Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
நவம்பர் - டிசம்பர் 2008
ஈழத்தமிழர் சிக்கலும் தமிழக அரசியல் கட்சிகளும்
இரா.சம்புகன்


தமிழ்நாட்டில் திரு. பழ. நெடுமாறன் அவர்கள் தலைமையில் இயங்கும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு, அதில் அங்கம் வகிக்கும், தனித்து இயங்கும் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் ஆகியன தொடக்க முதலே ஈழ விடு தலையை ஆதரித்து அதற்காகத் தொடர்ச்சியாகப் பலப் போராட்டங் களை நடத்தி வருகின்றன. இந்த வகையில் தமிழர் தேசிய இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழ்த் தேச மார்க்சியக் கட்சி, தமிழக ஒடுக்கப் பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்த் தேச விடுதலை இயக்கம், தமிழ் தமிழர் இயக்கம், தமிழக இளைஞர் எழுச்சி இயக்கம் முதலான அமைப் புகள் தமிழீழ விடுதலையை ஆதரித்து உறுதியாக நிற்கும் கட்சிகள் எனலாம்.

இவை தமிழீழம் சார்ந்த பல் வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவ்வப் போது பல போராட்டங்களை நடத்தி வரும் போதிலும் இவை தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் அளவுக்கு வலுவான மக்கள் திரள் அமைப்பாக அல்லாது, சிறு அமைப்புகளாக இருப் பதால், இவை விழிப்புணர்வு மற்றும் தமிழீழ உணர்வு பாதுகாப்பு நடவடிக் கையாக மட்டுமே அமைகின்றனவே அன்றி, தில்லி அரசின் நிலை பாட்டில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் அளவுக்கு ஒரு திறன் மிக்க நடவடிக்கை யாக அமைய முடிய வில்லை.

இவற்றுக்கு அப்பால் தமிழக அரசியலைத் தீர்மானிக்கிற அளவுக்கு உள்ள மிகப் பெரிய மக்கள் திரள் வலுமிக்க அமைப்புள்ள கட்சிகளே இதைச் செய்ய முடியும். ஆனால் அப்படிப்பட்ட கட்சிகள் சில இதில் ஈழ விடுதலைக்கு எதிராக, இதில் தன்னல வாத நோக்குடனோ அல்லது ஈழ விடு தலையை ஆதரித்தாலும், தங்கள் கூட்டணி உறவு காரணமாக இச்சிக் கலுக்கான முனைப்பான போராட் டங்கள் நடத்தாமலோ, அல்லது அடை யாளப்பூர்வமாக ஒன்றிரண்டு போராட் டங்களை மட்டும் நடத்தியோ இச்சிக் கலில் வரம்புக் குட்பட்டே செயல்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொன்றின் நிலைபாட்டைப் பற்றியும் சுருக்கமாக ஆராய்வோம்.

அ.இ.அ.தி.மு.க. :

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்கிற சித்தாந்தத்தில் உதித்த தமிழக திராவிடப் பாரம்பரியத்திலிருந்து கிளைத்த இக்கட்சி, தன் செயல்தள மையம் தமிழகமாகவே இருந்த போதிலும், அண்டை மாநிலங்களில் உள்ள மிகச் சொற்ப அமைப்புகளை வைத்து அனைத்திந்திய அடைமொழியோடு இயங்கும் - இதன் வழி அனைத்திந்திய கருத்தாக்கத்துக்கும் தோற்றத்துக்கும் தன்னை உட்படுத்திக் கொண்டு காட்சி தரும் இக்கட்சி, எம்.ஜி.ஆருக்குப் பின் தலைமையேற்ற ஜெயலலிதாவின் தலைமையில், வெளிப்படையாகவே தமிழர் விரோத பார்ப்பனிய பனியா கும்பல்களின் ஆதரவாளனாக இயங்கி வருகிறது.

ஜெயலலிதா அரசியலின் சாரத்தை இரண்டு புள்ளிகளில் அடக்கி விடலாம். ஒன்று பார்ப்பனிய பனியா கும்பல்களின் இந்திய தேசிய இந்துத் துவ ஆதரவு. மற்றொன்று கருணாநிதி - தி.மு.க. எதிர்ப்பு. இதில் தமிழகத்துக்கும், அண்டை மாநிலங்களுக்குமான பிரச்சினைகளில், தமிழகத்துக்கும் தில்லிக்குமான உறவு களில், கருணாநிதி எதிர்ப்பு அரசியலில் நின்று, இவர் வெளியிடும் அதிரடி அறிக்கைகள், இவர் தமிழக, தமிழர் நல அக்கறையாளர் போல ஒரு தோற்றம் தரலாம். ஆனால் இது தமிழர் நல அக் கறை என்பதை விடவும் கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பதே பொருத்தம். இதில் தனிப்பட்ட அவர் குணநலன் சார்ந்த வீராப்பு, தடாலடி நடவடிக்கை களின் பாதிப்புகளும் உண்டு.

இதே வகையில்தான் ஈழச் சிக்கல் சார்ந்த அவரது அணுகுமுறை களும், அவரது அறிக்கையும், அதைத் தொடர்ந்த அவரது பேச்சுகளும். ஈழச் சிக்கலில் கருணாநிதியின் செயலற்றத் தன்மையை விமர்சித்து கருணாநிதி எதிர்ப்பு அரசியலில் நின்று அவர் ஈழ மக்கள் நலனுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை விட்டார். அது யார் எழுதிக் கொடுத்த அறிக்கையோ, அதன் பொருளை அவர் உணர்ந்தாரோ, இல்லையோ, அதில் ‘ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமையை - தன்னுரிமையை ஆதரிப்பதாகக்’ குறிப்பிட்டார். கூடவே விடுதலைப் புலிகளின் பயங்கர வாதத்தை எதிர்ப்பதாகவும் தெரி வித்தார். ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனத் தின் உரிமையை ஆதரிப்பது என்றால், அவ்வுரிமைக்காகப் போராடும் அமைப்பையும் ஆதரிப்பது என்பது தான் பொருள். காரணம் போராட் டத்தை ஆதரித்தால்தான் உரிமையைப் பெறமுடியும். ஆனால் அதைவிட்டு உரிமையை ஆதரிப்போன், போராட் டத்தை ஆதரிக்க மாட்டேன் என்பது உரிமைக்கு எதிராகவே முடியும் என்பது பாலபாடம். இது புரிந்தோ, புரியா மலோ கருணாநிதியை எதிர்க்க வேண் டும், விமர்சிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கில், இந்த அறிக்கையை விட் டார்.

ஏதோ இந்த அளவுக்காவது அவரிடமிருந்து இப்படி ஒரு அறிக்கை வந்ததே, இதன் பிறகாவது இவரது நடவடிக்கையில் ஒரு மாற்றம் வராதா, என்று உணர்வாளர்களெல்லாம் சற்று நம்பிக்கையோடு எதிர்பார்த்திருக்க அடுத்த நாளே, ‘தேச விரோத சக்திகள்’, ‘இந்திய ஒருமைப் பாட்டின் எதிர்ப் பாளர்கள்’ ‘புலிகள் ஆதரவாளர்கள்’ என்று வழக்கமான பயங்கரவாதப் பூச்சாண்டிகளை அவிழ்த்து விட்டு சிலரைக் கைது செய்யக் கோரினார்.

இந்நிலையில்,ஜெ.விடமிருந்தோ, அ.தி.மு.க.விடமிருந்தோ ஈழ மக்க ளுக்கோ, அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கோ ஆன எந்த உதவி யையும்
ஆதரவையும் எதிர்பார்க்க முடியாது. அவருடைய நோக்கமெல் லாம் கருணாநிதி எதிர்ப்பு அரசியல், இந்திய தேசியத்தின் இந்திய ஒருமைப் பாட்டின் நம்பக மிக்க சக்தி தான்தான் என்று காட்டிக் கொள்ள முயல்வது, தற் போதைக்கு தி.மு.க. காங்கிரஸ் கூட் டணிக்குள் பிளவை ஏற்படுத்தி, தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்க முயல்வது முதலான நோக்கம் கொண்டதாகவே உள்ளது என்பது வெளிப்படை.

தி.மு.க. :

இன்னமும் பெரியார், அண்ணாவின் ஒரே வாரிசாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் கருணாநிதி இயல்பில் மிச்ச சொச்சமாக இன்னமும் தமிழ், தமிழுணர்வு என்கிற பிடிப்பில் இருந்த போதிலும் அதையும் மீறி, தன் குடும்ப நலனையும், தேர்தல் அரசிய லையும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலேயே ஈழச் சிக்கலை அவர் அணுகுகிறார். அது சார்ந்த நடவடிக்கை களையும் மேற்கொள்கிறார். தில்லி ஆட்சியோடு கூட்டு வைத்து ஈழச் சிக்கலில் தொடக்க முதலே தில்லி அரசின் நிலைபாடே தன் நிலைபாடு என்று கூறி வந்தவர், ஈழத்தின் தற்போதைய நிலைமையை யொட்டி தமிழகத்தில் தன்னியல்பாக எழுந்த போராட்டங்களைப் பார்த்து, இந்த நேரம் தானும் ஈழத்துக்காக ஏதாவது செய்யாவிட்டால், எங்கே தன் ‘தமிழினத் தலைவர் பட்டம்’ பறிபோய் விடுமோ என்று அஞ்சி உடனே கடந்த 6-10-08 அன்று மயிலை மாங்கொல்லை யில் தி.மு.க. சார்பில் தன்நிலை விளக் கம் என்பதாக ஒரு கூட்டம் போட்டார்.

ஏதோ பெரிதாக அறிவிக்கப் போகிறார என்று அப் பாவிகள் பலரும் ஆவலாய் எதிர்பார்த் திருக்க, பிரதமருக்கு தந்தி கொடுக்கும் முடிவை அறிவித்தார்.
பிறகு 14-10-08 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ‘நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்’ என்கிற தீர்மானத்தை முன்மொழிந்து நிறை வேற்றி அந்நாடகத்திற்கு முகவுரை எழுதினார். பிறகு ஜெயலலிதாவும், காங் கிரஸ் காரர்களும் கூப்பாடு போட் டதைத் தொடர்ந்து, அதற்கடுத்த வாரமே ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ.வையும், தலைவர் கண்ணப்பனையும், அடுத்து திரைப்பட இயக்கு நர்கள் அமீர், சீமான் ஆகியோரையும் பிடித்து உள்ளே வைத்தார்.

இம்மாதிரி நடவடிக்கைகள் மூலம் ஈழச் சிக்கலில் இந்திய அர சையோ, இலங்கை அரசையோ ஒரு இம்மியும் நகர்த்த நிலையில், ஈழ மக்களுக்கு உணவு அனுப்புவது என்கிற முடிவை எடுத்து அதையே பெரிய சாதனை போல் காட்டி பதவி விலகல் முடிவைத் தள்ளிப் போட்டார். அடிப்படையான எந்த ஒரு பிரச்சினையையும் தன் நாற்காலி அரசியலுக்கு ஏற்பத் தொட்டுக் கொள் ளவும், உயர்த்திப் பிடிக்கவும், தாழ்த்தித் தணிக்கவுமான நடைமுறை உத்திகளில் தேர்ந்த சூழ்ச்சித் திறம் மிக்க முதல்வர் கருணாநிதியின் தி.மு.க.வைப் பொறுத்தமட்டில், தற்போது தமிழ் நாட்டை தவிப்புக்குள்ளாக்கி வரும் மின் வெட்டு, விலைவாசி உயர்வு, அகில இந்திய அளவில் பேசப்படும் பல கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சினை ஆகியவற்றிலிருந்து தமிழக மக்களின் கவனத்தைத் திசை திருப்பும், அதில் ஏதோ சாதனை நிகழ்த்தியது போன்ற தோற்றத்தைக் காட்டவு ஆன கருவி யாகவே அவர் ஈழச்சிக்கலைப் பயன் படுத்தி வருகிறார்.

இதனால் ஈழச் சிக்கல் தி.மு.க. வுக்கு ஒரு இடைக்கால நிவாரணம் போல் பயன்பட்டிருக்கிறதே யன்றி, அச்சிக்கலின் தீர்வுக்கான திசையில் உருப்படியான எந்த முன்னேற்றமும் இல்லை என்பதும், இப்படிப்பட்ட தி.மு.க.வின் நாற்காலி அரசியலிலிருந்து இதைத் தாண்டி வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது என்பதால் தி.மு.க.வாலும் ஈழச் சிக்கலின் தீர்வுக்கு எந்தப் பயனும் கிட்டாது என்பதே உண்மை. ஆக கருணாநிதியைப் பொறுத்த வரை, தனி ஈழம் கிடைத்தால் மகிழ் வார். ஆனால் அதற்காக ஒரு துரும்பும் அசைக்க மாட்டார். தேவைப்பட்டால் எதிராக வேண்டுமானால் செயல்படு வார் என்பதே தற்போதைய நிலை.

ம.தி.மு.க. :

தி.மு.க.வில் இருந்த நாளிலேயே ஈழத்திற்கு ரகசியப் பயணம் மேற்கொண்டு ஈழ விடுதலைப் போராளிகளை நேரில் சந்தித்து சர்ச்சைக் குள்ளாகி, பின் தி.மு.க.வை விட்டுப் பிரிந்து வந்து ம.தி.மு.க. தொடங்கி இயங்கி வந்த போதிலும், தமிழீழ ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக நின்று அதற்காக உள்நாட்டிலும் அயல் நாடுகளிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வை.கோ. அவர்களது தலைமையில் இயங்கும் ம.தி.மு.க. இச்சிக்கலில் உணர்வு பூர்வமான ஈடுபாடு கொண்ட கட்சியாகவே இருந்து, இதற்காகப் பல போராட்டங் களையும் நடத்தி வருகிறது. எனினும் தற்போதைய சந்தர்ப்ப வாத தேர்தல் அரசியலில், தனது அரசியல் எதிரிகளைச் சந்திக்க வேறு வழியின்றி, ஈழச் சிக்கலில் நேர் எதிர் முனையில் நிற்கும் அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி யிருப்பவர் வைகோ. இந்த நிலையில் இச்சிக்கல் சார்ந்த அவரது செயல்பாடுகளுக்கு சில வரம்புகள் உண்டு. இந்த வரம்புகளுக்கு உட்பட்டே அவர் இயங்க வேண்டி யுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் அவருக்கு கூடுதல் சிக்கலை உரு வாக்கும் நோக்கில் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார் கருணா நிதி. வை.கோவின் கைதுக்கு ஜெ. அறிக்கைதான் காரணம் என்பது வைகோவுக்கும் தெரியும். ஆனாலும் அறிக்கை விட்ட ஜெ.வை எதிர்த்து வாயைத் திறக்க முடியாமல், கைது செய்த கருணாநிதியை மட்டுமே விமர்சிக்க வேண்டிய நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார் வை.கோ. ஜெ. ஆட்சியிலும், அவருக்கு சிறை வாசம். கருணாநிதி ஆட்சியிலும் அவருக்கு சிறைவாசம். ஜெ. ஆட்சியில் கைதான வைகோவை கருணாநிதி உத்தியாகவேனும் நேரில் போய் பார்த்தார். ஆனால் அப்படி உத்தியாகக் கூட ஜெ. வை.கோவைப் போய்ப் பார்ப்பாரா என்பது சந்தேகம்.

ஆக, வை.கோ தீவிர ஈழ விடு தலை ஆதரவாளராக, அதற்காக உணர்வுபூர்வ அர்ப்பணிப்பாளராக இருந்தும், தேர்தல் கூட்டணி அரசி யலுக்கான தேவை அவரை இடம் மாற்றி நிறுத்தியிருக்கிறது. இதனால் அவரது அர்ப்பணிப்பும் உழைப்பும் வீச்சான விளைவுகளை ஏற்படுத்த இயலாமல், ஒரு வரம்புக்குள்ளேயே இருந்து கொண்டிருக்கிறது. இது குறித்து அவர் தனக்கு நெருக் கமான முன்னோடிக் கட்சித் தலைவர் களிடம் கலந்தாலோசிக்க வேண்டும். பலனுள்ள மாற்றுப் பாதையை உரு வாக்குவது குறித்து சிந்திக்க வேண்டும்.

பா.ம.க. :

புலிகள் அமைப்பை ஆதரித்தால் 7 ஆண்டுகள் சிறை என்று ஆட்சியாளர்களிடமிருந்து அச்சுறுத்தல் வந்தபோது, 7 ஆண்டுகள் என்ன, எழுபது ஆண்டுகளானாலும் சிறை செல்லத் தயார் என தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவில் உறுதியோடு நின்ற அமைப்பு பா.ம.க. தற்போதும் அந்நிலைப்பாட்டில் ஈடுபாட்டோடு இருப்பதுடன், ஈழச் சிக்கலின் தீர்வுக்கு அவ்வப்போது சில போராட்டங்கள் நடத்தி, அன்றாடம் அது சார்ந்த அறிக்கைகள் விட்டு, அரிய ஆலோசனைகளையும் வழங்கி, இச்சிக் கலில் தொடர்ந்து அக்கறையோடு செயல்பட்டு வருகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் தி.மு.க. வுடனான உறவைத் துண்டித்துக் கொண் டாலும், தில்லியில் காங்கிரசுடனான உறவைத் துண்டித்துக் கொள்ள முடியாத நெருக்கடியும், காங்கிரஸ் ஆதரவுப் போக்கும் இக்கட்சியை இச்சிக்கல் சார்ந்து ஒரு வரம்புக்கு மேல் போராட இயலாமலோ, விடாமலோ தடை போடுகிறது.
புலிகள் ஆதரவாளர்களைக் கைது செய்ய வேண்டும், சிறையில் அடைக்க வேண்டும் என்றெல்லாம் கருத்து சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிராக காங்கிரஸ்காரர்கள் அறிக்கை விடும் போதெல்லாம் அதை எதிர்த்து அறிக்கை விட முடியாமல் தடுக்கிறது.

தமிழ்நாட்டில் தனியே நின்றால் ஒரு தொகுதியிலும் கூட காப்புத் தொகையைக் கூட வாங்க முடியாது என்கிற நிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, தில்லி செல்வாக்கை வைத்துக் கொண்டு, இங்கு தமிழக கட்சிகளுக்கு வாய்ப் பூட்டு போட்டு, தமிழர்களை அச்சுறுத்தி, தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வர, பா.ம.க. அதற்கு இடம் கொடுத்து வருகிறது. இதனால் இச்சிக்கலில் அது ஒரு வரம்புக்குட் பட்டே செயல்பட்டு வருகிறது.

வி.சி.க. :

ஈழ விடுதலை ஆதர வில் உறுதியான நிலைப்பாடுள்ள கட்சி. கருத்துரிமைக்கு எதிராக அச்சுறுத்தல் வந்தபோது, கருத்துரிமை காக்க சென்னை செனாய் நகரில் எழுச்சிமிகு மாநாடு நடத்திய கட்சி. தற்போது கடந்த 23-10-08 அன்று தமிழகம் தழுவி தொடர் வண்டி மறியல் போராட்டம் நடத்தியுள்ளது. என்றாலும் இது தி.மு.க.வோடு கூட்டணி வைத்துக் கொண்டுள்ளதால், இக் கூட்டணிக்கு சிக்கல் வராமல் தி.மு.க.வின் மனம் கோணாமல், கருணாநிதி விதிக்கும் வரம்புக்குட் பட்டே இது போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. அதனால் இது ஈழ விடுதலை ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தாலும், அதற்காக முனைப்பான, தொடர்ச்சி யான பல போராட்டங்கள் நடத்தி னாலும், அவை முழுமையான தாக் கத்தை விளைவிக்க இயலாமல் போய் விடுகிறது.

தி.மு.க. ஈழப்பிரச்சினையில் இரட்டை வேடம் போட்டு தமிழர் களை, ஏமாற்றுகிற, வஞ்சிக்கிற கட்சி என்பது நன்கு தெரிந்தாலும், சுற்றிலும் நாற்காலி அரசியல்
நிலவுகிற சூழலில் தன் கட்சி நலன் காக்க, தி.மு.க. கூட் டணியில் இருந்து வருகிறது. சிறுத் தைகள் இக்கூட்டணியில் நீடிக்கிற வரை ஈழச்சிக்கலில் ஒரு குறித்த கட்டத்திற்கு மேல் இதனால் போராட முடியாத நிலையே நீடிக்கும். நடத்தும் போராட் டங்களும் தமிழக அரசுக்கு எந்த வகையிலும் சிக்கலோ இடர்ப்பாடோ ஏற்படுத்தாத வகையிலுமே அமையும்.

காங்கிரஸ் :

1967இல் தமிழக ஆட்சி பீடத்திலிருந்து இறக்கப்பட்ட பிறகு தமிழகத்திலிருந்து ஏறக்குறைய முற்றாக துடைத்தெறியப்பட்ட கட்சி காங்கிரஸ். தற்போது தமிழகத்தில் அதன் நிலை தனியாக நின்றால் ஒரு தொகுதி யில் கூட வெற்றி பெற முடியாது என்பது மட்டுமல்ல, அதன் போட்டியும் எதிர் அணி வேட்பாளர்களோடு இருக்காது. காப்புத் தொகையை மீண்டும் பெறு வதற்கான போட்டியாகவே இருக்கும் என்பதும் கண்கூடு. ஆனால் 1971 முதல் தமிழகத்தில் உள்ள திராவிடத் தேர்தல் கட்சிகள் மாற்றி மாற்றி காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து ஒன்று மாற்றி ஒன்றின் மேல் புகார் தந்து தமிழகத்தில் ஏட்டா போட்டி அரசியல் நடத்துவதில் இது காங்கிரசுக்கு வாய்ப்பாகி, இந்தப் போட்டிக் கட்சிகளில் ஏதாவது ஒன் றோடு கூட்டு வைத்து, அடுத்தவன் தோள் மீது ஏறி கூத்து பார்ப்பது என் பார்களே, அதுபோல திராவிடக் குதிரைகள் மீது ஏறி சவாரி செய்து அரசியல் நடத்தி வருகிறது.

இதனால் தமிழக மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பி விட மாட்டார்கள். அப்படித் திரும்பாத வேலையைத் தமிழகத் திராவிடக் கட்சிகளே பார்த்துக் கொள்ளும் என்கிற நம்பிக்கையிலும் தெம்பிலும்தான், இவர்கள் தமிழர் பிரச்சினைகளை பற்றி கவலைப் படாமலும், அதில் அக்கறை காட்டாமலம் இருப்பது மட்டும் அல்ல, தமிழர்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்கள். ராஜீவ் காந்தி மறைந்து 17 ஆண்டு கள் கடந்த நிலையில் அத்துடன் அவரது மனைவியும் மக்களுமே அதை மறந் திருந்தாலும், இவர்கள் ஏதோ அதில் மிக அக்கறை கொண்டவர்கள் போல அவ்வப்போது கூப்பாடு போட்டு தங்கள் ராஜ விசுவாசத்தை வெளிப் படுத்த தமிழர்களுக்கு எதிராகக் கொக்கரித்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட தமிழ் இன விரோதிகளைத் தமிழகத்திலிருந்தே விரட்டியடிக்க தமிழக மக்கள் விழிப் படைய வேண்டும். இந்த விழிப்பைத் தமிழர் நலனில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் ஏற்படுத்த வேண்டும். எதிர் வரும் எந்தத் தேர்தலிலும் காங்கிரசுக்கு வாக்களிக்காமல், மக்கள் அதைப் புறக் கணிக்க வேண்டும். அதேபோல தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சியும் காங்கிரசோடு கூட்டு வைக்காமல், அதை அம்போ என்று தனியே விட்டு தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூட இல்லை என்கிற அளவுக்கு அதை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டும்.

பா.ஜ.க. :

பா.ஜ.க. வுக்கு தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எந்த செல்வாக்கும், வாக்கு வங்கி பலமும் இல்லை யென்றாலும், அது வடக்கே பெற்றுள்ள செல்வாக்கை வைத்து, காங்கிரஸ் பாணியைப் பின்பற்றி, தமிழகத்திலுள்ள திராவிட தேர்தல் கட்சிகளோடு கூட்டு வைத்து, தில்லி அரசியலை எதிர்நோக்கி வருகிறது. இங்குள்ள திராவிடத் தேர்தல் கட்சிகளும் எப்படி மாற்றி மாற்றி காங்கிரசுக்கு ஆதரவு தந்து வந்ததோ, அதேபோல பா.ஜ.க.வுக்கும் காவடி தூக்கின. அ.இ.அ.தி.மு.க. ஒரு முறை யும், தி.மு.க. ஒரு முறையும் ஆதரவு தந்து தமிழகத்தில் அது காலூன்ற வழி திறந்து விட்டன. வாஜ்பாயி, அத்வானி என்ப தெல்லாம் ஏதோ ஆயுர்வேத வாத சூரண லேகியம் போலும் என்று கருதி யிருந்த தமிழக மக்கள் மத்தியில், அப் பெயர் களையும் தலைவர்களையும் அறிமும் செய்து அவர்களைத் தமிழகத் தில் வளர்த்து விட்டவர்கள் இவர்கள்.

இப்போதும் தனித்து நின்றால் ஒரு தொகுதியிலும் தேற முடியாத இவர்கள், யார் அகப்படுவார்கள் கூட்டு வைக் கலாம் என்றே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத் தில் ஈழ மக்களுக்கு இரக்கப்படுவது போல் காட்டினாலும், இந்திய ஆதிக்க சக்தி களின், காங்கிரசின் கொள்கை எதுவோ, அதேதான் ஈழப் பிரச்சினை யில் பா.ஜ.க.வின் நிலையும். சிக்கலின் அணுகுமுறையில், சிக்கல் சார்ந்த மதிப்பீடுகளில் காங்கி ரசுக்கும் இதற்கும் சற்றே மாறுபாடு களோ, ஏற்ற இறக்கங்களோ இருக் கலாம். ஆனால் சாரத்தில் காங்கிரசின் நிலையேதான் பா.ஜ.க.வுக்கும். ஆகவே, காங்கிரசை எதிர்ப்பது போலவே, பா.ஜ.க.வையும் எதிர்த்து நின்று, பா.ஜ.க.வுக்கு யாரும் வாக் களிக்காமல் இருக்கவேண்டும் என்ப தோடு, பா.ஜ.க.வோடு எந்தக் கட்சியும் கூட்டு வைக்காமலும் அக்கட்சியைப் புறக்கணிக்க வேண்டும்.

இ.க.க. (சி.பி.ஐ.) :

தமிழ் நாட்டில் செயல்பட்டு வரும் அகில இந்திய கட்சிகளில் முக்கியமான காங்கிரஸ் - பா.ஜ.க. இரண்டையும் ஒதுக்கினால் பிறகு இருப்பது இ.க.க. மற்றும் இ.க.க.மா. ஆகிய இரு இடதுசாரி கட்சிகள்தான். இதுவரை இவ்விரண்டு கட்சி களையும் இடதுசாரி கட்சிகள் என்றே பொத்தாம் பொதுவாகக் குறிப்பிட்டு விமர்சித்து வந்தது. ஆனால் தற்போது நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இரண் டையும் தனித் தனியே பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. நீண்ட காலமாய் ஈழச் சிக்கலில் குறிப்பிட்ட எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளாது, சொல்லப் போனால் தமிழீழக் கருத்தாக்கத்திற்கே எதிராய் நின்ற இக்கட்சிகளில் இ.க.க. தனது ஹைதராபாத் அகில இந்திய மாநாட் டுக்குப் பின் இச்சிக்கலில் கவனம் செலுத்தி அக்கறை காட்டத் தொடங்கியுள்ளது.

இச்சிக்கலின் முக்கியத்துவத்தை உணர்ந்து அம்மாநாட்டில் இதற்காகத் தீர்மானம் நிறைவேற்றியதுடன் கடந்த 02-10-2008 அன்று காந்தி பிறந்த நாளில் தமிழகம் தழுவி மாநகராட்சி மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் ஒரு நாள் பட்டினிப் போராட்டம் நடத்தியுள்ளனர். அதன்பின் 14-10-08 அனைத்துக் கட்சிக் கூட்டம், 25-10-08 மனித சங்கிலி ஆகியவற்றில் கலந்து கொண்டு தொடர்ந்து இதற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருவதுடன், கம்யூனிஸ்டு கள் ஒரு பிரச்சினையை அவசரப்பட்டு கையிலெடுக்க மாட்டார்கள், எடுத்தால் விட மாட்டார்கள் என்கிற பொது இலக் கணத்துக்கு ஒப்ப, இதன் தமிழகச் செயலர் தா. பாண்டியன், கருணாநிதியையும், மத்திய அரசையும் இவர்களின் கபட நாடகத்தையும் விமர்சித்து, அன்றாடம் அறிக்கைகளில் சாடிவும், துணைச் செயலாளரும் தாமரை ஆசிரியருமான மகேந்திரன் தினமணியில் நடுப்பக்க கட்டுரைகள் எழுதியும், இப்பிரச்சினையில் தங்கள் உயிர்ப்பான ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இத்துடன் 14-11-08 அன்று தங்கள் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற அமைப்பின் சார்பில் பல்வேறு மாநிலங் களிலும் உள்ள மாணவர்களைத் திரட்டி குறைந்தது 25,000 மாணவர்களுக்குக் குறையாத எண்ணிக்கை கொண்ட ஒரு பேரணியும் நடத்தி ஈழச் சிக்கலில் ஆட்சியாளர்கள் கவனத்தை ஈர்த்து தில்லியைக் குலுங்க வைத்திருக்கிறார்கள். இவர்களது இந்த முயற்சியை அதாவது, அகில இந்திய கவனத்தை ஈர்க்கும் வகையிலான இந்த ஏற் பாட்டை தமிழ் இன உணர்வாளர்கள், தமிழ்த் தேசியச் சிந்தனையாளர்கள், சனநாயக சமத்துவ நோக்கம் கொண்ட மனித நேய ஆர்வலர்கள் அத்தனை பேரும் நெஞ்சாரப் பாராட்டி வர வேற்று, கோரிக்கை வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

இ.க.க.மா. :

மார்க்சியத்தின் புனிதம் காக்க புறப்பட்டிருக்கும் பரிசுத்த ஆவிகள் போலவோ அல்லது மார்க்சியத்தை மாசுபாடு களிலிருந்து மீட்கும் மகான்கள் போலவோ, அரிதாரம் தரித்து, மார்க்சியத்தைத் தங்கள் வசதிக்கு வியாக்யானப்படுத்தும் இ.க.க.மாவினர் ஈழச் சிக்கலுக்கு எந்த நாளிலும் எந்தப் போராட்டமும் நடத்தியவர்கள் இல்லை. 02-10-2008 அன்று இ.க.க. நடத்திய பட்டினிப் போராட்டத்திலும் இவர்கள் தோழர்களோடு வந்து கலந்து கொள்ள வில்லை. பேச்சாளர்களாக இரண் டொருவர் மட்டுமே வந்து கலந்து கொண்டு, ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த மட்டில்’ ‘மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில்’ என கிளிப்பிள்ளை போல தன் கட்சி நிலைப்பாட்டைச் சொல்லும் மேடையாக மட்டுமே அதைப் பயன்படுத்திக் கொண்டு விருந்தாளி வந்தவர்கள் போல் உடனே அடுத்த கூட்டத்துக்குப் போய் அடுத்த நிலைப்பாட்டைச் சொல்ல கலைந்து சென்றனர்.

எந்த நாளிலும் ஈழ விடுதலையை ஆதரித்தவர்களில்லை இவர்கள். அது வேண்டாம் என்று புத்தகம் போட்ட வர்கள். இப்போதும் அதையே பேசி வருபவர்கள். ஆகவே இவர்களால் ஈழ மக்க ளுக்கு எந்தப் பயனும் விளையாது என்பது மட்டுமல்ல இவர்களால் பாதகம் நேராமல் பார்த்துக் கொண் டால் போதும்.

இதர கட்சிகள் :

மேலே குறிப்பிட்ட கட்சிகள் தவிர, தற்போது புதிதாக சில கட்சிகள் தோன்றியுள்ளன. ஏற்கெனவே சில கட்சிகளும் இயங்கி வருகின்றன. புதிதாகக் தோன்றிய கட்சிகள் ஈழச் சிக்கலில் தங்கள் நிலைபாடு என்ன என்று யாரும் எதுவும் தெளிவாகச் சொல்லவில்லை. பொதுவான மனிதா பிமான அடிப்படையில் அதை ஆதரிப் பதாகச் சொன்னாலும், ஈழச் சிக்கல் புரிந்தோ, அல்லது அதன்பால் உள்ள அக்கறையினாலோ அதை ஆதரிப் பதாகச் சொல்ல முடியாது.
மாறாக, ஆளும் கட்சிகள் மற்றும் பிற கட்சிகளை விமர்சிப்பதற்கும், எதிர்ப் பதற்கும், அக்கட்சிகளை அம் பலப்படுத்துவதற்கும் இது ஒரு நல்ல கருவியாகப் பயன்படுகிறது என்கிற மட்டத்திலேயே இப்பிரச்சினையை அவர்கள் பேசி வருவதாகத் தெரிகிறது.

உண்மையிலேயே அவர்களுக்கு இச் சிக்கலில் அக்கறையிருக்குமானால், அவர்கள் தங்கள் கட்சி சார்பில் தனி யாகவேனும் இதற்காக ஏதும் போராட் டம் நடத்தியிருக்க வேண்டும். அப்படி ஏதும் நடத்தாமல், நாட்டில் பேசுகிற பிரச்சினைக்கு கூடுதலாய் ஒன்று வாய்த்தாற் போல் இதையும் பயன் படுத்தி வருகிறார்கள் என்பதைத் தவிர வேறு குறிப்பாக ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. இப்புதிய இயக்கங்களுக்கு முன் பிருந்தே செயல்பட்டு வரும் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி. ராஜேந்தர் மட்டும் தி.மு.க. அரசு அளித்த பதவியையும் உதறி வெளிவந்து, ஈழ விடுதலை ஆதரவில் உறுதியாகக் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிற அமைப்புகள் :

ஈழத்தில் அன்றாடம் நடைபெற்று வரும் தமிழினப் படுகொலையைக் கண்டித்து தமிழகத்தில் தன்னெழுச்சியாக பல் வேறு மக்கள் பிரிவினரும் இயல்பாக நாள்தோறும் பல போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். வழக்கறிஞர்கள், மாணவர்கள், வணிகர்கள், வாகன ஓட்டுநர்கள், பிற உணர்வாளர்கள், அரவாணிகள் உள் ளிட்டு அனைத்துப் பிரிவு மக்களும் ஈழ மக்களுக்காகப் போராடி வருகின்றனர். இதில் இந்த முறை திரைப்படக் கலைஞர்களின் போராட்டங்கள் மிகவும் பாராட்டத்தக்க வகையில் நடைபெற் றுள்ளன.

தமிழகத்தின் காவிரி நீர் உரிமை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட உரிமை இவற்றுக்கெல்லாம் ஏற் கெனவே குரல் கொடுத்த திரைப்படக் கலைஞர்கள், இந்த முறை இயக்குநர் கள் சங்கம், நடிகர்கள் சங்கம், திரைத் துறை ஊழியர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் என பல்வேறு அணிகளாக ஈழ மக்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து, பல போராட்டங்கள் நடத்தி யிருக்கிறார்கள். விஜய் ரசிகர் மன்றம் தனியே ஒரு நாள் பட்டினிப் போராட்டத்தையும் நடத்தியுள்ளது.

பொது :

ஆக அகில இந்திய முதலாளியக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் ஈழ விடுதலை ஆதரவுக்கு எதிரான கட்சிகள். இக்கட்சிகளால் ஈழச் சிக்கலுக்கு எந்த தீர்வும் கிட்டப் போவதில்லை. அதேபோலவே அகில இந்திய இடதுசாரி கட்சியான இ.க.க.மா.வும். இதுவும் ஈழ விடு தலைக்கு எதிரான கட்சியே. இத னாலும் ஈழச் சிக்கலுக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை. ஆனால் பயன் விளைந்தால் பங்குக்கு வரும் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்ட கட்சி இது.
இதற்கு அப்பால் தமிழகக் கட்சிகளை எடுத்துக் கொண்டால், அ.தி.மு.க., தி.மு.க.வை குறித்து ஏற் கெனவே பார்த்தோம். எனவே, இந்தக் கட்சிகளை நீக்கிப் பார்த்தால், இருப் பவை ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., இ.க.க., இவற்றுடன் திராவிட மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தாம். இந்தக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்றால் போதும், ஈழச் சிக்கலுக்கு எப்போதோ ஒரு தீர்வைக் கண்டிருக்க முடியும்.

ஆனால், தமிழகத்தின் கெடு வாய்ப்பு இக்கட்சிகள் பொருத்த மற்ற கூட்டணிப் பொறியில் சிக்கியுள்ள சூழல், ஈழ விடுதலைக்காக முழு மூச் சுடன் போராட முடியாமல் தடுக்கிறது. என்றாலும் இருக்கிற வாய்ப் பைப் பயன்படுத்தி எந்த அளவுக்கு இச்சக்தி களுக்கிடையேயான ஒற்று மையை உருவாக்கி, ஒன்றுபட்டு போராட முனைகிறோமோ அந்த அளவுக்கு இச்சிக்கலின் தீர்வு சார்ந்து சில வெற்றிகளைப் பெறலாம். பெற முடியும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com