Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
ஜனவரி - பிப்ரவரி 2009
தோழர் தொல். திருமாவின் பட்டினிப் போராட்டம் நோக்கும் பயனும்
இராசேந்திரசோழன்


ஈழச்சிக்கலுக்காக தமிழகத் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும். ஈழச் சிக்கலுக்க மட்டுமல்ல, தமிழக உரிமைக்கும் இதுவே தீர்வு என்கிற கருத்தை, தொடர்ந்து மண்மொழி இதழில் எழுதி வந்ததை வாசகர்கள் பலரும் அறிவர். இந்த நிலையில் இப் படிப்பட்ட அமைப்பு தோற்றம் பெற் றதை வைத்து நண்பர்கள், வாசகர் கள் பலரும் தொலைபேசி, உரையாடல், மற்றும் குறுஞ்செய்தி வாயிலாகவும், நேர்ப் பேச்சிலும் பரவாயில்லை உங்கள் வேண்டுகோள் உருவேறியிருக்கிறது என்கிற நிறைவை யும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

ஆனால் அப்படி யெல்லாம் ஒன்றும் அவ்வளவு சீக்கிரம் மகிழ்ச்சியடைந்து விட வேண்டாம். இன்னும் கடக்க வேண்டிய தடைகள் பல எவ்வளவோ இருக்கின்றன என்று அறிவுறுத்துவதாக இருக்கிறது நடந் தேறி வரும் நிகழ்வுகள். எனவே, இது பற்றி வாசகர்கள் புரி தல்களுக்காகவும் தெளிவுக்காகவும் சில செய்திகள். ஈழத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தமிழகத்தில் விரிவான ஒரு பரந்துபட்ட ஈழ ஆதரவு தளத்தை உருவாக்க சில நடைமுறைகளை மண் மொழி 25 வது இதழ் பக்கம் 10இல், “ஈழச்சிக்கலும் தமிழர் கடமையும்” என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

அதில் தற்போது ஈழத்துக்காக குரல் கொடுப்பவர்கள், (1) தனி ஈழக் கோரிக்கையை ஏற்பவர்களாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை (2) விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரிப்பவர்களாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்ற தெரிவித்திருந்தோம். அதாவது ஒரு பரந்து பட்ட, விரிந்த தளத்தை உருவாக்கும் முயற்சியில் அதற்கு மேற்கண்டுள்ள இரண்டும் தடையாக, முன்னிபந்தனை யாக ஆகிவிடக் கூடாது என்கிற நோக்கில் அந்த இரண்டிலும் மாறுபட்ட கருத்து இருந்தாலும் அதற்கும் அப்பாற்பட்ட மனிதாபிமானிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சனநாயகக் சிந்தனை யாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஈழ மக்களின் மீதான படுகொலையைத் தடுத்து நிறுத்தவேண்டும். இந்திய அரசைப் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கோரி யிருந்தோம்.

ஏறக்குறைய இதற்கு நெருக்க மாகத்தான் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்” தோற்றுவிக்கப் பட்டுள்ளது. 28-01-2009 அன்று அண்ணா நகர் ‘ராஜ் பேலஸ்’ விடுதியில் உரு வாகிய இவ்வியக்கம், தன் முதல் கட்ட தொடக்க போராட்ட அறிவிப்பு செய்யும் நிகழ்ச்சியை 31-01-09 அன்று தி.நகர் சர்.டி.பி. தியாகராயர் அரங்கில் நடத்தியது. அன்றைய அறிவிப்பின் படிதான் பிப்ரவரி 4ஆம் நாள் இது இலங்கையின் சுதந்திர நாள் என்பதால் அந்த நாளில் இங்கு தமிழகத்தில் முழு அடைப்பு நடத்துவது, 7ஆம் நாள் மாலை 4 மணி முதல் 6 மணிவரை கறுப்புக் கொடி ஊர்வலம் நடத்துவது என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இந்தப் போராட்ட அறிவிப்புகளில் எவருக்கும் பெரிய அளவில் எந்த மாற்றுக் கருத்தும் இருந்ததாக, இருப் பதாகச் சொல்ல முடியாது. சிக்கல் இயக்க நடைமுறை யில்தான். இது என்ன என்பதை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

1. இயக்கத்தின் பெயர் : நாம் வேண்டுகோளில் முன் மொழிந்து, தற்போதும் எல்லோர் வாயிலும் இயல்பாக வெளிப்பட்டு வருவதும் “ஈழத்தமிழர்” என்கிற சொல்லாடல் தான். இதுபற்றி செய்தி வெறியிட்ட ஜுனியர் விகடன் தன் 4-2-09 தேதியிட்ட இதழில் அமைப்பு பற்றி குறிப்பிட்ட மூன்று இடங்களிலும் ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்றே குறிப்பிட்டுள் ளது. (பக். 8-9) அடுத்து 7-2-09 தேதியிட்ட இதழி லும் இவ்வாறே குறிப்பிடப் பட்டுள்ளது. அப்படி எல் லோர் உள்ளத்திலும் பதிந்து போன வார்த்தை ‘ஈழத்தமிழர்’. செய்தியைப் படித்த பலரும் நம்பிக் கொண்டி ருந்ததும் இந்தப் பெய ரைத்தான். ஆனால் தொடக்கநாளான 31.01.09 அன்று மேடையில் கட்டி யிருந்த பதாகையைப் பார்க்கும் போதுதான் தெரிந்தது, “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்” என்பது.

ஒரு அனுமானமாக யோசிப் போம். ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., இ.க.க. இதில் யார் “ஈழத்தமிழர்” என்கிற சொல்லாடலுக்கு எதிராக இருந்திருப்பார்கள். ஒரு வேளை அகில இந்தியக் கட்சியான இ.க.க., அப்புறம் பின்னால் வந்து சேர்ந்த பா.ஜ.க.வும் இதற்கு ஆட்சேபம் தெரிவித்திருக்கலாம். சரி, அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்ட இந்த சொல் ஒரு தடை யாக இருக்க வேண்டாமே என்று கருதியும், அரசியல் உறவுகள் கருதியும், எப்படியானாலும் இன்றுவரை இலங்கை அரசமைப்புச் சட்டப்படி அவர்கள் அந்த நாட்டுக் குடிமக்கள் தானே, இலங்கைத் தமிழர்கள்தானே, தனி ஈழம் மலர்ந்த பிறகல்லவா அவர்கள் ஈழத் தமிழர்கள் என்கிற வாதம் கருதியும் அவர்கள் இந்தப் பெயரை வைத்ததாகக் கொள்வோம். ஒற்றுமை கருதி நாமும் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்வோம்.

2. கோரிக்கைகள் : தனி ஈழம் குறித்தோ, விடுதலைப் புலிகள் குறித்தோ ஆதரவாகவோ எதிராகவோ எவரும் பேச வேண்டாம் என்று முடி வெடுத்திருக்கிறார்களாம். சரி, இதுவும் கூட ஒரு பரந்துபட்ட ஒற்றுமை கருதிய ஏற்பாடாக, அப்படிப்பட்ட வாதங்க ளெல்லாம் இப்போது வேண்டாம், முதலில் போர் நிறுத்தம் கோருவோம், மற்றதைப் பிறகு பார்த்துக் கொள்வோம் என்கிற நோக்கில் முடிவு செய்யப்பட்டதாக ஏற்றுக் கொள்வோம். இவை இரண்டும் நமது வேண்டு கோளில் நாமே முன்வைத்தவை என் பதால் அவ்விரண்டையும் ஏற்றுக் கொள்வதில் நமக்குச் சிக்கல் இல்லை. உணர்வாளர்கள் பலருக்கும் சிக்கல் இருக்காது என்று நம்பலாம்.

ஆனால் 01-02-09 தமிழோசை நாளேட்டில் அறிவிக்கப்பட்ட 10 கட்டளைகள் படி, எந்தக் கட்சியைப் பற்றியும் எந்தத் தலைவரையும் பற்றியும் யாரும் பேசக்கூடாது, விமர்சிக்கக் கூடாது என வாய்ப்பூட்டு போடும் ஒரு நிபந்தனை உரு வாக்கப்பட்டிருக் கிறதே, அது எதற்கு? யாருக்காக இந்த நிபந்தனை. வி.சி.க., தி.மு.க.வோடு இருக்கிறது. பா.ம.க. காங்கிரசோடு இருக்கிறது. ஆகவே அவ்விரு கட்சிகள் பற்றி யாரும் பேசக்கூடாது என்று தொடங்கி பின் ம.தி.மு.க. அ.தி.மு.க. வோடு இருப்பதால், அது பற்றியும் பேசக் கூடாது என்று நீண்டு பிறகு யாருமே எந்தக் கட்சி பற்றியும், எந்தத் தலைவர்கள் பற்றியுமே பேசக் கூடாது என்று ஒரு முடிவு வந்திருக்கிறாற் போலிருக் கிறது என்று அனுமா னிக்க வேண்டியி ருக்கிறது.

ஓர் அமைப்பு என்றால் அது சில கோரிக்கைகளை வைத்துப் போராட முனை கிறது என் றால், எதிரி யார், நண்பர் யார் என்று அடையாளம் காட்டாமல், அவர்களை விமர்சிக்காமல் போராடுவது என்றால் எப்படி? நாம் திரும்பத் திரும்பச் சொல் கிறோம். ஈழ மக்களுக்கு முதல் எதிரி சிங்கள அரசு, சிங்கள இராணுவம். இரண்டாவது எதிரி இந்திய அரசு, காங்கிரஸ். மூன்றாவது எதிரி தமிழக அரசு தி.மு.க. இவை மூன்றும் முக்கிய எதிரிகள். அதிகாரத்தில் உள்ள எதிரிகள். இந்த எதிரிப் பட்டியலில் ஜெய லலிதாவுக்கு இடமில்லையா என்று சிலர் கேட்கலாம். உண்டு. ஆனால் அவர் தற்போது அதிகாரத்தில் இல்லாத எதிரி. இப்போது அவர் ஈழத்துக்கு எதிராக நமது கோரிக்கைகளுக்கு எதிராக நேரடியாக எதுவும் செய்து விட முடியாது. அப்படியேதான் இ.க.க.மா.வும்.

அதனால் அவர்களை இம் மூவருக்கும் நிகரான எதிரிப் பட்டியலில் நிறுத்த முடியாது. நிறுத்த முடியாது என்பதால் அவர்களைப் பற்றிப் பேசவே கூடாது, விமர்சிக்கவே கூடாது என் பதல்ல, தாராளமாகப் பேசலாம். தாராளமாக விமர்சிக்கலாம். ஆனால் அது இந்த மூவருக்கும் நிகரானதா கவோ அல்லது இதில் மூன்றாம் எதிரியை மறைப்பதாக, அதைப் பின் னுக்குத் தள்ளுவதாகவோ அமைந்து விடக்கூடாது. நிலைமை இப்படி யிருக்க, இதில் யாரைப் பற்றியுமே எதுவுமே பேசக் கூடாது என்றால் எப்படி? எதிரியை அடையாளம் காட்டாமல், விமர்சிக்காமல், மக்களைத் திரட்டு வதும், போராடுவதும், கோரிக்கையை வெல்வதும் எப்படி? வெறும் நிழல் சண்டை போட்டா, வெற்றிடத்தில் கத்தியைச் சுழற்றியா, யாரோடு சண்டை போடுகிறோம் என்று சண்டையிடும் மக்களுக்குத் தெரியாமல் எப்படி சண்டையிடுவது. எதிரி மக்களுக்குத் தெரிய வேண்டாமா?

தமிழகம் இவ்வளவு கொந்த ளித்தும் அதைக் கிஞ்சித்தும் மதிக்கா மல் கேவலப்படுத்தி, இழிவு படுத்தும் தில்லி அரசை, அதற்குத் துணைபோய் தமிழர் களுக்குத் துரோகம் செய்தும் காட்டிக் கொடுத்தும் தமிழர்களுக்கு பாவ்லா காட்டியும் வெத்து வேட்டு வறட்டு வசனங்களால் போதையூட் டியும் தில்லிக்குக் கங்காணி வேலை பார்க்கும் கருணாநிதி அரசை மக் களுக்கு அடையாளம் காட்டாமல், விமர்சிக்காமல் எப்படி ஈழப் பிரச்சி னையைப் பேசுவது, கோரிக்கையை வென்றெடுப்பது? நிச்சயம் முடியாது. இது நடக்கிற காரியம் அல்ல. இது போகாத ஊருக்கு வழி காட்டுவது. சரி, இந்த நிலைப்பாடு எங்கிருந்து வருகிறது. எல்லாம் கூட் டணி அரசியலிலிருந்து வருகிறது. அதாவது ஈழ மக்களுக்கென்று உரு வாக்கப்பட்ட கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளாளுக்கு ஒரு கூட்டணியில் இருப்பதால், அந்தக் கூட்டணிக் கட்சிகள் மனம் நோகாமல் புண் படாமல் இருக்க வேண்டுமே என்பதற் காக வருகிறது. அதாவது யாருக்கும் வலிக்காமல் பிரச்சினைக்கு வயத்தியம் பார்க்க முயல்கிறது. நோய்க்குக் காரண மான அல்லது அதை ஊட்டி வளர்க்கும், அதற்கு ஊக்கம் கொடுக்கும் கிருமி களை அழிக்காமல் நிவாரணம் தேட முயல்கிறது.

இப்படி இருந்தால் இது என்ன ஆகும்? இன்றோ நாளையோ நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படலாம். அதனுடன் சேர்ந்தே சட்டமன்றத் தேர்தலையும் நடத்தி, ‘மைனாரிட்டி தி.மு.க.’ என்கிற இழி சொல்லையும் அழித்துக் கொள்ள கருணாநிதியும் முயற்சிக்கலாம். அப்படி ஒரு அறிவிப்பு வந்தால் என்ன ஆகும். அந்தந்த கட்சியும் அந்தந்த கூட்டணிக்குப் போய் தேர்தல் பிரச்சாரம் செய்யும். ஈழச் சிக்கல் என்னாகும்? இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ன ஆகும். முன்பு அம்போ ஆன தமிழ் பாதுகாப்பு இயக்கம் போல இதுவும் அம்போ என்று நடுத்தெருவில் நிற்கும். ஒன்று மில்லை, திருமங்கலம் என்கிற ஒரு தொகுதி இடைத் தேர்தலின் போதே ஈழச்சிக்கல் பற்றிய கவனம் குறைந்து, அதில் ஒரு தேக்கம் ஏற்பட்ட நிலையில் நாடு தழுவிய பொதுத் தேர்தல் வந்தால், இந்த இயக்கம் என்னாகும் என்பது கேள்விக்குறி.

இந்தச் சிக்கல் எல்லாம் எதனால் வருகிறது? ஈழத்துக்கு ஒரு கூட்டணி, தேர்தலுக்கு ஒரு கூட்டணி, என்று வெவ்வேறு கூட்டணி வைப்பதனால் உருவாகிறது. ஆகவே இதற்கு மாற் றாக, எந்தச் சிக்கலும் எந்த முரணும் இல்லாத ஒரு ஆலோசனையை முன் வைக்க விரும்புகிறோம். அதாவது, தேர்தலுக்கு ஒரு கூட்டணி, ஈழத்துக்கு ஒரு கூட்டணி என்றில்லாமல், இரண்டுக்குமான ஒரே கூட்டணியை உருவாக்கக் கோரு கிறோம். இதன்படி இப்போதுள்ள “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமே” தேர்தலுக்கான கூட்டணி யாகவும் அமைந்தால் எந்தச் சிக்கலும் இருக்காது. ஈழத்துக்காக எதைப் பேசு கிறோமோ அதையே தேர்தலுக்கும் பேசலாம். தேர்தலுக்குரிய பிரச்சினை களுள் ஒன்றாக ஈழப் பிரச்சினையையும் ஆக்கி ஈழம் சார்ந்த கோரிக்கை களையும் மக்கள் முன்வைத்து பிரச் சாரம் செய்யலாம். அதையே வாக்குறுதி களில் ஒன்றாகவும் முன் வைக்கலாம். ஈழ எதிர்ப்புக் கட்சிகளையும் அம்பலப் படுத்தி அவற்றைத் தனிமைப்படுத்த லாம். இதைத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது மட்டுமல்ல. இதைத்தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் இ.த.பா.இ. தலை வர்கள் என்ற செய்கிறார்கள். வார்த் தைக்கு வார்த்தை இது ஈழத்துக்கான கூட்டணியே தவிர, தேர்தலுக்கான கூட்டணி அல்ல என்று தம் பிடித்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இப்படி சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். அவரவர்கள் சார்ந்துள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு சந்தேகம் வந்து விடக்கூடாது, வருத்தம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது ரெண்டு பெண்டாட்டிக் காரன் மாதிரி இரண்டு பேரையுமே திருப்திப் படுத்த இரண்டு குதிரை சவாரி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இது நடைமுறைக்கு ஆவாத, ஒவ்வாத கதை. தமிழீழத்துககு தமிழகத்துக்கு பலன் தராத பாதை. ஆகவே, இ.த.பா.இ. தலைவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் வி.சி.க, தி.மு.க. உறவை விட்டும், பா.ம.க. காங்கிரஸ் உறவை விட்டும் வெளியேற வேண்டும். இப்படி வந்தால் ம.தி.மு.க.வும் அ.தி.மு.க. உறவை விட்டு வெளியேறி வந்துவிடும். அதைத் தொடர்ந்து இ.க.க.வும் வரலாம். வரவேண்டும். இப்படி இந்த நான்கு கட்சிகளும் உறுதியாக நின்றால் இந்த நோக்கில் இருக்கிற சிறு கட்சி களும் அமைப்புகளும் இதற்கு ஆதர வாக நிற்கும். எப்போதும் இம் முயற்சிகளுக்கு ஆதரவாக இருக்கிற திரு. பழ.நெடுமாறன் அவர்களும் தமிழீழ ஆதரவு அமைப்புகளும் உடன் நிற்கும். இந்த அணி வலுப்படும். தற்போது இந்த அணியில் பல் வேறு தமிழ் அமைப்புகள், சமய அமைப்புகள் எல்லாம் இருக்கின்றன. பா.ஜ.க.வும் இருக்கிறது. இவ்வமைப்புகள் எல்லாம் இருப்பது பற்றி நாம் குறை ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் எந்த ஒரு அமைப்பும், தான் செல்லும் திசை அறிந்து, தன் நோக்கம் அறிந்து, அதற்கான செயல் திட்டத் தோடு இயங்க வேண்டும்.

அப்படி அல்லாமல் பொத்தாம் பொதுவான ஆதரவு என்றால் உணர் வுள்ள எல்லோரும் தான் அதில் அங்கம் வகிப்பார்கள். ஆனால் இயக்கத்தின் நட வடிக்கைகளைப் பொறுத்து போகப் போகத்தான் எத்தனை பேர் இதில் உறுதி யாக நிற்கிறார்கள், யார் யார் தொடர்ந்து உடன் வருகிறார்கள், யார் யார் பின் தங்குகிறார்கள், முரண் படுகிறார்கள், எதிராகப் பேசுகிறார்கள் என்பது தெரியவரும். ஆகவே இவற் றையெல்லாம் கருத்தில் கொண்டு தற்போதுள்ள இ.த.பா.இ. தலைவர் களுக்கு நாம் ஆலோசனை களாகச் சொல்ல விரும்புவது.

1. ஈழத்துக்கு ஒரு கூட்டணி, தேர்தலுக்கு ஒரு கூட்டணி என்று முரண்பட்ட இரண்டு கூட்டணிகளை வைத்துக் கொள்ளாமல் இரண்டுக்கும் சேர்ந்து ஒரே கூட்டணியை உருவாக்க முயலுங்கள்.

2. இப்படி உருவாகும் கூட்டணி, ஈழ மக்கள் ஆதரவுக்கு குரல் கொடுக்கும் அதே வேளை, தமிழக உரிமைகளுக் கும் தமிழர் நலன்களுக்கும் குரல் கொடுக் கும், அதாவது தமிழீழ, தமிழக உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் ஒரே கூட் டணியாக இது அமை யும் வகை யில் பார்த் துக் கொள்ளுங்கள்.

3.இப்படி அமைய இந்த இயக்கம், தனக்கான குறைந்த பட்ச வேலைத் திட்டம் ஒன்றை உருவாக்கிக் கொண்டு இந்த வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொள்கிற அதற்காக செயல்பட முன் வருகிற, அமைப்புகளை மட்டும் இதில் இணைத்துக் கொண்டு ஒன் றாகச் செயல்பட முனையுங்கள்.

இப்படி முதலில் இந்த மூன்று அம்சங்களின் அடிப்படையில் ஒரு இயக்கத்தைத் தொடங்கினால் போகப் போக இதன் வளர்ச்சிப் போக்கில் கிடைக்கப் பெறும் அனுபவங்களை வைத்து மற்றதை முடிவு செய்து கொள்ளலாம். இதில் சிலருக்கு சில கேள்விகள் எழலாம். அதற்கான சில விளக்கங்கள்:

1. ஈழத்தமிழர் பாதுகாப்பென்று அமைப்பு தோற்றுவித்துக் கொண்டு தமிழகத் தமிழர் உரிமைக்கு குரல் கொடுக்க முடியுமா, சாத்தியப் படுமா என சிலர் வினவலாம். ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்பது தமிழகத் தமிழர் உரிமையோடு தொடர்புடை யது. தமிழகத் தமிழர் உரிமை பல பறிபோய் இருப்பதுதான், அதாவது பேச்சுரிமை, எழுத்துரிமை, இல்லம் தேடி வந்தோர்க்கு அடைக்கலம் தந்து விருந்தோம்பும் உரிமை, சிகிச்சை அளிக்கும் உரிமை, பிற உதவிகள் செய்யும் உரிமை மறுக்கப்பட்டிருப் பதுதான் ஈழ மக்கள் படும் துயருக்கு பெரும் காரணம். இந்த உரிமைகள் மட்டும் தமிழக மக்களுக்கு இருந்திருந் தால் ஈழம் என்றோ மலர்ந்திருக்கும். எனவே இதை யெல்லாம் கருத்தில் கொண்டு கவனத்தில் கொண்டு நாம் செயல் பட வேண்டும். அதற்கு தற் போதுள்ள அமைப்பின் பெயரில் உள்ள இலங்கையை நீக்கிவிட்டு “தமிழர் பாதுகாப்பு இயக்கம்” என்பதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இது ஏற்கெனவே காணாமல் போன தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் போல தொலைந்து போய் விடாமல் உரிய திட்டம் வகுத்து செயல்படவேண்டும்.

2. இப்படி பெயர் வைத்தால் இது தமிழர் உரிமைக்கு மட்டும்தான் போராடுமா, மற்றவர்கள் உரிமைக்குப் போராடாதா என்று சிலர் கேட்கலாம். தமிழ் நாட்டில் எத்தனை சாதி இருந் தாலும், எத்தனை மதம் இருந்தாலும், எத்தனை அரசியல் கட்சிகள், அமைப்பு கள் இருந்தாலும், பேசும் மொழி யாலும், தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டவர்கள் என்ற வகையிலும் தமிழர்கள். இதில் மொழிச் சிறுபான் மையினர் கொஞ்சம் பேர் இருக்கலாம். அது ஒரு சிறு எண் ணிக்கை அளவுதான். மற்றபடி பெருமளவும், அடிப்படை யாகவும், தொன்று தொட்டும் இங்கு வாழ்பவர்கள் தமிழர்கள்தாம். எனவே இங்குள்ள தமிழருக் கும் அண்டையில் உள்ள ஈழத் தமிழர்க் கும் இத்துடன் உலகெங்கும் வாழும் தமிழர்க்கும் இந்த அமைப்பு குரல் கொடுக்கும்.

இதனால் தமிழர் அல்லாத எவரும் பாதிக்கப்பட்டால் இவ் வமைப்பு குரல் கொடுக்காது என்ப தல்ல, மனித நேய அடிப்படையில் மனித உரிமை நோக்கில் உலகின் எந்த மூலையில் எந்த மனிதன் பாதிக்கப் பட்டாலும் இது குரல் கொடுக்கும் என்பதை இதன் நோக்கங்களில் ஒன்றாக வைத்துக் கொள்ளலாம். இதனடிப் படையில் விரிவான தளத்தில் இவ்வமைப்பு இயங்கலாம். ஆனால் அடிப்படை, முதன்மை தமிழர் நலம், தமிழர் உரிமைதான்.

ஆகவே இந்த அடிப்படையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்பதில் உள்ள இலங் கையை நீக்கி விட்டு “தமிழர் பாதுகாப்பு இயக்கம்” என்பதை மட்டும் வைத்து, தற்போது இன்னலுக்குள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர் களுக்கு உடனடியாகவும், தொலை நோக்கில் உரிமை பறிக்கப் பட்டு அந்த உணர்வின்றி வாழும் தமி ழனுக்கு இதனூடாக விழிப்பூட்டி யும், தமிழீழ மற்றும் தமிழக மக்களின் நலன் காக்க, உரிமை காக்கப் போராட இவ்வமைப்பு வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.

சரி, இலக்குகளையும் செயல் திட்டங்களையும் சொல்லி யாகிவிட் டது. இனி இதற்கு யார் யார் இணங்கு வார்கள், இதில் யார் வருவார்கள் என்று யோசிப்போம். முதலில் அடிப் படையாக ஐந்து அமைப்புகள் மதிமுக., பா.ம.க., வி.சி.க., இ.க.க., தமிழ், தமிழீழ ஆதரவு அமைப்புகள் ஆகி யவை ஒன்று சேர்ந்து இயங்கலாம். இந்த ஐந்து அமைப்பு களும் ஏற்றுக் கொள்ளும் குறைந்த பட்ச செயல் திட்டத்துடன் இவர்கள் இந்த அமைப்பைத் தொடங்கி வழி நடத் தலாம்.

சரி, வெறும் தமிழர் பாதுகாப்பு இயக்கமாய் செயல்படுகிற வரை இது சரி. ஆனால் தேர்தலுக்கும் இதே அணிதான் என்றால் பிரச்சினை வராதா என்று சிலர் கேட்கலாம். நியாயம்தான். ஆனால் பிரச்சினை எதில் வரும்? கொள்கை கோட்பாட்டில் எழாது. ஏனென்றால், தமிழர் நலன் காக்கும் கொள்கையில் தான் ஏற்கெனவே எல்லோரும் ஒன்றுபட்டு நிற்கிறார் களே. ஆகவே அதில் பெரும் பாலும் பிரச்சினை வராது. இதில் மாற்றுக் கருத்து கொண்ட கட்சிகளுடன் கூட்டு வைத்தால்தான் சிக்கல் வரும். இது ஒத்த கருத்துள்ள கட்சிகளின் கூட்டணி என்பதால் அதுபோன்ற சிக்கல்கள் எழாது. ஆனால், பிரச்சினை யார் பெரிய கட்சி, யாருக்கு அதிக இடங்கள் என்று தொகுதியைப் பங்கிட்டுக் கொள்வதில்தான் சிக்கல் வரும்.

இது தவிர்க்க முடியாததுதான் என்றாலும், இதை அவ்வப்போது பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டியது தான் தமிழர் நலன், தமிழர் உரிமை, தமிழர் ஒற்றுமை கருதி ஒருவருக் கொருவர் சற்று விட்டுக் கொடுத்துதான் அமைப்பைப் பாதுகாக்க வேண்டும். சரி, இதில் தேர்தலில் பங்கு கொள்ளாத அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சி சாராத தமிழர் அமைப் புகள் பங்கு என்ன என்று சிலர் கேட்கலாம். மேற்குறித்த 5 அமைப்புகள் உருவாக்கும் குறைந்தபட்ச வேலைத் திட்டத்தை பரிசீலித்து அதில் திருத்தங் களோ மாற்றங்களோ முன் மொழிந்து, அதில் ஒருமித்த கருத்து ஏற்படும் பட்சத்தில் இவை இவ்வமைப்பில் இணைந்து அங்கமாகச் செயல்படலாம்.

தேர்தல் வரும்போது அதில் பங்கேற்கலாம். பங்கேற்காமல் போகலாம். பிரச்சாரம் செய்யலாம், செய்யாமலும் போகலாம். வாக்களிக்கலாம், அளிக்காமலும் போகலாம். இது அவர வர் உரிமை சார்ந்த சேதி. எனவே, இந்த உரிமையில் எவரும் தலையிடாமல் இதில் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் சுதந்திரமாக இயங்கும் வகையில் ஒரு ஏற்பாட்டுக்கு வந்து இதைச் செயல் படுத்தலாம். இப்படியெல்லாம் திட்ட வட்ட மாகவும் தெளிவாகவும் பேசி ஒரு முடிவுக்கு வந்து, அதற்கு உரிய அளவில் இயக்கத்தை மறு சீரமைப்பு செய்து, இலக்குகளையும், அதற்கான வேலைத் திட்டத்தையும், உருவாக்கிக் கொண்டு செயல்பட்டால் தான், தமிழீழ, தமிழக மக்கள் நலன், உரிமை பாதுகாக்கப்படும்.

அல்லாமல் அப்போதைக்கப் போது ஒரு கூட்டணி, அப்போதைக் கப்போது ஒரு செயல்பாடு என்று ஏதோ அந்தந்த நேரத்துப் பிரச்சினைக்கு அந்தந்த நேரத் திற்கு ஒரு செயல்பாடு என்று இருந்தால் ஏதோ எல்லா பிரச்சி னைக்கும் நாமும் மாரடித்தோம், ஒப்பாரி வைத்தோம் என்றுதான் பேர் இருக்குமே தவிர, ஒரு பிரச்சினையும் உருப்படியாகத் தீராது. தமிழர் வாழ் விலும் நலன் பிறக்காது. எனவே, இப்படி பேருக்கு வாழ்ந்து மறைவதற்காக பிறந்திருக்க வில்லை நாம்.மாறாக தமிழீழம் காத்து தமிழகஉரிமைகள் காத்து தமிழினத்தை பாது காக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற அப்படிப்பட்ட வரலாற் றைப் படைக்கப் பிறந்தவர்கள் நாம் என்பதைத் தமிழகத் தலைவர்கள் உணர வேண்டும். அந்த நோக்கில் ஒன்றுபட்டு செயல் திட்டம் வகுத்துத் தமிழினத் துக்காகப் போராட முன் வரவேண்டும்.

“தமிழீழத்தில் நடத்தும் போரை நிறுத்து -அமைதிப் பேச்சை உடனே தொடங்கு” என்னும் இரு கோரிக்கைகளோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர். தொல். திருமாவளவன் சென்னை அடுத்த மறை மலை நகரில்15-01-2009 வியாழன் திருவள்ளுவர் நாளன்று தொடங்கி 18-01-2009 ஞாயிறு முடிய, நான்கு நாட்கள் நடத்தி முடித்த பட்டினிப் போராட்டம் தமி ழகத்தில் தமிழீழத்தில் மட்டுமல்ல, உல கெங்கும் வாழ்கிற தமிழர்கள் மத்தி யிலும் ஜனநாயகச் சிந்தனையாளர்கள் மத்தியிலும் மாபெரும் எழுச் சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈழத்தில் நடைபெறும் இனவெறிப் போரை உடனே நிறுத்து என தமிழகத்தின் பல்வேறு பிரிவு மக்களும் அரசியல் கட்சிகளும் பல் வேறு வடிவிலான போராட் டங்கள் நடத்தித் தங்கள் உணர் வுகளை வெளிப்படுத்திய பின்பும், தமிழக சட்ட மன்றமே ஒருமனதாக இரு முறை தீர்மானம் நிறை வேற்றி அனுப்பிய பின்னும், அனைத்துக் கட்சித் தலை வர்கள், நாடாளுமன்ற உறுப் பினர்கள், அதன்பின் தமிழக முதல்வரே நேரடியாக தில்லி சென்று பிரதமரைச் சந்தித்து போரை நிறுத்தச் சொல்லி கோரிய பின்பும் தில்லி எதற்கும் அசைந்து கொடுக்கா மல் தான் பாட்டுக்குத் தன் நிலையில் உறுதியாக நின்று, இலங்கை அரசுக்கு ராணுவ உதவிகள் படைப் பயிற்சிகள் தந்து, சிங்கள ராணுவம் போரைத் தொடர, ஆதரவு தந்து வந்த நிலையில், இதுபற்றி தமிழகமே பொருமி குமுறிக் கொண்டிருந்த சூழலில் தொல் திருமா நடத்திய இப்போராட்டம், வரலாற்றுச் சிறப்பு மிக்கது, மகத்தானது, மனமு வந்து பாராட்டத்தக்கது என்பதில் ஐயமில்லை.

எனில், முன் வைக்கப்பட்ட இரு கோரிக்கைகள் சார்ந்து இப்போராட் டம் அதை எந்த அளவு முன்னகர்த்திச் சென்றுள்ளது, அது எந்த அளவு வெற்றி பெற்றுள்ளது என்று பார்த்தால், கோரிக்கைகள் உடனே வெற்றி பெற முடியாவிட்டாலும் பரவாயில்லை, யாரும் ஆறுதல் அடைகிற அளவுக்குக் கூட எந்த முன் நகர்வும் இல்லாமல் போராட்டம் முடிவுற்றதே என்பதுதான் நினைப்பதற்கு மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. எந்த ஒரு நிகழ்விலும் செயல் பாட்டிலும் அது நடந்து முடிந்தபிறகு, அதன் சாதக, பாதகங்களை, விளைவு கள், எதிர் விளைவுகளை, பயன்/ பய னின்மைகளை ஆய்வு செய்து லாப நட்டக் கணக்கு பார்ப்பது நடந்து முடிந்த நிகழ்வை மதிப்பீடு செய்வதற்கு மட்டு மல்ல, இனி நடத்தப்போகும் நிகழ்வு களுக்கும் பயனுள்ளதாய் இருக்கும் என்பது பொது நோக்கு. அந்த வகை யில் இந்த நான்கு நாள்கள் பட்டினிப் போராட்டம் தொடங்கும்போது முன் வைத்த கோரிக்கையில், அப்போராட் டத்தை முடிக்கும்போதும் எந்த மாற்ற முமில்லை. அது அப்படியேதான் இருந்தது, அதாவது எந்த கோரிக்கைக் காக பட்டினிப் போராட்டம் தொடரப் பெற்றதோ, அது சார்ந்து கிஞ்சித்தும் எந்த அசைவும் பட்டினிப் போராட் டத்தை முடிக்கும் போதும் இல்லை என்பதுதான் உண்மை.

எனவே, இதற்குக் காரணம் என்ன என்று ஆராயும் நோக்கில், நடந்து முடிந்த போராட்டம் குறித்து உணர்ச்சி மயமான எண்ணங்களுக்கு இடம் தராமல் அதை அறிவுபூர்வ ஆய்வுக்கு உட்படுத்தி நடந்தேறிய நிகழ்வுகளை மதிப்பீடு செய்வதும், அதிலிருந்து படிப்பினைகள் பெறுவதும், அடுத் தடுத்த கட்ட போராட்டங்களுக்கு பயன் அளிப்பதாக இருக்குமென்று தோன்று கிறது. எந்த ஒரு போராட்டத்திலும், அப்போராட்டத்திற்கு நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்பதைப் பாகு படுத்தி பகைவர்களை முன்னிறுத்தி அவர்களை அடையாளம் காட்டு வதும், நண்பர்களை அரவணைத்து உடன் நிறுத்திக் கொள்வதும் ஓர் அடிப்படைத் தேவையாகும்.

இந்த அடிப்படையில் இச் சிக்கலை நோக்க ஈழ மக்களுக்கு எதிரிகள் யார்? நண்பர்கள்யார் ? என்று நோக்க ஈழமக்களின் முதல் எதிரி சிங்கள ராணுவம், சிங்கள அரசு. இரண்டாவது எதிரி இந்திய அரசு, இந்திய ஆட்சியாளர்கள், மூன்றாவது எதிரி தமிழக அரசு, தமிழக ஆட்சியாளர்கள். இதில் முதல் இரண்டு எதிரிகளை எல் லோரும் ஒப்புக் கொள்வர். ஆனால் மூன்றாவது எதிரி என் பதில் மட்டும் சிலருக்கு கருத்து மாறுபாடு இருக்கலாம். அப்படி உள்ளவர்கள் இப்படி சிந்தித்துப் பார்க்கட்டும்.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் ஈழ விடுதலைக்கு ஆதர வான கட்சிகள், எதிரான கட்சிகள் என்று ஒரு பட்டியல் போடுவோம். இப்படிப் போட்டால் ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க. இ.க.க முதலான பல கட்சிகள் ஆதரவுப் பட்டியலில் வரும். காங்கிரஸ் அ.தி.மு.க., இ.க.க.மா., ஆகியன எதிர்ப்புப் பட்டியலில் வரும். இவர் களும் கூட ஈழ மக்கள் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பார்கள். அது வேறு செய்தி. ஆனால், ஈழ விடுதலை ஆதரவு, போராளிகள் ஆதரவு என்கிற நிலையில் களத்தில் இறங்கி போராடுகிற கட்சிகள் என்கிற வகையில், பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க. இ.க.க முதலான வையும், ஈழ விடுதலை எதிர்ப்பு, போராளிகள் எதிர்ப்பு என்கிற நிலையில் அ.தி.மு.க., இ.க.க.மா., காங்கிரஸ் ஆகியனவும் இருந்து வருகின்றன. இது பலரும் அறிந்த உண்மை. சரி, அப்படி யானால், இதில் தி.மு.க. எந்தப் பட்டியலில் வரும்?

இதற்கு எந்தக் குழப்படிக்கும் இடம் வைக்காமல் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் நேரடியாகவே இரண்டு கேள்விகளைக் கேட்போம்.

1. நீங்கள் ஈழ விடுதலைப் போரை ஆதரிக்கிறீர்களா ? ஆம் / இல்லை.

2. நீங்கள் போராளிகளை ஆதரிக்கிறீர்களா? அவர்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரு வீர்களா ? ஆம் / இல்லை

அல்லது கேள்வியை மாற்றிப் போடுவோம்.

1. நீங்கள் ஈழ விடு தலைப் போரை எதிர்க்கிறீர் களா ? ஆம் / இல்லை

2. நீங்கள் போராளி களை எதிர்க்கிறீர்களா ? போராளிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்பட வேண்டும் என்கிறீர்களா? ஆம் / இல்லை

இந்த நான்கு கேள்வி களில் ஏதாவது ஒரு கேள்விக் காவது தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்லுவாரா? சொல்ல மாட்டார். மாறாக நேரத்துக்கு ஒரு விதமாக பசப்பு வாhத்தைகளை உதிர்த்து பிரச்சனையை சொதப்புவார் அல்லது திசை திருப்புவார்.காரணம் அவரால் சொல்ல முடியாது என்பது அல்ல, சொல்ல தன்னலம் இடம் கொடுக்காது என்பதே உண்மை.

அதாவது, சந்தர்ப்பவாத நாற் காலி அரசியல் தன் குடும்ப மற்றும் கட்சியின் ஆதிக்க நலனைப் பாது காத்துக் கொள்ள வேண்டும் என்கிற காரியவாதம் இதற்கு எந்தப் பதிலையும் நேரடியாகச் சொல்ல வைக்காது. எல்லாவற்றிலும் இரட்டை வேடம் போடும் உத்தி, ஒரு புறம் தமிழினத் தலைவர் பட்டத்தைப் பாதுகாக்கும் முயற்சியிலும், மறுபுறம் தில்லி ஆதிக்க நலன்களுக்கு சேவகம் செய்யும் நட வடிக்கைகளிலும், என இந்த இரட்டை நிலையைப் பாதுகாத்துக் கொள்ள இரட்டை வேடம் போட்டுத் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறவர், வஞ் சித்து வருபவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி.அதாவது தமிழகம் எப்போ தெல்லாம் இப்பிரச்சினையில் கொந் தளித்து எழுகிறதோ, அப்போதெல் லாம் அதைத் தணித்துத் திசை திருப்பு கிற அல்லது அந்தத் தணலை நீர்த்துப் போகச் செய்கிற காரியத்தைச் செய்து வருபவர் இவர்.

எந்தப் போராட்டக் களத்திலும், தன்னை நேரடியாக எதிரி என்று அறிவித்துக் கொண்டு வருபவர்களை நம்பி விடலாம். ஏனென்றால், அவர்கள் நேர்மையாகத் தங்களை எதிரி என்று நேரடியாக அடையாளம் காட்டிக் கொண்டு வருபவர்கள். நேரடி யுத்தத் திற்குத் தயாராக நிற்பவர்கள். ஆனால் இப்படி நேரடியாக அடை யாளம் காட்டிக் கொள்ளாமல், எதிரி என்று அறிவித்துக் கொள்ளாமல், நண்பனைப் போல நடித்து, கூட இருந்தே குழி பறிப்பவர்கள் எதிராகச் செயல் படுபவர்கள்தான் மிக மிக ஆபத்தான வர்கள். அப்படிப்பட்ட ஆபத்தை விளைவித்து வருபவர்தான் கருணாநிதி.

இப்படி உடன் இருந்துகொண்டே தில்லி உறவை, காங்கிரஸ் உறவைப் பாதுகாத்து அவற்றிடம் நற்பேறு பெற்று, அவ்வுறவின்மூலம் அடைந்து வரும் பலன்களை இழக்க விரும்பா மல், ஈழவிடுதலைக்கும், ஈழப் போராளிகளுக்கும் எதிராகச் செயல் படும் இவரை அடையாளம் காட்டா மலேயே நடந்து முடிந்தது இப் பட்டினிப் போராட்டம். அதாவது ஈழப் போராட்டத்திற்கு மூன்று எதிர்ச் சக்திகள் என்றால் அந்த மூன்று எதிர்ச் சக்திகளையும் முன் னிறுத்திப் போராடாமல் இரண்டுஎதிர்ச் சக்திகளை மட்டுமே முன்னிறுத்தி மூன்றாவது எதிர்ச் சக்தியை இடுப்பில் ஏற்றி வைத்துக் கொண்டு நடைபெற்றது இப்போராட்டம்.அதாவது தி.மு.க. நேரடி யாக போராட்டத்தில் உடன் இல்லையே தவிர, தி.மு.க.வின் பினாமிகள் போராட்டத்தில் உடன் இருந்தார்கள்.

இப்படி எதிர்ச் சக்தியை இடுப்பில் ஏற்றிக் கொண்டு போராடி னால் என்ன நடக்கும்? இடுப்பில் இருக்கும் எதிர்ச் சக்தியே நம் போராட்டத்திற்கு பெரும் தடையாகி விடும். நாம் எதிரி களைத் தாக்க முனை யும்போது இடுப்பில் இருக்கும் எதிர்ச் சக்தியே நம்மைத் தடுக்கும். நேரடி யாகத் தடுக்காவிட்டாலும் மறைமுக மாகக் கிள்ளும், முடக்கும், காலை வாரும், குழி பறிக் கும். அப்படித் தான் இப்போராட்டத்திற் கும் குழி பறித்தது தி.மு.க. ஈழச் சிக்கலில் தொடர்ந்து தி.மு.க.வின் நிலையை ஊன்றி நோக்க இது புரியும். ஏற்ற இறக்கங்களோடு கூடிய கடந்த கால நடவடிக்கைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து தற்போதைய மன்மோகன் சிங் ஆட்சிக்கு தி.மு.க. ஆதரவு அளித்து வரும் நாளிலிருந்து மட்டும் இச்சிக்கலில் தி.மு.க.வின் நிலையை நோக்குவோம். நடுவில் தி.மு.க. நடத்திய பதவி விலகல், நிதி திரட்டல் நாடகங்களை எல்லாம் விடுத்து, கடைசி கடைசியாகக் கடந்த ஆண்டு திசம்பர் 4ஆம் நாள் தமிழக முதல்வர் கருணாநிதி, பிரதமரையே நேரில் சந்தித்து போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி, அவர் பிரணாப் முகர்ஜியை அனுப்புவதாக வாக்களித்த நாளி லிருந்து மட்டும் நோக்குவோம்.

சந்தித்து விட்டு வந்து ஒரு வாரம், இரண்டு வாரம், மூன்று வாரம், நான்கு வாரம் என ஒரு மாதம் ஓடியது. நாற்பது நாள் கடந்து பொங்கலும் வந்தது. இந்த 40 நாளும் தில்லி தரப்பிலிருந்து எந்த அசைவும் இல்லைஇப்படி தில்லி எந்த அசைவும் இல்லாமல் இருக்கிறதே ஏன் என்று இவர் கேட்டாரா ? பிரணாப் முகர்ஜியை எப்போது அனுப்புவதாக உத்தேசம், ஏன் இப்படி காலதாமதம் செய்கிறீர்கள், உடனே அனுப்புங்கள் என்று வலியுறுத்தினாரா....?போகட்டும், போர் நிறுத்தம் செய்வதில் உண்மையிலேயே இவர் களுக்கு அக்கறையிருந்தால் பிரணாப் முகர்ஜி நேரில் போய்த்தான் அதை நிறைவேற்ற வேண்டுமா, ஒரு தொலை பேசி உரையாடல் மூலமே அதை நிறைவேற்ற முடியாதா? இதெல்லாம் ஈழ மக்கள் பால் ஈரம் உள்ள இரக்க சிந்தனையாளர்கள், சாதாரண பாமர மக்கள் மத்தியில் எழும் கேள்விகள்.

ஆனால், இந்தக் கேள்விகள் எது வும் தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் அரசியல் ஞானி கருணாநிதிக்கு எழவில்லையே... ஏன்? உண்மையிலேயே அவருக்கு இந்தக் கேள்விகள் எழவில்லையா அல்லது எதற்கு வம்பு, குடும்ப நலன், ஆட்சி நலனுக்கு இடையூறு என்று இக்கேள்விகள் எழாமல் பார்த்துக் கொண்டாரா? அதாவது ஈழச் சிக்கலைப் பொறுத்தவரை அதைக் கண்டுகொள் ளாமல் விட்டு விடுவது, தவிர்க்க முடியாமல் அச்சிக்கல் தன்மேல் விழுந்து பிராண்டுமானால், அப்போதைக்கு அந்தப் பிராண்டலிலிருந்து விடுபட ஏதாவது சில செயல்பாடுகளை மேற்கொண்டு, அதைத் திசைத் திருப்பி அதிலிருந்து கழன்று கொள்வது என்பதுமே கருணாநிதியின் உத்தியாக இருந்து வருகிறது. அப்படித்தான் விட்டது சனி என்று ஈழச் சிக்கலைப் புறம் தள்ளி தமிழர் திருநாள், தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் கவனத்தைத் திருப்பி, பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, பட்டுத் துண்டு முதலான புத்தாடைகள் உடுத்தி, மகிழ்ச்சியில் திளைத்து தன் குடும்பத்தினர்க்கும் கட்சிக்காரர்கள் அனுதாபிகளுக்கும் பெருமிதத்தோடு ஆசி வழங்கி ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.

இந்தச் சூழலில்தான் இந்த மகிழ்ச்சியில் இடி விழ தொல். திருமா வளவன் பட்டினிப் போராட்ட அறிவிப்பு வந்தது. அதுவும் முதலில் திருமா 14-01-09 புதன் பொங்கல் நாளிலிருந்தே இப்போராட்டத்தைத் தொடங்க உத்தேசித் திருந்ததாகவும், தை முதல் நாள் பொங்கல் நன்னாளில் தமிழகமே விழாக்கால மனோ நிலையில் இருக் கும் என்பதால் இன்று வேண்டாம், நாளை முதல் வைத்துக் கொள்ளலாம் என்று அவருக்கு நெருக்க மானவர்கள் சொன்னதால், அதன் அடிப்படையில் மறுநாள் 15-01-09 முதல் இப்போராட் டத்தைத் தொடங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

ஆக 15-01-09 அன்று போராட்டம் தொடங்குகிறது. மறுநாள் 16ஆம் தேதி முதல்வரின் அறிக்கை வருகிறது. அதா வது விட்டது சனி என்று நினைத்த பிரச்சினை மீண்டும் மேலே விழுந்து பிடுங்க ஆரம்பிக்கிறதே என்று நினைத்த முதல்வர் கருணாநிதி, அதி லிருந்து விடுபட, தன் நிலையைக் காப்பாற்றிக் கொள்ள, வழக்கமாகத் தான் கடைப்பிடிக்கும் உத்தியில் விடுத்த வழக்கமான ஓர் அறிக்கை இது. நியாயமாய் இவர் என்ன செய் திருக்க வேண்டும். உண்மையிலேயே ஈழச்சிக்கலில் இவருக்கு அக்கறை இருப்பதானால் போராட்டத்தை ஆதரித்து அறிக்கை விட்டிருக்க வேண்டும். தோழமைக் கட்சித் தலை வர்களில் ஈழ விடுதலை ஆதரவுக் கட்சிகள் அமைப்புகளின் தலைவர் களது கூட்டத்தை உடனடியாகக் கூட்டி திருமாவின் போராட்டத்தை ஆதரித்து அனைத்து அமைப்பும் போராட ஏற் பாடு செய்திருக்க வேண்டும் . தான் ஆட்சியில் இருப்பதால் தான் கலந்து கொள்ள இயலாது என்று அவர் கருது வதானால் மற்ற அமைப்புகளைப் போராட வைத்து தில்லிக்கு நிர்ப்பந்தம் கொடுத்திருக்க வேண்டும். கடந்த செப்டம்பரிலிருந்து இன்றுவரை தமிழக மக்கள் நான்கு மாதத்திற்கு மேல் பொறுமை காத்து விட்டார்கள் . இனியும் அவர்களை சாந்தப்படுத்த முடியாது.முயன்றால் கொந்தளிப்பு கள்தான் எழும். ஆகவே உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லியை வலி யுறுத்தி இருக்க வேண்டும்.இப்படிச் செய்திருந்தால் தில்லி ஓரளவாவது அசைந்து கொடுத்திருக்கும்

ஆனால் இப்படி எதுவுமே செய்ய வில்லையே இவர். மாறாக போராட்டத்தைத் தனிமைப்படுத்தித் தணிக்க அதை திசை திருப்பும் நோக்கத்தில் தானே அறிக்கை விட்டார். இது நட்புச் சக்தியின் அறிக்கையா, எதிரிச் சக்தியின் அறிக்கையா இரண்டும் இல்லை. துரோகத்தனத்தின் அறிக்கை. இன உரிமை சார்ந்த பிரச்சனையில் தமிழகம் வீறு கொண்டு எழும்போதெல்லாம் அதைத் தணியச் செய்ய முயற்சிக்கிற சூழ்ச்சியும் வஞ்சகமும் நிறைந்த அறிக்கை. 16-01-09 அன்று கொடுக்கப் பட்டு, 17-01-09 அன்று தினகரன் நாளேட் டில் வெளிவந்த அந்த அறிக்கை விவரம் அப்படியே கீழே :

ஏறத்தாழ ஐம்பது ஆண்டு காலத்துக்கு மேலாக இலங்கையில் தமிழின மக்களின் உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக தொடங்கப் பட்ட அறப்போர் செல்வா தலைமையில் நடை பெற்று பல கட்டங்களைச் சந்தித்து இன்று உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி 1956ஆம் ஆண்டு சிதம்பரத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நான் முன் மொழிந்ததும், பூவாளூர் பொன்னம்பலனார் வழி மொழிந்து நிறைவேற்றப்பட்டதுமான தீர்மானம் என்பதைக் கணக்கிடும்போது அந்த வாய்மைப் போரின் வழித்தடத்தில் நானும் நடந்து வந் திருப்பதையும் அப்படி நடக்கும்போது, வசதி வாய்ப்புகளுக்கேற்ப இலங்கைத் தமிழர்கள் அமைதியாகவும், உரிமைகளுடனும் வாழ்ந்திட என்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், அல்லது எதிர்க்கட்சியில் இருந்தாலும் பாடு பட்டிருக்கிறேன். இன்னமும் பாடுபட்டுக் கொண் டிருக்கிறேன் என்பதையும் உலகெங்கும் இருக்கிற தமிழர்கள் உணர்ந்தே இருக் கிறார்கள்.

1983இல் இந்தப் போராட்டத்தின் புரட்சிகரமான திருப்பமாகவும் தியாகத்தின் சோகச் சின்னமாகவும் அமைந்தது வெளிக்கடை சிறைச்சாலையில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொடுமையான முறையில் கொல்லப்பட்ட நிகழ்ச்சியாகும். என்னை சென்னை வந்து சந்தித்து இலங்கைப் பிரச்சினை பற்றி விரிவாக எடுத் துரைத்த செல்வா 1977இல் மறைந்த பிறகு, அவருடைய நெருங்கிய நண்பரும் சில ஆண்டு களுக்கு முன்பு 1989இல் கொல்லப்பட்ட தமிழ்ப் பெரியவருமான அமிர்தலிங்கம் மற்றும் அவர் துணைவியார் மங்கையர்க்கரசி ஆகியோர் இலங்கைப் பிரச்சினைகளை விளக்கி, அந் நாட்டில் தமிழ் மக்கள் அமைதியோடு வாழ்ந்திட இந்தியா உதவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் தூய தூதர்களாக இங்கு வந்து பெரும் பணியாற்றியபோது பிரதமர் இந்திரா காந்தி போன்றவர்களைச் சந்தித்து அவர்களின் அந்தப் பணிக்கு நானும் துணையாக இருந்து தொண்டாற்றினேன்.

இலங்கையில் தொடர்ந்து தமிழர்களுக்கு சிங்கள அரசும், சிங்களவர்களும் கொடுத்த தொல்லை, புரிந்த கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல என்ற நிலை ஏற்பட, ஏற்பட இலங்கைத் தமிழ் மக்களிடையே இப்படி உயிரோடு மெல்ல மெல்லச் சாவதைவிட ஒரேயடியாகச் சாகலாம் போரில் என்று முடிவெடுத்திடும் நிலை உருவாயிற்று. அதன் விளைவாக, இளைஞர்கள் விடு தலை இயக்கங்கள் சிலவற்றைத் தோற்று வித்தார்கள். எல்.டி.டி.ஈ. என்றும் டெலோ என்றும், இ.பி.ஆர்.எல்.எப். என்றும் ஈராஸ் என்றும் டி.யு.எல்.எப். என்றும் பிளாட் என்றும் இ.என்.டி.எல்.எப். என்றும் இன்னும் பல பெயர்களில் தோன்றிய அந்த இயக்கங்கள் ; ஆயுதம் ஏந்தி சிங்களப் படைகளையும், சிங்களக் குண்டர்களையும் எதிர்க்கும் போராட்டங்கள் தொடர்ந்து இல்லாமல் அவ்வப்போது நடை பெற்று இரு தரப்பிலும் உயிர்ப் பலிகளுடன் முடிவுற்றுக் கொண்டிருந்தன.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி நடைபெற்ற போதும், நமது ஆட்சி நடை பெற்றபோதும், அந்த இயக்கங்களையும் இயக்கங் களின் தலைவர்களையும் அறிந்தவர்களில் நானும் ஒருவன். நானும் பேராசிரியரும், கி. வீரமணியும், பழ. நெடுமாறனும் அய்யணன் அம்பலமும் இணைந்து நடத்திய மதுரை டெசோ மாநாடு 4-5-1986இல் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகவே நடத்தப்பட்டது. அந்த மாநாட்டுக்கு அகில இந்தியத் தலைவர்கள் வாஜ்பாய், என்.டி. ராமராவ், எச்.என். பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, ஜஸ்வந்த் சிங், ராச்சய்யா, சுப்பிரமணியன் சுவாமி, உன்னி கிருஷ்ணன் மற்றும் பலர் வந்திருந்து கருத்து தெரிவித்து ஆதரவு தெரிவித்தனர்.

இலங்கையில் நடைபெறும் இனப் படு கொலைக்கு முடிவு காணவும் தமிழ் மக்கள் உரிமைகளுடன் வாழவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனினும் அந்த மாநாட்டில் போராளிகள் சார்பாக கலந்து கொண்ட பல குழுக்களின் தலைவர்களிடையே ஒற்றுமை யில்லை என்பதை வாஜ்பாய் போன்றோர் உணர்ந்து வருந்தி அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள். நானும் அவர்களைத் தனியாக அமர வைத்துப் பேசி தங்களுக்குள் சகோதர யுத்தம் தவிர்ப்போம், ஒற்றுமையுடன் செயல்படு வோம் என்று கையடித்து உறுதிமொழி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டேன். உறுதிமொழி வழங்கப்பட்டதும் உண்மை. அதை யெடுத்து டெலோ இயக்கத் தலைவர் சபாரத்தினம் கொல்லப்பட்டதும் உண்மை.

சமருக்கஞ்சா சிங்கங்கள், சகல கலா வல்லவர்கள், சதிகளைச் சாய்ப்பவர்கள் என்றாலும், சகோதர யுத்தத்தைக் கைவிட ஒப்பாத காரணத் தால் ஒவ்வொரு இயக்கத் தலைவர்களும் கொலையுண்ட கொடுமை நடந்து மாபெரும் சக்தியாகப் பெருகியிருக்க வேண்டிய விடு தலைப் படை, பலவீனமுற்றது என்பதை நடுநிலையாளர்கள் மறுத்திட இயலாது. அவர்களின் சகோதர யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று வெளிப்படையாகவே நான் வேண்டுகோள், அறிக்கை வெளியிட்டும் வீணாயிற்று அந்த முயற்சிகள்.

நானும் பேராசிரியரும் இலங்கைப் பிரச்சினைக்காகவே எங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தோம். என் பிறந்த நாள் விழாவில் 3-6-1986இல் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக உண்டியல் மூலம் நன்கொடையாகக் குவிந்த இரண்டு லட்சத்து எழுபத்து ஐந்தாயிரம் ரூபாயை எல்.டி.டி.ஈ. தவிர மற்ற அமைப்புகள் என் வேண்டுகோளையேற்று நேரில் வந்து பெற்றுக் கொண்டார்கள். அதற்குப் பின்னர் இலங்கையில் அமைதிப்படை நடவடிக்கை, தமிழகம் வந்த இந்தியப் பிரதமர் இளம் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட மிகக் கொடுமையான நிகழ்ச்சி இத்தனைக்கும் பிறகு ; இன்னமும் இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உத்திரவாதம் அளிக்கும் நிலைமை உருவாகவில்லை.

தமிழகத்தில் நமது கழகமும், மற்ற கட்சிகள் சிலவும், 14-10-2008இல் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். 24-10-2008இல் மாபெரும் மனிதச் சங்கிலி நடத்தினோம். டெல்லிக்கே சென்று 4-12-2008இல் பிரதமரிடம் அனைத்துக் கட்சியினரும் முறையிட்டோம். வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு விரைவில் அனுப்பப்படுவார் என்று பிரதமர் கூறினார். பிரணாப் முகர்ஜி இலங்கை செல்லும் நாள் இன்னும் குறிக்கப்படவில்லை. அது நமக்கு ஏமாற்றமேயாகும்.

இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் டாக்டர் ராமதாசு, கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் என்னை 12-1-2009இல் சந்தித்து உடனடியாக பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றுவர ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண் டனர். நான் உடனே டெல்லியில் தொடர்பு கொண்டு பேசுவதாக உறுதி அளித்தேன். நான் அவ்வாறு சொன்னதையேற்றுக் கொண்டு மூவரும் சென்றார்கள்.

இந்த மூவர் குழுவினர் என்னைச் சந்தித்து விவாதித்தபோது நான் அவர்களிடம் எடுத்துச் சொல்லியவாறு உடனடியாக டெல்லி யுடன் தொடர்பு கொண்டு மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவை பிரதமரைச் சந்தித்து பேசுமாறு கூறி, அவரும் அவ்வாறு பேசி அதை அக்கறை யோடு கவனிப்பதாக பிரதமரும் தெரிவித்து அதைத் தொடர்ந்து மாநிலங்கள் அவைக் கழக உறுப்பினரும் என் மகளுமான கனிமொழி, சோனியா காந்தியிடமும் மத்திய அமைச்சர் வயலார் ரவியிடமும் நிலைமைகளை விளக்கிக் கூறி என்னுடைய கருத்துக்களையும் எடுத் துரைத்த நிலையில் இந்தப் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறியிருப்பது ஆறுதலை அளிக்கிறது. ஆனால் திருமாவளவன் மட்டும் தன்னிச்சையாக யாரிடமும் அறிவிக்காமல் தானே ஒரு முடி வெடுத்து இந்தப் பிரச்சினையை வலியுறுத்தி ஒரு உண்ணா நோன்பை துவங்கியுள்ளார்.

இலங்கைப் பிரச்சினையில் ஐம்பதாண்டு காலமாக என்னால் முடிந்ததையெல்லாம் செய்துவிட்டேன். இன்னும் செய்வதற்கும் தயாராக இருக்கிறேன். என்ன செய்யவேண்டும் என்பதை உங்கள் ஆலோசனைக்கே விட்டு விடுகிறேன். இதனிடையே மத்திய அரசின் வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர மேனன், இன்றைக்கு இலங்கை சென்றுள்ளதும் முக்கியமானதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, இந்தியப் பேரரசு என்ன முடி வெடுக்கிறது என்பதையும் இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைப் படுகொலைக்கு ஆளாக்குவதை நிறுத்தப் போகிறதா இல்லையா என்பதையும் அறிந்திட சில நாட்கள் பொறுத் திருப்பது தான் நலம் என்றும், நலமான முடி வுக்கு இந்தியப் பேரரசை நாம் நம்பியிருக்கலாம் என்றும் கருதுகிறேன்.

உணர்வுள்ள தமிழன் ஒவ்வொரு வரின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொள்கிற ஓர் அறிக்கை இது. நெருக் கடியான இந்த நேரத்தில் உடனடியாக என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யாமல், என்ன செய்ய இருக்கிறார் என்பதைச் சொல்லாமல், 50 ஆண்டு களாக இவர் ஈழத்திற்காகச் செய்ததை எல்லாம் சொல்லி பிரச்சினையைத் திசை திருப்பும் முயற்சியாக இப்படி ஓர் அறிக்கை விட்டார். இந்த அறிக்கையின் நோக்கம் என்ன? திருமா தன்னிச்சையாக முடி வெடுத்துவிட்டார். எனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்று காட்டிக் கொள்வது திருமாவைத் தனிமைப் படுத்துவது திருமாவின் போராட்டத் தின்பால் மக்களது கவனம் செல்லாமல் அதைத் திசைத் திருப்பி மக்களைத் தன்பால் ஈர்த்துக் கொள்ள முயல்வது இதுதானே.

இந்தப் பழைய வரலாறு பற்றியெல்லாம் இப்போது யார் கேட்டது, சகோதர யுத்தம் எல்லாம் ‘ரா’ உளவு அமைப்பு மூட்டிவிட்டது என்பது இவருக்குத் தெரியாதா? அதை யெல்லாம் இப்போது குறிப்பிடுவதன் தேவை நோக்கம் என்ன, எதையாவது சொல்லி பழியைக் கழித்துக் கொள் ளவா. பொறுமை, பொறுமை என்று இவ்வளவு காலம் பொறுத்திருந்தோமே, 14-10-08 சட்டமன்றத் தீர் மானத்திற்குப் பிறகும் 3 மாதம் பொறுத் திருந்தோமே, போதாதா... இன்னும் பொறுத்திருக்க வேண்டுமா? அதாவது பேசிப் பேசியே போதையூட்டி ஓர் இனத்தைக் காயடித்த, வார்த்தைகளையே நச்சரவ மாக்கிப் படரவிட்டு, ஓர் இனத்தின் விழிப்பைக் கொன்ற மழுங்கடித்த தலைவர் உலகத்தில் வேறு எங்காவது, யாராவது உண்டா என்றால், அது தமிழகத்தின் கருணாநிதியைத் தவிர வேறு யாரும் இல்லை என்று சொல் லலாம். அந்த அளவு தமிழக மக்கள் தங்கள் வெறுப்பை உமிழ வைக்கிற ஓர் அறிக்கை இது.

இப்படிப்பட்ட இந்த மூன்றாம் எதிரியை அடையாளம் காட்டாமலே நடந்து முடிந்தது போராட்டம். ஆனால் மேடையின் எதிரே அமர்ந்திருந்த பார்வை யாளர்கள் பலருக்கும் இந்த மூன்றாம் எதிரி யாரென்பது தெரியும். இதனால்தான் கோரிக்கையை, போராட்டத்தை ஆதரித்துப் பேச வந்தவர்களில் உணர்ச்சி வயப்பட்ட சிலர் நேரடியாகவே அந்த உண்மையை மேடையில் போட்டும் உடைத்தார்கள். ஆனாலும், அந்த உண்மை அமைப்பு ரீதியில் பலருக்கும் உணர்த்தப்படா மலேயே போராட்டம் முடிவுற்றது. இதற்குக் காரணம் இந்த மூன்றாவது எதிரியை மடியில் கட்டிக் கொண்டு போராடியதுதான்.ஆக, மூன்றாவது எதிரி யார் என அடையாளம் காட்டப் படாமலே, போராட்டம் முடிவுற்றது. இது போராட்டத்துக்கு முதல் பின்னடைவு.

அடுத்தது, தோழமைக் கட்சிகள். திருமா எந்தெந்த தோழமைக் கட்சித் தலைவர்களைக் கலந்து கொண்டு இந்த முடிவை எடுத்தார் என்பது தெரியாது. முதலில் ஈழ ஆதரவுக் கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு போராட முயற்சித்ததாகவும், வை.கோவும் இதற்கு இசைவு தெரிவித்ததாகவும், ஆனால் பா.ம.க.வும், வி.சி.க.வும் தி.மு.க.வையும் இணைத்துக் கொண்டு தான் போராட வேண்டும் என்று வலியுறுத்தியதால், வை.கோ. இதற்கு உடன்படி மறுத்து ஒதுங்கிக் கொண்ட தாகவும், இப்படி இந்த முயற்சி முறிந்த நிலையிலேயே திருமா இந்த முடிவை எடுத்ததாகவும் ஒரு செய்தி நிலவுகிறது. இதையொட்டி வெளிப்படையாய்ப் பகிர்ந்து கொள்ள முடியாத வேறு சில செய்திகளும் நிலவுகின்றன. இது எப்படியோ, ஆனால், இந்த நெருக்கடி யான தருணத்தில், திருமா எடுத்த முடிவு நல்ல முடிவு. தமிழகத்தில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தும் முடிவு. இன்னும் கொஞ்சம் முன்னேற்பாடுகளோடும் கூடுதல் திட்டமிடுதல்களோடும் இருந்து தோழமைக் கட்சி களின் ஒத்துழைப்பும் முழுமையாக இருந்திருக்குமானால் இந்தப் போராட் டம் வேறு திசை எடுத்திருக்கும். தமி ழகத்திலும் மாபெரும் கொந் தளிப்பு ஏற்பட்டிருக்கும். தில்லி அர சுக்கும் ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும்.

இந்த நம்பிக்கையிலும் எதிர் பார்ப்பிலும் தான் இந்தப் போராட்டம் தொடங்கிய நாளன்று நிகழ்த்திய ஆதரவு உரையில், நான் நான்கு செய்தி களைக் குறிப்பிட்டேன்.

1. ஈழ விடுதலைக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம் நடத்தி வரும் பல்வேறு அமைப்புகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மிகமிக முக் கியமான பாத்திரம் உண்டு. 2007ஆம் ஆண்டு இறுதியில் சுப. தமிழ்ச் செல்வன் மறைவின்போது அதற்கு இரங்கல் தெரிவிக்கக் கூட உரிமை மறுக்கப்பட்டு, ஆட்சியாளர்கள் அடக்கு முறையை ஏவியபோது அதை எதிர்த்து, கருத் துரிமைக்கு ஆதரவாக, “ஈழத்தில் நடக் கும் இனப் படுகொலையைக் கண்டிப்பதும், இனவெறிக் குப் பலியான ஈழத் தமிழர்களுக்கு இரங் கல் தெரிவிப்ப தும் இந்திய நாட் டிற்கு எதிரான குற்றமா? தேசத் துரோகமா” எனக் கேட்டு, 2008 ஆம் ஆண்டு சனவரி 25, மொழிப் போர் ஈகியர் நாளன்று சென்னை அமைந்த கரையில் எழுச்சிமிகு மாநாடு நடத்தி தமிழக மக்களுக்கு நம்பிக்கையூட்டிய கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

2. ஈழ மக்களுக்க ஆதரவாக சிறுத்தைகள் கட்சி இதுவரை இப்படி எத்தனையோ போராட்டங்கள் நடத்தி யிருந்தாலும் இப்போது தொடங்கி யிருக்கும் இந்தப் போராட்டம் ஒரு திருப்புமுனைப் போராட்டம். ஈழத் திலே விடுதலைப் புலிகள் இறுதிப் போரை நடத்தி வருவது போல, இது தமிழகத்தில் சிறுத்தைகள் தொடங்கி யிருக்கும் இறுதிப்போர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்து நடத்தும் போர். தில்லி அரசே, தமிழக மக்களாகிய நாங்கள் உன்னோடு இருக்க வேண்டும் என்று விரும்பு கிறாயா அல்லது தனியே போய் விடுங்கள் என்று சொல்கிறாயா என்று கேட்கிற இறுதிப்போர். அப்படிப் பட்டப் போரின் ஒரு தொடக்கம் இது.

3. தமிழ்நாட்டில் தமிழ் ஈழ ஆதரவுக் கட்சிகள் பல இருந்தும், அக்கட்சிகள் தனித்தனி மேடைகளில் தனித்தனிப் போராட்டங்களை மட்டுமே நடத்திக் கொண்டிருக்கிறதே யன்றி, அவையனைத்தும் ஒரே மேடை யில் ஒருமித்து ஒலிக்கவில்லையே என்கிற குறை தமிழக மக்களுக்கு உண்டு. அக்குறையைப் போக்கும் வகையில் அனைத்துத் தலைவர் களையும் ஒன்று படுத்தி இந்த ஒரே மேடையை கவனிக்க வைக்கிற இதை நோக்கி ஈர்க்க வைக்கிற ஒரு போராட் டம் இது.

4. அதோடு மட்டுமல்ல, நாடு களின் வரலாறுகள் அந்தந்த நாட் டின் தலைவர்கள் எத்தனை சட்ட மன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களோடு வாழ்ந்தார்கள் எத்தனை பேருக்கு அமைச்சர் பொறுப்புகளைப் பெற்றுத் தந்தார்கள் என்கிற நோக்கில் எழுதப் படுவதில்லை மாறாக ஒரு இனம் பாதிக்கப் படும்போது அந்த இனத் திற்காக என்ன செய்தார்கள் எப்படிப் போராடினார்கள் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன. தமிழ் நாட் டின் தற்போதைய வரலாற்று அவ லத்தை நினைக்கும் போதெல்லாம் தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு நெல்சன் மண்டேலா போல், கியூபாவுக்கு ஒரு பிடல் காஸ்ட்ரோ, செகுவேரா போல தமிழ்நாட்டிற்கு ஒரு தலைவர் இல்லையே என்கிற ஆதங்கம் பல நேரங் களில் ஏற்படுவதுண்டு. அந்த ஆதங் கத்தைப் போக்கும் வகையில் தற் போது திருமா அப்படிப்பட்ட போராட்டப்பாதையில் அடி எடுத்து வைத் துள்ளார் என்றே தெரிகிறது. இந்தப் பாதைக்கு மனமுவந்த பாராட்டுகள், வாழ்த்துகள். இந்தப் பாதையில் இவர் உறுதியோடு நின்றால் தமிழகமே இவர் பின்னால் உறுதி யோடு நிற்கும், அணி திரளும் என்பதாகக் கருத்து தெரி வித்திருந்தேன்.

அதாவது ஈழ விடுதலைப் போராட்டம் கடும் நெருக்கடிகளையும் பின்னடைவுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், பிரணாப் முகர்ஜியை அனுப்புகிறேன் என பிரதமர் வாக்குறுதி தந்து ஒரு மாதத்துக்கும் மேலாகியும் எந்த அசை வும் இல்லாமல் தில்லி அசட்டையாய்க் கிடக்க, தமிழக ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகளும் இதுபற்றி கண்டு கொள்ளாமல் இருக்க, அன்றாடம் ஈழத்திலிருந்து வரும் செய்திகள் மிகுந்த கவலையை ஏற்படுத்த, திருமாவாவது இதில் அக்கறையோடு இப்படிப்பட்ட தொரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாரே என்கிற ஆர்வத்திலும் நம்பிக்கையிலும் வெளிப்படுத்திய கருத்துகள் அவை.

தோழமைக் கட்சிகள், ஈழ விடு தலை ஆதரவு அமைப்புகள் இதற்கு உரிய முறை யில் ஒத்து ழைப்புத் தந்து, இப்போராட் டத்தை முன் னெடுத்துச் சென்றிருந்தால் இதன் திசை வழியே வேறு மாதிரியாகச் சென்றிருக்கும். ஒன்றும் வேண் டாம், யாரும் இந்த மேடையில் வந்து திருமாவோடு சேர்ந்து போராட வேண்டும், அவரோடு சேர்ந்து உண்ணா நிலையை மேற் கொள்ள வேண்டும் என்பதில்லை. தமிழகத் தலைவர்கள் எல்லாம் அவர வர்களும் தனித்தனியாக அவரவர் களுக்கு வசதியான இடத்தில் ஒரு மேடை போட்டு தில்லி அரசு போரை நிறுத்தும் வரை நாங்கள் யாரும் ஓயமாட்டோம், நாங்களும் இதே போல பட்டினிப் போராட்டம் மேற் கொள்ளுவோம் என்று ஒரு முடி வெடுத்து, ஆங்காங்கே போராடத் தொடங்கியிருந்தால் போதும். அந் தந்தக் கட்சியைச் சார்ந்தவர்களும் தமிழ் உணர்வு அமைப்புகளும் ஆங்காங்கே களத்தில் இறங்கியிருந்தால் போதும். தமிழகமே கொந்தளித்திருக்கும், தில்லி கொஞ்சமாவது அசைந்து கொடுத்திருக்கும்.

ஆனால் என்ன நடந்தது? எல்லா கட்சித் தலைவர்களும் வந்தார்கள், திருமாவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள். இக் கோரிக்கை வெல்ல தாங்கள் என்ன செய்யப் போகிறோம், தங்கள் பங்கு என்ன என்பதைச் சொல்லாமல், திருமா இப்பட்டினிப் போராட்டம் கிடந்து உடம்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது, உயிரோடு விளையாடக் கூடாது, போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். பெரும்பாலானோரின் வருகையைப் பார்த்தால் ஏதோ கல்யாணம், காது குத்தல், மஞ்சள் நீர் போன்ற நல் நிகழ்வுகளுக்கு வந்து ‘மொய்’ எழுதிவிட்டுப் போவதுபோல் வந்து சால்வை போர்த்திவிட்டுப் போனார்களே ஒழிய, அதாவது நாளை ஒரு காலத்தில் இப்படி ஒன்று நடந்ததே, வந்து பார்த்தாயா என்று ஒரு கேள்வி வந்துவிடக்கூடாதே என்பதற்காக வந்து பார்த்துவிட்டுப் போனது போல் தெரிந்ததே தவிர, யாருக்கும் பிரச்சினையின்பால் உரிய அக்கறை இருந்ததாக அதற்காகப் போராட அணியமாக இருப்பதாகத் தோள்றவில்லை.

இப்படிச் சொல்வதன்மூலம் மனிதாபிமான அடிப்படையில் வந்து போனவர்களையும் கொச்சைப்படுத்து வதாக நினைத்து விடக்கூடாது. ஒவ் வொரு கட்சிக்கும் ஒரு வேலைத் திட்டம் இருக்கலாம். திடீரென்று அவர்கள் அதை மாற்றிக் கொள்ள முடியாது. அதற்குட்பட்டே அவர்கள் செயல்பட முடியும் இப்படி இருக்க இந்த நிலையிலும் வந்து பார்த்து விட்டுப் போனார்களே என்பதற்காக பெருமைப்படுவதை, பாராட்டுவதை விட்டு, இப்படி குறை சொல்லலாமா என்றும் சிலர் நினைக்கலாம். நியாயம். எல்லாம் சரி, எல்லாவற்றையுமே ஏற்றுக்கொள்வோம்.

ஆனால், ஈழச்சிக்கல் தொடர்பாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நடை பெற்ற வெவ்வேறு கட்சிகளின் ஆலோ சனைக் கூட்டத்தில் ஒரு கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதாவது, அவ்வப்போது ஒரு ஆலோ சனைக் கூட்டம் நடத்தி, அவ்வப்போது ஒரு போராட்டம் நடத்தி பிறகு, அதை அம்போ என்று விட்டு விடுவது சரியாகாது. எனவே “ஈழ மக்கள் பாதுகாப்பு அமைப்பு”, “தமிழீழ ஆதரவு அமைப்பு” என்று ஏதாவது ஒரு பெயரில், பலரும் ஒப்புக் கொள்கிற குறைந்தபட்ச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஓர் அமைப்பை உரு வாக்கி இப்பிரச்சனைக்கென்று நிலை யாக செயல்படவேண்டும் என்று வலியுறுத்துவோம்.

ஆனால் அதை யாரும் பொருட்படுத்திக் கொள்வதில்லை. அதில் அக்கறை காட்டுவதுமில்லை. எல்லோரும் ஈழம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் யாரும் இப்படி ஓர் அமைப்பை உருவாக்குவது பற்றிப் பேசினால் இதில் ஆர்வம் காட்டமாட்டேன் என்கிறார்களே ஏன் என்று யோசிக்கும் போதுதான் ஒரு செய்தி புரிகிறது. இப்படி ஓர் அமைப்பை உருவாக்கி னால் அதன் கீழ் தொடர்ந்து இயங்க வேண்டும். செயல்பட வேண்டும் அப்படி ஒரு கடப்பாடு, நிர்ப்பந்தம் அமைப்பு வழி ஏற்பட்டுவிடும். அது கூட்டணி அரசியலுக்கு இடையூறாக இருக்கும். ஆகவே இப்படி நிலையான ஓர் அமைப்பை ஏற்படுத்தாமல் அதைத் தவிர்த்து, அப்போதைக்கப்போது தேவைக்கேற்ப, நிலைமைக்கேற்ப அந்தந்த நேரத்திற்குரிய கட்சிகளோடு சேர்ந்து ஒரு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தால் ஈழத்திற்கும் போரா டியது மாதிரி இருக்கும். கூட்டணி வடிவிலும் பாதிப்பு வராமல் இருக்கும் என்று இருந்து வருகிறார்களோ என்று எண்ணத் தோன்றும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com