Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
Manmozhi WrapperManmozhi Logo
செப்டம்பர் - அக்டோபர் 2008
ஒரிசாவில் மீண்டும் இந்துத்துவ சக்திகள் வெறியாட்டம்
பரி முதல்வன்


ஒரிசா மாநிலத்தில் இந்துத்துவ அடிப்படைவாத அமைப்புகள் மீண்டும் தங்கள் வெறியாட்டத்தைத் தொடங்கியுள்ளன. கடந்த 23-08-2008 சனிக்கிழமை அன்று இரவு ஒரிசா மாநிலம் காந்தமால் மாவட்டம், ஜலஸ்பேட்டா கிராமத்தில் ஆசிரமம் ஒன்றில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த விஸ்வ இந்து பரிஷத் ஆசிரம நிர்வாகி லட்சுமானந்த சரஸ்வதி மற்றும் நால்வர் மாவோயிஸ்டு நக்சலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, இந்த வெறியாட்டம் தொடங்கியுள்ளது.

ஒரிசா மாநிலத்தில் கணிசமான பகுதி மக்கள் மலையின மக்கள். இவர்கள் அடிப்படை நல வாழ்வு வசதிகள் கூட அற்ற சூழலில், வறிய நிலையில் வாழ்பவர்கள், கல்வி, மருத்துவம், பிற வாழ்க்கைத் தேவைகள் மறுக்கப்பட்டவர்கள். இந் நிலையில் கிறித்துவப் பாதிரிமார்கள் இவர்களிடையே தொண்டு புரிந்து, இவர்கள் வாழ்வை மேம்படுத்த முயல்வதும், இதன் விளைவாக மதமாற்றங்கள் நிகழ்வதும் இங்கு இயல்பாய் நிகழ்கிற நேர்ச்சிகள்.

எனில், இதைப் பொறுக்காத இந்து அடிப்படைவாத அமைப்பினர், பழங்குடி மக்களது வாழ்நிலையைத் தாங்களும் மேம்படுத்த முயலாமல், மற்றவர்களையும் மேம்படுத்த விடாமல், மத மாற்றத்துக்குக் காரணமான கிறித்துவ அமைப்புகள் மேல் வெறுப்பை உமிழ்ந்து அந்நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. ஏற்கெனவே, இதே ஒரிசாவில் ஆஸ்திரேலிய பாதிரிமார் க்ராஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின் (58) என்பாரை, அவரது இரு மகன்கள் பிலிப் (9), திமோதி (7) ஆகியோருடன் ஒரு ஜீப்பில் வைத்து உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவத்தை எவரும் மறந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட வெறிபிடித்த ஒரு கூட்டம் தான் இப்போதும் வன்முறையில் இறங்கியிருக்கிறது.

ஆசிரமத் தலைவர் வி.ஹெச்.பி. லட்சுமானந்த சரஸ்வதியை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றதையோ, இதுபோன்ற அழித்தொழிப்பு நடவடிக்கைகளையோ நாம் நியாயப்படுத்தவில்லை. ஆனால் மலைவாழ் பகுதி மக்களுக்கு பாதுகாப்பாயிருப்பவர்கள் மாவோயிஸ்டுகள். அங்கு அமைப்பைக் கட்டி அம்மக்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள். அங்கு இந்து அடிப்படைவாதிகளால் அவர்களுக்கு என்ன விதமான தொல்லைகள், இம்சைகள் இருந்ததோ, மாவோயிஸ்டுகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள். வி.ஹெச்.பி. தொண்டர்களும், பிற இந்து அடிப்படைவாதிகளும், இதற்கு பதிலடி கொடுக்க விரும்புவதானால், நேரே மாவோயிஸ்டுகளுடன் மோதட்டும், அவர்களோடு மல்லுக்கட்டட்டும். ஆனால் அதை விட்டு கோழைத்தனமாக அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்ன நியாயம் என்பதே நம் கேள்வி.

லட்சுமானந்த சரஸ்வதி சுடப்பட்ட சம்பவம் கேள்விப்பட்டதுமே மாவட்டம் முழுவதும் கிறித்துவர்கள் மேல் தாக்குதல் தொடுத்த இவர்கள் சம்பவம் நடந்த இடத்திலிருந்து, லட்சுமானந்தாவின் சடலத்தை, அவரது சொந்த இருப்பிடம் உள்ள சக்காபாயா கொண்டு சென்று சமாதி வைக்கும் முடிவில், இடைப்பட்ட 70 கி.மீ. தூரத்துக்கும் ஊர்வலம் ஏற்பாடு செய்து, 25-08-08 வியாழன் அன்று 12 மணி நேர முழு அடைப்புக்கு அறிவிப்பு செய்து, வழி நெடுக, கண்ணில் பட்ட கிறித்துவ நிறுவனங்கள், பள்ளிகள், அனாதை இல்லங்கள், கிறித்துவக் குடியிருப்புகள் அனைத்தையும் தாக்கி நொறுக்கியும், தீயிட்டுக் கொளுத்தியும் வெறியாட்டம் ஆடியபடியே சென்றுள்ளனர். இத்தாக்குதலில் அனாதை இல்லத்தில் பயிற்சி செவிலியராகப் பணிபுரியும் இந்துப் பெண்மணியான கல்லூரி மாணவி ரஜினிமாஜி, மற்றுமொரு பாதிரியார் ஆகிய இருவர் இறந்துள்னர்.

இத்தோடு நில்லாமல், முழு அடைப்பின் போது ஒரிசா முழுவதும் அப்பாவிப் பொதுமக்கள் மீதும் கிறித்துவ அமைப்புகள் மீதும் தாக்குதல் தொடுத்தனர். விளைவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடிழந்து உடமைகள் இழந்து அகதிகளாகியுள்ளனர். இதன் எதிரொலியாகவே இவ்வன்முறையைக் கண்டித்து தமிழகத்தில் கிறித்துவ அமைப்புகளும் சனநாயக சக்திகளும் இணைந்து பல்வேறு போராட்டங்கள் வழி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளன. இப்போராட்டங்கள் இயல்பானதும், நியாயமானதும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இவர்களது உணர்வுகளில் நாமும் பங்கு கொள்கிறோம். இந்து மதவெறி அமைப்புகளின் இக்கொலை வெறியாட்டத்தையும் கொடூர வன்முறை நடவடிக்கைகளையும் பிற சனநாயக சக்திகளுடன் இணைந்து நாமும் கண்டிக்கிறோம்.

என்றாலும், இக்கிறித்துவ அமைப்புகள் பள்ளி, கல்வி நிறுவனங்களையும் இதில் இழுத்து, அவற்றையும் மூடி இப்போராட்டத்தில் ஈடுபடுவதுதான் எந்த வகையில் நியாயம் என்பது கேள்வியாக இருக்கிறது. ஜெ. மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தபோதும் இப்படித்தான் கல்வி நிறுவனங்களை இழுத்து மூடி தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். தற்போது ஒரிசா சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், 29-08-08 வெள்ளி அன்று தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகளை இழுத்து மூடியிருக்கிறார்கள். பல மதத்தினரும் படிக்கும் பள்ளி, கல்லூரிகளை, அவற்றை இவர்கள் நடத்துகிறார்கள் என்கிற ஒரே உரிமையை வைத்து, இவர்களுக்கு பாதிப்பு நேரும் போதெல்லாம் அவற்றையும் இழுத்து மூடி எதிர்ப்பு தெரிவிப்பது என்ன வகை சனநாயகம் என்பது தான் பொதுவாக நியாய உணர்ச்சியுள்ள மக்களின் இயல்பான கேள்வி.

இப்படி கேட்பது சிலபேர் மனதைப் புண்படுத்தலாம். அல்லது பிரச்சனையைக் குறைத்து மதிப்பிடுவதாகக் கருத வைக்கலாம். அது அல்ல நம் கேள்விக்குக் காரணம். நம்மைப் பொறுத்த வரை மத அடிப்படைவாதம் எந்த மதத்தில், எந்த வடிவில் வந்தாலும் எதிர்ப்போம். எதிர்த்திருக்கிறோம். தஸ்லிமா நஸ்ரினுக்கும், சால்மன் ருஷ்டிக்கும் எதிராக இசுலாமிய அடிப்படைவாதிகள் எகிறிய போது அதைக் கண்டித்தோம். கேரளாவில் அந்தோணியின் ‘ஏசுவின் ஆறாம் திருமுறிவு’ நாடகத்தை எதிர்த்து கிறித்துவர்கள் கலவரத்தில் ஈடுபட்ட போது, அதை எதிர்த்தோம். இந்துத்துவ அமைப்புகளின் பாசிச நடவடிக்கைகளை எப்போதும் எதிர்த்து வருகிறோம். அந்த அடிப்படையிலேயே தற்போது ஒரிசாவில் இந்துத்துவ வெறியாட்டத்தை எதிர்க்கிறோம். கண்டிக்கிறோம். ஆனால், பள்ளிகள், கல்லூரிகளை இழுத்து மூடியதை மட்டும் கேள்விக்குள்ளாக்குகிறோம்.

ஆகவே, சம்பந்தப் பட்டவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். மதப் பற்றாளர்கள், மத சனநாயகம், மதங்களுக்கிடையேயான சமத்துவம் என்கிற நோக்கில் இதைப் புரிந்து கொண்டு நியாயமான சனநாயக வழியில் தங்கள் உரிமைகளுக்குக் குரல் கொடுக்க வேண்டும். ஒரிசாவில் இன்னமும் இந்து மதவெறி அமைப்புகளின் தாக்குதல் நின்றபாடில்லை. வன்முறை வெறியாட்டம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. எனவே, ஒரிய அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்து இந்த வெறியாட்டத்தை தடுத்து நிறுத்தவேண்டும். இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நட்ட ஈடும், நிவாரணமும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும். அதே வேளை, அம்மக்களுக்கு இங்கிருந்து நாமும் நம்மாலான உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com