாதிக்கிறது.

இதுபோன்ற ஒப்பந்த ஆராய்ச்சி அமைப்புகள் தங்களின் எஜமான நிறுவனங்களுக்காக அவர்களின் ஆய்வுகளை இங்கே செய்கின்றன. உதாரணத்திற்கு, ஒரு நிறுவனம் நெற்பயிரில் நோய் எதிர்ப்பு ஜீன்களை கண்டுபிடிக்க ஆய்வு செய்கிறது என்று கொள்வோம். இவை நேரடியாக இந்தியாவின் பல்வேறு காட்டு நெல் வகைகளையும், வட்டார வகைகளையும் இதற்காக ஆராய்ச்சி செய்ய முடியாது. மாறாக ஏதாவது ஒரு இந்திய ஆய்வு நிறுவனத்திடமோ ஒரு பல்கலைக்கழக பேராசிரியரிடமோ புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு ஆய்வை அவர்களின் மூலமாக நடத்தலாம். பணம் அவர்களுடையது. ஆய்வுப்பொருள் நம்முடையது. உழைப்பு நம்மவருடையது, இதனால் விளையும் பலனும் ஆய்வு முடிவுகளும் அவர்களுக்கு. இதுபோக கொஞ்சம் பிச்சைக் காசு நமக்கும். அவர்கள் செய்கிற அறுவை சிகிச்சைகளுக்கு இங்கே நாம் குறிப்பு எழுதுவோம். அவர்களுக்கு வேண்டிய பாக்டீரியாவை இங்கே நாம் கண்டுபிடித்து அங்கே அனுப்புவோம். வாழ்க பொருளாதார வளமை.

மீண்டும் கட்டுரைக்கு வருவோம். இத்தகைய மருந்துப் பரிசோதனைகளால் நன்மை ஏதும் இல்லையா நிறைய உண்டு முதலில் இந்த மருந்துப் பரிசோதனைகள் புதிய மருந்துகள் கண்டுபிடிப்பில் மிக முக்கியமானவை. இந்த ஆய்வுகள் தான் மருந்தின் வேலைத்திறன், மருந்தின் அளவு போன்றனவற்றை நிர்ணயிக்க உதவுகின்றன. ஐரோப்பா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் வெறிநாய்க்கடி நோயால் கலங்கிக் கொண்டிருந்த வேளையில் ஒரு அசாத்தியமான வழிமுறையில் லூயிஸ் பாஸ்டியர் என்ற புகழ்மிக்க நுண்னுயிரியல் துறை முன்னோடி ஒரு மருந்தைக் கண்டுபிடித்தார். அந்த வேளையில் வெறிநாய்க்கடியால் இறக்கும் தருவாயில் இருந்த ஒரு சிறுவனுக்கு அவனின் பெற்றோரின் முழு ஒப்புதலின் பேரில் பாஸ்டியர், எந்தவித சோதனைகளையும் சந்தித்திராத அவரின் மருந்தைச் செலுத்தினார். சிறுவனும் பிழைத்துக் கொண்டான். ஆக, மருந்துகள் கண்டுபிடிப்பதும் அவற்றைப் பரிசோதிப்பதும் எல்லா காலக்கட்டங்களிலும் மிகமிக இன்றியமையாதது. தவிர்க்க முடியாதது.

மிகப்பெரும் அளவிலான பணம் புழங்குகிற இந்தத்துறை பெரும் அளவிலான வேலை வாய்ப்புகளையும் அளிக்கிறது. மென்பொருள் வல்லுநர்களுக்கு இணையாக, உயிர் அறிவியல் வல்லுநர்களுக்கும் சம்பளம் வழங்கக்கூடிய விதத்திலும் இதன் முக்கியத்துவம் நோக்கத்தக்கது.

மருத்துவ வசதிகளைப் பெற வழியற்ற பெரும்பாலான நோயாளிகளுக்கு இத்தகைய மருந்துப் பரிசோதனைகள் இலவசமான, தரமான மருத்துவ சிகிச்சைகளாகவும் அறியப்படுகின்றன. தான் ஆய்வுப் பொருளா இல்லையா என்ற கவலை இவர்களுக்கு இல்லை. நோய்க்கு மருந்து கிடைக்கிறது; அது போதும் என எண்ணுகிறார்கள்.

இவற்றைச் சரியாகச் செய்ய முடியுமா? முடியும். மேலை நாடுகளில் அதுதான் நடக்கிறது. வளரும் நாடுகளில் உள்ள மருந்து நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்த ஆய்வு நிறுவனங்கள் தங்கள் சுயலாபத்திற்காக அப்பாவி மக்களைப் பலிகடா ஆக்குவதை நிறுத்த வேண்டும். ஆய்வின் முழுவிபரங்களையும் நேர்மையான முறையில் ஆய்வில் ஈடுபடுத்தப்படுபவருக்கு தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.

இந்திய ஏஜெண்டுகள் ஹெல்சிங்கி பிரகடனம் மற்றும் நூரம்பாக் வழியுறுத்தல்கள் போன்றனவற்றை சரியாகப் பின்பற்ற வேண்டும். Good clinical Practices, Good Laboratory Practices, Good Manufacturing Practices என்று பல்வேறு பன்னாட்டு ஒழுங்கு முறைகளை இந்நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். அரசும் தன் கண்காணிப்புப் பணியைத் தீவிரமாக்க வேண்டும். விதிமுறைகள் காலத்துக்கேற்றவாறு மாற்றப்பட்டு கடுமையாக அமுல்படுத்த வேண்டும். இப்படியெல்லாம் நடந்தால் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கொஞ்சம் லாபக்குறைவு நேரும். மக்கள் கொஞ்சம் மரியாதையுடன் நடத்தப்படுவதும் துளியாவது பயன்பெற்றுக் கொள்ளவும் ஆகும். நடக்குமா?

- தொகுப்பாளர்கள், நெய்தல்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP