Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
நவம்பர் - டிசம்பர் 2008
திராவிடத்தைத் தலைமுழுகாமல் தமிழ்த் தேசம் தலைநிமிர முடியாது – 2
சாங்கியன்

திராவிடம் என்பது சமூக அறி வியல் பூர்வமற்ற ஒரு கருத்தாக்கமாக இருந் தாலும் வரலாற்றின் தேவையை யொட்டி ஏதோ அப்போது நேர்ந்த ஒரு விபத்தாக - விபத்து என்பது அவ்வியக் கத்தின் பணிகளில் அல்ல, அவ்வியக்கத் தின் திராவிடம் சார்ந்த கருத்தாக்கம் பற்றியதே - சமாதானம் கொள்ளலாம். ஆனால் தற்போது முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையிலும், அந்தக் கருத் தாக்கத்தைக் கைவிடாமல், அல் லது அக்கருத்தாக்கத்தைக் கைவிட நேர்ந்தாலும், பெயரைக் கைவிடாமல் அப்படியே இறுக்கமாகப் பின்பற்றி வருவது ஏன் என்பதுதான் நமது கேள்வி.

பெரியார் திராவிடர் கழகம் தொடங்கினார். அதனால் அவரிலிருந்து பிரிந்து வந்தவர்கள் தி.மு.க., அ.தி. மு.க., ம.தி.மு.க., இலட்சிய தி.மு.க. என தங்கள் அமைப்பு பெயர் களில் திராவிடத்தை விடாமல் பின்பற்றிக் கொண்டு வருகிறார்கள், சரி. ஆனால் திராவிட பாரம்பரியத் திற்கு எந்த சொந்தமும் இல்லாமல் புதி தாகக் கட்சி தொடங்குபவர்கள் கூட தே.மு.தி.க. என தங்கள் கட்சியின் பெயரில் திராவிடத்தைச் சேர்த்து அதன் பெயரிலேயே தொடங்கு கிறார்களே ஏன் என்பது கேள்வியாகிறது. இப்படி யோசிக்கும் போதுதான் தமிழகத்தில் ‘திராவிட’ என்பது நல்ல அரசியல் வணிகக் குறியீடு போல் ஆக்கப்பட்டுள்ளது, அது சார்ந்து மக் களின் கருத்தியல் நன்கு கட்டமைக்கப் பட்டுள்ளது தெரிய வருகிறது.

இந்தக் கருத்தியல் கட்டமைப் பிலிருந்து விடுபடாமல் தமிழ்த் தேசிய விழிப்புணர்வு சாத்தியப் படாது, அது பொங்கி எழாது என்பதனாலேயே இக்கருத்தாக்கத்திலிருந்து மக்களை மீட்க இவற்றையெல்லாம் மறு ஆய் வுக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறதே தவிர, மற்றபடி, ‘திராவிடத்தின் பால் நமக்கு எந்தவித பகையோ வெறுப்போ எதுவுமில்லை. குறிப்பிட்ட காலங் களில், குறிப்பிட்ட சமூகத் தளங்களில், அதன் செயலாற்றலையோ பங்களிப் பையோ நாம் குறைத்து மதிப்பிடவு மில்லை. ஆகவே, அப்படிப்பட்ட உணர்வுகளுக்கெல்லாம் இடம் கொடுக்காமல், இக்கருத்துகளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளுமாறு அன் போடு கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த இதழில் ஆரிய எதிர் திரா விடர், வடமொழி எதிர் தமிழ், பார்ப் பனர் எதிர் பார்ப்பனரல்லாதார் எனும் கருத்தாக்கங்கள் பெரியாரதோ அல்லது திராவிட இயக்கங்களது கண்டு பிடிப்போ அல்ல என்பதையும், இவை மதமாற்றக் கொள்கையோடும், ஆதிக்க நோக்கோடும், இந்தியத் துணைக் கண்டத்துள் நுழைந்த ஆங்கிலேயர், தமிழ்ச் சமூகம் பற்றி ஆய்ந்ததின் விளைவே, அதையே திராவிட இயக் கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது என்பதையும் பார்த்தோம். இத்துடன் பெரியார் திராவிடர் கழகம் தொடங்கும் முன்பே “திராவிட” என்கிற பெயரில் அமைப்புகள் இயங்கி வந்ததையும் பார்த்தோம். தற்போது திராவிடர் கழகத்தின் தோற்றம் பற்றி பார்ப்போம்.

1916இல் தென்னிந்திய நல வுரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது என்பது திராவிடஇயக்க வரலாறு அறிந்த அனைவருக்கும் தெரியும். ஆனால் அது ஏன் ஆரம்பிக்கப்பட்டது, அதன் பொருளியல் பின்னணி என்பது பலருக்குத் தெரியாது. பிரித்தானிய ஆட்சியில் வளரத் தலைப்பட்டிருந்த முதலாளியத்தில் வட இந்திய ஜமீன்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தியதால், தென்னிந்திய ஜமீன் களுக்கு தங்கள் நலன் காக்க, ஆதரவுக் குரல் கொடுக்க ஓர் அமைப்பு தேவைப் பட்டது. அந்த அமைப்பே தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக வெளிப்பட்டது. பனகல் அரசரும், டாக்டர் நடேச முதலியாரும் திராவிட மன்றம் என்கிற ஓர் அமைப்பை நிறுவியிருந்தனர். பின்னர் இவர்கள் இருவரும் சர்.பி.டி.தியாக ராயர், டாக்டர் பி.எம். நாயர் மற்றும் பல ஜமீன்களோடு இணைந்து ஒரு லட்ச ரூபாய் மூலதனத்தில் - அன்று ஒரு லட்சம் என்பது இன்று பலநூறு கோடி மதிப்பு பெறும் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த அமைப்பின் தோற்றமே, ‘தமிழக நலவுரிமைச் சங்கமாக’ இல் லாமல், இந்தியாவை வட இந்தியா, தென் இந்தியா என்கிற நோக்கில் பாகுபடுத்தி, தென்இந்திய ஜமீன்களில் நலன் காக்கும் அமைப்பாக நிறுவப் பட்டது கவனிக்கத் தக்கது. இப்படிப் பட்ட பாகுபாட்டிற்கான ஒரு புறநிலை அப்போது நிலவியது இதற்குக் காரண மாக இருக்கலாம். ஆனால் அதன் தோற்றம் இப்படி ‘தென்னிந்திய’ என்கிற பெயரோடு அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ‘தென்னிந்திய’ என்பது தமிழகம், கேரளம், கன்னடம், ஆந்திரம் என்பதாக அப்போது கொள் ளப்பட்டது. என்றாலும் இதில் தமிழர் களைவிட தெலுங்கர்களும், மலையாளிகளுமே அதிகம் ஆதிக்கம் செலுத் தினர். இந்த அமைப்பின் சார்பில் மூன்று மொழிகளில் மூன்று இதழ்கள் தொடங்கப்பட்டன.
ஒன்று டி.எம். நாயரை ஆசிரியராகக் கொண்டு Justice என்னும் பெயரிலான ஒரு ஆங்கில இதழ். இந்த ஆங்கில இதழின் பெயராலேயே இது பின்னாளில் நீதிக்கட்சி (Justice Party) என அழைக்கப்பட்டது.

மற்றொன்று “ஆந்திரப் பிரகா சினி” என்னும் பெயரில் ஆர்.சி. பார்த்த சாரதியை ஆசிரியராகக் கெசாண்ட ஒரு தெலுங்கு இதழ். அடுத்தது, திராவிடன் என்கிற பெயரில் பக்தவச்சலம் பிள்ளையை ஆசிரியராகக் கொண்ட ஒரு தமிழ் நாளேடு. இதிலும், ஆந்திரர்கள் தங்களை “ஆந்திரர்” என்னும் அடையாளத்தோடு ஏட்டிற்குப் பெயர் வைக்க தமிழர்கள் மட்டும் “திராவிடர்” என்னும் அடை யாளத்தை முன்னிறுத்தித் தங்கள் தமிழ் அடையாளத்தைத் தொலைத்ததும் கவனிக்கத்தக்கது. அதே வேளை, இந்த இயக்கம், இது நடத்திய தெலுங்கு, தமிழ் பத் திரிகை எதன் பெயராலும் அறியப்படா மல், இதன் ஆங்கில இதழின் ஜஸ்டிஸ் என்ற பெயராலேயே நீதிக்கட்சி என அறியப்பட்டதும் இதன் ஆங்கில ஈடுபாடு, தாக்கம் பற்றி புரிய ஏது வாகும். இத்துடன் இங்கு வேறு சில தகவல்களையும் கவனத்தில் இருத்து வது நம்முடைய புரிதலுக்கு கூடுதல் ஏது வாகும்.

1879இல் பிறந்த பெரியார் 1904இல் அதாவது தன் 25வது வயதில் துறவு பூண்டு காசி முதலிய வடநாட்டுப் பகுதி களுக்கெல்லாம் சென்று, திரும்பி 1920இல் தன் 41வது வயதில் காந்தி யாரின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப் பட்டு காங்கிரஸ்காரராகி, காங்கிரசில் வகுப்புவாரி உரிமைக்காக 1920இல் நெல்லையில், 1921இல் தஞ்சையில், 1922இல் திருப்பூரில், 1923இல் சேலத்தில், 1924 திருவண்ணா மலையில், 1925இல் காஞ்சியில் நடை பெற்ற காங்கிரசின் மாநாட்டில் தீர் மானம் கொண்டுவர முயற்சி செய்து தோற்று அதன் பிறகே காங்கிரசை விட்டு வெளியே வந்து, 1926இல் தன் 47வது வயதில் சுயமரியாதை இயக்கம் தொடங்குகிறார். இவர் சுயமரியாதை இயக்கம் தொடங்கும் போது நீதிக் கட்சிக்கு 10 ஆண்டுகள் கடந்திருந்தது. பெரியார் இக்கட்சியோடு நெருக்க மாகப் பணியாற்றி 1944இல் தனது 65வது வயதிலேயே அதை “திராவிடர் கழகம்” என்று பெயர் மாற்றி அந்தப் புதிய பெயரில் இயங்கச் செய்கிறார்.
இதைத் ‘திராவிட’ என்னும் பெயரால் அழைப்பதற்கு பெரியார் பல்வேறு சந்தர்ப்பங்களில் சொன்ன எழுதிய காரணங்கள் வருமாறு ;

“இந்தியர் என்பதை மறுக்கிற படியாலும், இன உணர்ச்சியும் எழுச்சி யும் பெற வேண்டும் என்பதாலும், “திராவிடர்” என்கிற பெயரை மாற்றிக் கொண்டோம்” (குடியரசு 9-12-44)
“இந்தியர் என்பது தப்பு மட்டு மல்ல. வெறும் கற்பனையும் கூட” (குடியரசு 17.6.44)
“ஜப்பான் நாட்டானொருவன் மக்கள் பிறவியில் பேதம் கிடையாது என்று கூறி அத்தகைய பேதம் இருக்கும் முறைகளை மறுப்பானானால் அவனை யும் திராவிடன் என்று ஏற்றுக் கொள் ளலாம்” (திராவிட நாடு 23.11.46)
“தமிழன் என்றால் பார்ப்பனரும் தன்னைத் தமிழர் என்று கூறிக் கொண்டு நம்மோடு இணைந்து விடலாம்” (விடுதலை 15.3.48.)

இப்படிக் கூறும் பெரியார், “பிறவி பார்த்து இனப் பிரிவினை செய்யாமல் அவரவர் பழக்கம் பார்த்து இனப் பிரிவினை பிரிக்கும்படியும்” கூறுகிறார். (பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் முதல் தொகுதி, பக். 547 - 548.) அதே வேளை நான்கு மொழிகள் பேசும் பகுதிகளை இணைத்து உரு வாக்குவதாக இருந்த தட்சிணப் பிரதேச அமைப்பு குறித்தும் பெரியார் கண் டனம் தெரிவிக்கிறார். (விடுதலை 1.3.55) “தட்சிணப் பிரதேச அமைப்பு ஏற்படின் மலையாளிகளும், பார்ப்பனர் களும் எல்லா உத்தியோகங்களையும் பறித்துக் கொண்டு விடுவர்” எனக் குறிப்பிடுகிறார். (விடுதலை 11.10.55 & 14.6.56.) பின், “கேரளம், ஆந்திரம், கரு நாடகம் ஆகியவை பிரிந்த பின் தமிழ் நாடுதான் திராவிட நாடு ஆகும்” என்கிறார். (விடுதலை 25.8.56) பெரியார் வழி வந்த அண்ணாவும் “திராவிட” என்பதற்கு விளக்கம் அளிக் கிறார்.

“வருணாசிரமத்தை ஆதரிப்பவர் ஆரியர், அது கூடாது என்பவர் திரா விடர், சுதர்மம் கோருவோர் ஆரியர், சம தருமம் கோருவோர் திராவிடர். திராவிடர் என்பது ஒரு குறிச்சொல்” (திராவிட நாடு 23.11.46.) இப்படிக் கூறிய அண்ணா பெரியாரோடு கருத்து மாறுபாடு கொண்டு தனிப் பிரிந்து வந்து 1949இல் தனி அமைப்புத் தொடங்கும்போது அதற்கு “திராவிடர் முன்னேற்றக் கழகம்” எனப் பெயரிடாது “திராவிட முன்னேற்றக் கழகம்” எனப் பெயரிட் டதற்கு சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்கா தொடக்க விழாக் கூட்டத்தில் உரையாற்றும்போது, அவர் சொன்ன காரணம் : “இந்த மண்ணுக்கு நன்றியுள்ள வர்களாக நடந்துகொள்ளும் எந்த இனத்தவருமே இன்னலின்றி இன்ப வாழ்வு வாழப் பணியாற்றுவதே நம் கட்சியின் லட்சியமாக இருக்க வேண்டும். திராவிடம் முழுமைக்கும் நன்மைகள் உண்டாக நாம் பாடுபட வேண்டியிருப்பதால், “திராவிடர் முன் னேற்றக் கழகம்” என்பதைவிட “திராவிட முன்னேற்றக் கழகம்” என்று கட்சிக்குப் பெயர் இருப்பதே எல்லா வகையிலும் பொருந்தும்”. (தி.மு.க. வரலாறு தொகுப்பு சி. சிட்டிபாபு, பக். 208 - 209)

திராவிடர் கழக, திராவிட முன் னேற்றக் கழக மூலவர்களான மேற் கண்ட இருவர் கூற்றுகளையும் வரை யறைகளையும் வைத்துப் பார்க்கும் போது, சில சேதிகளைப் புரிந்து கொள்ளலாம்.

1. திராவிட என்பது ஒரு நிலப்பகுதியை அர்த்தப்படுத்துகிறதா என்றால் இல்லை.
2. அது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் நான்கு மொழி மக்களைக் கொண்ட பகுதியை அர்த்தப் படுத்துகிறது என்று கூறுவ தானால் திராவிடர் என்பதற்கு கொடுக் கும் விளக்கம் முரண்படுவதாக உள்ளது.
3. திராவிடர் எனப்படுவோர் ஆரியர் அல்லாதோர் என ஒரு விளக்கம்.
4. மக்கள் பிறவியில் பேதம் கிடையாது என்பவன் ஜப்பானி யனானாலும் அவன் திராவிடன் என்று ஒரு விளக்கம்.
5. வருணாசிரமம் கூடாது, சம தர்மம் வேண்டும் என்போர் திராவிடர்.
6. இந்தியா என்பதை மறுக்க வும், இன உணர்ச்சியும் எழுச்சியும் பெற வேண்டுவதாலும் திராவிடம்.
ஆக, இப்படிக் கூறப்படும் இந்த விளக்கங்களையும் வைத்துப் பார்த் தால், இந்த விளக்கங்கள் எதுவுமே சமூக அறிவியல் நோக்கிற்கு ஏற்புடைய தாகவோ, அதற்கு பொருத்தமுடைய தாகவோ இல்லை என்பது தெரிய வரும். அடுத்து ‘திராவிடம்’ என்பதற்கு ஒரு நிலப்பகுதி சொல்லப்படுகிறது. எதனடிப் படையில் இந்த வரையறை.

ஆரியன் அல்லாதவன் எல்லாம் வர்ணாசிரமத்தை எதிர்ப்பவனெல்லாம் திராவிடன் என்றால், வட நாட்டில், உலகின் பிற பகுதிகளில் இப்படி வாழ்பவன் எல்லாமே திராவிடன் தானே. அப்புறம் அவன் வாழும் நாடு எல்லாம் திராவிட நாடுதானே! சரி, தொடக்கத்தில்தான் ஏதோ அப்படி சொன்னார்கள். 1944இல் திராவிடர் கழகம் தொடங்கிய பெரியார் 1956 மொழி வாரி மாநிலம் பிரிந்த பிறகாவது அதைத் “தமிழர் கழகம்” என்று பெயர் மாற்றியிருக்கலா மல்லவா?
1949இல் தி.மு.க. தொடங்கிய அண்ணாவாவது மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பின் கட்சிப் பெயரைத் “தமிழக முன்னேற்றக் கழகம்” என்று பெயரை மாற்றியிருக்கலாமல்லவா.

ஏன் மாற்றவில்லை? தற்போது இவ்விரு அமைப்பின் தலைவர்களாக விளங்குபவர்களுக்கான அடைமொழி மட்டும் தமிழர் தலைவர், தமிழினத் தலைவர். அதாவது கட்சி திராவிடர் கழகம், பட்டம் தமிழர் தலைவர். கட்சி திராவிட முன்னேற்றக் கழகம், பட்டம் தமிழினத் தலைவர், சங்கத் தமிழ், முத்தமிழ் வித்தகர் இப்படி. அதாவது திராவிட என்கிற வரை யறை தொடக்கத்தில் நான்கு மாநிலங் களை உள்ளடக்கியதாகச் சொல்லப் பட்டாலும், அதன் செயல்களம் தமிழக மாகவே இருந்தது. இப்படி யிருக்க, 1956இல் தமிழகம் சட்டப் பூர்வமாக தனி மொழி வழி மாநிலம் ஆக்கப்பட்ட பின்னும் அதைத் தமிழக முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றிக் கொள் ளாமல், ‘திராவிட’ என்றே தொடர்ந்தது ஏன்? ஏன் இந்த முரண்? இது என்ன அறியாமையால் நேர்ந்ததா, இல்லை பழக்கக் கேட்டால் நேர்ந்ததா என்ப தெல்லாம் கேள்வியாகின்றன. இக்கேள்விகளுக்கான விடை என்ன என்பதை அடுத்துப் பார்ப்போம்.

தமிழர் அநீதிக்கட்சி

நீதிக்கட்சியில் தோற்ற கர்த்தாக்களில் மிக முக்கியமான இருவரும் தமிழரல்லாதோரே. டாக்டர் டி.எம். நாயர் மலையாளி. சர். பி.டி. தியாகராயர் தமிழ்நாட்டுத் தெலுங்கு செட்டியார். ஆக தமிழரல்லாதோரின் முயற்சியிலேயே, பின்னாளில் திராவிட இயக்கங்களாக உருப்பெற்ற நீதிக் கட்சியின் வேர் ஊன்றப்பட்டது.
1919 மின்டோ மார்லி சீர்திருத்தத்தின் அடிப்படையில் 1920இல் முதல் பொதுத் தேர்தல் - அதாவது சொத்துடையோருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் நீதிக்கட்சி பங்கேற்று வெற்றி பெற, அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் வெலிங்கடன் பிரபு, கட்சியின் தலைவர் சர். தியாகராயரை அழைத்து மந்திரி சபை அமைக்கக் கோர, அவர் அப்பதவியை ஏற்காமல் தெலுங்கரான ஏ. சுப்புராயலு ரெட்டியாரை முதல் அமைச்சராக பொறுப்பேற்கச் செய்தார். இதன்படி வெள்ளை ஆட்சியின்கீழ் தமிழகத்தில் நடைபெற்ற முதல் தேர்தலில் நீதிக் கட்சியின் கைங்கர்யத்தில் தமிழரல்லாத ஒருவர் தெலுங்கர் முதலமைச்சரானார். அது மட்டு மல்லாமல், இவருடன் பனகல் அரசரும், கே. வெங்கட ரெட்டி நாயுடுவும் ஆகிய தமிழர் அல்லாத இருவர் அமைச்சர் பொறுப்பேற்றார்களே தவிர, அமைச்சரவையிலும் தமிழர் எவரும் இடம் பெற வில்லை.

இந்த நிலை, தமிழகத்தின் முதல்வராக தமிழர் ஒருவர் பொறுப்பேற்காத நிலையே நீதிக்கட்சி ஆட்சியின் காலத்தில் தொடர்ந்து நீடித்தது. திரு. ஏ. சுப்பராயலு - 7.12.20 - 11.7.21, பனகல் அரசர் - 19.12.23 - 3.12.26, முனுசாமி நாயுடு - 27.10.30 - 4.11.32, பொப்பிலி அரசர் - 5.11.32 - 1.4.37
இடையில் டாக்டர் ப. சுப்பராயன் என்னும் தமிழர் மட்டும் அப்போது நிலவிய ஒரு சூழலைப் பயன்படுத்தி நீதிக் கட்சியிலிருந்து வெளியேறி சுயேச்சையாக சில காலம் தமிழக முதலமைச்சராக இருந்தார். அவருடைய ஆட்சியும் 1930இல் கவிழ்ந்தது.

தவிர, நீதிக்கட்சியின் ஆட்சியில் தாழ்த்தப் பட்டோர் தலைவர்களாக இரட்டை மலை சீனிவாசன், எம்.சி. ராஜா, என். சிவராஜ் போன்ற தலைவர்கள் இருந்தும் அவர்கள் எவரும் அமைச்சராக்கப் படவில்லை என்றும், ஆனால் அவர்கள் தீவிரமாக எதிர்த்த பார்ப்பன சமூகத்திலிருந்து என். ஆர். சேதுரத்தினம் ஐயர் என்பாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது எனவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. எம்.சி. ராஜா அமைச்சரானது 1937இல் ராஜாஜி தலைமையில் அமைந்த காங்கிரஸ் அமைச்சரவையில்தான். அதாவது நீதிக்கட்சிக் காரர்கள் பார்ப்பன எதிர்ப்பு பேசினாலும், அவர்களோடு சமரசமாக தயாராக இருந்தார்களே தவிர, தாழ்த்தப் பட்டோருக்கு உரிய உரிமை அளிக்கவில்லை. பெரியார் 1924-லேயே வைக்கம் போராட்டம் நடத்தியிருந்தாலும், நீதிக் கட்சியினர் அதற்கு தயாராக இருந்திருக்கவில்லை என்றே தெரிகிறது.

திராவிடரும் தமிழரும்

தமிழ்நாட்டில் உள்ள திராவிட இயக்கத் தலைவர்கள்தான் ‘திராவிடத்தை’ விடாப்பிடியாகப் பற்றித் தொங்கிக் கொண்டிருந்தார்களே யொழிய பிற மூன்று மொழி பேசும் மக்கள் தலைவர்கள் எவரும் திராவிடத்தைப் பேசவில்லை. அதைச் சீண்டியும் பார்க்கவில்லை. காட்டாக தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை இவர்கள் ‘ஆதி திராவிடர்’ என்றார்கள். ஆதி தமிழர் என அழைக்கவில்லை. ஆனால் ஆந்திராவில் ‘ஆதி ஆந்திரர்’ என்றே அழைத்தனர். அதேபோல சென்னையில் தொடங்கப் பெற்ற பல்கலைக் கழகத்துக்கு இங்கு நாட்டின், மொழியின் பெயரால் பெயரில்லை. ‘மெட்ராஸ் யுனிவர்சிட்டி’ என்றே பெயரிட்டனர். எனில் ஆந்திராவில் தொடங்கப்பட்ட பல்கலைக் கழகத்துக்கு அவர்கள் நாட்டின் பெயரால், ‘ஆந்திரா யுனிவர்சிட்டி’ என்று பெயரிட்டனர்.

மற்ற மாநிலங்களில் அவரவர் தேசிய இனம் சார்ந்த சிந்தனைகளுக்கு முன்னோடிகள் இருந்தார்களோ இல்லையோ, தமிழ்நாட்டில் இருந்தார்கள். தமிழனைப் பற்றி, தமிழ்நாட்டைப் பற்றிய சிந்தனை இருந்தது. அதைத் தமிழ்த் தேசியச் சிந்தனை என்று சொல்ல முடியாவிட்டாலும், தன் மொழி, தன் நாடு, தன் மக்கள் என்கிற நோக்கில் முகிழ்த்த சிந்தனை அது. அயோத்தி தாசப் பண்டிதர் ஒரு பைசா தமிழன் - தமிழன் என்கிற பெயரிலேயே பத்திரிகை நடத்தியிருக்கிறார். தமிழக தாழ்த்தப்பட்ட மக்களை ஆதி தமிழன் என்றே குறிப்பிடவேண்டும் என்றிருக்கிறார்.

ஆனால் இப்படிப்பட்ட முன்னோடிகளைக் கொண்ட தமிழகத்தில் வந்திருந்த பெரியார், 1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழக்கமிட்ட பெரியார், தமிழ், தமிழகம், தமிழ்நாடு என்பதை மறந்து அல்லது கைவிட்டு 1944இல் திராவிடர் கழகம் என்கிற பெயரில் கட்சி தொடங்கியது ஏன், திராவிடர் என்பதில் அப்படி என்ன ஈர்ப்பு என்பதெல்லாமும் கேள்வியாகின்றன.

தெலுங்கர் வடவர் ஆதிக்கம்

தமிழ்நாட்டில் ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்னும் பழமொழியைக் கொண்டு கடல் கடந்து பிற நாடுகள் சென்று வாணிபத்தில் ஈடுபட்ட சமூகப் பிரிவினர் நாட்டுக் கோட்டைச் செட்டிமார் எனப்படும் காரைக்குடி பகுதி செட்டிமார்கள். கிழக்கிந்தியக் கம்பெனி - பிரித்தானிய ஆட்சிக் காலத்திலும் இவர்கள் பர்மா, மலாய், சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் போய் வாணிபம் செய்தார்களே தவிர, உள்நாட்டில் கவனம் கொள்ளவில்லை. இதனால் உள்நாட்டில் குறிப்பாக சென்னையில் பல வகையிலும் வளர்ச்சி பெற்று வந்த அதன் வாணிபத் தேவையை தெலுங்கர்களும், மார்வாரி, குஜராத்திகளுமே ஆக்கிரமிக்கலாயினர்.
குறிப்பாக துணி வணிகம், நகை வணிகம், ஆகியவற்றில் இவர்கள் ஆதிக்கம் மிகுதியாக இருந்தது. நீதிக்கட்சியின் தெலுங்கர் ஆட்சியும் இதற்கு பெரும் வாய்ப்பாயிருந்தது. அதாவது நீதிக்கட்சியின் திராவிடக் கருத்தாக்கம் சென்னையில் தெலுங்கர்களின் வளர்ச்சிக்கு வழி கோலியது. ஆனால் அவர்களது வடவர் எதிர்ப்புக் கொள்கை சென்னையை மார்வாரி, குஜராத்திகளின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தவில்லை.

இப்படிப்பட்ட எதிரும் புதிருமான அன்றைய இரட்டை நிலையின் விளைவாக, இன்று சென்னை மாநகர், பல்துறை வணிகத்திலும் தெலுங்கர் மற்றும் மார்வாரி, குஜராத்தி சேட்டுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாக ஆகிப் போயுள்ளது. இப்படிப்பட்ட ஆதிக்கத்தின் காரணமாகவே தமிழர் தலைநகராம் சென்னையில் பெத்துநாயக்கன்பேட்டை, இராயலுப் பேட்டை, முத்தியாலுப்பேட்டை முதலிய தெலுங்கர் பேட்டைகளும், சௌகார்பேட்டை முதலிய மார்வாரிப் பேட்டைகளும் தோற்றம் பெற்றன. இத்துடன் 1920 முதல் பொதுத் தேர்தல் தொடங்கி 1937 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய நாள் வரையிலான இடைப்பட்ட நாள்களில் நீதிக்கட்சியே சென்னை மாகாண அரசியலிலும், சென்னை மாநகர அரசியலிலும் ஆதிக்கம் செலுத்த தமிழரல்லாதோரே தமிழக ஆட்சியின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தனர்.

1923 முதல் 33 வரை சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு நடைபெற்ற ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் தெலுங்கர்களே பெரும்பான்மையாக வெற்றி பெற்றனர். சென்னை மாநகராட்சி மேயர் தேர்விலும் தமிழரல்லாத தெலுங்கரே ஆதிக்கம் பெற்றனர். இதனால் மாநகராட்சி ஆணையராகவும் தெலுங்கர்களே வந்தனர். சுருக்கமாக 1920 தொடங்கி 37 வரை ஒரு 16 ஆண்டுகாலம் சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சியே அதிகாரத்தில் இருந்து, தெலுங்கர்களே அதன் வாக்கு வங்கியைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்ததன் விளைவாக, தமிழகம் தெலுங்கர் வசமாக இருந்தது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com