Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
Manmozhi WrapperManmozhi Logo
செப்டம்பர் - அக்டோபர் 2008
இரட்டணை துப்பாக்கிச்சூடும், கருணாநிதி அரசின் காவல்துறையும்


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இரட்டணை கிராமத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை செய்கிற மக்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்குவதில்லை என மக்கள் தரப்பிலும், வழங்குகிற ஊதியத்தின் அளவுக்கு மக்கள் உழைக்காததால் ஒதுக்கப்பட்ட பணியைச் செய்து முடிக்காததனாலேயே சம்பளத்தைக் குறைத்தோம் என நிர்வாகத் தரப்பிலும் முரண்பாடுகள் நிலவ, இதையொட்டி நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மக்களுக்கும் காவல்துறைக்கும் எழுந்த மோதல் காரணமாக, காவல்துறை மிருகத்தனமாக தாக்குதல் தொடுத்து, துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன், வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உள்ளிட்ட பலர் காயமுற்றனர். துப்பாக்கிச் சூட்டில் பத்தாம் வகுப்பு மாணவன் மூர்த்தியின் தோள்பட்டையில் குண்டு பாய, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராமலிங்கம், ஏழுமலை, தேவநாதன், சேகர் ஆகிய பலர் படுகாயமடைந்துள்ளனர்.

காவல் துறையின் இந் நடவடிக்கையைத் தமிழகம் தழுவிய பல்வேறு சனநாயக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கண்டனம் செய்துள்ளன. தாக்குதலுக்குள்ளான இரட்டணை ஊராட்சி மன்றத் தலைவர் கலை செல்வன், இ.க.க.மா.வின் வாலிபர் அமைப்பான இந்திய சனநாயக வாலிபர் சங்கத்தைச் சார்ந்தவர் என்பதால் இதில் இ.க.க.மா. சற்று கூடுதல் கவனம் செலுத்தி தமிழக அரசைக் கடுமையாக கண்டித்ததுடன், அதன் தலைவர்கள் நேரடியாகவே களத்திற்குச் சென்றும் சம்பவ விபரங்கள் அறிந்துள்ளனர்.

இதுபோன்ற தாக்குதல், சம்பவங்கள் ஏதோ இரட்டணையில் மட்டுமே நடந்தது என்றால் அது அந்த வரம்போடு கண்டிக்கத்தக்கதாக ஆகியிருக்கும். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து தமிழகம் தழுவி பல்வேறு இடங்களில் பல்வேறு காரணங்களுக்காக நடைபெற்றுள்ளதால், இது சார்ந்து குறிப்பான சில அக்கறைகள் மேற்கொள்வது அவசியமாகிறது. அரசதிகாரத்தின் காவல்துறை, எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும், எப்படிப்பட்ட சமூக அமைப்பைக் கொண்டதாக இருந்தாலும், அரசுக்கு சேவகம் புரிவதும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபடுவதுமே பொதுவான நடைமுறையாய் இருந்து வருகிறது என்பது கண்கூடு. அது மராத்திய, ஒரிசா காவல் துறைகளானாலும் சரி, இடதுசாரிகள் ஆளும் கேரள, மேற்கு வங்க காவல் துறைகள் ஆனாலும் சரி, எல்லாம் நடவடிக்கையில் ஒன்றே. அதே போலவே, தமிழகத்தில் ஜெ. ஆட்சி யானாலும், கருணாநிதி ஆட்சியானாலும் எல்லா ஆட்சியிலும் நிலைமை இதுவே.

என்றாலும், ஜெ. ஆட்சியின் காவலுக்கும் கருணாநிதி ஆட்சியின் காவலுக்கும் ஒரு வித்தியாசம் இருப்பதாகத் தெரிகிறது. இரண்டுமே ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாயிருப்பது, அதிகாரத்துக்கு சேவை புரிவது, அதற்கு எடுபிடியாக செயல்படுவது என்பதைப் பொதுப் போக்காகக் கொண்டிருந்தாலும், ஜெ. ஆட்சியில் அதிகாரம் மையப்படுத்தப்பட்டதாய், ஆட்சிக்கு பயந்ததாய், ஆட்சியாளர்களைக் கேட்காமல் எதுவும் அசையாததாய் ஒரு கட்டுக்குள் இருக்கும். ஆனால் கருணாநிதி ஆட்சியில் மேலிடத்துக்கு விசுவாசமாய் இருந்து, அதற்கு செய்ய வேண்டியதை உருப்படியாய் செய்து முடித்து விட்டால் போதும். கீழே எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது போன்ற, கட்டற்ற வகையில், அதிகாரத்தைத் தானே கையிலெடுத்துக் கொண்டு ஏடா மோடியாய்ச் செயல்படும் போக்கு வெளிப்படும். இதனால் எடுத்ததற்கெல்லாம் எல்லார் மீதும் சரமாரியாக தாக்குதல் தொடுக்கும்.

இது முறையான தகவல் தொகுப்பின் அடிப்படையிலான நோக்கு அல்ல. பொதுவான காவல் நடவடிக்கைகள் அடிப்படையிலான ஒரு மேலோட்டமான நோக்குதான் என்றாலும், நடந்துள்ள நிகழ்வுகளைத் துல்லியமான ஆய்வுக்குட்படுத்திப் பார்த்தால் இது சார்ந்த மதிப்பீடுகள் கிட்டும். சமீபகாலமாக நிகழ்வுகளையே எடுத்துக் கொண்டு பார்ப்போம். மேற்குறித்த இரட்டணைத் தாக்குதலுக்கு அப்பால், கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழகமாக மாற்றக் கூடாது என போராடிய கோவை, மதுரை மாணவர்கள் மீது தடியடி, மதுரையிலேயே அமெரிக்கன் கல்லூரி பிரச்சினையிலும் மாணவர்கள் மீது தடியடி, தனியார் கல்லூரி மாணவர் நீக்கத்தைக் கண்டித்துப் போராடிய நாகை மாணவர்கள் மீது தடியடி, இதுபோல பல்வேறு பகுதிகளில் மின்வெட்டைக் கண்டித்து, அல்லது உள்ளூர்ப் பிரச்சினைகளில் நியாயம் கோரி போராடிய பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் மீதும் தடியடி என சமீபத்தில் இந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற காவல் தடியடிகளைக் கணக்கிட்டுப் பார்த்தாலே இதன் பட்டியல் புரியும்.

சரி, காவல்துறைக்கு இந்த அத்து மீறல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தல், போராடும் மக்கள்மீது தனிப்பட்ட ரீதியில் தாக்குதல் தொடுத்தல் என்கிற வரம்பு மீறுகிற போக்குகள் எல்லாம் எங்கிருந்து வந்தது. வருகிறது? எல்லாம் ஆட்சியாளர்கள் தரும் இடம். தனக்கு விசுவாசமாக இருந்துவிட்டு, தான் இடும் கட்டளையை நிறைவேற்றி விட்டு, நீ எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள், எதை வேண்டுமானாலும் செய்து கொள் என கட்டவிழ்த்து விடப்பட்ட போக்கு. இப்படிப்பட்ட போக்கே காவல் துறையில் இந்த அத்து மீறல்களுக்கெல்லாம் காரணமாகிறது.

போராடும் மக்கள் அத்துமீறினால், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தினால் காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா, அது சட்டப்படி தன் கடமையைச் செய்ய வேண்டாமா என்று சிலர் கேட்கலாம். நியாயம். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தான். அப்படிப்பட்ட நடவடிக்கை என்பது, அத்து மீறுகிறவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி ஆணை பெற்று சிறையில் வைக்க வேண்டியது தானேயொழிய, இவர்களாகத் தீர்ப்பு வழங்கும் உரிமையைக் கையில் எடுத்துக் கொண்டு, தடியடி நடத்துவதும் தாக்குதல் தொடுப்பதும் அல்ல. அப்படி நடத்துவது என்ன நியாயம் என்பதே கேள்வி.

ஆனால், காவல்துறை அதைத் தான் செய்து கொண்டிருக்கிறது. கருணாநிதியின் அரசு அதைச் செய்ய அனுமதித்துக் கொண்டிருக்கிறது.
எனவே, சனநாயக உணர்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இதைக் கண்டித்து குரல் எழுப்ப வேண்டும். அதேவேளை, நந்தி கிராமத்தில் சர்வாதிகார நரவேட்டை ஆடி பொது மக்களைச் சுட்டுக் கொன்ற மேற்கு வங்க அரசை நடத்தும் சி.பி.எம்.தான் இங்கு சனநாயக அரிதாரம் பூசி தன் தோழருக்காகக் குரல் கொடுக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் சி.பி.எம்.மின் குரலை புறக்கணிக்க வேண்டும் என்பதல்ல நம் நோக்கம். இதே குரல் நந்தி கிராமத்திலும் ஒலிக்க வேண்டும் என்பதே நம் அவா. இப்படி ஒரு முன்மாதிரி அரசு நடத்தி, மற்றவர்களுக்கு வழி காட்டுவதே, ஒரு புரட்சிகர கட்சிக்கு அழகு. மாறாக தானே துப்பாக்கி சூடு நடத்தி, புரட்சிக்குக் குழி தோண்டுவது அல்ல.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com