Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
Manmozhi WrapperManmozhi Logo
செப்டம்பர் - அக்டோபர் 2008
அர்ப்பணிப்பின் தெளிவும் ஆத்திரத்தின் வசவும்


தமிழக முதல்வர் கருணாநிதி சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பொன்றில் “தான் மீண்டும் முதலமைச்சராக விருப்பம் இல்லை” என்று கூறியிருந்தார். கருணாநிதியின் எத்தனையோ சொல்ஜாலக்குகளில், வெத்துவேட்டு வசனக்குப்பைகளில் இதுவும் ஒன்று என பத்தோடு பதினைந்தாக புறந்தள்ளி விட்டுப் போயிருக்க வேண்டிய ஒரு கூற்று இது. என்றாலும், இவ்வாய் வீச்சு போலி வசனங்களுக்குப் பின்னால் நிலவும் உண்மைகளை நாட்டு மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று எண்ணிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள், இது குறித்து தினமணி நாளேட்டில் தசரத புராணம் என்கிற தலைப்பில் நடுப்பக்கக் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார்.

அதில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கும், சொல்லப்பட்ட கூற்றுகளுக்கும் பதிலோ விளக்கமோ அளித்து தன் நிலையைத் தெளிவுபடுத்தவோ, அதை மறு உறுதி செய்யவோ தரவுகளோ, சான்றாதாரங்களோ அற்ற முதல்வர் கருணாநிதி, மிகக் கீழ்த்தரமான முறையில் இறங்கி, நெடுமாறன் அவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கி, மறுநாள் முரசொலி ஏட்டில் கவிதை என்கிற பெயரில் மிக அற்பத்தனமான வார்த்தைகளில் அவர்மீது பல அவதூறுகளைப் பொழிந்திருந்தார்.

அதில், அவர் கையாண்டிருந்த சொற்கள் நாளேடுகள் பலவற்றிலும் வெளிவந்து, உணர்வாளர்கள் பலரும் படித்ததுதான் என்பதால் அவற்றை இங்கே மீண்டும் சுட்டிக்காட்ட வேண் டும் என்பதில்லை. சரி, வார்த்தைகள் தான் இப்படி மலிவு என்றால் வெளிப்படுத்திய சேதிகளிலாவது ஏதாவது உண்மை இருக்கிறதா என்றால் அதுவுமில்லை. இப்படி சேதியிலும் உண்மையில்லாத, சொற்களும் சாக்கடையாகிப் போன வரிகளில்தான் தன் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

ஒரு மூத்த, பழுத்த அரசியல் இயக்கத்தின் தலைவர் இப்படி கீழ்த்தரமான முறையில் நடந்து கொள்ளலாமா என்று சிலரும், அவரின் குணத்துக்கு இதைத் தாண்டி அவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்று சிலரும் கருத்து கொண்டிருப்பதானாலும், இது ஏதோ இரு தலைவர்களுக்கிடையேயான சிக்கல் என்று மட்டும் கொண்டு தனித்து நோக்கப்பட வேண்டிய ஒன்றோ, அல்லது அப்படிக் கருதத்தக்கதோ அல்ல; மாறாக, இது தன்னலவாத, ஆதிக்க, அதிகார, நாற்காலி அரசியலுக்கும், தன்னலமற்று தொண்டாற்றுகிற, மறுபலன் பாராத தியாக அர்ப்பணிப்பு அரசியலுக்குமான மோதலாக நோக்கத்தக்கது. எனவே, தமிழின உணர்வாளர்கள் இச்சிக்கலை சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கூடாது.

இனத் துரோகி யார், முதுகில் குத்துவது யார், சீழ்ப்பிடித்த சிந்தை யாருக்கு என்பதெல்லாம் தமிழ் உணர்வாளர் எவரும் அறியாததல்ல. 1968இல் அண்ணாவுக்குப் பின் தான் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து எதிர்க்கட்சியாக இருந்த காலம் போக, தான் ஆட்சியிலிருந்த எல்லாக் காலங்களிலும், தன்னல நோக்கில், தன் ஆட்சி நிலைக்க, தன் சொந்த பந்தம் தழைக்க, தமிழர்களுக்குத் துரோகம் புரிவதையே தொழிலாகக் கொண்டு, தமிழக நலன்களைக் காவு கொடுத்து வந்தவர், இப்போதும் கொடுத்து வருபவர் கருணாநிதி.

தமிழகத்தின் கச்சத்தீவு போனது இவர் ஆட்சியில், காவிரி வழக்கைத் திரும்பப்பெற்றது இவர் ஆட்சியில், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னும் முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்க மறுத்தது இவர் ஆட்சியில், தற்போது பாலாறு பறிபோய்க் கொண்டிருக்கிறது இவர் ஆட்சியில், தமிழகமே தணலாய் கொந்தளித்து எழுந்த ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தில், அதைத் தணியச் செய்தது இவர் ஆட்சியில், மரண தண்டனை ஒழிப்புக்காக உணர்வாளர்கள் மனு கொடுத்து அது நிராகரிக்கப்பட்டது இவர் ஆட்சியில். நளினி விடுதலை கோரும் மனுவை நிராகரித்தது இவர் ஆட்சியில், தற்போது கண்ணகி கோயிலை கேரளம் கபளீகரம் செய்ய முற்படுவது இவர் ஆட்சியில். இப்படி தொடர்ந்து தமிழக உரிமை, தமிழர் உரிமை அதிகம் பறிக்கப்பட்டது, தன் குடும்பத்தினரை அதிகாரத்திலே கொலு வீற்றிருக்கச் செய்ய தமிழக நலன்களைக் காவு கொடுத்தது எல்லாம் இவர் ஆட்சியில் தான். ஆனால் இவர்தான் சொல்கிறார், நாற்காலி அரசியலைத் துறந்து தமிழர் நலன் காக்கும் தியாக அரசியலை மேற்கொண்டுள்ள தோழர். நெடுமாறனைப் பார்த்து, ‘இனத் துரோகி’ என்று.

இனத்துரோகி யார் என்பதைத் தீர்மானிப்பது போலிக் கவிதை வரிகளோ வாய் வீராப்பு வசனங்களோ அல்ல. போராட்டக் களங்களே அவற்றைத் தீர்மானிக்கின்றன. தமிழர் உரிமைக்குப் போராடுவது யார்? தமிழர் நலனைக் காட்டிக் கொடுப்பது யார்? என்பதை கடந்த கால நிகழ்வுகளும் இன்றைய நடைமுறையுமே மெய்ப்பிக்கும். நாளைய வரலாறு இதன்மேல் தீர்ப்பெழுதும்போது, அந்தத் தீர்ப்புத் தணலில் பீனிக்ஸ் பறவையாய் எழுந்து சிறகடித்துப் படிக்கப் போவதுயார்? அதில் பொசுங்கி சாம்பலாகி அடையாளமே தெரியாமல் கரைந்து மறையாய் போகிறவர்கள் யார்? என்பதைக் காலம் மெய்ப்பிக்கும்.

என்றாலும் இன உணர்வாளர்கள் இதை சும்மா விடக்கூடாது. அவரவர் அமைப்பு சார்ந்து இதைக் கண்டித்தும், இது குறித்து இதழ்களில் எழுதியும் இப்போலி வசனகர்த்தாக்களை அம்பலப்படுத்த வேண்டும். வாய்ப்புள்ள வழிகள், வடிவங்களிலெல்லாம் இதை எதிர்த்துக் கண்டனக்குரல் எழுப்ப வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com