Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
Manmozhi WrapperManmozhi Logo
செப்டம்பர் - அக்டோபர் 2008
‘புரட்டு’ப் பாதையின் ‘புரட்சி’ வீரர்கள்


“இன்குலாப் ஜிந்தாபாத்” போட்டு “அகில இந்திய புரட்சி” பேசி வந்த இந்திய இடதுசாரிகள் இன்று இந்திய முதலாளியக் கட்சிகளையே விஞ்சுமளவுக்கு சந்தர்ப்பவாத சகதியில் சிக்கி சீரழிந்து வருகின்றனர். ஒன்றுபட்டிருந்த இந்தியப் பொதுவுடைமை இயக்கம், 1964ல் இ.க.க. (சி.பி.ஐ.), இ.க.க.மா. (சி.பி.ஐ.எம்.) என இரண்டாகப் பிளவுபட்டு, பின் இ.க.க.மா.விலிருந்து நக்சல்பாரி இயக்கங்களும் வெடித்தெழ இடதுசாரி இயக்கம் எனப் படுபவை பல நூறு குழுக்களாயின.

இவற்றுள் இச்சிறு இயக்கங்கள் அதனதன் புரிதலுக்கு ஏற்ப தனித்தனித் திட்டங்கள் வகுத்து அதனதன் சக்திக்கு ஏற்ப செயல்பட்டு வருகின்றன.
இதில், இச்சிறு இயக்கங்கள் பற்றியதல்ல தற்போதைய நம் விமர்சனம். நம் விமர்சனம் இ.க.க. மற்றும் இ.க.க.மா பற்றியதே. 1969இல் காங்கிரஸ் பிளவுபட்டபோது இந்திரா காங்கிரசை முற்போக்கு என வர்ணித்து 75-76இல் அவர் கொண்டு வந்த அவசர நிலையை ஆதரித்து அதற்குத் துணைபோன கட்சி இ.க.க. இதிலிருந்து மாறுபட்டதாகச் சொல்லி தமிழகத்தில் 1971 வரை தனித்து நின்று, அவசர நிலையை எதிர்த்து காங்கிரஸ் எதிர்ப்புக் கொள்கையைக் கடைப் பிடித்து வந்த கட்சி இ.க.க.மா. எனில், இவ்விரண்டு கட்சிகளுமே பா.ஜ.க. தலைஎடுத்து வளரத் தொடங்கியதும் மதவாதக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று சொல்லி, தங்களுக்குள் கூட்டு சேர்ந்து காங்கிரசுக்கு ஆதரவு தரத் தொடங்கின.
அதாவது காங்கிரசை எதிர்க்க வேண்டுமென்றால் ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெருமுதலாளிய எதிர்ப்பு என்றும் காங்கிரசை ஆதரிக்க வேண்டுமென்றால் மதவாத சக்திகள் எதிர்ப்பு என்றும் சொல்லி, தங்கள் கூட்டணி ஆதரவுக்கு அவ்வப்போது ஒரு நியாயம் கற்பிக்கத் தொடங்கினர் இந்த இடது சாரிகள்.

இந்த அடிப்படையிலேயே கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரசை ஆதரித்து தில்லியில் அதை ஆட்சியில் அமர்த்தி வெளியிலிருந்து அதற்கு ஆதரவு தந்து வந்தனர். அகில இந்திய புரட்சி பேசும் இந்த இடதுசாரிகளுக்கு கூட்டணி அமைப்பதில் இந்த அகில இந்தியப் பார்வை உண்டா என்றால் அதில் மட்டும் மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு நிலை, வெவ்வேறு கூட்டணி. தாங்கள் வலுவோடு உள்ள மேற்குவங்கம், கேரளம், திரிபுரா மாநிலங்களில் காங்கிரஸ் எதிர்ப்பு, பிற மாநிலங்களில் காங்கிரஸ் ஆதரவு, இப்படித்தான் காங்கிரசோடு கூட்டணி வைத்து, தில்லியில் காங்கிரசுக்கும், தமிழகத்தில் தி.மு.க.வுக்கும் ஆதரவு தந்து இரண்டுக்கும் துணை போனார்கள். இவர்கள் இப்படித் துணை போனதற்கு அவர்கள் சொன்ன ஒரே காரணம் இப்போது காங்கிரசை ஆதரிக்காவிட்டால் மதவாத சக்திகள் அதிகாரத்துக்கு வந்துவிடும் என்பது தான்.

இப்படிச் சொல்லி வந்தவர்கள் இப்போது 123 அமெரிக்க இந்தியா அணு ஒப்பந்தத்தைக் காட்டி காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறி வித்ததோடு, தி.மு.க.வையும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என நிர்ப்பந்தம் கொடுத்து வருகின்றனர். 123 ஒப்பந்தம் இந்திய நலனுக்கு எதிரானது என்று இவர்கள் முடிவு செய்தால் அதை எதிர்த்துக் குரல் கொடுத்து, காங்கிரஸ் இரண்டிலொரு முடிவை உடனே எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி தாங்கள் ஒரு நிலையை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டு இந்த ஒப்பந்தத்தைக் காரணம் காட்டியே காங்கிரஸ் கட்சியுடனான உறவை இழு, இழு என்று இழுத்தார்கள்.

இந்த இழுவைக்குக் காரணம் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத ஒரு மூன்றாவது அணி செல்வாக்கு பெறும் என்றால் காங்கிரசைக் கவிழ்ப்பது, இல்லா விட்டால் காங்கிரசையே ஆதரிப்பது என்பதே இவர்கள் திட்டம். ஆனால் இதை வெளிப்படையாகச் சொல்லாமல் காங்கிரசுக்குத் தண்ணி காட்டி வந்தனர். எவ்வளவு காலம்தான் இந்த இழுவையையும், தண்ணி காட்டலையும் தாங்கிக் கொண்டிருப்பது என்று முடிவு செய்த காங்கிரஸ், ஆட்சியைத் தற்காத்துக் கொள்ள வழக்கமான தன் அரசியல் பேரங்களில் இறங்கி பிற கட்சிகளின் ஆதவை உறுதி செய்து கொண்டபின் இடதுசாரிகளைப் புறக்கணிக்கத் தொடங்கியது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் தோற்கும் அடுத்து உடனடியாகத் தேர்தல் வரும், வந்தால் மூன்றாவது அணியில் சேர்ந்து கூடுதல் இடங்களைப் பெற்று, தற்போதுள்ள எண்ணிக்கையை விடவும் கூடுதல் எண்ணிக்கையோடு நாடாளுமன்றத்தில் கணிசமான பலத்தோடு அமரலாம். ஆட்சியதிகாரத்தில் பங்கு செலுத்தலாம் என்பது இடதுசாரிகளின் கணக்கு. ஆனால், உடனடியாக அதற்கு வாய்ப்பில்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் கணக்கு பொய்க்க, குதிரை பேரத்தில் வெட்ட வெளிச்சமாகி சந்தி சிரித்தாலும், மயிரிழையில் தப்பிய காங்கிரஸ், அதுவே ஆட்சியில் நீடிக்க, தோல்வியுற்ற விரக்தியிலும் எரிச்சலிலும், அடுத்த வியூகம் அமைக்கும் முயற்சியில் தற்போது தி.மு.க. வையும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியே வரக் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

இப்படி நடந்தேறி வரும் இச்சம்பவங்கள் ஒருபுறம் இருக்க, இதில் அவ்வப்போது இவர்களது நிலைபாடுகளும் அணுகுமுறைகளும், அறிவிப்புகளும் மிகுந்த “புரட்சிகரமானவை”. மதவாத சக்திகள் அதிகாரத்துக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகவே காங்கிரசை ஆதரிப்பதாகச் சொல்லி வந்த இவர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரசை வீழ்த்த அந்த மதவாத சக்திகளோடு சேர்ந்து வாக்களிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ஆமாம் என்றார்கள். காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடைபெற்று அதில் காங்கிரஸ் போதுமான பலத்தோடு வெற்றி பெறாமலிருந்தால் காங்கிரசுக்கு ஆதரவு தருவீர்களா என்று கேட்டதற்கு முதலில் தருவோம் என்றார்கள். அப்புறம் நாலுநாள் கழித்து மாட்டோம் என்றார்கள்.

தில்லியில் அடித்த இந்தக் கூத்து போதாதென்றுதான், தாங்கள் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வந்து விட்டதால், இங்கு தமிழகத்தில் தி.மு.க.வும் கூட்டணியை விட்டு வந்து விட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அதற்கு கருணாநிதி, இவர்கள் கூட்டணி தயவில் ரங்கராஜனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பெற்றுக் கொண்டு தற்போது கூட்டணியை உடைப்பதைச் சுட்டிக்காட்டி வழக்கமான சாதியத் துருப்புச் சீட் டையும் கையிலெடுத்து மலிவுச் சரக்கு கவிதை எழுதி பதிலடி கொடுக்க அதையும் வாங்கிக் கட்டிக் கொண்டனர்.

அதற்கு இவர்கள் சொன்ன விளக்கம் என்ன தெரியுமா? தில்லியில் இவர்கள் ஆதரவில்தான் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததாம். அதில் கூட்டணி சேர்ந்துதான் தி.மு.க. அமைச்சர் பதவிகளைப் பெற்றதாம். ஆகவே அது தங்கள் தயவில் பெற்ற பதவிகள் தானாம். ஆகவே ரங்கராஜனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பிச்சையில்லையாம், பதிலுதவியாம். என்றெல்லாம் மறுப்புரைத்தார்கள். சரி, அப்படியானால் தமிழக சட்டமன்றத்தில் இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்களே, தில்லியில் தமிழக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்களே. இது யார் தயவில் என்று திரும்பக் கேட்டால் இவர்கள் என்ன பதில் சொல்வார்கள்.

இப்படி இக்கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தல் பாதையில் கால் பதித்து சந்தர்ப்பவாத நாற்காலிக் கூட்டணிக்கு பலியானதான் விளைவு, பிறகட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தரம் தாழ்ந்து போனது மட்டுமல்ல. கட்சிக்குள்ளேயேயான கட்டுப்பாட்டையும் தக்க வைத்துக் கொள்ளாமல் முடியாமல் தத்தளிக்க வேண்டியதாயிற்று. 1996 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளின்போதே மேற்குவங்கத் தலைவர் ஜோதிபாசுவைப் பிரதமராக்கி ஆட்சி யில் பங்கு கொள்ளும் ஆசை இவர் களுக்கு வந்தது, அதில் கட்சித் தலைமைக்குள் மாறுப்பட்ட கருத்துகள் நிலவிய சூழலில் அது கைவிடப்பட்டது.

தற்போதைய மே.வ.முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தான் முதல்வராகும் முன்பிருந்தே முதலாளித்துவப் பாதைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்ததுடன் தான் ஆட்சிக்கு வந்ததும், சிம்கூரில் டாடா வுக்கும், நந்தி கிராமத்தில் மலேஷிய நிறுவனத்துக்கும் இடம் தந்து, பெரும் கிளர்ச்சிகள் உருவாகவும், நந்தி கிராமத்தில் மக்கள் மடியவும் காரணமானார். தற்போது போராட்டம், மறியல், வேலை நிறுத்தம், முழு அடைப்பு இவையெல்லாம் தேவையற்றவை வேண்டாம் என்கிறார்.

இவர் சங்கதி இப்படி என்றால் கட்சியின் செல்வாக்கில் மக்களவைத் தலைவர் பதவியைப்பெற்ற சோம்நாத் சாட்டர்ஜி கட்சியின் கட்டளையை ஏற்க மறுக்கிறார். கட்சி நடவடிக்கை பற்றிக் கவலையில்லை. அவைத் தலைவர் பதவியே முக்கியம் என்கிறார். இப்படியெல்லாம் கட்சிக்குள்ளேயும் கட்டுப்பாடு தளர்ந்து போய்க் கிடக்கிறது இ.க.க.மா. கட்சி உண்மையிலேயே புரட்சியை இலட்சியமாகக் கொள்வதானால், இந்தத் தேர்தல் பாதைக்கு வந்திருக்கக் கூடாது. அப்படியே வந்தாலும் கூட்டணி சகதியில் வீழ்ந்திருக்கக் கூடாது. அப்படியே வீழ்ந்திருந்தாலும் இந்த மாதிரி பதவிக்கெல்லாம் ஆசைப்பட்டிருக்கக் கூடாது. அவைத் தலைவர் பதவியெல்லாம் வந்து புரட்சிக்கு என்ன அருளாசி வழங்கப் போகிறதா? இவர் என்ன நாடாளுமன்ற உறுப்பினர்களையெல்லாம் வேப்பிலை அடித்து புரட்சிகரமாக மாற்றப் போகிறாரா? தான் அந்தத் தொழுவத்தில் விழாமல் இருந்தால் போதாதா. ஆனால் வீழ்ந்தார்.

நியாயமாய் அவைத்தலைவர் பதவி கட்சி சார்பற்று நடுநிலையாய் ஆற்றும் பதவி என்றால், கட்சி அவரை சுதந்திரமாய் விட்டிருக்க வேண்டும். ஆனால் அவைத்தலைவர் பதவியும் வேண்டும். அவர் கட்சிக் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும் என்பது கட்சியின் ஆசை, அதாவது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல. இப்போது என்ன ஆயிற்று? 40 ஆண்டு அரசியல் அனுபவம் மிக்க முக்கியமான ஒரு மூத்த தோழரைக் கட்சி இழந்தது தான் மிச்சம்.

சரி, இடதுசாரிகள் இதிலிருந்தெல்லாம் பாடம் கற்று இனி மேலாவது திருந்துவார்களா என்றால் அப்படி திருந்துவார்கள் என்பதற்கான அறிகுறியும் ஏதும் தென்படவில்லை. இப்போதும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளிவர வேண்டும் என்பதற்கு இவர்கள் சொல்லும் காரணம், கொள்கை, கோட்பாடு பிரச்சனை எதுவுமல்ல. ‘காங்கிரஸ் மூழ்கும்’ கப்பல், அதோடு சேர்ந்து தி.மு.க.வும் மூழ்கி விடக்கூடாது என்கிற நல்லெண்ணம்தான்.

ஆக புரட்சி, புண்ணாக்கு என்று இதுகாறும் இவர்கள் பேசியதெல்லாம் மாய்மாலம், போலி, பொய். உண்மையாக இவர்கள் நோக்கம், நல்ல கப்பல்களில் பாதுகாப்பான சொகுசுப் பயணம் - சொகுசுப் பேருந்து விட்ட கட்சியோடு கூட்டு சேர்ந்ததால் இந்த சொகுசு எண்ணம் ஏற்பட்டிருக்கும் போலும் - போக வேண்டும் என்பது தான். அது முதலாளியக் கப்பலா, ஏகாதிபத்தியக் கப்பலா என்பது பற்றிக் கவலையில்லை. கப்பல் பாதுகாப்பானதாய், வசதியாக, சொகுசாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். அதுவே இவர்கள் லட்சியம்.

அதாவது சொந்தமாய் ஒரு படகோ, தோணியோ உருவாக்கி அதில் பயணம் செய்ய மாட்டார்கள். யாரோ உருவாக்கி மிதக்க விட்டிருக்கும் கப்பலில் தங்கள் வழிக்கு வருகிறவர்களைக் கூட்டிக் கொண்டு இவர்கள் பயணம் போவார்கள். கப்பல் சொந்தக்காரனோடு கசப்பு ஏற்பட்டால் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று கப்பலை விட்டு கழன்று வருவதோடு, கூட வந்தவர்களையும் அதிலிருந்து இறங்கச் சொல்லி நாட்டாமை செய்வார்கள்.

இரண்டு மாநிலத்தில் கூட்டணிக் கட்சியின் ஆட்சியிலிருக்கும் போதே இந்த நாட்டாமை என்றால், நாளை மேலும் சில மாநிலங்களிலும இப்படி ஒரு செல்வாக்கு கிட்டினால் நாளை எந்த ஆட்டம் ஆடுவார்கள். சரி, இடதுசாரிகள், இடதுசாரிகள் என்று இ.க.க. மற்றும் இ.க.க.மா. இரண்டையும் ஒரே தட்டில் வைத்து விமர்சித்தாயிற்று. இரண்டும் ஒரே கூட்டணி அரசியலில் என்பதால் இப்படி இரண்டையும் பொதுவாகக் குறிப்பிட வேண்டியதாயிற்று. என்றாலும் இவ்விரண்டுக்கும் சில முக்கிய வேறுபாடுகளும் உண்டு.

இ.க.க. வையாது ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம். இவர்கள் பெருமளவு சனநாயகத்தன்மையோடும் நியாய உணர்ச்சியோடும் நிலைபாடுகளை மேற்கொள்ளுபவர்கள் என்று. இந்த வகையில் இவர்கள் சனநாயக உரிமைகளுக்குக் குரல் கொடுப்பவர்கள். ஈழத் தமிழர்களுக்கு, தமிழக மீனவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்கள். போராட்டம் நடத்துபவர்கள். ஆனால் இ.க.க.மா.வினர் அப்படிப்பட்டவர்கள் அல்லர். இவர்கள் இறுகிக் கெட்டித் தட்டிப் போன, குறுங்கட்சிவாத கடினப்போக்கினர். தங்கள் கட்சி நலனுக்கு அப்பாற்பட்ட வேறு எந்த சனநாயகக் கோரிக்கைகளுக்கும் குரல் கொடுக்காதவர்கள். இவர்கள் ஈழத் தமிழர்களை, ஈழப் போராட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள். தமிழக மீனவர்கள் உயிர் காக்க முன் வர மாட்டார்கள். தமிழர்களின் காவிரி, முல்லைப் பெரியாறு உரிமைக்குக் குரல் கொடுக்க மாட்டார்கள். எல்லாவற்றிலும் இவர்கள் ஒரு இண்டர்நேஷனல் நிலை எடுத்து உலக கம்யூனிசம் காக்க, ஆச்சாரமாகவும் கட்டுப்பெட்டித்தனமாகவும் நடந்து கொள்வார்கள். கட்சி அணிகளையும் அப்படியே பயிற்றுவித்து வைத்திருப்பார்கள்.

இதனால் இது போன்ற எந்தப் பிரச்சினையிலும், இவர்கள் முன்கை எடுத்துப் போராடாமல் ஒதுங்கியே நிற்பார்கள். மக்களாகக் கொந்தளித்து எழுந்து போராடத் தொடங்கினால் அந்த நேரம் பார்த்து நாங்கள் ஒன்றும் பின்னால் தங்கி விடவில்லை என்பது போல மக்கள் பின் வந்து வால்பிடித்து நின்று தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள முயல்பவர்கள். தலித்தியம் பற்றிக் கவலைப்படாதிருந்த இவர்கள் பின் அது ஒரு பேரெழுச்சியாக வருவதைக் கண்டு அதை ஆதரித்து நிற்பவர்கள். பெண்ணியம் பற்றி எதுவும் பேசாதிருந்த இவர்கள் அது ஒரு போக்காக தலைதூக்க அதன்பின் ஆதரித்தவர்கள். அதேபோல மொழி பற்றி பொருட்பாடற்றுக் கிடந்த இவர்கள் தமிழ், தமிழ்மொழிக்கல்வி, தமிழ்ப் பற்று முதலான உணர்வு மக்களிடம் மேலோங்கிப் பல்கிப் பரவ, தாங்களும் மொழிக் காவலர்கள் போல காட்டிக் கொள்ள முனைபவர்கள்.

இப்படி சமயத்துக்குத் தகுந்தாற்போல் அவ்வப்போது ஒரு நிலை எடுத்து, அது அதற்கும் ஒரு நியாயம் கற்பிப்பதில் அல்லது பேரெழுச்சியோடு பொங்கி வரும் மக்கள் போராட்டங்களுக்கு தாங்கள் தான் கர்த்தாக்கள், கருத்துப் பங்களிப்புக் கதாநாயகர்கள் என்பது போல் காட்டிக் கொள்ள முயல்வதில் வல்லவர்கள் இவர்கள். அந்த வல்லமையையே புரட்சிகர கோட்பாடு போல தங்கள் கட்சி அணிகளுக்குப் புகட்டி அவர்களையும் மதி மயங்கச் செய்பவர்கள்.

ஆகவே, புரட்சிகரக் கனவுகளோடு அமைப்பில் சேர்ந்த தோழர்களும், பொதுவான கம்யூனிச நேர்மை, நியாயம், போர்க்குணம் குறித்த நம்பிக்கைகளோடு இருக்கும் பொதுமக்களும், இப்படிப்பட்ட ‘கவரிங் கம்யூனிஸ்டுகள்’ குறித்து விழிப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். இவர்களை வைத்து கம்யூனிசக் கொள்கைகளை மலினப்படுத்தி புறந்தள்ளும் போக்குக்கு இடம் தராமல் கம்யூனிசத்தின் மாண்பைக் காப்பதிலும் பாதுகாத்து வளர்ப்பதிலுமான நோக்கில் சிந்தையைச் செலுத்த வேண்டும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com