Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Neythal
Neythal Logo
மார்ச் - ஏப்ரல் 2008

நான்காம் உலகம்
மலையாள மூலம்: என்.எஸ்.மாதவன்
தமிழில்: ஸ்ரீபதி பத்மநாபா


ஒரு காலத்தில் ஒரு ரஷ்யாக்காரனும் ஒரு இந்தியாக்காரனும் இருந்தார்கள். ஒரு காலத்தில் என்பது அப்படியே ஒரு போக்கில் வந்துவிட்டது. அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். ஒரு நாள் அந்த ரஷ்யாக்காரன் இந்தியாக்காரனிடம் கேட்டான். கோவிந்தன் குட்டி, இது எத்தனாவது நாள் என்று தெரியுமா? தெரியாது. எந்த மாதம் என்று கேட்டால் சொல்கிறேன். இந்தியாக்காரன் பதிலளித்தான்.

மன்னிக்க வேண்டும். இது ஒரு நகைச்சுவைத் துணுக்கின் துவக்கமல்ல. எனக்கு தமாஷ் பேசவும் தெரியாது. அதற்குக் காரணம், ஒருவேளை நான் ஒரு கம்யூனிஸ்ட்காரனின் மகனானதால் இருக்கலாம். அப்பாவுடன் கட்சி துவங்கிய சான்டோ கோபாலன் இறப்பதற்குக் கொஞ்சநாள் முன்பு அப்பாவிடம் பேசுவதைக் கேட்டது முதல் தான் நான் இந்த வழியில் சிந்திக்கத் துவங்கினேன். சான்டோ கோபாலன் சொன்னார். “தோழரே, நெனச்சுப் பாருங்க, அழீக்கோடன் ராகவன் கொலையான பிறகு டி.கெ. ராமகிருஷ்ணனைத் தவிர, எப்பவும் சிரிச்சிட்டேயிருக்கிற தலைவர் நமக்கு இருக்காங்களாட?”

பக்குனின் தொடர்ந்து சொன்னான். “கோவிந்தன் குட்டீ, நம்மை இதற்குள் அடைத்து வைத்து இன்றோடு எண்பத்தெட்டு நாட்களாகிறது. இரண்டு நாள் கழிந்தால் சரியாக மூன்று மாதம்”.

நானெதும் பேசவில்லை. பக்குனின் எழுந்து சென்று மைக்ரோஃபோனின் முன்னால் நின்று சொன்னான், “காலிங் கண்ட்ரோல்”, “காலிங் கண்ட்ரோல்” பக்குனின் மைக்ரோஃபோனை மிரட்டும் தொனியில் சொன்னான். எந்தவித பதிலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ‘காலிங் கண்ட்ரோல்” பக்குனின் குரல் உயர்த்திச் சொன்னான். “இது சோயூஸ் இருபத்து நான்கு. எங்கள் குரலைக் கேட்க முடிகிறதா உங்களால்ட உங்களுக்கு நாங்கள் தேவையில்லை என்றாகிவிட்டதாட?”

பக்குனின் மைக்ரோபோனை விட்டு நீங்கி விண்வெளிக்கப்பலின் பாரமில்லா உள்ளில் கால்களை அசைத்து, தலையைக் குலுக்கி ஒரு ஆண்விந்துவைப் போல் துள்ளி நீந்தினான். “நாம் அவர்களுக்கு வேண்டாதவர்களாகி விட்டோம். நம்மை அவர்கள் இழந்துவிட்டார்கள்”. நடுக்கம் நிறைந்த சுழற்சிகளை நிறுத்திவிட்டு பக்குனின் என்னருகில் அமர்ந்து சொன்னான்.“நிறைய இழந்துவிட்ட ஆட்கள் நாங்கள்-ரஷ்யர்கள். காலண்டர் புதுப்பிக்கப்பட்டபோது பதிமூன்று நாட்கள் எங்களுக்கு இல்லாமல் போனது. ரஷ்யர்களின் வரலாற்றில் ஒரு பெரிய கருந்துளை அது. ஒரு ஓய்வுதினத்தையும் சேர்த்து கடவுளுக்கு இரண்டு பிரபஞ்சங்களைப் படைப்பதற்குப் பனிரெண்டு நாட்கள்”.

சிறுவனாயிருந்தபோதே ரஷ்யாக்காரர்கள் காலண்டரைப் புதுப்பித்த கதை எனக்குத் தெரிந்திருந்தது. ஒரு அக்டோபர் புரட்சியின் ஆண்டு தினத்துக்கு இளைஞர்களோடு சேர்ந்து அப்பா சுவரில் எழுதப்போனபோது நானும் கூடப்போயிருந்தேன். வழியில் வைத்துத்தான் அக்டோபர் புரட்சியின் ஆண்டு தினத்தை நவம்பரில் கொண்டாடுவதன் காரணத்தை அப்பா சொன்னார். வயதானவராயிருந்தாலும் அப்பாவைவிட நன்றாகச் சுவரெழுத்து அறிந்தவர்கள் பய்யல்லூரில் இல்லை.

வெள்ளைச் சுவரில் ‘விப்ளவம் ஜயிக்கட்டெ’ என்றெழுதுவதற்காக ‘வ’ எழுதியபோதே இளைஞர்கள் வாயடைத்து நின்றுவிட்டார்கள். ‘வ’வின் துவக்கத்திலிருக்கிற பாதி அறுந்த வட்டத்தின் வரைகணிதம் இல்லாமல் தொடர்ந்து வருகிற கிடைக்கோடும் செங்குத்துக்கோடும் இல்லாமல் கடலில் தலையை விட்டு அலை நுனிகளைக் கிளறிப்பார்த்து மேலே பறக்கிற கடற்காக்கையின் படத்தைப்போல் கிடந்தது அப்பாவின் ‘வ’.

சுவரெழுத்து முடிந்தவுடன் எல்லோரும் சினிமாக் கொட்டகையின் முன்னால் இரவு முழுவதும் திறந்திருக்கிற டீக்கடையில் டீயும் பருப்புவடையும் தின்பதற்காகப் போனோம்.

அங்கு வைத்துத்தான் நான் முதன்முதலாக அப்பாவின் பழங்கதைகளைக் கேட்டேன். “பக்குனின்” விண்வெளிக்கப்பலின் உள்மௌனம் சகிக்கமுடியாமல் போனபோது நான் அழைத்தேன். “என் அப்பா பத்தாம் வயதில் அரசியல் துவங்கிட்டார்”. “என் அப்பாவை முப்பத்தியாறாம் வயதில் ஸ்டாலின் கொன்றுவிட்டார்”. இதைச் சொல்லிவிட்டு பக்குனின் மீண்டும் மௌனமானான். பத்தாம் வயதில் சேராநல்லூச்ரிலுள்ள கள்ளுக்கடைகள் முன் மறியல் செய்ததுதான் அப்பாவின் அரசியல் துவக்கம்.

“கள் எறக்கறத விட்டா உனக்கு வேற என்னடா இருக்கு. ச்சோவா?” என்ற சாராய வியாபாரிகளான உறவினர்களின் கேலியைச் சகித்துக்கொண்டு காந்திக்குல்லாய் வைத்த சிறுவன் தினமும் மறியலுக்குச் சென்றான். பெரியவனானபோது அப்பா ப்ரஜாமண்டலத்தில் சேர்ந்தார். க்விட் இந்தியா போராட்ட காலத்தில் விய்யூர் சிறையில் அடைத்தபோதுதான் அப்பா முதன் முதலாக ஒரு கம்யூனிஸ்ட்டைச் சந்தித்தார். திருச்சூர் லேபர் ப்ரதர்ஹூட்ங்கற கம்யூக்களின் அமைப்பில் இருந்த கே.ஈ. இய்யுண்ணி.

எங்கிட்ட எப்பவும் வாதத்துக்கு வருவான். பாசிஸ்ட் சக்திகள் நம்மோட வாசலில் வந்து கதவைத் தட்டற இந்த நேரத்தில் க்விட் இந்தியா போராட்டமே தவறுன்னெல்லாம் சொல்வான். என்னால முழுசா ஜீரணிக்க முடியலேன்னாலும், நானும் கொஞ்சம் கொஞ்சமா சிவப்பனா மாற ஆரம்பிச்சேன்” அப்பா கதையைத் தொடர்ந்தார்.

“1942-ல் கட்சி சட்டவிரோதமானபோது, எர்ணாகுளம் கட்சி ஆபீசிலிருந்து பய்யல்லூச்ர்ல போய் கட்சி ஆரம்பிக்க வழிச்செலவுக்கு எட்டணா தந்தாங்க. அப்படித்தான் நானும் மேஜிக் விஜயனும் சேர்ந்து பஸ்ஸில இங்க வந்து எறங்கினோம். விஜயன் அன்னிக்கே பிரபலமானவன். திருவில்வாமலையில ஒரு போலிச்சாமி காட்ல இருந்து வில்வ இலைகளை வரவெச்சபோது விஜயன் பூசணிக்காயையே வரவெச்சுக் காமிச்சானாம்”.

அப்பாவும் விஜயனும் சேர்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் அனுதாபிகளைச் சேர்க்கத் துவங்கினார்கள். சோட்டானிக்கரை, ஏலூர், திருப்பூணித்துறை, திருவாங்குளம், மாமலையெல்லாம் நடந்து நடந்து அவர்களின் பாதங்கள் வீங்கின. கையில் காசு தீரும்போது சில ஜெட்மாஸ்டர்களின் ஒத்தாசையுடன் பள்ளிகளில் மேஜிக் செய்து காண்பித்து விஜயன் காசு சேகரித்தான்.

“அந்தச் சமயத்திலதான் சிலோன்லர்ந்து மத்தாயி கொஞ்சம் பணத்தோட திரும்பி வந்தான். அவனுக்கு அங்கேயிருந்தே இஸத்தோட போதை கொஞ்சம் இருந்தது. இங்க வந்தவுடனே பிரச்சாரத்துக்காக ஒரு மாலை தினசரியை ஆரம்பிச்சான். அரோரா. ‘அரோரா அரையணா’ ‘அரோரா அரையணா’ன்னு அவனே எர்ணாகுளம் பஸ்ஸ்டேன்டிலயும் போட்ஷெட்டிலயும் கூவிக்கூவி விப்பான்”. அப்பா சொன்னார்.

பக்குனினுடன் லெனின்கிராடு ஹார்பரில் பாதுகாக்கப்பட்டிருந்த அரோராவைப் பார்க்கச் சென்றது திடீரென்று நினைவுக்கு வந்தது. நான் கேட்டேன்் “பக்குனின், நாம் அரோராவைப் பார்க்கப்போனது உனக்கு நினைவிருக்கிறதா?”

ஒரு நிமிடம் பக்குனின் கண்கள் ஒளிர்ந்தன. அவன் கேட்டான், “அன்று நான் எடுத்த போட்டோவை நீ என்ன செய்தாய்?” “அப்பாவுக்கு அனுப்பி விட்டேன்”. நான் சொன்னேன், வீட்டில் என்னுடைய அந்த ஒரு போட்டோ மட்டும் தான் ப்ரேம் செய்து வைக்கப்பட்டிருந்தது. வருவோர் போவோரிடமெல்லாம் நான் எந்தக் கப்பலின் முன்னால் நிற்கிறேன் என்று பெருமிதத்தோடு சொல்வார். ஆட்சியைப் பிடிப்பதற்கான அதிகாரத்தை லெனினுக்கு வழங்கும் அடையாளமாக வெடியை முழக்கிய கப்பலின் முன் ஆறாயியில் குறுப்புமார்களின் ஆயிரம் ஏக்கர் வயலில் உழைத்துக் கொண்டிருந்த புலையர்களை ஒன்று சேர்த்துத்தான் அப்பாவும் விஜயனும் அரோரா மத்தாயியும் சேர்ந்து யூனியன் உருவாக்கினார்கள். அறுவடை முடிந்து போரடிக்கும் நேரம் வந்தபோது புலையர்கள் இரண்டு கற்றைக் கூலி அதிகமாக வேண்டுமென்று கேட்டார்கள். குறுப்புமார்கள் அதைக்கொடுக்கவில்லை. விவசாயத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள்.

“விஜயனும் நானும் சேர்ந்து அவங்களோட வரப்பில நடந்துட்டிருக்கோம். ஆறாயி இளைய குறுப்பும் அவங்களோட நெறய அடியாட்களும் எங்களைச் சுத்தி வளைச்சாங்க. இளைய குறுப்பு விஜயன்கிட்ட சொல்றாரு கூடு விட்டு கூடு மாற முடியும்னா இப்ப மாறிக்கோன்னு. எங்கிட்ட சேராநெல்லூர்ச்சோவனோட பொணத்த பாயில கட்டி அங்கியே அனுப்பிவைப்போம்னு. ஒரு யானைக்கொக்கியோட முனையிலுள்ள குறுங்கத்தியால ஒருத்தன் விஜயனோட கழுத்தை வளைச்சான். அந்த நிமிஷத்தில் விஜயனோட கழுத்து அறுந்து விழுந்துரும்னு நான் பயந்துபோய் நிக்கும்போதுதான் வயலோட நட்ட நடுவுல நெல்கத்தைகள் கூம்பாரமாப் போட்டிருக்றதுக்கு மேலேருந்து ஒரு உருவம் வெளியே வந்தது” அப்பா சொல்வதை நிறுத்தி மூச்சை உள்ளே இழுத்துவிட்டுக் கொண்டார்.

“விடுங்கடா குறுப்பனுகளா, விஜயனை விடுங்கடா”. அங்கே நின்னபடி சான்டோ கோபாலன் அலறினான். அப்புறம் சட்டையைக் கழற்றி கத்தைகளோட மேல வச்சு ஜகன்னாதன் துணியால் தெச்சுக்குடுத்த பனியனையும் கழட்டி வச்சான். வேட்டியையும் மெல்ல அவுத்து அங்க வச்சான் கோபாலன். நீல நிறத்தில் சான்டோ ஜட்டி மட்டும் போட்ட கோபாலன் இடது காலைப் பின்னால வச்சு வலது கால் முன்னால வச்சு நின்னான். கழுத்துத் தசைகளைப் புடைக்க வெச்சு மெல்ல மெல்ல தலையைத் து]க்கினான். கைகளைத் தூக்கி கோபாலன் காத்திலர்ந்து ஒரு வில்லை உடைக்க ஆரம்பிச்சான். பாலைவனக் காத்துல மணல்ல துடிச்சு நிக்கிற மணல் அலைகளை மாதிரி கோபாலனோட உடம்பு முழுசும் தசைகள் அலையடிச்சுது”.

“குறுப்பும் கூட வந்தவங்களும் பின்வாங்கிட்டாங்க. கோபாலன் காமிச்சது பரோடாவில மிஸ்டர் இந்தியா போட்டியில ரெண்டாம் பரிசு வாங்கித்தந்த போஸ்தான். எப்படியோ பய்யல்லூரில் கம்யூனிஸம் வேரோடிடுச்சு. அடுத்த நாள் அரோரா மத்தாயி மாலை தினசரியில் வெண்டைக்கா சைசில எழுதினான் ் நெற்கற்றைப் போராட்டம் ஜெயித்தது. அப்பா கதை சொல்வதை நிறுத்தினார். அதற்குள் இரண்டு மணியாகிவிட்டிருந்தது.

“காலிங் கண்ட்ரோல்” பக்குனின் தலைதாழ்த்தி மைக்ரோபோனின் முன்னால் நின்று மறுபடியும் சொன்னான். “நிறுத்து பக்குனின்” எனக்குக் கோபம் வந்தது. “கண்ட்ரோலில் இருப்பவர்கள் எதாவது சொல்லவேண்டுமென்றால் அவர்களே அழைப்பார்கள்”. “எல்லோரும் வோட்கா குடித்துப் படுத்திருப்பார்கள், பன்றிகள்”. பக்குனின் சொன்னான். “நீ என்னென்னவோ உளறிக் குழப்பிவிடாதே. நாம் பேசுவதையெல்லாம் கீழே கூர்மையாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்”.

“கீழே” பக்குனின் விண்வெளிக் கப்பலின் சன்னலைச் சுட்டியபடி சிரித்தான். அதில் பார்த்தபோது வெளிர் நீல நிறத்தில் பூமி எங்களின் மேலே இருப்பதைப் பார்த்தேன். “மறைந்திருந்து கேட்பதெல்லாம் ஸ்டாலின் மற்றும் பிரஷ்னேவின் காலத்தில்தான். இப்போது கோர்பச்சேவ் வந்தபிறகு அதெல்லாம் இல்லை”.

நான் பய்யல்லூரின் தோழர்களை நினைத்தேன். அவர்கள் கோர்பச்சேவை வெறுத்தார்கள். நான் ரஷ்யாவுக்குப் புறப்படுவதற்கு ஒன்றிரண்டு நாட்கள் முன் என்னைப் பார்ப்பதற்காக ஏரியா கமிட்டி செக்ரட்டரி ராஜேந்திரனும் கட்சி அலுவலக செக்ரட்டரி பாமீதத்தும் அவர்களுடன் எனக்குப் பழக்கமில்லாத ஒரு கண்ணூர்க்காரத் தோழரும் வந்திருந்தார்கள். வீட்டில் அப்பாவும் நானும் அமெரிக்காவுடன் போர் செய்து ஈராக் தோல்வியடைந்ததைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

“கோர்பச்சேவ், அவன்தான் எல்லாத்துக்கும் காரணம்”. ஏரியா கமிட்டி செக்ரட்டரி ராஷேந்திரன் சொன்னார். “மூணாம் உலகத்த முழுசா அனாதையாக்கிட்டான் அவன். இன்னிக்கு சதாம், நாளைக்கு காஸ்ட்ரோ”. கட்சி அலுவலக செக்ரட்டரி பாமீதத் சொன்னார். “அவன் அந்தி மார்க்ஸாக்கும்” கணணூர்க்காரத் தோழர் சேர்த்தார். “அந்தி மார்க்ஸ், அது என்ன சாதனம் தோழரே?” அரோரா மத்தாயி கேட்டார்.

அரோரா தோழர் அந்திகிறிஸ்துவைப் பத்தி பைபிள்ல படிச்சிருக்கீங்களா? அந்திகிறிஸ்துவோட தலையில சில அடையாளங்களெல்லாம் இருக்கும். அறுநூத்தி அறுபத்தியாறுன்னு எழுதிருக்கும். கோர்பச்சேவோட தலையில மச்சத்தைப் பாத்திருக்கிறியா நீ பாமீதத்து அதோட ஷேப்பு என்னன்னு தெரியுமா?” “என்ன ஷேப்பு?” அப்பாவும் பாமீதத்தும் உத்வேகத்துடன் கேட்டார்கள். “அது அமெரிக்காவோட மேப். அவனோட தலையில அமெரிக்காவோட மேப் இருக்குது.

அமெரிக்காவோட மேப்பைத் தலையில வச்சு அலைஞ்சிட்டிருக்கிறவன் மார்க்ஸிஸத்தைக் கொன்னுடுவான். அவன்தான் அந்தி மார்க்ஸ் யாரும் சிரிக்கவில்லை. ஏனென்றால் கண்ணூர்க்காரத் தோழர் சிரிப்பு மூட்டுவதற்காக அதைச் சொல்லவில்லை. அவரின் முகம் கோபத்தால் சிவந்திருந்தது. “நீ எப்பக் கௌம்பற கோவிந்தன்குட்டீட? “ ராஜேந்திரன் கேட்டார். நாளன்னிக்கு பெங்களுருக்கு. அங்கே ஏர்போர்ஸ் ஹாஸ்பிட்டல்ல பைனல் செக்கப். அங்கிருந்து டெல்லிக்கு, டெல்லியிலிருந்து மாஸ்கோவுக்கு”.

“மாஸ்கோவிலிருந்தா ராக்கெட் கௌம்புது” அரோரா மத்தாயி கேட்டார். “இல்ல. பைக்கானூர் காஸ்மோட்ராமிலிருந்து, அங்கே ஆறுமாசம் ட்ரெயினிங்கும் இருக்கு” “கூட யாரு வர்றாங்க?” பாமீதத் கேட்டார். “கேப்டன் இகோர் பக்குனின். அவரும் என்னை மாதிரி பைலட்தான்”.

“நாங்க வந்ததே உன்னை ஞாபகப்படுத்தத்தான்”. ராஜேந்திரன் சொன்னார். “நாளைக்கு சாயங்காலம் சான்டோ கோபாலன் நினைவு லைப்ரரி ஹாலில் அஞ்சு மணிக்கு உனக்கு வழியனுப்பு விழா”.

சான்டோ கோபாலனின் நினைவுக்காக லைப்ரரி உருவாக்குவதற்கு எதாவது நன்கொடை கொடுக்க வேண்டும் என்று அப்பாவின் கடிதம் கிடைத்தபோது நான் ரஷ்யாவிலிருந்து இருநூறு பைபிள் அனுப்பிவைத்தேன். அன்று மாலை பக்குனினுடன் மாஸ்கோவின் பார்க்குகளில் நடக்கும்போது மார்க்ஸ் மற்றும் லெனின் சிலைகளின் பீடங்களில், கட்சி விரோத முழக்கங்களை பெயின்டால் மறைக்க முயற்சி செய்திருந்ததை நாங்கள் பார்த்தோம். அதைச் சுட்டிக்காட்டி நான் பக்குனினிடம் சொன்னேன். “எங்கள் நாட்டுத் தோழர்கள் இங்கே இருப்பவர்களைக் காட்டிலும் புத்திசாலிகள். அவர்கள் இறந்துபோன தலைவர்களின் நினைவாய் லைப்ரரிகளும் ஆஸ்பத்திரிகளும் கட்சி அலுவலகங்களும் உருவாக்குகிறார்கள். சிலைகளைப் போல அவற்றை அழிப்பது அத்தனை எளிதல்ல”.

ராஜேந்திரனும் பாமீதத்தும் கண்ணூர்க்காரத் தோழரும் போனபிறகு அப்பா சொன்னார். “உனக்கான வழியனுப்பு விழா கோபாலனோட பேரிலிருக்கிற ஹாலில் வச்சிருக்கறது சந்தோஷம். வயசில உன்னப் பக்கத்திலயே வச்சுப் பாத்து உன் உடம்பை ஒரு வழிக்குக் கொண்டுவந்தது அவர்தான். அந்த ட்ரெய்னிங்காலதான் இங்கிருக்கிற பைலட்டுகளையெல்லாம் தோக்கடிச்சு நீ ஸ்பேஸ்க்குப் போற?” சின்ன வயதில் தினமும் காலையில் ஈரத்துணியால் சுற்றிக் கட்டப்பட்ட பாதி முளைத்த கடலையுடன் சான்டோ வீட்டிற்கு வருவார்.

ஒரே ராத்திரியில் வெள்ளை நிறத்திலுள்ள கமாக் குறிகள் போல முளைகள் விட்டிருக்கிற கடலைகளைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டு நிற்கும்போது சான்டோ சொல்வார். “சும்மா பாத்திட்டிருக்காம சாப்பிடுறா. எல்லாம் புரோட்டீனாக்கும்”. பிறகு நான் சான்டோவுடன் ஓடுவதற்குச் செல்வேன். கார்த்திகைக் குளிரில் மூச்சு நீராவியின் சின்னச் சின்ன பலூன்களை உருவாக்குவதைப் பார்த்து என் ஓட்டத்தின் வேகம் குறையும்போது சான்டோ சொல்வார். “நல்லா ஓடு கோபி, சதை வெளியே வரட்டும்”.

விண்வெளிக் கப்பலின் உள்ளே தனிமை தீபோல் படர்ந்தபோது ஏதாவது பேசலாம் என்று நான் கேட்டேன். “பக்குனின், உன் அப்பா கட்சி மெம்பராயிருந்தாரா?” “இல்லை. அப்பா லெனின்க்ராட் ஹார்மோனிக்கா ஆர்க்கெஸ்ட்ராவில் ஒரு பாவப்பட்ட வயலினிஸ்டாக இருந்தார். ஒருநாள் அப்பாவை ரகசியப் போலீசார் அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.” “உன் அப்பா என்ன குற்றம் செய்தார்?”

“என்ன குற்றம், ஸ்டாலின் காலத்தில் யாரும் குற்றம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. ஆர்க்கெஸ்ட்ராவில் கட்சிக்கு எதிராகப் பணி செய்கிற ஒரு குழு இருந்ததாம். அதில் அப்பாவும் உடனிருந்தாராம். எனக்கு ஆறுவயது ஆகும்போது அப்பாவைக் கூட்டிப்போனார்கள். ஒன்றிரண்டு மாதம் கழிந்து அப்பா இறந்துவிட்டார் என்று தெரிந்தபோது அம்மா பைத்தியமாகிவிட்டார்கள். அன்றிலிருந்து எனக்குப் பூமி வேண்டாம் என்று தோன்றிவிட்டது. ஆகாயத்தில் மட்டுமே வசிப்பதற்காக நான் பைலட்டானேன்”. பக்குனின் நகைச்சுவையில்லாமல் சிரித்தபடி தொடர்ந்தான். “என் ஆசை பலித்துவிட்டது என்று நினைக்கிறேன். கோவிந்தன் குட்டீ, நாம் இதனுள்ளிருந்து தப்புவோம் என்று தோன்றவில்லை. இறக்கும்வரை நாம் ஆகாயத்திலேயே சேர்ந்திருக்கலாம்.”

பக்குனின் சொன்னது இடியாய் இறங்கியபோது நான் பயத்தில் வியர்த்தேன். இன்னும் பல மணி நேரங்களுக்குள் விண்வெளிக் கப்பலின் சோலார் பேனல்கள் அசைவற்று விடும். அப்போது இதனுள்ளே குளிர் பரவும். கடும் குளிரில் பிணங்களின் முகங்களில் ஒரு சுருக்கத்துக்குக் கூட மாற்றம் வராது. நானும் பக்குனினும் மம்மிகளாக நிதமும் பூமியை வலம்வருவோம். பக்குனின் ஏதோவொரு முடிவுக்கு வந்ததுபோல மைக்ரோபோனின் முன்னால் சென்று நின்றான்.

“இது ரேடியோ சோயூஸ் இருபத்துநான்கு. இப்போது ரேடியோ சோயூஸ் இருபத்துநான்கின் முதல் ஒலிபரப்பை நீங்கள் கேட்கலாம்”. பக்குனின் என்னைப் பார்த்து குரலைத் தாழ்த்திக் கேட்டான். “என்ன கோவிந்தன் குட்டீ, பாடமுடியுமா?” எதாவது செய்தே தீரவேண்டும் என்று காத்திருந்த நான் தலையை ஆட்டினேன். பக்குனின் மைக்ரோபோனில் சொன்னான். “முதலில் கோவிந்தன் குட்டியின் ஒரு இந்தி மொழிப்பாடல்”. “சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” நான் பாடத் துவங்கினேன்.

விண்வெளியில் மூன்று மாதங்களுக்குப் பிறகு அந்தப் பாடல் எனக்கு ஒரு சத்திய வாக்குமூலமாக மாறத்துவங்கியது. ஹஷிமாரா ஏர்போர்ஸ் ஸ்டேஷனின் அருகிலிருக்கும் தேயிலைத் தோட்டங்கள் முடிவடையும் இடத்தின் சூர்யாஸ்தமனங்களை நான் விண்வெளிக் கப்பலின் சாளரத்தினூடே பார்த்தேன். “இ.எம்.எஸ்., ஏ.கே.ஷி. சுந்தரய்யா ஷிந்தாபாத்” என்று முழங்கிக்கொண்டு ஊர்வலம் போகிற பய்யல்லூர்த் தோழர்களிடையே நின்று நான் பாடினேன். “ஹம்புல் புலே ஹை இஸ்கே, யெ குலிஸ்தா ஹமாரா”. கோயமுத்தூர் ஏர்பேஸில் வசித்துக் கொண்டிருந்தபோது நண்பர்களுடன் அடிக்கடிக் குடித்துக்கொண்டிருந்த, அப்போதுதான் இறக்கிய பனங்கள்ளின் தெளிவான மணம் விண்வெளிக் கப்பலின் உள்ளே படர்ந்தது. பாடி முடித்தபோது எனக்கு ஆசுவாசம் தோன்றியது.

“தனிமைச் சிறையிலே இருக்கும்போது” அரோரா மத்தாயி ஒரு முறை சொன்னதை நான் நினைத்துப் பார்த்தேன். “பைத்தியம் பிடிக்காம இருக்கணும்னா ஒரு வழிதான் இருக்கு. ஒண்ணு சத்தமா பாடறது. இல்லேன்னா சத்தமா பேசறது.” அப்பா, அரோரா மத்தாயி, சான்டோ கோபாலன் எல்லாரும் தனிமைச் சிறையில் இருந்தவர்கள் தான். கல்கத்தா தீஸிஸிற்குப் பிறகு கட்சியைத் தடை செய்தபோது இவர்கள் எல்லோரும் ஒளிந்து வாழ்ந்தார்கள். இடப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனை ஆக்ரமித்த எதிரிகளுக்குப் பய்யல்லூரில் அடைக்கலம் கொடுத்ததற்காக அவர்கள் பேரில் கேஸ் இருந்தது.

வீடுகளின் மேற்கூரைகளிலும், குளப்புரைகளிலும், புலையர்களின் குடில்களும், படகு வீடுகளிலுமாக அவர்கள் ஒளிந்து வாழ்ந்தார்கள். ஒளிதல் அவர்களின் மனதைப் பாதிக்கவில்லை என்றாலும் தோலை பாதித்தது. பெரும்பாலான தோழர்களுக்குச் சொறி பிடித்திருந்தது. ஒளிந்து வாழும் இடங்களில் பாதித் தூக்கத்தில் உருண்டு புரண்டு தோழர்கள் ரணங்களிலிருந்து வழிகின்ற சீழை பாய்களில் விட்டபடி போனார்கள். அடுத்த நாள் ஒளிந்து திரிகிற இன்னொரு அணி வரும். அதே பாயில் படுத்துத் தூங்கும் அணிகளுக்குள் சொறி படர்ந்தது.

சொறியைச் சகிக்க முடியாமல் கட்சியின் அனுதாபியான ஒரு வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது தான் போலீசார் அப்பாவை வளைத்துப் பிடித்தார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு லாக்கப்புக்கு சான்டோ கோபாலனையும் அண்டர்க்ரவுண்டிலிருந்து அரோரா நாளிதழ் வெளியாகப் பயன்படுத்தியிருந்த கல் அச்சை தலையில் சுமக்கச் செய்தபடி மத்தாயியையும் கூட்டி வந்தார்கள். மேஷிக் விஜயன் பம்பாய்க்கு ரயிலேறி விட்டிருந்தான்.

சான்டோவை அழித்தல் என்பது போலீஸ்காரர்களின் விரதமாயிருந்தது. அடி என்றால் பாப்பாளியின் அடி என்று கொச்சி சீமையில் பேரெடுத்த இன்ஸ்பெக்டர் பாப்பாளி சான்டோவின் சதைகள் ஒவ்வொன்றிலும் தன் கைவரிசையைக் காட்டலானான். சான்டோ மூச்சை அடக்கி நிற்பார். பாப்பாளியின் வைராக்கியம் அதிகமானது. வைப்பின்கரை மீனவர்களிடம் பிரத்யேகமாகச் சொல்லி வாங்கிய தெரண்டி மீனின் வாலினால் அவன் சான்டோவை எதிர்கொண்டான்.

அப்போது பாப்பாளி முழங்குவான்் “இது இடப்பள்ளியில நீங்க கொன்ன கான்ஸ்டபிள் வேலாயுதனோட பங்கு. இது கான்ஸ்டபிள் மாத்யூவோட பங்கு”. சான்டோ அசையவேயில்லை. “சொல்லுடா. இடப்பள்ளி கொலையாளி கே.சி.மாத்யூ எங்க?” பாப்பாளி சான்டோவின் அண்டர்வேரின் கயிற்றைப் பிடித்து இழுத்தபடி கேட்டான். “சொல்லுடா, வரதுகுட்டி எங்கடா?” அப்போதுதான் அண்டர்வேரின் நாடா போடும் துவாரத்தினுள்ளே இருந்து ஒரு காகிதச்சுருள் பாப்பாளிக்குக் கிடைத்தது.

“இதுதானாடா உம் பலத்தோட ரகசியம்?” பாப்பாளி அண்டர்வேரிலிருந்து கிடைத்த ஸ்டாலின் படத்தைக் கசக்கிச் சுருட்டி ஸ்டேஷனின் மூலையில் எறிந்தபடி கேட்டான். அதன்பிறகு ஒரு சின்ன உலக்கையை வரவழைத்து நிர்வாணமாக நின்ற சான்டோவை இடிக்கத் துவங்கினான். திடீரென்று கைகால்களைப் பிடித்திருந்த போலீஸ்காரர்களை உதறித்தள்ளி எழுந்தபடி சான்டோ தமிழில் அலறினான், “ஆனால் தொழிலாளி வர்க்கம் அழிக்கப்படவில்லை. மேலும் ஒன்றுபட்டு முன்னேறுகின்றது. தியாகிகளுக்குப் புரட்சி வணக்கம்” பாப்பாளிக்கு சான்டோ சொன்னது புரியவில்லை. ஒரு நிமிடம் விழித்துப்போய் நின்றான்.

“திருச்சிராப்பள்ளி கோல்டன் ராக் ரயில்வே காலனியில் இரத்த சாட்சி மண்டபத்தில் எழுதி வைத்திருந்ததைத்தான் சான்டோ சொன்னான்”. பிறகு இந்தக் கதையை என்னிடம் சொல்லும்போது அப்பா விளக்கினார். “அங்க ரயில்வே போராட்டத்தை ஒடுக்கறதுக்காக ஹாரிஸன்ங்கற திருச்சி போலீஸ் சூப்ரண்டு நெறய தொழிலாளிகளைக் கொன்னான். நாம மதுரைக்குப் போற வழில ஒரு அனந்தன் நம்பியாரைப்போய் பாத்தமில்ல. அவர்தான் அவங்களோட தலைவர்”.

பாப்பாளி திடுக்கிடலிலிருந்து விழித்துக் கொண்டு மறுபடியும் அடிக்கக் கைஓங்கினபோது சான்டோ சொன்னார். “டே பாப்பாளி, உன்ன நான் தோழர் அனந்தன் நம்பியார் ஹாரிஸன் தொரையைக் கொன்ன மாதிரி கொல்லுவன்டா” பாப்பாளி அடிப்பதை நிறுத்திவிட்டான். மரணங்களிலேயே மிகவும் பயங்கரமான மரணத்தைத்தான் அனந்தன் நம்பியார் ஹாரிஸனுக்குக் கொடுத்தார் என்பது பாப்பாளிக்கும் தெரிந்தே இருந்தது. ரெயில்வே காலனிக்குள் அதிரடியாய்ப் புகுந்த போலீசின் அடியை வாங்கி விழுந்த அனந்தன் நம்பியார் இறந்துவிட்டார் என்று ஹாரிசன் துரை நினைத்துவிட்டான்.

பிணத்தின் மேல் துப்பாக்கி சுடக்கூடாதென்ற ஒரு நம்பிக்கை ஹாரிஸன் துரையின் பிஸ்டலிலிருந்து அனந்தன் நம்பியாரைக் காப்பாற்றியது. கொஞ்சநாள் கழிந்தபோது ஹாரிஸன் தன் பங்களாவின் ஜன்னலுக்கு வெளியே வாசலில் அனந்தன் நம்பியார் சிரிப்பதைப் பார்த்தான். ஒரு நாள் வாசலில் கட்டிவைத்திருந்த அவனுடைய வெள்ளைக் குதிரை திடீரென்று அனந்தன் நம்பியாராக மாறியபோது ஹாரிஸன் தயக்கமேயில்லாமல் அதைச் சுட்டான். கனைத்தபடி மேல்நோக்கிப் பாய்ந்த குதிரை நெஞ்சிலிருந்து சீறி வழிகிற ரத்தத்துடன் கீழே விழும்போது அனந்தன் நம்பியாரின் கையில் செங்கொடி பறந்துகொண்டிருந்தது.

அனந்தன் நம்பியார் ஹாரிஸனை குளியலறை வரை பின்தொடர்ந்தார். ஹாரிஸன் கண்ணாடியின் முன்னால் நின்றபோது கண்ணாடி பிம்பம் ஆடியலைந்து மங்கித் தெளிந்து அனந்தன் நம்பியாராக மாறுவதைக் கண்டான். தானே அனந்தன் நம்பியாராக மாறிவிட்ட நிலையில் எதிரியை வெல்வது சுலபமாயிற்று ஹாரிஸனுக்கு. அவன் தற்கொலை செய்துகொண்டான். சிறிது நாட்களிலேயே அப்பாவையும் அரோரா மத்தாயியையும் சான்டோவையும் விய்யூர் ஜெயிலுக்கு மாற்றினார்கள்.

தனிமைச் சிறையில், அடைக்கப்பட்ட செல்களினுள், இரவும் பகலும் அறியாமல், நித்தியமான அந்தி வெளிச்சத்தில் அவர்கள் வாரங்களைக் கடத்தினார்கள். கட்டுப்படுத்த முடியாமல் உணர்வுகள் பிரளய ஊற்றைப்போல் உள்ளே வெடித்துக் கிளம்புகையில்தான் ஒரு வார்டர் அவர்களுக்கு கட்சியின் செய்தி ஒன்றைக் கொடுத்தான், “பேசாமல் இருக்கக்கூடாது. உரக்க உரக்கப் பேசுங்கள். இல்லையென்றால் பைத்தியம் பிடித்துவிடும். ஏ.கே.ஜி. சொல்லித்தந்த பாடம் இது.

பக்குனின் மைக்ரோபோனின் முன்னால் நின்று காற்றில் கைவீசியபடி உரக்க உரக்க லலா என்று பாடியபடி கண்களுக்குத் தெரியாத ஒரு ஆர்க்கெஸ்ட்ராவை நடத்திக் கொண்டிருந்தான். “கோவிந்தன் குட்டீ, இது எந்தச் சிம்பனி என்று உனக்குத் தெரியுமா?” “இல்லை”. “இதுதான் ஷொஸ்ட்டக்கோவிச்சின் ஏழாவது சிம்பனி தொள்ளாயிரம் நாட்கள் நீடித்த லெனின்க்ராட் நாஜிக்களின் போர் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாயே, அதனிடையில்தான் ஷொஸ்ட்டக்கோவிச் இந்த சிம்ளூபனியை எழுதினார்”.

லெனின்க்ராடு நாஜிப் போர் இப்போதும் அப்பாவையும் பய்யல்லூரின் மற்ற தோழர்களையும் ஆவேசமடையச் செய்திருந்தது. பயிற்சிக்கிடையில் ஊருக்கு வரும்போதெல்லாம் ரஷ்யாவின் சம்பவங்களைக் குறித்துக் கேட்க என்னைச் சுற்றிக் கூடிவிடுவார்கள். சென்றமுறை ஊருக்குப் போனபோது நான் அவர்களிடம் சொன்னேன் ் “இப்போது ரஷ்யாவில் எல்லோரும் ஸ்டாலினை வெறுக்கிறார்கள், ஹிட்லரைப்போல”.

“அதுக்கு நீ ரஷ்யா முழுக்க சர்வே எடுத்தியாட?” ஏரியா செக்ரட்டரி ராஜேந்திரன் கோபத்தோடு கேட்டார். “அவன் மேல கோபப்பட்டா என்ன அர்த்தம்? எல்லாம் அந்த குருஷ்சேவ் ஆரம்பிச்சு வச்ச வேலை”. அரோரா மத்தாயி சொன்னார். “நாஜிக்கள் லெனின்கிராடைப் பிடிக்க வந்தபோது தொள்ளாயிரம் நாள் விட்டுக்கொடுக்காம இருந்தது யாரு ஸ்டாலின்”. அப்பா எழுந்து நின்று பிரசங்கக் குரலில் சொல்லத்துவங்கினார். “நாற்பத்துரெண்டில ஜெர்மன்காரங்க குண்டுபோட்டு அழிச்ச ஸ்டாலின்க்ராடில கிடங்குகள்லயும் வீடுகள் மேலேயும் அழுக்கு ஓடைகள்லயும் நாஜிகளோட கண்ணோடு கண் யுத்தம் நடத்தினது யாரு ஸ்டாலின், ஜெனரல் ஷீக்கோவை வைச்சு ஸ்டாலின்கிராடை மீட்டெடுத்து ரெண்டு லட்சம் ஷெர்மன் வீரர்களைக் கொன்னு உலகப் போரையே ஜெயிக்க வச்சது யாரு ஸ்டாலின்”.

“இப்ப பேச வந்துட்டாங்க” அரோரா மத்தாயி தொடர்ந்தார். “ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலமா ஸ்டாலின் ரஷ்யாவை உலகமகாசக்தியா மாத்தலேன்னா இந்தப் பய்யலூர்ப்பையன் கோவிந்தன்குட்டி ஸ்பேஸ்க்குப் போவானா சொல்லுங்க, போவானா” பய்யல்லூச்ரில் தோழர்களின் ஊர்வலங்களில் ஸ்டாலின் படங்கள் கூடுதலாக இடம்பெறத் துவங்கின. ஐந்து ஸ்டாலினுக்கு மூன்று லெனின். மூன்று லெனினுக்கு இரண்டு மார்க்ஸ், இரண்டு மார்க்ஸ்க்கு ஒரு எங்கல்ஸ். என்று அப்பாவுடையதும் தோழர்களுடையதுமான வாய்ப்பாட்டுச் சூத்திரத்தில் பய்யல்லூர்த் தோழர்கள் இப்போதும் ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்கலாம்.

பக்குனினின் மௌனம் தொடர்ந்தபோது நான் கேட்டேன். “என்ன ஆயிற்று, ஷோஸ்ட்டக்கோவிச்சின் ஏழாம் சிம்பனிக்கு” “கோவிந்தன் குட்டீ”, அவனுடைய குரல் கம்மியது, “இந்த சிம்பனியை முதன்முதலாக அரங்கேற்றியவர்களுக்கிடையில் அப்பாவும் இருந்தார். சாப்பிட அப்பம் இல்லாமல், சூடேற்றிக்கொள்ள நிலக்கரியில்லாமல் லெனின்கிராடின் பாதி ஜனங்கள் இறந்துவிட்டார்கள். அப்பாவின் அண்ணனும் தாத்தாவும் கூட, இந்த சிம்பனியை பயின்று அரங்கேற்றுவதற்காகவே அப்பா வாழ்ந்திருந்தார். கடைசியில் சூடேற்றப்படாத பில்ஹார்மோனிக்கா ஹாலில் தடித்த கம்பளிக் கோட்டுகள் போட்டுக்கொண்டு அப்பாவும் மற்ற வயலினிஸ்ட்டுகளும் வரிசையாய் நின்றார்கள்.

தொட்டுத் தொட்டு நிற்கின்ற மனித உடல்களின் சூடு மட்டுமே அவர்களுக்குக் கிடைத்திருந்தது. தடித்த கையுறைகள் போட்ட கைகளிலிருந்து ஒரு முறை கூட நழுவிப்போக விடாமல் அவர்கள் வயலினின் விற்களை அசைத்து சிம்பனியைத் துவக்கினார்கள். லெனின்க்ராடு முழுவதுமே அதைக்கேட்டே தீரவேண்டும் என்றிருந்தது. அந்தப்பகுதி ரேடியோ நிலையம் அதை ஒலிபரப்பு செய்தது. கிடங்குகளில் கிடந்த ஜெர்மானியர்கள் அதைக் கேட்டபோது முதன்முதலாக அவர்களுக்குத் தோன்றியது, “இந்த அடக்குமுறை தகர்க்கப்பட்டுவிடும்.”

பக்குனின் மீண்டும் மௌனமானான். அவன் என்ன யோசிக்கிறான் என்று நான் யூகித்தேன். அந்த அப்பாவையும் தோழர்களையும்தான் ரகசிய போலீசார் கொண்டுபோய்க் கொன்றார்கள். நான் அவன் முகத்தைப் பார்த்தேன். பக்குனின் இப்போது அழுது விடுவான் என்று தோன்றியது. ஆனால் அதற்குப் பதிலாக இன்னும் ஆவேசமாக சிம்ளபனி முழுவதையும் வாயினால் பலப்பல வாத்தியங்கள் சப்தத்தில் இசைத்தான். சிம்பனி முடிவடைந்தபோது வெகுநாட்களுக்குப் பிறகு ரிசிவரின் சப்தம் கேட்கத் துவங்கியது.

அதனுள்ளிருந்து யாரோ கை தட்டுகிற ஓசை நாங்கள் கேட்டோம். “காலிங் கண்ட்ரோல். இது சோயூஸ்” பக்குனின் சொன்னான். “எந்த சோயூஸ்டூ” ரிசீவரில் ஒரு பெண் ரஷ்ய மொழியில் கேட்டாள். “சோவியத் யூனியனின் சோயூஸ் இருபத்து நான்கு” “சோவியத் யூனியன் அது இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது இங்கே நிறைய ரிபப்ளிக்குகள் மட்டுமே இருக்கின்றன. அது இருக்கட்டும், உங்களின் பெயர்” “கேப்டன் இகோர் பக்குனின்.”

கம்ப்யூட்டரின் கட்டைகளின் மேல் விரல்கள் ஓடும் ஓசை ரிசீவரினூடக் கேட்டது. “அப்படியொரு பெயர் கம்ப்யூட்டரில் இல்லையே. நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்” “லெனின்க்ராட்” அந்தப் பெண் நிறைய நேரம் சிரித்தாள். பிறகு சொன்னாள் ் “அப்படியொரு நகரமும் இப்போது இல்லை. மேயர் ஸெம்செக் அதன் பெயரை மாற்றிவிட்டார். இப்போது அது ஸென்ட் பீட்டர்ஸ்பர்க்”.

“நாங்கள் பூமிக்குத் திரும்ப வேண்டும்”

“நீங்கள் சோவியத் யூனியனின் பாத்யதை. ரிபப்ளிக்குகள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா வேண்டாமா என்பதை அந்தந்த ரிபப்ளிக்கின் பார்லிமெண்ட்டுகள் தான் தீர்மானிக்க வேண்டும். அதுசரி, நீங்கள் ‘நாங்கள்’ என்று சொன்னது?” “என்னுடன் ஒரு இந்தியக்காரரும் இருக்கிறார். சோவியத் யூனியனுக்கும் மூன்றாம் உலகத்துக்கும் இடையிலான இணக்கத்தின் அடையாளமாக.” “சோவியத் யூனியனின் உலக அளவிலான பாத்தியதைகளை ரிபப்ளிக்குகள் ஏற்றுக்கொள்ள முடியாது”. “சொல்லுங்கள், நாங்கள் கீழே வர என்ன செய்ய வேண்டும் “யு.என்னில் இப்போது காணாமல் போன பொருட்களுக்கென்று ஒரு அலுவலகம் துவங்கியிருக்கிறார்கள். நான் உங்கள் பெயரை அங்கே பதிவு செய்கிறேன். ஒரு வேளை யாராவது உங்களைக் கண்டுபிடித்துவிடுவார்கள்.” அவள் அதிர அதிரச் சிரித்தாள்.

நான் விண்வெளிக்கப்பலின் சாளரத்தினூடே வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். பால்வீதியின் துண்டுகள் வெள்ளைக் குதிரைகளாக, அனந்தன் நம்பியார்களாக, லெனின்கிராட் ஆர்க்கெஸ்டராவின் வயலினிஸ்ட்களாக ஆகிக்கொண்டிருந்தன. ரிசீவரினூடே அந்தப் பெண்ணின் சிரிப்பு இன்னும் அடங்கவில்லை. திடீரென ஹாரிஸன் துரை அனந்தன் நம்பியாரானதுபோல் நான் பக்குனின் ஆனேன். அவனது வரலாறு என் காயங்களானது. பக்குனினை தள்ளி நிறுத்திவிட்டு நான் மைக்ரோபோனின் முன்னால் நின்றேன். சபைக்கூச்சத்தில் நான் முதலில் ஒன்றும் பேசவில்லை. பிறகு மனதுக்குள் மடை திறந்து வந்த வார்த்தைகளை நான் அலறினேன், “ஆனால் தொழிலாளி வர்க்கம் அழிக்கப்படவில்லை. மேலும் ஒன்றுபட்டு முன்னேறுகின்றது. தியாகிகளுக்குப் புரட்சி வணக்கம்.”

அந்தப் பெண் பயந்துபோய் மைக்ரோபோனை ஓசை விண்வெளிக்கப்பலின் உள்ளே முழங்கியது. பக்குனின் விண்வெளியில் நடப்பதற்கு உபயோகப்படுத்தும் உடைகளை அணியத் துவங்கினான். அவன் கதவை நோக்கி நடந்தான். “கோவிந்தன் குட்டீ, நான் போகிறேன்.” பக்குனின் ஹெல்மெட்டுக்குள்ளிருந்த சிறிய மைக்கில் சொன்னான். அவன் விண்வெளிக் கப்பலின் கதவைத் திறந்து வெளியே இறங்கியபோது விண்வெளிக் கப்பலுடன் கட்டப்பட்டிருந்த அவனின் இடுப்பில் மாட்டப்படிருந்த உலோகக் கம்பி இழுத்தது. நானும் கதவருகே சென்றேன். வெளியே விண்வெளிக் கப்பலின் சோலார் பேனல்கள் டைரொடக்மூன் பறவையின் சிறகுகளைப் போல விரிந்திருந்தன.

பக்குனின் இடுப்புக் கொக்கியை கழற்றி விடுபடத் தயாரானான். “பக்குனின், நீ போய்விட்டால் நானென்ன செய்வேன். இந்த மூன்றாம் உலகம்?” நான் கேட்டேன். “கோவிந்தன் குட்டீ, நான்காம் உலகத்திடமா இப்படிக் கேட்கிறாய்?” ஹெல்மெட்டின் கண்ணாடி ஜன்னலினூடே அவனின் நிறைந்த கண்களின் சிரிப்பை நான் கண்டேன். பக்குனின் கொக்கியைக் கழற்றி விடுபட்டான். கொஞ்ச தூரம் வளைந்து நெளிந்து ரஷ்யன் மொழியில் எதையோ எழுதிக்கொண்டு முன்னேறினான். சிரிலிக் லிபிகளின் சதுர வடிவங்கள் முடிவுக்கு வந்தபிறகு, கால் மூட்டுகளின் மேல் தாடையை வைத்து அமர்ந்து பக்குனின் நேர்க்கோட்டில் தன் கிரகப்பாதையை உருவாக்கத் தொடங்கினான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com