Keetru Neythal
Neythal
ஜனவரி 2009
திரையில் தத்தளிக்கும்
அறிவியல் - முதல் பாகம்
விக்னேஷ்ராம்

தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரத்திற்கும் மேலான (சரியாக 1093) அதிசய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருந்தாலும் அவற்றில் முக்கிய மானவை இருள் விரட்டும் மின் விளக்கும், இருளில் காட்டப்படும் சினி மாவும். சினிமாவின் ஆதாரமான படச்சுருளில் தொடங்கி, ஒளி - ஒலிப்பதிவு, இசை, தணிக்கை, சுவரொட்டி அச்சிட்டு படத்தினை கொட்டகையில் ஓட்டுவது வரை பிரமிக்கத் தக்க வகையில் அறிவியல் சினிமாவுடன் கூட்டுக்குடித்தனம் நடத்தி வருகிறது. ஆனால், சினிமாவில் அறிவியல் படும்பாடு இருக்கிறதே, தொலைக்காட்சி நெடுந்தொடர் மருமகள் பாடு போல பரிதாபம் தான். படைப்பாளிகளின் கற்பனைக் குதிரைக்கு இறக்கை கட்டிப் பறக்கும் பழக்கம் உண்டு. அந்த வேகத்தின் புழுதியில் அறிவியல் உண்மைகள் அடித்துச் செல்லப்படுவது இயற்கை தான். ஆனால், சில எல்லைகளையும் மீறி கற்பனைச் சுதந்திரம் என்ற பெயரில் சினிமாவில் அறிவியலை போஸ்ட் - மார்ட்டம் செய்வது வருத்தத்திற்குரியது.

தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியை சற்றே ஆராய்ந்தால், நாடகங்களின் மறுவடிவாடீநு புராணக் கதைகளில் தொடங்கி, பக்தியில் உருகி, மெல்ல சுதந்திரப் போராட்டத்திற்கு தோள் கொடுத்து, பின் சமூக சிந்தனை வண்ணம் பூசி உடன் விஸ்வரூபம் எடுத்த அறிவியல் தொழில்நுட்பங்கள் கைகோர்த்து பிரமிக்க வைக்கிறது. ஆனால் இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டிலும் கணிப்பொறி அனிமேஷன் தொழில்நுட்ப உதவியால் மூட நம்பிக்கைக் கொள்கைப் பரப்பில் ஈடுபடுவது மகா கொடுமை. ஊருக்குள் நுழைந்து அட்ட காசம் செடீநுயும் கணிப்பொறி உருவாக்கிய டைனேசார் போன்ற ஜந்துவை பெண் தெடீநுவம் வதம் செய்வது, பாம்பு கார் ஓட்டுவது, எழுத்தறிவு கொண்ட யானை என சினிமாவுக்கு குடலிறக்கம் ஏற்படுத்தும் இயக்குனர்களை பசித்த புலி புசிக்கக்கடவது.

தொன்று தொட்ட கறுப்பு - வெள்ளை திரைப்படம் முதல், டிஜிட்டல் மிரட்டல் காலம் வரை இந்த காட்சியை தவறாமல் சினிமாவில் பார்த்து வருகிறோம். பெண் கதாபாத்திரம், குறிப்பாக கதாநாயகி திடீரென வாந்தி எடுப்பாள். அல்லது மயங்கி சரிவாள். உடனே ஒரு பெட்டியோடு (அதில் என்னதான் இருக்குமோ?) வேகநடை போட்டு வரும் மருத்துவர், மணிக்கட்டில் நாடி பிடித்து பார்ப்பார். பின்னணியில் வீணை இசை பிரவாக மெடுக்க, அவள் கணவனைப் பார்த்து “நீங்க அப்பாவாகப் போறீங்க!” என்பார். நாடி பிடித்துப் பார்த்து இதயம் துடிக்கிறது என்று வேண்டுமானால் உறுதி செய்யலாலாமே அன்றி ஸ்கேன் செய்யாமல் கர்ப்பத்தை உறுதிபடுத்த முடியாது என்பது மருத்துவ ரீதியான உண்மை. நவீன மருத்துவத்திற்கு சவாலாய் மீளாக் கோமாவில் இருக்கும் கதாநாயகி, அடிக் குரலில் கதா நாயகன் பாடும் பாடலை கண்ணாடி அறைக்குள் கேட்டு கண் விழிப்பதும், தலையணைக்கு ஊசி போடும் டாக்டர்களும் சினிமாவில் மட்டுமே சாத்தியம். நம் கலையுலக பிரம்மாக்களுக்கு நாடி பிடித்துப் பார்த்து வைத்தியம் செய்தால்தான் திருந்துவார்கள் போலும்.

கமலின் பத்து வேடங்களாலும் பற்பல சர்ச்சைகளாலும் விளம்பரப் படுத்தப்பட்ட தசாவதாரத்தின் கதைக்களமே அறிவியல் என்ற போதும், ஒப்பனைக்கும், தொழில் நுட்பத்திற்கும் கோடிகளை கொட்டியவர்கள், அறிவியல் சம்பந்தப்பட்ட பகுதிகளில் சொதப்பியிருப்பது கண்ணில் உமியாய் உறுத்துகிறது. மார்பர்க், எபோலா வகையைச் சேர்ந்த வைரஸ் வெறும் “சோடியம் க்ளோரைட்” அதாவது உப்புக்கரைசலில் சாகாது. மேலும், பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து பைனாக்குலர் போன்ற கருவி கொண்டு தரையில் நெளியும் வைரஸ்(!) கிருமியை `பல்ராம் நாயுடு’ கமல் பார்ப்பது வயிற்றைப் புண்ணாக்கும் அசட்டு மற்றும் அசிரத்தைப் படமாக்கம். மருத்துவரே செய்யத் தயங்கும் நுணுக்கமான அறுவை சிகிச்சையை `அவதார் சிங்கின்’ குரல்வளை துளைத்து வெளியேறும் துப்பாக்கிக் குண்டு சாதிப்பது அம்புலிமாமாத் தனம்.

வேதியியல் ஆய்வுக்கூடத்தின் பின்னணியில் காதலையோ மோதலையோ படமாக்கினால் போதும். ஆர்ட் டைரக்டர் வரிந்து கட்டிக் கொண்டு தெலுங்குக் கதாநாயகன் உடை போல பல வண்ண திரவங்களை குடுவைகளில் நிரப்பிவிடுவார். அவ்வாறு காட்டினால் தான் மக்கள் அதனை ஆய்வுக்கூடம் என்று நம்புவார்களா என்ன? மக்களின் ரசனையையும், மதிப்பீட்டுத் திறனையும் மிகக்குறைவாக மதிப்பிடுவதையே இது காட்டுகிறது.