Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
Manmozhi WrapperManmozhi Logo
செப்டம்பர் - அக்டோபர் 2008
தமிழ் செம்மொழி அறிவிப்பு பித்தலாட்டமும்-அம்பலமும்
இரா.சம்புகன்


தமிழை செம்மொழியாக அறி வித்து செம்மொழிக்குரிய சிறப்புச் சலுகைகள் அனைத்தையும் தமிழுக்கு வழங்க வேண்டும் என்பது தமிழ் அறிஞர்களின் நீண்டநாள் கோரிக்கை. 1918 சைவ சித்தாந்த சமய மாநாட்டுத் தீர்மானம் தொடங்கி பல்வேறு தமிழ் அறிஞர்களாலும், தமிழ் அமைப்புகளாலும், இக்கோரிக்கை முன் வைக்கப்பட்டு வந்தது.

இந்த நீண்டநாள் கோரிக்கையை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் (ருஞஹ) குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்தில் இதையும் இடம்பெறச் செய்தார். இதன்படி காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றியதும், குறைந்தபட்ச வேலைத்திட்டத்தில் குறிப்பிட்டபடி, ‘தமிழ் செம்மொழி’ என ஏற்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இளித்தவாய்த் தனத்தையோ ஏமாளித்தனத்தையோ இயல்பாய்க் கொண்ட தமிழர்கள் எப்போதும் போல் இதையும் கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போதே இதில் நடந்துள்ள பித்தலாட்டங்களையும் ஏமாற்றுக்களையும் விழிப்புள்ள பல தமிழ் அறிஞர்கள் சுட்டிக்காட்டினர். தமிழ் அமைப்புகளும் எடுத்தியம்பின. தமிழ் செம்மொழி அறிவிப்பில் என்னதான் நடந்தது என்பது தமிழ் உணர்வாளர்கள் பலருக்கு முழுமையாகத் தெரியாது. ஆட்சியாளர்கள் சொல்ல மறந்த கதை அது. உணர்வாளர்கள் அறிய ஆர்வப்படாத கதையும் அது.

தில்லி அரசு நிர்வாகத்தில் பிரித் தானிய ஆட்சிக் காலத்திலிருந்தே சமஸ்கிருதம், பாரசீகம், அராபி ஆகிய மொழிகள் செம்மொழியாக கொள்ளப்பட்டு அதற்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு தனி நிதி ஒதுக்கீடும், அம்மொழிசார் அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசுத் தலைவர் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆகவே, அந்த வகையில், அந்த வரிசையில் தமிழையும் அம்மொழிகளுக்கு இணையாகச் சேர்த்து தமிழுக்கும் சிறப்பு நிதி உதவி, தமிழ் அறிஞர்களுக்கு உயர் விருதுகள் வழங்க வேண்டும் என்பதே தமிழறிஞர்கள், அமைப்புகளின் கோரிக்கை.

ஆனால் அது நிறைவேறவில்லை. மாறாக, சமஸ்கிருதம், பாரசீகம், அராபி போன்ற தொன்மை வாய்ந்த மொழிகளின் பட்டியலில் தமிழைச் சேர்க்காமல், அதை விடுத்து தனியே செம்மொழிக்கென்று ஒரு பிரிவைத் தொடங்கி, அதில் ‘தமிழை’ இடம் பெறச் செய்தார்கள். தவிர, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இதைக் கொண்டு வராமல் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இதை முடக்கிப் போட்டார்கள். இவையே சிக்கலுக்கெல்லாம் காரணம். தமிழை எங்கு வைத்தால் என்ன, செம்மொழி, செம்மொழிதானே என்று சிலர் நினைக்கலாம். ஆனால் பலரும் நினைப்பது போல சாதாரணமாய்ப் புறம் தள்ளி விட்டுப் போகிற பிரச்சினை இல்லை இது. இதன் பின்னால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராக மிகப்பெரும் மோசடியே நடந்துள்ளது.

முதலாவதாக, சமஸ்கிருதம், பாரசீகம், அராபி மொழிகளது பட்டியலுடன் தமிழைச் சேர்த்து நாம் அறிவிக்கச் சொன்னதன் நோக்கம், அந்த மொழிகளுக்கு இணையாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையும் வளப்பமும் கொண்டதாகத் தமிழ் மொழி இருக்கிறது என்பதனால்தான். ஆனால் ஆட்சியாளர்கள் அதைச் செய்யாமல் அந்த வரிசையில் தமிழை வைத்தால் சமஸ்கிருதத்தின் புனிதம் கெட்டுவிடும், சமஸ்கிருதம் தீட்டுப் பட்டுவிடும் என்றும், மற்ற மொழிகள் எதுவும் சமஸ்கிருதத்துக்கு சவால் அல்ல. தமிழ் மட்டுமே சவால் என்பதால் தமிழை அத்துடன் சேர்க்காமலும் தனியே வைத்தார்கள்.

இத்துடன் ‘செம்மொழி’ என்பதற்கு உலக அறிஞர்கள் அளவில் ஏற்கப்பட்ட ‘குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கண இலக்கியங்களைக் கொண்டு தனித்து இயங்கும் ஆற்றல் பெற்ற மொழியே செம்மொழியாகக் கொள்ளப்படும்’ என்கிற வரையறையையும் தகர்த்து அதை மாற்றி ஆயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட தொன்மை என்றும் திருத்தினார்கள். அதாவது தமிழுக்குத் தனித்தகுதி வந்து விடக்கூடாது என்பதற்காகவும், பின்னால் கன்னடம், மலையாளம், தெலுங்கு முதலான மொழிகளையும் இந்த தமிழ் செம்மொழிப் பட்டியலில் சேர்த்து இவற்றைச் சமப்படுத்தி விடலாம் என்கிற தொலை நோக்கோடும் சூழ்ச்சியோடும் இதைச் செய்தார்கள்.

இந்தச் சூழ்ச்சியின் பின்னிருந்தவர்கள் பண்பாட்டுத்துறை அமைச்சர் தெலுங்கர் ஜெய்பால் ரெட்டி, அவரது அமைச்சரகச் செயலாளர் மலையாளி ஜெயக்குமார், சாகித்ய அகாதமிச் செயலாளர் இன்னொரு மலையாளி சச்சிதானந்தன். இவர்களது கூட்டுசதி தான் தமிழை மலினப்படுத்தி 1000 ஆண்டுத் தொன்மைக்குட்பட்டதாக ஆக்கப்பட்ட செம்மொழி அறிவிப்பு. இவர்கள் மூவரும் இதில் எங்கிருந்து எப்படி வந்தார்கள் என்றால் அது தனிக்கதை. செம்மொழி அறிவிப்பு சார்ந்த பிரச்சனையில், தொடக்கத்தில் அது மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழேயே இருந்தது. அத்துறை அமைச்சர் அர்சுன்சிங் இது பற்றி கருத்தறிய மைசூரில் உள்ள இந்திய மொழிகள் நடுவண் ஆய்வகத்தைக் கோரியுள்ளார்.

அந்நிறுவனமும் 2000 ஆண்டு தொன்மையைத்தான் பரிந்துரைத்திருக்கிறது. இடையில் அப்போதைய தொழில் அமைச்சர் மாறனுக்கும், மனிதவள மேம்பாட்டுத்துறை அர்சுன் சிங்கிற்கும் ஏற்பட்ட சில தன்னோக்கு அணுகுமுறையில் அர்சுன் சிங் மனத்தாங்கலுற்று தமிழ் செம்மொழி அறிவிப்பு தன் அமைச்சகத்தின் கீழ் வராது என அதை பண்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி விட்டார். பண்பாட்டு அமைச்சகமும், மேலே சொல்லப்பட்டவர்களும் சேர்ந்து தமிழுக்கு எதிராகத் திட்டம் வகுத்து, மைசூர் நிறுவனம் பரிந்துரைத்த 2000 ஆண்டுத் தொன்மையை பரிசீலனைக்காக என்று சாகித்ய அகாதமிக்கு அனுப்பி அதை ஆயிரம் ஆண்டாகக் குறைத்தார்கள்.

இந்த ‘ஆயிரம்’ ஆண்டு அடிப்படையில்தான் இப்போது தமிழுக்கு இணையாக கன்னடமும் செம்மொழிப் பட்டியலில் சேர இருக்கிறது. அப்புறம் இதையடுத்து தெலுங்கு, மலையாளம் என ஒவ்வொன்றாக மற்ற மொழிகளும் இதில் சேரும். தமிழ் பத்தோடு பதினொன்று ஆகும். ஆனால் என்ன, தமிழுக்கு உரிய தகுதி கிடைத்தால் சரி. மற்ற மொழிகளைப் பற்றி நாம் ஏன் பொறாமைப்படுவானேன் என்று சிலர் நினைக்கலாம். அது அல்ல இங்கு பிரச்சனை.

ஒரு மொழி 3000 ஆண்டுத் தொன்மைமிக்கதாக இருந்தாலும், 30 ஆண்டு மட்டுமே வரலாறு கொண்டதானாலும், அம்மொழி ஒரு சமூகத்தினரால் பேசப்படுகிறது என்கிற வகையில் அது மதிக்கப்படவேண்டும். அம் மொழிகளுக்கிடையே சமத்துவம் காக்கப்பட வேண்டும், பேணப்பட வேண்டும் என்கிற அளவில் ஒரு சனநாயகக் கோட்பாடு என்கிற அளவில் இது சரி.

ஆனால் இச்சமத்துவம் மொழியுரிமை சார்ந்த நோக்கில் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுவதேயன்றி அதன் தொன்மை, வளப்பம் சார்ந்த நோக்கில் அன்று. அது மொழிக்கு மொழி வேறுபடும். அந்த வேறுபாட்டுக்குரிய வகையிலேயே அதன் தகுதிப்பாடும் ஏற்கப்படும். அந்த வகையில் சமஸ்கிருதம், பாரசீகம், அராபி ஆகிய மொழிகளுக்கு நிகரான, சொல்லப்போனால் அவற்றை விடவும் தொன்மையான வரலாறு கொண்டதும், வளப்பம் மிக்கதுமான மொழி நம் தமிழ்மொழி. எனவேதான், அதற்குரிய தகுதிப்பாடும் இடமும் தமிழுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று நாம் கோருகிறோம். இது பிற மொழி சமத்துவத்தை மறுப்பதோ, அம் மொழியுரிமையில் குறுக்கிடுவதோ அல்ல. மாறாக தமிழின் தனித்தன்மை யையும் பெருமையையும் பாதுகாப்பது, அவ்வளவே. அந்த அடிப்படையிலேயே இது முன் வைக்கப்படுகிறது.

காட்டாக, ஒரு பள்ளியில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு, பொதுவில் அவ்வனைத்து மாணவர்களுக்குமான கட்டுப்பாடுகள், ஒழுங்கு முறைகள், நடத்தை விதிகள், உரிமைகள், சலுகைகள் ஆகிய அனைத்தும் அனைவருக்கும் சமம் என்ற போதிலும் கூட தகுதிப்பாடு நோக்கில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனும், பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவனும் ஒன்றாகி விடமுடியாது. இருவரையும் சமப்படுத்தி விட முடியாது. அது போன்றதொரு வேறுபாடுதான் இது.

ஆனால், இந்த வேறுபாடு, சூழ்ச்சி, எது பற்றியும் கவலைப்படாமல், தமிழ் ஏதோ காணாததைக் கண்டு விட்டது. அதற்கு கிடைத்தற்கரிய பேறு கிட்டி விட்டது என்பது போன்ற போலியான, பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டார்கள் ஆட்சியாளர்கள். அப்பாவி உணர்வாளர்களும் அப்போது அதில் மயங்கித் திளைத்து பரவசப்பட்டார்கள். தற்போது கன்னடமும் அந்த வரிசையில் வருகிறது என்பதை அறிய கவலைப்படுகிறார்கள்.

சரி, இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை. இந்த பண்பாட்டுத் துறை செம்மொழி அறிவிப்பு அப்படியே இருக்கட்டும். அதில் எத்தனை மொழிகளைச் சேர்க்க விரும்புகிறார்களோ அத்தனையையும் சேர்த்துக் கொள்ளட்டும். ஆனால் தமிழை மட்டும் அதிலிருந்து எடுத்து தனிப்பிரித்து மனித வள மேம்பாட்டுத் துறையினர்கீழ் வரும் செம்மொழிகள் பட்டியலில் சமஸ்கிருதம், பாரசீகம், அராபி ஆகிய மொழிகளின் வரிசையில் தமிழை வைக்கட்டும். அதில் தமிழை இடம் பெறச் செய்யட்டும். செய்வார்களா தில்லி ஆட்சியாளர்கள்? செய்ய வலியுறுத்துவார்களா வாய் வீராப்பு தமிழினத் தலைவர்கள்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com