Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
நவம்பர் - டிசம்பர் 2008
சிறுகதை
யுகங்களுக்கு அப்பாலும்...
பவா சமத்துவன்

அந்தப் பிரதேசம் முழுவதும் இனம் புரியாத வெறுமை முழுமை யாக நிரம்பி இருந்தது. அவர்கள் வேலிக்குள் அடைபட்டிருக்கும் ஆடு மாடுகளை போல குவியலாய் கிடந்தார்கள். ஒரு செங்குத்துப் பாறையில் சீராக வழுக்கி வரும் நீர்த் திவலை களைப் போல எல்லோரது உள்ளங் களிலும் ஒரே வகையான உணர்வுகள். நாளைய நம் வாழ்க்கை என்ன? நேற்றுவரை அந்த மண்ணுக்குச் சொந்த மாக இருந்தவர்கள் இன்று வேற்று மண்ணில் அகதிகள். காயம்பட்ட இந்த இதயங்களைப் போலவே பொத்தலாய் கிடக்கும் கூடாரம். விரிசலுற்ற இவர் களது வாழ்க்கையைப் போலவே, எப்பொழுது விழும் என்று தெரியாத சுவர்கள். தாயை இழந்த குழந்தை, மகனை பறிகொடுத்த தந்தை, தம்பியைப் பறிகொடுத்த சகோதரி, கணவனை இழந்த மனைவி, கண் ணுக்கு முன்னாலேயே மனைவி கற் பழிக்கப்பட்டதை - கசக்கி எறியப்பட் டதைக் கண்ட கணவன், ஆதரவு முழுவதுமே அழிந்து போனதால் இடிந்து போயிருக்கும் பெற்றோர்...
ஓ மானுட வரலாறு சில கறுப்பு பக்கங்களைத் தனக்குள் திணித்துக் கொண்டது.

“தட்டுல சாப்பாடு கிடக்கில்ல; அப்படியென்ன யோசனையில இருக்கிறே!”
திரேசம்மா மூன்றாவது முறையாக அவன் முன் இருந்த உணவை அவனுக்கு நினைவுபடுத்தினாள்.

“எனக்கு பசிக்கில அண்ணி...!”
சைமன் அமைதியாக பதிலிறுத் தான்.

“என்ன பொழப்போ போச்சோ தெரியல; திங்காம நித்திரை கொள்ளாம - ஏன் இருக்கிறவங்களையும் இப்படி வாட்றாங்களோ...”
திரேசம்மா வாசலைப் பார்த்தாள்.

அவள் மகள் பிலோமினா விளையாடிக் கொண்டிருந்தாள். சின்ன சின்னதாக மண் குவித்து - அதையே சீராக உருண்டையாக்கி பின் அதையே ஒரு சின்ன குடுவையில் அள்ளிப் போட்டு ; பின்பு அதையும் மாற்றி.... அறையின் பாதி வரை வெய்யில் வட்டமாய் விழுந்திருந்தது. கதவிருந் தால் தானே.... சைமன் சாப்பாட்டுத் தட்டை சுவர் ஓரமாய் நகர்த்தினான். பின்பு இமையை சற்றே தாழ்த்தி அண்ணியைப் பார்த்தான். அவள் முழங்காலிட்டு உட்கார்ந்து தலையை கவிழ்த்து மௌனமாய் இருந்தாள்.... சைமன் சுவரில் சாய்ந்து நிலை குத்திய கண்களால் கூரையை வெறித்துப் பார்த்தான். நிகழ்காலம் நிசப்தமாய் இருந்தது.

இவர்கள் பிறந்து வளர்ந்தது ஈழத்தில் மையிலிட்டி கிராமம். இது இலங்கையின் வடமேற்கு முனையில் பலாலி பகுதியில் இருந்தது. கடலோர கிராமமான இதில் பெரும்பாலும் ‘கறையர் 1’ வகுப்பினரே இருந்தனர், இவர்களும் கறையரே. சிமியோனுக்கும் திரேசம்மாவுக்கும் திருமணம் நடந்தது. திருமண மாகி முடிந்தபோதும் சிமியோன் தம்பி சைமனையும் தங்கை மேரியையும் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடனே வைத்திருந்தான்.
ஒரு சம்மட்டியாரிடம் அண்ண னும் தம்பியும் தினக் கூலிகளாய் இருந் தார்கள். இவர்கள் பிடித்து வரும் மீனின் அளவுக்கேற்ப கூலித் தொகை நிர்ணயிக்கப்படும். இவர்கள் இந்த குறைந்தபட்ச கூலியிலேயே குடும்பம் நடத்தி ; சுற்றுப்புற கிராமமொன்றில் இருந்த தம் பெற்றோருக்கும் சிறிதளவு பணம் அனுப்பி வைப்பர்.

இவர்களது இந்த அமைதியான வாழ்க்கை அதிக நாள் நீடிக்கவில்லை. வேட்டு சத்தம் எட்டுத்திக்கும் எதி ரொலித்தது. காய்ந்து கிடந்த நிலங் களை குண்டுகள் அங்குலம் அங்குல மாய் உழுதன. வானத்தின் நிறமே தெரியாத வாறு எரியும் குடிசைகளின் புகை மூட்டம். கடலில், அலைகளின் எண் ணிக்கையை விட கண்காணிப்பு கப்பல்கள் அதிகம். குழந்தையை மடியில் கிடத்தி உறங்குகிற தாய் அலறி அடித்து ஓடுவாள்; நள்ளிரவில் ஹெலி காப்டர் தாக்குதல் காலையில் சூரி யனை எதிர்நோக்கும் மக்கள் இப்போ தெல்லாம் ; விடிந்ததும் பீரங்கி தாக்குதல்களுக்கு இலக்கானார்கள்.

வாழ்க்கையே திசை மாறிப் போனது. வாழ்க்கைக்கு ஆதாரமான தொழிலும் இப்போது இல்லை. கரையெல்லாம் பாதுகாப்பு பகுதியாம். யாரும் கடலுக்குள் போக முடியாது. ஒரு நாள் வீட்டில் பசிக்கொடுமை தாளாமல் சிமியோன் இன்னும் சிலரோடு கடலுக்குள் இறங்கினான். விளைவு - ‘நேவி’ எல்லோரையும் சுட்டு கடலில் வீசி எறிந்து விட்டதாக ‘சேதி’ சொன்னார்கள். மணற் பரப்பில் அவன் உடல் உருக்குலைந்து கிடந்தது. ஆங் காங்கே - இவனைப் போலவே இன் னும் சிலரும் ; கால் வேறு, கை வேறாய், திட்டு திட்டாய் சதைத் துண்டுகள். கைக்கெட்டும் தூரத்தில் சவம் இருந்தும் அதை எடுத்து வந்து அடக்கம் செய்வதற்கு யாருக்கும் துணிவில்லை. ‘உஷ்’ என்று வீசும் ஈரக்காற்றில் அழுத்தமான பிணவாடை.

திரேசம்மா கதி கலங்கி போனாள். சிமியோன் தனது நினைவாக விட்டுச் சென்ற ஒன்றரை வயது மகளைப் பாதுகாக்க வேண்டும். அவனது தம்பி சைமனையும் தங்கை மேரியையும் காப்பாற்றி கரை சேர்க்க வேண்டும். வழி... நாட்கள் சில நகர்ந்தன. காரிருளை இவள் கண்ணீரால் நீராட்டிய ராப்பொழுதில் கதவு தட்டப் படும் சத்தம்... நரம்புகள் அதிர்ந்தன. இதயம் துடிப்பது கூட நின்றுவிட்டது. உடலின் ஒவ்வொரு அணுவும் உயிர்க் கூட்டின் ஒவ்வொரு செல்லும் புடைத்து விம் மியது. யோசிப்பதற்கு கால நேரம் கடுகளவும் இல்லை. என்ன செய்வது..? பின் கதவை திறந்தாள். சைமனை எங்காவது ஓடி ஒளிந்து கொள்ளுமாறு அவசரப்படுத்தினாள். அவன் அவளை தனியே விட்டுப் போக மறுத்து அவளுடனே இருந்தான். தங்கையை மட்டும் எங்காவது ஓடி ஒளிந்து கொள்ளுமாறு புறவாசல் வழியே தள்ளினான் சைமன். பருவம் அடையாத அந்த சிறுமி அகண்ட இரவின் அடி யாழத்தைத் தேடி, அதுவே ‘தஞ்சம்’ என ஓடிக் கொண்டிருந்தாள்.
அதற்குள் - கதவு துண்டு துண்டாய் உதிர்ந்து விழுந்தது. சப்பாத்து ஓசையும் - வெறித்தனமான கூச்சலும் உள்ளே அலை மோதின. திரேசம்மா கண்களை மூடிக் கொண்டாள். அவர்கள் அவனை ஏதேதோ கேட்டார்கள். “நான் அவங்களை காணல...! எனக்கு அவங்களை தெரியாது என்னை விட்டுடுங்கள்...!”
நொடிக்கொருதரம் துப்பாக்கி யின் பின்கட்டை மேலெழும்பி கீழிறங் கியது. இரும்பு கம்பிகள் அவன் உடலில் குறுக்காய் நெடுக்காய் வளையமிட்டன. ஆளுக்கொருபக்கம் அவன் கைகளை இறுக்கி பிடித்திருக்க, ஆணி பதித்த பூட்ஸ் கால் ஒன்று அவனது ஆணு றுப்பை நோக்கி வேகமாய இறங்கியது.
“அய்யோ... அம்மா...” உச்சஸ் தாயில் தொடங்கி ஈனஸ்வரமாய் அடங்கி போனான் சைமன். தெருக் கோடியில் ஒரு ஆர்மிக்காரன் கொட் டியா - கொட்டியா என்ற இருளில் எதையோ சுட்டிக்காட்டி கத்த அவன் பின்னால் அனைவரும் தொடர்ந்து ஓடினர்.

திரேசம்மா இமைகளை அசைத்துப் பார்த்தாள்.எதிரில் - உறைந்த கிடந்த இரத் தத்தில் வட்டமாய் சைமன். முகத்தருகே குனிந்தாள். மூச்சு மட்டும் வந்து கொண் டிருந்தது. “அய்யோ என்ன செஞ்சுட்டன் நான். எங்கே என் ப்லோமி...” அப்பொழுதுதான் அவளுக்கு நினைவு வந்தது. உடல் பதற, உதடுகள் துடிக்க கண்களை சுழற்றினாள். அந்த கூடத்தின் கடைசியில் மர பீரோவுக்குள் துணிகள் தொங்கும் கயிற்றுக்கு இடை யில், வளைக்குள் எலியாய், அந்த பிஞ்சு மழலை பதுங்கி கிடந்தது. அதன் சின்னஞ்சிறிய கண்களில் பயத்தின் உச்சமும் - திகிலின் ஆழமும் அப்பட்டமாய் தெரிந்தது.

அவர்கள் சைமனை விட்டு விட்டுப் போனதில் இவளுக்கு சின்ன திருப்தி. சிலகல் தொலைவிலுள்ள “பலாலி” இராணுவ முகாமுக்கே இவர் கள் விசாரணை என்ற பெயரில் பலரையும் அழைத்துப் போவார்கள். அப்படி சென்ற யாரும் இதுவரை திரும்பி வந்ததாய் வரலாறு இல்லை. அன்றிலிருந்து சைமன் ஏறக் குறைய ஒரு மன நோயாளியைப் போல ஆகி விட்டான். அந்த கிராமத்தின், பெரும்பாலானவர்களைப் போலவே, திரேசம்மாவும், ஒரு நள்ளிரவில் தனது ஒன்னரை வயது மகளோடும் - கணவனின் தம்பி, தங்கைகளோடும் இந்தியாவை நோக்கி வள்ளத்தில் 4 ஏறினாள்.

“இந்த சிகெரட்ல என்ன பிரயோஜனமப்பா. என்ன இருந்தாலும் நம்ம ஆர்.வி.ஜி. பீடி போலாகுமா...”

தூக்கத்திலிருந்து விழிப்பவளை போல, நினைவுகளிலிருந்து விடுப்பட்டு; கவிழ்ந்து கிடந்த தலையை உயர்த்தி வாசலை பார்த்தாள் திரே சம்மா. எதிர் கூடாரத்திலிருந்த கிழவர் கடைசியாய் ஒரு இழுப்பு. கையில் இருந்ததை விட்டெறிந்தார்.

“ப்லோமி! எங்க போனா இவா..” வாசலில் விளையாடிக் கொண் டிருந்த மகளைக் காணாமல் எழுந்து வந்தார் திரேசம்மா.

“ஏய் பிலோமி? இங்கால வாசல்ல தானே இருந்தா! அப்பு! எண்ட மகளை பார்தீங்களா?” பதைபதைப் போடு கிழவரைக் கேட்டாள்.

“என்னது! நானே வெறுப்போடே உட்கார்ந்திருக்கேன். உண்ட மகளோட கொஞ்ச நேரம் பேசி பொழுது போக்க லான்னுதான் இருந்தேன்; அடிக்கொரு தரம் இங்கால வாரவ; எங்க போனான்னு தான் நானே கூப்பிட லாமான்னு இருந்தேன்”

கிழவரும் எழுந்து வந்தார். தனக்கு ஒரே பற்றுக் கோடாய் இருந்த மகளை காணாத தவிப்பில்; அறைக்குள் நுழைந்து சைமனை உலுக்கினாள் திரேசம்மா.

“எண்ட மகளை காணல! எங் கன்னு போய் பாரு” சைமன் ஒன்றும் புரியாமல் கண்களைத் தேய்த்தபடியே வெளியில் ஓடினான். அறையின் ஒரு மூலையில் சைமனின் தங்கை மேரி முடங்கிக் கிடந்தாள்.

“ஏண்டி! பிலோமியக் காணல! எந்திரிச்சுப் பாரு” திரேசம்மா அவளை உலுக்கியபடி சத்தமாய்க் கத்தினாள்.

“ஆமி..ஆ...மி..5க்காரங்க போயிட்டாங்களா..” தூக்கம் கலை யாமல் மேரி விருட்டென்று எழுந்து உட்கார்ந்து கேட்டாள்.

“அய்யோ...! புத்தி கெட்டவளே, இது இந்தியா..! இங்க எங்கடி ஆமிக் காரங்க இருக்காங்க... ப்லோமிய காணல, எங்கன்னு தேடு”

பின் திரேசம்மா அந்த முகாம் முழுவதும் மகளைத் தேடி ஓடினாள். அந்த அகதி முகாமின் எல்லா மூலை களிலும் தேடி அலைந்தாள். ‘ப்லோமினா’ - அந்த சின்ன பூவின் சுவடே தெரியவில்லை. தூரத் தில் கரு நீலப் பரப்பாய் கடல். தனது வாழ்க்கை சரித்திரத்தின் ஒவ்வொரு எழுத்தை வார்த்தையை - வரியை எழுதிய சரித்திரம். எதையோ உணர்ந்தாள். கால் பதித்த மணல் கருங்கூந்தல் வரை சிதற கடல் அருகே ஓடினாள் திரேசம்மா.

அங்கே - அடுக்கடுக்காய் அலைகள் பொங்கி எழுந்து மடிந்து - வளைந்து பாய்ந்து வந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ; ஆகாயத்தையே தனக்குள் அடக்கி வைத்திருப்பது போல கருநீலக் கடல். எண்ண முடியாத மணல் துகள்களில்; நட்சத்திரங்களுக்கிடையே பிறை நிலவாய் நின்றிருந்தாள் ப்லோமினா.
இந்த மணற்பரப்பில், அலை உரசும் கடலோரம் ஒரு ஒற்றி சூரியகாந்தி பூ எப்படி முளைத்தது?

“ப்லோமி... ப்லோமி..”

ஓடி வந்த வேகத்தில் காற்றினூடே சேலை படபடக்க மண்ணில் மிதந்து வரும் மேகம் போல் மகளிடம் தாவினாள் திரேசம்மா.

“ப்...லோ..மி”

பதில் இல்லை. சலனமும் இல்லை. நெருங்கி வந்து குழந்தையை இரு கையாலும் அணைத்துக்கொண்ட படி கேட்டாள். “இங்கால நின்னு என்னம்மா பார்க்குறே...”

கடல் அலை போலவே திரேசம் மாவின் கண்களிலும் நீர் திரண்டது. தாய் பக்கம் திரும்பாமல், பிலோமினா அலைகளைச் சுட்டிக் காட்டியபடியே கேட்டாள்.

“என்ர அப்பர் இண்டைக்காவது வருவாரா...”


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com