Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
Manmozhi WrapperManmozhi Logo
செப்டம்பர் - அக்டோபர் 2008
அமர்நாத் கோயில் நில ஒதுக்கீட்டுப் பிரச்சினை
சும்மா கிடந்த சங்கை...


பொய்யான வாக்குறுதிகள் தந்து காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டது தொடக்கம், காஷ்மீர் மக்கள் அதை ஏற்க மறுத்து, இந்திய அரசின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். தங்களை இந்தியாவின் ஒரு பகுதியாக உணர எப்போதுமே அவர்கள் தயாரில்லை. இதேபோல பாகிஸ்தானின் ஒரு பகுதியாகவும் அவர்கள் தங்களை உணரத் தயாரில்லை. மாறாக அவர்கள் கோருவதெலலாம், காஷ்மீர் மண் ணுக்குத் தன்னுரிமை. இந்தியாவின் ஓர் அங்கமாகவோ, பாகிஸ்தானின் ஓர் அங்கமாகவோ அல்லாத இரண்டின் பிடியிலிருந்தும் விடுபட்ட சுயேச்சையான ஒரு காஷ்மீர் தேசத்தைத்தான்.

ஆனால், இதை ஏற்காத இந்திய அரசு, முழுக்க முழுக்க ராணுவ பலத்தைக் கொண்டு, காஷ்மீரைத் தன் ஆதிக்கக் கட்டுக்குள் வைத்திருப்பதுடன், காஷ்மீர் புவியியல் அமைப்பையும், காஷ்மீர் மக்களின் மதப் பிரிவுகளையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, காஷ்மீரில் உள்ள இந்து, இசுலாமிய மக்களிடையே மதக் கலவரங்களை, மோதல்களை ஏற்படுத்தும் வகையிலோ, அல்லது ஒரு மதப் பிரிவினர்க்கு எதிராக இன்னொரு மதப்பிரிவினருக்கு சலுகை அளித்து மற்றவர்களைத் தூண்டிவிடும் வகையிலோ, அவ்வப்போது ஏதாவது நடவடிக்கையில் இறங்கி, காஷ்மீர் மக்களிடையே எப்போதும் பதட்டத்தைத் தூண்டி விடுகிறது. அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றுதான் அமர்நாத் கோயில் நிர்வாகத்துக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம்.

காஷ்மீரின் வடக்கே இமயமலைப் பகுதியில் பனிக்குகையில் அமர்நாத் பனிலிங்கம் இருப்பதாக நம்பப்படுவதும், ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று அப்பனி லிங்கத்தை வழிபட்டு வருவதும் பலரும் அறிந்த ஒன்று. இந்தப் பனிலிங்கம் பற்றி பல சர்ச்சைகள் உண்டு. அது ஒருபக்கம் கிடக்கட்டும். ஆனால் இந்தக் கோயிலுக்குத்தான் பக்தர்கள் வசதிக்காக என்று காஷ்மீர் அரசு வனப்பகுதிக்குச் சொந்தமான சுமார் 40 ஹெக்டேர் நிலத்தை, கடந்த ஜூன் மாதம் கோயில் நிர்வாகத்துக்கு வழங்கியது.

இது எப்படி, எந்த அடிப்படையில்? நிரந்தரமாகவா? தாற்காலிகமாகவா? என்று தெளிவுபடுத்தாதன் விளைவு, இசுலாமிய அடிப்படைவாதிகளுக்கு இது சும்மா கிடந்த வாய்க்கு அவல் வழங்கியது போல வாய்ப்பாகி விட்டது. அவர்கள் “காஷ்மீர் மண்ணை இந்துக்களுக்கு தாரை வார்த்து காஷ்மீரை இந்து நாடாக்க முயலுகிறார்கள், இசுலாமியர்களே, தாய் மண்ணை மீட்க அணி திரளுங்கள்” என சையத் அலிஷா கிலானி தலைமையில் முழங்கி, காஷ்மீர் முழுக்க கடும் போராட்டங்களை நடத்தினர்.

ஓயாத இப்போராட்டத்தின் விளைவாக, காஷ்மீர் அரசு, அமர்நாத் கோயிலுக்கு வழங்கிய நிலத்தைத் திரும்பப் பெறுவதாக கடந்த ஆகஸ்டில் அறிவித்தது. உடனே, இந்த அறிவிப்பை எதிர்த்து இந்துத்துவ மதவாத அமைப்புகள் களம் இறங்கின. காஷ்மீர் என்ன இசுலாமியர்கள் நாடா, இங்கு நடப்பது இசுலாமியர்கள் அதிகாரமா? இசுலாமியர் போராட்டத்திற்கு அரசு பணிந்து போவதா? எனக் கேட்டு, இந்துத்துவ சக்திகளை உசுப்பிவிட்டு, தீவிரமான கிளர்ச்சிகளில் இறங்கின.

மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல காஷ்மீர் அரசு திகைத்து, பின் இருதரப்பினரையும் அழைத்து வைத்து பேச்சுவார்த்தை நடத்தி, ஒதுக்கப்பட்ட நிலம் வெறும் விழாக்காலப் பயன்பாட்டுக்கு மட்டுமானதுதான். நிலையானதல்ல என்கிற ஏற்பாட்டில், தற்போது இப்பிரச்சினையில் ஒரு சமரசம் செய்யப்பட்டு, காஷ்மீரில் ஓரளவு அமைதி திரும்பியுள்ளது. இந்நிலையில் இப்பிரச்சினையைப் பொறுத்தவரை நமது கருத்து. எந்தக் கோயில் விழாவுக்கும் லட்சக்கணக்கில் வரும் பக்தர்களுக்கு உரிய வசதிகள் செய்து தருவதும், விழாக்காலக் கடைகள், விற்பனை நிலையங்களுக்கு இடம் ஒதுக்கித் தருவதும், இந்த ஏற்பாடுகள் விழா முடியும் போதே உடனுக்குடன் முடிவுக்கு வருவதும் வழக்கமாக உள்ள ஏற்பாடுதான்.

ஆனால் காஷ்மீர் அரசு இதை முறையாக அறிவித்து, தான் எந்த மதத்தின் பக்கமும் சாய்வாக இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அந்த தெளிவு ஏற்படுத்தப்படாததனாலேயே இவ்வளவு கலவரங்களும், போராட்டங்களும், மனித இழப்புகளும், பொருள் இழப்புகளும்.
எனில், இப்போதாவது காஷ்மீரில் அமைதி திரும்பியதில் மகிழ்ச்சி. ஆனால் தில்லி அரசு காஷ்மீர் மக்களை எப்போதும் பதட்டத்தில் வைத்து, தன் ராணுவ நடவடிக்கைகள் மூலம், தன் ஆதிக்கத்திற்கு நியாயம் கற்பிக்கும் உத்தியைத் தொடரக் கூடாது. விரைவிலேயே காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அங்கு அனைத்து அரசியல் மற்றும் மத அமைப்புத் தலைவர்களும் கலந்து கொள்ளும் வகையில் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். காஷ்மீர் மக்களிடையே ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி, அம்மக்களின் விருப்பத்திற்கேற்ப, காஷ்மீரின் இறையாண்மையைப் பாதுகாக்கிற, ஓர் அரசை அமைத்து, இந்தியா காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com