Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
Manmozhi WrapperManmozhi Logo
செப்டம்பர் - அக்டோபர் 2008
நாவிலே தேன் நெஞ்சிலே நஞ்சு


வெத்து வேட்டு வசனங்களைப் பேசிப் பேசி, கவைக்குதவாச் சொற்களாலேயே ஒரு சமூகத்தைச் சீரழித்த, சிதைத்த, ஏமாற்றி வஞ்சித்து வருகிற ஒரு தலைவர் உலகில் எங்காவது உண்டா என்றால் அது ‘தமிழினத் தலைவர்’ பட்டம் தாங்கி பவனி வரும் தமிழக முதல்வர் கருணாநிதியைத் தவிர வேறு எவரும் இல்லை எனலாம். உலகின் மற்ற பகுதிகளில் இப்படி வேறு யாராவது ஒரு தலைவர் இருப்பதானால் தயவு செய்து வாசகர்கள் சொல்லலாம். நாமும் தெரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு தலைவர், நம் தமிழ் மக்களுக்கு வாய்த்திருக்கிற தலைவர்.

அடுக்குமொழி வசனங்கள், அலங்கார வார்த்தைகள், சாரமற்ற சொற்கள், சாகச வித்தைகளை மேடைப்பேச்சிலே எழுத்திலே வடித்து மக்களை ஏய்ப்பது, போலிப்பகட்டும் பந்தாவும் பண்ணித்திரிவது, எந்த ஒன்றையும் உருப்படியாய் நிறைவேற்றி முடிக்காமலும், சாதிக்காமலும். அதைவென்று முடித்தது போல சாதனையாளர் பட்டங்களைச் சுமந்து திரிவது, இதுவெல்லாம் தி.மு.க. பெற்றெடுத்த பண்பாடு, அதன் ஒட்டுமொத்த உருவமாய்த் திகழ்பவர் கருணாநிதி. இவரி லிருந்து அது மற்றவர்களுக்கும் பரவியது வேறு செய்தி. ஆனால் அதன் புரவலராகத் திகழ்பவர் கருணாநிதிதான்.

1969இல் முதன்முறை முதல்வர் பதவி ஏற்ற கையோடு, மலர்க் கீரிடமும், செங்கோலும், உடைவாளும் பரிசாகப் பெற்று பவனிவந்து, மன்னராட்சிக் காலக் கனவுகளில் திளைத்து பெருமை பீற்றிக் கொண்டதிலிருந்து, தற்போது காவிரியையே மீட்காமல் “காவிரி கொண்டான்” பட்டம், தமிழ் செம்மொழிப் பட்டியலில் சேராமலேயே “செம்மொழி கொண்டான்” பட்டம், இதுவன்றி சங்கத்தமிழே, முத்தமிழே, தமிழே, தமிழகமே என என்றெல்லாம் வர்ணனைகள் முதலானவற்றை நோக்க இதை உறுதி செய்யலாம்.

ஓர் அரசியல் அமைப்பின் தொண்டர்கள் தங்கள் தலைவர் மேல் அன்பு வைத்து, மதிப்பு வைத்து, அவரை அலங்கார வார்த்தைகளால் அழைத்து மகிழ்வதை யாரும் தடை சொல்லவில்லை. அதில் தலையிடவுமில்லை. அது தொண்டர்கள் விருப்பம், உரிமை. ஆனால் அந்த வார்த்தைகளுக்கு ஓர் அர்த்தம் இருக்க வேண்டாமா என்பதே நம் கேள்வி. இப்படி அர்த்தமற்ற வார்த்தைகளால் ஒரு தலைவரைப் புகழ்வது, அது எந்தத் தலைவர் ஆனாலும் சரி, ஒரு சமூகத்தையே ஏமாற்றுவதாக வஞ்சிப்பதாக, போலி மயக்கத்தில் ஆழ்த்துவதாக ஆகிவிடுகிறதே. இது அச்சமூகத்தைப் புற்றுநோய் போலச் சீரழித்து விழிப்பற்ற, செயலூக்கமற்ற சமூகமாக ஆக்கி விடுகிறதே என்பதே நம் கவலை.

மற்ற பிரச்சனைகளெல்லாம் இருக்கட்டும். சமீபத்தில் அறிய வந்த இரண்டு பிரச்சனைகளை மட்டும் எடுத்துக் கொண்டு யோசிப்போம்.
முதலாவது, தமிழகத்தில் நிலை மேம்படுத்தப்பட்ட பள்ளிகளில் அதாவது நடுநிலைப் பள்ளியாக இருந்து உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்ட பள்ளிகளில் ஆங்காங்கே துறை சார்ந்த ஆசிரியர்கள் பலர் நியமிக்கப்படாமல் இயற்பியல், வேதியியல், கணிதம் முதலான வற்றுக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன என்பது பொதுவான குறைபாடுகளாக ஒருபுறமிருக்க, 639 பள்ளிகளில் தமிழாசிரியர்கள் பணியிடங்கள் இன்னமும் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன என்கிற செய்தி அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. அதாவது தமிழே, தேனே, தெள்ளமுதே என்று மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற வர்ணனைகளால் புகழப்படும தமிழினத் தலைவர் ஆட்சியில்தான் இந்த அவலம் நீடிக்கிறது.

இலவச தொ.கா.பெட்டி, இலவச சமையல் எரிவாயு, இரண்டு ஏக்கர் நிலம், 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, தற்போது அதுவும் ஒரு ரூபாய்க்கு என்று மக்களை இலவசத்துக்கு ஏங்க வைக்கிற பிச்சைக்காரர்கள் ஆக்குகிற திட்டத்தில் அக்கறை காட்டுகிற, டாஸ்மார்க் விற்பனையில் கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டுகிற, அரசு மாநாடுகள், விழாக்கள், பொதுக்கூட்டங்கள் என அறிவித்து மன்னராட்சிக் கால அரண்மனைகள், கோட்டை கொத்தளங்கள் வரலாற்றுத் திரைப்படக் காட்சியமைப்புக்கான அரங்குபோல் நிர்மாணித்து கோடிக்கணக் கில் செலவு செய்கிற ஆட்சியாளர்கள், ஆளும் கட்சித் தலைவர்கள் இந்த தமிழாசிரியர் பணியிடங்கள் நிரப்புவதுப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளக் கூடாதா.

தமிழ்நாட்டில் தமிழ்ப்பள்ளிகளில், தமிழாசிரியர்கள் இல்லை என்ற நிலை தமிழினத் தலைவர் ஆட்சியில் நிலவலாமா? இப்பிள்ளைகள், தமக்குத் தமிழ் கற்றுத்தர யாருமில்லாமல், தமக்குத்தாமே ஊன்றிக் கற்றோ தனிப்பயிற்சி பெற்றோ தான் தேர்வு எழுத வேண்டும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாமா. நாட்டில் தமிழ் கற்று தழிழாசிரியர் பணிக்குத் தகுதியான 35,000 பேர் 1992 முதல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வைத்து பணிக்காக காத்திருக்கும் நிலையில் இது நிகழலாமா. இதுதான் இவர்கள் தமிழைக் காக்கும் லட்சணமா? தமிழின்பால் தமிழ்ப் படிக்கும் பிள்ளைகள்பால் அவர்களது எதிர்காலத்தின்பால் காட்டும் அக்கறையா?

அடுத்தது பேருந்துகளில் மின்னணுக் கருவி மூலம் பயணச்சீட்டு தரும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, தற் போது பல அரசுப் பேருந்துகளில் இதன்வழியே சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவை தமிழில் அல்லாமல் ஆங்கிலத்திலேயே உள்ளன. பேருந்து தமிழக அரசு பேருந்து, அதில் பயணம் செய்பவர்கள் 99 விழுக்காடு தமிழர்கள், தமிழ் தெரிந்தவர்கள். பேருந்தை இயக்கும் நடத்துனர் ஓட்டுநர்களும் தமிழர்கள். அப்படி இருக்க இந்தப் பயணச்சீட்டு மட்டும் ஆங்கிலத்தில் ஏன்?

கேட்டால் காரணம் சொல்வார்கள் பிற மாநில வெளிநாட்டுப் பயணிகள் வந்தால் அவர்கள் புரிதலுக்காக என்று. அல்லது மின்னணுப் பொறியில் தமிழில் தருவது சிக்கல். ஆங்கிலம்தான் உகந்த மொழி என்பார்கள். ஆனால் இந்த இரண்டுமே புரட்டு என்பதே உண்மை. முதலாவது புரட்டு எப்போதோ எங்கிருந்தோ வரும் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான பிற மாநில வெளிநாட்டுப் பயணிகள் யாரும் எங்களுக்கு பயணச்சீட்டு ஆங்கிலத்தில் தான் தர வேண்டும் என்று கோரவில்லை. அப்படியே கோருவதானாலும் அந்த ஒரு விழுக்காட்டுப் பிரிவனருக்காக, இருக்கும் 99 விழுக்காட்டினர் உரிமையை மறுக்க முடியாது, கூடாது.

பொதுவாகவே, கருணாநிதிக்கு எப்போதும் ஓட்டுப் போட மட்டுமே தமிழன். மற்றதுக்கெல்லாம் பிற மாநிலத்துக்காரன். வெளிநாட்டுக்காரன் பற்றுதான். இந்தப் பற்றின் வெளிப்பாடுதான் ஆங்கிலப் பயணச் சீட்டு என்றால் இது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
இரண்டாவது புரட்டு, கணினியில் தமிழில் பயணச் சீட்டுத் தரமுடியாது என்பது. கணினிக்கு உகந்த மொழி தமிழும் என்பதை உலகம் முழுக்க ஏற்றுக் கொண்டிருக்க மின்னணுக் கருவியில் தமிழில் பயணச் சீட்டுத் தரமுடியாது என்பது அப்பட்டமான பொய்.

அரசு அல்லாத சில தனியார் பேருந்து நிறுவனங்கள் இது போன்ற மின்னணு பயணச்சீட்டுகளைத் தமிழில் தந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி இருக்க தமிழக அரசால் மட்டும் தர முடியாது என்பது என்ன நியாயம். அதில் இவர்களுக்கு அக்கறையில்லை, ஆர்வமில்லை என்பதுதானே உண்மை. அதாவது லாபமீட்டும், பங்கு கிடைக்கும் ஒப்பந்தத் தெழில்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்கிற பிழைப்புவாத நோக்குதானே இவை அனைத்திற்கும் காரணம்.

ஆங்கிலம் இந்தப் பயணச்சீட்டுகளில் மட்டுமல்ல, தலைமைச் செயலகம் தொடங்கி கடைமட்ட அலுவலகம் வரை இன்னும் பல துறைகளில் கடிதங்கள், கோப்புகள், சுற்றறிக்கைகள் பலவும் இன்னமும் ஆங்கிலத்தில்தான் வந்து கொண்டிருக்கின்றன. 1951இல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ‘தமிழ் ஆட்சி மொழிச் சட்டம்’, 5 முறை முதல்வரான தமிழினத் தலைவர் ஆட்சியிலும் எந்த முன்னேற்றமுமில்லாமல் அலுங்காமல், குலுங்காமல் அப்படியே தானே இருக்கிறது.

இப்படித் தமிழ்நாட்டிலேயே தமிழை முறையாய் நடைமுறைப்படுத்தாமல் வண்டி வண்டியாகக் குறையை வைத்துக் கொண்டிருக்கும் இவர்கள்தான் அதை மூடி மறைக்க அன்னைத் தமிழை அரியணை ஏற்றுவோம், தில்லியிலே அதை ஆட்சி மொழியாக்குவோம் என்று போலி முழக்கமிட்டு அப்பாவித் தமிழர்களை உணர்வாளர்களை ஏமாற்றி வரு கிறார்கள்.

தமிழ்நாட்டில் தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கு யார் தடையாய் இருக்கிறார்கள். இவர்கள் இதையெல்லாம் இங்கே நடைமுறைப்படுத்த வேண்டியதுதானே. அதை விட்டு தில்லியைக் காட்டி தமிழர்களை ஏன் திசை திருப்பவேண்டும். ஆகவே தமிழை தில்லியில் ஆட்சிமொழி யாக்குவது அப்புறம் இருக்கட்டும், முதலில் தமிழ்நாட்டில் இவர்கள் தமிழை முழுமையாக நடைமுறைப்படுத்தட்டும் என்று தமிழின உணர்வாளர்கள் கோரவேண்டும். இதன் பல்வேறு படிநிலைகளில், உடனடியாக அனைத்துப் பள்ளிகளிலும், தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டும். பயணச் சீட்டுகள் அனைத்தையும் தமிழில் தரவேண்டும் என்பது உள்ளிட்டு தமிழ் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளுக்காக தமிழ் உணர்வாளர்கள் குரல் கொடுக்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com