Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
நவம்பர் - டிசம்பர் 2008
நாடகம்
வலியும் பலியும்
அஸ்வகோஷ்


மேடை இருண்டு இருக்கிறது. இருளில் மரண ஓலங்களும், அவலக்குரல்களும் குழந்தை பெண்களின் கதறல்களும் கேட்கிறது.

குரல்கள் : ஐயோ, அம்மா... (பெண்குரல்)
குழந்தை வீறிடுகிறது.

ஐயா அநியாயமா இப்படிக் கொல்றானே.
பச்சப் புள்ளைங்கன்னு கூடம் பார்க்காம இப்படி பதைக்கப் பதைக்க அதுங்கள சாவடிக்கறானே.
ஐயா என்ன உட்டுடு. என்ன உட்டுடு...
அடப்பாவி... என்ன ஒண்ணும் பண்ணாத, உட்டுட்றா.... உட்டுட்றா....

இப்பின்னணிக்குரல்களின் வார்த்தைகளை அந்தந்த இடம் சூழலுக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் பீதி, அச்சம், கலவரம் இவற்றை ஏற்படுத்தி நெஞ்சை உருக்குவதாக இக்குரல்களின் வாக்கியங்களை விடவும் ஓசை அமையவேண்டும். மேடையில் மெல்ல ஒளி பரவுகிறது. இரு உருவங்கள் தோன்றி மேடையின் பின்புறம் கையைக் காட்டி மாற்றி மாற்றிப் பேசுகின்றன.

கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, சித்ரவதை, தீவைப்பு, குண்டு வீச்சு, உயிர்வதை, மரண ஓலம்... முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதே சத்தம்....
நமக்குப் பக்கத்துல, நமக்கு கூப்பிடுற தூரத்துல, நம் மொழி பேசுகிற, நம் சகோதர மக்களுடைய சத்தம், அழுகை, கதறல், கூக்குரல்... உலகத்துல எங்கெங்கெல்லாமோ இது மாதிரி சத்தம் கேட்டது, நாம் கேட்டறியாத நாடுகள்ல, நமது கண்ணுக்குத் தெரிஞ்ச வரலாற்றுல... எத்தனையோ நாடுகள்ல இதே சத்தம் கேட்டது.

அப்பல்லாம் நாம அவங்களுக்கு ஓடோடி உதவணும். அவங்க உரிமைகளுக்கு குரல் கொடுத்தோம். அவங்க போராட்டத்த ஆதரிச்சோம். ஆனா இப்ப... நம்ம சகோதர மக்கள் போராட்டத்த நாம ஆதரிக்க முடியல.. நாம அவங்களுக்கு உதவி முடியல... அவங்க துயரத்துல பங்கெடுத்து கண்ணீர் சிந்தவோ, அனுதாபம் தெரிவிக்கவோ கூட நமக்கு அனுமதியில்ல. எல்லாத்துக்கும் தட, தட, ஊருக்கெல்லாம் உதவன நமக்கு நம்ப உடன் பிறப்புகளுக்கு உதவ தட...
- இந்தக் கொடும இப்படியே தொடர்ந்தா இதுக்கு முடிவு...
- முடிவு .....

பின்புறம் மீண்டும் அவலக்குரல்கள் கேட்கின்றன. இருவரும் அந்தக் குரல்களால் பாதிப்புற்று மேலும் கவலையுருகின்றனர். ஐயோ. இந்தக் கொடுமை தாங்கலியே...- இந்த ஓலங்கள கேட்க முடியலியே... இதுக்கு என்னா செய்யறது... வா. நம்ப மன்னர்கிட்ட போய் முறையிடுவோம். மன்னர் கிட்டயா
அதாம்பா நம்ம இனமான மன்னர் - நம் இனத்தின் ஒப்பற்ற தலைவர்.

ஓ அவரியா... சற்று தயங்கி சரி, வா. பாப்பம்.
இருவரும் மேடையை ஒரு வட்டமடித்து நடத்து வருகின்றனர். மேடையில் மேல்புறம் வாயிற்காவலர் நிற்கிறார்.

காவலர் : யாருயா நீங்க.

நபர் 1 : மன்னரப் பாக்கணும்.

காவலர் : என்னா தேதி?

நபர் 2 : பக்கத்து நாட்டுல நம்ப இன மக்களக் கொல்றாங்க. அது தொடர்பாக அவருகிட்ட மொறையிடணும்.

நபர் 1 : அந்தப் படுகொலைய தடுத்து நிறுத்தச் சொல்லிக் கேக்கணும்.

காவலர் : மன்னருக்கு ஏற்கெனவே ஏகப்பட்ட பிரச்சினை. மன்னருக்கு வயசாயிட்டதால, அடுத்த வாரிசு யாருன்னும் இருக்கிற சொத்து, பதவிகளப் பிரிச்சு குடுக்கச் சொல்லியும், குடும்பத்துல ஏகப்பட்ட தகராறு. இதோட இளவரசர்களுக் குள்ளாற ஏரியா தகராறு வேறு. இதுல இந்தப் பிரச்சியை எங்க காதுல வாங்கப் போறாரு. சரி எதுக்கும் சொல்லிப் பாக்கறேன்.

மன்னர் வருகிறார். கூடவே காவலன் நாற்காலியோடு வருகிறான். காவலன் நாற்காலி போட மன்னர் அமர்கிறார். இருவரும் வணக்கம் சொல்கின்றனர். மன்னரும் ஐந்து விரல்களையும் விரித்துக் காட்டி பதிலுக்கு வணக்கம் சொல்கிறார்.

மன்னர் : என்ன சேதி ?

நர் 1 : நம்ப பக்கத்து நாட்டுல - நம்ப சகோதர மக்கள அங்க உள்ள இனவெறி அரசு கொன்று குவிக்குது, மன்னா...

மன்னர் : ஆமாம். அது அன்றாட செய்திதானே...
(நபர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர்.)

நபர் 2 : அதுல நீங்க தலையிடணும்.
நபர் 1 : அதை நீங்க தடுத்து நிறுத்தணும்.

மன்னர் : இந்தப் பிரச்சினையில் நமக்கென்று தனியாக எந்த நிலைப்பாடும் கிடையாது. இதில் சக்ரவர்த்தியின் நிலைப்பாடு என்னவோ, அதுவே நம் நிலைப்பாடும்.

நபர் 1 : சக்ரவர்த்தியா....

மன்னர் : ஆம். நம்மைப் போன்ற மன்னர்களுக்கெல்லாம் மன்னராக மேலே இருந்து ஆண்டு கொண்டிருக் கிறாரே அந்தச் சக்ரவர்த்தி....

நபர் 2 : அவருக்கு என்னங்க தெரியும் இந்தப் பிரச்சினையைப் பத்தி. நம்ப சகோதர மக்களுக்கு நாமதான உதவி பன்னணும்.

மன்னர் : அவருக்கு இதப் பத்தி தெரியுமோ.. தெரி யாதோ.. நம்மையெல்லாம் ஆண்டு கொண்டிருப்பவர். அவர் எண்ணப்படிதான் நாம் நடக்க வேண்டும்.

நபர் 1 : அப்ப நீங்க...

மன்னர் : உங்களை ஆள்பவன் நான். என்னை ஆள்பவர் அவர். ஆகவே அவர் எண்ணப் படிதான் நான் நடக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை அம்மக்கள் விடுதலை பெற்றால் மகிழ்வேன். வேதனைப்பட்டால் தடுக்க மாட்டேன். இதுவே நம் நிலை.

(நபர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துத் திகைக்க மன்னர் சட்டென்று எழுந்து உள்ளே போகிறார். பின்னாலேயே காவலன் நாற்காலியைத் தூக்குகிறான்.)

நபர் 1 : (காவலனைப் பார்த்து) என்னாங்க மன்னர் இப்படி சொல்லிட்டுப் போறாரு.

காவலன் : வேற எப்டி சொல்லணும்ற.

நபர் 2 : அந்த மக்கள காப்பாத்தாமா.. அதப்பத்திக் கவலைப்படாம...

காவலன் : (கையில் உள்ள நாற்காலியைக் காட்டி) இது என்னா இது.

நபர் 1 : நாற்காலி.

காவலன் : அந்த மக்கள காப்பாத்தப் போனா, அப்புறம் இதக் காப்பத்தறது யாரு... அந்த மக்களா வந்து காப்பாத்து வாங்க...

நபர் 1 : அதுக்காக...

காவலன் : அதுக்காகன்னா... அதுக்குதான். இத ஏன் இவரு எங்கியும் தனியா போட்டு வக்யாம போற எடமெல்லாம் என்ன தூக்கிக்னு திரிய சொல்றாரு தெரியுமா..கொஞ்சம் அசந்தா வேற யார்னா வந்து உக்காந்துடப் போறாங்கன்னுதான்.

நபர் 1 : அப்ப. நாற்காலிதான் முக்கியமா. மக்கள் முக்கிய மில்லையா. அப்புறம் நாளைக்கு மக்கள்கிட்ட ஆதரவு கேட்டு வர மாட்டாரா...

காவலன் : அதெல்லாம் மன்னருக்குத் தெரியும்யா. எத எத எப்பப்போ, எப்படி எப்படி கவுக்கறது, எப்படி எப்படி நிமிர்த்தறதுன்னு எல்லாம் அவருக்கு தெரியும்யா. அதப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க... போங்க போங்க...

(காவலன் உள்ளே மறைய இருவரும் திகைத்து நிற்கின்றனர்.)

பின்புறம் மீண்டும் அவலக் குரல்கள் கேட்கின்றன. இருவரும் அதைக் கேட்க சகிக்காமல் தவிப்பையும் இயலாமை யையும் வெளிப்படுத்துகின்றனர்.
அழுகுரல் அடங்கி அறிவிப்புக் குரல் கேட்கிறது.

குரல் : முக்கியச் செய்தி. அண்டை நாட்டில் நடை பெற்று வரும் விடுதலைப் போரில், விடுதலைப் போராளிகள் நடத்திய விமானத் தாக்குதலில் இனவெறி ராணுவத்தினர் 8 பேர் கொல்லப் பட்டனர். நமது சக்ரவர்த்தியின் ராணுவத்தினர் இருவர் காயமடைந்தனர்.

நபர் 1 : என்ன, நம்ப சக்ரவர்த்தி ராணுவத்தினரா?

நபர் 2 : இவங்க எதுக்கு அங்க போனாங்க?

நபர் 1 : அவங்களா போனாங்களா.. நம்ப சக்ரவர்த்திதான் அனுப்பி வைச்சிருப்பாரு...

நபர் 1 : அதான் ஏன் அனுப்பி வச்சாருன்னு கேக்கறேன்.

நபர் 2 : ஏற்கெனவே ராணுவ உதவிகள் பண்ராறுன்னு சொன்னாங்க. அது பத்தாதென்று நம்ப படையாளுங்களையே நேரா அனுப்பி வச்சிருக்காங்களா...

நபர் 1 : நம்ப படையாளுங்கன்னு ஏன் சொல்ற. சக்ர வர்த்தியின் படையாளுங்கன்னு சொல்லு.

நபர் 2 : சக்ரவர்த்தியின் படையாளுங்கன்னாலும், நம்ப வரிப் பணத்துல சம்பளம் வாங்கற படையாள்கள், படைக் கருவிகள்தானே.

நபர் 1 : அப்ப, நம்ப வரிப் பணத்துல வாங்கன ஆயுதங் களை, நம்ப வரிப் பணத்துல சம்பளம் வாங்கற படையாள்கள், நம்ப சகோதர இனத்தை அழிக்கறதுக்கே அனுப்பி வைக்கிறாரா சக்ரவர்த்தி.

நபர் 2 : அது மட்டுமல்ல. நம்ப இனமான மன்னரும் அதுக்கு துணை போறாரு.

நபர் 1 : என்னது இனமான மன்னருமா?

நபர் 2 : ஆமா.

நபர் 1 : ஆமா, இத சும்ம விடக்கூடாது.

நபர் 2 : நாட்டு மக்களுக்கு உண்மையை சொல்லணும்.

நபர் 1 : நம்ப இன மக்களைக் காப்பாத்தணும்.
இருவர் குரல்களிலும் படிப்படியாக ஆவேசம் சூடு ஏற வேண்டும்.

இருவரும் : (மக்களைப் பார்த்து...) பொது மக்களே, உழைப்பாளிகளே, சான்றோரே, இன உணர்வாளர்களே, இந்தக் கொடுமையைப் பாருங்கள்.
நம்ப கையைக் கொண்டே நம் கண்ணைக் குத்த வைக்கும் சக்ரவர்த்தியை, அதற்குத் துணை போகும் மன்னரைப் பாருங்கள். இதை எதிர்த்து குரல் கொடுக்க நம் சகோதர இன மக்களைக் காப்பாற்ற வாருங்கள். வாருங்கள்.

(பார்வையாளர் தரப்பிலிருந்து சிலர் மேடை நோக்கிச் செல்கின்றனர். இருவர் இருவராக நான்கு அணிகளாகப் பிரிந்து முழக்கமிட்டு மேடையை வலம் வருகிறார்கள். ]
முழக்கங்கள் :

போரை நிறுத்து, போரை நிறுத்து, எம் இன மக்கள் மீதான இனவெறிப் போரை தடுத்து நிறுத்து.
காப்பாற்று, காப்பாற்று, எம் இன மக்களைக் காப்பாற்று.
அங்கீகரி, அங்கீகரி, எம் இன மக்கள் உரிமைப் போரை அங்கீகரி, அங்கீகரி.
திரும்பப் பெறு, திரும்பப் பெறு, இனவெறி அரசுக்கு அளித்து வரும் ராணுவ உதவியைத் திரும்பப் பெறு. பயிற்சி யாளர்களைத் திரும்பப் பெறு.

முழக்கமிடுபவர்கள், மேடையை வலம் வந்து மக்களி டையே நுழைய, முழக்கக் குரல் தேய்கிறது. மேடையில் காவலன் பதறி ஓடி வருகிறார். மன்னரே நாற்காலியோடு நுழைந்து அமர்கிறார்.

காவலன் : மன்னா... மன்னா...

மன்னன் : என்னா...

காவலன் : போச்சு. போச்சு. எல்லாம் போச்சு. அண்டை நாட்டுல நடக்குற இனவெறிப் படுகொலைய கண்டிச்சு இங்க நம்ப நாட்டு மக்களெல்லாம் குரல் கொடுக்க ஆரம்பிச்சுட் டாங்க. இது இப்படியே போனா உங்க இன மானத் தலைவர் பட்டம் பறிபோய் விடும் மன்னா.

மன்னர் : பதட்டமடையாதே. எல்லாம் எனக்குத் தெரியும். நமது அமைச்சரைக் கூப்பிடு.

(காவலன் மேலே நுழைந்து திரும்ப, அமைச்சர் வருகிறார்.]

மன்னர் : (அமைச்சரிடம்..) என்ன அமைச்சரே நாட்டு நிலைமையைப் பார்த்தீரா...

அமைச்சர் : பார்த்தேன் மன்னா. மக்களனைவரும் நமது ஆட்சியின் சாதனையில் மனம் குளிர்ந்து டாஸ்மாக்கில் தண்ணி யடித்து, இலவச தொலைக்காட்சி பார்த்து, ஏகப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் மன்னா. மக்கள் முகத்தி லெல்லாம் எப்போதும் பிரகாசமான ஒளி வெள்ளம்தான்.

(இந்த இடத்தில் மின்சாரம் தடைபடுகிறது. இருளில் பேச்சு]

மன்னர் : என்னாயா இது?

அமைச்சர் : மின்வெட்டு மன்னா.

மன்னர் : மக்களுக்குத்தானே மின் வெட்டு. நமக்குமா.

அமைச்சர் : மின்சாரத்துக்கு மக்கள் மன்னர் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது மன்னா. ஷாக் அடிப்பதானாலும் எல்லோருக்கும் ஷாக் அடிக்கும். கட் ஆவதானாலும் எல்லோருக்கும் கட் ஆகும்.

மன்னர் : யோவ் இதை மாற்றி மக்களுக்கு மட்டும் ஷாக் அடிக்கும் வகையிலும், நமக்கு எந்த வகையிலும் கட் ஆகாத வகையிலும் மின்சாரத்தைச் செயல்படுத்த வேண்டும். தெரிகிறதா.

அமைச்சர் : ஆகட்டும். மன்னா.
இருளில் முழக்கங்கள் ஒலிக்கின்றன.

நீக்கிடு, நீக்கிடு, மின் தடையை நீக்கிடு.
குறைத்திடு, குறைத்திடு, விலைவாசியைக் குறைத்திடு.
விசாரணை நடத்து, விசாரணை நடத்து, ஸ்பெக்ட்ரம் ஊழல் மீது விசாரணை நடத்து.

(இத்துடன் ஏற்கெனவே இனப் படுகொலை தொடர்பான முழக்கங்களும் தொடர்ந்து ஒலிக்கின்றன.)

சட்டென்று மின்சாரம் வந்து ஒளி மயமாகிறது.

மன்னர் : அப்பாடா. சரி. என்னமோ பேசிகிட்டு இருந்தோம். பவர் கட் ஆனதும் பேச்சு வேற எங்கியோ திச மாறிப் போச்சு.

அமைச்சர் : நம்ப இனமான பட்டம் பறி போய்டுமோன்னு பேசிக்னு இருந்தம் மன்னா..

(பின்புறம் மீண்டும் இனப் படுகொலை பற்றிய கண்டன முழக்கங்கள் எழுகின்றன.)

மன்னர் : யோவ் இத இப்டியே உட்டா ஒண்ணும் சரிப்படாது. வர்ற ஏழாம் நாள் இனப் படுகொலையைப் பத்தி கயிலை கழனிவெளியில நம்ப நிலைப்பாடுகளை விளக்கி மன்னர் பேசுவார்னு அறிவிப்பு செய்திடச் சொல்லு.

அமைச்சர் : எங்க.. கயிலையிலிங்களா...

மன்னர் : அதான்யா நம்ப சிவபெருமான் குடி கொண்டிருக்கிறாரே...அங்க.

அமைச்சர் அறிவித்தபடியே மறைகிறார்.

மேடையில் சிலர் அமர்ந்திருக்க மன்னர் வருகிறார். மக்கள் முழக்கமிடுகின்றனர். மன்னர்
- வாழ்க
- இனமான மன்னர்
- நலமாக வாழ்க.
- வாய்வீச்சு மன்னர்
- வளமாக வாழ்க.
முழக்கம் அடங்க, மன்னர் பேசுகிறார்.

பேச்சு : நமக்கு அண்மையில் நடக்கும் இனப் படு கொலையை தடுத்து நிறுத்த, நம் சகோதர இனம் காக்க, நாம் ஒவ்வொருவரும் சக்ரவர்த்திக்கு ஓலை அனுப்ப வேண்டும்.
மக்கள் : ஓலையா...

மன்னர் : ஆம். அவசர ஓலை.

அமைச்சர் : ஓலை அனுப்பினால் பலன் கிடைக்குமா?

மன்னர் : நாம் அதுபற்றிக் கவலைப்படத் தேவை யில்லை. தலைநகரில் குளிர் அதிகமாக இருக்கிறதாம். நாம் அனுப்பும் ஓலைகளை எரியூட்டி சக்ரவர்த்திக்கு கதகதப்பூட்டி னால்தான் அவர் நம் கோரிக்கைக்கு செவி சாய்ப்பார். ஆகவே நாம் உடனடியாக உணர்ந்து செயல்பட்டு சக்ரவர்த்திக்கு ஓலை அனுப்பவேண்டும். அப்படி அனுப்பினால் தான் மக்களது கவனம் அதில் திரும்பும். இல்லா விட்டால் மக்கள் நம் ஆட்சிக்கு ஓலை கொடுத்து விடுவார்கள்.
தலைவர் மறைகிறார்.

தொண்டர்கள் : ஓலை அனுப்ப ஆணையிட்ட தானைத் தலைவர் - வாழ்க.

ஓலை அனுப்பக்கட்டளையிட்ட ஒப்பற்றத் தலைவர் வாழ்க.

(தொண்டர்கள் மறைகின்றனர்.)

மன்னர் : நாற்காலியோடு வந்து அமர்கிறார். பின்னால் அமைச்சர் வருகிறார்.

அமைச்சர் : என்ன மன்னா, கடைசில இப்படி பண்ணீட்டிங்க.

மன்னர் : என்ன ?

அமைச்சர் : சக்ரவர்த்திக்கு அனுப்பன ஓலைங்கள இங்கேயே விசிறி செஞ்சி மக்களுக்கு இலவசமா வழங்கி யிருந்தா கூட எல்லாம் பவர் கட்டுக்கு விசிறிக்கினு இருந்திருப் பாங்க. கடைசில எல்லாம் வீணா சக்ரவர்த்திக்கு குளிர்காய அனுப்பி வீணாக்கிட்டீங்களே.

மன்னர் : எது வீணாப் போனா நமக்கென்னயா? மக்கள் எதுனா போராட இருக்கணும்.அவங்க கவனம் அதப்பத்தி திரும்பணும். மக்கள் நம்பள நிம்மதியா நாற்காலில இருக்க உடணும். அதான் நம்ப திட்டம். அந்தத் திட்டம் இதுல நிறைவேறிடுத்துல்ல. அது போதும்.

அமைச்சர் : எங்க நெறவேறிச்சு. மக்கள் ஒண்ணும் அடங்கன மாதிரி தெரியல. அவையோர்களும் ஒண்ணும் சும்மா இல்ல. எல்லாம் அனைத்து அவையோர் கூட்டத்தக் கூட்டுன்னு கேக்க வைக்கிறாங்க.

(பின்புறம் குரல்கள் முழக்கமிடுகின்றன.)

மன்னரும் அமைச்சரும் குரல் வரும் திக்கை நோக்கித் திரும்புகின்றனர். அவையோர் வேண்டுகோளுக்கிணங்க, அனைத்து அவையோர் கூட்டம் வரும்
15ஆம் நாள் நமது தந்திர ஆலோசனை மண்டபத்தில் நடைபெறும். இருவரும் உள்ளே நுழைகின்றனர். காவலன் மட்டும் திரும்ப வருகிறார்.

காவலர் : அமைதி அமைதி. உள்ளே அனைத்து அவையோர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்ட முடிவில் மன்னரும் அனைத்து அவையினரும் வந்து கூட்ட முடிவைப் பத்திரிகையாளர்களுக்கும் மக்களுக்கும் அறிவிப்பார்கள்.

மேடை மக்கள் உரையாடல்கள் :
- ஏதாவது ஒரு நல்ல முடிவு எடுத்தாங்கன்னா நல்லாருக்கும்.
- எப்படியாவது அந்த மக்களக் காப்பாத்தனா போதும்.
- பாவம் எத்தினி வருஷமாத்தான் அந்த மக்கள் வதைவாங்க.
- பரவால்ல. இப்பவாவது இதுக்கு ஒரு முடிவு காணனும்னு ஒரு அக்கறை பொறந்துச்சே.
- எல்லாம் மக்கள் எழுச்சிதான். மக்கள் எழுச்சியோட இருந்து போராடுனா, எல்லா பிரச்சினைகளுக்கும் ஓர் தீர்வு வரும்.

(நபர்கள் ஆளுக்கொரு விதமாய் கருத்துகள் சொல்லி காத்திருக்க, மன்னரும் மற்றவர்களும் வெளி வருகிறார்கள். பத்திரிகையாளர்கள் சூழ்கிறார்கள்.]

மன்னர் : நமது அண்டை நாட்டின் இனச் சிக்கலைத் தீர்த்து நம் இன மக்களின் உரிமை காக்க அனைத்து அவை யோர் கூட்டம், ஆறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இதில் முதல் தீர்மானம், சக்ரவர்த்தி உடனடியாகத் தலை யிட்டு, போரை நிறுத்த வேண்டும். நம் சகோதர இன மக்களைக் காக்க வேண்டும் என்பது. அதற்கு இரண்டு வார காலம் சக்ரவர்த்திக்கு அவகாசம் தரப்படுகிறது. அதற்குள் சக்ரவர்த்தி சிக்கலைத் தீர்க்க முனையாவிட்டால், நம் இன மக்களைக் காத்திட நடவடிக்கை மேற்கொள்ளா விட்டால், சக்ரவர்த்தி அவையில் அங்கம் வகிக்கும் நமது ஆட்சிக்கு உட்பட்ட நாற்பது உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்கிற இனிப்பான முடிவையும் எடுத்திருக்கிறோம். உடனே கைத்தட்டல், ஆரவாரம் மகிழ்ச்சி. முழக்கங்கள்.
- இனமான மன்னர்
- வாழ்க.
- தன்மான மன்னர்
- வாழ்க.
- தன்னிகரற்ற மன்னர்
- வாழ்க.
- இனமான மக்களின் தானைத் தலைவன்
- வாழ்க.
முழக்கமிட்டவாறே மறைகின்றனர்.

மேடையில் மக்கள்
- பரவாயில்ல. நல்ல முடிவுதான்.
- இப்பவாவது சக்ரவர்த்தி நடவடிக்கை எடுப்பாரா.
- சுமுக முடிவுக்கு வழி காண்பாரா
- எப்படியும் செஞ்சிதான ஆவணம். இல்லண்ணா நம்ப ஆதரவு பறிபோய்விடுமே.
- உண்மையிலேயே நம்ப அவையோர் பதவி விலகுவாங்களா, இல்ல நாடகம் ஆடறாங்களா.
- எதுவாயிருந்தாலும் தோ ரெண்டு வாரத்துல தெரிந்திடப் போவுது.

மீண்டும் குண்டு வீச்சு, மக்கள் மரண ஓல சத்தம் கேட்கிறது. பின்புறமிருந்து, அறிவிப்பு வருகிறது. அண்மையில் நடைபெறும் போர் அந்த நாட்டின் உள் விவகாரம் என்றும் அந்த நாட்டு உள் விவகாரங்களில் நாம் தலையிட முடியாது என்றும் சக்ரவர்த்தி தெரிவித்திருக்கிறார். அண்டை நாட்டுப் பிரச்சினைகளுக்கு ராணுவத் தீர்வைக் கைவிட்டு, அரசியல் தீர்வு காண சக்ரவர்த்தி அறிவுறுத்தியிருக்கிறார். அண்டை நாடுகளுக்கு அளித்து வரும் ராணுவ உதவிகளை நிறுத்த முடியாது என பாதுகாப்பு ஆலோசகர் அறிவித்துள்ளார். என்றாலும், அண்டை நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து சக்ரவர்த்தி அந்நாட்டு அரசரிடம் கவலை தெரிவித்திருக்கிறார்.

(மன்னர் மேடையிலே தோன்றி.)

மன்னர் : வெற்றி, வெற்றி. அனைத்து அவையோர் கோரிக்கை வெற்றி.

அமைச்சர் : இதுல என்னாங்க வெற்றி இருக்குது. சக்ரவர்த்தி ஒண்ணும் அசையவே காணோமே.

மன்னர் : யோவ் அதான் கவலத் தெரிவிக்கிறேன்னு சொல்லியிருக்காரு இல்ல. அப்புறம் என்னா...

அமைச்சர் : சக்ரவர்த்தி வெறும் கவல தெரிவிக்கிறதுக்காகவா நாம இவ்வளோ முயற்சி எடுத்தம்.

மன்னர் : யோவ் அரசியல்னா இப்பிடி பலதும் இருக்கும்யா. அதல்லாம் போய் மக்கள் கிட்ட சொல்லி மக்களை முழிக்க வச்சுடாத. மக்கள் அறியாமையில இருந் துக்குனு, நாம்ப சொல்றதுக்கு ஜே போட்டுக்னு, நம்பள வாழ்கனு சொல்ற வரிக்கும் தான் நம்ப வாழ்க்கையும். இல்லண்ணா நமக்கே சோதன காலம் வந்துடும். அதனால் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. வெளியில போய் இதையே வெற்றின்னு அறிவி.

அமைச்சர் : அனைத்து அவையோர் கூட்டத்துக்கு வெற்றி. சக்ரவர்த்தி நடவடிக்கை, அண்டை நாட்டிற்கு சக்ரவர்த்தி கண்டனம். அரசியல் தீர்வு காண வலியுறுத்தல். நமது மன்னரின் சாதனை. ஆகவே இனி நம் சகோதர மக்கள் உயிர் காக்க உணவும் மருந்தும் அனுப்ப நிதி திரட்டுவோம். திரட்டி அம்மக்களுக்கு அனுப்புவோம். அம்மக்களின் துயர் துடைப்போம்.

- வாருங்கள். வாருங்கள் துயர் துடைக்க வாருங்கள்.
- தாருங்கள், தாருங்கள் மனமுவந்து தாருங்கள்.

முழக்கங்கள் :
- சகோதர மக்கள் துயர் நீக்க நிதி திரட்டும் மன்னர்
- வாழ்க.
- நிதி திரட்டும் மன்னர்
- வாழ்க.
- நிதி திரட்ட ஆணையிட்ட மன்னர்
- வாழ்க...
வாழ்க முழக்கமிட்டு மேடையை வலம் வருகின்றனர்.

நபர் 1 : ஏங்க. இந்த நிதி அந்த மக்களைப் போய்ச் சேருமா.

காவலர் : சேருதோ, சேரலையோ அதப்பத்தி ஒனக்கென்னயா கவல...

நபர் 2 : பாவம் அந்த மக்கள் அதுக்காகத்தான்.

காவலன் : அந்த மக்களுக்கு பாவம் பார்த்தா... நம்ப மன்னருக்கு பாவம் பாக்கறது யார்..

நபர் 1 : அப்ப நம்ப மன்னரைக் காப்பதற்குத்தான் நிதியா.

காவலன் : இந்த நிதி வந்துதான் மன்னரைக் காப்பாத்தப் போவுதா. அவருகிட்ட ஏற்கெனவே பத்து தலமுறைக்கி தேவையான நிதி இருக்குதுயா...

நபர் 2 : அப்ப இந்த நிதி...

காவலன் : மக்களது கவனத்தை திசை திருப்பறதுக்கு

நபர் 1 : திச திருப்பறதா..

காவலன் : ஆமாயா. மக்களெல்லாம் நம்ப சகோதர மக்கள் படற துன்பத்த மறந்து, எல்லாம் நிதி திரட்டறதிலியும் குடுத்தறதுலியும் எறங்கிடுவாங்க இல்ல...
அதோ அங்கப் பாரு....

முழக்கங்கள் :

- சகோதர மக்கள் துயர் துடைத்த மன்னர்
- வாழ்க.
- அண்டைநாட்டு மக்கள் அவலம் நீக்க நிதி திரட்டும் மண்ணின் தன்மான மன்னர்
- வாழ்க.
- இனமான மன்னர்
- வாழ்க.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com