Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
நவம்பர் - டிசம்பர் 2008
ஈழச்சிக்கலின் எதிர்காலம்
சேயோன்


ஈழச் சிக்கலின் எதிர்காலம் எப்படி ஆகும் என்பதை ஆராய்வதற்கு முன்னால், இச்சிக்கலோடு தொடர்புடைய சில அடிப்படைகள் பற்றிய புரிதல்களை உருவாக்கிக் கொள்வது அவசியமாகப்படுகிறது. வல்லரசு நாடுகள், பிற வலிமை குன்றிய நாடுகளை ஆக்கிரமிப்பது என்பது நான்கு முக்கிய நோக்கில் நிகழ்கிறது.

1. அந்நாடுகளின் இயற்கை கனிம வளங்களைக் கொள்ளையடிப்பது,
2. அந்நாடுகளின் மனித உழைப்பை மலிவான கூலியின் மூலம் சுரண்டுவது.
3. தன் நாட்டு உற்பத்திப் பொருளுக்கு அந்நாடுகளைச் சந்தை யாகப் பயன்படுத்துவது.
4. மேற்குறித்த மூன்று காரணங் களும் அல்லாத நிலையிலும் தங்கள் ராணுவத் தளங்களையாவது அந்நாடு களில் நிறுவுவது.
இந்நான்கு நோக்கும் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது நேரடியாக நாடுகளை வென்று அடிமைப் படுத்துவது, தன் காலனி நாடாக்குவது என்கிற முறையில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தற்போது இவை இப்படிப்பட்ட நேரடி ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நல்லுறவு, நட்புறவு, பாதுகாப்பு என்ப தன் பேரால் ஒப்பந்தங்கள் மூலம் நவீன வடிவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்திலேயே கோகோ கோலா, பெப்சி நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டின் நீர்வளம் கொள்ளையடிக்கப்படுவது, வெளிவள வணிகம் மூலம் உழைப்பை மலிவான கூலிக்குப் பெறுவது, பன்னாட்டுப் பொருட்களும் உள்நாட்டுச் சந்தையில் கொட்டி விற்கப்படுவது முதலான எடுத்துக் காட்டுகள் மூலம் இதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் இலங்கையைப் பொறுத்தவரைக்கும் இந்த முதல் மூன்று காரணங்களும் அவ்வளவு முக்கியமல்ல. இலங்கை இந்த மூன்றுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் பெற்ற நாடும் அல்ல. இலங்கையைப் பொறுத்த வரை, அது தொழில்துறை வளர்ச்சி மிக்கதோ, வேறுபல இயற்கை வளங்கள் மிக்கதோ ஆன நாடு அல்ல. அதன் முக்கிய உற்பத்தி தேங்காய், தேயிலை, ரப்பர், புகையிலை ஆகியவையும் சில வகை சலவைக் கற்களும்தான். மற்றபடி இலங்கையின் பொருளாதாரம் கணிசமான அளவு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சார்ந்ததே. இதனால் முதல் மூன்று காரணம் பற்றி வல்லரசு நாடுகள் இலங்கையின்பால் அதிகம் அக்கறை கொள்வதில்லை. மாறாக நான்காவது காரணமே வல்லரசு நாடுகளுக்கு முக்கியமாகப் படுகிறது.

இதைப் புரிந்து கொள்ள, நாம் ஏற்கெனவே பார்த்த இலங்கையின் புவியியல் இருப்பு பற்றிய சில செய்திகளை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையின் இருப்பிடம் பரந்து விரிந்த இந்துமாக் கடலின் வட பகுதியில் மிகமிக முக்கியமான இடமாகும். இலங்கையிலிருந்து மேற்கே அரபிக் கடல் அடுத்து ஆப்பிரிக்கக் கண்டம், வடமேற்கே மேற்கு ஆசிய நாடுகள், வடக்கேயும், கிழக்கே வங்காள விரி குடா, ஆசிய நாடுகளின் எண்ணற்ற தீவுக் கூட்டங்கள், அடுத்து ஆஸ்திரேலியா என மையமான இடத்திலும், உலகன் மேற்கேயிருந்து கிழக்கேயும், கிழக்கேயிருந்து மேற்கேயும் செல்லும், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துக்கு இடைப்பட்ட பாதையிலேயும் அமைந்துள்ள நாடு இலங்கை.

இதனால் வல்லரசு நாடுகள் இலங்கையைத் தங்கள் ஆதிக்க வளையத்துக்குள் வைத்துக் கொள்ளும் நோக்கில் மிக முனைப்பாக இருக்கின்றன. இதே காரணம் பற்றியே இலங்கையின்பால் இந்தியாவின் அணுகுமுறை மிகுந்த எச்சரிக்கையுடனும், தயக்கத்துடனும் இருந்து வருகிறது. இப்புரிதலில் நின்று நோக்க, ஈழச்சிக்கலில் இந்திய அரசின் ஆதிக்க நலன் சார்ந்து, இரண்டு வகையான அணுகுமுறைகளுக்கு வாய்ப்பிருக்கின்றன. ஒன்று முழுக்க முழுக்க இலங்கை அரசு ஆதரவு நிலை. இந்த ஆதரவு நிலையில் நின்று இந்திய அரசு இலங்கைக்கு உதவ முயற்சிக்கும் போது ஈழச்சிக்கலை அது தீர்க்க முயலுவது கீழ்க்கண்டுள்ளவாறு அமையும்.

அதாவது 1987 ராஜீவ் - ஜெய வர்த்தனே ஒப்பந்தத்தைக் காட்டியும், தேவைப்பட்டால் மேலும் அதில் சில திருத்தங்கள் செய்தும், எப்படியானாலும், இலங்கையின் இறையாண்மைக்கு குந்தகம் நேராமல் ஒன்றுபட்ட இலங்கைக்குள் கூடுதல் அதிகாரங்களுடன் அல்லது சுயாட்சி பெற்ற மாநிலம் என்று சொல்லி, இந்தியாவில் உள்ளது போல் ஈழத்தை இலங்கையின் ஒரு மாநிலமாக்க முயல்வது. ஆனால் இதை போராளி அமைப்பினரும், ஈழ மக்களும் ஏற்க மாட்டார்கள். இதுதான் தீர்வு என்றால் அதற்கு எப்போதோ இருபது ஆண்டுகளுக்கு முன்பேயே ஏற்றுக் கொண்டு போயிருப்போமே, இதற்கு இருபது ஆண்டுகள் போரும், எண்ணற்ற உயிரிழப்பும் ஏன்? அதற்கு அர்த்தமே இல்லையே. ஆகவே இதை ஏற்க மாட்டோம், தொடர்ந்து போராடுவோம் என்றே சொல்வார்கள்.

சிங்களரும் தமிழரும் இனி சேர்ந்தே வாழ முடியாது என்றுள்ள இன்றைய நிலையில் போராளி அமைப்பினர் மேற்கொள்ளும் இந்த நிலையைக் குறையாகவும் பார்க்க முடியாது. இப்படி ஒரு நிலை நேர்ந்தால் இந்திய அரசு இலங்கைக்குத் தொடர்ந்து உதவி, போராளிகள் அமைப்பை ஒடுக்கவுமே முயலும். இதை நியாயப் படுத்தும் நோக்கிலேயே இதற்கான பிரச்சாரங்களையும் அது கட்டவிழ்த்து விடும். இது ஒரு நிலை. சரி. இப்படியானால் தமிழகம் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்குமா என்கிற கேள்விகள் எழலாம். தமிழகம் சும்மாயிருக்காதுதான். கொந்தளித்து எழும். இப்படி எழுந்தால் இந்திய அரசு தனக்கு ஆதரவு தமிழகக் கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு இப்போராட்டங்கள் ஒடுக்க முயலலாம். அப்படி ஒடுக்க முயன்றால் தமிழகத்தில் இப்போராட்டங்கள் மேலும் வீறுபெறும். அதன் நீட்சியாக, எங்களுக்கு உதவாத இந்திய அரசோடு எங்களுக்கு ஒட்டும் வேண் டாம், உறவும் வேண்டாம், எங்களைத் தனியே விடு என்கிற குரலாகவும் அது மாறலாம். அதையொட்டிய போராட்டங்கள் முனைப்பு பெறலாம். பெற வாய்ப்புண்டு.

சரி, இந்த சிக்கல் எல்லாம் எதற்கு என்று, தமிழக மக்கள், தமிழக ஈழ ஆதரவு அரசியல் கட்சிகள் நிர்ப்பந்தம் தாங்காமல், இந்தியா, இலங்கை அரசுக்கு எதிராகப் போராளி அமைப்பு களுக்கு உதவுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது இலங்கை என்ன செய்யும்? அது, பாகிஸ்தான், சீனாவிடமிருந்து உதவி கோரும். இலங்கை சீனாவின் பக்கம் அதிகம் சாய்ந்து விடக்கூடாது என அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் முதலான நாடுகளும் இந்தப் போட்டியில் இலங் கையைத் தன் கைக்குள் வைத்துக் கொள்ள உதவிகள் செய்ய முயலும். அந்த வகையில், பிரச்சினை வேறு வடிவம் எடுக்கும்.

அதாவது ஈழச் சிக்கல் என்பது ஈழ மக்களுக்கும் சிங்கள அரசுக்குமான பிரச்சினை மட்டுமோ, அல்லது தெற்கு ஆசிய நாடுகளில் இந்தியாவின் மேலாண்மை இலங்கையுடனான அதன் அணுகுமுறை சார்ந்த பிரச்சினை மட்டுமோ அல்ல. மாறாக இது உலக நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மாற வாய்ப்புண்டு என்பதே இதன் பொருள். இப்படி மாறும்போது, வல்லரசு நாடுகளின் அச்சுறுத்தல் இந்தியாவுக்கு வரலாம். இந்தியா அதை எதிர் கொள்ளலாம். வங்கதேச விடுதலை போன்று அது சுமுகமாகவும் முடியலாம் அல்லது மோதலாகவும் மாறலாம். எனவே அது பற்றி இப் போதைக்கு எதுவும் நிச்சயமாய்ச் சொல்ல முடியாது.

இப்படிப்பட்ட சூழலில், இந்திய அரசு இப்படியும் நகர முடியாமல், அப்படியும் நகர முடியாமல் ஒரு இக்கட்டான நிலையில் சிக்கியுள்ளது என்பதே உண்மை. எனவே அது சார்ந்தே அதன் அணுகுமுறைகள் இருக்கும் என்பது கண்கூடு. எனவே, இந்த நிலையில் நாம் செய்ய வேண்டுவ தெல்லாம், தமிழக மக்கள், தமிழக அரசியல் கட்சிகளி டையில் எழுந்துள்ள ஈழ ஆதரவு உணர்வை, அந்தத் தணலை அணைய விடாமல் பாதுகாப்பதும், ஈழ மக்களின் உரிமைகளுக்காக விடாது தொடர்ந்து போராடுவதுமேயாகும். இதுவே இப்போதைய மிக மிக முக்கியத் தேவையுமாகும். எத்துணைத் துன்பங்கள் வந்தாலும் இடுக்கண்கள் நேர்ந்தாலும் விடுதலைப் போராட்டங்கள் வென்றதாகத்தான் வரலாறே அன்றி தோற்ற தாக வரலாறு கிடையாது. ஆகவே, இந்த உண்மையை உணர்ந்து நாம் நம் வரலாற்றுக் கடமையைத் தொடர்ந்து செய்வோம். வரலாறு தன் கடமையைச் செய்யும் என்கிற நம்பிக்கையோடு போராடுவோம். *

இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும்

பொதுவில் இந்திய அரசின் அயலுறவுக் கொள்கை இந்திய ஆளும் வர்க்கங்களின் நலன் சார்ந்து அமைவதானாலும், எதிர் கொள்ளும் பிரச்சினை சார்ந்தும் நடவடிக்கைகளில் அவர்களின் பிரதிநிதியாக பொறுப்பேற்கும் மனிதர்களின் தனிப்பட்ட ஆளுமை சார்ந்தும் மாறுபாடு இருப்பது இயல்பு. நேருவின் வளர்ப்பில் உருவான இந்திராவின் மனதிடம், உறுதி பங்களாதேஷ் பிரச்சினையில், பாகிஸ்தானுக்கு ஆதரவான அமெரிக்காவின் அச்சுறுத்தலையும் மீறி அவ்விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கச் செய்தது. வங்கக் கடலில் அமெரிக்க ஏழாவது கப்பற்படையின் மிரட்டலையும் தாண்டி வங்க தேச விடுதலையில் நேரடி நடவடிக்கையில் ஈடுபடச் செய்தது. பாகிஸ்தானை பலவீனப்படுத்த வங்க தேச பிரிவினையை இந்தியா விரும்பியதும் இதற்கொரு முக்கிய காரணம்.

ஆனால், அரசியலில் நாட்டமற்ற உல்லாசப் பேர்வழியாக விமானமோட்டியாக இருந்த ராஜிவ் தாயாரின் அகால மரணம் காரணமாக நிர்பந்தமாக பிரதமர் பொறுப்பேற்க நேர்ந்ததில், பிரச்சினைகளில் தெளிவின்றியும், போதிய அனுபவம் இன்றியும், அதிகாரிகளின் ஆலோசனைகளில் சரியானது எது என்பதைத் தீர்மானிக்கத் திறமை இன்றியும், உறுதியற்ற ஊசலாட்டமான மனநிலை காரணமாகவும், ஈழச்சிக்கலில் ராஜிவின் நடவடிக்கைகள் மிகவும் சொதப்பலாக அமைந்தன. இந்த சொதப்பலுக்கு ஈழ விடுதலையை இந்தியா விரும்பாததும் இலங்கையை மனம் கோணாமல் பார்த்துக் கொள்ள முயல்வதும் முக்கியப் புறக் காரணமாயிருந்தது.

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவும் பிற தமிழ் உணர்வு அமைப்புகளும்

இந்திய அரசே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு என்கிற அடிப்படை கோரிக்கைகளை முன் வைத்து, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு என்னும் அமைப்பு 20-12-90 முதல் திரு. பழ. நெடுமாறன் அவர்களைக் தலைவராகக் கொண்டு கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது எழுந்துள்ள புதிய சூழ்நிலையில் மேற்கண்டுள்ள இரு கோரிக்கைகளிலும் உடன்பாடு கொண்டோ அல்லாமலோ ஈழத்தமிழ் மக்களின்பால் அனுதாபம், அக்கறை கொண்டு அவர்களுக்கு ஆதரவு தரும் பொதுநோக்கில் இப்போது தமிழகமெங்கும் பல போராட்ட நடவடிக்கைகள் பெருகி வருகின்றன.

இப்படிப்பட்ட சக்திகளை ஒருங்கிணைத்து “ஈழ மக்கள் பாதுகாப்புக் கூட்டமைப்பு” அல்லது “ஈழ மக்கள் பாதுகாப்பு இயக்கம்” என்கிற அல்லது இது போன்ற வேறு ஏதாவது பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அதற்கு ஒரு போராட்டக் குழுவையும் தேர்ந்தெடுத்து, ஈழச் சிக்கலின் தீர்வுக்கான போராட்டத்தைத் தொடரவேண்டும் என, ஈழ ஆதரவு ஆலோசனைக் கூட்டங்களில் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம். ஆனால் யாரும் இதுகுறித்து உரிய கவனம் காட்டுவதாகத் தெரியவில்லை. இதற்குத் தடையும் கூட்டணி அரசியல்தான் என்றே தெரிகிறது.

ஆகவே இப்படி ஒரு அமைப்பை உருவாக்கி, ஈழச் சிக்கலின் தீர்வுக்காக தொடர்ந்து போராட நாம் முயலவேண்டும். அல்லாது அவ்வப்போது சில கட்சிகள் ஒன்றுகூடுவது, அவ்வப்போது சில போராட்டங்கள் நடத்துவது என்பது உதிரி நடவடிக்கைகளாகத்தான் இருக்குமேயன்றி உறுதியான உருப்படியான தொடர்ந்த போராட்ட நடவடிக்கையாக இருக்காது. எனவே, இதுபற்றியும் சிந்திக்க வேண்டும். இத்துடன், இப்படிப்பட்ட பொதுவான நடவடிக்கைகளில் பொதுவான கோரிக்கைகளின் அடிப்படையில் மக்களைத்திரட்டி ஈழ மக்களுக்கு ஆதரவான போராட்டங்களை நடத்தும் அதே வேளை மேற்கண்டுள்ள இரு கோரிக்கைகள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பிரச்சாரத்தை மேற்கொண்டு, இதுவே ஈழச் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு என்கிற வகையில், மக்களை இக்கோரிக்கைகளுக்கு ஆதரவாக அணி திரட்டவும் வேண்டும். தமிழீழ உணர்வாளர்கள் இப்பணியை நிதானத்துடனும் பொறுப்புணர்ச்சியோடும் விடாப்பிடியாக மேற்கொள்ள வேண்டும்.

பொன்சேகாவின் ஆணவமும் தில்லியின் இளப்பமும்

சமீபத்தில் தமிழகத்தலைவர்களை எள்ளி நகையாடி சிங்கள இனவெறி ராணுவத் தளபதி பொன் சேகா வெளியிட்டிருக்கும் அறிவிப்பு தமிழகத்தை கொதித்தெழச் செய்திருக்கிறது. பல இடங்களில் பொன்சேகா உருவப்பொம்மைகளும் எரிக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் வழக்கம் போல் ஒப்புக்கு சப்பாணி அறிக்கை விட்டிருக்கிறார். தில்லி எப்போதும் போல மரக்கட்டையாகவே கிடக்கிறது. இலங்கைக்கு இந்த துணிச்சல், திமிர், தில்லி இலங்கையை செல்லப்பிள்ளையாகக் கொஞ்சி அதன்அட்டூழியங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டு வைத்திருப்பதிலிருந்தே எழுகிறது என்பது அனைவரும் அறிந்த செய்தி.

இந்த நிலையில் இனியும் நாம் தில்லியை நம்பிக் கொண்டிருப்பதால் என்ன பயன். தமிழ்நாட்டுக்கென்று இறையாண்மைமிக்க ஓர் அரசு, ஒரு படை இருந்தால் இந்நேரம் இலங்கைமேல் படையெடுத்து சிங்கள இனவெறியாளர்களை அழித்து, பொன் சேகாவைக் கைது செய்து கட்டியிழுத்து வந்து தமிழகத் தெருக்களில் வெறிநாயைப்போல ஓடவிட்டுத் துரத்தி, தமிழக மக்களை விட்டு கல்லால் அடித்து தண்டிக்கலாமே என்கிற ஆவேசம் எழாதா, எழுந்தால் என்ன தவறு...?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com