Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Neythal
Neythal Logo
மார்ச் - ஏப்ரல் 2008

எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு
சு. தியடோர் பாஸ்கரன்

சு. தியடோர் பாஸ்கரன் - அஞ்சல் துறையில் பல உயரிய பொறுப்புகளை வகித்துவிட்டு, ஓய்வு பெற்று இருக்கும் இவர் தமிழின் குறிப்பிடத்தக்க சினிமா ஆய்வாளர். சூழலியல், வனவளம் மற்றும் காட்டுயிர்கள் குறித்துத் தமிழிலும், ஆங்கிலத்திலும் நெடுங்காலமாக எழுதி வருபவர். இத்துறைகள் சம்மந்தமாக தமிழில் வழங்கிவரும் பெரும்பாலான கலைச்சொற்களை அறிமுகம் செய்து வருபவர். தற்போது இயற்கைக்கான உலகநிதியம் WWF-ன் இந்திய அறங்காவலர். அவருடன் நேர்காணலும் தொகுப்பும் ஜெயப்பிரகாஷ்வேல்

இந்தியாவில் மக்கள், ஊடகங்கள் மற்றும் அரசு இவர்களிடையே பல்லுயிரியம் பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வு எப்படியுள்ளது?

தியடோர் : மிகக் குறைவுதான். வெப்பமண்டல நாடாகிய நமது இந்தியா, பல்லுயிரியத்தின் வளமைசெழிக்கும் பூமி. ஆனால் மக்கள், ஊடகங்கள் மற்றும் அரசு என்ற இந்த மூன்று தளங்களிலும் இந்த வளமையை எதிர்கால சந்ததிக்காகப் பேணிக்காக்க வேண்டுமென்ற உணர்வு நாளுக்குநாள் குறைந்து வருகிறது. ஊடகங்கள், குறிப்பாக தமிழக ஊடகங்கள் முக்கியமான இந்தப் பிரச்சனையைப் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் உள்ளன. பல்லுயிரியம் வீசை என்ன விலையென்று இவர்கள் கேட்பார்கள். அவை முழுவதும் சினிமாவினால் நிரம்பியுள்ளன. சில வேளைகளில் அவர்கள் தவறான விபரங்களையும் திரிபான செய்திகளையும் வழங்குகிறார்கள். பல்லுயிரியம் என்னும் கருத்தாக்கம் ஒன்றும் புதிது அல்ல. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று திருக்குறளில் உள்ளது.

சேது சமுத்திரக் கால்வாய் போன்றதான பெரிய வளர்ச்சித் திட்டங்கள் முன்வைக்கப்படும் போதெல்லாம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த குரல்கள் எழுகின்றன. இவற்றில் பிரச்சனை எங்கே ஆரம்பிக்கிறது?

தியடோர் : பணத்தில் தான் ஆரம்பிக்கிறது. இதுமாதிரியான திட்டங்களை அரசு பொருளாதார வளர்ச்சி என்ற ஒற்றைக் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறது. பெரும்பாலும் சூழல் பாதுகாப்பு கண்டு கொள்ளப்படுவதேயில்லை. பன்முக விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற பெரிய வளர்ச்சித் திட்டங்களைப்பற்றி திறந்த விவாதங்கள் கருத்தறிதல்கள் இல்லாமலேயே நடக்கின்றன.

சூழல் பாதுகாப்பு குறித்த வெகு சில குரல்கள் வேண்டுமானால் அரசியல் நிலைப்பாட்டிற்காகவும் விளம்பரத்திற்காகவும் எழலாம். ஆனால் மிகப்பெரும்பாலான குரல்கள் சுற்றுச்சூழலின்பாலெழுந்த உண்மையான அக்கறையுள்ள குரல்களே. எத்தனைக் குரல்கள் எழுந்தால் என்ன? இதுவரை ஒற்றைத்திட்டம்கூட சூழலியல் காரணங்களுக்காக கைவிடப்பட்டதில்லை.

கிழக்குக் கடற்கரைச் சாலையை எடுத்துக் கொள்ளுங்கள். நமக்குச் சாலை கிடைத்து விட்டது. வணிகம் வளர்கிறதென்கிறோம். ஆனால் இதனால் நாம் இழந்தவை என்ன? பல்லாயிரம் மரங்கள் குறுஞ்செடிகள், புற்கள், குளங்கள். எல்லாம் இழந்து விட்டோம். கடலோர வாழிடத்தையே கலைத்துப்போட்டு விட்டோம். அரசு நினைத்தால் என்ன விளைவென்றாலும் நடத்தியே தீரும். ஆனால் இந்தப் பூமியில் எல்லாவற்றுக்கும் ஓர் விலை உண்டு. ஒரு திட்டத்தின் பொருட்டு நாம் எதையேனும் இழக்கிறோமென்றால், இழப்பை விடவும் நமக்கு கிடைக்கும் நன்மை அதிகமானால் அது அறிவுடமை. நாம் கொடுக்கும் விலை உபயோகமாக இருக்க வேண்டும்.

புல் தரைகள் அமைப்பது சமீபகாலமாக பெரு வரவேற்புடன் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இது நமது பாரம்பரியம் அல்ல. மேற்கிலிருந்து தருவிக்கப்பட்டது. மேலை நாடுகளில் தண்ணீர் பொதுச்சொத்து. நீராதாரங்கள் அதிகம். குறைந்த அரிய வெப்பமும் அதிக மழையுமாயுள்ள அந்தச் சூழல்களில் புல்தரைகள் பெரிய தீங்கல்ல. தண்ணீர்ப் பிரச்சனையால் தவிக்கிற நமது நாட்டில் இதுமாதிரியான தனியார் புல்தரைகள், டென்னிஸ் மைதானங்கள், கிரிக்கெட் மைதானங்கள், கோல்ப் கிளப்புகள் முதலியன அதிக நீரை உபயோகிப்பவை. மேலும் இவை பல்லுயிரிய வளமையையும் அழிக்கின்றன. இந்தப் புல்தரைகளில் பூக்கள் பூக்குமா வண்டுகள் வருமா பட்டாம்பூச்சிகளை நீங்கள் பார்க்கமுடியுமாட புல் என்கிற ஒற்றை உயிரியை வளரவைக்க நாம் நூற்றுக்கணக்கான உயிரிகளின் வாழ்வாதாரத்தை அழித்து விடுகிறேhம்.

உலகளவில் எந்த நாட்டில் பல்லுயிரியப் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?

தியடோர் : நம் உள்நாட்டிலேயே இதற்கு நல்லதோர் உதாரணம் உள்ளது. இமாலயப்பகுதி மாநிலமாகிய சிக்கிம். இம்மாநிலத்தவர் இயற்கை எழில் மற்றும் பல்லுயிரிய வளமைதான் தமது சொத்து என அறிந்தவர்கள். அதனால் அவற்றைப் பாதுகாக்க பெருமளவில் பாடுபட்டு வருகிறார்கள். குழந்தைகளுக்குப் பல்லுயிரிய வளமை மற்றும் சூழலியல் பற்றிய கருத்துகளை பதியவைக்கின்றார்கள். சட்டங்களைக் கடுமையாக அமல்படுத்துகிறார்கள். இப்போது உலகத்தின் பார்வையை தங்கள் மீது திருப்பி இருக்கிறார்கள்.

உலகளவில் பார்த்தால், ஒரு முரண் உள்ளது. குறைந்த பல்லுயிரிய வளமையுள்ள நாடுகள் அவற்றைப் பாதுகாப்பதில் அதிகம் கவனம் செலுத்துகின்றன. இதற்கு நேரெதிராக வளம் அதிகமுள்ள நாடுகள் இவற்றை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஆஸ்திரேலியா, கனடா ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் குவாரண்டைன் என்கிற வெளிநாடுகளில் இருந்து உள்வரும் உயிரின வகைகளை பரிசோதிக்கும் நடைமுறைகள் கடுமையாக உள்ளன. இந்தியா, பப்வா நியூகினியா, மியான்மர், பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல்லுயிரிய வளமை கூடப்பெற்ற நாடுகளில் இந்த நடைமுறைகள் தீவிரமாக இல்லை. இதனால் புதிய உயிர்கள் உள் நுழைவதும் புதிய வியாதிகள் தோன்றுவதும், வாழ்ந்திருந்த உயிரிகள் அழிவதும் சகஜமாகி விட்டது.

இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?

தியடோர் : சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் மதிக்கப்படாததும் சரியாக நடைமுறைப்படுத்தப் படாததும்தான் காரணமாக இருக்க முடியும். இந்தியாவில் பல்லுயிரிய வளமையைக் காக்கும் சட்டங்கள் மிகவும் திருப்தியளிக்கக் கூடியவை. ஆனால் சரியாக நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. மக்கள் இவற்றை அறியாமலிருப்பதும் மதிக்காமல் நடப்பதும் வேதனை. தேசிய பல்லுயிரிய வளமை ஆணையம் இங்கே நீலாங்கரை அருகே தான் உள்ளது. ஆனால் என்ன பலன் இவர்களின் நூல்கள் பொதுமக்களை அடையவில்லை. பெரும்பாலும் ஆங்கிலத்தில் வேறு வருகின்றன. எனவே எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதைச் செய்யவில்லை என்றே சொல்லலாம்.

மக்களும் சட்டங்களை மதிக்கவேண்டும். சுறாக்கள் மற்றும் அயிலா மீன்களின் தீவிர இனப்பெருக்க காலத்தில் 45 நாட்கள் இவ்வகை மீன்களை பிடிக்கக் கூடாது என சட்டம் உள்ளது. ஆனால் சந்தையில் யாரேனும் இந்நாட்களில் இம்மீன்களை விற்றால் மக்கள் வாங்குகிறார்கள் மறைமுகமாக சட்டங்கள் விதிமுறைகளை மீறுவதற்கு உந்துதலாக உள்ளார்கள்.

பல்லுயிரிய வளமை மற்றும் பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சிகள் நம் நாட்டில் எப்படி உள்ளன?

தியடோர் : கண்டிப்பாக போதாது. இதுநாள்வரை அரசு சார் நிறுவனங்கள் மட்டுமே செய்து வந்த இம்மாதிரி ஆய்வுகளை இப்போதுதான் தனியார் மற்றும் அரசு சாரா அமைப்புகள் இறங்கியுள்ளன. ஆனால் வேதனை என்னவெனில் பெரும்பாலான ஆய்வு முடிவுகள் வெறும் அறிவாக காகிதங்களில் பூட்டப்பட்டுள்ளன. நடைமுறைப்படுத்தப்படவில்லை. அரசும் இதுகுறித்த முன்னுரிமை காட்டுவது இல்லை. குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் ஆளுநர் என யாவரின் உரையிலும் பல்லுயிரிய வளமை இடம் பிடிப்பதில்லை.

சுற்றுலாத்துறை வளர்ச்சியின் பல்லுயிரிய வளமைக்கு என்ன விளைவு நேர்கிறது? காடு, காட்டுயிர் இவை மாநிலத்தால் நிர்வகிக்கப்படுபவை, பிரச்சனையே அங்கே தான்.

தியடோர் : சந்தேகமேயில்லை. நம் நாட்டில் சுற்றுலா, காட்டுயிர் மற்றும் பல்லுயிரியம் இவற்றிற்கு குந்தகம் விளைவிப்பதாகவே அமைந்துள்ளது. இந்தியாவில் சுற்றுலாத்துறை வளர்ச்சியால் பல்லுயிரிய வளமை அழிக்கப்பட்டு வருகிறது. Ecotourism என்று சூழலோடு இணைந்த சுற்றுலா என இந்தியாவிலும் விளம்பரப்படுத்தப்படுகிறது. விளம்பரத்தில் மட்டுமே இது உள்ளது. உண்மையில் இந்தியாவில் அப்படி ஏதும் கிடையாது.

ஒரு இடம் சுற்றுலாத் தளமாக அறியப்படுகிறதென்றால் அது சாலை வசதிகளால் மேம்படுத்தப்பட வேண்டும். சாலைபோடும்போது காடுகளை அழிக்க வேண்டும். இது வேட்டையாடுதல், மரக்கொள்ளை மற்றும் புதிய தாவர விலங்கு நோய்களின் புகுதல் என்ற பல்வேறு விளைவுகளை உண்டாக்கும் அந்தச் சூழலை, வாழிடத்தையே இது மாற்றி விடும். மக்களும் அரசும் பணம் எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்று நம்புகிறார்கள். அழிக்கப்பட்ட பவழத்திட்டுக்களை பணம் மீண்டும் வளர வைக்குமாடூ

சரணாலயங்கள் காட்டுயிர்க்காக உள்ளவை. அவைகளது வாழிடம். மக்கள் அவைகளைப் பார்க்கப் போனால் காட்டிற்கே, காட்டுயிர்க்கே எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். எந்த சரணாலயத்திலும் இந்நிலை இல்லை. சுற்றுலாத் துறையில் ஈட்டப்படுகிற வருவாய் பல்லுயிரிய வளமையை மேம்படுத்த பாதுகாக்க உபயோகப்படுத்தப்படுகிறதென்றால் சுற்றுலாவின் வளர்ச்சியை ஒத்துக் கொள்ளலாம். அரசு போர் விமானங்கள் வாங்குகிற அக்கறையில் நாலில் ஒரு பங்கு கூட பல்லுயிரிய வளமைகாச்க்க காட்டுவதில்லை.

கென்யா, தென்னாப்ரிக்கா முதலான நாடுகளில் சுற்றுலா என்பது பல்லுயிரிய வளமையையோ சுற்றுச்சூழலையோ பாதிக்காமல் நடைபெறுகின்றது. விதிகளும் கட்டுப்பாடுகளும் தீவிரமான கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்தியாவிலோ, இத்தகைய சட்டங்களை பாதுகாக்க வேண்டியவர்களும், படித்தவர்களும் சமூகத்தின் மேல்தட்டில் இருப்பவர்களும், ஏமாற்றுகிறர்களாக இருக்கிறார்கள். நமது கலாச்சாரம் மிகவும் பழமையானது. எனவேதான் புதிய சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றுவது மெதுவாக நிகழ்கிறது. மிகவும் இளைய மேலை நாகரிகங்கள் இந்தப் புதிய சட்டங்களில் எளிதாக பொருத்திக் கொள்கிறார்கள்.

மற்றொரு வேதனை என்னவெனில் இங்கே புனிதப்பயனங்கள், இன்பச்சுற்றுலாக்கள், விடுமுறைப் பயணங்கள் இவைகளுக்குள்ளே வேறுபாடு அறிந்து கொள்ளப்படுவதில்லை. கூட்டமாக வாகனங்களில் வந்து கூச்சலிடுபவர்களை முதுமலைக்காட்டில் கூட நீங்கள் காணலாம். வேடந்தாங்கலில் பேருந்து சரணாலய ஏரிக்கு வெகு அருகிலேயே வந்து நிற்கின்றது.

அரசு சாரா நிறுவனங்களின் பங்குபற்றி. . . .

தியடோர் : அவை உண்மையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால் இந்த அமைப்புகளின் செயல்பாடுகளுக்கும் அரசின் இயக்கத்திற்கும் இடையில் ஒருங்கிணைவு இல்லை. கேரள சாஸ்திரிய சங்ரமம், (அமைதிப் பள்ளதாக்கு இயக்கம்) கல்ப விருக்ஷ் (டெல்லி) மற்றும் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் ஆகியன குறிப்பிடத்தக்க வகையில் இயங்கி வருகின்றன. இயற்கைக்கான உலக நிதியம் பம்பாய் இயற்கை வரலாற்றுக்கழகம் இவையும் நல்ல பங்களிப்பை நாட்டளவில் செய்து கொண்டிருக்கின்றன.

ஆனால், உள்ளுரளவில் இயங்கும், சிறு தன்னார்வக்குழுக்களுக்கு அரசு ஆதரவு கிடைப்பதில்லை. அவர்களை எந்த முயற்சிகளிலும் சேர்த்துக் கொள்வதில்லை. இது அரசிற்கும் பல்லுயிரியத்திற்கும் பெரும் இழப்பு என்றே நான் கருதுகின்றேன். இம்மாதிரி பல தன்னார்வக்குழுக்கள் தமிழ்நாட்டில் உண்டு. மேட்டுப்பாளையம் காட்டுயிர் அமைப்பு, கோவையில் ஓசை போன்ற பல குழுக்கள் நல்ல பணி செய்து வருகின்றன. எந்த அமைப்பையும் சேராமல் பல தனிநபர்களும் காட்டுயிருக்காக போராடி வருகிறார்கள்.

உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் இவற்றின் விளைவுகள் எப்படியுள்ளன?

தியடோர் : இவை பல்லுயிரிய வளமையையும் சுற்றுச் சூழல் நலனையும் எதிர்மறையாக பாதிக்கின்றன. வட்டாரத் தாவர வகைகள் உணவு வகைகள் எல்லாம் இவற்றால் வழக்கொழிந்து வருகின்றன. முன்னெல்லாம் கடைகளில் எத்தனை வகை மாம்பழங்கள் வாழைப்பழங்கள் கிடைக்கும். இப்போது அத்தனையா கிடைக்கிறது? நுகர்வு கலாச்சாரத்தினாலும் வணிகமயமாக்கலினாலும். பல்லுயிரிய வளமை அழிந்து பட்டு வருகிறது. தொழிற்சாலைகள் கட்ட காடுகள் அழிக்கப்படுவது போன்றனவும் இதனுள் அடங்கும்.

பல்லுயிரிய வளமை பாதுகாப்பில் பழங்குடியினர் எவ்விதம் தொடர்பு கொண்டுள்ளனர்?

தியடோர் : பல்லுயிரியம் குறித்த அளப்பரிய அறிவை பழங்குடியின மக்கள் கொண்டுள்ளனர். தாவரங்களின் வாழ்நிலை சுழற்சி மற்றும் அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்த அவர்களின் அறிவு பிரமிக்கத்தக்கது சிலவேளைகளில் பழங்குடியின மக்கள் காட்டு வளங்களை அழிப்பதாக கூறப்படுகிறது. இப்பொருள் பற்றி தேசிய அளவில் விவாதம் நடைபெற்றுக் ச்கொண்டிருக்கிறது. உண்மையான பழங்குடிகள் வனங்களை அழிப்பதில்லை. அவர்கள் அதைக் காக்கிறவர்கள். வனத்தை வணங்குபவர்கள். ஆனால் பழங்குடிகளுக்கும், வெளியிலிருந்து வணிக நோக்கோடு உள்புகுந்து குடியிருப்போருக்கும் வித்தியாசம் கண்டு கொள்ளப் பழக வேண்டும். வனக்கொள்ளையர்களின் பினாமிகளாக சில பழங்குடி மக்கள் இருப்பதும் முற்றாக மறுப்பதற்கில்லை.

ஆய்வு மாணவர்களாகிய நாங்கள் என்ன செய்யலாம்?

தியடோர் : பல்லுயிரிய வளமை குறித்த ஆய்வுகளை தீவரப்படுத்துவதுடன், தாவர, விலங்கினங்களின் தமிழ்ப்பெயர்களை பதிவு செய்யலாம். இல்லையெனில், தமிழ் பெயர்கள் சீக்கிரமே வழக்கொழிந்து போகும். அதற்குள் ஆவணப்படுத்த வேண்டும். இவ்வகை வட்டார பெயர்ச் சொற்கள் பெரும்பொருள் பொதிந்தவவை. லொராந்தஸ் எனும் மாமரத்தின் மீது ஒட்டி வாழக்கூடிய கொடிக்கு வட்டாரப் பெயர் மாஞ்சக்களத்தி. பெயரே சொல்கிறதல்லவா அதன் இருப்பையும் இயல்பையும்டூ இத்தகைய அரிய பொpய பெயர்ச் சொற்களை ஆவணப்படுத்தலாம். இது ஒரு பாரம்பரியச் சொத்து போல.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com